Bajagovindam

Posted on Dec 28 2016 - 11:04am by srikainkaryasriadmin

ஸ்ரீ ஆதிசங்கரரின் ”பஜகோவிந்தம்”

ஒரு சமயம் ஸ்ரீ ஆதிசங்கரர் கங்கைக் கரையோரம் நடந்து செல்கிற போது ஒரு காட்சியைக் கண்டார் .

ஒரு மூலையில் வயதான கிழவன் கால்கள் தள்ளாட, கையில் ஊன்றுகோலுடன் மல்லாடிக் கொண்டே
ஒரு சுவடியின் சில பகுதிகளை மனப்பாடம் செய்து கொண்டிருந்தான்.

இன்றைக்கோ நாளைக்கோ உடலைவிடப் போகிறவன் இவ்வளவு ச்ரத்தையாக மனப்பாடம் செய்வதை பார்த்த
ஸ்ரீ சங்கரர், அவன் அருகில் சென்றார். அந்த வயதானவன் சற்று உரக்கவே சொல்லி அதை மனப்பாடம் செய்ய முயற்சி செய்துகொண்டு இருந்ததைப் பார்த்தார். அப்படிச் செய்து கொண்டிருந்தது, ஸம்ஸ்க்ருத இலக்கணத்தில் வரும் ஸூத்ரம் .

ஸ்ரீ ஆதி சங்கரருக்கு வருத்தம்—-
என்ன உலகம்! வெற்றுக் கல்வியின் மேலே மோகம் கொண்டு இருக்கிறானே —–?
பண்டிதர்கள்தான் , வேதங்களைக் கற்று, உபநிஷதங்களைப் புரிந்து, எண்ண இயலாதப் பிறவிகளை ஒழித்துப் பகவானின் திருவடிகளை அடையப் பரமபதம் அடைய வேண்டுமா ?
பாமரனும் ,அப்படி அடைய வேண்டும் அல்லவா ? என்று கவலை கொண்டார்.
பிறர் துன்பம் கண்டு ,மிகவும் வருந்துவதும், அதைக்களைய முயற்சிப்பதும் ”வைஷ்ணவ தர்மம்”

இதை வைஷ்ணவ லக்ஷணம் என்பர் .

ஸ்ரீ ஆதி சங்கரர், வருத்தமும், கவலையும் அடைந்தார்.

இந்த வயதானவரைப் போன்ற ஜீவாத்மாக்களும் , அடுத்த பிறவி இல்லாத நிலையை அடைய வேண்டும்
என்று சங்கல்பித்தார்.

பகவானுக்கு மிகவும் பிடித்த திருநாமம் ”கோவிந்தன்”
திருப்பதியில் /திருமலையில், மலை குனிய நின்றானைத் தரிசிக்கத் தவம் இருக்கும் எண்ணிலா பக்தர்கள் ,இன்றும் நேற்றும் என்றும் கதறுவது, ”கோவிந்தா ”திருநாமத்தைச் சொல்லித்தான்.
இந்த நாமாவுக்கு,விசேஷ அர்த்தங்கள் நிறைய உண்டு ; அவற்றைப் பிறகு, வேறொரு சந்தர்ப்பம்
பகவான் அருளினால், பார்ப்போம்.

அப்போது, அருளியதே —–“மோஹ முத்கரம்’

இதில் உள்ள முதல் ஸ்தோத்ரம் , “பஜகோவிந்தம்’ என்று தொடங்குகிறது—–
ஆதலால், இதற்கு “பஜகோவிந்தம்’ என்ற பெயர் வந்தது—–
இந்த ”ஸ்தோத்ரம்” வியத்தகு, கர்நாடக சங்கீத ஸமுத்ர நிர்வாஹினி ,பக்திக்கும் பரவசநிலைக்கும் மிக்கார் இல்லா , மீராவின் அடுத்த அவதாரம்—ஸ்ரீமதி M .S . அவர்களின் தேனினுமினிய குரலில் செவிமடுப்போர்,
அளவற்ற புண்யம் செய்தவராவர்

அந்த ஸ்தோத்ரம் இதோ!

