Vedobasana–8

Posted on Nov 10 2016 - 5:59am by srikainkaryasriadmin

8வது பாகம்
இதில் வித்யைகள் சொல்லப்படுகின்றன

1. மதுவித்யை

தேனாக ஸுர்யனையை த்யானம் செய்வது. ஸுர்ய
மண்டலத்தை, தேவதைகள் உட்கொள்ளும் தேனாகவும்,
மேலுலகில் அந்தரிக்ஷம் எனப்படும் தேன் அடை இருப்பதாகவும்,
வண்டுகள் மலர்களிலிருந்து தேனை எடுத்து சேர்க்குமாப்போலே
”வேத மந்த்ரங்கள்” என்றும், வஸு – ருத்ர – ஆதித்ய – மருத்
ஸாத்ய கணங்கள் 4 திக்குகளிலும், மேல்புறத்திலும் நிற்பதாகவும்
தேனாக ஸுர்யனைப்பாவித்தும் அவனுக்கு அந்தர்யாமியாக
பகவானை உபாஸனம் செய்தல்.

2. காயத்ரீ ப்ரஹ்ம வித்யை

காயத்ரீ சந்தஸ்ஸுக்கு மூன்று பாதங்கள், 24 அக்ஷரங்கள்.
ப்ரஹ்மத்திற்கு 4 பாதங்கள் (பூதம், ப்ருத்வி, சரீரம், ஹ்ருதயம்) .
வாக்கானது ஸர்வ பூதங்களையும் குறிக்கிறது.
இரு குணங்கள் . ப்ருத்வியை பாதமாக உடைய இதற்கு ஸர்வ
பூதங்களும் ஆதாரம் . அவைகளால் மீள முடியாது.
சரீரமாயும் ஹ்ருதயமாகவும் இப்படி ப்ருஹ்மத்திற்கு ஆதாரமாக
இருக்கிறது. இப்படி உபாஸிக்கச் சொல்கிறது.
இதற்கு அங்கமாக ஹ்ருதயத்தில் நான்கு பக்கங்களிலும் ,
மேலுமாக ஐந்து குழிகள் இருப்பதாகவும்,
அங்கு ப்ராணன்கள் சஞ்சரிப்பதாகவும், ஐந்து
குழிகளிலும் ஐந்து துவாரபாலகர்கள் மற்றும் ஆதித்யன், சந்த்ரன்,
அக்னி, பர்ஜன்யன், ஆகாசம் இவைகளின் தேவதைகள்
இருப்பதாகவும் உபாஸனம் செய்யுமாறு சொல்கிறது. இது
”காயத்ரீ ப்ருஹ்ம வித்யை” எனப்படும்.

3. கௌக்ஷய ஜ்யோதிர் வித்யை

ப்ரம்மமே வைச்வாநரன். இவன் அக்னிக்கு அந்தர்யாமி.
இங்ஙனம் உபாசிக்கும் முறைதான் இந்த வித்யை. காதுகளை
கைகளால் மூடிய போது காதுக்குள் ஒரு சப்தம்
கேட்கிறதல்லவா? அது, இந்த ப்ரஹ்மத்தைக் காட்டுகிறது.

4. சாண்டில்ய வித்யை

ப்ரும்மமே எல்லாவற்றிற்கும் காரணம் என்று அறிந்து காம
க்ரோதங்கள் இன்றி சாந்தத்துடன் ப்ரும்மத்தை உபாஸிப்பது.

5. கோஸ விஜ்ஞானம் (வித்யை)

தன் புத்ரன் தீர்க்க ஆயுளோடு இருக்க செய்யப்படும்
உபாஸனம். வாயுவை திக்குகளின் குமாரனாக நினைத்து
மந்த்ரங்களைச் சொல்லி உபாஸிக்க வேண்டும்.

6. புருஷ வித்யை

தன்னை ஒரு யக்ஞமாக கருதி தன் ஆயுட் காலத்தை (116
வருமூம்) மூன்றாக பிரித்து வஸு , ருத்ர, ஆதித்யர்களாக
நினைத்து, பசி, தாகங்களைத் தீக்ஷையாகவும், உட்கொள்வதை
உபஸத்தாகவும் சிரிப்பு இவைகளை ஸ்தோத்ரங்களாகவும், சாஸ்த்ர
சம்பந்தமாகச் செய்யப்படுவதை ஸம்பாவனையாகவும், மரணத்தை
அவப்ருதமாகவும் பாவித்து, சாஸ்திர விதிப்படி உபாஸித்தால்,
நோயை விலக்கி நீடித்து வாழ்வான் என்கிறது. ”ஐதரேய
மஹிதாஸர்” என்பவர் இப்படி வாழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது.
இவர், இந்த வித்யையை, ஸ்வேத கேதுவுக்கு
உபாசித்ததாகவும் சொல்வர். அந்திம காலத்தில் ஜபிக்க வேண்டிய
மந்த்ரங்களை ஜபித்தால், மோக்ஷம் அடைவான் என்றும்
கூறுகிறது. (தைத்திரீய முடிவில் சொல்லப்படும் புருஷ வித்யை
இதுவல்ல).

