Dhasamaskantham–adyayam 31 to 33

Posted on Sep 10 2016 - 5:44am by srikainkaryasriadmin

10420777_773299982737726_6258845922233857575_n

Iskcon Bangalore Radha Krishnachandra Deity Daily Darshan

Iskcon Bangalore Radha Krishnachandra Deity Daily Darshan


தசமஸ்கந்தம் நவீன பாணியில்—–அத்யாயம்—–31,32 33
——————————-
ஸ்ரீ கோபிகா கீதம்
——————————–
ஹே—-பிரபோ—–வ்ருந்தாவநம் உமது அவதார மகிமையால் செழிப்பை அடைகிறது;
நீர் எங்களுடன் கூடவே வாழ்வதால்
ஸ்ரீ லக்ஷ்மி இங்கு நித்ய வாஸம் செய்கிறாள்;
ஹேதயித—-உமது கருணா ஸ்வரூபத்தை எங்களுக்குக் காண்பியுங்கள்;
நாங்கள், உம்மையே நம்பி ,உமது நாமஸ்மரணம் செய்துகொண்டு,
உமது புண்யகதைகளைக்கீர்த்தனம் செய்துகொண்டு
உம்மையே ஒவ்வொரு திக்கிலும் தேடுகிறோம்.

சரத் காலத்தில், உமது பிரிவால் துக்கப்படுகிறோம்;
தடாகத்தில் உதித்த தாமரைப் புஷ்பத்தின் ஸ்ரீ முஷா— அழகு—–பொலிவைக் கவர்ந்து,
உமது பார்வையால் சந்தோஷமும், வருத்தமும் அடைகிறது;
அந்தத் தாமரைப் புஷ்பத்தைப் போல நாங்களும், உம்முடன் கூடுவதால்
சம்ஸ் லேஷமும் —–பிரிவினால் துக்கமும் அடைகிறோம்;

ஹே,சுரத நாத, ஹே,வரத —நாங்கள் உம்முடைய தாசிகள் —-
உம்முடைய இச்சையாலே தாசிகள்
. உமது பிரிவினாலே எங்களைத் துன்புறுத்தலாமா ?
உமது பிரிவு எங்களை வதம் செய்வது போல இருக்கிறது.
விஷ ஜலத்திலிருந்தும் காளியன் என்கிற கொடிய சர்ப்பத்தினின்றும் எங்களைக் காத்தீர்’;
அகாசுரன் போன்ற மழைப் பாம்பின் பிடியில் இருந்து காத்தீர்
பேய்க்காற்று, மேக கர்ஜனை, இடி மின்னல் பிரம்மாண்ட மழை இவைகளிருந்து ,
கோவர்த்தன கிரியைக் குடைபோலப் பிடித்து எங்களைக் காத்தீர்
கன்றைப் போன்று பொய்வேஷம் தரித்த அசுரனிடமிருந்து எங்களைக் காப்பாற்றினீர்
நீர் , யசோதை தேவகி இவர்களின் புத்ரன் மட்டுமல்ல;
சர்வத்துக்கும் ஆத்மா—-அந்தராத்மா
எல்லாவற்றையும் பார்க்கும் சாக்ஷி
எல்லா வஸ்துக்களையும் அனுபவிப்பவர்;
எல்லாவற்றையும் நியமித்து தரிப்பவர்;
ஹே,விஸ்வகுப்தா—ஸ்நேக உள்ளம் உள்ள பிரபோ—
பூமிப் பிராட்டி, பிரம்மா, தேவர்கள் பிரார்த்தனைக்கு இரங்கி உலகைக் காக்க
யது குலத்தில் அவதரித்து இருக்கிறீர் ;
வ்ருஷ்ணீ துர்ய—-எங்களுக்கு அபயம் அளித்த பிரபுவே–
உமது சரணங்களைப் பற்றினோம் ;
உமது கிருபையால் மறுபிறவி பயம் எங்களுக்கு இல்லை;
காந்த—-காமத்தின் பீடையை அடைந்துள்ளோம்;

எங்கள் சிரஸ் ஸில் உமது தாமரைக் கைகளை வைத்து,
நாங்கள் ஸ்ரீ யின்அனுக்ர ஹத்தை அடையும்படி செய்வீராக ;
வீர–வ்ரஜ ஜனார்த்திஹந்—-உமது ஸ்மிதம்—புன்சிரிப்பு—
எங்களுக்கு இயற்கையாக உள்ள அஹம்பாவத்தை அழிக்கிறது;
ஹே–ஸகே —-உம்மைப் பூஜிக்கும் எங்கள் அன்பை ஏற்றுக் கொள்வீராக ;

