10 வது பாகம்
10 ப்ருஹதாரண்யக உபநிஷத்து
இது உருவில்பெரியது. சுக்ல யஜூர் வேதத்தைச் சேர்ந்த
சதபத ப்ராம்மணத்தின் கடைசிப் பகுதி.
இது காண்வம்,மாத்யந்தினம் என்று இரண்டு பிரிவுகள். (கிளைகள்).
ப்ராஹ்மணம் – காண்வ சாகையிலும் மாத்யந்தின சாகையிலும் உள்ளது.
எட்டு அத்யாயங்கள் இதில் உள்ளன. முதல் இரண்டு
அத்யாயங்கள் ஜ்ஞானத்தைப் பற்றிச் சொல்கிறது. “ப்ரவர்க்யம்”
என்கிற ஸோம யாகத்தைச் சேர்ந்த ஒரு அங்கத்தைச்
சொல்வதாகவும்சொல்வர். மீதி ஆறு அத்யாயங்களுக்கும்
பாஷ்யம் (விரிவுரை) உண்டு .
ஒன்றை மற்றொன்றாகப் பாவிப்பது “த்ருஷ்டி விதி”
எனப்படும். அச்வமேத யாகம் தொடங்கி, ஒரு வருஷ காலம்
கழித்து இதைச் செய்ய வேண்டும் என்று சொல்லப்படுகிறது
(ஒன்றை மற்றொன்றாகப் பாவிப்பது). குதிரையின் தலை, கண்,
ப்ராணன் முதலிய அங்கங்களை விடியற்காலை வேளை (உஷத்
காலம்) ஸுர்யன், வாயு இவைகளைப் போல பாவிக்க வேண்டும்.
யாகம் செய்பவன் இது போன்ற பாவனைகளைத் தெளிந்து செய்ய
வேண்டும். விரைவில் பலன் பெறலாம்.
பரமாத்மா உருவத்தை எடுக்க விருப்பம் கொண்டு ஜலத்தை
உற்பத்தி செய்தது. ஜலத்தின் சாரமாக, பூமி உண்டாயிற்று.
அதிலிருந்து, அக்னி உண்டாயிற்று. அக்னியே, ஆகாயத்தில்
வாயுவாகவும், மேலுலகில் ஆதித்யனாகவும் உள்ளது.
அக்னி என்கிற உருவத்தை எடுத்த பரமாத்மா, ஸம்வத்ஸரத்தை
உண்டாக்கியது. அதாவது பல ஸம்வத்ஸர காலம் (பல
வருஷங்கள்) ப்ராணிகளை படைக்கும் ப்ரஹ்மா என்று
கொள்ளலாம்.
ப்ரஹ்மஞானம் உண்டாகத் தடையாக இருக்கும்
பாபங்களைப் போக்க ப்ராணனை உபாஸிக்கச் சொல்கிறது.
”மதுப்ராம்மணம்” என்பது இதில் சொல்லப்படுகிறது.
ஓவ்வொரு இந்த்ரியத்திற்கும் ஒரு அதிஷ்டான தேவதை உண்டு.
தேவதைகள் இஷ்டப்படி இவை இருக்கின்றன. ஆதலால் மது
என்று பெயர்.
இந்த தேவதைகள், ”மற்ற எல்லாருக்கும், அழிவே
இல்லாமல் ஒருவன் அந்தர்யாமியாக இருக்கிறான். அவனே
ஆத்மா , அவனே மது” என்று உபாசித்தன (பரமாத்மாவை). இந்த
மது ரஹஸ்யத்தை ”தத்தியங்” என்கிற மஹரிஷியிடத்தில்
”அச்வினி தேவர்கள்” வந்து, இந்த வித்யையை உபதேசிக்குமாறு
கேட்டார்கள். இந்த ரஹஸ்யத்தை வெளியிட்டால் தலையை
வெட்டி விடுவதாக இந்த்ரன் சொல்லியிருப்பதால்அஞ்சுகிறேன்
என்றார் முனிவர்
. உங்களுடைய தலையை வெட்டித் , தனியாகப்பாதுகாத்து
குதிரையின் தலையைப் பொருத்துகிறோம். நீங்கள்
உபதேசியுங்கள். இந்த்ரன் வெட்டுவதாயிருந்தால், இந்த குதிரைத்
தலையைத் தான் வெட்ட வேண்டும். வெட்டியவுடன் உங்கள்
தலையைப் பொருத்தி விடுகிறோம் என்றனர் அச்வினி தேவர்கள் –
வைத்யர்கள் அல்லவா? மஹரிஷி ஒப்புக் கொண்டு ரஹஸ்யத்தை
தேவர்களுக்கு குதிரை முகமாக உபதேசித்தார். (ஹயக்ரீவ
ஸ்வரூபம்)
”பரமாத்மா எல்லா உயிர்களிலும் இருக்கிறான். உள்ளே,
வெளியே எங்கும் இருக்கிறான். அவன் இல்லாத இடமே இல்லை.
உலக வ்யவஹாரங்களை நடத்த பற்பல உருவங்களை எடுத்துக்
கொள்கிறான்.
ஹரியானவன் அவன் —-பல ஆயிரக்கணக்கான
ஹரியாக ஆகிறான். இந்தப் பரமாத்மா, எல்லாக் காலங்களிலும்
எல்லா இடங்களிலும் இருந்து ஸர்வேச்வரன் என்று நிரூபித்துக்
கொண்டிருக்கிறான்”. இதுதான், உபதேசத்தின் சுருக்கம்.
இந்த்ரன் கோபத்துடன் வந்து, முனிவரின் தலையை
(குதிரைத்தலை) வெட்ட, அச்வினீ தேவர்கள், முனிவரின்
சுயமான தலையைப்பொருத்த, ”தத்தியங்” என்கிற அந்த முனிவர்
செய்த பேருபகாரம் இவையெல்லாம்—————- தனிக்கதை.
வித்யையை உபதேசிக்கும் ஆசார்யன் முதல் பகவான்
வரையிலுள்ள வம்ச ப்ராம்மணம் முக்யம். (வம்ச வித்யை) இதை
ஒவ்வொருவரும் அநுஸந்திக்க வேண்டும்.
அச்வலர் -யாஜ்ஞவல்க்யர் – ஸம்வாதம்
விதேஹ தேச ராஜாவான ஜனகர், விசேஷமாக ஒரு யாகம்
நடத்தினார். அதற்கு, ஏராளமான வேத வித்துக்கள் வந்தனர்.
இவர்களில், வேதங்களை வேதாங்கங்களை அத்யயனம் செய்து,
ப்ரம்ம வித்யை வரையில் எல்லா வித்யைகளிலும் சிறந்து
விளங்குபவர் யார் என்று அறிய விருப்பம் கொண்டார்.
சிறந்த ஜ்ஞானியாக இருப்பவர், பொன் குப்பிகளால் அலங்கரிக்கப்பட்ட
இந்த ஆயிரம் பசுக்களை ஸ்வீகரிக்க வேண்டும் என்று
ப்ரார்த்தித்தார். ஒருவரும் முன்வரவில்லை.
அச்சமயத்தில் யாஜ்ஞவல்க்யர் (இவர் ஸுர்யனைத் த்யானம் பண்ணி
ஸுர்யன் குதிரை ரூபமாகப் ப்ரஸன்னமாகி உபதேசிக்க அவரிடம் உபதேசம்
பெற்றார். இதற்கு அந்தர்யாமி ப்ராம்மணம் என்று பெயர்).
தன் சிஷ்யனை அழைத்து, ”பசுக்களை நம் க்ருஹத்திற்கு ஓட்டிக்
கொண்டு போ” என்றார்.
மற்ற ப்ராம்மணர்கள் ஆக்ஷேபித்தனர்.
ஜனக ராஜனின் யாகத்தை நடத்தி வைக்கும் ருத்விக் அச்வலர்,
நீர்தான் சிறந்த ப்ரம்ம வித் என்று உங்களைக் கருதுகிறீரா ? என்று
கேட்டார்.
யாஜ்ஞ வல்க்யர் ”அத்தகைய ப்ரஹ்ம வித்யைக்கு
எனது நமஸ்காரம்,எனக்கு பசுக்கள் தான் தேவை” என்றார்.
அச்வலர், யாஜ்ஞவல்கயரை கேள்வி கேட்கலானார்.
அச்வலர் யாகத்தை நடத்தும் எஜமானர் மோக்ஷம் பெற ஹோதா,
அத்வர்யு, உத்காதா, ப்ரம்மா, என்கிற ருத்விக்குகள் பற்றியும்,
ஹோதா சொல்லும் ருத்விக்குகள், உத்காதா செய்யும் சாமகான
ருக்குகள், ப்ரஹ்மா யாகத்தைக் காப்பது, பிற தேவதைகள்
பற்றியும் அவ்வப்போது பெறும் பலன்களைப் பற்றியும், யாஜ்ஞ
வல்க்யரைக் கேட்டுத் , திருப்தி அடைந்தார்.
ஆர்த்தபாகர் என்கிற மஹரிஷி கேள்வி கேட்க யாஜ்ஞவல்க்யர்,
அவருக்கு க்ரஹங்கள் எட்டு
அவை மூக்கு, வாக்கு, நாக்கு, கண்,காது, மனஸ், கை, த்வக்
என்பவை என்றும், அவற்றின் விஷயங்கள் அதிக்ரஹங்கள் என்றும்,
அக்னி ம்ருத்யு என்றும்,ஜலம் அதை அன்னமாக உடையது என்றும்,
ஜீவன் மரணம் அடையும்போது, ப்ராணன்கள் அவற்றை விடுவதில்லை என்றும்
சொன்னார்.
