Dhasamaskantham–Adyayam–46 &47

Posted on Sep 16 2016 - 10:05am by srikainkaryasriadmin

–தசமஸ்கந்தம் அத்யாயம் 46
—————————— ———————–

உத்தவர் , ஸ்ரீ க்ருஷ்ணன் கட்டளைப்படி கோகுலம்செல்லல்
—————————— ——————

ஸ்ரீ சுகப்ரம்மம், தொடர்ந்து பரீக்ஷித் மகராஜனிடம் சொல்கிறார்

ஹே….ராஜன்….ப்ருஹஸ்பதியின் சிஷ்யரும், சிறந்த கீர்த்தி உள்ளவரும், ஸ்ரீ கிருஷ்ணனுக்கு ஆலோசனை சொல்பவருமான உத்தவர் அறிவாளிகளில் மிகச் சிறந்தவர். அவரை நீ ஏகாந்தமாக அழைத்து, அவர் கைகளைப் பிடித்துக் கொண்டு,
உத்தவ்ரே ….. நீர் இப்போது கோகுலம் செல்லவேண்டும். என் பிதா, என் மாதா இருவரிடமும், என்னைப் பிரிந்து தவிக்கும் கோபிகைகளிடமும், நான் சொல்லும் வார்த்தைளை சொல்வதற்காகச் செல்ல வேண்டும்.
என் மாதா பிதா இருவரும், என் சுகத்துக்காகவே வாழ்கிறார்கள்; தங்கள் சுகங்களைத் த்யாகம் செய்தவர்கள்; கோபிகைகள் , மனத்தளவில் என்னிடம் பூர்ண சரணாகதி செய்தவர்கள்; என்னையே பிரேமை மார்க்கத்தில் கதியாக அடைந்தவர்கள்; எனக்காக லோக தர்மங்களை விட்டவர்கள்;இந்த கோபஸ்த்ரீகள், என்னையே நினைத்துக் கொண்டு, கண்ணீர் பெருக, என் நினைவால் உயிர் தரித்து, என் வரவை அங்கு ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்; ஆதலால் உடனே கோகுலம் செல்லுங்கள் என்றார்
உடனே ,”அப்படியே ஆகட்டும் “என்று சொல்லி உத்தவர் ரதத்தில் ஏறி கோகுலத்துக்குப் புறப்பட்டார் . சாயந்திர வேளையில் கோகுலத்தை அடைந்தார். அப்போது, “”கோதூளிகா”” வேளையாக இருந்தது. மாடுகளின் இரைச்சல்; பசுக்கள் ,கன்றுகளைத் தேடி ஓடும் குளம்பு ஒலிகள்; சாயந்திர வேளையில் சில வீடுகளில் பால் கறக்கும் சப்தம்; அத்துடன் வேணுகான கீதங்கள் ; கோபிகா ஸ்திரீகள், தங்களை நன்கு அலங்கரித்துக்கொண்டு, உன்னுடைய புண்ய கீர்த்திகளைப் பாடிக் கொண்டிருந்தார்கள். கோபர்களும் நல்ல வஸ்த்ரங்களை உடுத்திக் கொண்டு இருந்தார்கள். விளக்குகள் ஏற்றப்பட்டு இருந்தன. தேவதா உபாசனம், பிராம்மணர்கள், பித்ருக்கள் உபாசனம் நடைபெற்றுக்கொண்டு இருந்தன. வண்டுகளின் ரீங்காரம், பக்ஷிகளின் சப்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. இப்படியான உசந்த வேளையில், உத்தவர் வந்ததைப் பார்த்து, நந்த்கோபரும் யசோதையும் வசுதேவரே வந்ததைப் போன்று சந்தோஷித்து, அவரை வரவேற்று, உபசரித்து, ஆகாரம் கொடுத்து, பிரயாணக் களைப்பைப் போக்கி, பரம சுகத்தை அளித்தார்கள். பிறகு, நந்தகோபர், உத்தவரின் கால்களைப் பிடித்து விட்டுக்கொண்டே ,

” மஹா பாக…..என்சகா ,வசுதேவர் சௌக்யமாக இருக்கிறாரா ? தேவகி சௌக்யமா ?சிறையில் இருந்து விடுபட்டு பந்துக்களுடன் கூடி சந்தோஷமாக இருக்கிறார்களா?
கம்ஸனும் அவனுடைய சஹோதரர்களும் கொல்லப்பட்டனர். அவர்கள் செய்த மஹா பாவங்களுக்கு இதுவே தண்டனை. எங்கள் குழந்தை ஸ்ரீ கிருஷ்ணன், எங்களையும், சகாக்களையும், இங்கு உள்ள பசுக்கள், பக்ஷிகள், பிருந்தாவனம், கோவர்த்தனகிரி, எல்லாவற்றையும் நினைக்கிறானா? அவனுடைய சுந்தரமான முகம், தீர்க்கமான மூக்கு, புன்னகை பூக்கும் பார்வை, எங்களை இன்னும் மயக்குகிறது. எங்களைப் பல ஆபத்துகளில் இருந்து காப்பாற்றினான். காட்டுத்தீ;பலமான காற்று; அஹோராத்ரி ஏழு நாட்கள் மேக வர்ஷம்; அசுரர்கள் பற்பல வேஷங்களுடன் வந்து கொல்லுவதற்கு முயற்சி ; இவை எல்லாவற்றிலிருந்தும் கிருஷ்ணன் எங்களைக் காப்பாற்றினான்;அவனது ஒவ்வொரு லீலையும், வீரச் செயலும், கடைக்கண் பார்வையும், கள்ளச் சிரிப்பும் இப்போதும் எங்கள் நினைவில் இருந்து எங்களை மெய்சிலிர்க்க வைக்கின்றன. எங்களையே மறந்துபோகிறோம் . என்னை விட யசோதைக்கு இவை இன்னும் அதிகம்; அவளை விட , கோபர்களுக்கும், அவர்களைவிட கோபிகைகளுக்கும் ,கிருஷ்ணனின் நினைவு மிக மிக அதிகம். எங்களுடைய பாக்யத்தால் அவனைப் புத்ரனாகப் பெற்றோம். அஹோ பாக்யம்……நந்தகோபர், தேவகி, கோகுலவாசிகள், முக்யமாக கோபிகைகள் மிகவும் பாக்யம் செய்தவர்கள். கிருஷ்ணனைப் பற்றி, கர்க்கர் முன்னமேயே எங்களிடம் சொல்லி இருக்கிறார். கம்ஸனைக் கொன்றும், சாணூர முஷ்டிகனைக் கொன்றும் , குவலயாபீடம் என்கிற யானையைக் கொன்றும், பெரிய தனுஸ்ஸை வளைத்து ஒடித்தும், துஷ்டர்களை ஒழித்தும்
மஹா பாவனமான செயல்களைச் செய்து இருக்கிறான். அவனை நாங்கள் என்றும் மனத்தில் நினைத்து இருக்கிறோம். ……..”

