Dhasamaskantham–Adyayam 40 & 41

Posted on Sep 16 2016 - 5:37am by srikainkaryasriadmin

தசமஸ்கந்தம் ……——அத்யாயம் ——-40
———————————————————

அக்ரூரரின் ஸ்துதி
————————————
ஸ்ரீ சுகப்ரம்மம், பரீக்ஷித் ராஜனுக்கு, ஸ்ரீ அக்ரூரர் உன்னை ஸ்தோத்ரம்
செய்ததைச் சொல்கிறார்.

( ஹே கிருஷ்ணா , அதை உனக்கு க்ஜாபகப்படுத்த ,
அடியேன் என்ன பாக்யம் செய்தேனோ !)

ஹே….பிரபோ….எல்லாவற்றுக்கும் நீரே காரணம்;
உம்மை, அடிக்கடி, அடிக்கடி, த்யானித்து, நமஸ்கரிக்கிறேன்;
நீரே சாஸ்வதம்;
நீரே நாராயணன்
;நீரே ஸ்ரீ புருஷசூக்த பிரதிபாத்ய தேவதை ;
நீர் புருஷோத்தமர்;
நீரே அநாதி;
உம்முடைய தொப்புள் கொடி மூலமாக பிரம்மனைப் படைத்தீர்;
அவர் மூலம் எல்லா உலகங்களையும், உயிர்களையும் படைத்தீர்;
நீரே ஜகத் காரணர்;
உம்மிடமிருந்து பஞ்சீகரணத்தால்,
இந்தப் பூமி, ஜலம், அக்நி, காற்று, ஆகாசம் உண்டாகி,
பஞ்ச மஹாபூதங்களை, நீரே சிருஷ்டித்தீர்.
நீரே, ப்ரக்ருதியின் உதவியுடன்,
மஹத், அஹங்காரம், புத்தி, மனஸ், பத்து இந்த்ரியங்கள்
இவைகளை ஸ்ருஷ்டி செய்தீர்.
ஆனாலும் ஒருவருக்கும் புலப்படாமல், அகோசரமாக இருக்கிறீர்.
ஆத்மாவால்தான் உம்மை அறியமுடியுமென்றாலும் ,
உம்மைப் பூரணமாக அறிய இயலாது.
உம்முடைய சங்கல்பத்தால் அவதரிக்கிறீர்.
கர்மவசமான பிறப்பு உமக்கு இல்லை.
உம்மால் சிருஷ்டிக்கப்பட்ட, பிரக்ருதியின் முக்குணங்கள்
உம்மை அண்டாது.
நீரே, ஆதிபூதமாகவும்,
ஆதிதைவிகமாகவும்,
ஆதி பௌதிகமாகவும் இருக்கிறீர்.
உம்மை, வைதீக கர்மாக்களால் பல பக்தர்களும்,
யாக யக்ஜங்களால் பல தேவதைகளின் ஸ்வரூபமாகப்
பலபக்தர்களும், அந்தர்யாமி த்யானத்தால்
பல பக்தர்களும் உம்மையே ஆராதிக்கிறார்கள்.
ஆராதனத்தின் பலனை , அந்தந்த தேவதைகளின் மூலமாக
நீரே அருளுகிறீர்.
பல பக்தர்கள், நித்ய நைமித்திக —-ஆஸ்ரம கர்மாக்களை அனுசரித்து,
உம்மையே ஆராதிக்கிறார்கள்.
பலர், மனதை ஒருமுகப்படுத்தி, கர்மயோகத்தால் உம்மை பூஜிக்கிறார்கள்.
க்ஜாநிகளோ, க்ஜான யோகத்தால், உம்மையே பூஜிக்கிறார்கள்
. ஆஸ்திகர்கள், பலமூர்த்தி ஸ்வரூபமாக—–பாஞ்சராத்ர ஆகமப்படி
சதுர் வ்யூஹங்களாகவும், —-த்வாதச நாமங்கள்—–தசாவதாரங்கள்—-
அர்ச்சா விக்ரஹமாகவும் உம்மை ஆராதிக்கிறார்கள்.
நீரே ஆதி மூர்த்தி.
நீரே ஏக மூர்த்தி.
ஆசார்ய உபதேசங்களால் உம்மை நன்கு அறிந்தவர்கள்,
இதர தேவதைகளைப் பூஜிககாமல், அல்ப பலன்களை வேண்டாமல்,
நீரே எல்லாத் தேவதைகளிலும் அந்தர்யாமியாக இருப்பதை உணர்ந்து,
உம்மையே பரமாத்மாவகப் பூஜிக்கிறார்கள்.
உமக்கு அநேக நமஸ்காரம்