1. பஜகோவிந்தம் பஜகோவிந்தம்

பஜகோவிந்தம் மூடமதே I

ஸம்ப்ராப்தே ஸந்நிஹிதே காலே

நஹி நஹி ரக்ஷதி டுக்ருஞ்கரணே II

ஏ மூடமதியே!வ்யாகரணம் படித்தால் அது. உனக்குத் தேவையான (அந்திம) நேரத்தில் உபயோகப்படாது.

ஆகவே இப்பொழுதே கோவிந்தனை ஸேவி. கோவிந்தனை ஸேவி.

2. மூட!ஜஹீஹி தனாகமத்ருஷ்ணாம்

குரு ஸத்புத்திம் மநஸி வித்ருஷ்ணாம் I

யத் லபஸே நிஜகர்மோபாத்தம்

வித்தம் தேந விநோதய சித்தம் II

மூடனே!தனத்தில் ஆசையை ஒழித்து நல்ல புத்தியுடன் ஆசையை வெறுப்பதை வளர்த்துக்கொள்.
உன் ஸம்பாத்யம் மூலமாக வரும் தனத்தைக் கொண்டு மனஸ்ஸை ஸந்தோஷமாக வைத்துக் கொள் .

3. நாரீஸ்தனபர நாபீதேசம்

த்ருஷ்ட்வா மா கா மோஹாவேசம் I

ஏதத்-மாம்ஸவஸாதிவிகாசம்

மனஸி விசிந்தய வாரம் வாரம் II

பெண்களின் அழகில் மயங்காதே –அதெல்லாம் மாம்ஸம். கொழுப்பு ஆகியவற்றின்
உருவம்தான். இதை அடிக்கடி நினைத்துக்கொள்வாயாக .

4. நளினீ தலத ஜலமதிதரலம்

தத்வத் ஜீவிதமதி சய சபலம் I

வித்தி வ்யோத்யபிமானக்ரஸ்தம்

லோகம் சோக ஹதம் ச ஸமஸ்தம் II

தாமரையில் தண்ணீர் தளதளப்பது போலவே இந்த உலக வாழ்க்கையும் மிகவும் தளதளப்பானது . ஜனங்கள் எல்லோரும் வ்யாதி– தற்பெருமை போன்றவற்றால் துன்பப் படுவதைச் சிந்திப்பாயாக .

5. யாவத் வித்தோபார் ஜனஸக்த :

தாவத் – நிஜபரிவாரோ ரக்த: I

பஸ்சாத் ஜீவதி ஜர்ஜரதேஹே

வார்தாம் கோsபி நப்ருச்சதி கேஹே II

ஒருவன் பணம் ஸம்பாதிக்கும் வரைதான் அவனது உற்றர், உறவினர் அன்பு பாராட்டுவர்.
பிறகு உடல் ரத்தமெல்லாம் சுண்டி, அந்த உடலுடன் வாழும்பொழுது, ஒருவர் கூடஏறெடுத்துப் பார்க்க மாட்டார்கள்.

6. யாவத் பவநோ நிவஸதிதேஹே

தாவத் ப்ருச்சதி குசலம் தேஹே I

கதவதி வாயௌ தேஹாபாயே

பார்யா பிப்யதி தஸ்மின்காயே II

உடலில் ,உயிர் இருக்கும் வரை தான் வீட்டில் உள்ளோர் நலம் விசாரிப்பார்கள்.இந்த உயிர் நீங்கி , உடல் விழுந்து விட்டால் அந்த உடலைக்கண்டு( ப்ரேதம் )
மனைவியே பயப்படுகிறாள்.

7. பாலஸ்தாவத்க்ரீடாஸக்த:

தருணாஸ் தாவத் தருணீஸக்த: I

வ்ருத்தஸ்தாவத் சித்தாஸக்த:

பரே ப்ரஹ்மணி கோsபி நஸக்த: II

சிறுவன் விளையாட்டில் மெய்மறக்கிறான் .அவனே ,
வாலிபனாகி இளம்பெண்ணை நாடுகிறான்.
அவனே வயது முதிர்ந்து கவலையில் ஆழ்கிறான் . ஆனால் பரப்ஹ்மத்தில் ஒருவர் கூட ஈடுபடுவதில்லையே!

