Dhasamaskantham–Adyayam 35

Posted on Sep 13 2016 - 11:52pm by srikainkaryasriadmin

தசமஸ்கந்தம்–அத்யாயம் 35

வ்ரஜஸுந்தரிகளின் ,க்ருஷ்ணலீலா கீதம்–கோபிகா கீதம்

ஹே —கிருஷ்ணா—-நீ, பசுக்களை ஓட்டிக்கொண்டு வனத்துக்குச் செல்லும்போது,,
உன் பிரிவாற்றாமையால் ,கோபிகைகள் ,மனஸ்ஸை உன்னிடம் பறிகொடுத்து
உன் புகழை மெய்மறந்து பாடினார்கள்.
சுக மஹரிஷி ,பரீக்ஷித் ராஜனிடம் சொன்னதை, இப்போது உன்னிடம் சொல்கிறேன்

நீ, புல்லாங்குழலை இடது கையில் பிடித்துக்கொண்டு இடது பக்கமாகக் கொஞ்சம்
வளைந்து,நின்றுகொண்டு உன்னுடைய புருவங்கள் அசைய ,உன் கோமள விரல்கள்
புல்லாங்குழலின் நாதத் த்வாரங்களை மூடித் திறக்க , வேணுகானம் செய்யும்போது,
ஹே–கோபிகைகளே —-எங்கே—எந்த இடத்திலிருந்து கண்ணன் கானம் இசைக்கிறானோ,
அந்த இடத்துக்குஉங்கள் மனஸ் சென்று, லயித்துவிடுகிறது.

அப்போது ஆகாய மார்க்கமாக சென்றுகொண்டிருக்கும் சித்தர்களின் பத்னிகள் ,
கண்ணனுடைய நாதத்தைக் கேட்டு,ஆச்சர்யப்பட்டு, உங்களைப்போலவே மனசைப்
பறிகொடுத்து லஜ்ஜையும் பக்தியும் கலந்த மனத்தை உடையவர்களாய், தங்கள்
ஆபரணங்கள் மாலைகள், வஸ்த்ரங்கள் நழுவுவது கூடத் தெரியாமல், கணத்தில்
லயிக்கிறார்கள்.

ஹே—-சித்த பத்னிகளே—-நந்தகுமாரன் ,வேணுகானம் செய்யும்போது, அவருடைய
வக்ஷஸ்தலத்தில் நித்யவாஸம் செய்யும் ஸ்ரீ மஹாலக்ஷ்மி, மின்னலைப்போல ,
தேஜோமயமாக ஜ்வலிக்கிறாள்.அப்போது பெருமைக்குரிய கண்ணனின் கானம்
ஹே—-அபலா —உங்கள் மனஸ் துக்கத்தைப் போக்கி ,சந்தோஷமடையச் செய்கிறது.

அந்த கானம் ப்ருந்தாவனம் முழுவதும் பரவி நிரம்புகிறது.அங்கு சஞ்சரிக்கும் வ்ருஷபங்கள்
மான்கள், மயில்கள், குயில்கள், பக்ஷிகள், வேணுகானத்தில் மயங்கி , சாப்பிடுதல்,
நடத்தல், படுத்தல், தூங்குதல் போன்ற தத்தம் கார்யங்களை மறந்து, புற்களை மேய்பவை
கானம் வரும் திசையை நோக்கி ,அண்ணாந்து பார்த்து, இருகாதுகளும் விரைத்து மேல் எழும்ப ,
வாயில் புற்கள் அப்படியே இருக்க, கண்ணனின் வேணுகானத்தில் மோஹித்து ,நான்கு கால்களும்
தடுமாற,அசையாச் /அழியாச் சித்திரங்களைப் போல ,காட்சி அளிக்கின்றன.

பகவான் க்ருஷ்ணன் ,பலராமனுடன்கூட நன்கு அலங்கரித்துக்கொண்டு, காட்டுப்
புஷ்பங்களைச் சூட்டிக்கொண்டு, மயில் இறக்கையைத் தன்முடிமீது அலங்காரமாக
வைத்துக்கொண்டு,வாயால் பாடும்போதோ, வேணுகானம் இசைக்கும்போதோ,
பசுக்களை அழைக்கும்போதோ , நதிகள் தங்கள் ஓட்டத்தையும் வேகத்தையும் மறந்து,
க்ருஷ்ணனின் பாதாம்புஜங்களை நினைக்கும் கோபிகைகளைப் போல, பிரேமைகளைக்
காட்டும் அலைகளும் மயங்கி, படத்தில் வரையப்பட்ட சித்ரத்தைப்போலக் காட்சி தருகின்றன.