ஜீவன் லயமடையப் போகுமிடம் எங்கே?” என்றுஆர்த்தபாஹர் கேட்க,
அவரைத் தனியே அழைத்துப்போய் புண்யம், பாபம் என்கிற கர்மாக்களுக்கு
ஏற்பச் செல்கிறான் என்று பதில் சொன்னார். (ஸதஸ்ஸில் சொல்லாமல், தனிமையில்
ஒருவருக்கு மட்டில் – கேள்வி கேட்டவருக்கு மட்டில்—- சொன்னார்
என்பது குறிப்பிடத்தக்கது)
புஜ்யு என்பவர், மத்ர தேசத்தில் அத்யயனம் செய்து
கொண்டிருந்தபோது, ”பதஞ்சலர் என்பவர் வீட்டிற்குச்
சென்றோம். அவருடைய பெண்ணை, ஒரு கந்தர்வன்
பிடித்திருந்தான் (ஒருவகைப் பிசாசம்) அதை நீ யார் என்று
கேட்டோம். நான் ஸுதன்வா–”ஆங்கீரஸ கோத்ரம்” என்று பதில்
சொல்லிற்று. பிறகு லோகங்கள் விஷயமாகச் சில கேள்விகள்
கேட்டு “பாரிக்ஷிதர்கள்” எங்கே போயிருந்தன என்று அந்தக்
கந்தர்வனைக் கேட்டோம். இதற்கு நீர் பதில் சொல்லும்” என்று
யாஜ்ஞவல்க்யரைக் கேட்டாh.
”பாரிக்ஷதர்கள், அச்வமேதயாகம் செய்யும் இடத்திற்குப்
போனார்கள்” என்று பதில் சொன்னார்.
புஜ்யு , ”அச்வமேத யாகம் செய்பவர் எங்கே போகிறார்?” என்று கேட்டார்.
ஸுர்யனை, பூமி சுற்றிக் கொண்டிருக்கிறது. இதில் பெரும்
பகுதி ஸமுத்ரம். இந்த அண்டகடாஹத்தில்— இதில் கத்தி
முனையளவு கொசுவின் இறகளவு கனமுள்ள சந்தில்
பாரிக்ஷதர்கள் சென்றனர். இந்த்ரன் அவர்களைக் கருடனாக
இருந்து சுமந்து சென்று வாயுவிடம் சேர்த்தான். வாயு அவர்களை
அச்வமேதயாகம் செய்பவர் இடத்தில் சேர்த்தது. இப்படி அந்தக்
கந்தர்வன் உமக்குச்சொல்லி வாயுவே வ்யஷ்டி, சமஷ்டி எல்லாம்
எங்கும் சஞ்சரிப்பவன் என்று சொல்லியிருப்பான் என்றார்.
பிறகு உஷஸ்தர் , கஹேளர்-இருவரின் கேள்விகள்.
உஷஸ்தர் – எல்லாவற்றுக்குள்ளும், உள்ளே இருக்கும் ஆத்மா
ப்ரத்யக்ஷமாக இருக்கிற ப்ரம்மம் என்கின்றனர். இது என்ன?
யாஜ்ஞ வல்க்யர் – உமக்கும் ஆத்மாவாக இருப்பது அது.
உஷஸ்தர் – இது மாடு, இது குதிரை என்று சொல்வதைப் போல
இருக்கிறதே ?
யாஜ்ஞவல்க்யர் – ச்ரவணம், மனனம், த்யானம், தர்சனம்
என்பவற்றைச் செய்யும் ஆத்மாவை நான் சொல்லவில்லை.இது
ஜீவாத்மா. நான் சொன்னது எல்லா ஜீவாத்மாக்களுக்கும் ஆத்மாவாக
இருப்பது.
கஹோளர் – அது எந்த ஆத்மா ?
யாஜ்ஞவல்க்யர் – பசி, தாகம், சோகம், மூப்பு, மரணம் இவை
எதுவுமே இல்லாத ஆத்மா. இதனை உணர்ந்தவர்கள்
(ப்ராஹ்மணர்கள்) புத்ரன், பணம், உலகம் என்கிற மூன்றிலும்
பற்று இல்லாமல், பிக்ஷை எடுத்து வாழ்கின்றனர். ப்ராஹ்மணன்,
உபதேசம்மூலம் பாண்டித்யம் பெற்று, அஹங்காரம் அற்று இருக்க
வேண்டும். எப்போதும் அந்த ஆத்மாவையே சிந்திக்க வேண்டும்.
கார்கி என்கிற ஸ்த்ரீ கேள்வி கேட்டாள்
”இந்த பூமிக்கெல்லாம் ஆதாரமானது ஜலம். அதற்கு எது
ஆதாரம்” என்று கேட்டு மேன்மேலும் கேள்விகளை கேட்டுக்
கொண்டே வந்தாள்.
யாஜ்ஞயவல்க்யர் மேன்மேலும் பதில்களைச்சொல்லி
லோகங்களைப் பற்றியும் சொல்லிக் கொண்டே வந்தார்.
கடைசியாக ”ப்ரம்ம லோகங்களுக்கு எது ஆதாரம்?” எனக்
கேட்டாள்.
கேட்கத் தகாததை, உள்ளபடி உணராமல் கேட்டால்
தலை விண்டு விழுந்து விடும் என்று யாஜ்ஞவல்க்யர் சொல்ல,
கார்கி அத்துடன் கேள்வி கேட்பதை நிறுத்திக் கொண்டாள்.
உத்தாலகர் சொன்னதாவது:
மத்ர தேசத்தில் பதஞ்சலரின் வீட்டில் அத்யயனம் செய்து
கொண்டிருந்த போது அவருடைய மனைவியை ஒரு கந்தர்வன்
பிடித்தான். அவனை யார் என்று கேட்டோம். நான் ஆதர்வணன்,
கபந்தன் என்றான். அந்த கந்தர்வன் என்கிற பிசாசம் எங்களைக்
கேட்டான்.
”எல்லா உலகங்களையும் எல்லா ஜந்துக்களையும்
தரித்திருக்கும் ஸுத்ரம், அவற்றின் உள்ளே இருந்து நியமிக்கும்
அந்தர்யாமியை அறிவீர்களா? இதை அறிந்தவன்தான் லோகம்,
வேதம், ப்ரம்மம் இவற்றை அறிந்தவனாவான் என்று சொன்னான்.
அது என்ன?”
யாஷ்ஞவல்க்யர் – நான் அறிவேன். அந்த ஸுத்ரமானது
ப்ராணன். எல்லா உலகங்களையும் ஜந்துக்களையும் உள்ளே
இருந்து நியமிக்கும் அந்தர்யாமிதான் ப்ரம்மம். சாதாரணமாக
உத்தாலகர் கேள்விகளுக்குத் த்ருப்தியான பதில் வந்தால்,
ஸதஸ்ஸில் கேள்வி கேட்பதை அத்துடன் நிறுத்திக்
கொள்வார்கள். (இவரை வெல்ல யாருமில்லை என்று பொருள்)
ஆனால், கார்கி மறுபடியும் கேள்வி கேட்டாள்.
கார்கி – வானுலகுக்கு கீழும், மேலும் (எல்லா இடங்களிலும்)
எல்லா காலங்களிலும் எல்லா வஸ்துக்களும் எதை ஆதாரமாக
உடையதோ, எது காரணமோ, அது என்ன?
யாஜ்ஞவல்க்யர் – ஆகாசம் (மூலப்ரக்ருதி)
கார்கி – இதற்கும் (ஆகாசத்திற்கும்) ஆதாரம் எது ?
யாஷ்ஞவல்க்யர் – அக்ஷரம். சிறிதுமல்ல, பெரிதுமல்ல,
நீண்டதுமல்ல, குறுகியதுமல்ல எந்த நிறமுமல்ல. எல்லா
இடத்திலுமிருப்பது. இதன் ஸங்கல்பத்தினாலே ஸுர்யன், சந்த்ரன்,
ஸ்வர்க்கம், நக்ஷத்ரங்கள், பூமி யாவும் தரிக்கப்பட்டு இருக்கின்றன.
இதற்கு மேம்பட்ட எதுவுமில்லை என்று பலவாறாக
எடுத்துரைத்தார்.
கார்கி என்பவள் ”இவரை ஜெயிக்க இயலாது எல்லோரும்
இவருக்கு நமஸ்காரம் செய்யுங்கள்” என்றார்.
பிறகும் விதக்தர் என்பவர் கேள்விகள் கேட்டார்.
யாஜ்ஞவல்க்யர் ”இவ்வளவு மஹரிஷிகள் இந்த ஸதஸ்ஸில்
கேள்விகள் கேட்டு என்னுடைய பதில்களால் திருப்தி
அடைந்தார்கள். நீர் வீண் ஆடம்பரத்திற்காக கேள்விகள்
கேட்கிறீர். நான் கேட்கும் கேள்விகளுக்கு முதலில் பதில்
சொல்லும்” என்று பலவாறாகக் கேட்க, எல்லாவற்றிற்கும்
விதக்தர் பதில் சொல்லிக்கொண்டே வந்தார்.
இந்தச் சமயத்தில்,
யாஜ்ஞவல்க்யர் முன்பு எட்டு புருஷர்களைப் பற்றிச் சொன்னேன்
அவர்களுக்கும் அவர்களின் ஆதாரம் முதலியவற்றிற்கும்
மேற்பட்டு அவற்றையெல்லாம் நியமித்து அடக்கும் ஓளபநிஷத
புருஷன்–உபநிஷத்துக்களிலே சொல்லப்படும் புருஷன் யார்?
நீர் அது யார் என்று சொல்லவில்லையெனில், உமது தலை
துண்டாகிக் கீழே விழும்” என்றார்.
விதக்தர் பதில் சொல்லத்தெரியாமல் விழித்தவுடன்
தலை துண்டாகிக் கீழே விழுந்தது.