இவ்விதமாகப் புலம்பி, உன்னிடம் பறிகொடுத்த மனம் புத்தி உடையவர்களாய், கண்ணீர் விட்டு இருவரும் அழுதார்கள். யசோதாவும் இதைப்போலவே பேசி, ப்ரேம சமுத்ரத்தில் மூழ்கிப் போனாள் .

இந்த அத்யற்புத பிரேமையில் , உத்தவர் , அவரும் மூழ்கிப் போனார். பிறகு , சுதாரித்துக் கொண்டு பேசினார்.

ஹே…நந்தகோப….ஹே யசோதா …..நீங்கள் மிகவும் பாக்யசாலிகள்…..கிருஷ்ணனும் பலராமனும் புராண புருஷர்கள்; எவரிடம் ஜீவன்கள் தங்கள் ப்ராண வியோக காலத்திலே ஒரு க்ஷணம் தங்கி, அவரால் அணைக்கப்பட்டு, விசுத்தமான க்ஜானத்தால் அவரையே நினைத்து, வழிபட்டு, மனம் அடக்கப்பட்டு, அவரால் ,எல்லா கர்ம பந்தங்களும் அழிக்கப்பட்டு, அவருடைய திருவடிகளை அடைகிறார்களோ, அப்பேர்ப்பட்ட ஸ்ரீ நாராயணனாகிய ஸ்ரீ கிருஷ்ணன் உங்கள் புத்ரராக அவதரித்து இருக்கிறார். நீங்கள் மகாத்மாக்கள்;புண்யசாலிகள். கூடிய சீக்ரத்தில் அவர் உங்களைக் காண இங்கு வருவார். ,அதை என்னிடம் சொல்லி அனுப்பி இருக்கிறார். அவரை உங்கள் புத்ரன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்; ஆனால் அவர் பகவான்; எல்லாருக்கும் அவர் ஆத்மா; எது உங்களால் பார்க்கப் படுகிறதோ, எது கேட்கப்படுகிறதோ, எது முந்தி இருந்ததோ, எது பிற்பாடு உண்டாகிறதோ, எது சஞ்சரித்துக் கொண்டு இருக்கிறதோ, எது மஹத்தாக இருக்கிறதோ, எல்லாம் அந்த ஸ்ரீ கிருஷ்ணனின் ஸ்வரூபம் ஆகும். அவர் பரமாத்மா; அவரை விட்டு யாரும் வாழமுடியாது. அவரை நீங்கள் பரப் ப்ரமமமாக அறிய வேண்டும் ….. இப்படிப்பேசிக்கொண்டே இரவைக் கழித்தனர்.

மறுநாள் விடியல் வேளைக்கு முன்பே கோபிகைகள் எழுந்து விளக்கேற்றி, தேவதைகளைப் பூஜித்துத் தயிர் கடைந்தனர். தீபத்தைப் போலப் பிரகாசிக்கும் முகத்தை உடையவர்கள்; காது, கை, கால், இடுப்பு, புஜம், இவைகளில் ஆபரணங்களைப் பூட்டி அதி ஸுந்தர தேவதைகளாய், தயிர்ப் பானையின் முன்பு உட்கார்ந்து , காது குண்டலங்கள் அசைய, இடுப்பு அசைந்து ஆட, ஹாரங்கள் அங்குமிங்கும் போய்வர, ஸ்ரீ கிருஷ்ணனைப் பற்றிய அற்புதமான பாடல் களைப் பாடிக்கொண்டு, தயிர் கடையும் சப்தமும் , இவர்களுடைய பாட்டின் சப்தமும் ஒன்று சேர்ந்து நான்கு திக்குகளிலும் பரவ , இவற்றை அந்த விடியற்கால வேளையில் உத்தவர் கேட்டார்.

பொழுது நன்கு விடிந்து,சூர்யன் உதயமானான். அப்போது நந்தகோபன் வீட்டு வாசலில் அற்புதமான ரதம் ஒன்று நிற்கக் கண்ட கோபிகைகள், …..” இந்த ரதம் யாருடையது…..அக்ரூரர் வந்திருக்கிறாரோ….கம்ஸனின் வேலைக்காரன் யாராவது வந்து இருக்கிறார்களா ….இந்த அக்ரூரர் இன்னும் என்ன செய்யப்போகிறாரோ?….நம்முடைய ஆவிகளை, அந்தக் கம்ஸனின் உயிர் இழந்த தேகத்துக்கு, பிரேதபலி கொடுக்க இங்கு வந்திருக்கிறாரா …?… என்று பலவாறு பேசிக்கொண்டு இருக்கும்போது, காலைக்கடன்களை யமுனை நதியில் முடித்துவிட்டு ,உத்தவர் , வசுதேவர் வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார். உத்தவர் கோபிகைகளைப் பார்த்தார். அவர்களும் இவரைப் பார்த்தனர்.