ஹே….பிரபோ…..நீரே முக்குணப் பிரகிருதியை ஆள்பவர்.
எல்லா சேதன, அசேதன வஸ்துக்களும் உம்மிடமே லயிக்கின்றன.
அவைகள் எல்லாமே உமக்கு சரீரம்
ஆனால் அவற்றின் எந்தத் தோஷமும் உம்மிடம் ஒட்டுவதில்லை.
நீரே நியந்தா;
நீரே சாக்ஷி;
நீரே எல்லாருக்கும், உபாதான, நிமித்த , சஹகாரி காரணமாகிறீர்
உமக்கு அநேக நமஸ்காரம்.

முக்குணங்கள் அடங்கிய குண பிரவாஹம் அவித்யையால் ஏற்படுகிறது.
அதனால், பலப்பல தேகங்கள்;
இந்தத் தேகங்களை விட , ஆத்மா வேறு என்கிற க்ஜானம் ஏற்படாதவரை,
உம்மை அறிய இயலாது. புருஷ சூக்தத்திலே சொல்லியபடி,
உமது முகத்திலிருந்து அக்நி உண்டாயிற்று
உமது திருவடிகளே பூமி
உமது கண்ணே சூர்யன்
உமது நாபியே ஆகாசம்
உமது காதுகளே திக்குகள்
உமது தலைப்பாகம் சத்யலோகம்
உமது திருக்கரங்களே இந்த்ராதி தேவர்கள்
உமது திருவயிறே சமுத்ரம்
உமது மூச்சுக் காற்றே பிராணன்
உமது மயிர்க்கால்களே வ்ருக்ஷங்கள் –செடி கொடிகள்
உமது கேசபாசங்களே மேகக்கூட்டங்கள்
உமது எலும்புகளே–நகங்களின் பாகங்களே — மலைகள்
உமது கண் இமைகள் மூடித் திறத்தலே— இரவு, பகல்
உமது வீர்யமே மழை
இவைகளே உமது புருஷ ஸ்வரூபம்.

எப்படி ஜலத்தில், பற்பல ஜந்துக்கள் நீந்தி வாழ்கின்றனவோ,
எப்படி, அத்திப் பழத்தில் சிறுசிறு பூச்சிகள் வாழ்கின்றனவோ,
அதைப்போல, எல்லா ஜீவக் கூட்டங்களும் ,உம்மையே அண்டி, நம்பி வாழ்கின்றன.
நீர், உமது இச்சையால், சங்கல்ப மாத்ரத்தில் பற்பல அவதாரங்களை எடுக்கிறீர்.
அந்த அவதாரங்களின் சேஷ்டிதங்களில் ஈடுபட்டு,
சந்தோஷப்பட்டு,ஜனங்கள் , உம்மைப் புகழ்கிறார்கள்.