ஜலத்தில் அமிழ்ந்து பூர்ண பொலிவுடன் விகசித்து இருக்கும்
அழகான தாமரை போன்ற உமது திருமுக தர்சநம் தருவீராக
ப்ரணத தேஹினாம்—-உம்மை வணங்கிய எங்கள் பாபங்களைப் போக்குவீராக;
புல்லைத்தின்னும் பசுக்களை வளர்க்கும் எங்கள் இடங்களில்
ஸ்ரீ லக்ஷ்மீ வாஸம் செய்யும்படி அருளுவீராக;
பல தலைகளுடன் படம் விரித்து ஆடிய காளிங்க னுடைய தலைகளில்,
உமது பாத பத்மங்களை வைத்த மாதிரி ,எங்கள் ஹ்ருதயத்திலும்
உமது பாத பங்கஜங்களை வைத்து ,எங்கள் தாபத்தைப் போக்குவீராக;
புஷ்கரேக்ஷண—–தாமரை கண்ணா—உமது திருஷ்டி கடாக்ஷம்
எங்கள் மீது படும்படி செய்வீராக;
உமது மதுரமான பேச்சுக்களால் ,எங்களுக்கு சந்தோஷத்தை உண்டாக்குவீராக;
உமது பேச்சு, மேதாவிகளின் மனங்களையும் சந்தோஷப் படுத்தக்கூடியது;
வீர—-உமது ஆக்ஜையை சிரமேற் கொண்டிருக்கும் ,
அதைச் செய்யத் தயாராக இருக்கும் எங்களுக்கு
உமது அதர பானத்தைக் கொடுத்து நாங்கள் உயிர் பிழைக்கும்படி செய்வீராக;
உமது கதாம்ருதம், மங்களங்களை அளிப்பவை;
உமது கீர்த்தனம் ஐஸ்வர்யங்களை வ்ருத்தி செய்பவை;
இதனால், எல்லாம் நிரம்பிய குண பூர்த்தி உள்ள மகாத்மாக்கள்,
உமதுகீர்த்திகளை அடிக்கடி சொல்கிறார்கள்;
அடிக்கடி பாடிக் கேட்கிறார்கள்;
உமது இத்தகைய நாமஸ்மரணம், கீர்த்தனம் இவை,
எங்கள் பாபங்களை—கல்மிஷங்களை—அடியோடு அழிக்கின்றன;
ஹே—ப்ரிய—-புன்சிரிப்புள்ள, பிரேமை ததும்பும் உமது பார்வை —
-பால லீலைகள்—–கோபர்களுக்குச் செய்த அதிசயச் செயல்கள்—
லீலாவிநோதங்கள்—-எல்லாமே, எல்லோருடைய த்யானத்துக்கு உரியது;
மங்களங்களைக்கொடுப்பது;
உமது ரஹஸ்யமான பேச்சுக்கள், கண்ஜாடைகள், சிரிப்பு, பார்வை,
செய்கைகள் எல்லாமே எங்கள் ஹ்ருதயத்தைத் தொட்டு,
எங்களை உமக்கு ஆட்படுத்தி அடிமையாக்கி,
எங்களுடைய ஹ்ருதயத்தைப் பிளக்கின்றன
ஹே, நாத—- நீர் வ்ருந்தாவனத்தில் பசுக்களை மேய்த்து சஞ்சரிக்கும்போது
உமது பாதங்களை, சிலா,(கல்) , புல் ,முளை இவைகள் குத்தி புண்படுத்தியது,
எங்கள் மனத்தில் காயம் ஏற்பட்டது போல இருக்கிறது;
மனஸ் புண்பட்டு இருக்கிறது;
ஹே,வீர —ஒவ்வொரு நாள் சாயங்காலமும், நீர் பசுக்களுடன்
க்ருஹத்துக்குத் திரும்பும்போது, நீல மலர்களால் நிரம்பிய வனத்தைப் போல
உமது கேசபாசங்கள், உமது கரிய அழகிய திருமேனி,
பசுக்களின் சுவடுகளிலிருந்து கிளம்பிய புழுதி படிந்து வாடிய திருமுகம் ,
இவைகளைப் பார்க்கும்போது ,எங்களுக்கு என்ன தோன்றும் தெரியுமா !

தாமரைப் பூவில் தேனீக்களும் மகரந்தங்களும் உள்ளவை போலத் தோன்றும்;
கருத்தகேசங்கள் தேனீக்களைப் போலவும்
திருமுகம் மகரந்தம் போலவும் தோன்றும் ;
எங்கள் மனத்தில் மன்மத ரூபம் தோன்றும்;
நாங்கள், மன்மதனை மனஸ் ஸால் உபாசிப்பது போலத் தோன்றும்;

ஜனங்களின் இஷ்டத்தைப் பூர்த்தி செய்பவரே —-
ஸ்ரீ மகாலக்ஷ்மியாலும் ,ப்ரம்மாவாலும் அர்ச்சனை செய்யப்படும் உமது பாதங்கள்,
பூமி தேவிக்கு ஆபரணங்களைப் போல இருக்கின்றன;
சதா நாங்கள் த்யானம் செய்வதற்கு உரியதாக இருக்கின்றன;
வணங்குபவர்களுக்கு, காமதேனுவைப்போல ,
எதைக் கேட்டாலும் கொடுக்கச் சக்தி உள்ளவையாக இருக்கின்றன;

நித்தியமான சுகத்தை அளிப்பதாக இருக்கின்றன;
அப்பேற்பட்ட மகிமை உள்ள உமது சரண பத்மங்களை —
சுந்தரமான திருவடிகளை– எங்கள் ஹ்ருதயத்தில் இருத்தி
அநுக்ரஹம் செய்வீராக ‘
ஹே, வேணு கோபாலா—–உமது திவ்ய உதடுகளில் பெருகும் அதர அம்ருதம்
எங்கள் சோகங்களை நாசம் செய்பவை;
வேணுவின் நாதம் எழும்போது, அந்த அம்ருத தாரைகள் பொங்குகின்றன;
அதர முத்தத்தினால் எழும் நாதம் ,எங்கள் துக்கங்களை அழிக்கிறது;
ஆசாபாசங்களை நாசம் செய்கிறது;
உம்மிடத்தில் பக்தியை வளரச் செய்கிறது;
உமது அதர அம்ருதத்தை புல்லாங்குழலுக்குக் கொடுத்ததைப் போல ,
எங்களுக்கும் பகிர்ந்து அளிப்பீராக,
பகிர்ந்து எங்களுக்கும் அதரபானம் கொடுப்பீராக
ஹே–பிரபோ—நீர் காட்டில் பசுக்களுடன் சஞ்சரிக்கும் அந்த அரைநாள் பொழுது,
—அந்தப் பிரிவு—எங்களுக்கு –பல யுகங்களில் பிரிந்து இருப்பதைப் போல
துக்கத்தை ஏற்படுத்துகிறது;
உமது குடில குந்தலம் — மற்றும் நாங்கள் கண் இமைத்தல் இவை
உமது பூரண சௌந்தர்யமான திருமுகத்தைத் தர்சிக்கவிடாமல் தடுக்கிறதே ?
இவை எல்லாம் ஸ்ருஷ்டி கர்த்தாவான ப்ரம்மாவுக்குத் தெரியாமல்
அவர் ஜடமாக இருப்பாரோ !
எங்களுடைய மனஸ் ஸின் அனுபவங்களைப்பார்க்க முடியாதபடி
அவரின் ஸ்ருஷ்டி இருக்கிறதே, ஆச்சர்யம் !
ஹே,அச்யுதா—உமது புல்லாங்குழல் இசையைக் கேட்டதும்
எல்லாவற்றையும் விட்டு விட்டு உம்மிடம் ஓடோடி வந்து இருக்கிறோம்.
நீயே எங்களுக்குக் கதி—-அடைக்கலம் என்று வந்திருக்கிறோம்;
பதி ,பிள்ளைகள், பந்துக்கள், சஹோதரர்கள் எல்லாரையும் த்யாகம் செய்து
நீயே எல்லாம் என்று வந்து இருக்கிறோம்
ஹே,பிரபோ—-ரகஸ்யமாக எங்களிடம் விளையாடி, பேசி,
எங்களிடம் உமக்குள்ள அன்பை வெளிப்படுத்தி இருக்கிறீர்;
எங்கள் ஹ்ருதயங்களைப் பிளந்து அதில் ஆசையை உண்டாக்கி,
அவைகளை, நீர் பகிரங்கமாகச் சொல்லும்போது ,உமது முக விகாஸம்
பொலிவு அடையும்;
உமது அகன்ற மார்பு;
இதுவே ஸ்ரீ மஹாலக்ஷ்மி நித்ய வாஸம் செய்யும் வாசஸ் தலம் ;
உம்மைப் பிரியத்தால் அடைந்து உம்மையே காதலித்து அடி பணிந்து ,
நாமும் இப்படியே வாஸம் செய்யலாமே ,என்று மனம் மோஹம் அடைகிறது.
ஹே,விஸ்வ மங்களப்ரபு —–இந்த ஸ்தலத்தில் ஏற்பட்டுள்ள உமது அவதாரம்,
எங்களுக்கும் , எல்லாப் பிராணிகளுக்கும் துக்கங்களைப் போக்குகிறது;
சுந்தரவடிவம் மங்களத்தை ஏற்படுத்துகிறது;

