Vivaaham–

Posted on Dec 20 2016 - 10:46am by srikainkaryasriadmin
|
Categorized as
2448

விவாஹம்
——————-

ப்ராம்மணனுக்கு, 40 ஸம்ஸ்காரங்கள், வேதங்களிலும், சாஸ்திரங்களிலும்
சொல்லப்பட்டிருக்கின்றன.
ஸம்ஸ்காரம் என்றால், சுத்தப்படுத்துதல்/தூய்மைப்படுத்துதல். பாத்திரங்களை எப்படி மண் முதலியவற்றால் தேய்த்து சுத்தப்படுத்துகிறோமோ, அப்படியே, ஜாதகர்மா , நாமகர்மா , உபநயனம், விவாஹம் போன்றவைகளில்.மந்த்ரபூர்வமாக சுத்தப்படுத்துதல்—ஸம்ஸ்காரம் ஆகும்.இது, 40 என்று எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
இவற்றில், விவாஹத்துக்குப் பிறகே, 26 ஸம்ஸ்காரங்கள் ,பத்நியின்
உதவியுடன், செய்யவேண்டும். இந்த 26 ஸம்ஸ்காரங்களைச் செய்வதற்கு யோக்யதையைக் கொடுப்பது, விவாஹம்.ஸ்த்ரீகளுக்கும் இந்த விவாஹமே மிக முக்ய ஸம்ஸ்காரம்.
ஒருவனுக்குப் பிறந்தவுடனேயே நான்கு கடன்கள் ஏற்படுகின்றன.
1.ரிஷிகளுக்கான கடன், வேத அத்யயனம் செய்வதாலும்
2.தேவர்களின் கடன் யஜ்ஞங்கள் செய்வதாலும்
3.பித்ருக்களின் கடன் நல்ல சந்ததிகளைப் பெறுவதாலும்
4.மனுஷ்யக் கடன் அதிதிகளை உபசரிப்பதாலும்
—-இப்படி, தர்மானுஷ்டானங்கள் செய்து ,கடனைத் தீர்க்க வேண்டும்.
இதற்கு ”க்ருஹஸ்தாஸ்ரமம் ” முக்கியம்.
40 ஸம்ஸ்காரங்கள் என்று சொன்னோமல்லவா !
உபநயனம் என்பதும் ஒரு சம்ஸ்காரம்.
உபநயனமானவுடன், ஆசார்யனை அணுகி, வேதங்களைக் கற்கவேண்டும்.
வேத அத்யயனம் செய்யவேண்டும்.
இது வேத வ்ரதம் எனப்படும்.
இது முடியும்போது,வ்ரத –உத்ஸர்ஜனம்
இதற்குப் பிறகு, ஸமாவர்த்தனம்
பிறகு ”விவாஹம்”
வேதவ்ரதம் வரை—பிறகு–வ்ரத –உத்ஸர்ஜனம்
எல்லோருக்கும் தெரிந்ததே —–
விவாஹத்துக்கு முன்பு—
ஸமாவர்த்தனம்
வேத அத்யயனம் முடிந்தபிறகு, ஆசார்ய ஸம்பாவனை செய்து,
விவாஹம் செய்துகொண்டு க்ருஹஸ்தன் ஆகப்போகிறானே
அதற்கு முந்தைய நிலை.
குருவின் ஆசிரமத்திலிருந்து திரும்பி வந்து , ஸ்நானம் செய்து
”ஸ்நாதகன் ” ஆகிறான்.

விவாஹம் என்பது, வி +வாஹம் என்று பிரிக்கப்பட்டு பொருள்
சொல்கிறார்கள். விசேஷமானது தங்குதல்/மேன்மையாக வஹித்தல் .
மனமொத்த பிள்ளையும் பெண்ணும் ஒன்று சேர்ந்து க்ருஹஸ்த
தர்மங்களை, ஸாஸ்த்ர ஸம்மதமாக வகிப்பது, விவாஹம்.
விவாஹ மந்த்ரங்களுக்கு ஆதாரம், பெரும்பாலும் ”ஆபஸ்தம்ப
க்ருஹ்ய ஸுத்ரம்”. இது ஆயிரக்கணக்கான வருஷங்களாக
வழக்கத்தில் இருக்கும் ஸம்ப்ரதாயம் .இவை,”ருக்-வேதத்தில்,
ஸோமன் –ஸூர்யா ”விவாஹத்தில் உள்ளதாகச் சொல்வர்.
விவாஹத்தில்,முதல் நாள்
”ஜானவாஸம்”
இன்னொரு நிச்சயதார்த்தம்
எண்ணெய்க்குடம் எடுப்பது
விவாஹ நாளில்
வது வ்ரதம்
அப்பக்கூடை எடுப்பது (வ்ரத பக்ஷணம் )
பிள்ளை வ்ரதம்
மாப்பிள்ளை அழைப்பு
மாலை மாற்றிக்கொள்ளுதல்
ஊஞ்சல்
பிடிசுற்றுதல்
நீர் சுற்றுதல்
பச்சைப்பிடி சுற்றுதல் (இதுவும் பிடி சுற்றுதலே )
பால் தொடுதல், ஹாரத்தி எடுத்தல்,
சூரைத் தேங்காய் –(த்ருஷ்டி) உடைத்தல்
விவாஹ மேடைக்கு அழைத்து வருதல்–
இப்படிப் பல சோபனங்கள்–வயது முதிர்ந்த சுமங்கலிப்
பெண்களால் , வழி வழியாகக் கொண்டாடப்படுகிறது.
மேற்சொன்னவைகளில் சில ,முன்னும் பின்னும் இருக்கலாம்.
ஆனால், நமது ஸம்ப்ரதாயத்தில் ,முக்யமானவை.
விவாஹ தினம்
புண்யாஹவாசனம்
விஸ்வக்ஷேனர் ஆராதனம்
பாலிகை ஆராதனம் (அங்குரார்ப்பணம் )
கங்கணம் கட்டுதல்
வரப்ரேஷணம்( கோத்ரம் மாற்றுவது )
(கோதானம், பூ தானம், சாளக்ராம தானம் )
கன்னிகாதானம்
பலதானம்
திருமாங்கல்ய தாரணம்
பாணிக்ரஹணம்
ஸப்தபதீ
ப்ரதான ஹோமம்
அம்மி மிதித்தல்
லாஜ ஹோமம் (பொறி இடுதல்)
ப்ரவேஸ்ய (விவாஹ )ஹோமங்கள் (ஜயாதி ஹோமம் உட்பட )
ஒளபாஸனம்
சேஷ ஹோமம்
த்ருவ –அருந்ததீ நக்ஷத்ர தர்ஸனம்
வாரணமாயிரம் –சீர்பாடல்
பாலிகை விஸர்ஜநம்
பலதானம்
பெருமாள், ஆழ்வார் ,ஆசார்ய ஸம்பாவனைகள்
ஆசீர்வாதங்கள்
ஹாரத்தி
சாயங்கால வேளையில்
நலங்கு
ரிசப்ஷன்
மற்றும் பல—-
மேற்சொன்னவைகளில், ப்ருஹஸ்பதியின் யோசனைப்படி
முன்னும் பின்னுமாக வரும்
ஆனால், இவைகளில் மிக முக்யமானவை
”ஸமாவர்த்தனம் ”
கந்யகா தானம்
திருமாங்கல்ய தாரணம்
பாணிக்ரஹணம்
ஸப்தபதீ
ப்ரதான ஹோமம்
அம்மி மிதிப்பது
லாஜஹோமம்
ப்ரவேஸ்ய ஹோமம்
த்ருவ –அருந்ததீ நக்ஷத்ர தர்ஸனம்
வாரணமாயிரம் –சீர்பாடல்
என்று எடுக்கப்பட்டுள்ளது
இவைகளைச் சுருக்கமாகத் தெரிந்துகொள்வோம்.
வதுவுக்கு, வ்ரதம்
கன்னிகையின் தகப்பனார், அந்தப் பெண் பிறந்தது முதல் செய்த /
செய்ய வேண்டிய ஜாதகர்மா, நாமகர்மா,அன்னப்ராசனம் ,
இவைகளை ப்ருஹஸ்பதி மூலமாக, மந்த்ர பூர்வமாக ,மறுபடியும்
செய்ய வேண்டும்.ஸ்ரீ பெரியாழ்வார் இதனை, ”குமரி மணம் ”என்று
சொல்லியிருக்கிறார்.
வரன்—வ்ரத –உத்ஸர்ஜனம்
உபநயனமானவுடன், ஆசார்யனை அணுகி, வேதங்களைக் கற்கவேண்டும்.வேத அத்யயனம் செய்யவேண்டும்.
இது வேத வ்ரதம் எனப்படும்.
இது முடியும்போது,வ்ரத –உத்ஸர்ஜனம்