46 வது அத்யாயம் நிறைவடைந்தது. ஸுபம்
.
தசமஸ்கந்தம் …. அத்யாயம் 47
—————————— ————

கோபிகைகள், உத்தவர் ஸம்வாதம்…….ப்ரமர கீதம்
—————————-
ஹே…கிருஷ்ணா ….உன் சரிதத்தைச் சொல்லச் சொல்ல அடியேன் கோகுலத்தில் இருப்பதாகவே நினைக்கிறேன்

ஸ்ரீ சுகர் , மேலும், பரீக்ஷித் ராஜனுக்குக் கூறுவதை இப்போது சொல்கிறேன்
கோபிகைகள், உத்தவரைப் பார்த்தார்கள்……பார்த்தவு டனே , இவர்உன்னுடைய வாத்சல்யத்தைப் பெற்றவர் என்று புரிந்துகொண்டார்கள். இவரைப் பார்த்துக் கொண்டே உன்னைத் (கிருஷ்ண) த்யானம் செய்தார்கள். பழைய சம்பவங்களும் , உன்னுடன் பேச்சுக்களும் நினைவில் அலை அலையாக அவர்கள் மனத்தில் எழுந்தன. அப்போதுதான் மலர்ந்ததைப் போன்ற முகவிலாசம்; பளபளப்பான கன்னங்கள்; காதுகளில் ஒளிவிடும் ஸ்வர்ண குண்டலங்கள் ; புன்னகை தவழும் அரவிந்த முகம்; இடையில் பட்டுப்பீதாம்பரம்;

“” இவர் யார் ? இவரைப் பார்த்தால், இவருடன் பேசவேண்டுமென்று தோன்றுகிறதே ! இதற்கு முன்பு இவரைப் பார்த்த்ததில்லையே யாருடைய குமாரர் இவர், எதற்காக இங்கு வந்திருக்கிறார் ? …….”” என்று மனத்தில் நினைத்துக் கொண்டே , அவரைச் சுற்றி நின்றுகொண்டனர். இவர் உனக்குப் பிரியமானவராக இருக்கக்கூடும்.
உன்னால் எங்களிடம் அனுப்பப்பட்டவராக இருக்கவேண்டும் என்று உத்சாகத்துடன் , வெட்கம் மரியாதை இரண்டும் கலந்து, புன்சிரிப்புடன்,ரஹஸ்யமாக உன்னுடைய வ்ருத்தாந்தங்களை அறிய விருப்பம் கொண்டவர்களாக, ” ரமாபதியிடமிருந்து என்ன செய்தி கொண்டு வந்திருக்கிறீர்கள்….” என்று கேட்டார்கள்.

கோபிகைகள் கூறுகிறார்கள்;–நீர், ஸ்ரீ கிருஷ்ணனுடைய பார்ஷதன் என்று நினைக்கிறோம்; அவர் இங்கு உம்மை அனுப்பி இருப்பதாக நினைக்கிறோம். மாதா பிதாக்களின் க்ஷேமத்தை அறிந்துகொள்ள அனுப்பி இருக்கிறாரா ?இந்த வ்ரஜ பூமியில் அவருக்கு ஆக வேண்டிய கார்யம் என்ன இருக்கிறது ?ஸ்நேஹம், பந்தம், பாசம், இவை
அபலைகளிடம் போலி அன்பு செலுத்தி, கார்யம் முடிந்ததும் நட்டாற்றில் விடுவார்களே இது எதைப்போல என்றால்——-தேனீக்கள் மலர்களைச் சுற்றி சுற்றி வந்து தேனைக் க்ரஹித்து விட்டு மலர்களைத் த்வம்சம் செய்வதைப்போல, கணிகா ( தாஸீ ) பணத்தைப் பிடுங்கி விட்டுக் கள்ள புருஷனை விடுவதைப் போல, படிக்கும் சிஷ்யர்கள், வித்யயைக் கற்ற பின்பு , ஆசார்யனைக் கைவிடுவதைப் போல, யாகம் முடிந்ததும், ருத் விக்குகளுக்கு தக்ஷிணை கொடுத்து அனுப்பிவிடுவதைப்போல,
நிறைய, பழங்கள் இவற்றை உண்டுவிட்டு, அவை இல்லாதபோது மரங்களைவிட்டு ஓடும் பக்ஷிகளைப் போல, வேற்று மனுஷன் தன் கார்யம் முடிந்ததும் க்ருஹத்தைக் காலி செய்யும்படி சொல்வதைப்போல, காட்டில் வசதியாக வசிக்கும் மிருகங்கள், காடு எரிந்து போனால், இனி இந்தக்காடு உதவாது என்று வேறு இடம் செல்வதைப்போல, கள்ள புருஷன் ஸ்திரீயிடம் சம்போகம் செய்துவிட்டு ஓடுகிறானே ,…இவற்றைப்போல எங்களிடம் ஸ்நேகமாக இருந்தவர்கள் போய்விட்டார்களா ?

இப்படியெல்லாம், கோபிகைகள் உன்னை மனத்தில் வைத்துக்கொண்டு, உத்தவரை, லஜ்ஜையை விட்டு, மனம்விட்டுக் கேட்டார்கள். இவர்கள் புண்யவதிகள்;
உன்னுடைய கிஷோர பால்ய அவஸ்தைகளில் நீ செய்த ஒவ்வொரு கார்யத்தையும், ஒவ்வொரு பேச்சையும், ,பிடித்த சம்பவங்களைச்சொல்லி மிக ஆனந்தத்தையும், பிடிக்காதவற்றைச் சொல்லி, மிகவும் அழுதும் உன்னுடைய ஒவ்வொரு செய்கையையும் அவேயடம் சொன்னார்கள்.

அந்த சமயத்தில், ஒரு தேன்வண்டு அவர்களிடையே பறந்து வந்தது. அந்த வண்டை, உன்னுடைய சங்கமமானதாக நினைத்து, அந்த வண்டுடன் பேசத் தொடங்கினார்கள்
( ஹே……கிருஷ்ணா…..கோபிகைகளி ன் ,அந்தப் பரிபூரண வேளையில் , அடியேன் அந்த வண்டாகவாவது இருந்திருக்கக் கூடாதா அது அசேதனம்தான் ; ஆனால், அந்த அசேதனம் அன்று செய்திருந்த பாக்யம், அடியேனுக்குக் கிடைக்க வில்லையே . உத்தவர் அளவுக்கு உயர முடியாதுதான் உன்னதமான வண்டாகவாவது இருந்திருக்கக்கூடாதா )-

