Poems—-kilikkanni—

Posted on Oct 1 2016 - 5:10am by srikainkaryasriadmin

கிளிக்கண்ணி —2

அரங்கன் அடி பணிந்து
தரணியில் வாழ்கின்ற
ஆத்திகர் அடி பணிவோம் —-கிளியே
நாத்திகம் தவிர்ப்போமடி

பணம் உள்ளவன்
பண்பாட்டை இழக்கின்றான்
பண்பாடு போனால்—கிளியே
பாழடைந்த வீடாவான்

தனம் உள்ளவன்
திமிரோடு இருக்கின்றான்
திமிரோடு இருந்தால்—கிளியே
தெருவுக்குத் தூசாவான்

குணம் இல்லாதவன்
குற்றத்தின் சிகரமாவான்
குற்றம் தொடர்ந்தால் —கிளியே
கொலையுண்டு பாழாவான்

வனப்பு உள்ளதென்று
வளைக்கும் ஆணவம்
வளைந்த பருவத்தில் –கிளியே
உடைந்து போகுமடி

படித்தவன் நான் என்று
பகரும் அகங்காரம்
பேய் பிடித்தலாகும் –கிளியே
பேதைமை வேண்டாமடி

உற்றாரை இகழ்ந்து
உதறும் குணத்தானை
உலகம் உதறிவிடும் —கிளியே
உன்மத்தனாக்கி விடும்

பகைமை கொள்வார்கள்
பாதகச் செயல்களால்
பாதகமே அடைவார்கள்—கிளியே
பாழாகி விடுவார்கள்

தொடரும்
கிளிக்கண்ணிகள்–3
———————–

1..பூ அடிகள் காட்டிப்
பத்மநாபன் இருக்க
போகாமல் இருக்கலாமா —கிளியே
போற்றாமல் இருக்கலாமா

2.பொய்கள் பலபேசிப்
புலம்பித் திரிபவர்க்கு
பட்டங்கள் ஏதுக்கடி—கிளியே
பதக்கமும் ஏதுக்கடி

3.விதி என்று சொல்வார்
பொது என்று சொல்வார்
சதியே செய்வார்—கிளியே
சாதித்துக் காட்டிடுவார்

4.இவருக்கு ஒரு விதி
அவருக்கு ஒரு விதி
எவருக்கு எந்த விதி—கிளியே
யாருக்குத்தான் தெரியும் ?

5.பதி என்று சொல்வார்
சதி என்று சொல்வார்
சதிபதிகள் என்றிருப்பார்—கிளியே
சதி செய்து விடுவாரடி

6.கதியே என்றிருப்பார்
காணாமல் துடிதுடிப்பார்
பார்த்துவிட்டால்—கிளியே
பித்துப் பிடித்துவிடும்

7.பித்துப் பிடித்தவர்கள்
எத்தைத் தின்றால் என்ன
செத்துப் பிழைப்பவர்கள்—கிளியே
சோகக்கிளிகளடி

8.சோகத்தை தின்று
மோகத்தை நீக்கி
தாகம் கொள்வாரடி —கிளியே
தன்னிலை மறப்பாரடி

9.மறப்பது யார் குற்றம்
மறுப்பது யார் குற்றம்
துறப்பது உலகாசை —கிளியே
தொடர்வது வைகுந்தம்

10.இடர் வருவது இயற்கை
சுடர் விடுவது தீபம்
இடறி விழுவது உண்டோ —கிளியே
இதுவே இறுமாப்பு

தொடரும்
கிளிக்கண்ணி —4
————————
1.நேற்றந்தி நேரத்திலே
ஆற்றாது ஆட்செய்தேன்
ஆட்செய்த அடியேனை–கிளியே
ஆனந்த முறச் செய்தான்

2.இல்லை என்பார்க்கு
இல்லையெனச் சொல்லாதே
இருப்பார் என்றால் —கிளியே
இதயத்தில் இருப்பானடி

3.கள்ள உள்ளத்தினர்
புல்லர் பதர்கள் என
ஒதுக்கி விடுவாய் –கிளியே
ஓரம் தள்ளிடுவாய்

4.பாரம் , பசப்பிடுவோர்
தூரம் விலகி விடு
போதும் அவர் நட்பு –கிளியே
புறத்தில் ஒதுக்கி விடு

5.இச்சகம் பேசிடுவோர்
யாராக இருந்தாலும்
தூர ஒதுங்கி விடு —கிளியே
தொல்லையே அவர்கள்தான்