நீர் பிரளய காலத்தில் மத்ஸ்ய ரூபியாக அவதாரம் செய்து சஞ்சரித்தீர்;
அந்த ரூபத்துக்குப் பல நமஸ்காரங்கள்.
அப்போது, நீரே சர்வகாரணப் பொருளாக இருந்தீர்.
நீர், ஹயக்ரீவ அவதாரம் செய்து, மது கைடப அரக்கர்களை அழித்து,
வேதங்களை ரக்ஷித்தீர்; உமக்குப் பல நமஸ்காரங்கள்.
நீர், ஆமை வடிவாக அவதரித்து, —-மந்த்ர மலையைச் சுமந்து ,
சமுத்ரமதனத்தில் ,அம்ருதத்தை உண்டாக்கினீர் .
உமக்குப் பல நமஸ்காரங்கள்.
நீர் வராஹ அவதாரம் செய்து, சமுத்ரத்தில் ஒளித்துவைத்து இருந்த
பூமியை ( பூமா தேவியை ) , வெளியே கொணர்ந்து ரக்ஷித்தீர்
உமக்குப் பல நமஸ்காரங்கள்
நீர், அத்புத ந்ருசிம்ஹனாக அவதரித்து, பிரஹ்லாதன் போன்ற
சாதுக்களை ரக்ஷித்தீர் .
உமக்குப் பல நமஸ்காரங்கள்.
நீர், வாமனரூபியாக அவதரித்து, மூன்று உலகங்களையும் அளந்து ,
உமக்கே மறுபடியும் சொந்தமாக்கி இந்த்ரனுக்கு அளித்தீர்.
உமக்குப் பல நமஸ்காரங்கள்.
நீர், பரசுராமராக அவதரித்து, க்ஷத்ரிய அரசர்களின் கர்வத்தை
கோடரியால் சிதைத்தீர்.
உமக்குப் பல நமஸ்காரங்கள்
நீர், ரகு குலத்தில் அவதரித்து, சாதுக்களை ரக்ஷிக்க,
ராவணாதியரை அழித்து, தர்ம சம்ரக்ஷணம் செய்தீர்.
உமக்குப் பல நமஸ்காரங்கள்.
நீர், இப்போது, வாசுதேவ புத்ரராக, சங்கர்ஷண—வாசுதேவராக அவதரித்து,
ஸ்ரீ கிருஷ்ணராக விளங்குகிறீர் ;
உமக்குப் பல நமஸ்காரங்கள்.

நீர், ப்ரத்யும்னராகவும், அநிருத்தராகவும் —சாதுக்களின் பதியாக விளங்குகிறீர்
உம்முடைய வ்யூஹ அவதாரங்களுக்குப் பல நமஸ்காரங்கள்.
நீரே, இனி கல்கி அவதாரம் எடுத்து, ம்லேச்சர்களான க்ஷத்ரியர்களை
அழிக்கப் போகிறீர்
உமக்குப் பல நமஸ்காரங்கள்.

நீரே தசவித அவதார ஸ்வரூபி ;
நீரே ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா ;
உமக்குப் பற்பல நமஸ்காரங்கள்.
ஹே பகவன்….லோகத்தில் ஜீவர்களை பிறப்பித்து,
உமது மாயையால், அவர்கள் மோஹத்தில் மூழ்கி
.உலக வ்யவஹாரங்களில் உழல,
அவர்களை, கைப்பொம்மைகளாக ஆட்டிவைக்கிறீர்
அடியேனும், அவ்விதமே, உழன்று கொண்டு இருக்கிறேன்.
பத்னி, பந்துக்கள், குழந்தைகள், செல்வம், வீடு, இந்தத் திரேகம் —
இத்யாதி பந்தத்தில் அகப்பட்டு, உழன்று கொண்டு இருக்கிறேன்.
இவை ஸ்வப்னக் காக்ஷி—பொய் என்று தெரிந்தும் .அவற்றிலேயே
ஆத்ம புத்தியைச் செலுத்தி, பலவிதத் துன்பங்களைப்
பட்டுக்கொண்டு இருக்கிறேன்