7 – ரைக்வ வித்யை

இது ஸம்வர்க்க வித்யை என்றும்சொல்லப்படும்.
”ஜாநச்ருதி” என்பவர் மிகவும் தர்மிஷ்டர். வீடுகள், சத்திரங்கள்
கட்டி எல்லா இடங்களிலும் அன்னதானம் முதலிய எல்லா
தானங்களையும் ச்ரத்தையோடு செய்பவர். ஒரு நாள் இரவில்
அவர் தன்னுடைய மாளிகையின் மேல் மாடியில்
படுத்திருக்கும்போது, அவருக்கு மேலே ஆகாயத்தில்
அன்னங்கள் பறந்தன. அதில் முன்னே போகும் அன்னத்தை,
பின்னே செல்லும் அன்னம், ”உனக்கு கண்ணில்லையா ?
தர்மிஷ்டனான ”ஜாநச்ருதி” படுத்திருக்க, அவன் மேலாகப் பறந்து
போகிறாயே?” என்று கேட்டது.
முன்னே செல்லும் அன்னம்,”வண்டியுடன் எப்போதும் வசிக்கும் ரைக்ரவரா
இவர்?” என்று கேட்டது.
”அது யார்? வண்டியோடு இருக்கும் ரைக்வர்” என்று,
பின்னால் செல்லும் அன்னம் கேட்டது.
சூதாட்டங்களில் ”க்ருதம்” என்கிற ஆட்டம் தெரிந்தவர்
எல்லா ஆட்டங்களும் தெரிந்ததற்குச் சமம். ”ரைக்வர்” எல்லாம் அறிந்தவர்.
அந்த பெருமை இந்த ஜாநச்ருதிக்கு ஏது?” என்று
முன்னே செல்லும் அன்னம் சொல்லிற்று.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த ஜாநச்ருதி , காலையில்
எழுந்து ”ரைக்வர் எங்கிருக்கிறார்?” என்று அறிய எல்லா
பக்கங்களிலும் ஏவலர்களை அனுப்பினார். பல பேர்
காணவில்லை என்று திரும்பி வர, ஒருவன் மட்டும் ”ஓரிடத்தில்
வண்டியின் அடியில் சிரங்குகளைச் சொறிந்து கொண்டு
அமர்ந்திருக்கிறார்” என்று சொன்னார்.

ஜாநச்ருதி, பசுக்கள், குதிரைகள் இவற்றை ஏராளமாகக்
கொண்டுபோய் ரைக்வரிடம் கொடுத்து அடிபணிந்து
தேவதாக்ஞானம் உபதேசிக்க ப்ரார்த்தித்தார். ரைக்வர் மறுத்தார்.
மறுபடியும் ஏராளமான செல்வங்களையும் மற்றும் தன்
புத்ரியையும் கொடுத்து உபதேசிக்குமாறு ப்ரார்த்தித்தார்.
இப்போது மனம் கனிந்து, ரைக்வர் உபதேசித்ததுதான்
ரைக்வவித்யை.

8 – ஸம்வர்க வித்யை

(ஸத்ய காம ஜாபாலர் என்கிற மஹரிஷி ஸ்வேதகேதுவுக்கு
உபதேசித்தது)
காபேயன், அபிப்ரதாரி , என்கிற இருவர் சாப்பிட உட்கார்ந்த
சமயத்தில் ஒரு ப்ரஹ்மச்சாரி பி க்ஷை கேட்டார். இருவரும் பிக்ஷை
போடவில்லை. ப்ரஹ்மச்சாரி , ”உலகத்தை தாங்குபவன் நான்கு
நான்கு மஹாத்மாக்களை விழுங்கியுள்ளான். பற்பல உருவாக
வசிப்பவன் அவன். இவனை மனிதர்கள் தெரிந்து கொள்வதில்லை.
இந்த அன்னம் யாருக்கு உள்ளதோ அவனுக்கு
அளிக்கப்படவில்லை” என்றான்.

காபேயன், ”ப்ரஹ்மச்சாரியே ! எல்லாவற்றையும்
ச்ருஷ்டிப்பவன் ஸர்வக்ஞன். இவன் ஒருவராலும்
சாப்பிடப்படாததைச் சாப்பிடுகிறான். இப்படி நாங்கள்
உபாஸிக்கிறோம்” என்று சொல்லி, பிக்ஷை அளித்தான்.
அக்னி, ஸ@ர்யன், சந்த்ரன் இவற்றிற்கு லயஸ்தானம் வாயு.
உடம்பில் கண், காது, வாக்கு, மனஸ் இவைகளுக்கு லயஸ்தானம்
ப்ராணன். இவற்றைத் தெரிந்து உபாஸிப்பவன் , ப்ரஹ்மத்தை
அனுபவிப்பான். (இது பலன்) என்று இதில் சொல்லப்படுகிறது.

9 – ஷோடச கல ப்ரஹ்மவித்யை

ஸத்ய காமன் என்கிற மஹரிஷியின் வரலாறு
சொல்லப்படுகிறது. ஸத்ய காமன் ஆசார்யரை வரிக்கப்
போவதற்கு முன்பு தன் தாயாரிடம் கோத்ரத்தின் பெயரைக்
கேட்டான். ”கோத்ரம் எதுவென்று தெரியாது” என்று சொன்ன
தாயார், ஆசார்யனிடத்தில் ”என் தாயார் ஜாபாலை. நான் ஸத்ய
காமன் என்று சொல்!” என்றாள்.
ஸத்ய காமன் கௌதம-ஹாரித்ருபாதர் என்கிற ரிஷியிடம்
சென்று இதைச் சொல்ல, குருவும் இவனை அங்கீகரித்து
இளைத்த 400 பசுக்களை வளர்த்துவரச் சொன்னார். அவற்றை
வெகு சிரமப்பட்டு பல வருஷங்கள் வளர்த்து ஆயிரம்
பசுக்களாக்கினான். அவற்றில் ஒரு காளை ஸத்ய காமனுக்கு
”ப்ரகாசவா” என்கிற பாதத்தை உபதேசித்து, அதற்கு நான்கு
அவயவங்கள் என்று கூறி, ”அக்னி உனக்கு இன்னொரு
பாதத்தைச் சொல்லும்” என்று சொல்லிற்று.

