Adaikkalappaththu&nyasa dasakam

Posted on Jan 12 2017 - 9:50am by srikainkaryasriadmin

அடைக்கலப் பத்தும், ந்யாஸ தசகமும்

அடைக்கலப் பத்தில் ஸ்வாமி தேசிகனின் பாசுரம்-

பத்திமுத லாம் அவற்றில் பதி எனக்குக் கூடாமல்
எத்திசையும் உழன்றோடி இளைத்து விழும் காகம்போல்
முத்திதரும் நகர் ஏழின் முக்கியமாம் கச்சிதன்னில்
அத்திகிரி அருளாளர்க்கு அடைக்கலம் நான் புகுந்தேனே

இதற்கு வ்யாக்யானமிட்ட வங்கீபுரம் நவநீதம்
ஸ்ரீ ராம தேசிகாசார்யர் ,அயோத்தி, மதுரை, மாயை, காசி, காஞ்சி, அவந்தி துவாரகை என்று ஏழு க்ஷேத்ரங்களை சொல்கிறார்.; திருவரங்கத்தைச் சொல்லவில்லை.

முக்தி க்ஷேத்ரங்களைப்பற்றிய ச்லோகம்

அயோத்யா மதுரா மாயா காசீ காஞ்சீ அவந்திகா
புரீ த்வாரவதீ சைவ சப்தயதே முக்திதாயிகா

இதிலும் திருவரங்கம் சொல்லப்படவில்லை

ஆனால் ஸ்ரீரங்கம் ஸ்வயம்வக்தக்ஷேத்ரங்களில் ஒன்று

மற்றும் உள்ள 7 ஸ்வயம்வக்ஷ க்ஷேத்ரங்கள்
ஸ்ரீமுஷ்ணம்
திருமலை–திருப்பதி
சாளக்ராமம்
நைமிசாரண்யம்
தோதாத்ரி
புஷ்கரம்
பதரிகாஸ்ரமம்

முக்தி தரும் நகரில்தான் , ஒரு ப்ரபன்னன் மோக்ஷம் அடைய வாஸம் செய்யவேண்டுமா?
ஸ்வயம்வக்ஷ க்ஷேத்ரங்களில் வசித்தால்,மோக்ஷம் கிட்டாதா ,என்றால்,
அப்படியல்ல—-
இங்கு ஸ்ரீ உடையவரின் வார்த்தைகளை, அவருடைய கட்டளைகளைக் காணவேணும்
இவை ஒன்பது என்று சொல்லப்பட்டாலும், 5 கட்டளைகள் என்று பிரசித்தி பெற்றவை—
1.ஸ்ரீபாஷ்யத்தை ,காலக்ஷேபம் மூலம் உணர்தல், பிறருக்கு உணர்வித்தல்,
இதற்குத் தகுதி இல்லையெனில்
2.ஆழ்வார்களின் அருளிச் செயல்களை , முக்கியமாக நம்மாழ்வாரின் திருவாய்மொழியை,
ஆசார்யன் மூலமாக சந்தை செய்து உணர்தல்,
உணர்வித்தல்,
இதற்கும் தகுதி இல்லையெனில்,
3.பகவான் உகந்து அருளிய திவ்ய தேசங்களில் திருவிளக்கு சமர்ப்பித்தல்,
திருமாலை சமர்ப்பித்தல், அமுதுபடி, சாத்துபடி செய்தல்
இதற்கும் தகுதி இல்லையெனில்,
4.த்வய மந்த்ரத்தை, அர்த்தத்துடன் தெளிந்து எப்போதும் சொல்லல்,
இதற்கும் தகுதி இல்லையெனில்,
5. என்னுடையவன் என்று அபிமானிக்கப்படும் ஒரு பாகவதரின் அபிமானத்தில்
ஒதுங்கி வாழல் –இவன் எப்படிப்பட்டவன்–? எல்லா வைஷ்ணவ லக்ஷணங்களும்
பொருந்தியவன்;அகங்கார, மமகாரங்கள் அற்றவன் ;எல்ல ஜீவன்களிடத்தும் கருணை உள்ளவன்
ஒன்பதில், மேலே கூறிய 5 போக, மீதி 4ன் விவரம்—-