அவருடைய சிஷ்யர்கள், அவருடைய அஸ்திகளை
மூட்டையாகக் கட்டி, அவர் வீட்டில் சேர்க்க, எடுத்துச் செல்லும்
போது, வழியில், திருடர்கள், இந்த மூட்டையில் பணம்
இருக்கிறது என்று எண்ணி அதைப் பிடுங்கிக் கொண்டு ஓடினர்
(ப்ரம்ம வித்திடம் அபசாரப்பட்டதால் இப்படிநேர்ந்தது என்பதை
உணர வேண்டும்).
யாஜ்ஞவல்க்யர், ஸதஸ்ஸில் உள்ளவர்களைப் பார்த்து,
இன்னும் யாராவது கேள்விகள் கேட்கலாம் என்றார்.
நடுநடுங்கிய அவர்கள் ஒன்றும் பேசவில்லை. ஸதஸ் கலைந்தது.
10(2) ஜநகர் – யாஜ்ஞவல்க்யர் – ஸம்வாதம்
பிறிதொரு சமயம் யாஜ்ஞவல்க்யர் ஜனக ராஜன் சபைக்கு
மறுபடியும் சென்றார். அரசன் வணங்கி, வரவேற்று, பசுக்கள்
வேண்டுமா அல்லது வேத அர்த்தங்களுக்கா என்றார்.
யாஜ்ஞவல்க்யர் இப்போது அரசனுக்கு உபதேசித்தார்.
வலது கண்ணிலே ”இந்த்தன்” என்கிற புருஷன் இருக்கிறான்
(இந்திரன் என்கிறதை மறைமுகமாக இப்படிச்சொல்லும் பழக்கம்
உண்டு) இடது கண்ணில் அவனுடைய பத்னி இருக்கிறாள்.
இவ்விருவருக்கும் ஹ்ருதயமே வாசஸ்தலம். அங்குள்ள மாம்ஸமே
அன்னம்.
ஹ்ருதயத்தில் பின்னலைப் போல உள்ள நாடிகள்
வஸ்த்ரம்.
ஹ்ருதயத்தினுள் பல ஆயிரமாகப் பிரிந்து, கேசத்தை
விட மெல்லிய நாடிகள் உள்ளன. அவற்றிற்கு ”ஹிதை” என்று
பெயர். அவற்றின் வழியாக, ஜீவன் வெளியே கிளம்புகிறான்.
ஹ்ருதயத்திலிருந்து உச்சந்தலை உள்ளவரை உள்ள
மார்க்கமானது (சுஷும்நா நாடி) ப்ராண, இந்த்ரியங்களில்
சிக்குண்ட ஜீவாத்மாவைக் காட்டிலும், பற்றற்றவனாக
அழிவற்றவனாக ஹ்ருதயத்திலுள்ள பரமாத்மா வேறுபட்டவன்.
இன்னொரு சமயம், இதே போன்ற ஒரு ஸம்வாதம் நடந்தது.
அரசன் கேட்க யாஜ்ஞவல்க்யர் பதில் சொல்ல மிக உன்னதமான
கருத்துக்கள் கிடைத்தன.
அரசன் – புருஷ னுக்கு எது ஜ்யோதிஸ் ?
யாஞவல்க்யர்- ஸுர்யன்தான் ஜ்யோதிஸ்
அரசன் – ஸுர்யன் அஸ்தமித்தால் ?
யாஜ்ஞவல்க்யர் – அப்போது சந்த்ரன்
அரசன் – இருவரும் இல்லாதபோது ?
யாஜ்ஞவல்க்யர் – அப்போது அக்னி (விளக்கு போன்றவை)
அரசன் – அதுவுமில்லாதபோது ?
யாஜ்ஞவல்க்யர் – வாக்கு, மையிருட்டிலும் பேசினால் பேச்சைக்
கொண்டு அவனை அறியலாம், அணுகலாம்
அரசன் – வாக்கும் இல்லாத போது ?
யாஜ்ஞவல்க்யர் – ஆத்மாவே ஜ்யோதிஸ்
அரசன் – ஆத்மாவாவது எது ?
யாஜ்ஞவல்க்யர் – ஹ்ருதயத்திலே ப்ராண வாயு முதலியன இருக்க
அறிவுக்கு ஆதாரமாக இருப்பது ஆத்மா. ஸ்வப்ன லோகத்தை
ஆத்மா சேரும்போது, துக்க ரூபமான இவ்வுலகைக் கடக்கிறது.
உடலோடு சேர்ந்திருக்கும்வரை பாபம் செய்கிறது.
உடலிலிருந்து விடுபட்டு விட்டால் பாபம் இல்லை. ஸ்வப்ன காலத்தில்,
அவற்றில் ஏற்பட்டதைக் கொண்டு தானே அவற்றை அறிகிறான்.
திரும்பவும் இவ்வுலகத்திற்கு வருகிறான். ஸ்வப்னத்தில் துக்கம்,
மகிழ்ச்சி, சோகம், இன்பம் இப்படி அனுபவிக்கிறான். எல்லாம்
ஸ்வப்னம் என்று பிற்பாடுதான் தெரிகிறது. ஸ்வப்ன காலத்திலே
ஜீவன் தனக்குத் தானே ஜ்யோதிஸ்ஸாக ஆகிறான்.
உறக்கத்தில்(ஸுஷுப்தி) பரமாத்மாவுடன் ஐக்கியமாகிறான். அப்போது
உற்றார், உறவினர், புண்யம், பாபம் , துக்கம் என்று எதனோடும்
இணைப்பு இருப்பதில்லை
. தைத்திரியோபநிஷத்தில் சொல்லியபடி,
மனுஷ்ய ஆநந்தம், பித்ருக்களின் ஆநந்தம், தேவர்களின்
ஆநந்தம், சதுர்முக (ப்ரம்மா) ஆநந்தம் என்று மேன்மேலும் உள்ள
ஆநந்தத்தை அடைகிறான். இப்போது எந்த இந்த்ரியமும் வேலை
செய்வதில்லை. மனஸ் ஓய்வில் இருக்கிறது.
10(3) – விழிப்பு, ஸ்வப்னம், உறக்கம், இறப்பு
விழிப்பு, ஸ்வப்னம், உறக்கம் என்ற நிலைகளுக்கு மேற்பட்ட
நிலை இறப்பு. அப்போது பரமாத்மாவினால் வேறு இடம்
கொண்டு போகப்படுகிறான்.
புண்ய, பாபங்களுக்கு ஏற்றவாறுவேறு சரீரம் எடுத்து அனுபவிக்கிறான்.
ஜ்ஞானம், கர்மாக்கள்,பூர்வ வாஸனை, இந்த மூன்றும்
இந்த ஜீவனைத் தொடர்கின்றன.
ஜ்ஞானமும், கருமங்களும் ஜீவனுக்கு அடுத்த பிறவியில்
அநுபவிக்க வேண்டிய விஷயங்களைச் சேர்த்து வைக்கின்றன.
இந்த விஷயங்களைக் கையாள பூர்வ வாசனை உதவுகிறது.
ப்ரஹ்மஞானம் உள்ளவன், ப்ரம்மாநுபவம் பெறுகிறான்.
புனர் ஜன்மம் இன்றி, தேவயானம் வழியாக ஸுர்ய மண்டலம்
புகுந்து மோக்ஷம் பெறுகிறான்.
பரமாத்மாவே,ப்ராணேந்த்ரியங்களுக்குச் சக்தி அளிப்பவன். அவன்
எங்குமிருப்பவன். மனஸ்ஸால் தான் அவனைப் பார்க்க இயலும்.
அந்தர்யாமியாய் ஹ்ருதயத்தில் இருக்கிறான். இவனை அறிய,
வேத அத்யயனம், யஜ்ஞம், தானம், தபஸ் முதலியன
செய்கின்றனர்.
யோகநிஷ்டையில் இழிந்து, இவனைக் காண
முயற்சிக்கின்றனர். இவனை அடைய ஸன்யாஸம்
மேற்கொள்கின்றனர். இந்த்ரியங்களை அடக்கி, தீயதைச்
செய்யாமல், காம்ய கர்மங்களைச் செய்யாமல், சீதோஷ்ண சுக
துக்கங்களைப் பொறுத்துக்கொண்டு, மனஸ்ஸை நன்கு
நிலைநிறுத்தி தனக்குள்ளே இருக்கும் இந்தப் பரமாத்மாவைப்
பார்க்கவேண்டும்.
இதுவே ”பரப்ரம்மம்”. இந்த பரப்ரம்மம் , இக பர சுகங்களையும்
எல்லாவற்றையும் அளிக்கும்.
பூர்ணத்தில் இருந்து பூர்ணம் உயர்ந்தது. பூர்ணத்தைச்
சார்ந்த பூர்ணத்தை அழித்து , பூர்ணம் தான் முடிவில் இருக்கிறது.
வேதத்தில் சொல்லியபடி, எல்லா உலகமும் உயிர்களும்
ப்ரஹ்மாவால் சிருஷ்டிக்கப் படுகின்றன. ஆதலால், வேதம்
எங்கும் நிறைந்திருக்கிறது. இதற்குக் காரணமான வேதம்,
கார்யமான ப்ரபஞ்சத்தைக் காட்டிலும் உயர்ந்தது. கார்யமாய்
காரணம் நிறைந்து உள்ளதற்கும், மேலான வ்யாஹ்ருதி ( பூ:, புவ:,
ஸு வ:)க்கு, லயஸ்தானமாய் எல்லாவற்றிற்குமே காரணமாக
இருப்பது ப்ரணவம்.
இந்த ப்ரணவத்தை ப்ரம்மமாக உபாஸிக்க வேண்டும்
(பூர்ணம் என்கிற மந்திரத்திற்குப் ப்ரம்மம் என்றும்
பொருள் உண்டு).
10(4) ப்ரஜைகள் மூன்று வகை
தேவர்கள் (தேவதைகள்), மனிதர்கள், அசுரர்கள். இவர்கள்
தங்களுடைய தகப்பனாரை அண்டி, உபதேசிக்குமாறு
வேண்டினர். தேவர்கள் வேண்டிய போது “த” என்று உபதேசித்து
தெரிந்து கொண்டீர்களா என்று தகப்பனார் கேட்டார்.