விபோ—-அடியேன் மூடன்,
சத்யமான உம்மை அறியவில்லை
அநித்தியமான உடலில் பாசம்–பற்று வைத்து,
இதன் உள்ளே இருக்கும் ஆத்மாவைத் தெரிந்து கொள்ளாமல்,
புத்தி கலங்கி இருக்கிறேன்.
கானல் நீரைப்போல, ஏமாற்றக்கூடிய வஸ்துக்களில்,
மோஹம் வைத்து, உம்மிடம் அலக்ஷ்ய புத்தியாக
பரம சம்சாரியாக இருக்கிறேன்
அடியேன், புத்தி ஹீனன்.
சுத்தமான ஜலத்தை ஒதுக்கி, கானல் நீரைத் தேடி அலைந்து,
உம்மிடம் பராமுகமாக இருக்கிறேன்.
அடியேன், என் மனத்தை அல்ப விஷயங்களிலிருந்து
திருப்ப முடியவில்லை.
உமது கருணைக்கு உரியவன்
எப்போதும் இந்த்ரிய வசப்பட்டு, அதன் இஷ்டங்களை நிறைவேற்ற,
பலவித ஹிம்சைகளை அடைந்து, இங்குமங்கும் உழல்கிறேன்.
அடியேனைப் போன்ற பாபாத்மாக்களுக்கு நின் திருவடிகளே புகல் என்று ,
உம்முடைய அநுக்ரஹத்தை வேண்டி, தஞ்சமென்று வந்திருக்கிறேன்.
சம்சாரத்தைத் துறந்து ,மோக்ஷத்தை
நாடி இருக்கிறேன்.

ஹே….அப்ஜநாப ….இது உமது கிருபையாலும், உமது அடியார்களைப்
பூஜிப்பதாலும் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
இதற்கும் உமது கிருபை வேண்டும்.
உம்மைப் பல தடவை நமஸ்கரிக்கிறேன்
. வாசுதேவராகிய உமக்குப் பல நமஸ்காரங்கள்.
ஹ்ருஷீகேசராகிய உமக்குப் பல நமஸ்காரங்கள்.
அடியேன், உம்மைச் சரணம் என்று அடைந்த ப்ரபன்னன்.
அடியேனை நீர்தான் காக்க வேண்டும்

(ஹே….கிருஷ்ணா….இது அக்ரூரர் ஸ்துதி என்று , ஆரம்பத்தில்
அடியேன் சொன்னாலும், இப்போது இது அடியேனின் ஸ்துதியே.
அடியேனை உன் திருவடிகளில் சேர்த்துக்கொள்ள வேண்டி,
உன்னைப் பல்லாயிரம் கோடி முறை தெண்டனிட்டுக் கதறுகிறேன்
ஆய்ச்சியர்களானகோபிகைகளையும், ஸ்ரீ பாஷ்யகாரரையும் ,
ஆசார்யன் ஸ்வாமி தேசிகனையும் முன்னிட்டு,
ஸ்ரீ அக்ரூரை ஆயிரமாயிரம் தடவை நமஸ்கரிக்கிறேன்.
அவரன்றோ, எப்படி உன்னைத் துதிக்கவேண்டும் என்று
மூடனான அடியேனுக்குச் சொல்லிக் கொடுத்தவர் )

– – 40 வது அத்யாயம் நிறைவடைந்தது. ஸுபம்

—————————————————————————————————————–

தசமஸ்கந்தம்—- அத்யாயம் ….41
—————————————————————————

ஸ்ரீ கிருஷ்ணனும் , பலராமனும் மதுரா நகருக்குள் பிரவேசித்தல்
——————————————————-

ஸ்ரீ சுகர் மேலும் கூறுகிறார்;
ஹே, ராஜன்…..ஸ்ரீ கிருஷ்ணன் , இவ்விதமாக, அக்ரூரர்
ஸ்துதி செய்ததைக் கேட்டார்
உடனே தன்னுடைய ஆச்சர்யமான உருவங்களை மறைத்துக் கொண்டார்.
அந்தப் பெரிய உருவம் ஜலத்திலிருந்து மறைந்தது.
அக்ரூரர் ஜலத்திலிருந்து வெளியே வந்து, ரதத்தை அடைந்தார்.
ஸ்தம்பித்துப் போய் இருந்த அவரை,
“என்ன அத்புதமான , ஆச்சர்யமான விஷயத்தைக்கண்டீர் ? ”
என்று ஸ்ரீ கிருஷ்ணன் கேட்டார்.