1.பகவானிடம் சரணாகதி பண்ணிய ”ப்ரபன்னன்”, எதிர்காலத்தைப் பற்றிய கவலை கொள்ளக்கூடாது;
அது பகவானின் பொறுப்பு என்று இருக்க வேண்டும்
2.சரணமடைந்து, ப்ரபன்னனாகிய பிறகு, ஏற்படுகின்ற துன்பங்களும் ,கஷ்டங்களும் இன்பமும்
தமது முன்வினைப்பயனால் ஏற்படுகிறது என்று உறுதிகொள்ள வேண்டும்
3.மோக்ஷ உபாயம் என்று வேறு எதையும் செய்யலாகாது
4.திருநாராயணபுரத்தில் ஒரு குடிலாவது கட்டிக்கொண்டு, அமைதியுடனும் மனத் திருப்தியுடனும் அங்கு வஸிக்க வேண்டும்

ஸ்வாமி தேசிக ஸம்ப்ரதாயஸ்தர்கள், ”ந்யாஸ தசகம்” அல்லது ”அடைக்கலப் பத்து”
இதைத் தினந்தோறும் சொல்லிவந்தாலே போதும்—
‘ந்யாஸ தசகம்” —-சாளக்ராம ஆராதனத்தில், தினமும் சொல்லவேண்டியதொன்றாகும்

அடைக்கலப் பத்து
———————————-

சீரார் தூப்புல் திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்

1. பத்தி முதலாமவற்றில் பதி எனக்குக் கூடாமல்
எத்திசையும் உழன்றோடி இளைத்துவிழும் காகம்போல்,
முத்திதரும் நகரேழில் முக்கியமாம் கச்சிதன்னில்
அத்திகிரி அருளாளர்க்கு அடைக்கலம் நான் புகுந்தேனே

ராமாவதாரத்தில், சீதையிடம் பெரும் குற்றம் செய்த காகம், ஸ்ரீ ராமனின் சினத்துக்கு ஆளாகி,
தன்னைக் காப்பாற்றிக்கொள்ள மூவுலகும் திரிந்து, ஓடி, வேறு ஒருவரும் காப்பாற்றுவர் இல்லையாதலால்,
ஸ்ரீ ராமபிரானையே சரணம் அடைந்ததைப் போல, பக்தி முதலிய மிக்க கடுமையான உபாயங்களால்,
பலன் பெறச் சக்தியற்ற அடியேன், ”ப்ரபத்தியே” உபாயமெனத் தீர்மானித்து, மோக்ஷத்தைத் தரும்
ஏழு நகரங்களில், ப்ரதானமான காஞ்சியில், நித்யவாஸம் செய்யும் பேரருளாளனைச் சரணம் அடைந்தேன்

ந்யாஸ தசகம்
—————————

ஸ்ரீமாந் வேங்கட நாதார்ய : கவிதார்க்கிககேஸரீ |
வேதாந்தாசார்ய வர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ||

1. அஹம் மத்ரக்ஷண பரோ மத்ரக்ஷண பலம் ததா |
ந மம ஸ்ரீபதேரேவத்யாத்மாநம் நிக்ஷிபேத்புத : ||

என்னுடைய ஸ்வரூபம், காக்கும் பொறுப்பு ,காப்பதனால் அடையும் பலன் இந்த மூன்றிலும் அடியேனுக்கு எந்த சம்பந்தமும் இல்லை .எம்பெருமானுக்கே
என்று உணர்பவன் தனது ஆத்மாவை எம்பெருமானிடம் சமர்ப்பிக்கவேண்டும்

அடைக்கலப்பத்து
———————————–

அநந்யகதித்வம் —-மோக்ஷத்தைத் தவிர, இதர பலன்களை வெறுப்பது–எம்பெருமானைத் தவிர மற்றத் தெய்வங்களை நாடாமல் இருப்பது

2. சடைமுடியன் சதுர்முகனென்று இவர்முதலாம் தாம் எல்லாம்
அடைய வினைப்பயனாகி அழிந்துவிடும்படிக்கண்டு
கடிமலராள் பிரியாத கச்சிநகர் அத்திகிரி
இடமுடைய அருளாளர் இணையடிகள் அடைந்தேனே

