Dhasamaskantham–Adyayam–42 & 43

Posted on Sep 16 2016 - 6:56am by srikainkaryasriadmin

தசமஸ்கந்தம்——- அத்யாயம் ………….42
———————————————————-
த்ரிவக்ரைக்கு அநுக்ரஹம்— தனுர் யக்ஜ சாலையில்
வில்லை முறித்தல்—– கம்ஸனின் கலக்கம் —
—————————————————————————————–

ஹே…கிருஷ்ணா….உன் சரிதத்தை ஸ்ரீ சுகர்,
பரீக்ஷித் மகாராஜனுக்குச் சொல்கிறார் …
இது அடியேன் செவிகளுக்கு அமுதமாக இருக்கிறது.
நீயும், பலராமனும் மதுராபுரி நகருக்குள் ராஜ பாட்டையில்
நடந்து சென்றீர்கள். பார்ப்பவர்கள் வைத்த கண் வாங்காமல்
உங்களைப் பார்த்துக் கொண்டே இருந்தார்கள்.
உங்களைப் பார்த்த பெண்கள் குதூகலம் அடைந்தார்கள்.

அப்போது , உங்கள் எதிரே த்ரிவக்ரை என்கிற கூனி வந்தாள்
வாசமிகு சந்தனமும்,சுத்தமான திலகமும் எடுத்து வந்தாள்.
அவள் கூனி ஆனாலும் யுவதி….அவளைப் பார்த்து
“பெண்ணே …நீ யார்….இந்த சந்தனம் முதலியவற்றை
யாருக்காக எடுத்துப் போகிறாய்…. .
எங்களுக்கு இவைகளைக் கொடுப்பாயா…உனக்கு நல்லவை நடக்கும்..
.இதுபோன்ற சோகம் இனி இல்லை…..” என்றாய்

அதற்கு , கூனியாகிய அந்த சைரந்தரி பதில் சொன்னாள்.
” நான் கம்ஸனின் சேவகி;
சந்தனம் மற்றும் வாசனைத் த்ரவ்யங்களைத் தயாரிக்கும்
கைலாவண்யத்தை மெச்சி கம்ஸன்
என்னை இந்த சேவகத்துக்கு நியமித்துள்ளார்.
ஆஹா அழகானவர்களே……உங்களைத் தவிர
இந்தச் சந்தனாதி த்ரவயங்களைப் பெறுவதற்கு
ஒருவருக்கும் அருகதை இல்லை; ….”.என்று சொல்லி