மறுநாள் ”ஸமிதாதானம்” செய்யும் சமயத்தில், அக்னி
”அனந்தவான்” என்கிற பாதத்தையும், அதன் நான்கு
பாகங்களையும் உபதேசித்தது. ”ஹம்ஸம் உனக்கு மூன்றாவது
பாதத்தைச் சொல்லும்” என்றது.
மறுநாள் மாலை அன்னத்திடம் ஜ்யோதிஷ்மான் என்கிற பாதத்தையும்,
அதன் நான்கு பாகங்களையும் அறிந்தான். அன்னம், ”மற்றொரு பாதத்தை
நீர்ப்பறவை சொல்லும்” என்றது.
அதற்கடுத்த மறுநாள் மாலை நீர்ப்பறவையிடம் ”ஆயதனவான்”
என்கிற பாதத்தையும், அதன் பாகங்களையும் அறிந்தான்.
இப்படியாகக் கற்று நன்கு அறிந்த ஆசார்யனைப் போன்ற தேஜஸ்
முகத்தில் தெரிய ஆயிரம் மாடுகளையும் ஓட்டிக் கொண்டு
ஆசார்யரி டம் சென்றான்.

ஆசார்யர் இவனைப் பார்த்து ”ப்ரஹ்மத்தை அறிந்தவனாக
உன் முகம் சொல்கிறது. யார் உனக்கு சொன்னது?” என்று கேட்க,
ஸத்ய காமன் எல்லாவற்றையும் சொல்லி , ”இருந்தாலும் ஆசார்ய
முகமாக உபதேசம் செய்யவேண்டும்” என்று ப்ரார்த்திக்க மனம்
சந்தோஷம் அடைந்து ஆசார்யனும் உபதேசம் செய்தார்.
(இரண்டுஉபதேசமும்-அதாவது எல்லாம் ஒன்றாக இருந்தன).

இந்த ஸத்ய காமனின் சிஷ்யன் உபகோஸலன். பன்னிரண்டு
வருடம் ஆசார்யனின் வைதீக அக்னியைப் பாதுகாத்து வந்தான்.
ஆசார்யன் இவனுடன் இருந்த மற்ற சிஷ்யர்களுக்கு உபதேசம்
முதலியவற்றை முடித்தவர் , உபகோஸலனுக்கு ஒன்றும்
சொல்லவில்லை. ஆசார்யருடைய மனைவி ப்ரார்த்தித்தும்
எதுவும் சொல்லாமல், ஆசார்யன் வெளியூர் சென்று விட்டார்.

பன்னிரண்டு வருஷ காலம் பாதுகாத்து வந்த அக்னி
இவனிடம் கருணை கொண்டு ”கம என்பது நமது சுகம், வம்
என்பது இந்த்ரியம் அல்லது வானம் போன்றது என்றும்,
ப்ராணன் ப்ருஹ்மம், கம்-ப்ருஹ்மம் (வம்) என்று உபதேசித்தான்.

பிறகு ”அக்னி வித்யையை” உபதேசித்து இதற்கு மேல் உனக்கு
ஆசார்யன் உபதேசிப்பார் என்று அக்னி சொன்னான்.

வெளியூர் சென்றிருந்த ஆசார்யன் திரும்பி வந்தார்.
சிஷ்யனின் முகத்தைப் பார்த்தார். ”ப்ரஹ்ம தேஜஸ்
ப்ரகாசிக்கிறதே? யார் உபதேசித்தது?” என்று கேட்டார்.

உபகோஸலன் நடந்த உண்மையைச் சொன்னான். ஆசார்யன்
சந்தோஷமடைந்து மேற்கொண்டு உபதேசம் செய்தார்.
அதாவது
ஆத்மாவானது த்ரேகத்தில் இருப்பது. ஆத்மாவிற்கு அழிவு
கிடையாது. இதை நன்கு தெரிந்து கொண்டால் பாபம்
ஆத்மாவில் ஒட்டாது என்று ஆரம்பித்து பலவற்றையும்
உபதேசித்தார். இவ்வாறு உபாஸனம் செய்தவன் முமுக்ஷுவாக
இருப்பதால் இவன் மரணமடைந்த பிறகு இவனுக்கு
செய்யவேண்டிய சடங்குகளைச் செய்யாவிட்டாலும் இவன் ஆத்மா
அர்ச்சிராதி மார்க்கம் என்கிற தேவயான மார்க்கத்தாலே
ப்ரஹ்மத்திடம் சேர்க்கப்படுவான். இதன் பிறகு துக்கம் என்பதே
கிடையாது என்று உபதேசித்தார்.