ஸமாவர்த்தனம்

சர்வாங்க க்ஷவரம் செய்துகொண்டு, இடுப்பில் உள்ள தர்ப்பையால்
செய்த மேகலையை அவிழ்த்து, ஒரு ப்ரம்மசாரியிடம் கொடுத்து,
அதை, அத்திமரத்து அடியிலோ, தர்ப்பைப் புதரிலோ மறைக்கச் சொல்லி,ப்ரம்மசாரிக்கான தண்டம் (கழி ), மான்தோல் இவற்றை ஜலத்தில் சேர்த்து, அதன்பின் ,வாசனைப்பொடி பூசிக்கொண்டு, சுத்த ஜலத்தில் ஸ்நானம் செய்து,வஸ்திரங்களை கச்சம் வைத்து அணிந்து, இரண்டு பூணூல்களை அணிந்து, சந்தனம் புஷ்பம் அணிந்து, மை இட்டுக்கொண்டு, கண்ணாடி பார்த்து,காலுக்குச் செருப்பு, நிழலுக்கு குடை,கையில் தடி ,விசிறி, புஸ்தகம் சகிதமாக இப்படிப் பல ,சோபனமான கார்யங்களை செய்துகொண்டு, (இவ்வளவுக்கும் மந்த்ரங்கள் உள்ளன.)வீட்டுக்கு வருகிறான்.
அப்போது, சிறந்த பிராம்மணர்கள், பெண்ணின் தகப்பனாரிடம்,
”இந்த கோத்ரத்தில் பிறந்தவனும் ,இன்ன பெயர் உள்ளவனும்
வித்வானுமான இந்த வரனுக்கு, இந்தக் கோத்ரத்தில் பிறந்தவளும்
இந்தப் பெயர் உள்ளவளுமான உம்முடைய கன்னிகையை
தர்மகார்யங்கள் சிறப்பாக நடைபெற,விவாஹம் செய்யும்படி
ப்ரார்த்திக்கிறோம் ” என்று சொல்வர்.
பெண்ணின் தகப்பனார், ”சோபனம், சோபனம்,கொடுக்கிறேன் ”என்று
சம்மதம் தெரிவிப்பார்.ப்ராம்மணர்களுடன்கூட, பெண்ணின் தகப்பனார்,
பிள்ளையிடம் வருகிறார்.
பிள்ளையானவன், ”ஞானத்தைத் தேட காசிக்குப் போவதாகப்
பெரியோர்களிடம் சொல்லி அனுமதி வேண்டுகிறான்.
அப்போது வதுவின் தகப்பனார், தன்னுடைய கன்னிகையை விவாஹம்
செய்துகொடுப்பதாயும் ”க்ருஹஸ்தாஸ்மரத்தை ” ஏற்குமாறும்
வரனிடம் சொல்கிறார்.
இது தற்போது ”வ்ரதம் ” என்பதாக, விவாஹத்தன்று காலையில்
நடைபெறுகிறது.”காசி யாத்திரை” என்றும் சொல்லப்படுகிறது.
( அக்காலத்தில் ”ப்ரஹ்ம வித்யை”யைத் தெரிந்துகொள்ள,
காசிக்குச் சென்றாக வேண்டும் )

மாலை மாற்றல்
வரனு ம் , கன்னிகையும் ஒருவர் அணிந்திருக்கும் மாலையை
மற்றவர் மாற்றி அணிந்து கொள்வர்.இதற்கு, வரனின் மாமாவும் ,
வதுவின் மாமாவும் அவரவர் தோள்களில் சுமந்து தூக்கிக்கொண்டு
இந்த மாலை மாற்றல் நடைபெறும் (சிறு வயது விவாஹத்தில்
நடைபெற்றது )

ஊஞ்சல்
பிறகு, ஊஞ்சலில் இருவரையும் உட்காரவைத்து,சுமங்கலிகள்
ஊஞ்சல் பாட்டுக்கள் பாடுவர். பிறகு ,பிடி சுற்றுதல் என்றும், நீர்
சுற்றுதல் என்றும் சில விவாஹங்களில் நடைபெறுகிறது.
பிறகு ”பால் ” தொடுதல்.
பிறகு, மஞ்சள்,சிவப்பு, வெள்ளை நிறமுள்ள அன்னத்தை
கைப்பிடியாக எடுத்து,ஊஞ்சலில் உட்கார்ந்திருக்கும் பிள்ளைக்கும்
பெண்ணுக்கும் எதிரே சுற்றி, நான்கு திக்குகளிலும் வீசி எறிவர் .
(பச்சைப்பிடி சுற்றுதல் என்பர் )
இதற்கு 5 அல்லது 7 என்று சுமங்கலிகள் வருவர் .
சுமங்கலிகள் பலர், பச்சைப்பாலைத் தொட்டு, இருவரின் கால்களையும்
தொடுவர். மஞ்சளில் சுண்ணாம்பு கரைத்து,சிவந்த நீரால் ஹாரத்தி எடுப்பர்.கற்பூரம் ஏற்றிய சூரைத் தேங்காயை, த்ருஷ்டி சுற்றி உடைப்பார்கள்
இவைகள் யாவும், கண்த்ருஷ்டி(கண் எச்சில் )வதூவரர்களுக்கு ஏற்படாதிருக்க பழங்காலத்திலிருந்தே பெண்கள் செய்துவரும் வழக்கங்கள். இவை, அந்தந்த முன்னோர்கள் கடைப்பிடித்துவரும் வழக்கப்படியும் , ப்ருஹஸ்பதிகளாலும் மாறுபடலாம். இங்கு ,பொதுவாகச் சொல்லப்பட்டுள்ளது.பிறகு கெட்டி மேளம் முழங்க, பிள்ளையும் பெண்ணும் விவாஹ மேடைக்கு வந்து, ஸேவித்துவிட்டு அமர்வர் .
அங்குரார்ப்பணம்
அங்குரம் என்பது தானியங்களில் ஏற்படும் ”முளை ”
நெல்,உளுந்து, பாசிப்பயிறு, எள் , கடுகு,–இவை தானியங்கள்.
இவற்றை முன்கூட்டியே ஜலத்தில் நன்கு ஊறவைத்து, பிறகு
ஜலத்தை வடித்து, மூடிவைத்தல். முளை ,மளமளவென்று வளரும்.
இப்படிச் செழித்து வருவது/வளர்வது பிள்ளை, பெண் இருவரின்
இல்லற வாழ்க்கை சிறப்பாக அமைவதற்கான நுட்பமான உணர்த்துதல் .
மண்ணால் ஆன 5 பாலிகைகளை, (மண் பாத்ரம்) ஒரு பெரிய
தாம்பாளத்தில் ,திக்குக்கு ஒன்றாக ஒரு பாலிகையை வைத்து,
ஊறவைத்த தான்யங்களை மந்த்ரங்களை சொல்லி, பாலிகைகளில் சேர்த்து,ஆராதிப்பது அவசியம் .
நடுப்பாலிகை—ப்ரஹ்மா
கிழக்கே இருக்கும் பாலிகை—இந்த்ரன்
தெற்கே இருக்கும் பாலிகை—யமன்
மேற்கே இருக்கும் பாலிகை–வருணன்
‘வடக்கே இருக்கும் பாலிகை–ஸோமன்
பிள்ளை, மந்த்ர பூர்வமாக ப்ருஹஸ்பதி சொல்லி, முளைகளைச்
சேர்த்தவுடன், 3 அல்லது 5, அல்லது 7 சுமங்கலிகள், தான்ய முளைகளைச் சேர்த்து நீரையும் சேர்ப்பது தொன்றுதொட்டு வரும் வழக்கம்.
ப்ரதிஸர பந்தம்
அதாவது காப்புக்கட்டுதல் —எடுத்துக்கொண்ட ஸுபச்சடங்குகள்,
இடையூறு இல்லாமல் நடந்து முழுமையுற வேண்டும் என்று
பிரார்த்தித்து, ”கங்கணம் ”கட்டிக்கொள்வது.
ஒன்பதாக மடித்த பஞ்சுநூலை ,கலசத்தின் பக்கத்தில் வைத்துக்கொண்டு,”ப்ரதிஸரமந்த்ரங்களை” ஜபித்து,நூலை மஞ்சளால் தடவி, வாஸுகியைத் தியானித்து,வரனின் வலது மணிக்கட்டில் ப்ருஹஸ்பதி கட்டிவிடுவார்.பிறகு, பிள்ளை, வதுவின் இடது மணிக்கட்டில் இந்த நூலைக் கட்டுவான்.
விவாஹ கர்மாக்கள் முழுவதும் முடியும்வரை, இந்தக் கங்கணம்
கையில் இருக்கவேண்டும். இந்தக்கர்மாக்கள் முடிந்தபிறகுதான்,
ப்ருஹஸ்பதி மந்த்ரத்தைச் சொல்லி, கங்கணத்தை அவிழ்க்கச் சொல்வார்.
கந்யகா தானம்
கன்னிகையின் பிதா, கன்னிகாதானம் என்கிற மஹாதானத்தைச் செய்வதாக ஸங்கல்பம் செய்துகொண்டு, ( இந்தத் தானத்தால், தானும், முன் பத்துத் தலைமுறையும், பின் பத்துத் தலைமுறையும் –ஆக 21 தலைமுறை, ப்ரஹ்மலோகத்தை அடையவேண்டுமென்று சங்கல்பம் )
மாப்பிள்ளையை மஹாவிஷ்ணுவாகப் பாவித்து,ஆசனம், பாத்யம் (கால் அலம்புதல்) அர்க்யம், மதுபர்கம், கோதானம் ,பூதானம் ,சாளக்ராம தானம், இவற்றைக்கொடுத்து, கன்னிகாதானம் . பித்ருக்கள்நற்கதி
அடையவும் ப்ரஹ்மலோகத்தை அடையவும் , சர்வாபரண பூஷிதையான இந்தக் கன்னிகையைத் தானம் செய்கிறேன் என்று மந்திரபூர்வமாகச் சொல்வார்.
மாப்பிள்ளை, பெண்ணின் எதிரே நின்றுகொண்டு, கட்டை விரல் நடு விரல் இரண்டாலும் தர்ப்பத்தைப்பிடித்து,ப்ருஹஸ்பதி சொல்லும் மந்த்ரங்களை சொல்லி பெண்ணிடம் உள்ள தோஷங்களைத்துடைப்பதுபோல் ,அவளின் புருவத்திலிருந்து
துடைத்து,தர்ப்பத்தை அவளின் பின்புறம் எறியவேண்டும்.