கோபிகைகளின் ப்ரமர கீதம்
———————–

ஹே…தேன் வண்டே….உன் கார்யம் முடிந்துவிட்டதல்லவா….என்னி டம் வராதே…..என்னைத் தொடாதே….ஓடிப்போ….நீ ஸ்ரீ கிருஷ்ணனுக்கு மிக வேண்டியவன்…..எனக்குத் துரோகம் செய்பவன்… மீசை போன்ற உன் அவயவத்தாலே —-ஸ்ரீ கிருஷ்ண ஸ்நேஹம் என்கிறதேனைப் பருகி அதில் நனைந்து, சொட்டிக் கொண்டு இருக்கிற மீசை என்கிற அவயவம்—– எங்கள் பாதத்தையோ, குசகவசங்களையோ, அந்தரங்க அங்கங்களையோ தொடாதே…..ஓடிப்போ ….விரஹ தாபத்தால், கொதித்துப் போய், அதனாலுண்டான கண்ணீரே , எங்கள் ஸ்தனத்தின் மேலுள்ள குங்குமப் பூச்சுக்களை அழித்துள்ளது…..நீயும் சேர்ந்து அதனை மேலும் அழிக்காதே….இந்தப் பூச்சுக்கள் எதற்குத் தெரியுமா….ஸ்ரீ க்ருஷ்ணனுக்காகவே உள்ளவை…நாங்கள் மானஸ்தர்கள்….எங்களுக்கு அது ஸ்ரீ கிருஷ்ண பிரசாதம்….நீ, அவருடைய தூதனாக இருக்கலாம்….அதனால், அவரைப்போல, கார்யம் முடிகிறவரை அன்பு——-பிறகு உதாசீனம்—–என்று இருக்கக்கூடாது ……..எங்கள் காதுகளின் அருகில் பறந்து வந்து கிருஷ்ண கீதம் பாடுகிறாய்…..இதனால் என்ன நன்மை….நாங்கள் பேதைகள்…எங்களைவிட்டுப் போனவர், போனவர்தானே…. .ஸ்ரீ கிருஷ்ணன், எங்களை நன்கு அனுபவித்தார்;ஸுதா—-மதுர அதர பானம்—–எங்களிடமுள்ள அதி மோஹத்தால், அவருடைய அதர பானத்தை எங்களுக்கு அளித்தார்……நீ, எப்படி, புஷ்பங்களிளிருந்து தேனை உறிஞ்சி, நன்கு சாப்பிட்டு, பின்பு அவற்றை உதறித் தள்ளுவாயோ, —–அதைப்போல கிருஷ்ணன்—-எங்களை அனுபவித்து விட்டு , எங்களைத் திரஸ்கரித்து விட்டு, ஓடிவிட்டார்…..அப்படிப்பட்ட, பொய்யான புருஷனை —அவருடைய பாதபத்மங்களை—–பூஜை செய்கிறாளே –அவள் எந்தவிதமாக பூஜை செய்கிறாள் —சுஸ்ருக்ஷை செய்கிறாள்….நீயே சொல் ( இங்கு …இந்தச் சொல் ஸ்ரீ மஹாலக்ஷ்மி அல்லது ராதையைக் குறிக்கும் என்பர் வியாக்யானகர்த்தாக்கள் )
எதனால் அவரைவிட்டு, அரைக்ஷணமும் பிரியாமல், அவரைப்போல இல்லாமல், அவரையே எப்போதும் பஜித்துக்கொண்டு இருக்கிறாளே….என்ன காரணம்…..ஹே…வண்டே அந்த ஸ்திரீ ரத்னம் அவரால் மோஹிக்கப்பட்டு, அவருடைய தேன் பேச்சுக்களால் ஏமாந்துபோய், தன்னுடைய மனத்தை அவரிடம் சமர்ப்பித்து இருக்கிறாள்.
ஹே…வண்டே….. யதிக்களுக்கு அதிபதியாயும், புராண புருஷராகவும் உள்ள மகாப்ரபுவை, வனத்தில் வீடு இல்லாத இந்த அபலைகளிடம் என் புகழ்கிறாய்…..எங்களை விட்டு, எங்களைவிட சாமர்த்தியமுள்ள அதிர்ஷ்டமுள்ள, காமக்கலையில் தேர்ந்த , கிருஷ்ணனை விலைக்கு வாங்கி அடிமையைப் போல் வைத்து இருக்கிற பெண்களிடம் சென்று ,அவரைப் பற்றிய புகழைப் பாடு…..அதனால் அவர்கள் உனக்கு வெகுமதிகள் கொடுப்பார்கள்…….அவரை நேரில் அடைந்ததைப் போலச் சந்தோஷம் அடைவார்கள்……..

சரி…..இந்தப் பூமி இருக்கட்டும்……ரசதலாதி லோகங்கள் என்று சொல்லப்படுகிற , ஸ்வர்க்கம் பாதாளம் என்று லோகங்கள் சொல்லப்படுகிற இடங்களில் வசிக்கும் பெண்கள், திட சித்தமுள்ள பெண்கள், கபடதாரியான…..மதுரமாகப் பேசிப் புன்முறுவலுடன் ஏமாற்றுகிற அவரிடம் அடிமை ஆனார்கள்…..எங்களை, ஜடபொம்மைகளைப் போல் நினைத்து, அலக்ஷ்யம் செய்து எங்களிடம் வருவதில்லை……ஆனாலும், நாங்கள் உன் மூலமாகத் தூது அனுப்பியதாகச் சொல்வாய்…..உனது பாததூளிகளை எந்த ஸ்ரீ மஹாலக்ஷ்மி சதா வகிக்கிறாளோ, அந்த ரஜஸ் சை எங்கள் தலைமேல் வைத்து, அவரையே எப்போதும் நினைத்து இருக்கிறோம் என்று சொல்வாய்…..