6.வம்பில் வளைத்திடுவார்
வாயார வைதிடுவார்
தூய மனமில்லை–கிளியே
துன்பமே தந்திடுவார்

7.இனம்காண முயன்று
சினம் தவிர்த்து விடு
சினம் நீங்கி நீயானால்–கிளியே
குணவானாய் ஆகிடுவாய்

8.ஏற்றம் கொடுக்கின்றேன்
என்று பலர் பசப்பிடுவார்
கூற்றம் அவர் என்று —கிளியே
குப்பையில் போட்டுவிடு

9.உன்னைப் போலுண்டோவென
உயர்வாய்ப் புகழ்ந்திடுவார்
தன்னிலை தெரிந்து நீ —கிளியே
உன்னிலை உணர்ந்து விடு

10.காரியம் ஆனவுடன்
கைவிட்டு ஏகிடுவார்
தைரியம் உள்ளவர்கள்–கிளியே
தெளிவாய்ப் புரிந்திடுவார்

கிளிக்கண்ணி–5
——————–

விடேன் என்று தொடர்ந்தாலும்
விடேன் என்று பிடித்தாலும்
விடையே அவர் தானடி–கிளியே
வாமனன் அவர் பேரடி

பலமாதம் பேச்சில்லை
சிலநாட்கள் பதிலில்லை
சில மனிதர் இப்படித்தான்—கிளியே
சிறிய மனிதரடி

நேரிலே பார்த்துவிடில்
நேர்மைக்கு நீரென்பர்
உதட்டளவு உபசாரம் —கிளியே
உலுத்தர் அவர்களடி

ஆசார்யன் அவரென்றால்
பாசம் வரவேண்டும்
சிட்டருக்குச் செய்வதெலாம் —கிளியே
எட்டிக்காய் ஆவதில்லை

சிட்டர்கள் பலருண்டு
சிக்கலை எடுத்துவிடில்
பக்கம் வரமாட்டார் —கிளியே
பாராமல் போயிடுவார்

கருவேப்பிலையாக
குருவை நினைத்துவிடில்
உருப்படுதல் உண்டோ —கிளியே
ஊழ்வினை அதுதானோ

நீதான் கதிஎன்பர்
நீதான் விதி என்பர்
சொல்லுவது ஒன்று –கிளியே
கொல்லுவது அவர் மனதை

வெல்ல வழி கேட்பர்
வெல்லமாய் பேசிடுவார்
வழி தெரிந்துவிடில் –கிளியே
வாரி விடுவர் காலை

வெளுத்ததெல்லாம் பாலல்ல
கொளுத்துவதெல்லாம் வெயிலல்ல
பாசாங்கு உலகத்தில் —கிளியே
பாசத்துக்கிடமில்லை

நேசத்துக்கிடமில்லை
நேர்மைக்கிடமில்லை
வேசத்துக்கே இடம் —கிளியே
வேசியாய் இருக்காதே

இன்னும் வரும்
கிளிக்கண்ணி —-6
—————————-

1.அச்சுதனைத் தேடு
ஆயிரம் ஆனாலும்
இச்சகம் என்றாலும் –கிளியே
அச்சுதனைத் தேடு

2.பண்பிருக்குமிடத்தில்
அன்பிருப்பதில்லை
கண் இருக்குமிடத்தில் —கிளியே
காண்பது இல்லையடி

3.அன்பிருக்குமிடத்தில்
ஆவலிருப்பதில்லை
கேவலே மிஞ்சுமடி —கிளியே
கேள்வியே ஏதுக்கடி

4.இன்றைக்குச் செய்தாலும்
என்றைக்குச் செய்தாலும்
நன்றிக்கு இடமில்லை–கிளியே
என்றைக்கும் இடமில்லை

5.காரியம் ஆகும்வரை
கலகலப்புப் பேச்சுக்கள்
காரியம் முடிந்துவிடில் –கிளியே
யார் அது என ஏச்சு

6.உள்ளே ஒன்றிருக்க
கள்ளமாய்ப் பேசினால்
உண்மை அதுவல்ல —கிளியே
உறைக்குமோ உனக்கு

7.புகழ்ச்சியிலே மயங்கி
போதையில் திளைத்துவிடில்
இகழ்ச்சிக்குக் கை தட்ட –கிளியே
இரு கைகள் போதாது