”தமம்”அதாவது ”இந்த்ரிய நிக்ரஹம்” வேண்டும் என்று புரிந்து
கொண்டோம் என்றனர்.
மனிதர்களிடம் ”த” என்பதைச் சொன்னபோது ”தானம்”
செய்யுங்கள் என்பதை உணர்ந்ததாக, அவர்கள் சொன்னார்கள்.
அசுரர்களிடம், அந்த எழுத்தைச் சொன்ன போது, தயை
புரியுங்கள் என்று உணர்ந்ததாகச் சொன்னார்கள்.
ப்ரம்மத்திலிருந்து பிறந்த ”ப்ரஜாபதியின்” புதல்வர்களான
தேவர்கள் ஸத்யத்தை உபாஸிக்கின்றனர். பரப்ரம்மமே ஸத்யம்.
இது (பரப்ரம்மம்) ஆதித்ய மண்டலத்திலும் உள்ளது.
கண்ணிலும் உள்ளது. இதற்கு பூ: , புவ:, ஸுவ: என்கிற
வ்யாஹ்ருதிகள்.
சாந்தோக்ய உபநிஷத்தில் சொல்லப்பட்ட சாண்டில்ய
வித்யை, மின்னலை ப்ரம்மமாக உபாஸிப்பது சொல்லப் படுகிறது
.
வாக்கை, ”பசு”வாக உபாஸிப்பது, மோக்ஷம் செல்பவன் தேவயான
மார்க்கத்தில், ஆத்யாத்மிக, ஆதிபௌதிக, ஆதிதைவிக
தாபங்களுக்கு இடமில்லாத ப்ரம்ம லோகம் சென்று
சந்தோஷிப்பது சொல்லப்படுகிறது .
அன்னத்தை ”வி” என்றும், ப்ராணனை ”ரம்” என்றும்
சேர்த்து ப்ரம்மமாக உபாஸிக்க வேண்டும் என்று
சொல்லப்படுகிறது.
ப்ராணனை, ருக்காகவும், யஜூஸ்ஸாகவும், ஸாமமாகவும்
உபாஸிப்பது சொல்லப்படுகிறது. வாக் எனப்படும் வேதத்தை
பசுவாக உபாஸிக்க வேண்டும். பசுவுக்கு நான்கு மடிகள்.
ஸ்வாஹா , வஷட், ஹந்த, ஸ்வதா.
தேவர்களுக்குக்கொடுக்கப்படும் ஹவிர் பாகங்கள் ஸ்வாஹா
அல்லது வஷட்.
மனுஷ்ய யஜ்ஞத்தில், ஹந்த என்று சொல்லி ஹவிஸ்ஸும்,
பித்ருக்களை உத்தேசித்துச் செய்யும்போது ஸ்வதா என்றும்
சொல்லப்படுகிறது.
பசு – வாக்கு.
காளை – ப்ராணன்.
கன்று – மனஸ்.
பால்-பகவானை துதிக்கும் ஸ்தோத்ரங்கள்.
10(5) – காயத்ரீ உபாஸனம்
காயத்ரீயின் முதல் பாதத்தை மூன்று உலகங்களாக
உபாஸிப்பவன் மூன்று உலகங்களில் எதையும் அடைவான்.
இரண்டாம் பாதத்தை மூன்று வேதங்களாக உபாஸிப்பவன்,
வேதத்தில் சொல்லப்பட்ட பலன்களை அடைவான்.
மூன்றாம் பாதத்தை, ப்ராண அபான, வ்யானங்களாக உபாஸித்தால்,
எல்லாப் ப்ராணிகளையும் வசமாக்கிக் கொள்ளலாம்.
நான்காம் பாதத்திற்கு “தர்சபதம்” என்று பெயர். இதைப் ப்ரம்மமாக
உபாஸித்தால், புகழ், பொருள் கிடைக்கும்.
ப்ராணன்களுக்கு,“கயம்” என்று பெயர்.
கயங்களைக் காப்பதாலே காயத்ரீ .
காயத்ரீ உபாஸனம் செய்பவன் இஷ்டப்பட்ட பலனை அடைவான்.
ப்ரம்ம உபாஸனம் செய்பவனுக்கு நான்கு மந்த்ரங்கள் –
ப்ரார்த்தனை செய்வதற்காக இங்கு சொல்லப்படுகிறது.
(இது,ஈசாவாஸ்ய உபநிஷத்திலும் உள்ளது).
10(6) மந்த்த கர்மா
ப்ராண வித்யை, பஞ்சாக்னி வித்யை, மந்த்த கர்ம – –மூன்றும்
சொல்லப்படுகின்றன (சாந்தோக்ய உபநிஷத்தைப் பார்க்க) .
மந்த்த கர்மாவில் நெய்யினால் ஹோமங்களைச் செய்த பிறகு,
”மந்த்த”என்கிற வஸ்துவை, ப்ராணனைப் புகழும் மந்த்ரத்தைச் சொல்லிக்
கொண்டே கையில் வைத்துக் கொண்டு, காயத்ரீயினாலும்,
இன்னும் சில மந்த்ரங்களாலும், விதிப்படி ஆசமனம் செய்து,
அக்னிக்கு மேற்கே கிழக்கில் தலை வைத்து இரவில் படுத்திருந்து,
உதயத்தில் ஸுர்யனுக்கு உபஸ்தான மந்த்ரங்களைச் சொல்ல
வேண்டும்.
இப்படியான மந்த்த த்ரவ்யத்தாலே உலர்ந்த கட்டையை நனைத்தால்
அது துளிர் விட்டு, கப்பும் களையுமாக வளரும்.
”மந்த்த த்ரவ்யம்” என்பது, நெல், யவம், எள், உளுந்து,
கோதுமை, ப்ரயங்கு, மஸுரம் கல்வம், கலகுலம்,இன்னொன்று
பெயர் தெரியவில்லை (பத்து தானியங்கள்)
இவற்றை எல்லாம் அரைத்து தயிர், தேன், நெய்இவற்றில்
ஊற வைக்க வேண்டும்.
ஹோமங்கள் நெய்யினாலே செய்யப்பட வேண்டும்.
பிள்ளை பெறுகிறவன், இந்த பிள்ளை ,தனக்குச் சிறந்த பலன்களை
மேலுலகில் அடையுமாறு செய்ய,இவன் எப்படி நடந்து கொள்ளவேண்டும்,
என்ன கார்யங்களைச்செய்யவேண்டும் என்று பல
விஷயங்கள் சொல்லப்படுகின்றன.
தீர்க்கமான ஆயுளைப் பிள்ளை பெறும்படியாகவும்,நன்கு படிக்கவும்,
பிரஸித்தியாக வேண்டுமென்றாலும் செய்ய வேண்டிய முறைகள்,இதில்
சொல்லப்படுகின்றன.
”வம்ஸ ப்ராம்மணம்” என்கிற பரம்பரை சொல்லப்படுகிறது.
பரப்ரம்மம், ப்ரஜாபதி என்கிற பரம்பரை ஒன்று.
ஆதித்யனிடமிருந்து வரும் பரம்பரை மற்றொன்று.
இரண்டும் ஒன்று சேர்ந்ததும் சொல்லப்படுகிறது.
யாஜ்ஞ்யவல்க்யர், ஸுர்யனிடம் ஸூக்ல யஜூஸ்
வேதத்தைப் பெற்றது சொல்லப்படுகிறது .
இதுவே ப்ருஹதாரண்யக உபநிஷத்தின் சாரம். (இத்துடன்
பத்து உபநிஷத்துக்களின் சாரம் சொல்லப்பட்டது).
இங்கு இன்னும் சில முக்ய உபநிஷத்துக்களின் சாரத்தையும்
சொல்கிறோம்.
11 – ச்வேதாச்வதரோபநிஷத்
108 உபநிஷத்துக்களில் 11வது உபநிஷத்து.
ஆறு அத்யாயங்கள். சித், அசித், ஈச்வரன் என்று தத்துவங்களை
மூன்றாக வகுத்ததற்கு இது ஆதாரம். பரமாத்மாவின் ஸ்வரூபம்,
சக்ர ரூபமாகச் சொல்லப்படுகிறது.
பிறப்பது, வாழ்வது, இறப்பது முதலிய எல்லாவற்றிற்கும்
காரணமானது எது?
காலமா?
இயற்கையா?
முன்வினையா?
பஞ்சபூதங்களா?
மூலப்ரக்ருதியா?
ஜீவனா?—இல்லை,
இவை எல்லாம் சேர்ந்ததா?
சேர்ந்ததாக இருந்தால், சேர்த்தது யார்?
என்று விவாதித்து “பரமாத்மா” என்கிற முடிவுக்கு வந்தது.
ஸம்ஸாரத்திலே உழல்கின்ற ஜீவர்.
எல்லாம் அறிந்த ஈச்வரன்.
போகத்தை அளிக்கும் அசித் (அசேதநம்).
ஈச்வரன், குணங்கள் நிறைந்த குறையில்லாத ஜோதி.
இவன், சேதனன், அசேதனங்களுக்கு அந்தர்யாமியாக இருக்கிறான்.
இதுதான் ப்ரம்மம்.
இதற்கு மேல் ஒன்றுமில்லை.
இது அரணிக்கட்டையில் உள்ள அக்னியைப் போன்றது.
எளிதில் அறிய இயலாது.
ஜீவாத்மா கீழ் அரணிக் கட்டை.
ப்ரணவம் மேல் அரணி.
கடைதல் என்பது த்யானம் செய்தல்.
இப்படி ஜீவாத்மாவுக்குள் பரமாத்மா மறைந்திருப்பதைத்
த்யானம் செய்து,அறிந்து உபாஸிக்க வேண்டும்.