ஹே….வண்டே…. எங்கள் பாதங்களை விட்டு அப்பால் செல்…..எங்கள் தலைமீது உட்காருகிறாயே….. அகன்று செல்…..இனிய மொழிகளாலும், அதற்கு ஏற்ற ஜாடைகளாலும் ஸ்திரீகளை வசீகரிப்பதில் வல்லவரான அவரிடமிருந்து, இவற்றைக் கற்றுக் கொண்டாயா…. அந்தப் பிரபு எங்களை இந்த இடத்தில் நட்டாற்றில் விட்டுவிட்டார்……அவருக்காக, எங்கள் குழந்தைகள், பதி, சுகம், நல்ல வாழ்க்கை, பரலோகம் எல்லாவற்றையும் தாகம் செய்தோம்……அவர், சபல சித்தம் உள்ளவர்……எங்களைச் சிறிதும் நினைப்பதில்லை…..இப்படி எங்களை மாத்திரம் ஏமாற்றினாரா…..இல்லை…. முந்தின அவதாரத்தில், மறைந்து நின்று, யுத்த தர்மங்களை மீறி பாணத்தால் வாலியை அடித்துக் கொன்றார்…..அவர் வறண்டு போன நெஞ்சம் உள்ளவர்……..இன்னும் சொல்கிறோம், கேள், ஒரு ஸ்திரீ அவரை விரும்பி அவரிடம் வந்தபோது , மூக்கு அறுபட்டுப் போனாள்….. இன்னும் கேள்….இன்னொரு அவதாரத்தில், குள்ளனாக வந்து, என் கால் அடியால் மூன்று அடி மண் தா என்று மகாபலிச் சக்ரவர்த்தியைக் கேட்டு, வரம் பெற்றுக் கொண்டதும், பெரிதாக வளர்ந்து, இரண்டு அடிகளால் மூன்று உலகங்களையும் அளந்து, மூன்றாவது அடிக்குப் பதிலாக,
ஒரு காக்கை, தனக்கு உதவிய பக்ஷியைக் கட்டி இழுப்பதைப் போல, ( இது ஒரு கதை——-ஒரு காக்கை, ஆந்தைகளைக் கொல்வதற்காக, அடிபட்டதுபோலக் கபடமாக நடித்து, ஆந்தைகளிடம் நம்பிக்கையை ஏற்படுத்தி, பகல் நேரத்தில் கண்தெரியாத ஆந்தைகளை, மற்ற காகங்களுடன் ஏமாற்றிக் கொன்றது ——அதைப் போல இல்லாவிடில் இன்னொரு கதை— கூட்டில் உள்ள ,தன் குஞ்சுகளைக் காப்பாற்ற, தனக்கு ஆகாரம் கொடுத்த மனுஷ்யனையே தன் இனத்தோடு சேர்ந்து தாக்கியது—-)
மகாபலிச் சக்ரவர்த்தியையே கட்டி இழுத்தார்

மனஸ் சிலும் வெளியேயும் கருப்பாக உள்ள மனிதர்களுடன் ஸ்நேஹம் வைத்துக் கொள்வது ஆபத்து…… இருந்தாலும், அவரையே நினைத்து, அவருடைய லீலைகளைக் கேட்டு, அம்ருதம் என்று அதைப் பருகினோம்…..அதனால் என்ன பலன்…..அவருக்கு ஒரு தர்மம், எங்களுக்கு ஒரு தர்மம்…..இதனால் நாங்கள் கெட்டோம்……அவருடைய கதைகளை எங்களிடம் சொல்லாதே….வண்டே …போய்விடு……

அப்படி என்ன த்யாகம் செய்துவிட்டோம் அவருக்காக என்கிறாயா…..அவரையே நம்பி, சஹ பரிவாரம், குடும்பம் குழந்தை வீடு எல்லாவற்றையும் விட்டோம்…..
சுகத்தை இழந்தோம்…..தீனர்கள் ஆகிவிட்டோம்….பிக்ஷுக்களைப் போலத் திரிகிறோம்…..அவருடைய கதாம்ருதத்தைக்கேட்டு, அவரிடம் பரம விசுவாசம் வைத்து,
ஏமாந்து போகிறோம்…..ஒரு பெண்மான், கருமை நிறமான தன் பதி ஆண் மானிடம் சேர விரும்பி ஓடிவரும்போது, ஒரு வேடன் சங்கீதத்தை இசைக்கிறான்; பெண்மான் அந்த கீதத்தைக் கேட்டு நிற்கிறது; ஆண்மானும் நிற்கிறது; அந்தச் சமயத்தில் அந்த வேடன், எப்படி மான்களைச் சிறைப்படுத்திவிடுவானோ —-அதைப் போல , அபலைகளான நாங்கள், அவருடைய ஸ்பர்ச சுகத்தால், கண்ஜாடைகள் மயக்குப் பேச்சுக்களால், அவை உண்மை—சாஸ்வதம் என்று நம்பி ஏமாந்து விட்டோம்…..
ஆகவே….ஹே….வண்டே….ஸ்ரீ கிருஷ்ண கதாம்ருதங்களைத் தவிர வேறு விஷயங்களைச் சொல்……
ஹே…. சஹா….. எங்கள் பிரியா சஹாவாகிய கிருஷ்ணன் , குருகுல வாஸம் முடிந்து வீட்டுக்கு வந்து விட்டாரா…..அவர், உன்னை, எங்களிடம் தூது செல்லும்படி
அனுப்பினாரா ……அப்படியானால், எங்களிடமிருந்து எந்த வரம் வேண்டினாலும் தருகிறோம் …பெற்றுக் கொள்…அவருடைய தூதுவராக வந்த படியால், உனக்கு மரியாதை செலுத்தப்பட வேண்டும்…..ஸ்ரீ மகாலக்ஷ்மியின் பதியான அவரிடம், அவளைப்போல ஆசை உள்ள எங்களை, அவரிடம் அழைத்துச் செல்வாயா…..

இப்போது , நீ, சொல்வாய்…..நாங்கள் அவருடைய அந்தரங்கப் பிரியர்கள்…..உண்மையைச் சொல்வாயாக…..அவர் மதுராபுரியில் தான் இருக்கிறாரா….வெளி ஊருக்குச் சென்று இருக்கிறாரா…சொந்தத் தாயார், தகப்பனார், மற்றும் கோபாலகர்களைப் பார்க்க இங்கு வருவாரா….. எப்போதாவது , வேலைக்காரர்களிடமாவது , எங்களைப் பற்றிப் பேசி இருக்கிறாரா….என்றைக்காவது இங்கே வந்து, அதி சுகந்தமான கரங்களை, எங்கள் தலை மீது வைத்து, ஆசீர்வதிப்பாரா….
என்றெல்லாம், பித்துப் பிடித்தவர்களைப் போலப் பிதற்றினார்கள்.
ஹே…..கிருஷ்ணா…..கோபிகைகள் எவ்வளவு சாமர்த்தியமாக உன்னிடம் உள்ள சர்வ பரித்யாகத்தை மறைத்துப் பேசினாலும், உன்னை வைவதைப்போலப் புகழ்ந்தார்கள். உன் பிரபாவங்களை நாவாரச் சொல்லி, பூரணப் பிர யோஜனத்தை அடைந்தார்கள். உன்னுடைய அந்தரங்கர்கள்—நாரதர், விதுரர் உத்தவர் —-மூவருமே மிகவும் ஆச்சர்யப் படும்படி உன்னிடமுள்ள, தங்கள்காதலை , லஜ்ஜையை விட்டு வெளிப்படுத்தினார்கள். அவர்களை எல்லாம் அடியேனுக்கும் அப்படிப்பட்ட அனுபவத்தை அளிக்கும்படிவேண்டி ஆயிரமாயிரம் அவர்களை நமஸ்கரிக்கிறேன் )

உத்தவர் , கோபிகைகளின் இடையறாத பக்தியை, ஆழமான காதலைப் பார்த்து , ஆச்சர்யத்தில் மெய்மறந்து போனார். அவர்களிடம், தான் எதற்காக உன்னால் இங்கு அனுப்பப்பட்டாரோ அந்த சங்கேத வார்த்தைகளைச் சொல்ல ஆரம்பித்தார்.