10 – மேலே சொல்லப்பட்டது உபகோஸல வித்யை, என்றும்
சொல்வர்
11 – நடுவில் அக்னி உபதேசித்தது இதைச் சார்ந்த அக்னிவித்யை
(ஆக, ஷோடச கலை ப்ரஹ்மவித்யை, உபகோஸல வித்யை,
அக்னி வித்யை மூன்றும் சொல்லப்பட்டது)

12 – ப்ராண வித்யை

ப்ராணன் மூத்தது. அதாவது கர்ப்ப வாஸத்தில் ப்ராணன்
ஏற்பட்ட பிறகுதான் மீதி இந்த்ரியங்கள் உண்டாகின்றன.
ஆதலால் ப்ராணன் ”ஜ்யேஷ்டன்”.

ப்ராணனுக்கும் மீதி இந்த்ரியங்களுக்கும் ஒரு கலகம்
ஏற்பட்டது. ”யார் உயர்ந்தவர்?” என்பதே அது.
ஸ்ருஷ்டி செய்த ப்ரஜாபதியிடம் சென்று, இந்த வ்யவஹாரத்தைத்
தீர்க்குமாறு கேட்டுக் கொண்டன.
அவர் உங்களுக்குள் யார் சரீரத்திலிருந்து வெளிப்பட்டால்
சரீரம் குலைந்து போகுமோ அவரே ச்ரேஷ்டர், உயர்ந்தவர் என்றார்.

வாக்கு ஒரு வருஷ காலம் சரீரத்தை விட்டு வெளிப்பட்டு
இருந்தது. ஊமை போல சரீரம் வாழ்ந்தது. இதைப்போலவே
கண்கள், காதுகள் மற்ற இந்த்ரியங்களும் வெளிப்பட்டு சரீரத்தைச்
சோதித்தது.
சரீரத்தில் அந்தந்த அங்கத்திற்கு குறைவு ஏற்பட்டதே
தவிர, சரீரம் ஜீவித்திருந்தது.
ப்ராணன், சரீரத்தை விட்டு வெளியே கிளம்பின தருணத்தில்
எல்லா அவயவங்களும் செயலிழக்கத் தொடங்கின. அவை
ப்ராணனை வெளியே போக வேண்டாம் என்று வேண்டி,
ப்ராணனே ச்ரேஷ்டன் அதாவது உயர்ந்தவன் என்றன.
ப்ராணன்,தனக்கு அன்னம், ஆடை எல்லாம் அளிக்க வேண்டும் என்று
கேட்டது. அன்னம் ப்ராணனுக்கு என்றும், முன்னும் பின்னும்
அருந்தும் ஆசமன தீர்த்தம் ப்ராணனுக்கு உடை என்றும் சொல்லி
அவையாவும் ப்ராணனை உபாசித்தன.

13. பஞ்சாக்னி வித்யை

அருண மஹரிஷியின் குமாரர் ஆருணீ. அவரின் குமாரர்
ச்வேதகேது. அவர் ஒரு சமயம் பாஞ்சால தேசத்தில் நடந்த
ஸதஸ்ஸுக்கு (விவாதங்கள் நடக்கும் சபை) சென்றார்.
ப்ரவாஹணன் என்ற பாஞ்சால தேசத்து அரசன் நடத்திய சபைக்கு
அவர் சென்றார். அந்த அரசன் ச்வேதகேதுவை சில கேள்விகள்
கேட்டார்.
அரசன்:ரிஷி புத்ரரே! உமக்கு தகப்பனார் உபதேசங்களைச்
செய்திருக்கிறாரா ?