த்யானம் செய்பவருக்கு,கர்மானுஷ்டானம் முக்கியம்.
விஷ்வக்ஸேனர், ஆசார்யன் இவர்களின் அநுக்ரஹத்தைப் பெற வேண்டும்
. பகவானை ஸ்தோத்தரித்து, அவன் அருளாலே, அவனிடம் மனதைப் பதிய
வைக்கவேண்டும்.
தலை, கழுத்து, மார்பு இவற்றை நன்கு நிமிர்த்தி, சுத்தமான
இடத்தில் தகுந்த ஆஸனத்தில் அமர்ந்து புலன்களை அடக்கி ,
ப்ராணாயாமங்களைச் செய்து, மனஸ்ஸை பரப்ரம்மத்திடம் நிறுத்த
வேண்டும்.
அக்ஷரங்கள் யாவும் அகரத்திலிருந்து உண்டாகின்றன.
அகரத்தின் பொருளான பரமாத்மாவிடமிருந்து எல்லா
உலகங்களும் உண்டாகின்றன.
அவன் அனைத்துக்கும் அந்தராத்மா.
அவன் மாயன். மாயை ”மூலப்ரக்ருதி”.
அவனுடைய அம்சங்களே ஜீவாத்மாக்கள். இவனைச் சரணம்
அடைய வேண்டும்.
ஜ்ஞானம், கர்மம் இரண்டாலும் அவனை ஆராதிக்க வேண்டும்.
இந்த ஜீவாத்மா ஆணல்ல, பெண்ணல்ல,அலியுமல்ல.
எந்த உடலை, கர்ம வினையால் பெறுகிறதோ,
அதன் அடிப்படையில் ஜென்மாக்களில் இந்த ஜீவன்
அழைக்கப்படும். இவற்றையெல்லாம் தெளிந்து, பரமாத்மாவை
ஆராதிப்பவர் அவன் திருவடியை அடைவர்.
பரமாத்மா ஜகத்காரணன். பந்த பாசங்களிடமிருந்து
விடுபட்டு, அவனையே கதி என்று நினைப்பவருக்கு மோக்ஷம்
உண்டு.
பரமாத்மா – ஆறு விதமான – எட்டுகளை உடையவன்.
(1) அஷ்டமாசித்தி
(2) எட்டு திக்குகள்
(3) எட்டு திக்பாலகர்கள்
(4) எட்டு ப்ரக்ருதிகள் (பூமி, ஜலம், ஆகாசம், நெருப்பு, வாயு,
மனஸ், புத்தி, அஹங்காரம்)
(5) எட்டு தேவதைகள் (ப்ரஹ்மா, ப்ரஜாபதி போன்றவர்கள்)
(6) எட்டு வஸுக்கள்
(7) எட்டு திருக்கல்யாண குணங்கள் (இந்த ஏழில் ஏதேனும்
ஆறு)
மூன்று மார்க்கங்களை உடையவன்.
(1) மோக்ஷத்திற்குச் செல்லும் தேவயாநம்
(2) கர்மலோகத்திற்குச் செல்லும் பித்ருயாநம்
(3) க்ஷூத்ர ஜந்துக்களுக்கான மார்க்கம்
ச்வேதாச்வதரர், தன் தபோபலத்தாலும், தெய்வ
அநுக்ரஹத்தாலும், ப்ரம்மத்தை அறிந்து பலருக்கு இப்படி
உபதேசித்தார்.
12 -அதர்வசிர உபநிஷத்து
தேவதைகள், ஸ்வர்க்கத்திற்குச் சென்று, ருத்ரனைப்
பார்த்து, ”நீர் யார்?” என்று கேட்க,
அவர், ”நான் ஒருவனே முதலில் இருந்தேன்:
இப்போதும் இருக்கிறேன். இனிமேலும்
இருக்கப் போகிறேன் என்னைத் தவிர வேறொன்றும் இல்லை”
என்றார்.
தேவதைகள், பகவான் சொல்ல வேண்டியதை இவர்
சொல்கிறாரே என்று நினைத்தனர்.
ருத்ரன், ”தேவதைகளே! நீங்கள் நினைத்த அந்த பகவான்
சூக்ஷ்மத்திற்கும் சூக்ஷ்மமானவன். எங்கும் பரந்து உள் புகுந்து
இருப்பவன். எனக்கும் அந்தர்யாமி. இவ்வாறே எனக்குள்
புகுந்திருப்பதால், நான் என்றேன்” என்று சொன்னார்.
ருத்ரன், பகவானின் பக்தன். தேவதைகள் இவ்வாறு
ருத்ரனைத் துதித்தனர்.
ப்ரணவம், அதற்கு விளக்கம்-இது ஒரு
உபாஸனா மார்க்கம் என்று சொல்லப்பட்டது.
இந்த்ரன், நான்முகன், ஆதித்யன், பசுபதி, யாவருக்கும்
பகவான் அந்தர்யாமி . இது ஒருவகை உபாஸனம்.
13 – அதர்வ சிகோபநிஷத்து
பைப்பலாதர் மற்றும் பல மஹரிஷிகள், ”அதர்வா”
என்பவரிடம் சென்று ”த்யானத்திற்கு மந்த்ரம் எது?
த்யானமானது எது?
த்யானம் செய்பவன் யார்?
த்யானம் செய்யப்படும் தத்துவம் என்ன?” என்று கேட்டனர்.
அதர்வா பதில் சொன்னார்.
”த்யானத்திற்கு மந்த்ரம் ப்ரணவம். அது நான்கு பாதம்
உள்ளதாய் ப்ரம்மமாகும். அகார,உகார, மகாரங்கள்
அவற்றின் மேல் அரை மாத்திரை – இதுவே வேதங்கள்.
இதுவே லோகங்கள்என்றும் மற்றும் பலவிதமாகவும் , இது
புகழப்படுகிறது .
இந்தப் ப்ரணவம் ஹ்ரஸ்வம், தீர்க்கம், ப்லுதம்,
எனவும் பிரிக்கப்படும்.
இந்த நான்கு மாத்திரைகளை மனிதனுக்கு
உள்ள விழிப்பு, ஸ்வப்னம், உறக்கம், மோக்ஷம் என்கிற நான்கு
தசைகளாகச் சொல்வர்.
இந்தப் ப்ரணவமே த்யானத்திற்குச் சாதனம்.
த்யானத்தை விஷ்ணுவாகப் பாவிக்க வேண்டும்.
த்யானத்திற்கு அதிஷ்டான தேவதை விஷ்ணு .
த்யானம் செய்பவனை ருத்ரனாகப் பாவிக்க வேண்டும்.
ஸர்வ ஐச்வர்யம் உள்ள எல்லாவற்றிற்கும் காரணனான
முன்பு அரை மாத்திரையில் தேவதையாகச் சொல்லப்பட்ட
பரம புருஷனே எல்லோருக்கும் சுகம் அளிப்பவன்.
அவனே உபாஸிக்கப்படவேண்டியவன்.
ஓம்-உபாஸனா மந்த்ரம். இதில் பரமாத்மா என்கிற எண்ணம்
வேண்டும்.
ஓம் – இதற்கு நான்கு பாதங்கள்- அகாரம், உகாரம், மகாரம், நாதம்.
அகாரம் – பாஸ்வதீ என்றும் பெயர்.
ப்ருத்வி லோகம்;சிவப்பு, மஞ்சள் நிறம்;
ருக் வேதம்; ப்ரஹ்மா
தேவதை; அஷ்டவஸுக்கள்;
காயத்ரீ சந்தஸ்;
கார்ஹபத் அக்னி; என்று த்யானித்தல்.அவச்யம்
உகாரம் – வித்யுமதீ என்றும் பெயர்.
அந்தரிக்ஷ லோகம்;
யஜூர்வேதம்;
கருப்பு நிறம்;
விஷ்ணு தேவதை;
ஏகாதச ருத்ரர்கள்;
த்ருஷ்டுப்சந்தஸ்;
தக்ஷிணாக்னீ;
என்று த்யானிக்க வேண்டும்.
மகாரம் – ”சுபாசுபா” என்றும் பெயர்.
ஸாம வேதம்;
வெளுப்பு நிறம்;
ருத்ரன் தேவதை;
பன்னிரண்டு ஆதித்யர்கள்;
ஜகதீசந்தஸ்;
ஆஹவநீயாக்னி; என்று த்யானிக்க வேண்டும்.
நாதம் – ”வித்யுமதி” என்றும் பெயர்.
அதர்வ வேதம். அர்த்தமாத்திரை;
ஸோம லோகம்;
எல்லா நிறங்களும்;
மருத்தேவதைகள்;
விராட் சந்தஸ்;
ஏகர்ஷி என்கிற அக்னி; என்று
த்யானிக்க வேண்டும்.
14 – கௌஷீதகி உபநிஷத்து
இதில் பர்யங்க வித்யை, ப்ரதர்தந வித்யை, பாலகி வித்யை
சொல்லப்படுகிறது. இவை யாவும் வித்யைகளில்
சொல்லப்பட்டுள்ளது.
15 – மந்த்ரிகோபநிஷத்து
ஸத்வ, ரஜஸ், தமோ குணங்களால் மூல ப்ரக்ருதியானது,
பரப்ரம்ம ஸ்வரூபத்தை மறைக்கிறது.
ரஜஸ், தமோ, குணம் ஒழிந்து ஸத்வ குணம் மேலோங்கியவர்களின்
ஹ்ருதயத்திலே அந்தர்யாமியாக ப்ரம்மத்தை தர்சிப்பார்கள்.
உலகில் ப்ரம்மத்தைச் சிலர் 26வது தத்துவமாயும்,
27வதாகவும், 24-ஆகவும், இன்னும் எவ்வெவ்வாறோ
பார்க்கிறார்கள். எல்லாம் அவனிடமிருந்து பிறந்து அவனிடமே
மறைகின்றன. இந்த ப்ரம்மத்தை அறிந்து உபாஸிப்பவர் அவனிடம்
சேர்ந்து விளங்குவர்.