அஹோ ஆச்சர்யம்….அன்பு, பக்தி என்பதற்குப் பூர்ண அர்த்தம் உங்களிடமிருந்து இன்று தெரிந்து கொண்டேன்….பகவான் கிருஷ்ணனிடத்தில், இத்தனை ஆழமானதும், இடைவெளி இல்லாததுமான அன்பை —-அவரைவிட்டுப் பிரிந்து இருக்கும்போதும், அவரையே சதா நினைத்து, நினைத்து பக்தி செலுத்துகிறீர்களே, அவரிடம் அவ்வளவு விரைவாகப் பக்தி செலுத்த முடியாது…..அதற்காகத் தானம், வ்ரதம், தபஸ், ஹோமம், ஜபம் ,ஸ்வாத்யாயம் இன்னும் பலவற்றைச் செய்ய வேண்டும்.

( இச்சமயத்தில் ஸ்ரீ சுகப்ரம்மம் , மனத்தை அடக்கி, உன்னையே நினைத்து, நினைத்து, புளகாங்கிதம் அடைந்ததாக , உத்தவர் சொல்கிறார் )

நந்தன் யசோதை போன்றவர்கள், தங்களையே த்யாகம் செய்து , கிருஷ்ணனின் பரம சுகத்துக்காகவே பாடுபட்டிருக்கிறார்கள். எந்த பக்தியைப் போதிக்கிறார்களோ, அனுஷ்டிக்கிறார்களோ, அந்த முநிஸ்ரேஷ்டர்களுக்கும் கிருஷ்ண தர்சனம் துர்லபமாக ஆகி விடுகிறது. அவர்களாலும் சாதிக்க முடிகிறதில்லை. ஆனால், இந்த கிருஷ்ண பக்தியை அடைய….கிருஷ்ண தர்சனம் செய்ய, உங்களுடைய அசாதாரண லௌகிக புத்தியால், புத்ரர், பதி, ஸ்வஜனங்கள், பந்து மித்ரர்கள், வீடுகள் எல்லாவற்றையும் விட்டு, எல்லாவற்றையும் த்ருணமாக ஒதுக்கி, காட்டிலும், மலை அடிவாரத்திலும் , மகத்தான தாகத்தால் அடையப் பெற்றது ஆச்சர்யம்—-மஹா ஆச்சர்யம். சர்வாத்ம பாவத்தினால், உங்களால் கிருஷ்ண பக்தி அப்யசிக்கப்பட்டு, நாமம். ஸ்தோத்ரம், பிரிவால் அழுகை, சேர்ந்து இருக்கும் காலத்தில், பிரியப் போகிறாரே என்கிற பயம், நாம் கர்வம் கொண்டோம், அதனால் பிரிந்து விடுவாரோ என்கிற ஐயம் , முழ அளவில் மஹா அந்தரங்கப் ப்ரியம், பிரியும்போது விரஹ தாபம், அஹா….அஹா… கிருஷ்ண சம்பத் உள்ளவர்கள் நீங்களே……மகான்களின் கிருபையாலே கிருஷ்ண அனுக்ரஹத்தாலே , இந்த சந்திப்பு அடியேனுக்குக் கிடைத்து இருக்கிறது. உங்களுக்குக் கொடி நமஸ்காரங்கள். உங்களுக்காகத்தான் பகவானால் அனுப்பப்பட்டுள்ளேன். உங்களுக்கு என்று ,அவர்,என் மூலமாக அனுப்பி உள்ள, சங்கேதமான—ப்ரியமான வசனங்களை , இப்போது உங்களுக்குச் சொல்கிறேன் சர்வ மங்களங்களும், . அனைத்துக் கல்யாண குணங்களும் உள்ளவர்களே…..நான் ரஹஸ்யமாக , இதற்காகவே கிருஷ்ணனால் உங்களிடம் அனுப்பப்பட்டேன். அவரால் சொல்லப்பட்டு எதனைச் சுமந்து கொண்டு இங்கு உங்களைச் சந்திக்க வந்தேனோ, அந்த ஸ்ரீ கிருஷ்ண வசனங்களைக் கேளுங்கள்……கிருஷ்ண பக்தனை சமாதானம் செய்வது, கிருஷ்ணனின் வசனங்களே……மனித யத்னத்தால் முடியாத செயல். அந்த ஸ்ரீ க்ருஷ்ண வசனங்களைக் கேளுங்கள்.