ப்ரஹ்மா சிவன் முதலிய தேவர்களின் அதிகாரம் கர்மத்தால் வந்து,அது அழிந்ததும் அதிகாரமும் அழியும் என்று அறிந்து அல்பசுகங்களைவெறுத்து, பெருந்தேவித் தாயார் ஸமேதனான பேரருளாளனைச் சரணமடைகிறேன்

ந்யாஸ தசகம்
—————————–

2.நியஸ்யாம்யகிஞ்சிந : ஸ்ரீமந்நநுகூலோந்யவர்ஜித : |
விச்வாஸ ப்ரார்த்தநா பூர்வம் ஆத்ம ரக்ஷா பரம் த்வயி ||

எம்பெருமானே—உனக்கு அநுகூலனாகவும் ,உனக்குப் ப்ரதி கூலனாகஇல்லாமலும்,உன்னிடம் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ள அடியேனை ஏற்றுக்கொள்ளப்பிரார்த்தித்து, அடியேனைக் காக்கும் பொறுப்பை உன்னிடமே ஒப்படைக்கிறேன்

அடைக்கலப்பத்து
————————————-

3.தந்திரங்கள் வேறின்றித் தமதுவழி யழியாது
மந்திரங்கள் தம்மாலும் மற்றுமுள்ள உரையாலும்
அந்தரம் கண்டு அடிபணிவார் எல்லார்க்கும் அருள்புரியும்
சிந்துர வெற்பு இறையவனார் சீலம் அல்லது அறியேனே

பக்தியோகத்தில் உள்ள இடர்களையும், ப்ரபத்தியில் எல்லோர்க்கும் அதிகாரம் உண்டு என்பதையும் நினைத்து, வேறு உபாயங்களை செய்யாது,
வர்ணாஸ்ரமத்தில் நின்று, வேதம், ஆசார்யன் இவர்களால் சொல்லப்பட்டவாறு சரணமடைந்தால் பேரருளாளன் விரும்பிய பலனைத் தருவான்
என்பதைத் தவிர வேறொன்றும் சொல்லமாட்டேன்

ந்யாஸ தசகம்—3
——————————
3. ஸ்வாமீ ஸ்வசேஷம் ஸ்வவஸம் ஸ்வபரத்வேந நிர்பரம் |
ஸ்வதத்த ஸ்வதியா ஸ்வார்த்தம் ஸ்வஸ்மின் நியஸ்யதி மாம் ஸ்வயம் ||

எம்பெருமானே–அடியேன் உனக்கு வசப்பட்டவன்.உனது உடைமை.அடியேனுக்குப் பொறுப்பு இல்லை–யாவும் உன்னுடைய பொறுப்பே–அடியேன் உனக்காக உள்ளவன்.நீயே, நீ தந்த புத்திக்கு உணர்த்தி, அடியேனை
உன்னிடத்தில் ஸமர்ப்பித்துக்கொள்

அடைக்கலப் பத்து–4
—————————————
காகம் இராக்கதன் மன்னர் காதலி கத்திரபந்து
நாகம் அரன் அயன் முதலா நாகநகரார் தமக்கும்
போகமுயர் வீடுபெறப் பொன்னருள் செய்தமைகண்டு
நாகமலை நாயகனார் நல்லடிப்போது அடைந்தேனே

தன்னைச் சரணம் என்று அடைந்த காகம், விபீஷணன், த்ரௌபதி ,க்ஷத்ரபந்து கஜேந்த்ரன் ,காளியன் ,சிவன், ப்ரஹ்மா, முதலானவர்களையும்தேவர்களையும் அவரவர் ப்ரார்த்தனைக்குச் செவிசாய்த்து, ஸம்ஸாரச்
சுகங்களையும் மோக்ஷத்தையும் அளித்ததால், அடியேனும் உன் திருவடிகளைச்சரணம் என்று அடைந்தேன்
ப்ரபத்திக்கு முக்கிய அங்கமான–மஹாவிச்வாஸம் சொல்லப்படுகிறது

ந்யாஸ தசகம்—4
————————————-
ஸ்ரீமந்நபீஷ்ட வரத த்வாமஸ்மி சரணம் கத : |
ஏதத்தேஹாவஸாநே மாம் த்வத் பாதம் ப்ராபய ஸ்வயம் ||