16 – ஸூபாலோபநிஷத்து
16 அத்யாயங்கள் உடையது. நாராயணனே பரதத்துவம்
என்பதைச் சொல்கிறது. ”கோராங்கர்” என்பவர் ரைக்வருக்குச்
சொன்னது இது.
சேதனங்கள், அசேதனங்கள், சேதனா சேதனங்கள்
இவைகளுக்கு கார்யமாக இல்லாத ஒன்றிலிருந்து ”தமஸ்”
தோன்றியது.
தமஸ்ஸிலிருந்து பஞ்ச பூதங்களுக்குக் காரணமான
தாமஸ அஹங்காரம்,
இதிலிருந்து ஆகாசம்,
இதிலிருந்து வாயு,
வாயுவிலிருந்து அக்னி,
இதிலிருந்து ஜலம்,
ஜலத்திலிருந்து மண்
இப்படியாகத் தோன்றி இதெல்லாம் ப்ரம்மாண்டமாக ஆயிற்று.
கொஞ்சகாலத்திற்குப் பிறகு, இந்த ப்ரம்மாண்டம்
பிளக்கப்பட்டு, மேல் பாகம் – ஸ்வர்க்கம், கீழ் பாகம் பூமியாகவும்
ஆயிற்று. நடுவில் ப்ரம்மாவுக்கு அந்தர்யாமியான மஹா புருஷன்.
அவன் ப்ராணிகளுக்கு ம்ருத்யுவைப் படைத்தான். அவன்தான்
ருத்ரன். (கண்ட பரசு என்றும்பெயர்). அந்த ம்ருத்யு
ப்ரம்மாவிடத்தில் புகுந்து மறைந்தான்.
ப்ரஹ்மா, மானஸ புத்ரர்களாக ஏழு பேரைப் படைத்தான்.
அவர்கள் புத்ரர்களைப் படைத்தனர் (ப்ரஜாபதி எனப்படுபவர்கள்).
முகத்திலிருந்து ப்ராம்மணனும், கைகளிலிருந்து க்ஷத்திரியர்களும்,
தொடையிலிருந்து வைச்யர்களும், கால்களிலிருந்து ஸுத்ரர்களும்
உண்டானார்கள். மனஸ்ஸிலிருந்து சந்த்ரனும், கண்ணிலிருந்து
ஸுர்யனும் காதிலிருந்து காற்றும், ப்ராண வாயுவும்,
ஹ்ருதயத்திலிருந்து மற்ற எல்லாமும் உண்டாயிற்று.
நெற்றியிலிருந்து கோபத்தினால் ருத்ரன் உண்டானார்.
எல்லா உலகங்களையும் தனதாக்கிக் கொண்ட ஹிரண்யகர்ப்பன்,
ஸ்த்ரீ , புருஷன் இரு உருவமாகப்பிரிந்து, தேவ – ரிஷி – யக்ஷ –
ராக்ஷஸ – கந்தர்வ ஜாதிகளையும், மிருகங்களையும் மற்றப்
பிராணிகளையும் ச்ருஷ்டித்தான்.
ப்ரளய காலத்தில் அவனே அக்னியாகி எல்லாவற்றையும்
எரிக்கிறான். அப்போது பூமி, ஜலத்திலும், ஜலம், நெருப்பிலும்,
நெருப்பு, காற்றிலும், காற்று, ஆகாசத்திலும் லயிக்கின்றன.
ஆகாசம், இந்த்ரியங்களோடும், இந்த்ரியங்கள், தன்-
மாத்ரைகளோடும், தன்மாத்ரைகள், அஹங்காரத்திலும்,
அஹங்காரம், மஹத்திலும், மஹத், அவ்யக்தத்திலும், அவ்யக்தம்,
அக்ஷரத்திலும், அக்ஷரம், தமஸ்ஸிலும் லயிக்கின்றன. தமஸ்
பகவானுடன் ஒன்றி மறைகிறது.
இப்படிப்பட்ட பகவானை அடைய பலனில் பற்றில்லாமல்,
ஸத்யம், கொடை, தவம், ப்ரம்மச்சர்யம், வைராக்யம், யஜ்ஞம்,
என்கிற ஆறு அங்கங்களைக் கொண்டு உபாஸிக்க வேண்டும்.
ஹ்ருதயத்தின் நடுவே, மாம்ஸ பிண்டம் ஒன்று உள்ளது.
(புரிதத்து) . அதில் தாமரைப் பூ போல ஓர் அவயவம் உள்ளது.
அங்கே நாடிகளின் வாயாக பத்து த்வாரங்கள் உள்ளன.
அவற்றில் ப்ராண, அபான முதலிய வாயுக்கள் உலவுகின்றன.
யோகி, அந்தந்த வாயுவின் ஸகாயத்தால் எல்லா
லோகங்களையும் யக்ஷ , ராக்ஷஸ, கந்தர்வர்களையும் மற்ற
எல்லாவற்றையும் பார்க்கிறான்.
முக்யமான இந்த பத்து நாடிகள் ஒவ்வொன்றுக்கும் 72,000
சிறிய நரம்புகள் உள்ளன. ஜீவாத்மா இந்த நாடிகளில் இருக்கிறான்
(விழித்திருக்கும்போது).
ஸ்வப்ன தசையில், ஸ்வப்னம் காண்பது,
உறக்கத்தில் உடலைக் காப்பது,
ரத்தத்தை எல்லா நாடிகளிலும் பரப்புவது,
ஹிதை எனப்படும் நாடிகளோடு சேர்ந்த ”புரிதத்து”என்கிற
ஹ்ருதயாகாசத்தில் போய் உறங்குவது எல்லாமே இதன்
செயல்.
கண், காது, மூக்கு, நாக்கு, த்வக் (தோலில் எங்கும்
உள்ளது) மனஸ், புத்தி, அஹங்காரம், சித்தம், வாக்கு, கை, கால்,
மலேயந்திரியம், மூத்திரேந்திரியம்-ஆக 14 இந்த்ரியங்கள்.
இவைகளுக்குத் தனித்தனியாக உள்ள விஷயம் – இவற்றுக்கான
தேவதை-இப்படி 14 உபாஸனைகள்.
நாடி, ப்ராணன், அதனால்உண்டாகும் அறிவு
அப்போது ஏற்படும் ஆநந்தம், ஹ்ருதயாகாசம்
ஆகிய 8 இடங்களில் பரந்து உள்ளவனாக-பகவானை உபாஸிக்க
வேண்டும்.
எல்லாவற்றையும் நிர்வஹிப்பவன். கட்டளையிடுகிறவன்.
எல்லா ஜீவாத்மாக்களுக்கும் ஆத்மா.
ப்ராணனுக்கும் ஆத்மா.
அறிவுக்கு எட்டாதவன்.
பலபடியாக வருணிக்கப்படும் பரமாத்மா
ஸ்ரீமன்நாராயணன். ஆதித்யர்கள், ருத்ரர்கள் அவனே.
காரணமும் அவனே. அவனுக்கு எல்லாப் பூமிகளும் உடல்.
பரமபதத்தில் எழுந்தருளியிருப்பவன்.
எல்லாம் உடலாய், பகவான்எல்லாவற்றிற்கும் அந்தர்யாமியாய் –
ஆத்மாவாய் இருக்கும் இந்தவித்யையை உபதேசமாகப் பெற்றார்.
இது வேத ரஹஸ்யம்.
உடம்பில் உள்ள நாடிகளில் நான்கு நாடிகள்
முக்கியமானவை. ரமை, அரமை, இச்சை, அபுநர்பவை –
புண்யலோகம், பாப லோகம், நினைத்த இடம், மோக்ஷ ஸ்தானம்,
என்கிற இடங்களுக்கு இவை முறையே வாயில்கள்.
நான்காம் நாடி வழியாகப் புறப்பட்டு, ஹ்ருதயகோசம்,
தலைக்கபாலம் இவற்றைப் பிளந்து கொண்டு
, ப்ருத்வி முதல் எல்லா தத்துவங்களையும் கடந்து
ஜீவன் மேலே செல்கிறான்.
இப்படிப்பட்ட வித்யையை புத்ரன், சிஷ்யன் தவிர வேறு யாருக்கும்
உபதேசிக்கலாகாது.
17 – அக்னி ரஹஸ்யம்
சுக்ல யஜூர் வேதத்தில், சதபத ப்ராம்மணத்தில் இது ஒரு
பாகம். இது உபநிஷத்து அல்ல.
யாகங்கள், ஹோமங்கள் செய்பவர் வைதீகமான அக்னியை
”ஆதானம்” என்பதை அனுஷ்டித்து ஸம்பாதிக்கிறான்.
இவன் ”ஆயிதாக்னி” எனப்படுகிறான்.
ஸோம யாகம் செய்யும்போது கருடன் முதலான உருவில்
இடம், நிர்மாணிக்கப்பட்டு,ஆஹவநியாக்னி வைக்கப்படுகிறது.
புருஷனுடைய ஆயுட்காலம் 36,000 நாட்கள்.
ஒவ்வொரு நாளிலும் செய்யும் கடமைகளை,
யாகத்துக்கு வேண்டிய அங்கங்களாக பாவித்து க்ரது (யாகம்)
செய்ய வேண்டும். (ஸ்தோத்ரங்கள், பூஜை உட்பட
ஒவ்வொருவரும் செய்யும் கடமைகள்).
இது” வித்யாமயக்ரது” எனப்படும்.
(வைச்வாநர வித்யை – சாண்டில்ய வித்யை தனியே
சொல்லப்பட்டுள்ளது)
18- மஹோபநிஷத்
நாராயணன் ஒருவன்தான் ச்ருஷ்டிக்கு முன்பு இருந்தான்.