8. காதே காந்தா கஸ்தே புத்ர:

ஸம்ஸாரோsய மதீவ விசித்ர: I

கஸ்ய த்வம் க:குத ஆயாத:

தத்வம் சிந்சய யதிதம் ப்ராத: II

உனது மனைவி என்கிறாயே அது யார்?உனது மகன்என்கிறாயே அது தான் யார்?
இந்த உலக இயல்பு மிக விந்தைகள் கொண்டது
நீ யாருக்கு உடைமை?நீ யார்?எங்கிருந்து வந்தாய்?
இது மாதிரியான உண்மை நிலையை கொஞ்சம் ஆராய்ந்து பார் !

9. ஸத்ஸங்கத்வே நி:ஸங்கத்வம்

நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம் I

நிர்மோஹத்வே நிஸ்சலதத்வம்

நிஸ்சலிதத்வே ஜீவன் முக்தி : II

நல்லோரின் ஸ்நேகம் இருந்தால் உலக விஷயங்களில் பற்று வராது–இருக்காது.அவ்வாறு இருந்தால் மோஹமும் இருக்காது . மோஹம் இல்லையேல் உறுதியான தத்வம்தெளிவுறும் . அவ்வாறு உறுதியான கட்டுப்பாடுடன் தத்வம் தெளிந்தால் ஜீவாத்மா முக்தி பெறும் .

10. வயஸி கதே க:காமவிகார :

சுஷ்கே நீரே க:காஸார: I

க்ஷீணே வித்தே க:பரிவார:

ஜ்நாதே தத்வே க:ஸம்ஸார :II

வயது முதிர்ந்த பிறகு காமவிகாரம் இருக்காது.
நீர் வற்றிய பிறகு குளம் இருக்காது.
செல்வம் (பணம்) குறைந்து பிறகு குடும்ப வாழ்க்கைஇருக்காது.
, தத்வ ஞானம் வந்த பிறகு உலக வாழ்க்கையும் இருக்க இயலாது

11. மா குரு தனஜன யௌவனகர்வம்

ஹரதி நிமேஷாத் கால:ஸர்வம் I

மாயா மய மித மகிலம் ஹித்வா

ப்ரஹ்மபதம் த்வம் ப்ரவிச விதித்வா II

தனம் , உறவுகள் உற்றார்,எதையும் எதிர்கொள்ளும் வாலிபம் இவற்றால் கர்வப்படாதே!
இதெல்லாவற்றையும் காலம் ( கால தேவதை)ஒரே நொடியில் ஒன்றுமே இல்லாமல் ஆக்கி விடும். இவையாவும் பொய்–இவற்றை விட்டு விடு
நல்லறிவு பெற்று பரப்ரஹ்மத்தை அடைய முயற்சி .

12. தினயாமிந்யௌஸாயம் ப்ராத :

சிசிரவஸந்தௌ புனராயாத: I

கால:க்ரீடதி கச்சத்யாயு :

ததபி ந முஞ்சதி ஆசாவாயு : II

பகல் இரவு,

மாலை காலை,

பின் பனிக்காலம், வஸந்த காலம்—-

இப்படி காலம் மாறி மாறி வந்துகொண்டே இருக்கும்.
காலம் ( உன் வாழ்க்கையில் ) இப்படி விளையாட,
உன் ஆயுளும் கழிந்து போகும்.
ஆனால், ஆசை விடுவதாயில்லையே!

13. கா தே காந்தா தனகதசிந்தா

வாதுல கிம் தவ நாஸ்தி நியந்தா I

த்ரிஜகதி ஸஜ்ஜன ஸங்கதி ரேகா

பவதி பவார்ணவதரணே நௌகா II

மனைவி, தனம் இவற்றில் உனக்கு ஏன் இவ்வளவுமோகம் ?
பேராசை பிடித்தவனே !உன்னை திருத்துவோரே இல்லையா?இந்த உலகில் நல்லோருடன் நட்பாகக் கூடி இருத்தல் ஒன்றுதான் ஸம்ஸாரக்கடலைக் கடக்க படகாக உனக்கு அமையும். தெரிந்து கொள்.