நீரும், எங்களை, உம்முடைய பந்துக்கள் என்று ஸ்வீகரித்து,
கபட வேஷத்தை விடுவீராக;
உம்மிடம் அசாத்திய பக்தி செலுத்தும் எங்களிடம்
கபட வேஷத்தை விடுவீராக.
ஹே—-ப்ரிய— காட்டில் அலைந்து கல்லும் முள்ளும் குத்தும்போது ,
உமக்கு ஏற்படும் அந்த வலி ,எங்கள் ஹ்ருதய வலி ;
காரணம், உமது பாதாம்புஜங்கள்,எங்களது ஹ்ருதயத்தில் படிந்து இருக்கிறது;
உமக்கு வன சஞ்சார வலி
எங்களுக்கு ஹ்ருதய வலி;
இது பக்தியின் விஸ்லேஷ துக்கத்தின் உச்ச நிலை

( நாரதாதி மகரிஷிகள், விஸ்லேஷ துக்கத்தையே
பக்தியின் உச்ச நிலையாகக் கொண்டாடி இருக்கிறார்கள் )

கோபிகைகள், இவ்வாறு விரஹ தாபத்தைப் பொறுக்க இயலாத துக்கத்துடன்
கீதமாகப் பாடினார்கள்

( ஹே—-கிருஷ்ணா— உன்னிடம் அளவில்லாத பக்தி செலுத்திய கோபஸ்த்ரீகளை—
-கோபிகா கீதம் என்று எங்களுக்குக் கொடுத்த அந்த கோபிகைகளை
ஆயிரமாயிரம் தடவை அவர்கள் பாதங்களைத் தொட்டு நமஸ்கரிக்கிறேன் .
ஹே,முகுந்தா— அந்தக் கோபிகைகளில் ஒருத்தியாகப் பிறந்து இருந்தால்,
இவ்வளவு பிறவிகள் எனக்கு வந்திருக்காதே?
அளவிட இயலாத பாபம் செய்து அல்லாடுகிறேனே ?
இந்தப் பிறவியிலாவது ,அபயம் என்று சொல்லி,
அச்யுதா, அடியேனை உன் திருவடிகளில் சேர்த்துக் கொள் )

ஸ்ரீ கோபிகா கீதம் என்கிற 31 வது அத்யாயம் நிறைவடைந்தது.சுபம்

—————————————————————————————————————

தசமஸ்கந்தம்—நவீன பாணியில்—-அத்யாயம்–32
———————
ஸ்ரீ கிருஷ்ணனின் அநுக்ரஹம்——ராஸ லீலை—- தொடர்கிறது
——————————————————
கோபிகைகள் ,ஸ்ரீ கோபிகா கீதம் என்றே இசைத்து உன் புகழ் பாடி
உன் தர்சனத்துக்காகக் கதறினார்கள்.
விரஹ தாபத்தைப் பொறுக்க முடியாமல் துக்கத்துடன் கதறினார்கள்.
ஹே, கிருஷ்ணா , கருணையுடன் நீ அப்போது அவர்கள் மத்தியில் தோன்றினாய்

பட்டு பீதாம்பரத்துடன் மந்தஹாசத்துடன் மன்மதனுக்கும் மன்மதனாக ,
கோபியர்கள் மத்தியில் வந்தாய்.
கோபிகைகள் , இழந்த பிராணனை மீண்டும் பெற்றதைப் போல சந்தோஷப்பட்டனர்.