நுகத்தடி

பெண்ணின் தலைமீது,தர்ப்பத்தாலான பிரிமணையை வைத்து, அதன்மேல் நுகத்தடியை வைத்து, நுகத்தடியில் வலது த்வாரத்தில் பொன்னை வைத்து, அதன் வழியே தீர்த்தம் வழிந்து பெண்ணின் தலையில் வழியச் செய்வர்.
இது அவளுக்கு, அவள் உடலிலுள்ள எல்லா நோய்களையும் போக்கும்,
ஸ்நானம் என்று எடுக்கப்பட்டுள்ளது. ( ரிக் வேதத்தில்,அபாலா ஸ்தோத்ரம் என்று உள்ளது.அத்ரி மஹரிஷியின் பெண் அவள்.உடலில் இருந்த சரும வியாதிகள் நீங்க, இந்த்ரனை ஸ்தோத்ரம் செய்ய, இந்த்ரன் மேற்சொன்னவிதமாக ஸ்நானம் செய்வித்து, மிகவும் காந்தியும் பரிசுத்தமும் உள்ளவளாக மாற்றினானாம் )

கூரைப் புடவை
பெண் ,தனக்கு வரப்போகும் கணவனிடமிருந்து, முதன் முதலாகப் பெறுவது.இதனைப் பெண் , பொக்கிஷமாகப் போற்றுவாள்.கன்னிகை இதை உடுத்திக்கொண்டு, வந்து கால் அலம்பி ,ஆசமனம் செய்ய வேண்டும்.
திருமாங்கல்ய தாரணம்
பிள்ளை, ”மௌஞ்ஜீ தாரணம் ” என்பதாக, தர்ப்பத்தால்முறுக்கப்பட்ட கயிற்றை கன்னிகையின் இடுப்பில்,
ஆசாஸானா ஸௌமனஸம் ப்ரஜாகும் ஸௌபாக்யம் தனூம் |
அக்னேரனுவ்ரதா பூத்வா ஸந்நஹ்யே ஸுக்ருதாய கம் |\
என்கிற மந்த்ரத்தைச் சொல்லி, மூன்று சுற்றாகக் கட்ட வேண்டும்.
( பொருள்:–சுத்தமான மனஸ் ,புத்திரர்கள்,,ஸகல ஸௌபாக்யம்,நல்ல
சரீரம், இவைகளுடன் இப்பெண் இந்த விவாஹத்தில், வரனுடன்கூட
அக்னியின் ஸமீபமாக இருக்கிறாள். இந்தப் புனிதமான கர்மாவில்,
சுகம் யாவும் உண்டாக ,இந்த ”மௌஞ்ஜீ தாரணம்” செய்கிறேன் )
உபநயனத்தின்போது வடுவுக்கு, மௌஞ்ஜீ தாரணம் எப்படி செய்யப்படுகிறதோ,
அவ்வாறே விவாஹ சமயத்தில் கன்னிகைக்கு இது மௌஞ்ஜீ தாரணம்.இந்த்ரனின் கிருபையால், இவள் , எல்லாவற்றையும் பெறவேண்டும் என்று வேண்டப்படுகிறது.
பிள்ளை, கன்னிகையின் வலக்கையைப் பிடித்து, அக்னிக்கு எதிரே ,பட்டுப்பாயில் அமரவைத்துத் தானும் அமரும்போது
பூஷாத்வேதோ வயது ஹஸ்தக் ருஹ்யாச்விநௌ த்வா ப்வரஹதாகும் ரதேன |
க்ருஹான்கச்ச க்ருஹபத்நீ யதாஸோ வசிநீத்வம் விததமாவதாஸி ||
( பொருள்:–ஸூர்யன் உனது கையைப் பிடித்து,இவ்விடத்திற்கு அழைத்துச் செல்லட்டும்.அச்வினீ தேவதைகள் ,வண்டியில் உன்னை அமர்த்தி என் வீட்டிற்கு உன்னை அழைத்துச் செல்லட்டும். நீ, எனது இல்லத் தலைவியாகி,உறவினர்களிடம் ப்ரியமாய் நடந்து ஆட்சி செய்து நற்செயல்களைச் செய்வாயாக.என்கிற மந்த்ரங்களைச்
சொல்லவேண்டும்.
பிறகு
ஸோம : ப்ரதமோ விவிதே கந்தர்வோ விவத உத்தர : |
த்ருதீயோ அக்னிஷ்டேபதி : துரீயஸ்தே மனுஷ்யஜா : |\
2.ஸோமோதத் கந்தர்வாய கந்தர்வோதததக்னயே |
ரயிம் ச புத்ராகும்ச அததாதக்னி : மஹ்யமதோ இமாம் |\
( பொருள்:–இந்தப் பெண்ணை ”ஸோமன் ” என்கிற தேவதை முதலிலும்,
கந்தர்வன் பின்பும், அக்னி மூன்றாவதாகவும் அடைந்து,நான்காவதாக
மனிதன் அடைகிறான். ஸோமன் காந்தியைச் சேர்த்து, கந்தர்வனுக்கு
அளிக்க கந்தர்வன் அழகு இனிமையான குரலை அனுக்ரஹித்து அக்னிக்கு அளிக்க அக்னி ,தனம் மற்றும் நல்ல புதல்வர்களைப் பெரும் பாக்யத்தை அனுக்ரஹித்து மநுஷ்யனுக்கு அளிக்கிறான்–இது தான் உண்மைப்பொருள் )
திருமாங்கல்ய தாரணம்
கன்னிகை, விதைக்கோட்டைமீது,, கிழக்குப் பார்த்தவாறு அமரவேண்டும்.
வரன் மேற்குப் பார்த்து நின்றுகொண்டு , திருமாங்கல்யத்தைக் கையில்
எடுத்துக்கொண்டு ,இந்த மந்த்ரத்தைச் சொல்லி , பெண்ணின் கழுத்தில்
அணிவிக்கவேண்டும்.
மாங்கல்யம் தந்துனானேன மம ஜீவன ஹேதுநா |
கண்டே பத்நாமி ஸுபகே த்வம் ஜீவ சரதச்சதம் ||
( பொருள்:–நான் சிரஞ்சீவியாக இருப்பதற்கு காரணமான இந்த மங்கள ஸூத்ரத்தை உன் கழுத்தில் அணிவிக்கிறேன்.சௌபாக்யவதியே ! நீ, நூறு வருஷங்கள் ஸுகமாக வாழ்வாயாக )
திருமாங்கல்ய தாரணத்திற்கு , வேத மந்த்ரங்கள் இல்லை.இந்த ச்லோகம் மட்டுமே சொல்லப்படுகிறது. இது ,தொன்றுதொட்டு, நிலவி வரும் வழக்கம்.
திருமாங்கல்ய தாரணத்தின்போது, ஸுமங்கலிப் பெண்கள்
”ஸீதா கல்யாணம் ”பாடுவர்.
பந்துக்கள், அக்ஷதையால் ஆசீர்வாதம் செய்வர் .புஷ்பங்களையும் சேர்ப்பர்.
கெட்டிமேளம் முழங்கப்படும் .மாப்பிள்ளை, ஒருமுடிச்சு போட்டதும்,அவனது சஹோதரி ,இரண்டு முடிச்சு போடவேண்டும். அவளுக்கு, சந்தனம், குங்குமம்,தாம்பூலம் கொடுத்து
ஆசீர்வதிக்கவேண்டும்
(வரன்) மாப்பிள்ளை கேட்பான் :–
மாங்கல்ய ஸூத்ரம் தரித்த முஹூர்த்தம் , நல்ல முஹூர்த்தமாக வேண்டும்
அருள் புரியுங்கள்
ப்ராம்மணர்கள் பதில்:–நல்ல முஹூர்த்தமாகட்டும்
உடனே எல்லோருக்கும் சந்தனம், கற்கண்டு சர்க்கரை கொடுக்கவேண்டும்.
பாணிக்ரஹணம்
கையைப் பிடித்தல் –பெண்ணின் நிமிர்ந்துள்ள வலது கரத்தை, மாப்பிள்ளை, தனது குவிந்துள்ள வலக்கரத்தால் , பிடிக்கவேண்டும். பெண்குழந்தை வேண்டுவோர், கன்னிகையின் கட்டை விரலை விட்டுவிட்டு, மற்ற விரல்களை பிடிக்கவேண்டும்.
ஆண் குழந்தை வேண்டுவோர், கன்னிகையின் கட்டைவிரலை மட்டில்
பிடிக்க வேண்டும்.