ச்வேதகேது: ஆம்
அரசன்: ப்ரஜைகள் மரணம் அடைந்த பிறகு போகும் இடம் எது?
(அதாவது யாக தான பூர்த்தாதி புண்ய கர்மாக்களைச்
செய்தவர்கள் எந்த லோகத்திற்கு போகிறார்கள்)
ச்வேதகேது: தெரியாது
அரசன்: திரும்பி வரும் வழி எது? (யாகாதிகளை அனுஷ்டித்தவர்
திரும்பி வரும் வழி எது ?)
ச்வேதகேது: தெரியாது
அரசன்: தேவயான மார்க்கம், பித்ருயாண மார்க்கம் இவற்றின்
வேறுபாடு தெரியுமா? (வேத்தபதோ தேவயானஸ்ய
பித்ருயானஸ்யச வ்யாவர்த்தனா ?)
ச்வேதகேது: தெரியாது
அரசன்: மேலுலகம் சென்றவர்கள் யார் தெரியுமா? (இந்த
லோகத்திலிருந்து செல்பவர்களில் ஸ்வர்க்க லோகத்தை
அடையாதவர்கள் யார் ?)
ச்வேதகேது: தெரியாது
அரசன்: ஐந்தாவது ஆஹூதியில் மனிதன் பிறக்கிறான் என்பது
தெரியுமா? (வேத்த யதா பஞ்ம்யாமாஹூ தாவாப புருஷவசஸோ
பவந்தீதி ?)
ச்வேதகேது: ஒன்றும் தெரியாது
இங்ஙனம் கேள்விகள் கேட்ட பாஞ்சால தேசத்து அரசன்
”ரிஷிபுத்ரரே, இவை ஒன்றையும் அறியாது, நீர் பெற்றுக் கொண்ட
உபதேசம் தான் என்ன ? எப்படி உபதேசம் பெற்றதாகக்
கூறமுடியும் ?” என்று கேட்க,
ச்வேதகேது மானபங்கப்பட்டு
தகப்பனாரிடம் ஓடி வந்து (ஆருணி) விஷயத்தைச் சொல்ல, அவர்
தனக்கு இதைப் பற்றி ஒன்றும் தெரியாது என்று வருத்தப்பட்டு,
அரசனிடமே கேட்கலாம் என்று புறப்பட்டார்.
ச்வேத கேதுவையும் அழைத்தார். பிள்ளை வரவில்லை.
தான் மட்டும், ப்ரவாஹணன் என்கிற அந்த பாஞ்சால தேசத்து
அரசனிடம் சென்றார்.
தன்னுடைய பிள்ளையிடம் கேட்ட கேள்விகளுக்கு தனக்கு பதில்
தெரியாது என்றும் அதைத்தெரிந்து கொள்ள வந்திருப்பதாகவும்
சொன்னார். அரசன் ஆருணி என்கிற உத்தாலகருக்கு
உபதேசித்ததே ”பஞ்சாக்னி வித்யை”.
ச்ரத்தையோடு புண்ய கர்மாக்களைச் செய்தவன் மரணம்
அடைந்ததும், உடலில் இருந்து கிளம்பிய அவனும் (ஜீவாத்மா),
ப்ராணேயந்த்ரியங்களும், பூத ஸூக்ஷ்ம ஸரீரம் எடுத்து, முதல்
அக்னியான ”ஸ்வர்க்கத்தில்” ஹோமம் செய்யப்படுகிறது.
வெகு போக்யமான ஸரீரம் எடுத்து (போக ஸரீரம்) போகங்களை
அனுபவித்த பிறகு இந்த பூத சுக்ஷ்ம ஸரீரம் ”மேகம்” என்கிற
அக்னியில் சேர்க்கப்படுகிறது.
பிறகு மழை மூலமாக, பூமி என்கிற நிலத்தில் விழுந்து,
தான்யங்களில் புகுந்து, ஆகாரமாக புருஷனின் (நாலாவது அக்னி)
உடலில் சேர்ந்து, பிறகு ஸ்த்ரி எனப்படும் ஐந்தாவது அக்னியில்
சேர்ந்து ஏறக்குறைய பத்து மாதங்கள் இருந்து உலகில் பிறக்கிறது.
இதுவே பஞ்சாக்னி வித்யை.
ஆயுள் பர்யந்தம் வரை இருந்து, மறுபடியும் மரணம்
அடைந்து, முன்பு சொன்னதைப் போல ஐந்து அக்னிகளில்
இருந்து மறுபடியும் பிறந்து இப்படி எண்ணற்ற சங்கிலித்
தொடராக,ஜீவன் பிறவிகள் எடுக்கிறது. இப்படி இருப்பதை
உணர்ந்து ஆத்மாவை வேறாகப் பாவித்து, உபாஸிப்பவரும்
ச்ரத்தையுடன் ப்ரஹ்மத்தையே உபாஸிப்பவரும், மரணம்
அடைந்ததும் ”தேவயான மார்க்கம்” என்று சொல்லப்படும்
அர்ச்சிராதி மார்க்கத்தாலே ப்ரஹ்மத்தை அடைகின்றனர்.
(அர்ச்சிராதி மார்க்கம் – இதில் விரிவாகவே சொல்லப்படுகிறது)
யக்ஞம் செய்தவர்கள், குளம் முதலியன வெட்டியவர்கள்,
ஆலயம் கட்டியவர்கள், தான தர்மம் செய்தவர்கள், பித்ருயான
மார்க்கமான புகை, இரவு, க்ருஷ்ண பக்ஷம், தக்ஷிணாயனம், பித்ரு
லோகம், ஆகாசம், சந்த்ர லோகம் மூலமாக ஸ்வர்க்கம் சென்று
போகத்தை அனுபவித்து பிறகு ஆகாசம், வாயு, புகை, மேகம்,
மழை, ஓஷதிகள் என்று திரும்பி வந்து புருஷனிடம் போய்
சேர்வதில் முன் கர்ம வினைகளுக்கு தக்கபடி தாமதம் முதலியன
ஏற்பட்டு கர்ப்பம் மூலமாக ஸ்த்ரீயை அடைந்து – மறுபடியும்
ஜனனம், மறுபடியும் மரணம். இப்படி பலப்பல ஜன்மங்கள்.
கொசு, புழு, பூச்சி போன்ற ஜந்துக்கள் பிறப்பதும்,
மரிப்பதுமாய் இருக்கும். இவற்றிற்கு மேலுலகம் என்பது இல்லை.
ஸ்வர்க்க லோகம் தான் அக்னி. ஸுர்யன்-ஸமித்.
ஸுர்ய கிரணங்கள்-புகை. அஹஸ் – அர்ச்சிஸ். சந்த்ரன்-அங்காரம்
அதாவது தணல். நக்ஷத்திரங்கள் – நெருப்பு பொறிகள்.

