Thaniyan–3

Posted on Jan 26 2017 - 5:34am by srikainkaryasriadmin

FEATURED IMAGE—SRIMAN NATHAMUNIKAL

தனியன்—–தெரிவோம்—தெளிவோம் —-3
——————————————————————————-

இதற்கு முன்பு—ராமாநுஜ தயா பாத்ரம்——
என்கிற தனியனைப் பற்றிய விவரங்களைத் தெரிந்துகொண்டோம்.
இந்தத் தனியன்,திவ்ய ப்ரபந்த பாராயணம் தொடங்குவதற்கு முன்பு,
சொல்லப்படுகிறது.

இப்போது, அடுத்த தனியன்—-

லக்ஷ்மீ நாத ஸமாரம்பாம் நாதயா முநிமத்யமாம் |
அஸ்மதார்சாய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம் ||

ஸ்ரீ கூரத்தாழ்வான் அருளிய தனியன்.
நாலாயிரத் தனியன்களில், ”ராமாநுஜ தயாபாத்ரம் —-”
என்கிற தனியனுக்கு அடுத்ததாகக்,, கோஷ்டியில் சொல்லப்படுகிறது.

இது குரு பரம்பரை சம்பந்தப்பட்ட தனியன்.

இந்தத் தனியனை அருளிய ஸ்ரீ கூரத்தாழ்வானைப் பற்றிய குறிப்பு
(மிகச் சுருக்கமாக)

ஸ்ரீ கூரத்தாழ்வான் ,காஞ்சி மாநகரின் வடமேற்கே அமைந்துள்ள ,
கூரம் என்கிற ”ஸ்ரீ க்ராமத்தில் ”, கி.பி. 1031ம் ஆண்டு, தை மாத ஹஸ்த
நக்ஷத்ரத்தில் ,ஹரித கோத்ரத்தில், அவதரித்தவர் .ஸ்ரீ வத்ஸமிச்ரர்,என்றும்
ஸ்ரீவத்ஸாங்கமிச்ரர் என்றும் அழைப்பர்.செல்வச் செழிப்பில் மிதந்தவர்.
( குரு பரம்பரா ப்ரபாவம்—, உபந்யஸிக்கும்போது,விரிவாகச் சொல்கிறேன் )

எம்பெருமான், ஆழ்வார்கள், ஆசார்யர்கள் –இவர்களிடம்,விசேஷ பக்தியுடன்
இருந்ததால், ”ஆழ்வான் ” என்றே பெருமையுடன் அழைக்கப்பட்டார்.
பகவானிடம், அனவரதமும், அத்யந்த பக்தியுடன் விளங்கினார்.
இதனால்,செல்வத்திலும், சுகபோகங்களிலும் பற்று, அற்று விழ ,
எல்லாச் செல்வங்களையும் ஸத்கார்யங்களுக்கும், வறியோர்க்கும் வாரிவழங்கி,’
ஸதாசார்ய சம்பந்தத்தைத் தேடி காஞ்சிக்கு வந்தார்.

இவர், எம்பெருமானாரை விட வயதில் மூத்தவர்.அதிக திருநக்ஷத்ரங்கள் உள்ளவர்.
ஸ்ரீ பராசர பட்டர், ஸ்ரீ வேதவ்யாஸ பட்டர் -இவர்களின் திருத்தகப்பனார் .
நிகரில்லாத வைராக்யமும்,நெறியும் எம்பெருமானார்க்கு இணையான
ஜ்ஞானமும் கொண்டவர்.

எழில்நகர் புகழ்க் காஞ்சிக்கு வந்த இவர், அங்கு, ஸன்யாச ஆஸ்ரமத்தில் ,பரம
தேஜஸ்ஸுடன் வீற்றிருந்த யதிராஜரின் திருவடிகளைச் சரணம் என்று அடைந்து,
”பஞ்ச ஸம்ஸ்காரம் ” முதலியவற்றைப் பெற்று , யதிராஜரை எப்போதும்
பிரியாமல், அவருக்கே அனவரதமும் கைங்கர்யம் செய்து வந்தார்.
இந்த நிலையில்,ஸ்ரீ ராமாநுஜர் , ஸ்ரீ ஆளவந்தாரின் உள்ளக்கிடக்கையை
நிறைவேற்ற சங்கல்பம் மேற்கொண்டு,”ப்ரஹ்ம ஸுத்ரத்”துக்கு வ்யாக்யானம்
எழுதுவதற்கு யோசித்தார்.காஷ்மீர தேசத்தில், சாரதா பீடத்தில்,
”போதாயன வ்ருத்தி”க்ரந்தம் இருப்பதை அறிந்து, அங்கு , கூரத்தாழ்வானுடன்
சென்றார்.
சாரதா பீடத்தில் அங்குள்ள அதிகாரிகளின் அநுமதியுடன் ,”போதாயன வ்ருத்தியைப்
படித்து, அதை நகலெடுக்க முற்பட்டார்.
இதை வேறு விதமாகவும் கூறுவர்.
படித்த நிலையில், பாதியில், ஒருநாள், அந்த அதிகாரி க்ரந்தத்தைப் பறித்துச்
சென்றதாகவும் கூறுவர் .
யதிராஜர் மிகவும் வருத்தமடைந்தார். அப்போது கூரத்தாழ்வான், யதிராஜரிடம்
”தேவரீர் உறங்கும் வேளையில் அடியேன் இந்த க்ரந்தம் முழுவதையும் படித்து
மனத்தில் நிறுத்திவைத்துள்ளேன்;கவலை வேண்டா” என்று விண்ணப்பித்தார்.
ஒரே ராத்ரியில், லக்ஷ க்ரந்தாத்தமகமான (சதகோடி என்றும் சொல்வர்),
போதாயன வ்ருத்தியை மனப்பாடம் செய்துகொண்டார்.