8.தந்திரக் காரருக்கு
மந்திரம் வேண்டாம்
தவறாகும் இதுவே —கிளியே
தந்தால் முறையல்ல

9.கொள்வாரும் இல்லையடி
கொடுப்பாரும் இல்லையடி
சொல்வாரும் சொன்னாலும் –கிளியே
சொற்களுக்கு இழுக்காகும்

10.புலம்பித் தீர்த்தாலும்
அலம்பித் துடைத்தாலும்
பாராமல் போயிடுவர்–கிளியே
கூறாமல் சென்றிடுவர்

11.பயனிருப்பின் பேசிடுவர்
பலமிருப்பின் கேட்டிடுவ ர்
இரண்டும் இல்லையெனில் –கிளியே
இல்லாமல் சென்றிடுவர்

12.மேலே செல்வதற்கும்
மேன்மை பல வேண்டும்
தாளே துணை வேண்டும் –கிளியே
தானே வந்துவிடும்

13.தூக்கி விடுவதற்கும்
தோள்கள் பலவேண்டும்
திக்கிப் பேசினாலும்–கிளியே
தேனமுதம் என்றிடுவர்

14.அரைப்பேச்சு வந்தாலும்
ஆஹாஹா என்றிடுவர்
தரைப் பேச்சு என்றாலும் –கிளியே
தோளில் தூக்கிடுவர்

15.ஆவி பிரிந்தாலும்
கேவி அழுதாலும்
ஆரால் என்ன பயன் –கிளியே
நாரா யணன் பயன்

16.போவோர் போனாலும்
போகாமல் போனாலும்
போவது ஏதுமில்லை —கிளியே
ஆவது ஏதுமில்லை

இன்னும் வரும்

-கிளிக்கண்ணி —7
————————-

1.ஆபத்தில் காப்பதவன்
தாபத்தைத் தீர்ப்பவனவன்
கூவிக்கொண்டு விடு—கிளியே
கோவிந்தன் துணையிருப்பான்

2.கடையைக்காட்டினாலும்
கொள்வார் எவருமில்லை
விடையை விரித்துரைத்தும் —கிளியே
விரும்புவோர் யாருமில்லை

3.வேப்பம்பூ இனிக்குமென்று
வேண்டுமபவருமுண்டோ
வேண்டாதார் சிநேகம் —கிளியே
விரட்டி அடித்து விடு

4.பசப்பு வார்த்தைகள்
பலநூறு விதமாகச்
சொல்வாருமுண்டு—கிளியே
சொக்கி விடாதேடி

5..உன்னைப்போல் ஒருவன்
உயர்ந்தோர் எவருமில்லை
பேச்சுக்குச் சொல்வார்கள் –கிளியே
ஏச்சென எடுத்துக்கொள்

6.நேரமில்லை எனச் சொல்லி
நீக்கிவிட முனைந்தால்
தூரம் போய்விடு –கிளியே
தூக்கி எறிந்து விடு

7.நீயாகப் பேசுவதை
நிறுத்தி விடு இனிமேல்
நிந்தன் பலவீனம் –கிளியே
நித்தம் ஒழித்து விடு

8.பேசுங்கள் எனச் சொன்னால்
நேசமில்லா திருந்தால்
பாசமில்லாப் பேர்கள் –கிளியே
பாராதிருந்து விடு

9.நேரிலே பார்த்துவிட்டால்
நேர்த்தியான பேச்சு
பின்னாலே இகழுவது –கிளியே
பிறந்த குண மூச்சு

10.என்னத்தைக் கண்டு விட்டாய்
இதுவரை பேசிப்பேசி
என்னத்தைப் பெற்று விட்டாய்–கிளியே
இதுவரை ஏட்டெழுதி

11.அவரவை சுயநலத்தை
அடுக்கிப் பிடித்திருப்பார்
எவரவர் எப்படியோ —கிளியே
ஈசனுக்கே வெளிச்சம்

12.பாசத்தை விட்டு விடு
நேசத்தை முறித்து விடு
ஈசனுக்கே எல்லாம்—கிளியே
என்றே இருந்து விடு

இன்னும் வரும்
– கிளிக்கண்ணி—-8
—————————

1.மாலுக்கு உகந்ததுவே
தோளுக்கு இனியானே
இனியானில் அவர் சேவை –கிளியே
இனிப்பெல்லாம் ஓர் உருவம்

2.வாளா இருக்க முடியாமல்
தாள முடியா வேகத்தில்
கோள் சொல்லிப் பிரிப்பவர்கள்—கிளியே
ஆள் அவர்கள் அரவமடி