14. வைச்வாநர வித்யை

ப்ராசீனசாலர் , சத்யஜ்ஞர், இந்த்ரத்யும்னர், ஜனர், புடிலர் –
ஆகிய ஐந்து மஹரிஷிகளும் ஒன்று கூடி ”நம் ஆத்மா யாது ?
ப்ரஹ்மம் யாது ?” என்று விசாரம் செய்து,
தெளிவு ஏற்படாமல்,
அருண மஹரிஷியின் புதல்வரான உத்தாலக மஹரிஷியை
அணுகினர். அவரும் இதை நான் அறியேன் அல்லேன்! இதனை
அறிந்தவர் கேகய தேசத்து அரசன் அச்வபதி என்பவர். அவரை
அணுகுவோம் என்று ஆறு மஹரிஷிகளும் அச்வபதியை
அடைந்தனர்.
அச்வபதி மன்னர் இந்த மஹரிஷிகளைக் கொண்டு
ருத் விக்குகளாக வரித்து யாகம் செய்து தக்ஷிணையைக்
கொடுக்கிறேன் என்றார். இவர்கள் வைச்வாநர வித்யையை
தானமாக (தக்ஷிணை) வேண்டினர்.(அக்காலத்தில் ஞானத்தைப்
பெறுவதற்கு மிகவும் ஆவலும், அதற்கான வழிகளில் இழிவதும்
மஹரிஷிகளிடையே இருந்தது )
அரசன் இவர்களை ஒவ்வொருவராக அழைத்து, வைச்வாநர
உபாஸனம் இதுவரை எப்படி செய்கிறார்கள் என்று கேட்டான்.
ப்ராசீனசாலர் த்யுலோகத்தையும், சத்யயஜ்ஞர் ஆதித்யனையும்,
இந்த்ரத்யும்னர் வாயுவையும் ஜனர் ஆகாசத்தையும், புடிலர்
ஜலத்தையும், உத்தாலகர் ப்ருத்வியையும் உபாசிப்பதாகச்
சொன்னார்கள்.
அரசன், இவை யாவும் வைச்வாநர ஆத்மாவின் அவயவங்கள்.
இவை இம்மை பலனை மட்டுமே அளிக்கும்.
ஆனால் இவற்றையெல்லாம் சேர்த்து ”விச்வரூப வைச்வாநர”
உபாஸனம் செய்ய வேண்டும் என்று உபதேசித்தான். இதன் பலன்
”பரப்ரம்ம உபாஸனை” என்றும் சொன்னான்.
இவற்றைத் தன் உடலில் அங்கங்களாக வைத்து
ப்ராணாக்னியை வைச்வாநர அக்னியாக பாவித்து, அன்னத்தை
ஐந்து ப்ராணாஹூதிகளாக முறைப்படி செய்வது. பஞ்சப்ராணங்களை
இப்படி உபாஸித்தால், அவற்றின் வழியே இந்த்ரியங்கள்,
அவற்றை நியமிக்கும் தேவர்கள், அவர்கள் சார்ந்த
உலகங்கள், யாவும் திருப்தி அடையும். இப்படி உபாஸிப்பவனின்
பாபம் தீயில் இட்ட பஞ்சு போல எரிந்து போகும் என்று, அரசன்
சொன்னான்.

15. ஸத்வித்யை
அருண மஹரிஷியின் பேரன் ச்வேதகேது. உத்தாலகரின்
குமாரன். பன்னிரெண்டு வயதான ச்வேதகேது தகப்பனாரின்
கட்டளைப்படி குருகுல வாஸம் செய்து வேதத்தை எல்லாம்
அத்யயனம் செய்து 24 வயதில் திரும்பி வந்தான்.
உத்தாலகர் பிள்ளையைக் கேட்டார். ச்வேதகேது
எல்லாவற்றையும் குருகுலவாஸத்தில் அறிந்து கொண்டாயா?
எதைக் கேட்டு, சிந்தனை செய்து, த்யானித்தால், உலகத்தில்
எல்லாவற்றையும் கேட்டு ,சிந்தித்துத் த்யானிக்கப் பெற்றதாக
ஆகுமோ அப்படி ஸர்வத்தையும் நியமிக்கும்படியானதை
ஆசார்யன் உபதேசித்தாரா ? நீ கேட்டு தெரிந்து கொண்டாயா ?