ஹே கிருஷ்ணா …
.உன்னுடைய மாதுர்யம், புன்சிரிப்பு, சௌஹார்த்தம்,
கடாக்ஷ வீக்ஷிண்யம் இவைகளில் மனதைப் பறிகொடுத்து,
எல்லா சந்தன வாசன தாம்பூலங்களையும் கொடுத்தாள்.
இவள் த்ரிபங்கீ —உடலானது மூன்று இடங்களில் வளைந்து இருக்கிறது
கழுத்து, மார்பு, மற்றும் இடுப்பு ஆகிய மூன்று இடங்களில் வளைவு .
நீயும், பலராமனும் சந்தனத்தைக் கழுத்து, மார்பு உடம்பு
என்று பூசிக் கொண்டீர்கள்.
தாம்பூலத்தையும் வாயில் போட்டு சுவைத்தீர்கள்.
இவையெல்லாம் பார்த்த த்ரிவக்ரை மிகுந்த சந்தோஷமடைந்தாள்.
அப்போது நீ அவளுக்கு அநுக்ரஹம் செய்ய நினைத்தாய்.
“ஹே…த்ரிவிக்ரை….நீ மிகுந்த அழகானவள்;
ஆனால் இந்த மூன்று வளைவுகளும் உன் அழகை மங்கச் செய்கின்றன ”
என்று சொல்லி, அவளுடைய கரத்தைப் பிடித்து,
அவளுடைய பாதங்களை உன் திருவடிகளால் அமுக்கி,
உன்னுடைய விரல்களால் அவளுடைய முகத்தை உயரத் தூக்கி,
அவளுடைய தாடையை உன் விரல்களால் தாங்கி,
ஒரு சொடுக்கு செய்தாய்.
என்ன ஆச்சர்யம் !
அந்த த்ரிவக்ரை அதிரூப சுந்தரியாக —-
முகம், உடல், கால்பாகம் இவை மூன்றும் ஒத்த அழகுடன்
அதிசோபிதமாகஆனாள்.
அவள், உன்னுடைய உத்தரீயத்தைப் பிடித்துக்கொண்டு,
மந்தஹாச வினயத்துடன்
” ஹே…..ரூபகுண ஔதார்ய சம்பண்ணா….
உம்மிடம் என் மனத்தை இழந்தேன்…..
உம்மை விட இயலாது, என்னுடன் வீட்டுக்கு வாரும் ….” என்று கெஞ்சினாள்
அதற்கு, நீ, நான் இங்கு வந்த வேலை முடிந்ததும் உன் வீட்டுக்கு வருவேன் …
என்று சொல்லி அவளை அனுப்பிவிட்டு ,
நீங்கள் இருவரும் தொடர்ந்து நடந்து சென்றீர்கள்.
கொஞ்ச தூரத்தில் , பூமாலை, தாம்பூலம் இவைகளை எடுத்துக்கொண்டு
ஒரு வியாபாரி எதிரே வந்தான். உங்களைப் பார்த்தவுடன்
உங்களுக்கு மாலைகளை அணிவித்து, சந்தனம் பூசி, தாம்பூலம் கொடுத்தான்.
இவைகளை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த மதுராபுரி ஸ்திரீகள்,
சந்தோஷம் நிரம்பிய மனத்துடன் அடுத்து என்ன செய்வது என்று
ஒன்றும் புரியாதவர்களாக சித்திரப் பாவைகளைப் போல நின்றார்கள்.

(ஹே கிருஷ்ணா…..உன்னுடைய அப்ராக்ருத அழகு……உன்னுடைய தர்சநம்
அப்போது அடியேனுக்குக் காணக்கிடைக்க வில்லையே ..
.இப்போதாவது அந்தத் தர்சனத்தைத் தரலாகாதா )

பிறகு சிறிது தூரம் சென்றவுடன் ,எதிரே வருபவர்களைப் பார்த்து
” இங்கே ஏதோ ஒரு இடத்தில் தனுஸ் இருக்கிறதாமே …..எங்கே இருக்கிறது …..”
என்று கேட்டு ,அவர்களிடம் தெரிந்துகொண்டு, இந்திர சபையைப் போல இருக்கும்,
அற்புதமான அந்த சபைக்குள் சென்றீர்கள்.
அங்கு நடுநாயகமாக பற்பல வர்ணத்துடன் மின்னும்
பச்சை, வைடூர்ய மாணிக்கக் கற்களால் பதிக்கப்பட்டு
பார்ப்பதற்கு வெகு நேர்த்தியாக உள்ள அந்தவில்லைப் பார்த்தீர்கள்.
வில்லுக்கு முன்பாக , ஒரு பெரிய பையில் பணமுடிப்பு வைக்கப்பட்டிருந்தது
. பலவீரர்கள், மிக ரகசியமாகப் பாதுகாத்துக் கொண்டிருந்தார்கள்.
நீ, சிரித்துக் கொண்டே வில்லின் அருகில் சென்றாய்.
ஏராளமான வீரர்கள் ஓடிவந்து உன்னைத் தடுத்தனர்.
அவர்களையெல்லாம் ஒரு க்ஷணத்தில் ஒதுக்கித் தள்ளி,
வில்லைக் கையில் எடுத்து, விளையாட்டாக அதன் நாணைப் பூட்டி இழுத்தாய்.
வில், சடாரென்று இரண்டாகப் பெரும் ஓசையுடன் ஒடிந்து விழுந்தது.

இந்தத் த்வனியைக்கேட்ட கம்ஸன் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தான்.
வில்லுக்குக் காவலாக இருந்த வீரர்கள், உங்களை அழிக்க ,
ஆயுதங்களுடன் ஓடிவந்தார்கள்.
உடைந்த வில்லையே ஆளுக்கு ஒன்றாக எடுத்துக்கொண்டு நீங்கள் இருவரும்
அவர்களுடன் சண்டை செய்து விரட்டி அடித்தீர்கள்.