பாணிக்ரஹண மந்த்ரங்கள்
1. க்ருப்ணாமி தே ஸுப்ரஜாஸ்த்வாய ஹஸ்தம் மயா பத்யா ஜரதஷ்டி: யதா ஸ : |
பகோ அர்யமா ஸவிதா புரந்த்ரி : மஹ்யம் த்வாது :கார்ஹபத்யாய தேவா : ||
(பொருள்:- நீ நல்ல குழந்தைகளைப் பெற்று, கிழவியாகும்வரை என்னுடன் இருப்பதற்காக, உனது கையை, நான் பிடிக்கிறேன். பகன், அர்யமா, ஸவிதா ,இந்த்ரன் முதலான தேவர்கள் அநுக்ரஹித்து உன்னை வீட்டிற்குத் தலைவியாக இருப்பதற்காக,உன்னை,
எனக்கு அளித்துள்ளார்கள் )
2. தே ஹ பூர்வே ஜனாஸோ யத்ர பூர்வவஹோ ஹிதா ; |
மூர்த்தன்வான் யத்ர ஸௌப்ரவ: பூர்வா தேவேப்ய ஆதபத் ||
( பொருள்:–எந்த க்ருஹஸ்தாஸ்ரமத்தில் பகன் போன்ற தேவர்கள் ,அவர்கட்கு முன்னே இருந்த அக்னி /ஆதித்யன் இவர்கள் மிகவும் சிறப்புடன் இருந்தார்களோ ,அவர்கள் உன்னை, க்ருஹஸ்தாஸ்ரமத்திற்காக , எனக்கு கொடுத்துள்ளனர். — அக்னி இந்த
ஆஸ்ரமத்திற்கு மிக முக்யமானவர். )
3. ஸரஸ்வதி ப்ரேதமவ ஸுபகே வாஜிநீவதி |
தாம் த்வா விச்வஸ்ய பூதஸ்ய ப்ரகாயாமஸ்யக்ரத : ||
( பொருள்:–அன்ன ஸம்ருத்தியைப் பெற்ற பாக்யவதியான ஹே ஸரஸ்வதீ தேவியே ! இந்த பாணிக்ரஹணத்தைக் காப்பாயாக! ஜகத் ப்ரஸித்தி உள்ள உன்னை, எல்லா ஜீவராசிகளுக்கும் முன்பாக ஸ்தோத்ரம் செய்கிறோம்.

4.ய ஏதி ப்ரதிசஸ்ஸர்வா தி ஸோனு பவமாந : |
ஹிரண்ய ஹஸ்த ஐரம்மஸ்ஸத்வா மன்மனஸம் க்ருணோது ||
( பொருள் :–எல்லா திசைகளிலும் சஞ்சரிப்பவரும் ,எல்லா வஸ்துக்களையும் சுத்தமாக்குபவரும் உண்ணும் வஸ்துக்களை நன்கு வேகச் செய்து, உண்ணும் நிலைக்கு கொணரும் அக்னியின் ஸஹாவும் , தன்னைத் துதி செய்பவர்களுக்குத்
தயாராகக் கொடுக்கக் கையில் ஸ்வர்ணத்தை வைத்திருப்பவரும் ஆன வாயு பகவான் உன்னை என்னிடம் பற்று உள்ளவளாகச் செய்ய வேண்டும் )
இந்த மந்த்ரம் தம்பதிகளின் ஒற்றுமையைப் ப்ரார்த்திக்கிறது

ஸப்தபதீ

மாப்பிள்ளை, தனது வலது கையினால், பெண்ணின் வலதுகையை
முழுவதுமாகப் பிடித்து(எல்லாவிரல்களையும்சேர்த்து) மணையிலிருந்து இருவருமாக எழுந்து, அதற்குப் பின்பு, மாப்பிள்ளை ,பெண்ணின் வலது காலை (பாதத்தை ) தனது இடது கையால் பிடித்து, வடக்கு நோக்கியோ, அல்லது கிழக்கு நோக்கியோ ஒவ்வொரு அடியாக வைக்கச் செய்ய வேண்டும்.
ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும், அதற்கான மந்த்ரத்தைச்
சொல்லவேண்டும்.இதற்குப் பிறகே ,இவ்விருவருவரும் , பர்த்தா, பத்நி என்று அங்கீகரிக்கப்படுவர்.
ஸப்தபதீ மந்த்ரங்கள்——

1. ஏகமிஷே விஷ்ணுஸ் த்வான்வேது |
( பொருள் :–ஹே –பெண்ணே– இந்த முதல் அடியை எடுத்துவைக்கும்போது அன்னம் ஸம்ருத்தியாக அளிக்க ஸ்ரீ மஹாவிஷ்ணு உன்னைப் பின்தொடர்ந்து வரவேண்டும் )
2. த்வே ஊர்ஜே விஷ்ணுஸ் த்வான்வேது |
( பொருள்:–நீ, இரண்டாவது அடி எடுத்து வைக்கும்போது, பலத்தைக்
கொடுப்பதற்காக, ஸ்ரீ மஹாவிஷ்ணு உன்னைப் பின்தொடர்ந்துவரவேண்டும்)
3. த்ரீணி வ்ரதாய விஷ்ணுஸ் த்வான்வேது |
( பொருள்:–நீ, மூன்றாவது அடி எடுத்து வைக்கும்போது, ஸத்கர்மாக்கள்
நிறைவுபெறுவதற்காக , ஸ்ரீ மஹாவிஷ்ணு உன்னைப் பின்தொடர்ந்துவரவேண்டும்)
4. சத்வாரி மாயோபவாய விஷ்ணுஸ் த்வான்வேது |
( பொருள்:–)நீ, நான்காவது அடி எடுத்து வைக்கும்போது, நல்ல ஸுகங்களைக் கொடுக்க,ஸ்ரீ மஹாவிஷ்ணு உன்னைப் பின்தொடர்ந்துவரவேண்டும்)
5. பஞ்ச பசுப்ய : விஷ்ணுஸ் த்வான்வேது |
( பொருள்:–நீ, ஐந்தாவது அடி எடுத்து வைக்கும்போது பசுக்களின் ஸம்ருத்தி ஏற்படுவதற்காகஸ்ரீ மஹாவிஷ்ணு உன்னைப் பின்தொடர்ந்துவரவேண்டும் )