இதனால் சந்தோஷம் அடைந்த யதிராஜர் ,கூரத்தாழ்வானுடன் ஸ்ரீரங்கம் திரும்பி
வந்தார்.யதிராஜர் சொல்லச் சொல்ல, கூரத்தாழ்வான் எழுத, இதுவே
”ப்ரஹ்ம ஸுத்ரத்”துக்கு , விசிஷ்டாத்வைதபரமான வ்யாக்யானமாயிற்று.
இதுவே ‘காஷ்மீரத்தில் ஸ்ரீ ஸரஸ்வதி தேவியால் ”ஸ்ரீ பாஷ்யம்” என்று
பஹுமானிக்கப்பட்டது .

கங்கைகொண்ட சோழபுரத்திலிருந்து ,சோழநாட்டை ஆண்ட ,தீவிர சிவபக்த
அரசன் , அவனுடைய அமைச்சன் நாலூரானுடன் சேர்ந்துகொண்டு,
”சிவாத் பரதரம் நாஸ்தி”—சிவனை விடஉயர்ந்த பரதேவதை கிடையாது என்று
ஒரு ஓலையில் எழுதி வைணவ வித்வான்ககளிடம், கட்டாயப்படுத்திக் கையொப்பம்
வாங்கிவரும்போது, யதிராஜரிடம் அப்படிக் கையெழுத்துப் பெறவேணும் என்று
நாலூரான் தூண்டுதலால், ஸ்ரீரங்கத்துக்குச் சேவகரை அனுப்பி, யதிராஜரை
அழைத்து வரச் சொல்ல, இதை அறிந்த கூரத்தாழ்வான், தானே காஷாயம் தரித்து,
பெரியநம்பிகளுடன் அரச சபைக்குச் சென்று,
ஏக : ப்ராஸீஸரத் பாதம், அந்ய :ப்ராக்ஷாலயந் முதா |
அபரோ அதீதரந்மூர்த்நா கோதிக :தேஷூ கண்யதாம் ||

ஒருவன் திருவடியை நீட்டினான்;இன்னொருவன் சந்தோஷத்துடன் அத்திருவடியை
அலம்பினான்;மற்றோருவன், அத்திருவடி தீர்த்தத்தைத் தலையில் தரித்தான்.
இவர்களில் உயர்ந்தவர் யார் என்பது உங்களுக்குத் தெரியுமே !

இதனால் கோபமடைந்த அரசனும் நாலூரானும் மிகக் கடுமையாக நிர்ப்பந்தம்
செய்யவே,
”த்ரோண மஸ்தி தத : பரம் “‘ ( முகத்தல் அளவையில்,சிவம் என்றால் ”குறுணி”
”த்ரோணம் ”என்றால் பதக்கு )என்று எழுதிக் கையெழுத்திட , அரசன் ,கூரத்தாழ்வானின்
கண்களைப் பறிக்க சேவகர்களுக்குக் கட்டளையிட,
உடனே கூரத்தாழ்வான் ”உன்னைப்போன்ற பகவத் த்வேஷிகளைப் பார்த்த கண்கள்
எனக்கு வேண்டியதில்லை” என்று கூறி, தன்னுடைய கண்களைத் தன் கையாலேயே
பறித்து, அரசவையில் வீசி எறிந்தார்.பெரியநம்பிகளும் கண்களை இழந்தார்.
திரும்ப ,ஸ்ரீரங்கம் வந்தவர்,