கண்ணன் தன சகாக்களுடன்கூடி,ஒவ்வொரு பசுவையும் பெயர்சொல்லி அழைக்கும்போது,
மலையின், உச்சிமலையின், அடிவாரம், புல்தரை என்று எங்கெல்லாமோ மேய்ந்து கொண்டிருக்கும்
பசுக்கள், நாலுகால் பாய்ச்சலில் க்ருஷ்ணனை வந்து அடைகின்றன.கானத்தைக் கேட்டும்,
க்ருஷ்ணனின் அருகில் ஓடோடி வருகின்றன.

வனத்தில் உள்ள செடிகளும், மரங்களும், கொடிகளும் தத்தம் இயல்புநிலை மறந்து,
கிளைகளையும், நுனி இலைகளையும், பழங்களுடனும்,புஷ்பங்களுடனும்,வளைந்து,
குனிந்து, கீழே தாழ்த்தி, தேனை வர்ஷித்து,புஷ்பங்களைத் தூவுமாப்போலே,தூவி,
நமஸ்கரிப்பதுபோல ஹ்ருதய சுத்தமாக ,அதிதியை வரவேற்பதுபோல,—-ஆஹா—ஆஹா—
கண்கொள்ளாக் காக்ஷி —-பார்ப்பதற்கு எவ்வளவு அழகு !

கண்ணன், சந்தன திலகத்தை நெற்றியில் இட்டுக்கொண்டு இருக்கிறான்.வனமாலை போன்ற திவ்யமான
மணம் வீசும் துளசி மாலையை அணிந்துகொண்டு இருக்கிறான்.அந்த வாசனையால்
தூண்டப்பட்ட வண்டுகள், தேனீக்கள், கண்ணனைச் சுற்றி ரீங்காரம் இடுகின்றன. வேணுகானத்தில்,
தேனீக்களும், வண்டுகளும் மயங்குகின்றன. ரீங்காரமிடுவதை மறக்கின்றன.வானத்தில் உள்ள
மேகக்கூட்டங்கள், தங்கள் கர்ஜனையை நிறுத்தி, மந்தமாக சப்திக்கின்றன.இது, வேணுகானத்துக்கு,
”ஸ்ருதி” சேர்ப்பதைப்போல் உள்ளது.

மேகங்கள், நீர்த்திவலைகளை வர்ஷிப்பதற்குப் பதிலாக,புஷ்பங்களை, க்ருஷ்ணனின்மேல்
வர்ஷிக்கின்றன.இந்தப் புஷ்ப வ்ருஷ்டிகள் ,பனையோலை குடையைப்போல க்ருஷ்ணனின்
சிரஸ்ஸுக்கு மேலே கவிந்து,கைங்கர்யம் செய்கின்றன.
( ஹே—ப்ரபோ—–பாக்யசாலிகளான
அந்த மேகக்கூட்டங்களை அடிக்கடி நமஸ்கரிக்கிறேன் )

ஹே—-யசோதா—உன் குமாரன் வேணுகானத்தைக் கேட்டாயா—–கோவைப்பழம்போலச்
சிவந்திருக்கும் உதடுகள்—-அவற்றில், புல்லாங்குழல் கானமிசைக்கும்போது, ஸ்வரங்கள்
ஜிவ்வென்று கிளம்பி மெய்மறக்கச் செய்கிறது.கூடவே, கோபர்களும் பாடுகிறார்கள்.
இந்த்ரன் , சிவன்,ப்ரும்மா , தேவர்கள் யாவரும் ”இது என்ன அற்புதம்” என்று, கானம்வரும்
திசையை நோக்கி, தங்கள் தத்வ அர்த்தங்களில் இழியாமல், புத்தியை இழந்து, தலையைச்
சாய்த்து, கண்ணனின் வேணுகானத்தைக் கேட்கிறார்கள்.

ஹே—யசோதா—-உன் புத்ரன் க்ருஷ்ணன் நடந்துகொண்டே, வேணுகானம் செய்கிறார்.
கம்பீரமான நடை.அந்தத் திவ்யமான திருவடிகளில், தாமரைப் புஷ்பம், கொடி,அங்குசம் ,
சக்ரம் ,போன்ற அடையாளங்கள் . அவை, வ்ரஜபூமியில் படியுமாப்போலே , எங்கள்
ஹ்ருதயத்திலும் படிந்து, எங்கள் சுய நினைவை இழக்கச் செய்து, எங்கள் உடைகள்,
மேலாடைகள் நழுவுவதுகூடாது தெரியாமல்,உன்மத்தமாக்குகின்றன.