அதற்கு, அக்ரூரர் சொன்ன பதிலை
ஹே கிருஷ்ணா, ஸ்ரீ சுகர், பரீக்ஷித் ராஜனுக்குச் சொன்னதைச்
சுருக்கமாகக் கூறுகிறேன்.

” ஆஹா….என்ன அத்புதங்கள்….உம்மிடமே எல்லா அற்புதக் காக்ஷிகளும்
அடங்கி இருக்கின்றன. நீரே விச்வாத்மா… உம்மை அடிக்கடி நமஸ்கரிக்கிறேன் ”
என்று சொல்லி, ரதத்தில் ஏறி, அதை ஓட்ட , சாயங்கால வேளையில் ,
மதுராபுரி எல்லைக்கு நீங்கள் மூவரும் வந்து சேர்ந்தீர்கள் .
வழியில் இருந்த கிராமங்களிலுள்ள ஜனங்கள் எல்லாம்,
உங்கள் இருவரையும் பார்த்து, உங்கள் அழகில் மனம் பறிகொடுத்து,
உங்களுக்கு ஆகாரம் முதலியன கொடுத்து உபசரித்து,
உங்கள் பேரழகில் மயங்கி இருந்தார்கள்.

மதுராபுரிக்கு, வெண்ணெய் , தயிர் இவைகளை
வண்டி வண்டியாக எடுத்துக் கொண்டு கோகுலத்திலிருந்து புறப்பட்ட யாதவர்கள்,
முன்னதாகவே மதுராபுரியை அடைந்து , ஒரு நந்தவனத்தில் தங்கி
உங்கள் வருகையை எதிர் பார்த்துக் காத்திருந்தார்கள்.
நீங்களும், அந்த நந்தவனத்தை அடைந்தவுடன்,
உன்னை வணங்கி நிற்கும் அக்ரூரரின் கையைப் பிடித்துக் கொண்டு,
” நீர் இப்போதே முன்பாக மதுராபுரி நகருக்குள் ரத்தத்துடன் செல்லுங்கள்;
நாங்கள் இந்த நந்தவனத்தில் சிறிது நேரம் இவர்களுடன் தங்கிவிட்டு
அப்புறமாக நகருக்குள் பிரவேசிக்கிறோம்”: என்று சொன்னாய்.

அதற்கு அக்ரூரர் ” பிரபோ….உம்மை விட்டு விட்டு,
நான்மட்டும் தனியாக நகருக்குள் போகமாட்டேன்;
நீரும் என்னுடன் , எல்லாருமாக நகருக்குள் என் வீட்டுக்கு வந்து,
நான் உம்மை என்வீட்டுக்குள் வரவேற்று, உமது திருவடிகளை
கங்கை ஜலத்தால் அலம்பி, அதை அருந்தி
தலையில் சேர்த்துக் கொள்ள வேணும்
ஹே, தேவதேவ…….ஜகன்னாத …..புண்ய ஸ்ரவண கீர்த்தன ….
.யதுவம்ச உத்தம ..நாராயண …உமக்கு அனந்தகோடி நமஸ்காரங்கள் ….”
என்று பிரார்த்தித்தார்.

அதற்கு, நீ, சரி பலராமனுடன் வருகிறேன்..
.ஆனால், கம்சனைக் கொன்று என் பந்துக்களுக்கு ஆனந்தத்தைச் செய்து ,
அதன் பிறகு, வருகிறேன்….
இப்போது நீர், நகருக்குள் ரதத்துடன் செல்வீராக….. என்றாய்.
அக்ரூரர் ,மனம் கலங்கியவராக, தான் தனியாக மதுராபுரி நகருக்குள் சென்று,
கம்சனிடம் ,ஸ்ரீ கிருஷ்ணரும், பலராமனும் மதுரை நகருக்கு வெளியே
நந்தவனத்திற்கு வந்து விட்டார்கள் என்கிற விஷயத்தைச் சொல்லிவிட்டுத்
தன்னுடைய க்ருஹத்துக்குப் போய்ச் சேர்ந்தார்.