உங்களுக்கும் எனக்கும் ஏற்ப்பட்டு இருக்கிற பந்தம்—-ச்நேஹம்—–எப்போது ம் அறுக்கவோ அழிக்கவோ இயலாதது—–அப்ராக்ருத மானது—-எப்படி ஐந்து பூதங்களும், எல்லாப் பிராணிகளிடமும் எப்போதும் இருக்கின்றனவோ, அப்படி , நானே எல்லாருடைய மனத்திலும், பிராணனிலும் ஊடுருவி இருக்கிறேன். உள் இருந்து நியமிக்கிறேன் என்னைவிட்டு, ச்வதந்த்ரமாக, எக்காலத்திலும், எந்த அவஸ்தையிலும், ஒரு வஸ்துவும் இருக்க முடியாது. அதனால், நீங்கள் எப்போதும் என்னைத் த்யானம் செய்யுங்கள்—-எல்லா சாஸ்திரங்களும், வேதங்களும், கடைசியாக என்னை அடைவதற்கே உபதேசிக்கின்றன….. உங்கள் மனத்தை அடக்கி, மனஸ், புத்தி இரண்டையும் என்னிடம் சமர்ப்பியுங்கள்..நாம் சதா சர்வகாலமும் உங்களையே நினைத்துக் கொண்டு இருக்கிறேன். ( நீ, அர்ஜுனனுக்கு, ரதம் ஓட்டும்போதும் கோபிகைகள் நினைவாகவே இருந்தாயாமே….என்ன ஆச்சர்யம்…..)உங்கள் மனமும் என் மனமும் சேர்ந்து இருப்பதால், ..உங்களை விட்டுப் பிரிந்து இருத்தல்…எங்கோ பிரிதல் என்கிற வ்ய்வச்தையோ, தூரமோ இல்லை….உங்கள் மனதை என்னிடம் அர்ப்பணியுங்கள்….இப்படி, என்னையே எப்போதும் ச்மரிப்பதால், முடிவில் என்னையே வந்து அடைவீர்கள்….ராசக் க்ரீடையில், வனத்துக்கு வரமுடியாமல் தங்கிவிட்ட கோபிகைகளும் என் நினைவாகவே இருந்ததால், என்னையே மானசீகமாக அடைந்தார்கள்….

ஹே…கிருஷ்ணா….இவ்வார்த்தை களைக் கேட்ட கோபிகைகள், மஹா திருப்தியையும் சந்தோஷத்தையும் அடைந்தார்கலாமே….ஸ்ரீ சுகர் பரீக்ஷித் ராஜனுக்கு இதைச் சொன்னார். கோபிகைகள் , சந்தோஷ மனத்துடன் , உத்தவரைப் பார்த்து , உன்னிடம் தெரிவிப்பதற்காக சில சங்கேத வார்த்தைகளைச் சொன்னார்கள்…அவற்றை இப்போது உனக்கு நினைவு படுத்துகிறேன்.

யதுவம்ச விரோதியான கம்சன் அழிந்ததும், யது வம்சம் சௌக்கியம் அடைந்ததும், உம்முடைய தாயாரும் தந்தையும் மீண்டும் ஐஸ்வர்யங்களைப்பெற்று சந்தோஷமாக இருப்பதையும் கேள்வியுற்று, நாங்கள் மகிழ்கிறோம். என்று சில கோபஸ்த்ரீகள் சொன்னார்கள்; சிலர், நாங்கள் பிரபுவிடம் ப்ரீதியும் பக்தியும் கொண்டு இருப்பதைப்போல, மதுராபுரி ஸ்திரீகளும் இருக்கிறார்களா என்று உத்தவரைக்கேட்டார்கள். சிலர், ஹே….உத்தவரே….எங்கள் பிரபு ,ஸ்திரீகள் மத்தியில் இருக்கும்போது எங்கள் நினைவு வந்து எங்களைப் பற்றி ப்ரஸ்தாவம் செய்கிறாரா என்று கேட்டார்கள். சிலர், உத்தவரைப் பார்த்து, எங்கள் பிரபு, ராசலீலையில் ,இரவு நேரத்தில், பிருந்தாவனத்திலே கொலாக்கலாமாகச் செய்த லீலைகளை நினைக்கிறாரா என்று கேட்டார்கள். இன்னும் சிலர், அவர் எங்களுக்கு மறுபடியும் உயிர் ஊட்ட இங்கு வருவாரா என்று கேட்டார்கள். இன்னும் சிலர், அவர் இங்கு எதற்காக வரவேண்டும்……அவருக்கு ராஜ்ஜியம் கிடைத்துவிட்டது; பல ராஜ கன்னிகைகள் அவருக்கு மாலையிடக் காத்து இருக்கிறார்கள்; நாங்கள் வனத்தில் வசிக்கும், அநாகரீகமுள்ளவர்கள்; ஆனால் ஒன்று….எங்களால் அவரை ஒருக்காலும் மறக்க முடியவில்லை;
அந்தக் கிருஷ்ண ஆசை எங்களை வாட்டுகிறது; அவர் ஆசை தேவை இல்லை என்று சொல்லா யாருக்குத்தான் மனம் வரும்…..அதனால்தான், ஸ்ரீ தேவி அவரைவிட்டுப் பிரியமாட்டேன் என்கிறாள்; என்று சொன்னார்கள். இன்னும் சிலர், அவருடைய பேச்சுக்கள், புன்சிரிப்பு வதனம், புல்லாங்குழல் நாதம், எங்களைப் படாதபாடு படுத்துகின்றன…..அவரை எங்களால் மறக்க இயலாது…..ஹே நாத …..ஹே…ரமாநாத……ஹே…வ் ரஜ நாத…..ஹே…ஆர்த்தி நாசன……உம்மைவிட்டுப் பிரிந்த துக்க சாகரத்தில் மூழ்கிப் போன இந்த கோகுலவாசிகளை , எப்படி கோவர்த்தன கிரியைத் தூக்கி பசுக்களையும் எங்களையும் காப்பாற்றினீ ரோ, அதுபோல,இப்போதும் காப்பற்ற வேண்டும் என்று சொன்னார்கள்.
( ஹே….கிருஷ்ணா… உன்னிடம் பிரேமையுடன் இருப்பது எப்படி என்பதை அடியேனுக்கு உணர்த்திய , உனக்கு எப்போதும் ப்ரியமான ,அந்த கோபிகைகளை ஆயிரம் தடவை நமஸ்கரிக்கிறேன் )
கோபிகைகளுக்கு, விரஹ தாபம் அடங்கி, அவர்கள் உத்தவரைக் கொண்டாடி, அவரைப் பூஜித்து, அவரையே ,நீ— என்று பாவித்து, அவரை கோகுலத்திலேயே, இருக்கும்படி வேண்டினார்கள். அவரும், அவர்கள் விருப்பப்படி, உன்னுடைய கதாம்ருதத்தைப் பாடிக்கொண்டு, அங்குள்ள ஓடைகள், வனப் பிரதேசங்கள், மரங்கள் அவற்றில் பூத்துக் குலுங்கும் மலர்கள், அவை ஒவ்வொன்றும் உன்னுடைய சம்பந்தம் உண்டு என்பதை அறிந்து, அவைகளைப் பார்த்துப் பார்த்து கோபிகைகளுடன் பல மாதங்கள் கோகுலத்தில் கழித்தார்.
இப்படி உன்மத்த நிலைக்கு வந்த உத்தவர், கோபிகைகளின் பக்தியைப் புகழ்ந்து பாடினார்.