3.அரவத்தை நம்பினாலும்
அரவத்தைச் செய்தாலும்
படித்ததன் பண்பில்லை —கிளியே
பக்குவத்தை எட்டவில்லை

4.யார் எதைச் சொன்னாலும்
சீர் தூக்கிச் சிந்தித்து
பார் இதுவில் பாவம் எனக்–கிளியே
பகுத்து உணர வேண்டுமடி

5.ஆட்டு மந்தை என்று
அலையும் பிறப்பில்லை
நாட்டு மனிதராகக் –கிளியே
நடத்தல் வேண்டுமடி

6.படித்தவன் கோள் சொன்னால்
படுநாசம் கெடும் நேசம்
படித்தவ னதைக் கேட்டால் —கிளியே
படித்தும் என்ன பயன் ?

7.பாதிக்கப் பாடுபவரும்
வேதனைப் படுவரடி
சோதனை இதுவென்றே —கிளியே
சோகித்து இருப்பரடி

8.ஆனாலும் கோள் சொல்வார்
தானாகக் கோள் கேட்பார்
வீணாகப் போவாரடி —கிளியே
வெறும் பேச்சில்லையடி

இன்னும் வரும்…….

கிளிக்கண்ணி —-9

வெள்ளை மொட்டுக்கள் சிரிக்க
வெளிச்சம் இதுவோ, வெய்யில் ?
கொள்ளை கொள்ளும் உள்ளம்—கிளியே
கோவிந்தன் உறையும் உள்ளம்

உள்ளம் உண்மையே சொல்லும்
உலுத்தர் பொய்யே உரைப்பர்
உலுத்தர் சொற்களை நம்பிக்—கிளியே
ஓரம் போனவர் உண்டு

உதட்டினால் உபசாரம்
உன்னதம் ஆகிடுமோ
உதட்டளவே உரைப்பார்க்குக் –கிளியே
உதவுவார் இனி உண்டோ

பலவேடம் புனைவார்கள்
பாசாங்கும் செய்வார்கள்
சிலநாள்தான் செல்லாகும் —கிளியே
சீச்சீயும் சொல்லாகும்

உங்களுக்கு உதவத்தான்
ஓடோடி நான் வருவேன்
என்றுரைத்த பலபேர்கள் –கிளியே
இருக்குமிடம் தெரியாது

ஒதுக்குகின்ற ஓர் குணம்
மிதிக்கின்ற பல குணங்கள்
விதியால் அவர்க்கென்று —கிளியே
விதைத்தான் பகவனவன்

இதை அறிந்தாரவரில்லை
எதை அறிந்தார் முன்னேற ?
பிறரை ஒதுக்குவதே —கிளியே
பிழைப்பாய் இருப்பார்கள்

இவரை ஒதுக்கி விட
இறைவன் முடிவெடுத்தால்
எவரை இவர் அண்டுவர்—கிளியே
ஏமாற்றமே அடைவர்

ஏணியாய்க் கைக்கொண்டு
ஏறி விட்ட பின்னர்
எட்டி உதைப்பவர்கள் –கிளியே
எட்டிக்காயே இவர்கள்

பிறவாவரம் தாருமென்பார்
பிறக்காது இருந்துவிடில்
போவது எந்த இடம் —கிளியே
ஆவது என்ன பயன்?

இறவாவரம் தாருமென்று
இராக்கதர் கேட்டிடுவார்
இறக்காது இருந்துவிடில் —கிளியே
இன்னல்கள் எத்தனையோ

வைணவத்தில் மிக அருமை
வைகுந்தம் வேண்டுமென்று
வேண்டித்தான் கேட்டிடுவார் –கிளியே
வாசுதேவன் அளித்திடுவான்
தனி
————-
நாமார்க்கும் குறைவல்லோம் ,குறையும் சொல்லோம்
ஏமாப்பும் நாம் அடையோம் , எதிர்ச்சொல் சொல்லோம்
கோமகனைப் பெற்றுள்ளோம் ,கோள் என் செய்யும் ?
ஏமாற்றம் நாம் அடையோம், இயல்பாய் வாழ்வோம்

இன்னும் வரும்

கிளிக்கண்ணி –10
1.கிளிக்கண்ணி வேண்டுமென்று
கேட்பவர் ஏராளம் ; தாராளம்
ஆட்கொண்ட அச்சுதன் —கிளியே
அருட் கொடையே இதுவன்றோ !