கேட்ட வரத்தை அருளும் அருள்வரதா !உன்னைச் சரணமாக அடைந்தேன்–அடியேனின் இந்த ஜென்ம முடிவில், உன் திருவடிகளில் சேர்த்துக்கொள்வாயாக

அடைக்கலப் பத்து–5
————————————
உகக்கும் அவை உகந்து உகவா அனைத்தும் ஒழிந்து உறவுகுணம்
மிகத் துணிவு பெற உணர்ந்து வியன் காவல் என வரித்து
சகத்தில் ஒரு புகலில்லாத் தவம் அறியேன் மதிட்கச்சி
நகர்க் கருணை நாதனை நல்லடைக்கலமாய் அடைந்தேனே

வேறு ஒரு அடைக்கலமும் உபாயமும் அறியாத அடியேன்,பேரருளாளன் உகப்பதைச் செய்யவும், உகக்காதவற்றை விலக்கியும்,(மோக்ஷ) பலனை அடைவதில் உறுதியும், அவனிடத்தில்
மஹாவிச்வாஸத்துடனும், ஜீவாத்ம —பரமாத்ம
சம்பந்தத்தைத் தெளிந்தும் , குணங்களை வியந்தும் , அவனே ரக்ஷகன்என்கிற உறுதியுடன் , பேரருளாளனை, அடைக்கலமாய் அடைந்தேன்

ப்ரபத்திக்கு உள்ள ஐந்து அங்கங்கள் சொல்லப்படுகின்றன —-

உகக்குமவை உகந்து—-ஆநுகூல்ய ஸங்கல்பம்
உகவாவனைத்துமொழிந்து —-ப்ராதிகூல்ய வர்ஜநம்
மிகத் துணிவு பெறவுணர்ந்து —–மஹாவிச்வாஸம்
காவலெனவரித்து—கோப்த்ருவவரணம்
புகலில்லாத் தவமறியேன் —-கார்ப்பண்யம்
இது அங்கி—-அடைக்கலமாயடைந்தேன்—-ஆத்ம ஸமர்ப்பணம்

ந்யாஸ தசகம்—5
———————————
த்வச்சேஷத்வே ஸ்திர தியம் த்வத்ப்ராப்த்யேக ப்ரயோஜனம் |
நிஷித்த காம்ய ரஹிதம் குருமாம் நித்ய கிங்கரம் ||

அடியேன், உன்னுடைய அடிமை என்று அடியேன் உறுதியுடன் நம்புகிறானாகவும்,உன்னை அடைவதே முக்கிய பயன் என்று எண்ணுகிறானாகவும் , சாஸ்த்ரங்களில் சொல்லப்பட்ட , காம்ய கர்மா,
நிஷித்த கர்மா –இவைகளை முற்றிலும் விரும்பாதவனாகவும் ,நித்யமும் உனக்குக் கைங்கர்யம் செய்பவனாகவும் அடியேனுக்கு அருளவேண்டும்

அடைக்கலப் பத்து–6
—————————————
அளவுடையார் அடைந்தார்க்கும் அதன் உரையே கொண்டவர்க்கும்
வளவுரை தந்தவன் அருளே மன்னிய மாதவத்தோர்க்கும்
களவு ஒழிவார் எமரென்ன இசைந்தவர்க்கும் காவலராம்
துளவமுடி அருள் வரதர் துவக்கில் எனை வைத்தேனே

1,ஸ்வநிஷ்டை 2.உக்தி நிஷ்டை,3.ஆசார்ய நிஷ்டை , 4.பாகவத நிஷ்டைஎன்கிற நான்கு வகைப் ப்ரபத்தியில் ஏதாகிலும் ஒன்றை அநுஷ்டித்தவருக்குப்
பிரார்த்தித்த பலனை அருள்கிற ேரருளாளனோடு,அடியேனையும்
ஸம்பந்தப்படுத்திக் கொண்டேன்

ந்யாஸ தசகம்—6
————————————
தேவீ பூஷண ஹேத்யாதி ஜுஷ்டஸ்ய பகவம்ஸ்தவ |
நித்யம் நிரபராதேஷு கைங்கர்யேஷு நியுங்க்ஷ்வ மாம் ||