கோபிகைகளே….நீங்கள் தன்யர்கள்…..ஜன்மம் எடுத்த பலனைப் பூரணமாக அடைந்தீர்கள்….நீங்கள் , கோவிந்தனின் ப்ரிய பந்துக்கள்; ஆத்மா ஸ்ரீ கிருஷ்ணன் என்று இருக்கிறீர்கள்; இந்த அனுபவம், முனி ஸ்ரேஷ்டர்களுக்கு கிடைக்கவில்லை; நாங்களும் அதையே அடைய விரும்புகிறோம்; ப்ராம்மணனாகப் பிறந்து, காயத்ரீ
உபாஸநம் செய்து, தீக்ஷதர் போன்ற யோக்யதையை ஸம்ஸ்காரங்களால பெற்று, எந்தப் பலனும் இல்லை; கிருஷ்ண பக்தியே சிறந்த புருஷார்த்தம்; கோபிகைகள் ஜாதியில் ஸ்திரீகள்; சபல சித்தம் உள்ளவர்கள்; வனத்தில் சாப்பாட்டுக்காகத் திரிபவர்கள்; உங்களுக்கு கிருஷ்ண பக்தி ஏற்பட்டு இருக்கிறது; இது மிக ஆச்சர்யம்……பரமாத்வே மோக்ஷம் தருகிறான் என்று அறியாதவர்கள்; ஆனால், இந்த பகவத் பிரசாதம் இவர்களுக்குக் கிடைத்து இருக்கிறது; ராசோத்சவத்திலே, பகவானுடைய திருக்கரங்கள், இந்த கோபிகைகளின் தோள்களில் ,கட்டி அணைப்பது போல் இருந்தன; இந்த சுகத்தை கோபிகைகள்தான் அடைந்தார்கள்; நான், சதா, பகவானுடன் பழகுகிறேன், எனக்கு அந்த பாக்யம் கிட்டவில்லை; எனக்கு ஒரே ஒரு ஆசைதான்; இந்த பிருந்தாவனத்தில் , ஒரு புல்லாகவோ, செடியாகவோ, ஜன்மம் எடுத்து, எந்த முகுந்தனுடைய திருவடிகளை வணங்கிய கோபிகைகள், கிருஷ்ண பக்தி கொண்டவர்களாக இந்தக் காடுகளில் நடமாடினார்களோ ,அந்த– அவர்களுடைய, பாத தூளிகளை புல்லாகவும் செடியாகவும் கொடியாகவும் நான் ஸ்வீகரிக்க வேண்டும். பரிபூர்ண கிருஷ்ண பக்தியை ,கோபிகைகளின் பாத தூளியால் அடைய வேண்டும்.
உபநிஷத்துக்கள் சொல்லும் அந்த பரிபூர்ண ஆனந்தம், அன்று நடந்த ராசக் க்ரீடையிலே, கோபிகைகளுக்குக் கிடைத்தது; ஸ்ரீ மஹாலக்ஷ்மி பூஜிக்கும் பகவானின் பாதார விந்தங்கள், கோபிகைகளின் ஹ்ருதயத்தில் வைக்கப்பட்டு இருந்தது; இந்தப் பேரின்பம், ஸ்ரீ தேவிக்கு இல்லை; ப்ருஹ்மாவுக்கு இல்லை; மஹா யோஹீச்வரர்களான
சனகாதிகளுக்கும் கிட்டவில்லை; பரமசிவனுக்கும் கிட்டவில்லை; நாரதருக்கும் கிட்டவில்லை; அப்பேற்பட்ட, உத்தம நந்த வ்ரஜகோபஸ்த்ரீகளை அடிக்கடி நமஸ்கரித்து, அவர்கள் பாத தூளி என் தலையில் விழ்வேண்டுமெனப் பிரார்த்திக்கிறேன்.
(ஹே…. கிருஷ்ணா…உத்தவர் செய்த பாக்யம் , பெரிது, பெரிது . அந்த உத்தமரை அடிக்கடி நமஸ்கரிக்கிறேன் )
ஸ்ரீ சுகர் மேலும் சொல்கிறார்

பிறகு, ஒருநாள், உத்தவர், நந்தகோபன் யசோதை, கோபிகைகள் முதலானவர்களிடம் உத்தரவு பெற்றுக்கொண்டு, மதுராபுரிக்கு, ஸ்ரீ கிருஷ்ணனாகிய உன்னிடம் வரத் தயாரானார். அப்போது நந்தகோப தம்பதியர் வெகுமதிகளை உன்னிடமும் பலராமனிடமும் கொடுக்கச் சொல்லி, உத்தவரிடம் கொடுத்து மிகவும் கலங்கின மனத்துடன், கண்களில் நீர் வழிய , சில வார்த்தைகள் சொன்னார்கள்
நாங்கள் ஸ்திர புத்தி இல்லாதவர்கள்; ஜீவ யாத்ரைக்காக பல கர்மாக்களைச் செய்துகொண்டு இருப்பவர்கள்; இப்போது எங்களுக்குப் பற்றுக்கோடு ஸ்ரீ கிருஷ்ணனே; எல்லாம் அவனுடைய ப்ரீதிக்காகவே செய்கிறோம்; மனம் வாக்கு, காயம் இந்த மூன்றாலும் ஸ்ரீ கிருஷ்ணனை ஆச்ரயித்து இருக்கிறோம்;
இப்படியெல்லாம் சொல்லி , உத்தவரை வழி அனுப்பி வைத்தார்கள்.
உத்தவர் , ரதத்தில் ஏறி, மதுராபுரி வந்து சேர்ந்தார். மகாத்மாவான உன்னையும், பலராமனையும் அடிக்கடி நமஸ்கரித்து, பக்தி முழுதும் நிறைந்த வ்ரஜவாசிகளின் கிருஷ்ண பக்தியைக் கூறி, அவர்களால் கொடுக்கப்பட்ட வெகுமதிகளை சமர்ப்பித்தார்

47 வது அத்யாயம் நிறைவடைந்தது. ஸுபம்


Sarvam Sree Hayagreeva preeyathaamkrushna-pic-1

About the Author

Leave A Response