உன்னை வரவேற்றார்கள்;
எழுந்து வந்து உன் கரங்களைப் பிடித்துக் கொண்டாகள்;
சிலர் உனக்கு அஞ்சலி செய்தார்கள்;
சிலர் உன் கரங்களைப் பிடித்து அவர்கள் தோள்மீது வைத்துக் கொண்டார்கள்;
ஒருத்தி ,கண்களை இமைக்காமல் உன் முகத்தையே பார்த்தாள்;
ஒருத்தி இதிலும் திருப்தி அடையாமல், உன் திருவடிகளை நோக்கினாள்
; இன்னொருத்தி கைவிரல்களால் திறந்த கண்களைப் பொத்தி
விரல் இடுக்குகள் வழியாக உன்னைத் தர்சநம் செய்து ஆனந்தம் அடைந்தாள் ;

சாதாரண ஜனங்கள், எப்படி ஆத்ம யோகியைப் பார்த்ததும் துக்கம் விலகி
சந்தோஷம் அடைவார்களோ, அப்படி ஆனந்தம் அடைந்தார்கள்
நீ, பராசக்தி ரூபமான அவர்களுடன் காளிந்தீ நதியின் கரையில்
உள்ள மைதானத்தில் பிரவேசித்தாய். அந்த மைதானம் அல்லது வனம்—–
மல்லிகையும் மந்தாரமும் நிரம்பி தென்றலில் அவைகள் அசைந்து ஆட,
மதுரமாகக் காக்ஷி அளித்தது;

சரத் சந்திரனின் வெளிச்சம் மனத்துக்கு குதூகலத்தை ஏற்படுத்தியது;
உன்னுடைய தர்சநம் உன்னுடைய ஸ்பர்சம் இவற்றால்
தங்கள் மனோரதம் நிரம்பியவர்களாக கோபிகைகள் முகங்கள் விளங்கின;
வேதங்களை அத்யயனம் செய்து, அதன் நோக்கமாகிற
ஆத்ம தர்சநம்/ஆத்ம விசாரம் இவைகளை அடையும்
வேதாத்யாயியைப் போல விளங்கினார்கள்
;
அவர்கள், தங்கள் மேலாடையை /உத்தரீயத்தை உனக்கு ஆசனமாகத்
தயார் செய்தார்கள்; அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க
நீ அதன் மீது அமர்ந்தாய்;
எப்படி ஆத்ம தர்சன யோகிக்கு உனது ஸ்வரூபத்தைக் காண்பிப்பாயோ,
அப்படி அவர்களுக்குக் காக்ஷி அளித்தாய்;
உன்னுடைய பார்வை, கண்களின் சேஷ்டிதங்கள், பேச்சுக்கள்
இவைகளால் மயங்கிய கோபிகைகள், உன் கைகளைப் பிடித்துக் கொண்டனர்;
சிலர், உன் திருவடிகளை எடுத்து,அவர்கள் மடிகளில் வைத்துக்கொண்டனர்;
உன்னைச் சிலர் புகழ்ந்தனர்; சிலர் பொய்க்கோபத்துடன் உன்னிடம் பேசினர்
ஹே, ஸ்வாமி—-சிலர் அன்பு காட்டுவதால், அன்பை அளிக்கிறார்கள்;
இன்னும் சிலர், அன்பைக் காட்டியபோதிலும் , அந்த அன்பை மதிக்காமல்
வேறு விதமாக நடந்து கொள்கிறார்கள்; நீர் அன்பு செய்பவரா ?
அன்பு செய்தபோதும் வேறாக நடந்து கொள்பவரா ?
இல்லாவிடில் இந்த இரண்டு வழியும் இல்லாமல்,
உமது வழியே போகும் சர்வ ஸ்வதந்த்ரரா ?
நீர் எந்த ரகத்தைச் சேர்ந்தவர் ? என்று உன்னைக் கேட்டார்கள்.
அதற்கு நீ பதில் கூறினாய்;–
சகிகளே ………ஒரு நன்மையை விரும்பியோ,
பரஸ்பர நன்மையை விரும்பியோ என்னிடம் அன்பு செலுத்தினால்
அந்த அன்பு “ஸ்வார்த்தம் “ஒரு பலனுக்காகச் செய்யப்பட்டதாகும்
அதில் சந்தோஷமோ,ஸ்நேகத்தன்மையான தர்மமோ இருக்காது
(கலவிக்குக்கூலி கேட்பார்களா ! )
எவர்கள் அன்பைப் பெறாவிட்டாலும், பிறரை அன்புடன் நேசிக்கிறார்களோ,
அவர்கள் கருணை உள்ளம் கொண்டவர்கள்;
தங்கள் பெற்றோரைப் போலக் களங்கமில்லா அன்பு;
சௌஹ்ருதம் —-அதாவது நேசிக்கும் தன்மை இருக்கிறது;
இதில் தோஷத்துக்கோ அபவாதத்துக்கோ இடமில்லை;
இன்னும் சிலர், பிறர் இவர்களை நேசித்தாலும், இவர்கள்,
அப்படி நேசிப்பவர்களிடம் அன்பு செலுத்துவதில்லை.
அன்புக்குப் பதில் அன்பு செய்வதில்லை.

தங்களையே தங்கள் சொந்த ஆத்மாவையே ரமித்து,
ஆப்தகாமர்களாக, பிறர் நன்மை செய்தாலும் அதை நினையாமல்
நன்றி கெட்டு, அக்ருதக்ஜனாக ,பிறருக்கு— சொந்த தகப்பன், குரு —-
இ வர்களுக்குத் தீமை செய்யும் ஸ்வபாவம்உள்ளவர்களாக இருக்கிறார்கள்.
சகிகளே…….நான் இந்த ரகங்கள் ஒன்றிலும் சேரவில்லை;
சேரமாட்டேன். யார் என்னைப் பஜித்தாலும் அவர்கள் கண்களுக்கு நான்
பொதுவாகத் தோன்றுவதில்லை; புலப்படுவதில்லை.
அது அவரவர்களின் பக்தியின் ஆழத்தைப் பொறுத்தது;
பற்றுக்களை அறுத்த பக்தி;
ஏனென்றால், நான் மறைந்து போனால், அவர்கள் என்னையே
நினைத்துக் கொண்டிருப்பார்கள்—-சதா என் த்யானத்திலேயே
மூழ்கி இருப்பார்கள் அன்றோ!

ஒரு தரித்ரனுக்கு, பொக்கிஷம் கிடைத்து, அது நஷ்டப்பட்டுப் போனால்,
எப்படி அதே சிந்தையில் இருப்பானோ, வேறு ஒன்றிலும்
பற்று இல்லாமல் இருப்பானோ —-அதைப் போல எப்போதும் என்னையே
சிந்தித்து இருப்பான்.

