பத்து அவதாரப் பற்று–
————————————-
1. மீனாய்ப் பிறப்பெடுத்தான்
தானாய்க் கடல் அளந்தான்
சிக்கெனப் பிடிக்கவில்லை –கிளியே
சீரழிந்து போய்விட்டேன்
2. கூர்மம் இவன்தானென்று
கூர்மதியர் சொன்னபோதும்
துர்மதி கொண்டுவிட்டேன் –கிளியே
துணை எனக் கதறவில்லை
3.வராகன் –வாராது வந்தான்
பூவராகன் ஆகி நின்றான்
தேவனை அறியவில்லை –கிளியே
சேவகம் செய்யவில்லை
4.நரனும்– சிம்மனும் வந்தான்
நான் தருவேன் வரம் என்றான்
உண்மையை உணரவில்லை–கிளியே
உலுத்தனாய் ஆகிவிட்டேன்
5. வாமனன் —உலகளந்தான்
தாமாய் வந்து பாரென்றான்
இது யாரோ என ஒதுக்கிக் —கிளியே
சிதைத்திருந்தேன் சிந்தையினை
6. பரசும் ஏந்திய ராமனானான்
முரசு கொட்டி அறிவித்தான்
பார்ப்பதற்கே அஞ்சிவிட்டேன் –கிளியே
பாதகமும் செய்து விட்டேன்
7. சிந்தைக்கினியான் ராமன்
சீதையுடன் வந்திருந்தான்
எந்தை தந்தை யாரென்று –கிளியே
இறுமாப்பு எய்தி விட்டேன்
8. பலராமன் உருப்பெற்றான்
பலவகையில் காட்சி செய்தும்
பாவியேன் உணரவில்லை –கிளியே
பரிதவித்து விட்டு விட்டேன்
9. கண்ணன் அவன், என் உள்ளம்
கவர்ந்தவன் வந்துவிட்டான்
கள்வனவன் கால் பிடித்தேன்–கிளியே
கவலை இனி எனக்கெதற்கு
10. கல்கி அவதாரம் கலியுகமும்
பல்கிப் பரந்து விரிந்தாலும்
மாதவனின் தாளிருக்கக் –கிளியே
மற்றவையும் எனக்கெதற்கு !
11. பத்து அவதாரம் கேட்டுனக்குப்
பற்றும் அறுக்க வில்லையெனில்
எத்தைத் தின்று நீயும்–கிளியே
எங்கே கிடந்திருப்பாய் !