ப்ரம்மன், ருத்ரன், ஜலம், அக்னி, ஸோமன், ஸ்வர்க்கம்,
பூமி,நக்ஷத்ரம், ஸுர்யன், சந்த்ரன் முதலிய எதுவும் இல்லை,
தனியாக இருப்பதில் த்ருப்தி இல்லாத நாராயணன்
த்யானம் செய்ய 14 பிள்ளைகள். (10 இந்த்ரியங்கள், மனஸ், அஹங்காரம்,
ப்ராணன், ஆத்மா (உடல்).
புத்தி 15வது—— இப்படியாகப் பிறந்தன.
பிறகு 5 பூதங்கள், 5 தன்மாத்ரைகள்,, 25வது தத்துவமாக ஜீவன்
பிறந்தன.
பரமாத்மா எல்லாவற்றையும் ஒன்றாக்கி ஜீவனை அதில்
புகுத்தி ஸ்ருஷ்டி செய்தான்.
இப்படி எல்லா ஜீவ ஸ்ருஷ்டிக்கும் காரணம் நாராயணன்.
நெற்றியிலிருந்து ருத்ரன், இவனிடம் சத்யம், ப்ரம்மச்சர்யம்,
வேதம் மற்றும் பல செல்வங்கள் சேர்ந்தன.
ஆகவே அவன் ஈசானன், மஹா தேவன் எனப்பட்டான்.
அவன் நாராயணனை தியானம் செய்ய நெற்றியில்வியர்வை
உண்டாயிற்று.
அது எங்கும் பரவி நீராக ஆயிற்று.
அதில் ப்ரம்மாண்டம் உண்டாயிற்று. ப்ரம்மன் அங்கு தோன்றினான்.
பிறகு அந்தந்த லோகங்கள், தேவதைகள் பிறந்தன.
இதற்கெல்லாம் காரணம் நாராயணன். அவனை ஆச்ரயித்தே
எல்லா உலகமும் உயிர்களும் உள்ளன. தாமரை மொட்டுபோன்ற
ஹ்ருதயத்தில் அக்னி ஜ்வாலை உள்ளது. அதனிடையில்
பரமாத்மா இருக்கிறான். ப்ரம்மன், சிவன், இந்த்ரன்
எல்லோருடைய ஹ்ருதயத்திலும் இருக்கிறான். இதற்கு மேல்
ச்லோக ரூபமாக இந்த உபநிஷத் உள்ளது.
உபநிஷத்துக்களில் 32 ப்ருஹ்ம வித்யைகள் விளக்கப்
படுகின்றன.
ப்ருஹ்ம ஸுத்ரம் இதைச் சொல்கிறது.
இப்படி,இதுவரை வேதங்கள், சாகைகள், வேதத்திற்கான அங்கங்கள்,
ஸ்ம்ருதி, புராணம், இதிஹாஸம், மந்த்ரபாகம், ப்ராம்மண பாகம்,
முக்ய உபநிஷத்துக்கள்போன்ற எல்லா விஷயங்களையும்
சுருக்கமாகத் தெரிவிக்கப்பட்டது.
வேதம்- பெரிய பர்வதம்.
வேதாந்தம் என்கிற உபநிஷத் —-மலைக்குள் இருக்கும் குகை.
இந்த குகைக்குள் நம்மைஅழைத்துப் போய்
நமக்கு வழிகாட்டுபவர்கள் ஆசார்யர்கள்.
வேதத்தை அத்யயனம் செய்தால் மட்டும் போதாது.
வேதாங்கங்களையும் கற்க வேண்டும் (வ்யாகரணம், சந்தஸ்,
நிருக்தம், கல்பம், சிக்ஷா , ஜோதிடம்).
மஹரிஷிகள், ருக் வேதத்தை புத்தியாகிற மத்தினால்
கடைந்தார்கள். எட்டு அக்ஷரம் கிடைத்தது.
இப்படியே யஜூர் வேதம் கடையப்பட்டது.
இதிலிருந்து எட்டு அக்ஷரம் கிடைத்தது.
இப்படியே ஸாமவேதம் கடையப்பட்டது.
இதிலிருந்து எட்டு அக்ஷரம் கிடைத்தது.
இந்த 24 அக்ஷரங்கள் தான் காயத்ரீ மந்த்ரம்.
இதையும் சுருக்கினார்கள்.
ருக் வேத 8 அக்ஷரங்களிலிருந்து ” பூ: ”
யஜூர் வேத 8 அக்ஷரங்களிலிருந்து ”புவ:” ,
ஸாமவேத 8 அக்ஷரங்களிலிருந்து ” ஸுவ:”
பூ:, புவ:, ஸுவ: —– வ்யாஹ்ருதி மந்த்ரம் என்று பெயர்.
இதை மேலும் சுருக்கினார்கள்.
ருக் —–.. பூ:.—— … என்பதிலிருந்து ”அ ”காரம்
யஜூர் ..—- புவ : —–… என்பதிலிருந்து” உ”காரம்
ஸாம —–.. ஸுவ:—- … என்பதிலிருந்து ”ம” காரம்
மூன்றையும் சேர்த்தார்கள்.
”ஓம்காரம்” பிறந்தது.
வேதத்திற்கு இதுவே சிரஸ்.
யஜ்ஞ ப்ரகரணத்தில்
உத்கீதத்தாலே (ஸாம வேதம்)தேவதைகளையும்,
பகவானையும் அழைக்க வேண்டும்.
ருக் வேதத்தாலே அப்படி வந்தவர்களை
ஸ்தோத்ரம் பண்ண வேண்டும்.
யஜூர் வேத மந்த்ரங்களால் இப்படி இப்படி
அழைக்கப்பட்டு வந்துள்ள தேவதைகளுக்கும் பகவானுக்கும்
ஹோமம் பண்ண வேண்டும்.
அதர்வ வேதமானது ப்ரஹ்மாவாக இருந்து
இந்த யஜ்ஞத்தை நடத்தி வைக்கிறது.
வேதமும், ஸ்ம்ருதிகளும் என் கட்டளைகள். அவற்றை மீறி
நடப்பவன் என் கட்டளையை மீறியவனாவான். அவன் என்னிடம்
பக்தி கொண்டாலும் ஏற்கப்படாது என்று ஸ்ரீ விஷ்ணு தர்மத்தில்
பகவானே அருளியிருக்கிறார்.
வேதோபாஸனா – ஏன் ?
“வேதோபஸனா” என்கிற தலைப்பில் சொல்லப்பட்ட
விஷயங்கள்-எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்
என்பதற்காகவும், நமது கலாச்சாரத்தின் அரிய பொக்கிஷம்
பண்டித நடைப்பாஷைகளால் புரிந்து கொள்ள முடியாமல்
ஒதுக்கி விடக் கூடாது என்பதற்காகவும், வரும் தலைமுறைகள்
(ஏன் இப்போதைய தலைமுறையும் சேர்த்து) வேதங்களை
அப்யஸிக்க வேண்டும்; அதில் ஈடுபாடு கொள்ள வேண்டும்; எந்த
துறையில் பணியாற்றினாலும் வேத அத்யாயியாகவும் திகழ
வேண்டும் என்பதற்காகவும், மிகவும் சுருக்கமாகத்
தரப்பட்டுள்ளன.
இந்த வேதோபாஸனாவை உபாஸனம் செய்யும்
ஆஸ்திகர்கள் முதலில் தன் வேதத்தின் ஸ்வசாகை,
பஞ்சஸுக்தங்கள், தைத்திரீயம், இவற்றை அத்யயனம் செய்தல்
நல்லது.
இவற்றை அத்யயனம் செய்து விட்டீர்களானால், வேத
புருஷனின் ஆசீர்வாதம் நிச்சயம் கி;டைக்கும்.
பிறகு க்ரமேண வேத அத்யயனம் செய்ய உங்களுக்கே
ஆர்வம் வந்து விடும்.
வேதத்தை உபாஸிப்பது, பகவானை உபாஸிப்பதற்குச் சமம்.
ஸ்ரீ நாராயண உபநிஷத் மந்த்ரத்தைச் சொல்லி
வேதோபாஸனத்தை நிறைவு செய்கிறோம்.