14. ஜடிலோ முண்டீலுஞ்சித கேச:

காஷாயாம்பர பகுக்ருத வேஷ:

பச்ய ந்நபி ச ந பச்யதி மூட:

ஹ்யுதர நிமித்தம் பகுக்ருதவேஷ: II

ஜடை வளர்ப்பது ,

மொட்டை அடித்துக்கொள்வது

கேசத்தைப் பிடுங்கிக் களைவது ,

காவித்துணியை உடுத்துவது

இவ்வாறு பற்பல வேஷமிட்டுக்கொள்கிறாய்
அறிந்தும் அறியாத,தெரிந்தும் தெரியாத மூடனாய்
வயிற்றுப்பிழைப்புக்காகப் பற் பல மாற்றம் செய்துகொள்கிறானே!

15. அங்கம் கலிதம் பலிதம் முண்டம்

தசன விஹீநம் ஜாதம் துண்டம் I

வ்ருத்தோ யாதி க்ருஹீத்வா தண்டம்

ததபி ந முஞ்சத்யாசா பிண்டம் II

உடல் கட்டுக்களெல்லாம் தளர்ந்து,
தலைக்கேசம் எல்லாம் வெள்ளையாகி நரைத்து,
வாயில் இருந்த பற்கள் எல்லாம் விழுந்துபோய்க்
கிழவனாக கையில் ஊன்றுகோல் பிடித்துத்
தள்ளாடி நடக்கிறான். அந்த நிலையிலும்
அவனைப் பிடித்திருக்கும் ஆசை அவனை விடவில்லையே!
( வயது முதிர்ந்த நிலையிலும்,அவன் ஆசையை விடவில்லையே )

16. அக்ரேவஹ்நி:ப்ருஷ்டே பானு:

ராத்ரௌ சுபுகஸமர்பிதஜானு: I

கரதல பிக்ஷஸ்தருதல வாஸ:

ததபி ந முஞ்சத்யாசாபாச: II

தனக்கு முன்பக்கம் தீ எரிக்கிறது:

பின்புறம் சூர்யனும் எரிக்கிறது :

(குளிரில்) இரவில் முழங்காலைத் தாடையோடு இணைத்துப் படுக்கிறான். பிச்சை எடுக்கப் பாத்ரம் கூட இல்லை. கையிலேயே வாங்கிக்கொள்கிறான் .
வாசமோ , மரத்தினடியில் தான்.
என்றாலும், அவன் ஆசாபாசத்தில் ஆழ்கிறானே !

17. குருதே கங்காஸாகர கமநம்

வ்ரதபரிபாலன மதவா தானம் I

ஜ்ஞானவிஹீந:ஸர்வமதே ந

முக்திம் ந பஜதி ஜன்மசதேந II

கங்கையென்றும் , ஸமுத்ரமென்றும் தீர்த்தாமாடுகிறான்
வ்ரதம் இருக்கிறான். , தானம் கூடச் செய்கிறான்.
ஆனால், எந்த மதத்திலும் ஆழ்ந்து அறிவில்லாதவனாக இருக்கிறான்.அவன் எவ்வளவு பிறவி எடுத்தாலும் முக்தி அடைவதில்லை.

18. ஸுரமந்திர தருமூலநிவாஸ:

சய்யா பூதலமஜினம் வாஸ: I

ஸர்வபரிக்ரஹ போக த்யாக:

கஸ்ய ஸுகம் நகரோதி விராக: II

பகவான் கோயிலிலோ மரத்தடியிலோ தங்கி,
கட்டாந்தரையில் படுத்து, உடையாக மான் தோல் முதலியவற்றையே உடுத்தி,கொடுப்பவர்களிடமிருந்து வாங்கிக்கொள்வதை நிறுத்தி,சுகபோகங்களை அவற்றால் வரும் அனுபவத்தையும் விட்டொழித்து
வைராக்கியத்துடனிருப்பது அனைவருக்குமே சுகம்தான்

19. யோக ரதோ வா போகரதோ வா

ஸங்கரதோ வா ஸங்கவிஹீந: I

யஸ்ய ப்ரஹ்ணி ரமதே சித்தம்

நந்ததி நந்ததி நந்தத்யேவ II

யோகத்தில் ஆழ்ந்தவனாக இருந்தாலும்,

சுகபோகங்களில் திளைத்திருந்தாலும் ,

ஸத்ஸங்கம் இருந்தாலும் , இல்லாவிட்டாலும்
யாருடைய மனம் பகவானில் திளைக்கிறதோ/ களிப்படைகிறதோஅவனே சந்தோஷமடைவான் : அவனே சந்தோஷிப்பான்:
சந்தோஷத்திலேயே திளைத்திருப்பான் .