ச்வேதகேதுவுக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. ஆசார்யன்
இதைச் சொல்லவில்லையே, தந்தையிடமே ப்ரார்த்திப்போம்
என்று தந்தையிடம் இதற்கு அவரையே உபதேசமாக
சொல்லுமாறு கேட்டுக் கொண்டான்.
உத்தாலகர் சொன்னார்.
ஸத் என்கிற வஸ்து, தான் பலவாறாக ஆகக்கடவேன்
என்று ஸங்கல்பம் செய்து கொண்டு ”தேஷஸ்”ஸை
ச்ருஷ்டித்தது. ”தேஷஸ்” ஸங்கல்பம் செய்துகொண்டு
ஜலத்தை ச்ருஷ்டித்தது. ஜலம் , இவ்வாறு
ப்ருத்வியை ச்ருஷ்டித்தது. இவைகள் பூமியில் பிராணிகள் என்ற
பூதங்களாயின.
அந்த பிராணிகள் அண்டஜம், ஜீவஜம், உத்பிஜ்ஞம்
என்று மூன்று வகை.
அண்டஜம் – முட்டையிலிருந்து உண்டாவது.
ஜீவஜம் – பிராணிகளிடமிருந்து பிறப்பது
(மனிதர்களையும் சேர்த்து)
உத்பிஜ்ஞம் – பூமியைப் பிளந்து வளர்வது (மரம், செடி,கொடிகள்).
(உத்பிஜ்ஞத்தில் வியர்வையிலிருந்து உண்டாவதும் சேரும்).
ஸத் என்பது ஜீவாத்மாவோடு ப்ரவேசித்து, பலவகை நாம
ரூபங்களை உண்டாக்க சங்கல்பித்துக் கொண்டு, அதற்காக
தேஜஸ், ஜலம், ப்ருத்வி என்கிற மூன்று மகா பூதங்களையும்
த்ருவித்க்கரணம் செய்தது.
அதாவது ஜலத்தில் மற்ற இரண்டும்(தேஜஸ், ப்ருத்வி) கலந்திருக்கும்.
தேஜஸ்ஸில் ஜலம், ப்ருத்வி கலந்திருக்கும்.
ப்ருத்வியில் தேஜஸ், ஜலம் கலந்திருக்கும்
(இவற்றை பஞ்ச பூதங்கள் என்று சொல்லும்போது பஞ்சீகரணம்
என்று பெயர்).
இப்படி கலந்திருப்பதிலிருந்து உடலை ச்ருஷ்டித்து,
ஜீவாத்மாவுடன் தானும் அதன் உள்ளே புகுந்து, ஒவ்வொரு
வஸ்துவாகவும், ”ஸத்” என்கிற பரப்ரம்மம் இருக்கிறது .
ஒவ்வொன்றிலும் அசேதனம், சேதனன், ஈச்வரன் சேர்ந்து
இருக்கிறது என்பதை அறிவாயாக.
தேஷஸ்ஸுக்கு நிறம் சிவப்பு. ஜலத்திற்கு நிறம் வெண்மை.
ப்ருத்விக்கு நிறம் கருப்பு. நெருப்பு எரியும்போது இந்த மூன்று
நிறங்களையும் காணலாம்.
இப்படி மூன்று மஹா பூதங்களிலிருந்து உண்டான
அன்னம், உடலை வளர்த்து, மூன்று பரிணாமங்களைப்
பெறுகின்றது.
அஸாரபாகம் – மலமாக ஆகிறது.
ஸாரபாகம் -உடலில் மாம்ஸம்.
மிகவும் ஸாரமானது மனஸைப் போஷிக்கிறது.
அருந்தும் ஜலமும்,
நீர், இரத்தம், மனஸைப் போஷிக்கும் பாகம்
என்று மூன்றாக மாறுகிறது.
தேஜோமயமான ஆகாரமும்,எலும்பு, அதற்கு வேண்டிய
ஸ்னேஹம் (பசை), வாக்கை வளர்க்கும் பாகம் என
மூன்றாக மாறுகிறது.
ஆக மனஸ்-அன்னமயம்,
ப்ராணன்- ஜலமயம்,
வாக்கு – தேஜோமயம்.
”15 நாட்கள் ஆகாரம் இல்லாமல் வெறும் ஜலத்தைப் பானம்
பண்ணி வந்தால்கூட, ப்ராணன் அழியாது. அப்படி இருந்து
மறுபடியும் என்னிடம் வா” என்றார் தகப்பனார்.
ச்வேதகேது, அப்படியே 15 நாட்கள் பட்டினி கிடந்து
அப்போது தீர்த்தத்தை மாத்திரம் அருந்தி தகப்பனாரிடம் வந்தான்.
தகப்பனார் வேதங்களைச் சொல்லச்சொன்னார்.
ச்வேதகேதுவால் எதுவும் சொல்லமுடியவில்லை.
அப்போது ”நீ சாப்பிடாத போது16 அம்சங்களில் 15 அம்சங்கள்
போய் விட்டன. இப்போது சாப்பிட்டு விட்டு வா” என்றார்.
ச்வேதகேது சாப்பிட்ட பிறகு சொல்வதற்கு பலம் வந்தது.
அன்னத்தால் புஷ்டி ஏற்படுகிறது என்று விளக்கினார்.