6. ஷட் ருதுப்ய :விஷ்ணுஸ் த்வான்வேது |
( பொருள்:– நீ, ஆறாவது அடி எடுத்து வைக்கும்போதுஆறு ருதுக்களிலும் க்ஷேமமுண்டாக ஸ்ரீ மஹாவிஷ்ணு உன்னைப் பின்தொடர்ந்துவரவேண்டும்)
7. ஸப்தஸப்தப்யோ ஹோத்ராப்யோ விஷ்ணுஸ் த்வான்வேது |
( பொருள்:– நீ, ஏழாவது அடி எடுத்து வைக்கும்போது ஹோதா ,ப்ரஸாஸ்தா ,ப்ராம்மணாத்ஸம்ஸி ,போதா,நேஷ்டா, அச்சாவகன் ,ஆக்னீத்ரன் என்கிற ஏழு ரித்விக்குகளைக் கொண்டு செய்யப்படும் ஸோமயாகம் முதலிய ஸத் கர்மாக்கள்,
அநுஷ்டிப்பதற்கான பாக்யம் ஏற்பட,ஸ்ரீ மஹாவிஷ்ணு உன்னைப் பின்தொடர்ந்துவரவேண்டும்)
ஸப்தபதீ மந்த்ரங்கள் மிக முக்யமானவை
தம்பதிகளின் இல்லறத்தின் நோக்கம், அதன் பயன், அவர்கள் உடல் ஆரோக்யத்துடன் மனப் பொருத்தத்துடன், உணவு ஸம்ருத்தி ,பால் ஸம்ருத்தி, அந்தந்த ருதுக்களில் விளையும்/கிடைக்கும் தான்யங்கள் ஸம்ருத்தி –இவைகளுடன் சுகமாக இல்லறத்தை நடத்த, ஸ்ரீமந் நாராயணனாகிய ஸ்ரீ மஹாவிஷ்ணு — கல்யாணப்
பெண்ணைப் பின்தொடர வேண்டுகிறது
பாணி க்ரஹணிகா மந்த்ரா :நியதம் தார ரக்ஷகம் |
தேஷாம் நிஷ்டாது விக்ஜேயா வித்வத்பிஸ் ஸப்தமே பதே ||
ஸப்தபதிக்குப் பிறகு,வாழ்க்கையில் எக்காரணம் கொண்டும் ,தம்பதிகள் பிரியக்கூடாது.
பர்த்தா ,ஏகபத்னி வ்ரதனாகவும், பத்நி ,பதிவ்ரதையாகவும் இருக்கவேண்டுமென்று சாஸ்த்ரம் விதிக்கிறது.
இது முடிந்ததும், கையை விடாமல், வரன் சொல்லும் மந்த்ரம்—-
ஸகா ஸப்தபதா பவ , ஸகாயௌ ஸப்தபதா பபூவ ,ஸக்யந்தே கமேயம்
ஸக்யாத்தே மா யேஷாம், ஸக்யாந்மே மாயோஷ்டா :ஸமயாவ ஸங்கல்பாவஹை ,
ஸம்ப்ரியௌ ரோசிஷ்ணோ ஸுமனஸ்ய மாநௌ |
இஷமூர்ஜமபிஸம்வஸாநௌ , ஸந்நௌ மனாகும்ஸி ஸம்வ்ரதா ஸமுசித்தாந்யாகரம் |
ஸாத்வமஸ்ய மூஹமமூஹமஸ்மி ஸாத்வம் ,த்யௌரஹம் ,ப்ருதிவீ த்வம் ரேதோஹம்
ரேதோப்ருத்த்வம் ,மனோஹமஸ்மி வாக்த்வம் , ஸாமாஹமஸ்மிருக்த்வம்,
ஸா மா அனுவ்ரதாபவ , புகும்ஸே புத்ராய வேத்தவை ,ச்ரியை புத்ராய வேத்தவா
ஏஹி ஸுந்ருதே ||
( பொருள்:–பெண்ணே ! என்னுடன் ஏழு அடி நடந்ததால், நீ எனக்குத் தோழி. ஏழு அடிகளைக் கடந்த நாம், நண்பர்கள் ஆவோம். உன்னிடம் நட்பு உள்ளது. இதிலிருந்து மாறமாட்டேன்.
நீயும் என்னைப் பிரியாமலிரு. செய்யவேண்டிய கடமைகளை, ஒன்றிணைந்து செய்வோம்.
இருவரும், பரஸ்பரம், ப்ரீதி, சரீரகாந்தி, ஒத்தமனம் , ஸமமான உணவு, பலம் ,இவற்றைப் பெற்று இணைந்து இன்பம் எய்தி, வ்ரதாதிகளை அநுஷ்டித்து ,ஒரே விருப்பத்துடன் வாழ்வோம்.
நீ ருக்காக இருக்கிறாய்; நான் ஸாமாவாக இருக்கிறேன்.
நான் ஸாமாவாக இருக்கிறேன்.;நீ ருக்காக இருக்கிறாய்.
நான் விண்ணுலகமாக இருக்கிறேன்; நீ மண்ணுலகமாக இருக்கிறாய்.
நான் சுக்லமாக இருக்கிறேன்; நீ சுக்லத்தை ஏற்பவளாக இருக்கிறாய்.
நான் மனஸ் ஸாக இருக்கிறேன்; நீ வாக்காக இருக்கிறாய்.
நான் ஸாமாவாக இருக்கிறேன்.;நீ ருக்காக இருக்கிறாய்.
இத்தகைய நீ, மனதிலும் சொல்லிலும் செயலிலும் என்னைப் பின்தொடர்வாயாக.
புருஷ ப்ரஜையை அடைவதற்காக, முன் சொன்னதைப்போல, என்னை
அநுஸரித்தவளாக இருப்பாயாக. இனிய சொல்லுடையவளே !செல்வம், புத்ரன்,சகல ஸம்ருத்தி இவைகளை அடைய , நீ, என்னுடன் வருவாயாக.
ஸப்தபதீ ,இவ்வாறு முடிந்தவுடன், இருவரும் கைகளை விடாமல், அக்னியைப் ப்ரதக்ஷணமாக வந்து, பட்டுப்பாயில் அமரவேண்டும்.
பத்நீ ,தன்னுடைய வலது கையால், பதியைத் தொட்டுக்கொண்டே இருக்க, பதி, அக்னியில் 16 ஹோமங்களைச் செய்யவேண்டும் (பதியைத்
தொட்டுக்கொண்டிருந்தாலே ,பத்நியும் ,அக்கர்மாவைச் செய்வதற்கு ஒப்பாகும் )
ப்ரதான ஹோமம்
1. ஸோமாய ஜநிவதே ஸ்வாஹா |
2. கந்தர்வாய ஜநிவதே ஸ்வாஹா| ,
3. அக்நயே ஜநிவதே ஸ்வாஹா| |
( கன்னிகையை அடைந்த ஸோமன் என்கிற தேவனுக்கு, இந்த நெய் அக்னியில் ஹோமம் செய்யப்படுகிறது. கன்னிகையை அடைந்தகந்தர்வன் என்கிற தேவனுக்கு, இந்த நெய் அக்னியில்ஹோமம் செய்யப்படுகிறது. கன்னிகையை அடைந்த அக்னி
என்கிறதேவனுக்கு, இந்த நெய் அக்னியில்ஹோமம் செய்யப்படுகிறது )
4. கன்யலா பித்ருப்யோ யதீ பதி லோகம் அவதீக்ஷாமதாஸ்த ஸ்வாஹா |
( இந்தக் கன்னிகை, தன்னுடைய தகப்பனார் போன்றோரின் தொடர்பை விட்டு, பதியின் வம்ஸத்துக்கு வந்து , கன்னிகைப்பருவ நியமங்களைத் துறந்தாள். ஆகவே, அதை உத்தேசித்து, இந்த நெய்யை அக்னியில் ஹோமம் செய்கிறேன் )
5.ப்ரேதோ முஞ்சாதி நாமுதஸ் ஸுபத்தாம முதஸ்கரத் |
யதேயம் இந்த்ர மீட்வஸ் ஸுபுத்ரா ஸுபகா ஸதி ||
( அபீஷ்டங்களை அருள்கிற இந்த்ரனே ! இந்தக் கன்னிகையை , அவளது பிதாவின் குலத்திலிருந்து விடுவிப்பாயாக ! பதியான என் குலத்திலிருந்து விடுவிக்கக்கூடாது .
என் குலத்தில் ஈடுபாடு உள்ளவளாகச் செய்க ! அதனால், நல்ல புத்ர சந்ததியும்,நல்ல பாக்யம் பெற்றவளாகவும் ஆகச் செய்வாயாக )