கண்களை இழந்தநிலையிலும் பெரியபெருமாளைத் தரிசிக்க, தட்டுத் தடுமாறி
கோபுர வாயிலுக்குப் போக, காவலர்கள், ‘உடையவரின் சிஷ்யர்கள் எவரையும்
கோயிலில் அனுமதிக்க அதிகாரமில்லை; அவருடைய சம்பந்தம் இல்லை என்று சொல்வோர்
உள்ளே செல்லலாம் ”என்று தடுக்க, எம்பெருமானார்சம்பந்தமில்லாத எம்பெருமான் எனக்கு வேண்டாம்
என்று சொல்லி, தரிசனம் செய்யாமலே திரும்பினார்;இது அவருடைய
அளவில்லா ஆசார்ய பக்தியைக் காட்டுகிறது.
பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து, எம்பெருமானார் ஸ்ரீரங்கம் திரும்பிவந்து,கூரத்தாழ்வான்
திருமாளிகைக்குச் சென்று, ஆழ்வானை வாரி அனைத்து, ”ஆழ்வானே —விசிஷ்டாத்வைத
தர்சனத்துக்காக ,உமது தரிசனத்தை இழந்தீரே ”என்று விம்மி அழுதார்.
அதற்கு ஆழ்வான், ”ஒரு ஸ்ரீவைஷ்ணவன் திருமண் கோணியது என்று அபசாரப்பட்டிருப்பேனோ ”
என்றாராம். இப்படிப் பல செய்திகள் இவருடைய சரிதத்தில் உள .விரிக்கின் பெருகும்.

ஒருசமயம், கூரத்தாழ்வான், ரங்கநாதரை ஸேவிக்கும்போது ‘இப்போதே பரமபதம் அடைந்து
உமக்குக் கைங்கர்யம் செய்யவேணும் ” என்று பிரார்த்திக்க, பெரியபெருமாளும் ”அப்படியே”
என்க, ஆழ்வான் எம்பெருமானாரின் திருவடிகளைத் த்யானித்தபடி அவ்வாறே பரமபதம் அடைந்தார்.

இவர் எழுதிய நூல்கள்—-
பஞ்சஸ்த்வம் –சாரீரக ஸாரம் என்பர்.
புருஷகார பூதையான ஸ்ரீரங்க நாச்சியாரைப் பற்றி—— ஸ்ரீஸ்த்வம்
பரமபதநாதனைப் பற்றியதும் ஸ்ரீபாஷ்ய ஸாரமுமான —-ஸ்ரீ வைகுண்டஸ்த்வம்
விபவாதாரங்களைச் சொல்லும் —-அதிமாநுஷஸ்த்வம்
திருமாலிருஞ்சோலை அழகனைப் பற்றி–ஸ்ரீ ஸுந்தரபாஹுஸ்த்வம்
கச்சிநகரப்பனைப்பற்றி —ஸ்ரீ வரதராஜஸ்த்வம்

அபிகமன ஸாரம் —–வடுகநம்பிகளுக்காக
சரம ச்லோக வ்யாக்யானம்
புருஷஸூக்த பாஷ்யம்
யமக ரத்நாகரம் (பகவான் க்ருஷ்ணனைப் பற்றி தெலுங்கு லிபியில்
மஹா காவ்யம் என்பர். இதை, கூரத்தாழ்வான் எழுதவில்லை என்றும்,
அவர் வம்சத்தில் உதித்த வேறொரு ஸ்ரீவத்ஸாங்க மிச்ரர் எழுதியது என்றும் சொல்வர் )
விவாஹம் முதலிய சுப முஹூர்த்தங்களில் பாடப்படும் லக்ஷ்மி கல்யாணமே வைபோகமே,
மடியிலெடுத்துப் பாலகனை, ஸ்ரீராம், ஜய ஜய , லாலி, ஊஞ்சல் —-இவைபோன்றவைகளும்
கூரத்தாழ்வான் அருளியதாகவும் விவாஹ காலத்தில்,”வாரணமாயிரம்”அநுஸந்திக்கும்படியான
ஏற்பாடுகளைச் செய்தவரும் இவரே என்பர்.

ஆழ்வான், கூரநாதர், கூராதிநாதர் ,நடமாடும் பதஞ்சலி,ஸ்ரீவத்ஸாங்கமிச்ரர்,ஸ்ரீ வத்ஸசிஹ்னர் ,
எல்லாமும் இவரே—-
வடுகநம்பியின் ஆசார்யன் —
அனுஷ்டானத்தில் பலரைத் நிறுத்தியவர்—-
இவரின் முன்னோர்கள்,கூரத்தில் குடியேறுவதற்கு முன்பு, திருமாலிருஞ்சோலை அடிவாரத்தில்,
சுந்தரத்தோளுடையானுக்குக் கைங்கர்யங்கள் செய்துவந்தனர் என்று சொல்வர்.