ஓம் அத புருஷோ ஹவை நாராயணோ காமயத ப்ரஜாஸ்
ஸ்ருஜேயதி |
ஸ்ரீ நாராயணாத் ப்ராணோ ஜாயதே |
ஸ்ரீமனஸ்ஸர்வேந்த்ரியாணிச |
ஸ்ரீ கம்வாயுர் ஜ்யோதிராப: ப்ருதிவீ விச்வஸ்ய தாரிணீ |
ஸ்ரீ நாராயணாத் ப்ரஹ்மாஜாயதே |
ஸ்ரீ நாராயணாத் ருத்ரோ ஜாயதே |
ஸ்ரீ நாராயணாதிந்த்ரோ ஜாயதே |
ஸ்ரீ நாராயணாத் த்வாதாசா தித்யா ருத்ரா வஸவ: ஸர்வாணிச சந்தாகும்ஸி |
ஸ்ரீ நாராயணாதேவ ஸமுத்பத்யந்தே |
ஸ்ரீ நாராயணாத் ப்ரவர்த்தந்தே |
ஸ்ரீ நாராயணே ப்ரலீயந்தே |
ஸ்ரீ அத நித்யோ நாராயண: |
ஸ்ரீ ப்ரஹ்மாச நாராயண: |
ஸ்ரீ சிவஸ்ச நாராயண: |
ஸ்ரீ சந்ரஸ்ச்ச நாராயண: |
ஸ்ரீ காலஸ்ச்ச நாராயண: |
ஸ்ரீ ஊர்த்வம்ச நாராயண: |
ஸ்ரீ அதஸ்ச்ச நாராயண: |
ஸ்ரீ அந்தர்பஹிஸ்ச நாராயண: |
நாராயண ஏவேதகும் ஸர்வம் |
யத்பூதம் யச்சபவ்யம் |
நிஷ் களங்கோ நிர்விகலபோநிராஞ்ஜநோ நிராக்யாத:
ஸுத்தோதேவ ஏகோ நாராயண: |
நத்விதியோஸ்தி கஸ்சித் |
ய ஏவம் வேத
ஸவிஷ்ணுரேவபவதி ஸவிஷ்ணுரேவ பவதி
ஓமித்யக்ரே வ்யாஹ்ரேத்
நம இதி பஸ்சாத்
நாராயணாயேத்யுபரிஷ்டாத்
ஓமித்யோகாக்ஷரம்
நம இதி த்வே அக்ஷரே
ஸ்ரீ நாராயணாயேதி பஞ்சாக்ஷராணி
ஏதத்வை நாராயண-ஸ்யாஷ்டாக்ஷரம் பதம்
யோஹவை நாராயணஸ்யாஷ்டாக்ஷரம் பதமத்யேதி
அனபப்ருவ: ஸர்வமாயுரேதி
விந்ததே ப்ராஜாபத்யம் ராயஸ்போஷம் கௌபத்யம்
ததோம்ருதத்வமச்நுதே ததோம் ருதத்வ மச்னுத இதி
ய ஏவம் வேத
இத்யுபநிஷத்
ப்ரத்யகானந்தம் ப்ரம்ஹ புருஷம் ப்ரணவஸ்வரூபம்
அகார உகார மகார இதி
தானேகதா ஸதபவத்ததோமிதி
யமுக்த்வா முச்யதோ யோகீ ஜன்ம ஸம்ஸார பந்தனாத்
ஓம் நமோ நாராயணாயேதி மந்த்ரோபாஸக:
வைகுண்டலோக புவனம் கமிஷ்யதி
ததிதம் பரம் புண்டரீகம் விக்ஞாநகனம்
தஸ்மாத் ததிதாப மாத்ரம்
ப்ரம்ஹ்ண்யோ தேவகீ புத்ரோம் ப்ரம்ஹண்யோ மதுஸுதனோம்
ஸர்வபூதஸ் தமேகம் நாராயணம்
காரண ரூப மகாரம் பரம்ப்ரஹ்மோம்
ஏதத தர்வதிரோயோ தீயதே
ப்ராதரதீயானோ ராத்ரிக்ருதம் பாபம் நாசயதி
ஸாயமதீயானோ சிவஸ்க்ருதம் பாபம்நாசயதி
மாத்யந்தின மாதித்யாபிமுகோதீயான:
பஞ்சபாதக உபபாதகாத் ப்ரமுச்யதே
ஸர்வவேதபராயண புண்யம் லபதே
நாராயண ஸாயுஜ்யமவாப்னோதி
நாராயண ஸாயுஜ்யமவாப்னோதி
ய ஏவம் வேத
இத்யுபநிஷத்
ஹரி : ஓம்
————————————————————-
ஸமஸ்தபரிவாராய ஸ்ரீமதே நாராயணாய நம:
அநேக விஜ்ஞாபநம்
அடியேன், இளம்பிராயம் முதற்கொண்டே வேதபாராயணம்
நடக்கும் இடத்தில் அமர்ந்து பாராயணம் முடியும்வரை ச்ரவணம்
செய்து வந்ததால், வேதகோஷத்தால் ஈர்க்கப்பட்டேன்
ஆனால் காலம் செல்லச்செல்ல வேதபாராயணம்
அருகிவருகிறது. வேதாத்யாயிகள் குறைந்து வருகின்றனர்.
முக்யமாக, வைணவர்கள், இதில் அதிகமாக ஈடுபாடு
கொள்வதாகத்தெரியவில்லை.
இவர்கள் லௌகிக வேலைகளில் இருந்து ஓய்வு பெற்ற
பிறகு, மனம் ஆன்மீகத்தில் திரும்பும் போது, இவர்களுக்கு,
திவ்யப்ரபந்தம் சந்தை சொல்வதும், பிறகு பாராயணத்தில்
அன்வயிப்பதும் சுலபமாக இருக்கிறது. பஞ்ச ஸுக்தங்கள்
கூடத்தெரிவதில்லை.
வேதம் தமிழ்செய்த மாறன் சடகோபன் என்றும், வேதம்
அனைத்துக்கும் வித்தாகும் என்றும், தமிழில் உள்ள திவ்ய
ப்ரபந்தந்தங்களைக் கொண்டாடினாலும், இவைகளுக்கு எல்லாம்
மூலமான வேதங்களை மறப்பதோ ஒதுக்குவதோ ந்யாயமா?
வேதங்களின் அருமையும், அவற்றின் பெருமையும் உணர்ந்தால்,
எப்பாடுபட்டேனும் வேத அத்யயனம் செய்வதில் ஈடுபாடு வரும்
என்கிற ஆவலால், அடியேன் இதில் இழிந்தேன். ஸ்ரீ கோசங்கள்
பலவற்றைப் படித்தேன். பல வித்வான்களிடம், பல
விஷயங்களைத்தெரிந்து கொண்டேன்.
வேதோபாஸனாவிற்கு உதவிய நூல்கள் ஏராளம்.
முக்யமான நூல்களின் விவரம் :
(1) ஸ்ரீ சாரீரக மீமாம்ஸா பாஷ்யம் (வைகுண்ட வாஸி, புரிசை
நடாதூர் ஸ்ரீ பாஷ்ய ஸிம்ஹாஸனம்
ஸ்ரீஉ.வே.க்ருஷ்ணமாச்சார்யர் ஸ்வாமி அருளியது)
(2) ஸ்ரீமத் ரஹஸ்ய த்ரய ஸாரம் (ஸார விஸ்தரம்) வைகுண்ட
வாஸி உத்தமூர் அபிநவ தேசிக ஸ்ரீஉ.வே.வீரராகவாச்சார்யர் அருளியது)
(3) உபநிஷத் ஸாரம் (இதே ஸ்வாமி அருளியது)
(4) வடுவூர் ஸ்ரீ உ.வே.நாராயணன் இயற்றிப் பதிப்பித்த ருக்,யஜூர், ஸாம,
அதர்வண வேதங்களும் 10 உபநிஷதங்களும்( இவரது கடிதம் இணைக்கப்பட்டுள்ளது )
Inline image 1Inline image 1
5. ஸ்ரீ விஷ்ணு புராணம்
6. ஸ்ரீ மஹா பாரதம்
7. ஸ்ரீ அஹோபில மடம் 45ம் பட்டம் ஸ்ரீமதழகியசிங்கர் ஸப்ததி
மலர்
8. ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஸதாபிஷேக மலர்-1987
9. ஸ்ரீ ரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் விஜய யாத்ரா மலர்-1996
10. உபன்யாஸ சக்ரவர்த்தி ஸ்ரீ உ.வே.முக்கூர்
லக்ஷ்மிநரசிம்மாச்சார்யரின் “குறையொன}றுமில}லை”
புஸ்தகங்கள் மற்றும் பல
11.மஹரிஷிகள் சரிதம் (ஸ்ரீ உ.வே. நாவல் பாக்கம்
தேவநாதாசார்யர் – வைகுண}டவாஸி
12.வேத விஜ்ஞானம்
13.தி வேதாந்த ஸுத்ராஸ் (ஆங்கிலம்-1961);
14.ஸ்ரீ ராமாயண தத்வார்த்த தீபிகை
15.ஸ்ரீ பரவாக்கோட்டை ஆண்டவன் ஸதாபிஷேக மலர்
16ஸ்ரீ உத்தமூர் ஸ்வாமி சதமான மஹோத்ஸவ மலர்
17.உபநிஷத் ஸாரம் – ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன்
18.ஸ்ரீ ஸுதர்ஸந சதகம் – ஸ்ரீ கூர நாராயண ஜீயர்
19.ஸ்ரீ பௌண்டரீகபுர ஆஸ்ரம வெளியீடான
1. சதாபிஷேக ரத்னமாலா
2. ஸ்ரீ ரஹஸ்யத்ரயஸாரம்
3. சில்லறை ரஹஸ்யங்கள்
4. இராமபிரானைக் கற்போம்
20.அஹிர்புத்ந்ய ஸம்ஹிதை
இவற்றைத் தவிர
1. 45ம் பட்டம் ஸ்ரீமதழகிய சிங்கர் உபன்யாஸங்கள்
2. கருநிலம் ஸ்ரீ உ.வே. நரஸிம்ஹாசார்யர் உபன்யாஸங்கள்
கால க்ஷேபங்கள்
3. ஸ்ரீ உ.வே .ஸேவா ஸ்வாமி –சம்பாஷணைகள்
4. திருப்புட்குழி ஸ்ரீ உ.வே. நரஸிம்ஹதாதாசார்யர் சம்பாஷணைகள்
5. முக்கூர் ஸ்ரீ உ.வே.லக்ஷ்மிந்ருஸிம்ஹாசார்யரின் உபன்யாஸங்கள்
6. தூப்புல் ஸ்ரீ உ.வே. லக்ஷ்மிந்ருஸிம்ஹாசார்யரின் உபன்யாஸங்கள்
மற்றும் பல மஹா வித்வான்கள்
அவற்றின் தொகுப்பே இந்த வேதோபாஸனா.
ஸ்ரீமத் பரவாக்கோட்டை ஆண்டவன் (வைகுண்டவாஸி )10–7–2010 தேதியில்
அனுக்ரஹித்த ஸ்ரீமுகத்தின் நகல்
Inline image 1
ஸுபம்
ஸமஸ்த பரிவாராய ஸ்ரீமதே நாராயணாய நம:
ஸர்வம் ஸ்ரீ ஹயக்ரீவ ப்ரீயதாம்
அடியேன்,
உருப்பட்டூர் ஸெளந்தரராஜன்