6. இமாம் த்வமிந்த்ர மீட்வ : ஸுபுத்ராகும் ஸுபகாம் குரு |
தசாஸ்யாம் புத்ரானாதேஹி பதிமேகாதசம் க்ருதி ||
( இந்த்ரனே ! நீ மழையைக் கொடுத்து எல்லோரையும் மகிழ்விக்கிறாய் .
இப்படிப்பட்ட குணங்களை உடைய நீ, இந்தப் பெண்ணை ,நல்ல புத்ர
ஸம்பத்துக்கள் ,ஸகல ஸௌபாக்யம் உள்ளவளாகச் செய்வாயாக !
இவளுக்குப் பத்துப் பிள்ளைகள் தோன்றத் செய்து, பதியைப் பதினோராவது பிள்ளையாகப் பாவிக்கச் செய்வாயாக )
7.அக்னிரைது ப்ரதமோ தேவதாநாகும் ஸோஸ்யை ப்ரஜாம் முஞ்சது ம்ருத்யுபாசாத் |
ததயகும் ராஜா வருணோபி நுமத்யதாம் யதேயகும் ஸ்த்ரீ பௌத்ரமகம் ,ந ரோதாத் || .
( அக்னி இங்கு ப்ரஸன்னமாகி, இவளுக்குப் பிறக்கப்போகிற குழந்தைகளை, அபம்ருத்யுவிலிருந்து காப்பாற்றவேண்டும் .வருணன் ,இவள் ,புத்ரசோகத்தால்,கண்ணீர் விடாமல் அருளவேண்டும் )
8.இமாம்அக்னி : த்ராயதாம் கார்ஹபத்ய : ப்ரஜாமஸ்யை நயது தீர்க்கமாயு : |
அஸூந்யோபஸ்தா ஜீவதாம் அஸ்து மாதா பௌத்ரம் ஆனந்தம் அபிப்ரபுத்யதாம் இயம் ||
( க்ரஹஸ்தாஸ்ரமத்துக்கான அக்னி, இவளைக் காப்பாற்ற வேண்டும். இவளுடைய ஸந்ததியை தீர்க்காயுஸ் உள்ளவர்களாக அருளவேண்டும். இவளை மலடியாக்காமல், உயிருள்ள புத்ரர்களுக்கு தாயாக அருளவேண்டும். இவளுக்குப் புத்ர ,பௌத்ரர்கள்
தோன்றி ஆனந்தமளிக்கவேண்டும் .
9.மா தே க்ருஹே நிசி கோஷ உத்தாத் அந்யத்ர த்வத்ருதத்ய : ஸம்விசந்து |
மாத்வம் விகேசீ உர ஆவதிஷ்டா ஜீவபத்நி பதிலோகே விராஜ பச்யந்தி ப்ரஜாகும் ஸூமனஸ்யமாநாம் ||
( உனது க்ருஹத்தில் ராத்ரியில் எப்போதும் அழுகைக் குரலே கேட்கக்கூடாது.அழுகின்ற எல்லாமும், உன்னுடைய இடத்திலிருந்து , வேறு இடத்துக்குப் போகவேண்டும்.நீ, எப்போதும் விரிக்கப்பட்ட தலைமயிர் இல்லாமல், மார்பை அடித்துக்கொள்ளாதவளாக
இருக்க வேண்டும். நீண்ட ஆயுள் உள்ள கணவனுடன்/பதியுடன் அவனது க்ருஹத்தில், நல்ல மனதுடன் கூடிய சந்ததியைப் பார்த்துக்கொண்டு, ஆனந்தமாய்ப் ப்ரகாசிப்பாயாக
தீர்க்க ஸுமங்கலியாக ,நல்ல சந்ததிகளைப் பெற்று, ப்ரகாசிக்கவேண்டும் –என்பது கருத்து. )
10.த்யௌஸ்தே ப்ருஷ்டகும் ரக்ஷது ,வாயுரூரு ,அச்விநௌ ச ஸ்தனம் தயந்தகும் ஸவிதாபிரக்ஷது |
ஆவாஸஸ: பரிதாநாத் ப்ருஹஸ்பதி : விச்வேதேவா அபிரக்ஷந்து பச்சாத் ||
(த்யுலோக தேவதை உனது பின்பாகத்தையும், வாயுதேவன் உனது துடைகளையும்,அச்வினி தேவதைகள் உனது மார்புப் பிரதேசத்தையும், ஸவிதா தேவதை பால்சாப்பிடுகிற மக்களையும், ப்ருஹஸ்பதி வஸ்திரத்தையும் காப்பாற்றுவாராக !மற்ற பாகங்களை
விச்வேதேவர் காப்பாற்றுவாராக ! கருத்து–இந்த மந்த்ரம்,பெண்ணுக்கு, கவசம் போன்றது )
11. அப்ரஜஸ்தாம் பௌத்ரம்ம்ருத்யும் பாப்மாநமுத வாகம் |
சீர்ஷ்ண : ஸ்ரஜமிவ உந்முச்ய த்விஷத்ப்ய : ப்ரதிமுஞ்சாமி பாசம் ||
விவாஹமானபிறகு, இல்லறதர்மத்தில் , குழந்தை பிறவாமை, பிறக்கும் குழந்தை இறப்பது/வியாதியால் துன்பமடைவது, பற்பலத் துன்பங்கள் தோன்றுவது–பலவிதமான பாவங்கள் செய்ய ஸந்தர்ப்பம் ஏற்படுவது–இவையெல்லாம் தேவதைகளைப் பிரார்த்தித்து, அவர்கள் தோன்றி, அவர்கள் க்ருபையால்தான் அகற்றமுடியும் –ஆகவே
இம்மந்த்ரமும் முக்கியமானது.
(புத்ரன் உண்டாவதற்கு ஏதாவது தோஷம் இருப்பின் அதையும், பிறக்கும் குழந்தை இறப்பதற்கான பாபத்தையும், மற்ற எல்லாப் பாபங்களையும் , வாடிய புஷ்பத்தைத் தலையிலிருந்து எடுத்து எறிவதுபோல் உன்னிடமிருந்து எடுத்து, சத்ருக்களிடம்
எறிகிறேன் )
12.இமம்மே வருண ச்ருதி ஹவமத்யா சம்ருடய |
த்வாமவஸ்யுராசகே ||
(ஹே வருண தேவனே ! என்னுடைய இந்த ஸ்தோத்ரத்தைக் கேட்டு, இப்போதே சுகத்தை அளிப்பீராக ! உம்மால், காப்பாற்றப்படுவதை விரும்பி, உம்மை நன்றாக ஸ்தோத்ரம் செய்கிறேன்
13. தத்வா யாமி ப்ரஹ்மணா வந்தமாநஸ் ததாசாஸ்தே யஜமாநோ ஹவிர்பி : |
அஹேட மாநோ வருணோஹ போதி உரசகும்ஸ மா ன ஆயு :ப்ரமோஷீ : ||
பாபங்களை விரட்டி, இடையூறுகளை அகற்றி, சுகத்தைப் பிரார்த்தித்து, ஸந்த்யாவந்தன உபஸ்தானத்தில் வருணதேவனை வேண்டுகிறோம். ஆபத்துக்களை அகற்றி, அருள்பவன்.வைதீக கர்மாக்களில், வருணனுக்கு ஹோமம் இல்லாத கர்மாவே இல்லை எனலாம்.
(ஹே வருண தேவனே ! யாகத்தில், யஜமானன் தன்னைக்காக்குமாறு வேண்டி, ஹோமம் செய்வதுபோல், நான் வேதமந்த்ரங்களால்,உன்னைத் துதிக்கிறேன் வேதம் ”செய் ” என்று சொன்னதைச் செய்யாமலும்,”செய்யாதே ” என்று சொன்னதைச் செய்தும் ,இது போன்ற குற்றங்களால், என்னைக் கோபிக்காமல், எங்கள் உயிரைப்
போக்காமல் காப்பாற்றவேண்டுகிறேன் )
14. த்வந்நோ அக்னே வருணஸ்ய வித்வான் தேவஸ்ய ஹேடோ அவயாஸிஷீஷ்டா |
யஜிஷ்டோ வஹ்நிதம: சோசுசாந : விச்வா த்வேஷாகும்ஸி ப்ரமுமுக்த்யஸ்மத் ||
ஹே, அக்னி தேவனே ! எல்லாவற்றையும் அறிந்தவரே . பூஜிக்கத் தக்கவரும்
பெரும் ப்ரகாஸமும் உள்ளவரே. யாக, யஜ்ஞ ,ஹோமாதிகளில் எல்லா தேவர்களுக்கும்அளிக்கப்படும் ”ஹவிஸ்” ஸை எடுத்துச் சென்று அவரவர்களுக்கு அளிப்பவரே .வருணதேவனுக்கு ,எங்களிடம் உள்ள கோபத்தை அகற்ற வேண்டுகிறோம். எங்களிடம் உள்ள எல்லா தோஷங்களையும் (குற்றங்கள் ) அகற்றி எங்களைக் காக்க வேண்டுகிறோம்.
15. ஸத்வன்னோ அக்னே அவமோ பவோதி நேதிஷ்டோ அஸ்யா உஷஸோ வ்யுஷ்டௌ |
அவயக்ஷ்வ நோ வருணகும் ரராணோ வீஹி ம்ருடீககும் ஸுஹவோ ந ஏதி ||
விடியற்காலையில் இருந்து எங்களுடன் இருந்து, வரும் ஆபத்துக்களை அகற்றி, வருணன் துன்பம் கொடுக்காமல் தடுத்து,வருணபாசத்தில் நாங்கள் சிக்காமல், புரோடாசம் முதலியவற்றை விரும்பி ஏற்று, காப்பாற்றுமாறு அக்னிதேவன் வேண்டப்படுகிறார். எல்லாத் தேவர்களுக்கும் ”ஹவிஸ்”ஸைக் கொண்டுபோய்க்
கொடுக்கும் இவருக்கு, க்ருதஜ்ஜையைத் தெரிவிக்க ”புரோடாசம் ” என்பதை இவருக்கு ஹவிஸ் ஸாக ஹோமம் செய்வர்
இவற்றையெல்லாம், அடியேன், கேட்பதும் சொல்வதும் என்கிற தலைப்பில் 1008 கேள்வி பதிலில் சொல்லியிருக்கிறேன்
( ஹே அக்னே ! நீங்கள் தேவர்களுள் , தொடக்கத்திலிருந்தே இருப்பவர்; அன்பும் பண்பும் உள்ளவர்; உம்மை வேண்டி அழைக்கும்போது, வருகை புரிந்து, புரோடாசம் போன்றவைகளைத் தாங்களும் உண்டு எங்களுக்கும் தரவேண்டும் )

16. த்வமக்னே அயாஸி அயாஸந்மனஸா ஹித : |
அயாஸந் ஹவ்யமூஹிஷே அயாநோ தேஹி பேஷஜம் ||
ஹே அக்னே ! தாங்கள் உபாஸகர்களால் அடையத் தகுந்தவர்;
அதனால், மனஸ் ஸா லும் அடையப்பட்டவர் . எங்களால் ஹோமம்
செய்யப்படும் ”ஹவிஸ்” ஸை தேவர்களிடம் சேர்ப்பிக்கச் சுமக்கிறீர் .
எங்களால், சுலபமாக அடையத் தகுந்தவர் , நீர்.எங்களுக்கு” பாபக்ஷயம் ”
என்கிற மருந்தைக் கொடுப்பீராக

அம்மி மிதித்தல்
வரன், கன்னிகையின் வலது கால் கட்டை விரலைத் தனது வலது கையால் பிடித்து, அக்னி குண்டத்துக்கு வடக்கே இருக்கும் அம்மிக்கல்லின் மேல் அவளுடைய வலது கால் பாதத்தை எடுத்துவைத்து, மந்த்ரம் சொல்லவேண்டும்
ஆதிஷ்ட மேமச்மானம் அஸ்மேவ த்வக்குஸ்திராபவ |
அபிதிஷ்ட ப்ருதந்யத : ஸஹஸ்வ பருதநாயத : ||
பெண்ணே ! நீ, இந்தக்கல்லின்மீது ஏறி நிற்பாயாக !இந்தக் கல்லைப்போல நிலையாக இருப்பாயாக. உனக்கு எதிராக இருப்பவர்களை எதிர்த்து நிற்பாயாக.தவறுகளைப் பொறுத்துக்கொள்வாயாக .