20. பகவத்கீதா கிஞ்சித் அதீதா

கங்காஜல லவ கணிகா பீதா I

ஸக்ருதபியேந முராரி ஸமர்சா

க்ரியதே தஸ்ய யமேன நசர்சா II

பகவத்கீதை, கொஞ்சமேனும்,படித்திருந்தாலும்,
ஒரு துளி கங்காதீர்த்தம் அருந்தியிருந்தாலும் ,
ஒரே தடவை நாராயணனை பூஜித்திருந்தாலும்
அதுவே போதும்—- அவன் விஷயத்தில்
யமனின் வாதனை இருக்காது

21. புனரபி ஜனனம் புனரபி மரணம்

புனரபி ஜனனீஜடரே சயனம் I

இஹ ஸம்ஸாரே பகுதுஸ்தாரே

க்ருபயாsபாரே பாஹி முராரே II

மறுபடியும் பிறப்பு:மறுபடியும் இறப்பு: இப்படித் தாயின் வயிற்றில் பல தடவை ஒடுங்கிப் படுத்து உழல்கிறேனே
இந்தக்கரை கடக்க முடியாத ஸம்ஸார வாழ்க்கையில், நான் அக்கரை காண கடாக்ஷித்து அருளமாட்டாயா, கண்ணா?( முராரே )

22. ரத்யா கர்பட விரசித கந்த :

புண்யாபுண்ய விவர்ஜித பந்த: I

யோகீ யோக நியோஜித சித்த :

ரமதே பாலோன்மத்த வதேவ II

தேவையில்லை என்று, தெருவில் வீசியெறியப்பட்ட

அழுக்குத் துணியை உடுத்தி,புண்யம், பாபம் எதுவும் இல்லாத மார்கத்த்தில் இழிந்து ,அஷ்டாங்க யோகம் முதலியன செய்து மனதை அடக்கிய யோகியாக இருந்தால்,பாலன் /சிறுவன் போலவும், பைத்யம் போலவும், சித்தப் பித்து அடைந்தே விடுவான்.

23. கஸ்த்வம் கோsஹம் குத ஆயாத :

காமே ஜனனீ கோ மே தாத : I

இதி பரிபாவய ஸர்வ மஸாரம்

விச்வம் த்யக்த்வா ஸ்வப்னவிசாரம் II

நீ யாரோ?நான் யாரோ ?

நான் எங்கிருந்து வந்தேனோ?

எனக்குத் தாய் தந்தையர் யாரோ?

இன்று கனவுபோன்றுக் காக்ஷியளிக்கும் உலக சுகங்களைவிலக்கித் தள்ளி எதுவும் ஸாரமில்லாதது என நினைப்பாயாக !

24. த்வயி மயி சாந்யத்ரைகோ விஷ்ணு:

வ்யர்த்தம் குப்யஸி மய்யஸஹிஷ்ணு: I

ஸர்வஸ்மின் அபி பச்யாத்மானம்

ஸர்வத்ரோத்ய்ருஜ பேத ஜ்யானம் II

உன் ஹ்ருதயத்திலும் என் ஹ்ருதயத்திலும் — எங்கும்
ஒரே விஷ்ணுவே நீக்கமற நிறைந்துள்ளார்.
ஆதலால், பொறுமையில்லாமல் ஏன் கோபம் கொள்ள வேண்டும் ?
எல்லோருக்குள்ளும் ஆத்மாவை காண வேண்டும்.( ஆத்ம தரிசனம்)
எங்கும் எதிலும் வேற்றுமையை நீக்க வேண்டும்.

25. சத்ரௌ மித்ரே புத்ரே பந்தௌ

மா குரு யத்னம் விக்ரஹஸந்தௌ I

பவ ஸமசித்த:ஸர்வத்ர த்வம்

வாஞ்சஸ்யசிராத் யதி விஷ்ணுத்வம் II

விரோதியிடமும் , நண்பனிடமும், பிள்ளையிடமும், உறவினரிடமும்பகைத்துக்கொண்டுப் பின்பு பரிவு கொள்ள முயற்சிக்காதே.சீக்கிரம் விஷ்ணுபதம் விரும்பினால் எல்லோரிடமும் நடுநிலைமையாக நடந்து கொள்வாயாக

26. காமம் க்ரோதம் லோபம் மோஹம்

த்யக்த்வாsத்மானம் பாவயகோsஹம் I

ஆத்மஜ்ஞான விஹீனா மூடா:

தே பச்யந்தே நரக நிகூடா: II

காமத்தை விடு ! குரோதத்தை விடு ! லோபத்தை விடு !