2.சொந்தபந்தம் துறந்து
சோகத்துடன் உழன்றும்
செய்வது என்ன, என்ன?—கிளியே
சொல்வது என்ன என்ன?

3.சொந்த பந்தம் வாழ்த்த
சூழ்கின்ற நல்வினைகள்
செய்வது நல்ல செயல்–கிளியே
சொல்வது நல்ல பொருள்

4.வெல்வது வாழ்க்கைதான்
வீழ்வது தீவினைகள்
அச்சுதன் பாதம் பற்று –கிளியே
அனைத்தும் உன் வசமாகும்

5.எப்படியும் வாழலாம்
இப்படியும் வாழலாம்
கைப்பிடி பகவான் பாதம்–கிளியே
காலன்தான் நெருங்குவானோ !

6.உலகத்தை அன்றளந்த
உத்தமன் பாதம் பற்றி
பலவகை க்ஜானம் பெற்றுக்–கிளியே
பகலவன் போல வாழ்வாய்

7.யார் இனி உனக்கு நிகர் ?
தார்வேந்தர் நிகரில்லை
தாரணியில் வாழ்ந்திருந்து –கிளியே
தரும் பரமபதம் சேர்

8.பரமபதம் சொந்த இடம்
பரந்தாமன்தான் சொந்தம்
விருந்துக்கு வந்ததுபோல் –கிளியே
இருந்துவிட்டுப் போய்விடு

9.பருந்துகள் வட்டமிடும்
மருந்துகள் சுற்றிவரும்
அறுத்து விடு அவற்றைக் –கிளியே
அச்சுதனை நம்பி விடு

10.இப்போது இருப்பவர்கள்
எப்போதும் இருப்பாரோ ?
இதற்கு முன் எங்கிருந்தார்?–கிளியே
ஏன் அதற்கு விடை இல்லை ?

11.அப்போதைக்கு அப்போது
அச்சுதனை நினைத்து விடு
தப்பாமல் அவர் வருவார்–கிளியே
தயங்காமல் அணைத்திடுவார்

தொடரும் …….

கிளிக்கண்ணி –11
———————-

அளவிலா பக்தி கொண்டேன்
அளவிலா அடிமை பூண்டேன்
தளர்விலா நெஞ்சம் கொண்டேன் –கிளியே
தாமோ தரனே என்றேன்

1.நேசத்தால் வந்தாலும்
பாசத்தால் வந்தாலும்
ஆசையுடன் சொன்னேன் –கிளியே
கேசவன் நாமம் தன்னை
———–

2.ஆர் இவர் கேள்வி கேட்டு
அப்புறப் படுத்தும் முன்பு
பேர் இவர் கேட்கும் முன்பு —கிளியே
நாரணன் என்று சொன்னேன்
———-

3.ஆதவன் அவனின் நாமம்
ஆனாலும் ஆவதென்ன ?
பாதகம் தீர்ந்து போகும் —கிளியே
மாதவன் பேரைச் சொன்னால் !
———–

4.கோக்களைக் காத்தவன் தான்
மாக்களை மாற்றி க்ஜானம்
ஆ, இந்தா என்று ஈந்த —கிளியே
கோவிந்தன் இருக்கின்றானே
————–

5.எங்கும் இவன் பரந்து
இங்கும் உறைகின் றானே
இஷ்டமுடன் இருப்பான் –கிளியே
விஷ்ணுவே அவன் நாமம்
————–

6.எது எனக் கேட்டாலும்
ஏன் எனக் கேட்டாலும்
இது எனச் சொல்வார்கள் –கிளியே
மதுசூ தனன் பெருமை
—————

7.உரியது அவனுக்கு எல்லாம்
உடைமையும் அவனுக்கு எல்லாம்
விரித்து இதைச் சொன்னால் –கிளியே
திரி விக்கிரமன் ஆகும்
—————-

8.ஆவது எல்லாம் அவனால்
அளந்ததும் அவனே தானே
ஏ யென்மனம். சொக்கி நிற்க —கிளியே
வாமனன் புகழைப் பாடு
————-

9.திருவுக்கும் திருவாய் ஆவான்
திருமாலே அவனே ஆவான்
கிரிதரன் அவனே ஆவான் –கிளியே
சிரீதரன் அவனே ஆவான்
———-

10.இருடிகள் வணங்கி நிற்கும்
வருடிக் கங்கையும் பாயும்
இருதயம் புகுந்து நின்றான் —கிளியே
இருடீகேசன் என்பான் தானே
—————