லாஜஹோமம் (பொரியிடுதல் )
அக்னிக்கு மேற்காக வதுவரர்கள் ,அவரவர் இடத்தில் உட்கார்ந்துகொண்டு
பொரியிடுதல்
அக்னியைப் ப்ரதக்ஷணம் செய்தல்,
அம்மி மிதித்தல்
மூன்றையும் ,
மூன்று முறை மந்த்ரங்களுடன் செய்யவேண்டும்.

பெண்ணின் இரண்டு கைகளையும் ஒன்று சேர்த்து, அதில் இரண்டு தடவை நெய்யைத் தடவி, நெல்பொரியை இரண்டு தடவை அந்தக் கையில் சேர்த்து (பெண்ணின் சஹோதரன் கொடுக்கவேண்டும் என்பர் )
அந்தப் பொரிமேல் மறுபடியும் கொஞ்சம் நெய் சேர்த்து, வரன் மந்த்ரத்தைச் சொல்ல, வரன் அவள் கைகளைப் பிடித்தபடியே அவளையே நுனிவிரல்களால், பொரியை அக்னியில் சேர்க்குமாறு செய்தல்

முதல் தடவை–பொரிஇடுவது , அக்னிவலம், அம்மி மிதிப்பது

இயம் நாரீ உபப்ரூதே குல்பான்யாவபந்திகா |
தீர்க்காயுரஸ்து மே பதிர்ஜீவாது சரதச்சதம் |\
( இந்தப் பெண் , எனது கணவன் நீண்ட ஆயுஸோடு நூறு ஆண்டுகளாவது வாழவேண்டும் என்று பிரார்த்தித்து, இந்தப் பொரியை ஹோமம் செய்கிறாள் )
அக்னிவலம்
துப்யமக்ரே பர்யவஹந்த் ஸுர்யாம் வஹது நா ஸஹ |
புந : பதிப்யோ ஜாயாம் தா அக்னே ப்ரஜயா ஸஹ ||
(ஹே அக்னே ! முதலில், உனக்கு ,ஸூர்யன் தனது பெண்ணை
ஸ்த்ரீ தனத்துடன் கொடுத்தான். இப்போது என்னைப்போன்ற பதிக்கு,
பிள்ளைகளுடன் மனைவியைக் கொடுப்பாயாக –அதாவது, என் மனைவிக்கு புத்ரபாக்யம் உண்டாக அருள்வாயாக என்று பொருள்.
புந : பத்நீம் அக்னிரதாத் ஆயுஷா ஸஹவர்ச்சஸா |
தீர்க்காயுரஸ்யா ய : பதி : ஸ ஏது சரதச்சதம் ||
( அக்னிதேவன் , ஆயுள், காந்தி (ப்ரகாஸம் ) உள்ளவளான ,மனைவியை அளித்துள்ளான். இவளது கணவன் நீண்ட ஆயுளுடன் நூறு ஆண்டு வாழவேண்டும்.)
விச்வா உத த்வயா வயம் தாரா உதன்யா இவ |
அதிகாஹேமஹி த்விஷ : ||
( நாங்கள் எல்லாவிதமான சத்ருக்களையும் , வெள்ளத்தில் மூழ்கச் செய்வதுபோல் மூழ்கச் செய்யவேண்டும்.
அம்மி மிதிப்பது
வரன், கன்னிகையின் வலது கால் கட்டை விரலைத் தனது வலது கையால் பிடித்து, அக்னி குண்டத்துக்கு வடக்கே இருக்கும் அம்மிக்கல்லின் மேல் அவளுடைய வலது கால் பாதத்தை எடுத்துவைத்து, மந்த்ரம் சொல்லவேண்டும்
ஆதிஷ்ட மேமச்மானம் அஸ்மேவ த்வக்குஸ்திராபவ |
அபிதிஷ்ட ப்ருதந்யத : ஸஹஸ்வ பருதநாயத : ||
பெண்ணே ! நீ, இந்தக்கல்லின்மீது ஏறி நிற்பாயாக !இந்தக் கல்லைப்போல
நிலையாக இருப்பாயாக. உனக்கு எதிராக இருப்பவர்களை எதிர்த்து நிற்பாயாக.தவறுகளைப் பொறுத்துக்கொள்வாயாக .

இரண்டாவது தடவை –பொரியிடுதல், அக்னி வலம் , அம்மி மிதிப்பது
பொரியிட மந்த்ரம்
அர்யமணம் து தேவம் கன்யா அக்னிமயக்ஷத |
ஸ இமாம் தேவோ அத்வர : ப்ரேதோ முஞ்சாதி நாமுத : ஸுபத்தாம் அமுத ஸ்கரத் ||
அக்னி, இல்லறத்தார்க்கு மிக முக்கியமானவன்,அதுவும் பெண்களுக்கு. கணவன் செய்யும் ”ஒளபாஸனம் ” போன்ற அக்னிகார்யங்களுக்கு , பத்னீ முக்கியம். இவள் இல்லாவிடில் ,அருகதையைஇழக்கிறான்.
(பெண்கள் அக்னியை உபாஸிக்கிறார்கள் . அந்த அக்னி தேவன், இந்தப் பெண்ணை, பிறந்தகத்திலிருந்து விடுவித்து, கணவனுடன் எப்போதும் பிரியாதிருக்குமாறு அருளவேண்டும் )
பிறகு , அக்னியை வலம் வந்து, முன்போல அம்மி மிதிக்க வேண்டும். (மந்த்ரத்துடன் )
மூன்றாம் முறை–பொரியிடுதல்,அக்னி வலம் , அம்மி மிதிப்பது
பொரியிட மந்த்ரம்
த்வமர்யமா பவஸி யத்கனீநாம் நாம ஸ்வதாவத்ஸ்வர்யம் பிபர்ஷி |
அஞ்ஜந்தி வ்ருக்ஷகும் ஸுதிதம் ந கோபி : யத்தம்பதீ ஸமனஸா க்ருணோஷி |\
( ஹே அக்னே ! நீர் கன்னிகையை, அன்னஸம்ருத்தியுடனும் ஸ்வர்க்கத்துக்குச் சாதனமாகவும் செய்துள்ளீர் .விவாஹமான பெண்ணும் பிள்ளையும் ஒற்றுமையாகவும் ஒரே மனம் உள்ளவர்களாகவும் செய்கின்றீர்.எனவே, நன்கு ,பசுவின் நெய்யால்
ஹோமம் செய்கிறார்கள் பிறகு , அக்னியை வலம் வந்து, முன்போல அம்மி மிதிக்க வேண்டும். (மந்த்ரத்துடன் )

பெண்ணின் இடுப்பில் கட்டிய தர்ப்பக் கயிற்றை அவிழ்த்தல்

இப்போது சொல்லும் மந்த்ரம்
ப்ரத்வா முஞ்சாமி வருணஸ்ய பாசாத் யமபத்நீத ஸவிதா ஸுகதே : |
தாதுச்ச யோநௌ ஸுக்ருதஸ்ய லோகே ஸ்யோனம் தேஹஸ பாத்தியா கரோமி ||
இமம் விஷ்யாமி வருணஸ்ய பாசம் யமபத்நீத ஸவிதா ஸுசேவ : |
தாதுச்ச யோநௌ ஸுக்ருதஸ்ய லோகே அரிஷ்டாம் த்வா ஸஹ பத்யா க்ருணோமி ||
( ஹே ,பெண்ணே ! நல்ல மனமுடைய ஸவிதா இந்தத் தர்ப்பத்தின் மூலமாக எந்த வருண பாசத்தினால் கட்டினாரோ, அதிலிருந்து உன்னை விடுவிக்கிறேன்.புண்யம் செய்பவர்கள் இருப்பிடமான பிரும்ம லோகத்தில், கணவனான என்னுடன் சுகமாக இருப்பாயாக .
சுகத்தைக் கொடுக்கும் எந்த ஸவிதா உன்னை வருண பாசத்தால் கட்டினாரோ அதனை அவிழ்த்து, வருணபாச பயமில்லாமல் பிரும்ம லோகத்தில், கணவனான என்னுடன் சுகமாக இருப்பாயாக )