இவர் ஆத்மகுணச் செம்மல்
பஞ்சகால பராயணர்
நடமாடும் பதஞ்சலி
எம்பெருமானாரின் நிகரற்ற அத்யந்த சிஷ்யர்
எம்பெருமானார்க்குப் ”பவித்ரம்”போன்றவர்
முக்குறும்பறுத்தவர்
தர்ஸனத்துக்குத் தர்ஸனம் தந்தவர்
பெரியநம்பிகளால் கொண்டாடப்பட்டவர்
எம்பெருமானாரின் உறவுக்காக, எம்பெருமானின் ஸேவையையே புறந்தள்ளியவர்
ஆசார்யனையே ,உய்வித்த சிஷ்யர்
வேதமாதாவின் ”திருமாங்கல்யம்”எனப்போற்றப்பெறும் பஞ்சஸ்தவங்களை அருளியவர்

இவருடைய திருமாளிகையை, ஸ்ரீரங்கம் கிழக்குச் சித்திரை வீதியில் இன்றும் ஸேவிக்கலாம்

தனியனின் அர்த்தம் (சுருக்கமாக),
————————————————————–

லக்ஷ்மீ நாத ஸமாரம்பாம் நாதயா முநிமத்யமாம் |
அஸ்மதார்சாய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம் ||

இந்தத் தனியனில் ஸ்ரீ கூரத்தாழ்வான் , குரு பரம்பரையைக் கூறுகிறார்.
லக்ஷ்மீ நாதன் என்று ஆரம்பித்து, பரம்பரை மத்தியில் (நடுவில்) ஸ்ரீமந் நாதமுநிகளைச்
சொல்லி, அஸ்மதார்சாய பர்யந்தாம் என்று பகவத் ராமாநுஜர் வரையில் சொல்கிறார்–
இதைச் சுருக்கமாகப் பார்ப்போம்—

லக்ஷ்மியின் நாதன்—மகாலட்சுமிக்கு நாதன்—-பெரியபிராட்டியாரின் நாதன் —
ஸ்ரீமந் நாராயணன்.
இவர் முதலாக,
ஸ்ரீமந் நாதமுனிகள் நடுவாக,
அடியேனுடைய ஆசார்யன் இறுதிவரை
அடியேனுடைய ஆசார்ய பரம்பரையை வணங்குகிறேன் —

பெரிய பிராட்டியார், புருஷகாரபூதை
பெரிய பிராட்டியாரின் பதி —லக்ஷ்மிபதி —ஸ்ரீமந் நாராயணன்–
குருபரம்பரை—ஸ்ரீமந் நாராயணனிடமிருந்து தொடங்குகிறது—-
இவன் , முதல்–ப்ரதம ஆசார்யன் .
இவனுடைய ஆசார்யத்வம் பல அவதாரங்களில் மேலோங்கிப்
ப்ரகாஸிக்கிறது
ஸ்ரீ ஹயக்ரீவர் அவதாரம்—-வேதோபதேசம்
ஸ்ரீ வராஹாவதாரம்—பூமிப் பிராட்டிக்கு சரம ச்லோகம் உபதேசம்–
த்ருவனுக்கு—வேதவடிவான சங்கால் தொட்டு,பரத்வ நிர்ணயம் செய்கிற ஞானோபதேசம்
ஸ்ரீ க்ருஷ்ணாவதாரம்—கீதோபதேசம்

அர்ச்சாவதாரம்
பத்ரிகாஸ்ரமத்தில் ,திருவஷ்டாக்ஷர மந்த்ரோபதேசம்
காஞ்சியில், திருக்கச்சி நம்பிகள் மூலமாக, ஸ்ரீராமானுஜருக்கு ஆறு வார்த்தைகள் உபதேசம்
திருமங்கை ஆழ்வாருக்கு, திருமணங்கொல்லையில் மந்த்ரோபதேசம்
இப்படிப் பல—
அடுத்து –ஸ்ரீ லக்ஷ்மி —பெரிய பிராட்டி–
ஸ்ரீ ஆளவந்தார் ”சதுஸ்லோகியில் ”
காந்தஸ் தே புருஷோத்தம : பணிபதி :சய்யாஸநம் வாஹனம்
வேதாத்மா விஹகேச்வரோ யவநிகா, மாயா ஜகன்மோஹிநீ |
ப்ரஹ்மேசாதி ஸுரவ்ரஜ : ஸதயித: த்வத்தாஸதாஸீகண :
ச்ரீரித்யேவ ச நாம தே பகவதி ப்ரூம :கதம் த்வாம் வயம் ||