11.ஆத்மாவை அவனுக்கு இட்டு
ஆழ்ந்த தியானம் செய்து
உத்தமன் ஆகி நின்றால் —கிளியே
பத்ம நாபன் பரம ஆத்மா
————

12.சாமத்தை ஓதி நாமும்
சமமான திருவாய் மொழியைத்
தாமதம் இன்றிச் சொன்னால் —கிளியே
தாமோதரன் சேவை ஆகும்
————–

பன்னிரு நாமம் தன்னைப்
பன்னி உரைத்து விட்டேன்
உருப்பட்டூர் அடியேன் என்னைக் —கிளியே
உய்த்தனன் தாளே சரணம்
————————————————-

கிளிக்கண்ணி —15
——————

1.என்னவர் என்னுயிரென்றும் ,
என்னவள் ஆருயிரென்றும்
ஆசையுடன் பற்பலப் பிறவிகள்–கிளியே
பேசிப்பல பேருடன் வாழ்ந்தார்

2.இப்போதும் ஓர் பிறவி எய்தி
இப்போதும் அதையே பிதற்றி
தப்பாது தவறுகள் செய்து–கிளியே
தவித்திருப்பார் எப்போதும்

3.எப்போது இது முடியுமென
ஏக்கமும் வருவதில்லை
இன்பமென இதையெண்ணிக்–கிளியே
துன்பத்தைத் தழுவுகிறார்

4.இளமையும் கட்டுடலும்
எத்தனை நாட்கள் என
எண்ணிப் பார்ப்பதில்லை–கிளியே
என்றுமே நாடகம்தான்

5.குன்றெடுத்துக் குறைதீர்த்த
கோவிந்தன் நின்றிருக்க
நாடகங்கள் தேவையிலை –கிளியே
நாடிவிடு அவன் சரணம்

6.கண்ணன் அழகன் அவன்
காதலித்துச் சேர்ந்துவிடு
அவனேதான் நமக்கெல்லாம் –கிளியே
ஆளுகின்ற புருஷனவன்

7.நாமெல்லாம் பெண்கள்தான்
நாமம் ஆண்களாயிருந்தாலும்
அவன் ஒருவனே புருஷன் –கிளியே
ஆழ்வார்கள் சொன்னவர்கள்

8.கண்ணன் சரிதை கேட்காத
காதுகள் உனக்கெதற்கு ?
கண்ணன் அழகைப் பருகாத–கிளியே
கண்களும் உனக்கெதற்கு ?

9.நாயகியாய் மாறிநின்று
நாயகனைத் துதிக்காத
நாவும் உனக்கெதற்கு —கிளியே
நாளும் கசிந்துருகு

—————-இன்னும் வரும்——

–கிளிக்கண்ணி—16
—————————-

1. அடியேன் அடியேனென்று
அடுத்தடுத்துச் சொல்வார்கள்
ஆணவம்தான் அதிலிருக்கும் –கிளியே
தான் என்ற கர்வம் மிதக்கும்

2. கற்றாரைக் கற்றாரே காமுறுவர்
கற்றார் என்பதற்கு விதி என்ன ?
பொற்பாதமென்று—கிளியே
புகழ்ந்தாலே அவர் கற்றார்

3. அவரவர்கள் கூட்டம் அவை
அவரவர்கள் புகழ்ச்சி அணி
எவெரவர்கள் என்றாலே –கிளியே
எடுத்துரைக்க இயலாது

4. கற்றாரின் கூட்டங்கள் பூச்
சுற்றோரின் கூட்டங்கள்
கூட்டங்கள் குறைவில்லை–கிளியே
கணக்கெடுத்து மாளாது.

5. அலுவகம், ஆய்வரங்கம்
ஆத்திகத்தின் கருவரங்கம்
அங்கங்கே சிலபேர்கள் —கிளியே
ஆதிக்கம் செலுத்திடுவர்

6. மாபாரதக் கதைதனிலே
மாந்தரும் கேட்டிருப்பார்
சக்கர வியூகமென்று –கிளியே
சாகச வியூகமென்று

7. சக்கரத்தின் வியூகத்தை
சாகசத்தில் உடைத்தாலும்
கூட்டங்கள் வியூகத்தைக் —கிளியே
குலைப்பது இயலாது

8. அலுவலகக் கூட்டங்கள்
ஆய்வரங்கக் கூட்டங்கள்
ஆத்திகத்தின் கூட்டங்கள்—கிளியே
அதிகபலம், அதிகபலம்