ஹே…அபலைகளே…..என்னைப்பற்றிய த்யானம்,
என்னைப் பற்றிய அனுவ்ருத்தி உங்களுக்கு ஏற்படுவதற்காக —-
-நான் உங்களிடமிருந்து பிரிந்து போகிறேன்.
உங்கள் கண்களுக்குப் புலப்படாமல் இருக்கிறேன்.
நீங்கள் என்னைப் பஜித்தபோதிலும் ,
உங்களிடமிருந்து என்னை மறைத்துக் கொள்கிறேன்.
உங்களை நான் நேசித்தாலும், மறைமுகமாக என் சேஷ்டிதங்களாலே
அவற்றின் ஸ்மரணம் இவற்றாலே என் அன்பைக் காட்டுகிறேன்.
நீங்கள் எனக்காக மிகவும் த்யாகம் செய்து இருக்கிறீர்கள்.

உங்கள் நடத்தை தோஷமில்லாதது. உங்கள் அன்பு புனிதமானது.
அது மற்றவர்களுக்குத் தோஷமாகத்தோன்றினாலும்,
குறையாகத் தெரிந்தாலும் , உங்கள் நடத்தை
என் விஷயத்தில் குற்றம் குறை இல்லாதது.
எத்தனை பிறவி எடுத்தாலும், எத்தனை தேவ வர்ஷங்கள் ஆனாலும்
உங்கள் கடனை என்னால் தீர்க்க முடியாது.
என் த்யானம்—-என்னைப் பற்றிய நினைவு, —-
வீடு, கணவன், புத்ரன், குழந்தைகள் இவற்றைப் பற்றிய
உங்கள் எண்ணங்களை அழித்துள்ளது;
சம்ஸார பந்தங்களை அறுத்துள்ளது .
வீட்டுப் பற்றை அழித்து, பகவத் த்யானத்தில் மூழ்கச் செய்வதே
இதற்கு உரிய மஹா பலன்; அதனை இப்போது
என்னிடமிருந்து அடையப் போகிறீர்கள்
((ஹே—-கிருஷ்ணா—-கோபிகைகள் பக்தியில் ,அவர்களுக்குக்
கடமைப் பட்டு உள்ளதாக —அவர்களின் கடனை
எத்தனை பிறவி எடுத்தாலும் எத்தனை தேவ வர்ஷம் ஆனாலும்
தீர்க்க முடியாது என்று உறுதியாகச் சொன்ன கிருஷ்ணா !
உன்னைப் பூஜிக்க நாங்கள் எவ்வளவு தேவ வர்ஷம்
தவம் செய்து இருக்கவேண்டும் ! ஸ்ரீ ஆண்டாள் அருளியதைப் போல
“பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்த நீ ,
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது !
எற்றைப் பறை கொள்வானன்றுகாண் கோவிந்தா !
எற்றைக்கும் ஏழேழு பிறவிக்கும்
உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட் செய்வோம்
உன்னை எத்தனை ஆயிரம் தடவை நமஸ்கரித்தாலும் போதாது—
போதாது—போதாது;

ஹே….ராதே ….உன்னையும் எவ்வளவு தடவை நமஸ்கரித்தாலும் போதாது;
இருந்தாலும் கோபஸ்த்ரீகளை—-உன் பக்தியில் முழுவதும் ஆழ்ந்த —
உன்னால் கொண்டாடப்படுகின்ற —அந்த மாதாக்களை
ஆயிரம் தடவை நமஸ்கரிக்கிறேன். —ராதை என்கிற
பக்தி மார்க்கத்துக் குருவாகிய மாதாவை ஆயிரம் தடவை நமஸ்கரிக்கிறேன் ,
இவர்களை முன்னிட்டு,
ஹே—கிருஷ்ணா–உன்னைப் பல்லாயிரம் தடவை நமஸ்கரிக்கிறேன் )
32 வது அத்யாயம் நிறைவடைந்தது. சுபம்
அடுத்த அத்யாயம் , பலஸ்ருதியுடன் கூடிய “ராஸக்ரீடை “”

——————————————————————————————————————————————

தசமஸ்கந்தம்–நவீன பாணியில்—-அத்யாயம் 33
————————————–
ராஸக்ரீடை
——————-
யமுனா நதிக்கரை—–மல்லிகைப்புஷ்பங்களின் வாஸனை —-
இதமான தென்றல் –இரவு நேரம் —சந்திரனின் கிரணங்கள்
அமுதைப் பொழிந்துகொண்டு இருக்கின்றன .
நீ, உனது அங்க, பிரதி அங்க ஸ்பர்சத்தால், கோபிகைகளின்
மனக் கலக்கத்தைப் போக்கி, தாபங்களைப் போக்கி
அவர்களுக்கு அநுக்ரஹம் செய்ய நினைத்தாய்.
ஸ்திரீ ரத்னங்களான அவர்களுடன்,
ப்ரீதி, அன்யோன்யம் இவைகளால் உண்டான ஸ்நேகஉள்ளத்துடன்,
ராஸக்ரீடை செய்யத் திருவுள்ளம் கொண்டாய்.
நீ, கோபிகைகளால் சூழப்பட்டு இருந்தாய்;
ஒரு சக்ர வளையத்தைப்போல மண்டலம் அமைத்தாய்;

நீ, அவர்கள் மத்தியில்;
அது மட்டுமா !
இரண்டு கோபிகைகளுக்கு நடுவே ஒரு கிருஷ்ணனாக —-
அவர்களது கைகளை உனது தோள்மீதும்—-
உனது தீர்க்கமான திருக்கரங்கள் அவர்களது கழுத்திலும் —
-இருக்க, யாவருக்கும் வித்தியாசமின்றி, எல்லா கோபிகைகளுக்கும் நீ,
அவர்கள் பக்கத்தில் இருக்கிறாய் என்கிற நினைவை—
உணர்ச்சியை—உண்டாக்கி, ராஸ லீலையைச் செய்ய ஆரம்பித்தாய்.
இதனைக் காண ஆகாயத்திலே எல்லா கந்தர்வ, தேவ அப்சரஸ்கள்
கூட்டம் கூட்டமாக வந்து விட்டார்கள்;
துந்துபி வாத்தியம் முழங்கியது;
ஆகாயத்திலிருந்து புஷ்பங்கள் உங்கள் யாவரின் மீதும் வர்ஷிக்கப்பட்டன;
கந்தர்வர்கள், தேவர்கள் உன் புகழைப் பாடினார்கள்;
ஒவ்வொரு கோப ஸ்திரீயும், கைகளில் வளைகள் குலுங்க,
கால்களில் சலங்கைகள் ஒலிக்க,
ராஸ மண்டலாகார வட்டமாக நின்றுகொண்டு,
நடனம் செய்யத் தொடங்கினார்கள்;