இதை அறிந்த கம்ஸன் இன்னும் பல வீரர்களை அனுப்ப அவர்களையும் வென்று,
நீங்கள் இருவரும் , அந்த சபையில் இருந்து வெளியே வந்து,
மறுபடியும் மதுராபுரி நகர வீதிகளில் சுற்றி னீர்கள்
மதுராபுரவாசிகள், உங்களை மிகவும் கொண்டாடி,
இவர்கள் உத்தமச் சிறுவர்கள், தேவர்கள் என்று புகழ்ந்தனர்.
இப்போது அஸ்தமன சமயம் ஆகிவிட்டது.
நீங்கள் இருவரும் உங்களுடன் வந்த கோபாலகர்கள் புடைசூழ
ரதத்தை நிறுத்திய இடத்துக்கு வந்து, ரதத்தில் ஏறி,
தங்கியிருந்த இடத்தை அடைந்தீர்கள்.
அங்கு, கைகால்களை அலம்பி உணவு அருந்தி ,
இரவை சுகமாகக் கழித்தீர்கள்.

ஆனால், கம்ஸனுக்குத் தூக்கம் வரவில்லை.
பற்பல துர்நிமித்தங்கள் ஏற்பட்டதைப் பார்த்தான்.
மிகுந்த பயத்துடன் இரவைக் கழித்தான். மறுநாள் காலை….
மல்யுத்தம் செய்வதற்கான ஏற்பாடுகளுக்குக் கட்டளை இட்டான்.
பிரும்மாண்டமான அரங்கம். மந்திரிகள், சேனாதிபதிகள், பிரமுகர்கள்,
நந்தகோபன் மற்றும் எல்லா கோபாலகர்கள்வந்து அமர்ந்தார்கள்.
கம்ஸன் தன் பரிவாரங்களால் சூழப்பட்டு அங்கு வந்து ,
தனது சிம்மாசனத்தில் அமர்ந்தான்
மனத்தில் ஏதோ ஒரு பீதி அவனுக்கு.
மல்யுத்த அரங்கில், கூடன்,சலன், தோசலன் மற்றும்
பல மல்யுத்த வீரர்கள் இருந்தனர்.
சாணூரன் , முஷ்டிகன் என்கிற மிகச் சிறந்த மல்யுத்த வீரர்களும் இருந்தனர்.

42 வது அத்யாயம் நிறைவடைந்தது . ஸுபம்

———————————————————————————————————-

— தசமஸ்கந்தம்—– அத்யாயம் ……….43
———————————————————————————

கம்ஸனின் பட்டத்து யானை—-குவலையா பீடம் —– சம்ஹாரம்
—————————————————–

ஸ்ரீ சுகர் , பரீக்ஷித் மகாராஜனுக்கு மேலும் உன் கதையைக் கூறுகிறார்
மறுநாள் காலை வேளை. நீயும், பலராமனும் நன்கு அலங்கரித்துக் கொண்டு,
துந்துபி வாத்தியம் முதலிய சப்தங்கள் வரும் திசையைநோக்கி
கோபாலகர்கள் கூடவே வர, நடந்து சென்றீர்கள்.
மிகப் பெரிய அரங்கம்; மந்திரிகளும், சேனாதிபதிகளும் முக்யஸ் தர்களும்
கூடியிருந்த அரங்கம்; கம்ஸன் தன்னுடைய சிம்ஹாசனத்தில்
நாடு நாயகமாக வீற்றிருந்தான்.

நீங்கள், அந்தப் பெரிய அரங்கத்தின் நுழைவு வாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டீர்கள்.
அங்கு, கம்ஸனின் பட்டத்து யானை —குவலையாபீடம் —என்கிற யானை இருந்தது.
மாவுத்தன் சொன்னபடியெல்லாம் செயல்பட்டது.
நீ, உன் கேசபாசங்களை நன்கு முடிந்துகொண்டு, வேஷ்டியை இறுகக்கட்டிக்கொண்டு,
மிகக் கம்பீரமாக, மாவுத்தனுக்குக் கட்டளை இட்டாய்.