ஹே—பகவானே—-உன்னுடைய தேவியர், திருவாபரணங்கள் ,திவ்ய ஆயுதங்கள் , உனக்குச் செய்யும் கைங்கர்யங்களைப்போல ,அவற்றில் அடியேனையும் நியமித்து அருள்வாயாக

அடைக்கலப் பத்து–7
———————————–
உமதடிகள் அடைகின்றேன்என்று ஒருகால் உரைத்தவரை
அமையும் இனி என்பவர்போல் அஞ்சல் எனக் கரம் வைத்துத்
தமது அனைத்தும் அவர்தமக்கும் வழங்கியும்தான் மிக விளங்கும்
அமைவுடைய அருளாளர் அடியிணையை அடைந்தேனே

ஒருதடவை ப்ரபத்தியை அநுஷ்டித்தவனைக் குளிர்ந்து நோக்கி,நீ பலனடைய இதுவே போதுமானது என்பான்போலஅபயமுத்ரையைக் காட்டியும், தன்னையும் தன் வஸ்துக்களையும்
அனுபவிக்கக் கொடுத்தும் , ப்ரபன்னனின் உபாயத்தை ஏற்றுஅப்போதே பலனைக் கொடுத்தும் அருள்கிற ,பேரருளாளன் திருவடிகளைச் சரணமடைந்தேன்

ந்யாஸ தசகம்—7
————————————
மாம் மதீயம் ச நிகிலம் சேதநாசேதநாத்மகம் |
ஸ்வகைங்கர்யோபகரணம் வரத ஸ்வீகுரு ஸ்வயம் ||

ஹே—வரதா —-அடியேனையும், சேதநாசேதனங்களாக உள்ள அடியேனின் உடைமை அனைத்தையும், உன் கைங்கர்யத்துக்கு என, ஏற்றுக்கொள்வாயாக

அடைக்கலப் பத்து–8
————————————–
திண்மை குறையாமைக்கும் நிறைகைக்கும் தீவினையால்
உண்மை மறவாமைக்கும் உளமதியில் உகக்கைக்கும்
தண்மை கழியாமைக்கும் தரிக்கைக்கும் தணிகைக்கும்
வண்மையுடை அருளாளர் வாசகங்கள் மறவேனே

ப்ரபத்திக்குப் பிந்தைய நிலை மஹாவிச்வாஸம் குறையாமல் இருக்கவும், ஞானம் நிரம்பி நிற்கவும்,
பாபாவினையால், உண்மை அறிவு மறக்காமல் இருக்கவும்,தத்வ ஞானத்தால் மகிழவும், அடியேன் என்கிற உணர்ச்சி நீங்காதிருக்கவும்
மோக்ஷ பர்யந்தம் உயிர், உடலில் தரிக்கவும், ஸம்ஸாரதாபம் ஆறவும்பேரருளாளனுடைய வாசகங்களான ”சரம ச்லோகம்” போன்ற உபதேசங்களை
–இவற்றை மறவேன்

ந்யாஸ தசகம்—8
————————————
த்வதேக ரக்ஷ்யஸ்ய மம த்வமேவ கருணாகர |
ந ப்ரவர்த்தய பாபாநி ப்ரவ்ருத்தாநி நிவர்த்தய ||

ஹே–கருணாகர ! உன் ஒருவனால்தான் அடியேனைக்
காக்க இயலும். அடியேனிடம் பாவங்கள் சேராமல், தடுப்பாயாக.சேர்ந்தாலும் விலக்குவாயாக .

அடைக்கலப் பத்து-9
————————————-
சுருதி நினைவு இவையறியும் துணிவுடையார் தூய் மொழிகள்
பரிதிமதி ஆசிரியர் பாசுரம் சேர்ந்து அருக்கணங்கள்
கருதியொரு தெளிவாளால் கலக்கம் அறுத்து அத்திகிரி
பரிதிமதி நயனமுடைப் பரமன் அடி பணிந்தேனே

வேதங்கள், ஸ்ம்ருதிகள், ஆழ்வார்களின் அருளிச் செயல்கள்,ஆசார்யர்களின் உபதேசங்கள், —ஆகியவற்றைத் திரும்பத் திரும்ப நினைத்து, வேதாந்தங்களின் ஸூக்ஷ்ம அர்த்தங்களை அறிந்து,
அந்த ஞானத்தால் மனக்கலக்கத்தைப் போக்கி, பேரருளாளன் திருவடிகளை எப்போதும் தொழுகின்றேன்