ஹோமங்கள் முடிந்தபிறகு—–
( ஆண்குழந்தையை , பெண்ணின் மடியில் உட்காரவைத்துச் சொல்லப்படும் மந்த்ரங்கள்.
இப்போதெல்லாம், புதுத்தம்பதியருக்கு பாலும் பழமும் கொடுப்பதாக மாறியுள்ளது )
.
கணவன் சொல்லும் மந்த்ரம்
1.இஹ காவ : ப்ரஜாயத்வம் இஹாச்வா இஹ பூருஷா : |
இ ஹோ ஸஹஸ்ர -தக்ஷிணோ ராயஸ்போஷோ : நிஷீதது ||

2.ஸோமேன ஆதித்யா பலிநஸ் ஸோமேன ப்ருதிவீ த்ருடா |
அதோ நக்ஷத்ராணாம் யேஷாம் உபஸ்தே ஸோம ஆதித : ||
3.ப்ரஸ்வஸ்த: ப்ரேயம் ப்ரஜயா புவனே சோசேஷ்ட |
4.இஹ ப்ரியம் ப்ரஜயா தே ஸம்ருத்ய்யதாம் அஸ்மின் க்ருஹே கார்ஹபத்யாய ஜாக்ருஹி |
ஏநா பத்யா தன்வகும் ஸகும் ஸ்ருஜஸ்வாதாஜீவ்ரீ விததமாவதர்ஸி ||

த்ருவன் —அருந்ததி நக்ஷத்ர தர்ஸனம்

ஆகாயத்தில் நக்ஷத்ரம் தெரிய ஆரம்பித்ததும் ,கிழக்கு அல்லது வடக்குத் திசைக்குச் சென்று,வரன், வதுவுக்கு த்ருவன் , அருந்ததி நக்ஷத்ரங்களைக் காண்பிக்கவேண்டும்.
த்ருவ நக்ஷத்ரத்தைக் காண்பிக்கும்போது கணவன் சொல்லவேண்டிய மந்த்ரம்
த்ருவக்ஷிதிர் த்ருவ யோனி : த்ருவமஸி த்ருவத: ஸ்திதம் |
த்வந்நக்ஷத்ராணாம் மேத்யஸி ஸ மா பாக்ஷி ப்ருதன்யத ||
( ஓ ,த்ருவனே ! நீர் நிலையான இடத்தில் இருக்கிறீர்;நிலையான பிறப்பைப் பெற்றுள்ளீர் ; மற்ற எல்லா நக்ஷத்ரங்களும் நிலைத்து இருப்பதற்குக் காரணமாக இருக்கிறீர் .இத்தகைய மஹிமை உள்ள நீர், பகைவர்களிடமிருந்து காப்பீராக .

அருந்ததி நக்ஷத்ரத்தைக் காண்பிக்கும்போது கணவன் சொல்லவேண்டிய மந்த்ரம்
ஸப்தர்ஷய: ப்ரதமாம் க்ருத்திகாநாம் அருந்ததீம் |
யத்த்ருவதாகும்ஹ நிந்யு: ஷட்க்ருத்திகா
முக்யயோகம் வஹந்தீயம் அஸ்மாகம் ஏதது அஷ்டமீ ||
( காச்யபர் போன்ற ரிஷிகள், க்ருத்திகை என்று பொதுப்பெயருள்ள பார்யைகளில் சிறந்தவளாக அருந்ததியை ,மற்ற க்ருத்திகைகளைக் காட்டிலும் மேலான ஸ்தானத்தையும் ,கீர்த்தியையும் அடையும்படி செய்தார்களோ,
அந்த அருந்ததியின் தர்ஸனத்தால் ,என்னுடைய மனைவி எட்டாவதாக பெற்று விளங்குவாளாக .
வாரணமாயிரம்
ஸ்ரீவைஷ்ணவர்கள் , இல்லங்களில் நடைபெறும் விவாஹங்களில்,
முக்கியமானது. ஸ்ரீ ஆண்டாள், தான் ஆசைப்பட்ட விதங்களில் எதுவுமே குறையாதபடி, ஆயர்பாடி ஆயனை விவாஹம் செய்துகொள்வதாகத் தான்
பார்த்த கனவைத் தோழிக்குச் சொல்லுதல், வாரணமாயிரம் .
தம்பதிகளை, எதிர் எதிரே உட்காரவைத்து, ப்ருஹஸ்பதி பாசுரங்களை
ஸேவிப்பார் ( சொல்வார் ). கடைசிப் பாசுரம் ஸேவிப்பதற்கு முன்பாக
———ஆயனுக்காகத் தான் கண்ட கனாவினை—-
ஸேவிப்பதை நிறுத்தி, சூடிக்கொடுத்த நாய்ச்சியார் ஸம்பாவனை செய்வர்.

பிறகு ”சீர்பாடல் ”
உறவினர்கள் அறிமுகம்
உறவுமுறை பெயர்கள் என்று சொல்லி சீர் பாடுவர். இவற்றின் மூலமாக, எல்லா உறவினர்களின் ஆசீர்வாதமும் புதுக் தம்பதியர்க்குக் கிடைக்கும்.

வேண்டுகோள்

க்ருஹஸ்தாஸ்ரமத்துக்கு ,அடியெடுத்து வைக்கும், பிள்ளையும், பெண்ணும் விவாஹத்தின் முக்யம் , இந்த ஸம்ஸ்காரத்தின் புனிதத்வம் ,இவற்றையெல்லாம் உணருதல் , அவச்யம் . இந்த முக்ய நாளிலாவது,விவாஹ மந்த்ரங்களைச் சரியாக உச்சரித்து, ஆயிரம் காலத்துப் பயிர் என்று கொண்டாடப்படும்
இந்த சுப தினத்தில் , உண்மையாகவும், உணர்வு பூர்வமாகவும் செயல்படவேண்டும்.
கன்னிகை, வரன் மந்த்ரங்களைச் சொல்லும்போது, கவனத்தைச் செலுத்திக் கேட்கவேண்டும். மந்த்ரங்கள் காதுகளில் கேட்கும்போது, சந்தோஷ உணர்வும், மனஸ் சாந்தியும் ஏற்படும்.

குறிப்பாக, விவாஹ தினத்தன்று ப்ருஹஸ்பதி , எந்த எந்த மந்த்ரங்களைச் சொல்லுமாறு வரனிடம் சொல்கிறாரோ, அந்த வரன் , மந்த்ரங்களை ஹிருதயஸுத்தியுடன் சொன்னால்,
இல்லறம் என்கிற குடும்ப வாழ்க்கை, அந்தந்த தேவதைகள், முன்னோர்கள், பெரியவர்கள், எல்லாவற்றுக்கும் மேலாக ,ஸர்வலோக ஸரண்யனான ஸ்ரீமந் நாராயணனின் அநுக்ரஹம் பெற்று, யோகத்தையும் க்ஷேமத்தையும் பெற்று, சத்புத்ர ,பௌத்ராதிகளுடன்
வாழ்வாங்கு வாழ்வர்

தவிர்க்க வேண்டியவை—

1. விவாஹ மேடையில், காலணி அணிந்து வருவதைத் தவிர்க்கவேண்டும் .
2. போட்டோ எடுப்பவர்கள்,மற்றவர்கள், இவர்களெல்லாம் விவாஹத்துக்கு வந்திருப்பவர்கள்,
விவாஹமேடையைப் பார்க்க இயலாதவாறு , சுவர் போல மறைத்து இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
3. விவாஹத்துக்கு வருகை தந்துள்ளவர்கள் ”செல்போன் ” உபயோகித்து உரக்கப்பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.
4. திருமாங்கல்ய தாரணம் ஆனவுடன், மேடைக்குச் சென்று, மணமக்கள்,கரங்களைப் பிடித்துக் குலுக்குவதும், பரிசுகளைக் கொடுத்து, போட்டோவுக்கு நிற்பதும் தவிர்க்கவேண்டும்.
இது, விவாஹம் முழுவதும் முடிவு பெறாத நிலை.
”ஸப்தபதி ” லாஜஹோமம் , அம்மி மிதித்தல் வரையில் முடிந்தால்தான்,விவாஹம் பூர்த்தியான நிலை.பிறகுதான் புதுமணத்தம்பதியரை அணுகவேண்டும்;கைகுலுக்க வேண்டும்;

விரலில் பவித்ரத்தை அணிந்து கொண்டு, பிறரிடம் கை குலுக்குவது, பரிசைப் பெறுவது, போட்டோவுக்குப் ”போஸ் ” கொடுப்பது இவையெல்லாம், மேடையில் ப்ரஸன்னமாகியிருக்கும்
தேவதைகளை அவமதிக்கும் செயலாகும்.
வைதீக கார்யங்களுக்கு முக்யத்வம் கொடுப்பது, வாழ்நாள் முழுதும் , வளத்தைக்கொடுக்கும்.

Sarvam Sree Hayagreeva preeyathaam

Dasan
Uruppattur Soundhararaajan
Srikainkarya

13680515_10206760289705444_4532159557676298984_n

About the Author

Leave A Response