இதைப்போல எல்லா உலகுக்கும் காரணமான வஸ்து
எல்லாவற்றிலும் உட்புகுந்து நியமிக்கும்
சக்தியோடு இருக்கிறது என்று சொன்னார்.
பலவகை புஷ்பங்களிலிருந்து தேனீக்கள் தேனைச்
சேகரிக்கின்றன. அந்த தேன் துளிகள், ”நான் இந்த புஷ்பத்தைச்
சேர்ந்தவன்” என்று தனியாகப் பிரித்துச் சொல்ல முடியுமா ?
அப்படியே ”ஸத்” எனப்படும் பராமாத்மாவிடம் ஒன்றின
ஜீவாத்மாக்கள், தங்களைத் தாங்களே தெரிந்து கொள்ள
இயலாது.
பல நதிகளிலிருந்து தண்ணீர் ஸமுத்திரத்தில் சேர்ந்த பிறகு
அவை இன்னின்ன நதியின் ஜலம் என்று பிரித்து சொல்ல
முடியுமா ? முடியாது.
ஒருவன் மரணம் அடையும் தருவாயில் அவனைச்
சேர்ந்தவர்கள் அருகில் அமர்ந்து சில கேள்விகள் கேட்கும்போது
அவற்றை அவன் உணர்வதில்லை. ஏனெனில் அவனது வாக்கு
மனஸ்ஸிலும், மனஸ் ப்ராணனிலும், ப்ராணன் தேஜஸ் எனப்படும்
பூத ஸக்ஷ்ம சரீரத்திலும் அதன் காரண வஸ்துவான
பரமாத்மாவிடமும் லயித்து விடுவதால், உணர்வதில்லை.
உலகெங்கும் பரமாத்மா இருக்கிறான் என்றும், அவன்
அழிவற்றவன், தோஷமற்றவன், எல்லா உயிர்களுக்கும் அவன்
ஆத்மா, உனக்குள்ளும் அவன் இருக்கிறான் என்று
ச்வேதகேதுவுக்கு உத்தாலகர் உபதேசித்தார்.
இந்த ஸத்வித்யையில் 16 கண்டங்கள்
இவற்றில் சொல்லப்பட்டவை.
(1) ”ஸத்” என்பது எல்லா உலகத்துக்கும் காரணம்.
(2) ”ஸத்” முதலில் ”ஸமஷ்டி ச்ருஷ்டி” செய்கிறது.
(3) பூதங்களை ஒன்றோடொன்று சேர்த்து ”வியஷ்டி” ச்ருஷ்டி
செய்கிறது.
(4) த்ருவித்கரணம் என்கிற பூதங்களின் சேர்க்கை
செய்யப்படுகிறது.
(5) தேஜஸ், ஜலம், ப்ருத்வி இவற்றால் உடல் வளர்க்கப்படுகிறது.
(6) அன்னத்தின் நுண்ணிய பாகம் வாக், ப்ராணன், மனஸ்ஸை
வளர்க்கிறது.
(7) இது இல்லையேல் மனஸ் க்ஷீணமாகி விடுகிறது.
(8)”ஸத்” – சேதனங்களில் லயஸ்தானம்.
(9) இப்படி லயிக்கும் ஜீவன்கள் கணக்கில்லாதவை
(10) கடலில் இருந்து ஜலம் ஆவியாகி, மழையாகி, நதியாவது
போல சேதனர்கள் (ஜீவன்கள்) ஸத்திலிருந்து புறப்படுவர்.
(11) இந்த சேதனர்களுக்கு அழிவில்லை.
(12) ”ஸத்” என்பது மிக மிக ஸக்ஷ்மமானது
(13) ”ஸத்” – எங்கும் கரந்து ,பரந்து உள்ளது.
(14) ஆசார்யன் மூலமாக இதை அறிய வேண்டும்
(15) இந்த வித்யையை உபாஸிப்பவனுக்கு எல்லா அநிஷ்டமும்
போகும்
(16) அதனால் மீண்டும் ஸம்ஸார பந்தம் இல்லை.
உத்தாலகரின் உபதேசம் உலகில் உள்ளோர் மனங்களில் நன்கு
பதியும்படி இருப்பதாகச் சொல்வர்.

16. பூம வித்யை
நாரதர், ஸனத்குமாரரை அணுகி உபதேசம் செய்யும்படி
ப்ரார்த்தித்தார். அவரது மனம் கலங்கியிருந்தது. நாரத மஹரிஷி
யாவும் அறிந்தவர். அவருக்கே கலக்கம் என்றால்?
ஸனத்குமாரர்,நாரதரைப் பார்த்து
உமக்கு தெரிந்ததையெல்லாம் முதலில் சொல்லுங்கள் என்றார்.
நாரதர் நான் எல்லா ஸப்தங்களையும்
அறிந்திருக்கிறேன் என்றார்.
இதை உபாஸித்து (ப்ரம்மமாக)ஸப்தங்கள் கேட்குமிடங்களிலெல்லாம்
ஸஞ்சரித்து ஆனந்தம் அடையலாம் என்று ஸனத்குமாரர் சொல்ல,
நாரதர் இதற்கு மேலும் உண்டா என்று கேட்டார்.
ஸம்பாஷணை தொடர்ந்தது.
ஸப்தம், வாக்கு, மனஸ், ஸங்கல்பம், சித்தம், த்யானம்,
விஜ்ஞானம், பலம், அன்னம், தண்ணீர், தேஜஸ், ஆகாயம்,
நினைவு, ஆசை என்று பதினான்கையும் ப்ரம்மமாக
உபாஸிக்கலாம் என்று ஸம்பாஷணை தொடர்ந்தது.
இதற்கும் மேலானது எது என்கிற கேள்வி வந்தபோது,
”ப்ராணனை” மேலானதாக உபாஸிக்கலாம் என்றும்,
ப்ராணன் என்பது ஜீவாத்மா என்றும்
இந்தப் ப்ராணனை உயர்ந்த புருஷார்த்தமாக
உபாஸிக்கலாம் என்றும் சொன்னார்.
ஸனத்குமாரர் மேலும் சொன்னார்.
இதை விட ”ப்ரம்மத்தை” உபாஸனை செய்வது
மேலானதாகும். அதற்கு உபாஸனம், மனனம், இதில் ச்ரத்தை,
இதில் அசைக்க முடியாத பற்றுதல், அதற்கு தகுந்த
செய்கைகளில் ஊக்கம், இப்படி இருந்து அந்த ப்ரம்மத்தை
உபாஸிப்பது ”பூமா” எனப்படும்.
இதற்கு மேம்பட்டது இல்லை.
இது எல்லாவற்றிற்கும் ஆத்மா-பரமாத்மா.
இப்படி உபாஸனம் செய்பவன், கர்மங்களிலிருந்து விடுபடுகிறான்
இதற்கு மனஸ் சுத்தம் வேண்டும்.
மனஸ் சுத்தமாவதற்கு சுத்தமான ஆகாரத்தைச்
சாப்பிட வேண்டும். இப்படி ஸனத் குமாரர் பதில் சொன்னார்.
இவரை ”ஸ்கந்தர்” என்றும் சொல்வதுண்டு.

இனி 9 வது பாகத்தில் ,மீதி வித்யைகளைப் பார்ப்போம்

About the Author

Leave A Response