ந்யாஸ தசகம்—9
———————————
அக்ருத்யாநாம் ச கரணம் க்ருத்யாநாம் வர்ஜநம் ச மே |
க்ஷமஸ்வ நிகிலம் தேவ ப்ரணதார்த்திஹர ப்ரபோ ||

ப்ரணதார்த்தி ஹர ப்ரபோ ! ப்ரபன்னர்களைக் காப்பவனே !
அடியேன் செய்யும் பாவங்களையும் புண்யங்களையும்,
பொறுத்துக்கொள்

அடைக்கலப் பத்து–10
———————————————-
திருமகளும் திருவடிவும் திருவருளும் தெள்ளறிவும்
அருமை இலாமையும் உறவும் அளப்பரிய அடியரசும்
கருமம் அழிப்பளிப்பு அமைப்பும் கலக்கம் இலா வகைநின்ற
அருள் வரதர் நிலை இலக்கில் அம்பு என நான் அமிழ்ந்தேனே

பிராட்டியை விட்டு என்றும் பிரியாத, சுபாச்ரியத் திருமேனி உடைய ,அனைத்தும் அறிந்த , திருவடி அடைந்தவரிடம் மிக்க கருணை உள்ள
எளியவனான , சேதனாசேதனங்களை சரீரமாகக் கொண்ட ,அனைத்தையும் படைத்துக் காத்து அழித்து, எல்ல உலகையும் ஆளுகிற இவை யாவும் எப்போதும் விலகாதிருக்கிற–பேரருளாளனின்
திருவடிகளில் பிரிக்கமுடியாதபடி, கலந்தேன்

ந்யாஸ தசகம்—10
————————————–
ஸ்ரீமாந் நியத பஞ்சாங்கம் மத்ரக்ஷண பரார்ப்பணம் |
அசீகரத் ஸ்வயம் ஸ்வஸ்மிந்நதோஹமிஹ நிர்பர : ||

ஸ்ரீமானாகிய தேவப்பெருமானே ! முக்யமான ஐந்து அங்கங்களுடன் கூடிய அடியேனின் ”பர ஸமர்ப்பண”த்தை நீயே ஏற்றுக்கொண்டாய்.
ஆகையால், இவ்விஷயத்தில் அடியேனுக்குப் பொறுப்பு
இல்லாதவனாக ஆகிறேன்

கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குணசாலிநே |
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம : ||

அடைக்கலப் பத்து–11
—————————————
ஆறு பயன் வேறு இல்லா அடியவர்கள் அனைவர்க்கும்
ஆறும் அதன்பயனும் இவை ஒருகாலும் பலகாலும்
ஆறுபயன் எனவே கண்டு அருளாளர் அடியிணைமேல்
கூறிய நற்குண உரைகள் இவைபத்தும் கோதிலவே

பாகவதர்கள், பேரருளாளனையே உபாயமாகவும் பலனாகவும் கொண்டவர்கள்;இவர்கள் செய்யும் ”ப்ரபத்தி” ஒருதரம் செய்தாலே போதும் ஆனால், அதனால் வரும் பலனான ”மோக்ஷம்”எப்போதும் அனுபவிக்கலாம்.இந்த உண்மைகளை உணர்ந்து, பேரருளாளனின்
திருவடிப்பெருமையைப் பேசும் இந்தப் பத்துப் பாசுரங்களும் எவ்வகைக் குற்றமில்லாமல் ப்ரகாசிப்பவன

ஸ்ரீமதே நிகமாந்த மஹா தேசிகாய நம :


Sarvam Sree Hayagreeva preeyathaamSwami Desikan--1391693_171664163036580_1973654931_n

About the Author

2 Comments so far. Feel free to join this conversation.

  1. Nandha kumara ramanuja dhasan December 12, 2017 at 6:13 am - Reply

    ஸ்ரீ வேதாந்த தேசிகர் திருவடிகளே சரணம்.

    • srikainkaryasriadmin January 12, 2018 at 4:22 am - Reply

      thanks

Leave A Response