நீயும் பலராமனும் மறுநாள் மத்யானவேளையில்,
உனது பரிவாரங்களுடன் மதுராபுரி நகருக்குள் நுழைந்தாய்
. நகரில் உள்ள மாட மாளிகைகள், கூட கோபுரங்கள், உத்தியான வனங்கள் ,
சபாமண்டபங்கள், இன்னும் பற்பல அற்புத பவனங்களைப் பார்த்துக்கொண்டே
வீதிகளில் சென்றாய். உன்னைப்பார்க்க மதுராபுரி ஸ்திரீகள்,
முண்டி அடித்துக் கொண்டு வந்தார்கள்;
ஆபரணங்களைத் தாறுமாறா அணிந்து கொண்டு தெருவுக்கு வந்தார்கள்;
சிலர் சாப்பாடு சாப்பிட்டுக்கொண்டு இருக்கும்போதே பாதியில் ஓடிவந்தார்கள்;
உன்னுடைய மந்தஹாசச்சிரிப்பிலும், பார்வையிலும், ஜாடைகளிலும்
மனதைப் பறி கொடுத்தார்கள்.
உனக்கு பழங்கள், பக்ஷணங்கள் முதலியன கொடுத்துப் பூஜித்தார்கள்.
புருஷர்களும் இப்படியே உன்னைக் கண்டு மெய்மறந்தார்கள்.

நீயும், பலராமனும் இப்படித் தெருவிலே போய்க்கொண்டு
இருக்கும்போது, கம்சனுக்காகத் துணிகளைத் தயார் செய்து வைத்திருந்த
வண்ணானைப் பார்த்தீர்கள்.அந்தத் துணிகளைப் பார்த்த நீ,
வண்ணானிடம் உனக்கு அணிந்துகொள்ள சில துணிகளைக் கேட்டாய்.
வண்ணான், கோபத்துடன், அரசன் அணிந்துகொள்ளும் துணிகளை,
காடுமலைகளில் சஞ்சரிப்பவர்களுக்குக் கொடுப்பதற்கு இல்லை என்றான்.
உங்களை அதட்டினான்; விரட்டினான்; ராஜ த்ரவ்யங்களில்
ஆசை வைக்காதே என்று பயமுறுத்தினான்.
இதனைப் பொறுக்காத நீ, அவன் தலையைக் கொய்து எறிந்தாய்.
அருகில் இருந்த அவனது ஆட்கள், பயந்து ஓட, நீயும் பலராமனும்
அந்த வஸ்த்ரங்களில் சிறந்தவற்றை எடுத்து அணிந்து கொண்டீர்கள்.
இதனைப் பார்த்துக்கொண்டிருந்த துணி நெய்யும் நெசவாளி,
உங்களுக்கு, நேர்த்தியான உடைகளால் அலங்காரம் செய்தான்.
இதனால் மகிழ்ச்சி அடைந்த நீ , அவனுக்கு சாரூப்ய ஆனந்தம்,
நிறைந்த சுக வாழ்க்கை, இவைகளை அளித்தாய்.

பிறகு, நீங்கள் இருவரும், சீதாமா என்கிற
மாலாகாரருடைய வீட்டுக்குச் சென்றீர்கள்.
உங்களைக் கண்டதும் அவன் எழுந்து வணங்கி, வர வேற்று ,
உபசரித்து, சந்தனம் புஷ்பம் முதலியவைகளைக் கொடுத்து,
” நீரே சர்வ ஜகத்துக்கும் ஆதி காரணர்;
உங்களால் நான் மிகவும் அனுக்ரஹம் செய்யப் பட்டேன் என்று
சொல்லி மாலைகளைச் சூட்டி மகிழ்ந்தான் .
பரம ப்ரீதியுடன் நீ, அவன் வேண்டிய வரத்தைக் கொடுத்து,
மேலும் ஐஸ்வர்யம் , பலம் ஆயுஸ், இவற்றைக் கொடுத்து
அவனை அனுக்ரஹித்தாய்.

41 வது அத்யாயம் நிறைவடைந்தது., ஸுபம்

10501777_699575773443481_3585101567443741460_n

About the Author

Leave A Response