நீ, இரண்டு தங்க நிறமுள்ள கோபிகைகளின் நடுவே
ஒரு பெரிய மரகத மணியைப் போலப் பிரகாசித்தாய்;
அவர்கள் உன்னுடன் சேர்ந்து நடனமாடினார்கள்
பாதங்கள் , நியாஸங்கள் அசைந்தன
புஜங்கள் தாளத்துக்கு ஏற்ப ஆடின
முகங்கள் புன்சிரிப்பைச் சிந்தின
புருவங்கள் நெளிந்து அசைந்தன
ஸ்தனங்கள் குலுங்கின ;இருபுறமும், மேலும் கீழும் குலுங்கின
காதுக் குண்டலங்கள் நடனமாடின
கோபிகைகளின் கன்னங்கள் பளபளத்தன
மார்பின் ரத்ன ஹாரங்கள் ஒளி வீசின
ஒட்டியான சலங்கைகள் சப்தித்தன
கோபிகைகள் உன் ஸ்பர்சத்தால் மிக்க ஆனந்தம் அடைந்தார்கள்
உச்சஸ்தாயியில் பாடினார்கள்
பிருந்தாவனம் ,கோபிகைகளின் கீதத்தால் நிரம்பியது
(நாட்ய சாஸ்த்ரம் சொல்வதாவது ;—-பல ஸ்திரீகள் வட்டமாக இருப்பர்;
ஒவ்வொரு ஸ்திரீயின் அணைப்பிலும் ஒரு புருஷன்–
இரு ஸ்திரீகளின் நடுவே ஒரு புருஷன்—-
இரண்டு புருஷர்களுக்கு நடுவே ஒரு ஸ்திரீ—
இப்படி நின்றுகொண்டு, கைகளைத் தோளின்மீது கழுத்தைச் சுற்றிப்
போட்டுக்கொண்டு, சக்ர வளைவில் —-நர்த்தனம் செய்தல்—-
பாடுதல்—-தாளத்துக்கு ஏற்ப கரங்களைத் தட்டுதல்—-
சலங்கை ஒலிக்க பாதங்களை நெளிவு சுளுவுடன்
தரையில் வைத்து எடுத்தல்—-இப்படியாக மிக விரிவாகச் சொல்கிறது )
கோபிகைகள் ஆடிய விதத்தை ஸ்ரீ சுகர் சொல்வதை—
ஹே, கிருஷ்ணா, உனக்கு நினைவு படுத்துகிறேன்.
உன் கையால் கழுத்தை அணைக்கப்பட்டிருந்த ஒரு கோபிகை
உனக்குச் சமமாக உச்சஸ்வரத்தில் பாடினாள்;
இவள் ராதையின் தோழியான விசாகா ;
உன் பக்கலில் இருந்த மற்றொரு கோபிகை
பேஷ் பேஷ் என்று ஆனந்த மிகுதியால் கூவினாள்
அதே பாடலை 2 வது காலமாக, 3 வது காலமாக வேகமாக—துருவகாலத்தில் —
ராதையின் இன்னொரு தோழியான லலிதை பாடினாள்
அதனால் சந்தோஷம் அடைந்த நீ, அவளை மெச்சி அந்தப் பாடலுக்கு ஏற்ப
ஆடிக்காண்பித்தாய் ;
உன்னுடைய அந்தரங்கப் பிரியையான ராதா,
ராஸவிளையாட்டில் பரிசிரமம் அடைந்தாள்;
உன்னுடைய தோள்களின் மீது தாமரைத் தண்டுகளைப் போன்ற
தன்னுடைய கரங்களைப் போட்டு, உன்னுடன் சேர்ந்து நின்று இருந்தாள்;
அப்போது அவளுடைய கை வளைகள் நழுவின;
தலையில் அணிந்து இருந்த மல்லிகை ,கசங்கிக் கீழே உதிர்ந்தன;
உன்மீது அப்படியே சாய்ந்து கொண்டாள்;
( பக்திக்கு இலக்கணமாகிய ,உனக்குப் ப்ரியமான ,ஸ்திரீ ரத்னமான
,ஸ்ரீ ராதை மாதாவுக்கு ஆயிரம் தடவை நமஸ்காரங்கள் )
இவளைப் பார்த்த, இன்னொரு கோபிகை, சந்தனம் பூசப்பட்ட
உன் திருக்கரங்களைப் பிடித்து, தன் தோளின் மீது இருத்திக் கொண்டு,
மெய்மறந்தாள்;
சியாமளா என்கிற, ராதையின் தோழியான இன்னொருத்தி,
தன்னுடை கையை உன் அருகில் கொண்டு வர,
அந்தக் கையை நீ முத்தமிட, அவளும் மெய் மறந்தாள்;
ராதையின் இன்னொரு தோழியான சைப்யை ,
தன்னுடைய உதட்டின் ஸ்பர்சத்தினால், உன்னுடைய தாம்பூலத்தை
வாயினால் க்ரஹித்து, சுவைத்தாள்.
அதைப் பார்த்து நீ, ஆனந்தம் அடைந்தாய்;
இன்னொரு கோபிகை, ராஸ விளையாட்டால் களைத்துப் போனாள் ;
அவள் இடுப்பில் அணிந்து இருந்த ஒட்டியாணம் நழுவியது;
கால் சலங்கைகள் அவிழ்ந்தன;
இதைப் பார்த்த பத்ரை எனப்படும் ராதையின் இன்னொரு தோழி,
உன் அம்புஜ ஹஸ்தத்தை இழுத்துத் தன் ஹ்ருதயத்தில் வைத்துக் கொண்டாள்;