அவன் பகவான் என்றால், இவள் பகவதி—அவனைப்போலவே ஷாட்குண்ய
பரிபூர்ணை .அவன் பெருமையெல்லாம் இவளுக்கும் உரியது.இவளும் சேஷீ .
ஆதிசேஷன், இவளுக்கும் சயனம் மற்றும் ஆஸனம் ப்ரஹ்ம ருத்ராதி தேவர்கள்,
தத்தம் மனைவியரோடு, இவளுக்கு அடிமைகளான ஸ்திரீகளோடு சேர்ந்து
குற்றேவல் செய்கின்றனர்.
இவள், எம்பெருமானுக்குத் தானே விரும்பி சேஷனாகி,உபயவிபூதி மற்ற எல்லாவற்றுக்கும்
அவனுடன் சேர்ந்து சேஷீயாகிறாள்

விஷ்வக்ஸேனர்
——————————–
சேனைநாதன் –சேனை முதலியார்
இவர் பகவானின் திருவுள்ளத்துக்கு உகந்தவாறு ,உபய விபூதிகளையும் நடத்துகிறார்.
யதிராஜ ஸப்ததியில் ,ஸ்வாமி தேசிகன் சொல்கிறார்—விஷ்வக்ஸேனர் ,ஸ்ரீவைகுண்டத்தில்
இருந்துகொண்டே ,மற்றைய அதிகாரிகளை நியமித்து, கைங்கர்யங்களில்
இழிய வைக்கிறார்.
தயா சாதகத்தில், எல்லா விக்னங்களையும் அழிக்கும் திறமையுள்ள ஸேனைநாதரை வணங்குகிறேன்
என்று சொல்கிறார்.
இவர், ப்ரதம ஆசார்யனான லக்ஷ்மீநாதனின் சேஷ ப்ரஸாதத்தை ஸ்வீகரிப்பவர்.
லக்ஷ்மீநாதனால் உண்டாக்கப்பட்ட எல்ல உலகங்களையும் திறம்பட நிர்வஹிப்பவர்
இவர் விண்ணப்பம் எல்லாவற்றையும், லக்ஷ்மீநாதன் ,கண்பார்வையாலேயே
”அப்படியே செய்க” என்று ஆணையிடுவானாம் .
இவர் அம்சமே ”ஸ்ரீ நம்மாழ்வார் ”
இவரே ”எம்பெருமானாராக ” அவதரித்தார்.அப்போது, இவருடைய ”கைப்பிரம்பு”
உடையவருக்கு ”த்ரிதண்ட”மாயிற்று

ஸ்ரீ நம்மாழ்வார் ( இந்நில உலகில் ஆசார்ய பரம்பரை ) ஸ்ரீ சடகோபன் என்பது இன்னொரு திருநாமம்
—————————-
ஆழ்வார் என்றாலே ”ஸ்ரீ நம்மாழ்வார்”தான்.ஸேனை முதலியாரின் அம்சம்.தாமிரவருணி
நதிக்கரையோரம் –திருக்குருகூரில்(தற்போது–ஆழ்வார்திருநகரி ) கலி பிறந்த 43வது நாள், பிரமாதி வருஷம் ,
வைகாசி விசாக நக்ஷத்ரத்தில் அவதாரம். அவதாரம் முதல், கண்திறக்காமலும் அழாமலும்,
பால் அருந்தாமலும் , இருந்தும் திருமேனி வாடவில்லை.பெற்றோர் கவலையுற்று, குழந்தையை, பகவான் சந்நிதியில் கிடத்தி வேண்டினர்.
அவனது அருள் பெற்ற குழந்தை, தவழ்ந்து சென்று கோயிலில் உள்ள புளியமரப் பொந்தில், பதினாறு வருஷங்கள்
யோகத்தில்ஆழ்ந்தது.புளியமரமாய் நின்று போஷித்தவர்–ஆதிசேஷன்–இம்மரம் இன்றும் உள்ளது–
பசி, தாகம் போன்ற உலக இயற்கையை வென்றார். சடவாயுவைப் பிறந்தது முதலே அடக்கினார்.
மதுரகவிகள் வினா எழுப்ப, அவர்கட்கு இவரின் பதில்கள் ப்ரஸித்தி பெற்றவை.
இவர் ,பகவானை ஞான திருஷ்டியால் பார்த்து, பாசுரங்களைச் சொல்ல, அவற்றை மதுரகவிகள்
பட்டோலைப்படுத்தினார்.நான்கு பிரபந்தங்கள்
திருவிருத்தம் —-ரிக்வேதஸாரம்
திருவாசிரியம் —-யஜுர்வேதஸாரம்
பெரிய திருவந்தாதி —-அதர்வணவேதஸாரம்
திருவாய்மொழி—-ஸாமவேதஸாரம்
இவற்றில் திருவாய்மொழி –பகவத் விஷயம் என்று போற்றப்படுகிறது.
சுமார் 31 வருடங்கள் புளியமரத்தினடியில் வாழ்ந்து, வைகுந்தம் ஏகினார்.
மதுரகவிகளோ, பகவானைப் பாடாமல், சடகோபனையே பாடினார் –11 பாசுரங்கள்–கண்ணிநுண் சிறுத்தாம்பு
சடகோபரின் சரிதம் மிகவும் வியப்புக்கு உரியது–இங்கு விரிக்கின் பெருகும்–
பக்தியோகநிஷ்டர் . சரணாகதி உபாயத்தைத் தன் ”திருவாய்மொழி”யில்
உலகுக்கு உணர்த்தியவர்.ஸ்ரீமந் நாராயணனின் திருவடி ஸம்பந்தத்தை ,ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு
ஏற்படுத்தியவர் .ப்ரபந்ந ஜன ஸந்தான கூடஸ்தர்
இவர், க்ருஷ்ண த்ருஷ்ண தத்வம்