” நாங்கள் உள்ளே போக வேண்டும்; இந்த யானையை விலக்கு; தாமதிக்காதே;
தவறினால், யானையையும் உன்னையும் சேர்த்துக் கொன்று விட்டு உள்ளே பிரவேசிப்போம் ”

மாவுத்தன், மிகக் கோபமாக, யானையை உங்கள் மேல் ஏவினான்.
அது பாய்ந்து வந்தது. உன்னைத் துதிக் கையால் வளைத்தது.
நீ, அதை மிக வேகமாகத் தடுத்து, உன் முஷ்டியால் குத்தி, அதன் துதிக்கையை,
அதன் பின்புறமாக இழுத்தாய். யானை உன் பிடியிலிருந்து தப்பித்து,
மிகவும் கோபத்துடன்,உன்னுடன் மோதியது.
இடப் புறமாகவும், வலப்புறமாகவும் சுழன்று உன்னைத் தாக்கியது.
நீயும், அதற்கு ஏற்றாற் போலச் சுழன்று, சற்று நேரம் அதனுடன் விளையாடினாய்.
அதற்கு இன்னும் கோபம் ஏற்படுமாறு செய்தாய்.
உன்னை முட்டுவதற்கு ஓடி வந்தது. நீ, லாவகமாக நகர்ந்து கொண்டாய்.
நீ தரையில் படுத்து இருப்பதாக நினைத்து, தரையில் மோதியது.
ஆனால் , நீ அங்கு இல்லை என்பதை உணர்ந்தது.

இப்போது மாவுத்தன், மறுபடியும் அதனைத் தூண்டி , உன்மீது ஏவினான்
. நீ, அந்த யானையை உன் பலத்தால் அடித்துத் கீழே தள்ளினாய்.
சமாளித்துக் கொண்டு அது எழுந்திருக்க முயல, நீ ,அதை மறுபடியும் கீழே தள்ளி,
அடித்து, அதன் தந்தங்களைப் பிடுங்கினாய்
. ஆயிரம் யானைகளின் பலம் கொண்ட அந்த குவலையாபீடம் என்கிற யானை ,
இப்படியாக அந்த “ரங்க” பூமியில் உன்னால் கொல்லப்பட்டது.
உன் திருமேனியில் ரத்தமும், வியர்வையும் நிறைந்து இருக்க,
நீயும் பலராமனும், ஆளுக்கு ஒரு தந்தத்தைப் பிடித்துக் கொண்டு
அந்த” ரங்க” மேடைக்கு வந்தீர்கள்.

(ஹே …க்ருஷ்ணா…..அன்று உன்னையே தஞ்சம் என்று “ஆதிமூலமே ” என்று கதறிய
யானையைக் காத்தாய். இப்போது, மாவுத்தனால் தூண்டிவிடப்பட்ட,
கம்ஸனால் ஏவப்பட்ட குவலையாபீடம் என்கிற யானையைக் கொன்றாய்.
பிற்பாடு, மகாபாரத யுத்தத்தில் , தர்மரை முன்னிட்டு “அஸ்வத்தாமன் ” என்கிற
யானை அழியப் போகிறது. மூன்று யானைகள் ,
உன் திருவிளையாடலில் முக்யத்வம் பெறுகின்றன. )

அப்போது, நீ, கோபர்களுக்கு சகாவாகவும், பிதாவான நந்தகோபருக்குக் குழந்தையாகவும்,
ஸ்திரீகளுக்கு மன்மதமூர்த்தியாகவும், கம்ஸனுக்கும் அவன் சகாக்களுக்கும்
அவர்களுடைய பலத்தை அடக்குபவனாகவும் காக்ஷி தந்தாய்
. கூடியிருந்த ஜனங்கள், எவராலும் அடக்கமுடியாத, குவலையாபீடம் என்கிற யானையையே
அழித்த உன் பராக்கிரம, வீரச் செயலைக் கொண்டாடினார்கள்.