9. துதிபாட மறுத்தவர்கள்
துக்கித்துப் போவார்கள்
விதியே எனச் சேர்ந்தால் –கிளியே
விண்ணும் காலடியில்

10. இதுதான் நிலை இன்று
இதுதான் வளம் என்று
எண்ணி இருந்தாலே –கிளியே
பொன்னும் புகழும் வரும்

11. ஓடி ஓடி உழைத்தாலும்
தேடி தேடிச் சென்றாலும்
நாடி நாடிக் கேட்டாலும் —கிளியே
நமக்குள்ளதே கிடைக்கும்

12. இதை உணர்ந்து விட்டால்
இனி எங்கும் போகாமல்
இருப்பிடமே சுகமென்று—கிளியே
ஈசனை வணங்கிடுவார்

————-இன்னும் வரும்—————-

கிளிக்கண்ணி—-17
———————————————

காணொளிக் காட்சிகள்
வானொலிப் பேச்சுகள்
ஆயிரக்கணக்கிலிவை —கிளியே
ஆல்போல் தழைத்துளது

2.
எல்லா மொழிகளிலும்
எல்லா இடங்களிலும்
நீக்கமற வந்துக் —கிளியே
நிம்மதியைத் தொலைக்கிறது

3.
அவற்றுக்குள் போட்டிகள்
ஆயிரம் தலைப்புகளில்
இவற்றுள் எதுவுமிலை –கிளியே
இறைவனை உணர்த்திடவே

4.
நெறிகளும், முறைகளும்
நெறித்திங்குப் பிணமாக
அவற்றின் முதுகின்மேல் –கிளியே
அமர்ந்துள்ள காணொளிகள்

இவற்றில்—-

5.
காதிலே பூ சுற்றும்
கணக்கிலா விளம்பரங்கள் !
காணொளிக் காட்சியா? —கிளியே
கண்ராவிக் காட்சியா ?

6.
வளரும் தலைமுறைகள்
கிளரும் எண்ணங்கள்
நஞ்சை விதைத்துக் —கிளியே
நச்சை வளர்க்கின்றார்

7.
ஆன்மிகம்,அனுபவத்தின்
ஆணிவேரைக் கெல்லி
தொன்மை வழக்கங்கள் –கிளியே
தொலைத்துவிடப் பெருமுயற்சி

8.
இதற்கா நம்முன்னோர்கள்
இடிபட்டு, அடிபட்டு,
உயிரைக் கொடுத்தார்கள் ?—கிளியே
உலுத்தர்கள் எக்களிக்க

9.
சுதந்திரம் பெற்றார்கள் ?
சுதேசியம் சொன்னார்கள் ?
நாட்டையே விற்கின்ற–கிளியே
நயவஞ்சகக் கூட்டம்

10.
வளருகின்ற தேசமிதா ?
வாழ்த்துகின்ற தாயை
வாளெடுத்து அரிந்தால் –கிளியே
வாழ்வாரா இவர்கள் ?

கிளிக்கண்ணி—18

காகிதமா–கருத்துக்கள் பெட்டகமா—-?

1.புத்தகம் ஒவ்வொன்றும்
எத்தகையது என்றால்,
காலத்தின் காலன் —கிளியே
கோலம் மனதுக்குள்

2. படித்தவர்கள் சொன்னாலும்
பிடித்தவர்க்கு மூன்றே கால்
முயலைப் பிடிப்பவர்கள்—கிளியே
முடிந்தவரை தடுப்பார்கள்.

3. வாங்குபவர் விரும்பியும்
தாங்குபவர் சொல்லியும்
ஒன்றொன்றே போதும்–கிளியே
என்றென்றே சொல்வார்கள்

4. வசதிகள் இருந்தாலும்
வளமைகள் பெற்றாலும்
வாங்குவது இல்லை–கிளியே
பொங்குவது பேதைமை

5.வார்த்தையிலே தேன் தடவி
பூர்த்தியாய்ப் புன்னகைத்து
எதிர்மறை எண்ணத்தைக் –கிளியே
இதயத்தில் பூட்டிடுவார்

6.கேட்டிடுவார் புத்தகத்தை
தேடி அதைக் கொடுத்தால்
விளக்கம் போதாது–கிளியே
இளித்துச் சொல்லிடுவார்

7. புத்தகத்தை எழுதி, அவன்
புத்தகத்தைப்போட்டு ,அவன்
”அய்யோ ” என்று இருப்பான் –கிளியே
ஆதரவு ஆரும் இல்லை

8.அச்சடிக்கக் கொடுத்த பணம்
மிச்சமின்றிக் கொடுத்திடுனும்
புத்தகங்கள் உறங்கி விடும்–கிளியே
எத்தகைய மனிதர்கள்!