இவர் ஆழ்வார் கோஷ்டியிலும், ஆசார்ய பரம்பரையிலும் இருக்கிறார்.

மதுரகவிகள்
————————
தன்னுடைய ஆசார்யரான ஸ்ரீ நம்மாழ்வார் மீது ”கண்ணிநுண் சிறுத்தாம்பு” என்கிற
பாசுரங்களை அருளியவர்.இது ஆசார்யனுடைய மேன்மையைப் பேசுகிறது.
ஆசார்யன் மூலமாகவே பகவானின் திருவடியை அடைய முடியும்—வேண்டும் —
என்பதையும், பகவத் பக்தியைவிட, ஆசார்ய பக்தி சிறந்தது என்பதையும் உணர்த்தியவர்.
ஸ்வாமி தேசிகன் தனது ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரத்தில் ,குருபரம்பரா ப்ரபாவ அத்யாயத்தில்,
”பகவான் கண்ணனாக அவதரித்தான்—ஆனாலும் அவனை விடுத்து, நம்மாழ்வாரின்
திருவடிகளையே தஞ்சம் என்று அடைந்து, உலகத்தார் உய்ய வழிகாட்டினார் —
இது ”தொல் வழி”—பழைய வழி— நல்ல வழி–”என்கிறார் ( அடியேனின் ஸ்ரீமத் ரஹஸ்யத்ரயஸார
காலக்ஷேபத்தில், விரிவாகச் சொல்லியிருக்கிறேன் )

ஸ்ரீமந் நாதமுநிகள் ( முநி —-எப்போதும் உயர்ந்த— உயர்ந்ததான பகவானையே மனனம் செய்பவர் )
————————————-

இந்தத் தனியனில், ஸ்ரீமந் நாதமுநிகள் — ,ஆசார்யபரம்பரையில்,
மத்தியில் இருப்பதாக ஸ்ரீ கூரத்தாழ்வான்சொல்கிறார்
( இவருக்குப் பிறகு, உய்யக்கொண்டார், மணக்கால் நம்பி, ஸ்ரீ ஆளவந்தார்,
பெரிய நம்பிகள் என்கிற மஹாபூர்ணர் , பிறகு ஸ்ரீ ராமானுஜர் )

ஸ்ரீமந் நாதமுநிகள்—வீரநாராயணபுரம் என்கிற காட்டுமன்னார்கோவிலில்
சொட்டைக்குலத்திலகரான ஈச்வர முனிகளுக்கு, கலி 3985ல் ஸோபக்ருத் வருஷம்
ஆனி ,அநுஷத்தில் அவதாரம். வேதவேதாந்த விற்பன்னர் ;யோகரஹஸ்யம்
நன்கு அறிந்தவர்.மறைந்துபோயிருந்த ”திருவாய்மொழி ”முழுவதையும் மற்றும்
மற்ற ஆழ்வார்களின் திவ்ய பிரபந்தங்களையும், ஆழ்வார் திருநகரிக்குச் சென்று,
அங்கிருந்தவர் நியமனப்படி, ”கண்ணிநுண் சிறுத்தாம்பு”பாசுரங்களை,
ஸ்ரீ நம்மாழ்வார் சந்நிதியில் பன்னீராயிரம் தடவை அநுஸந்தித்து ,
தம்முடைய யோகதசையில் ஸ்ரீ நம்மாழ்வாரை ஸாக்ஷாத்கரித்து , அவரிடமிருந்து,
திருவாய்மொழியும் மற்ற எல்லாப் பிரபந்தங்களும் உட்பொருளுடன் அறிந்து,
ரஹஸ்ய மந்த்ரங்களையும் உபதேசிக்கப் பெற்றார்.
பிரபந்தங்களை, இயலும் இசையுமாகத் தொகுத்தார். முதலாயிரம், பெரிய திருமொழி ,
இயற்பா , திருவாய்மொழி என்று பிரித்து தன்னுடைய மருமான்களான
கீழையகத்து ஆழ்வான், மேலையகத்து ஆழ்வான் இவர்களுக்கு, தேவகானமாகப்
பாடும்பாடி , பழக்கினார் ஆதலால், இவர் , தமிழ்மறை இன்னிசை தந்த வள்ளல்.
இவருடைய பேரன் ஸ்ரீ ஆளவந்தார்.
ஸ்ரீமந் நாதமுநிகள் அருளிய நூல்கள்—ந்யாய தத்வம், யோகரஹஸ்யம்
இவருடைய சிஷ்யர்களில் ,உருப்பட்டூர் ஆச்சான் முக்கியமானவர்–இந்த உருப்பட்டூர்
ஆச்சான் வம்சமே அடியேனின் பாக்யம்