மோஹத்தை விடு ! இவற்றை ஒழித்து, நான் யார்?என்று ஆத்மாவை தேடு.
ஆத்மஜ்ஞானம் இல்லாத மூடர்கள் தான் நரகத்தில் தள்ளப்பட்டு அல்லல் படுகிறார்கள் .

27. கேயம் கீதா நாமஸஹஸ்ரம்

த்யேயம் ஸ்ரீபதிரூபம ஜஸ்ரம் I

நேயம் ஸஜ்ஜனஸங்கே சித்தம்

தேயம் தீனஜநாய சவித்தம் II

பகவத்கீதை, விஷ்ணு ஸஹஸ்ரநாமம் முதலியவற்றைப் பாராயணம் செய்!
எப்பொழுதும் ஸ்ரீபதியான நாராயணனை நினை!
ஸத்ஜனஸங்கத்தில் மனதை ஈடுபடுத்து!
ஏழை எளியோருக்குத் தானம் செய் !.

28. ஸுகத:க்ரியதே ராமாபோக:

பஸ்சாத் ஹந்த சரீரே ரோக: I

யத்யபி லோகே மரணம் சரணம்

ததபி ந முஞ்சதி பாபாசரணம் II

ஸுகத்தை விரும்பிப் பெண்களை அநுபவிக்கிறாய்: அதனால், திரேகம்வியாதியால் உன்னை வருத்துமே , அது கஷ்டமல்லவா?
உலகத்து விதிப்படி மரணம்தான் தீர்வு—என்றாலும், பாபம் செய்வது தவிர்க்கப்படவில்லையே!

29. அர்த்த மனர்த்தம் பாவய நித்யம்

நாஸ்தி தத:ஸுகலேச:ஸத்யம் I

புத்ராதபி தனபாஜாம் பீதி :

ஸர்வத்ரைஷா விஹிதா ரீதி : II

தேடும் பொருளால் தீங்குதான் வரும் என நினை.

அப்படி வரும் பொருளால் கொஞ்சமும் சுகமில்லை. இது உண்மை.ஏனெனில் பணம் உள்ளவர்கள் தன்னுடைய பிள்ளையைப் பார்த்தே அச்சபடுகின்றனர்.
இது , எங்கும் உள்ள உறுதியான நடப்புச்செயல் .

30. ப்ராணாயம் ப்ரத்யாஹாரம்

நித்யாநித்யவிவேக விசாரம் I

ஜாப்ய ஸமேத ஸமாதிவிதானம்

குர்வ வதானம் மஹதவதானம் II

ப்ராணாயாமம் செய்வது, ப்ரத்யாஹாரம் செய்வது, நடுவே நித்ய வஸ்து அநித்ய வஸ்து
ஆராய்ச்சியுடன் ஜபம் செய்வது,ஸமாதி நிலையில் இருப்பது,இவை யாவும், வருமுன் காக்கும் ஏற்பாடு என நினை.

31. குருசரணாம்புஜ நிர்பரபக்த:

ஸம்ஸாராத சிராத் பவமுக்த: I

ஸேந்த்ரியமானஸ நியமாதேவ

த்ரக்ஷ்யஸி நிஜஹ்ருதயஸ்தம் தேவம் II

ஆசார்யனின் திருவடிகளில் அசஞ்சலமான பக்தி வைத்து, விரைவில், இந்த ஸம்ஸாரச் சுழலினின்று விடுபடு.வெளியே தெரியும் காரணங்களைஅடக்கு—
மனதையும் அடக்கு —
அதனால், ஹ்ருதயவாசியான பகவானைத் தரிசிக்கலாம்

Sarvam Sree Hayagreeva preeyathaam
Image may contain: 2 people
Image may contain: 2 people, people standing10439509_788415517892839_3211908282372112811_n

About the Author

Leave A Response