9 .வருங்காலம் பதில் சொல்லும்
கருத்துக்கள்பெட்டகமா என்று
காகிதமாய் இருந்தாலும் —கிளியே
கவனமுடன் பதில் சொல்லும்.


10.மனிதர்கள்—தணிகர்கள்
இனியவர்கள் துணை இல்லை
ஈ–புக்கைப் போட்டுவிடு—கிளியே
இனிதாகப் பேசிவிடு
அடியேனை, ஆட்கொள்க

தனிச் செய்யுள்

1. மீனாய்ப் பிறந்து, கூர்மமாய் வளர்ந்து,
தானாகவே வராகமெடுத்து,நரசிங்கமாய்,
வாமனனாய் உலகளந்து,பரசு ஏந்தி
ராமனாகி, பலராமனாகி, கண்ணனாகி,

2. யுகந்தோறும் ,அவதாரம் பல எடுத்து
உகக்கின்ற மாலே ! மரகதமே ! மணியே !
பாவியேன் பணிகின்றேன் பிறப்பெடுத்து
ஆவிசோர்ந்து அல்லலுற்று அலைகின்றேன்

3. கரும்பே ! கரும்பின் சாரே ! கற்பகமே !
விரும்பும் திருவேங்கடத்தானே !வினைகளைய
அடிபணிந்தேன். ஆராத அமுதனே ! அச்சுதனே !
அடியேனை இரட்சிப்பாய் ! இறைஞ்சுகிறேன்

4. மலரே ! மலரின் மணமே !மாமாயனே !
இலரே, எவரும் உனைப்போல் , உதவி செய்ய ,
இருஅடி பணிந்தேன் !சிக்கெனெப் பிடித்து உன் ,
திருவடி பற்றினேன் !திருவுள்ளம் இரங்காயோ !

5. திருவே ! திருவுக்கும் திருவே ! உலகளந்த மாலே!
மறவேன்! மறவேனுன் மலர்ப்பாத கமலங்கள் !
உறவே! உறவின் உயிரே ! உயிருக்கும் உயிரே !
துறந்தேன் பற்றெல்லாம்,தூமலர் தூவித் தூவி.

6. ஆவியே ! அழகே ! அழகுக்கும் அழகனே !
பாவியேன் பிடித்தேன் பாதமலர் இரண்டினையும் ,
ஏழையேன், ஏழ்மைக்கும் ஏழையேன் . எனக்கிரங்காய் !
ஏதலன், பேதலித்துப் புலம்பித் தீர்க்கின்றேன்.

7. போதுமுன் சோதனை ! போதுமுன் விளையாட்டு !
போதுமுன் பராமுகம்! வேதனை என் சொத்து !
வேதமும் தேடிடும் ரங்கனே ! ரங்கனே ! சீரங்கனே!
பாதமும் பணிந்தேன், பணிந்துனைப் பிணைத்தேன் !

8. கானமே ! கானத்தின் ராகமே !ராகத்தின் பொருளே !
வானகத்துத் தெய்வமே !வழிகாட்டும் உட்பொருளே !
உழன்றேன் ! சலித்தேன் !உளம் உருகி வேண்டுகிறேன்,
தொழுதேன் உன் பாதம் , துயர் துடைக்க வாராயோ !

9. ஆனாலும் உனக்கு அலட்சியம்தான் மிக அதிகம்,
போனாலும் போகட்டும் எனத் தாயார் இருக்கவில்லை.
உந்தன் முகம் திருப்பி, உளம் திருப்பி வைத்த அவள்,
பந்தம் முதல் பந்தம், மற்ற பந்தம் நீயெல்லாம் .

10. பந்தமே ! பந்தத்தின் பந்தமே!பந்தத்தின் சொந்தமே !
எந்தை நீ! எழில்மிகு தாயும் நீ! சேயாய் அலறுகிறேன்.
எத்தினம் ஆனாலும், எவ்வேளை ஆனாலும்
அத்தினம் ,அவ்வேளை, அடியேனை ஆட்கொள்க !
546896_156469204556076_352989759_n

About the Author

Leave A Response