( அவள் பத்ரை, பெயருக்கு ஏற்ப மங்களமானவள்; தானும் மங்களமாகி
அவள் தோழியான ராதைக்கும் , ஸ்திரீ ரத்னம் ராதையின்
அடிமையான அடியேனுக்கும் மங்களத்தை ஏற்படுத்தினாள் )
ஒவ்வொரு கோபிகையின் காதின் ஓரத்தில் அல்லி புஷ்பம் அமர்ந்து இருக்க,
கேசபாசங்கள் கன்னத்தில் அவிழ்ந்து விழ,
முகத்தில் அரும்பிய வ்யர்வைத் துளிகள்
உன்னுடன் போட்டி போட்டுக் கொண்டு ஆட,
கால் சலங்கைகள், ஒட்டியாண சலங்கைகள்
கைவளைகள் எல்லாம் தளத்துக்கு ஏற்ப ஒலித்திட,
தாள வாத்தியங்கள் முழங்க,
ஸ்ரீ மகாலக்ஷ்மிக்கே ஏகபோகமாக இருக்கும் உன்னை அடைந்து,
உன் கைகளை அவர்கள் கழுத்தில் அணிந்துகொண்டு ,
ராஸ நடனம் செய்து, உன்னைப்பற்றிப் பாடி, உன்னை ரமித்தனர்;

அப்போது அவர்கள் மாலைகள் நழுவி விழுந்தன;
தேனீக்கள் ரீங்காரம் செய்ததால், காயகர்களாக (பாடுபவர்களாக ) இருந்தனர் ;
மயில்களும், குயில்களும், கிளிகளும், அன்னங்களும்,
மைனா சக்ரவாகப் பறவைகளும், வாய்ப்பாட்டு,
தாளவாத்தியங்கள் வாசிப்பவர்களாக இருந்தனர்;
எல்லோரும் களைத்துப் போனார்கள்;
நர்த்தனம் செய்த கோபிகைகளும் களைத்துப் போனார்கள்;

இப்படி, நீ, வ்ரஜ சுந்தரிகளுடன் ராஸ லீலை செய்தாய்;
ஹே,கிருஷ்ணா—-நீ செய்த ராஸ க்ரீடையை,
வானத்தில் கூடி இருந்த ஸ்திரீகளும் பார்த்து,
தங்கள் நிலையை மறந்து சந்தோஷம் அடைந்தனர்
; சந்திரனும், தன் நக்ஷத்திர பரிவாரங்களுடன் இதைப் பார்த்து ஸ்தம்பித்தான்;
இரவு அதனால் நீண்டது.
நீ, கோபிகைகள் பலருடன், அவர்களுக்குச் சமமாக பல கிருஷ்ண ரூபங்களை எடுத்து,
விளையாடி அவர்கள் களைப்புறும் போதெல்லாம் அவர்கள் முகத்தைத் தடவி
அவர்களுடைய களைப்பைப் போக்கி, அவர்களை ஆனந்தம் அடையச்செய்தாய்
பிறகு, அவர்களுடன் யமுனை நதியில் ஜல க்ரீடைக்கு இறங்கினாய்.

உனக்கு உள்ள உலக மரியாதைகள், வேத பூர்வ மரியாதைகள் எல்லாம் விலகி
வெகு தூரம் சென்றன;
ஜலத்தில் இறங்கிய நீ, அவர்கள் மீது ஜலத்தை வாரி இறைத்தாய்;
இதனால் சந்தோஷமடைந்த கோப ஸ்திரீகள் அவர்களும் உன் மீது
யமுனா ஜலத்தை வாரி வீசினார்கள்;
ஆகாயத்தில் குழுமி இருந்த கந்தர்வ ஸ்திரீகள், அப்சரஸ்கள் ,
மேலே இருந்து உங்கள் மீது புஷ்பமாரி பொழிந்தார்கள்;
ஒரு இரவு பல இரவுகளாக நீடித்தது;
ஆனால், கோபிகைகளுக்கு, இப்படி இரவு நீண்டதே தெரியவில்லை;
ஹே, கிருஷ்ணா—-பரீக்ஷித் ராஜன் ஸ்ரீ சுகரைக் கேட்ட கேள்விகளையும் ,
அதற்கு அவர் சொன்ன பதில்களையும் இப்போது சொல்கிறேன்
பரீக்ஷித்தின் கேள்வி ;—-பகவான் ஸ்ரீ கிருஷ்ணனின் அவதாரம்,
தர்மத்தைத் திரும்பவும் நிலை நிறுத்த ஏற்பட்டது; அவர்
-பரர்களின் தாரங்களை எப்படி தன்னுடைய சொத்தாக ஆக்கிக் கொண்டார் ?
ஸ்ரீ ஆத்ம காமர்—சமஸ்த காமங்களையும் அடைந்தவர்;
அவர் எப்படி இப்படி நடந்து கொண்டார் ?
உமது அபிப்ராயத்தில் ,இந்த நடத்தை சரியா ?
ஸ்ரீ சுகரின் பதில்;—–நம் பார்வையில் படுகின்ற —தர்மத்துக்கு எதிர் என்று
நினைக்கிற செயல்கள்— பகனுக்குத் தோஷமாக ஆகாது;
அக்னியில் போடப்பட்டவை எப்படி பஸ்மாமாக ஆகுமோ,
அப்படி பகவானின் தேஜஸ்சில் இவை ஆகிவிடும்;
பகவான் ,பரப்ரம்மம், பரமாத்மா;
எல்லா ஆத்மாக்களும் அந்த பரமாத்மாவில் லயிப்பவை;
பாற்கடலில் தோன்றிய ஆலஹால விஷம், ருத்ரனால் விழுங்கப்பட்டது;
இதை—இது போன்ற சா ஹசச் செயல்களை ,இப்படிப் பேசும் மூடர்களால்
செய்ய முடியுமா ?