உய்யக்கொண்டார் என்கிற ஸ்ரீ புண்டரீகாக்ஷர் (886 A .D )
——————————————————————————-

இவர் , திருவெள்ளறையில் .கலி 3987 , ப்ரபவ ,சித்திரை கிருத்திகை நக்ஷத்ரத்தில்
அவதாரம்.ஸ்ரீமந் நாதமுநிகளின் முக்ய சிஷ்யர்.
ஸ்வாமி தேசிகன் தன்னுடைய யதிராஜ ஸப்ததியில் (அடியேனின் வ்யாக்யானம்
web -site ல் உள்ளது ) பகவானுடைய திவ்ய அவதாரங்களைப்போல ,
ஸுத்தஸத்வ குண மயமாகப் பிரகாசித்து, நாதமுநிகளின் மனத்தில் இருக்கும்
உய்யக்கொண்டாரைப் போற்றுவோம் என்கிறார்
இவர், ஆசார்யன் நியமனப்படி, சிஷ்யர்கள் மணக்கால் நம்பி முதலியோருக்கு
வேதாந்த அர்த்தங்களை உபதேசித்தார்.

மணக்கால் நம்பி என்கிற ஸ்ரீ ராம மிச்ரர் ( 929 A .D. )
——————————————————————-

ஸ்ரீரங்கத்துக்குக் கிழக்கே, மணக்கால் என்கிற ஊரில் கலி 4052ல்
விரோதிக்ருது வருஷம் மாசி மகத்தில் அவதாரம். உய்யக்கொண்டாரின் சிஷ்யர்.
ஆசார்யனிடம் அளப்பரிய பக்தி கொண்டவர். இவருடைய சிஷ்யர் ஸ்ரீ ஆளவந்தார்.

ஸ்ரீ ஆளவந்தார் ( 976 A .D. )
—————————————————-

வீரநாராயணபுரம் என்கிற காட்டுமன்னார்குடியில் கி.பி. 976ல்
தாது வருஷ ஆடி மாத உத்ராடம் நக்ஷத்ரத்தில் ஸ்ரீமந் நாதமுநிகளின் குமாரரான
ஈச்வர முநிகளுக்கு யமுனைத் துறைவர் என்கிற திருநாமத்துடன் அவதாரம்.
இவருக்கும் ,ஆக்கியாழ்வானுக்கும் சோழ அரசபையில் நடந்த வாதங்களும் அவற்றினுள் வெற்றி அடைந்த ”யமுனாத் துறைவனை”
ராஜபத்னி கொண்டாடியதும் ”ஆளவந்தார்” என்கிற திருநாமம் பெற்றதும் ,அரசாண்டதும்,
மணக்கால்நம்பி இவரைத் திருத்தி தர்சன ப்ரவர்த்தகர் ஆக்க முயற்சி செய்ததும்
தூதுவளைக்கீரையும், பெருமாள்கோயிலில் ஸ்ரீ ஆளவந்தார், இராமானுஜரைத் தூர நின்று கடாக்ஷித்து,
பேரருளாளனிடம் ”இவரை, நமது சித்தாந்தத்திற்குநிர்வாஹகர் ஆக்கவேணும் என்று சரணாகதி பண்ணியதும் இன்ன பிறவும்
அடியேன் உத்தேசித்திருக்கும் குருபரம்பரா ப்ரபாவச் சொற்பொழிவில் கேட்டுணர்க —
இவர் 8 கிரந்தங்கள் அருளி இருக்கிறார். ( சதுஸ்லோகி, ஸ்தோத்ர ரத்னம் உட்பட)