க்ருஷ்ணன் , சிலசமயங்களில், மணிமாலைகளின் உதவியால், கோக்களை எண்ணுவார்.
உச்சஸ்தாயியில் பாடுவார்.வேணுகானம் இசைப்பார்.அப்போதெல்லாம் பெண்மான்கள்,
வேணுகானத்தில் மூழ்கி, க்ருஷ்ணன் அருகில் நெருங்கி வந்து, ஆசையுடன் க்ருஷ்ணனைப்
பார்ப்பார்கள். தங்கள் பதிகளை விட்டுவிட்டு, வேணுகானலோல க்ருஷ்ணனைத் தஞ்சம்
அடைவதைப்போல, நாங்களும், க்ருஹத்து ஆசையை ஒதுக்கி ,க்ருஷ்ணனால்
ஆகர்ஷிக்கப்பட்டவர்களாய், க்ருஷ்ணனுடனேயே இருக்கவேண்டும் என்கிற புத்தியுடன்
இருக்கிறோம்.

சிலசமயம், க்ருஷ்ணன் , யமுனைக் கரையில், விளையாடும்போது, மந்தமாருதம் வீசி,
சந்தனத்தைப்போலக் குளிர்ச்சியைத் தரும்.அப்போது, ஆகாயத்தில், உபதேவகணங்கள் ,
வாத்யங்களை இசைத்து, ,க்ருஷ்ணனைக் கொண்டாடுவார்கள்.

யசோதா—-தேவகியின் கர்ப்பத்திலிருந்து, அவதரித்த க்ருஷ்ணன் இன்னும் ஏதாவது
மலையைத் தூக்கவேண்டுமா ; மலையைத் தாங்கவேண்டுமா என்கிற எண்ணத்துடன்
வருகிறார். பசுக்களை ஓட்டிச் சென்று, மேய்த்து, வாத்யங்களை இசைத்துக்கொண்டு,
களைத்துப்போய், வீடு திரும்புகிறார்.
அப்போது, அவரது திருவடிகளை —-கோக்களின் குளம்புத் தூசி படிந்த திருமேனியை,
ப்ரம்மா முதலிய தேவர்கள் புகழ்கிறார்கள்., க்ருஷ்ணன் அந்த சாயரக்ஷ வேளையில்,
சந்த்ரனைப் போலப் ப்ரகாசிக்கிறார் .

அவருடைய கன்னங்கள் ம்ருதுவாகி, காதில் உள்ள கனக குண்டலங்களின் ஜாஜ்வல்யம்
அதில் ப்ரதிபலிக்க,எங்கள் யதுபதி யாமினி ( இரவு)பதியின் வேஷத்தைச் சந்த்ரன்
தரிப்பதைப்போல , க்ருஷ்ண சந்த்ரனாக ,ப்ருந்தாவனத்தில் ப்ரவேசிக்கிறார் .

அவரின் புன்னகை முகத்தைப் பார்க்க , அவரை சந்திக்க, அவருடன் பேச,
விரஹதாபத்துடன், வ்ரஜசுந்தரிகள் வெட்கத்தைவிட்டு, ஓடி வருகிறார்கள்.
க்ருஷ்ணன் ,மந்தஹாஸத்துடன் அவர்களின் தாபத்தைப் போக்குகிறார்.எப்போதும்
க்ருஷ்ணனையே நினைத்துக் காலங்கழிக்கும் கோபிகைகள் , இவ்விதமாக ,
க்ருஷ்ணனைப் பற்றிய கீதங்களை——புகழ்க்கீர்த்திகளைப் பாடி,பரமசுகத்தை
அடைந்தார்கள் என்று
சுகப்ரம்மம் ,பரீக்ஷித்துக்குச் சொன்னார்.

( ஹே—-க்ருஷ்ணா —-அந்தக் கோபிகைகளுக்கு அனந்தகோடி நமஸ்காரத்தைச்
செய்கிறேன்.பரம ப்ரேமை , பரம பக்தி, உன்னிடம் எப்படிச் செலுத்துவது என்பதைக்
காட்டிக்கொடுத்தவர்கள் அல்லவா ! )

35வது அத்யாயம் நிறைவடைந்தது. ஸுபம்
krushna-pic-8

About the Author

Leave A Response