பகவான் சர்வ சக்தி உள்ளவர்; அவரை எந்த தோஷமும் நெருங்க முடியாது;
அவர் செய்தது தோஷம் என்பதோ, அதைப்போலச் செய்ய நினைப்பதோ—-
நினைப்பதே கூட, மற்றவர்கட்கு மஹா தோஷம்;
இந்த உலகு மட்டுமல்ல—எல்லா உலகங்களிலும் உள்ள ஜந்துக்கள்
பசு பக்ஷி மிருகம் மனுஷ்யன் தேவன் உட்பட—-அவனுக்கு அடங்கியவர்கள்;
இவை யாவும்–ஆமாம்—எல்லாமும் அவனுக்கு சரீரம் அதாவது–உடல்;
இவை எல்லாவற்றுக்கும் அவர் ஆத்மா. அவருக்கு எப்படி தோஷம் ஏற்படும் ?
அவரது திருவடிகளை அனவரதமும் தொழும் யோகிகள்,
தங்களுடைய யோக மகிமையால் கர்ம பந்தங்களை விலக்கியவர்கள்—
பகவத் சாம்யம் பெற்றவர்களுக்கு, எப்படி தோஷங்கள் ஒட்டாதோ
யாரால் இந்த நிலையை அடைந்தார்களோ,
அந்தப் பகவானுக்கு, அதைவிட பன்மடங்கு அதிகமாக,
எந்தத் தோஷமும் ஒட்டாது.
கோபிகைகளாக இருந்தாலும், அவர்கள் பதிகளாக இருந்தாலும்,
எல்லோரும் கர்ம சம்பந்தமான தேகத்தை உடையவர்கள்.
பஞ்ச இந்த்ரியங்களால் ஆக்கப்பட்ட தேகத்தை உடையவர்கள்
இவர்கள் யாவரும் பகவானுக்கு, சரீரம்,
இவர்களுக்குள்ளும் அந்தர்யாமியாக இருப்பவர் பகவானே—ஸ்ரீ கிருஷ்ணனே !
ஸ்வரூப —–ஸ்திதி—–ப்ரவ்ருத்தி—-யாவற்றிலும் அவரே செயல் படுகிறார்.
அவரே ஸ்ரீ கிருஷ்ணனாக —தேகத்தை—நம்மைப் போல எடுத்துக் கொண்டு
இப்படி லீலைகள் செய்கிறார்.

அவருடைய மாயையினால் மோஹிக்கப்பட்ட வ்ரஜையில் உள்ள யாரும் —
ஜனங்களோ–கோபர்களோ–கோபிகைகளோ–அவர்களுடைய பதிகளோ—
அவரின் பெற்றோர்களோ அவரிடம் எந்தத் தோஷத்தையும் காணவில்லை.
ஏனென்றால், ஒவ்வொருவரும் அவருக்குப் பத்னி—அவர் ஒருவரே புருஷர்.
புருஷர்களுக்கு எல்லாம் புருஷோத்தமர்.
ஸ்ரீ சுகர் இவ்வாறு பதிலளித்து விட்டு, மேலும் சொன்னார்.
ஹே—ராஜன்—-ராத்ரி வேளை முடியும் நேரம் நெருங்கியது;
ஸ்ரீ கிருஷ்ணரை விட்டுப் பிரிய மனமில்லாமல்,
பாக்யசாலிகளான அந்தக் கோபிகைகள்—அவருடைய அனுமதி பெற்றுத்
தங்கள், தங்கள் க்ருஹத்துக்குத் திரும்பினார்கள்.
(ஹே—-ராதாமாதவ—–கோபிகைகளைப்போல , எங்களைத் திருப்பி அனுப்பிவிடாதே.
உன்னைச் சரண் அடைந்து விட்டோம் எங்கும் போகமாட்டோம் )
பலஸ்ருதி ;—-
யார், யார், இந்த ராஸ க்ரீடைகளை ,ஸ்ரத்தையுடனும்,பக்தியுடனும் கேட்கிறார்களோ,
அவர்களுடைய காமங்கள், இச்சைகள் , மிருகத் தன்மைகள் என்று யாவும்—-
விரைவில் அழிகின்றன; அவர்கள், காமத்தை வென்று கிருஷ்ண பக்தனாகிறார்கள்

( ஹே, கிருஷ்ணா—-ஸ்ரீ சுகரை நமஸ்கரிக்கிறேன்; அர்ஜுனனுடைய பேரனான
பரீக்ஷித்தை நமஸ்கரிக்கிறேன்; நாரதரையும் ஸ்ரீ வியாசரையும் பல தடவை நமஸ்கரிக்கிறேன்;
கோபிகைகளின் தலைவி —-உனக்கு இனியவள் —அந்த ஸ்ரீ ரத்னமாகிற ராதை மாதாவை
அவருடைய தோழிகளுடன் சேர்த்துப் பலப் பல தடவை நமஸ்கரித்து,
அவர்களுடைய ஸ்ரீ கிருஷ்ண பக்தியில் கொஞ்சமாவது எங்களுக்கு அருளி,
உன்னிடம் நீங்காத பக்தியும், உன் திருவடிகளில் இடையறாத நினைவும் ,
இந்த பக்தியும் நினைவும் சேர்ந்து ,பிறவி என்பதை அறுத்து, பரமபதத்தில்
நித்ய கைங்கர்யம் செய்யும் பாக்யத்தை வேண்டி
உன்னைப் பல்லாயிரம் தடவை நமஸ்கரிக்கிறேன் )

இத்துடன், ராதா பஞ்சாத்யாயம்—–ராஸ க்ரீடை நிறைவு பெற்றது.
இதைப் படித்தவர்களுக்கு, பகவான் எல்லா ஆசிகளையும் வழங்குவாராக.
( தொடர்ந்து வரப் போகின்ற, உத்தவர் விஜயம், ப்ரமர கீதம், உத்தவரின் அதிசயமான
அனுபவங்கள்—இவற்றையும் சேர்த்து அனுபவிக்கத் தயாராகுங்கள் )
ராஸ க்ரீடை என்கிற 33 வது அத்யாயம் நிறைவடைந்தது. சுபம்.
— —

About the Author

Leave A Response