பெரிய நம்பிகள் என்கிற மஹாபூர்ணர்
——————————————————————

ஸ்ரீரங்கத்தில்,ஹேவிளம்பி வருஷம் மார்கழிக் கேட்டையில் அவதாரம். ஆளவந்தாரின் பிரதான சிஷ்யர்.
தனது ஆசார்யனின் கட்டளையை ஏற்று, ராமானுஜரை அழைத்துவர காஞ்சி சென்றார்.
அங்கு, ராமானுஜர் கேட்குமாறு
ப்ரஹ்மா சிவ : சதமக : பரமஸ்வராடித்யேதேபியஸ்ய |
மஹிமார்ணவ விப்ருஷ தே ”
என்று ஒரு ச்லோகத்தைச் சொன்னார். ராமானுஜர் உடனே, பெரியநம்பிகளிடம்
இந்த ச்லோகத்தை அருளிய மஹானை சேவிக்கவேணும் என்று பிரார்த்திக்க,
தம்முடன் கூடவே வந்தால், அவரிடம் அழைத்துச் செல்கிறோம் என்று சொல்ல,
ராமானுஜரும் பெரியநம்பிகளும் ஸ்ரீரங்கம் வந்து சேர்வதற்குள், ஆளவந்தார்
பரமபதித்துவிட்டார்.
ராமானுஜருக்கு ஆற்றொணாத் துயரம்—சரம திருமேனியை ஸேவிக்கும்போது
அவரது திருக்கரத்தில் மூன்று விரல்கள் மூடியிருக்க , அதற்கான காரணத்தை
பெரியநம்பிகள் விளக்க, அந்த மூன்று கைங்கர்யங்களையும் செய்து முடிப்பதாக ராமானுஜர் வாக்களிக்க மூன்று விரல்களும் திறந்தன

ஸ்ரீ யதிராஜர் (கி.பி. 1017 —1137 )

———————-

ஸ்ரீ பெரும்பூதூரில், கி.பி. 1017 பிங்கல வருஷம், சித்திரை மாத திருவாதிரையில் அவதாரம்.
இளையாழ்வான், பாஷ்யகாரர் ,ராமாநுஜர் , லக்ஷ்மண முநி , எம்பெருமானார்,
திருப்பாவை ஜீயர் , உடையவர் என்று பல திருநாமங்கள்,
திருக்கச்சி நம்பிகள் மூலமாக. பேரருளாளன் இவருக்கு ஆறு வார்த்தைகள் அருளினான்.
ஸ்ரீ ஆளவந்தாரின் மூன்று அபிலாஷைகளை நிறைவேற்றினார்
கூரத்தாழ்வானுடன் காஷ்மீரம் சென்று வ்யாஸரின் ப்ரஹ்ம ஸுத்ரத்துக்கு ,வைஷ்ணவபரமாக உரை எழுதி,
ஸ்ரீ சரஸ்வதி தேவியால் அது ”ஸ்ரீபாஷ்யம் ”என்று கொண்டாடப்பட்டது.
திருமலைநம்பியின் குமாரர் திருக்குருகைப் பிரான் மூலமாக திருவாய்மொழிக்கு
”திருவாறாயிரப்படி” என்கிற வ்யாக்யானம் எழுதச் செய்தார்.
கூரத்தாழ்வானின் இருகுமாரர்களுக்கும் பராசரபட்டர், வேத வியாஸ பட்டர் என்று திருநாமங்களைச் சூட்டினார்.
ஒன்பதுக்ரந்தங்களை அருளினார்
74 ஸிம்ஹாஸனாதிபதிகளை ஏற்படுத்தினார்.
இவருடை சரிதம் எழுதப் புகுந்தால் ஏட்டிலடங்காது ; சொல்லப் புகுந்தால் சொல்லில் அடங்காது
ஆயினும், ஆசார்ய அனுக்ரஹத்தால், அடியேனின் உபந்யாஸத்தில் சொல்லும்போது
செவிமடுக்கலாம்.,

ஆக , ஸ்ரீ கூரத்தாழ்வான் ,

லக்ஷ்மீ நாத ஸமாரம்பாம் நாதயா முநிமத்யமாம் |
அஸ்மதார்சாய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம் ||

என்கிற இந்தத் தனியனில், லட்சுமிநாதனான எம்பெருமானிலிருந்து தொடங்கி ”அஸ்மதாசார்ய
பர்யந்தாம் ” என்பதாக கூரத்தாழ்வானின் ஆசார்யரான யதிராஜர் வரை, மிகச் சுருக்கமாகச் சொல்லப்பட்டது.

Beginning with Sri Maha lakshmi’s Natha–husband –Sriman Narayana — with Sriman Nathamunikal in the middle
upto my Acharya , I salute my entire Acharya Linage—

அடுத்தது—

யோ நித்ய மச்யுத பதாம்புஜயுக்மருக்ம
வ்யாமோஹதஸ்ததிதராணி த்ருணாய மேநே |
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைகஸிந்தோ :
ராமாநுஜஸ்ய சரணெள ஸரணம் ப்ரபத்யே ||

——————தொடருகிறது————————–

About the Author

Leave A Response