இவை எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த கம்ஸன்
மனத்துக்குள் மிகவும் பயந்து போனான்
உன்னையும் பலராமனையும் பயத்துடன் பார்த்தான்.
ஆனால், கூடியிருந்த ஜனங்கள் , உங்களை .ஆச்சர்யத்துடன் பார்த்துக்கொண்டே இருந்தார்கள்.
அவர்களுக்குள் பேசிக்கொண்டார்கள்.

இவர்தான் கிருஷ்ணன்;கோகுலத்திலிருந்து வந்திருக்கும் நந்தகோபரின் பிள்ளை.
இவர்தான், தேவகியின் பிள்ளையாகப் பிறந்து, கோகுலத்தில் கொண்டுபோய் விடப்பட்டு,
நந்தகோபர் வீட்டில் இதுவரை ரஹஸ்யமாக வளர்ந்து,
கம்ஸனால் இவரைக் கொல்வதற்கு என்றே அனுப்பப்பட்ட பூதனை,
திருணாவர்த்தன், நளகூபரன், கேசி தேனுகன், என்று பல அசுரர்களை மாய்த்தவர்.
காளியன் என்கிற கொடிய சர்ப்பம் இவரால் அடக்கப்பட்டது.
இந்திரனின் கோபத்தால் இடைவிடாது பெய்த மழையின் போது,
கோவர்த்தன கிரியைத் தூக்கிப் பிடித்து கோகுல வாசிகளைக் காத்தவர்.
முகத்தில் அந்த மந்தஹாசத்தைப் பாருங்கள்.
சொக்க வைக்கும் அழகைப் பாருங்கள் .
இவருடைய மூத்தவர் பலராமனைப் பாருங்கள்.
இவர் கமலலோசனன். ப்ரலம்பன், வத்சன்,பகன் என்கிற
பலம்வாய்ந்த அசுரர்களைக் கொன்றவர்.
கிருஷ்ணனையும் பலராமனையும் பார்க்கும் பாக்யம் பெற்றோம்.
இப்படி அடிக்கடி பேசி உங்களைப் பார்த்துப் பரவசம் அடைந்த ஜனங்கள் ,
திடீரென்று தூர்ய வாத்தியங்கள் முழங்குவதைக் கேட்டார்கள்.
நீங்கள் இருவரும் ரங்க மண்டபத்துக்குள் வந்ததும் , சாணூரன் என்கிற மல்லன்
சபையின் நடுவே உன்னைப் பார்த்துப் பேசினான்.
ஹே…வீர…நீங்கள் இருவரும் மிகுந்த வீரம் மிகுந்தவர்கள் என்று
ஜனங்களால் சொல்லப்படுகிறீர்கள்.
மல் யுத்தம் செய்வதில் வல்லவர்கள் என்று, கேள்விப்பட்டு
அரசர் உங்களை இங்கு அழைத்து இருக்கிறார்.
உங்கள் மல் யுத்தத்தைப் பார்க்க விரும்புகிறார்.
அரசனின் ஆசையை நிறைவேற்றுவது பிரஜைகளின் கடமை.
எங்களுடன் மல்யுத்தம் செய்யவேண்டும் என்றான்.
அதற்கு, நீ, ” நாங்கள் பாலர்கள், எங்களுக்குச் சரிசமமான வயது,
பலமுள்ள வீரர்களுடன் மல்யுத்தம் செய்கிறோம்
இப்படி இல்லாதவர்களுடன் செய்யும் யுத்தம் பாபத்தை ஏற்படுத்தும் ” என்றாய். .
அதற்கு , சாணூரன், ” நீங்கள் பாலர்கள் இல்லை; ஆயிரம் யானை பலம் கொண்ட
குவலையா பீடம் என்கிற யானையையே விளையாட்டாகக் கொன்று இருக்கிறீர்கள்;
நீங்கள் பலம் உள்ளவர்களுடந்தான் மல்யுத்தம் செய்யவேண்டும்;
ஆதலால், ஹே கிருஷ்ண…நீ என்னுடனும், பலராமன் முஷ்டிகனுடனும்
மல்யுத்தம் செய்யலாம் ” என்றான்.

43 வது அத்யாயம் நிறைவடைந்தது. ஸுப ம்.


krushna-pic-7

About the Author

Leave A Response