தனியன்—தெரிவோம்–தெளிவோம் —–8

Posted on Feb 14 2017 - 10:26am by srikainkaryasriadmin

தனியன்—தெரிவோம்–தெளிவோம் —–8
————————————————————————-

மின்னார் தடமதிள்சூழ் வில்லிபுத்தூர் என்று ஒரு கால்
சொன்னார் கழற்கமலம் சூடினோம் —–முன்னாள்
கிழியறுத்தான் என்று உரைத்தோம் ,கீழ்மையினிற் சேரும்
வழியறுத்தோம் நெஞ்சமே , வந்து

இந்தத் தனியன் , முன்பு ஒருசமயம் திருக்கோட்டியூரில்
பெரியாழ்வாரின் திருமொழியின் அர்த்தாநுஸந்தத்தை
அநுபவிக்கும்போது பாண்டிய பட்டர் அருளிச் செய்ததாகச்
சொல்கிறார்கள். அடியேனிடம் உள்ள ஒரு பழைய க்ரந்தத்தில்
இவ்வாறு உள்ளது—–

”பாண்டியன்” இத்யாதி—–இத்தனியன் முன் ஒருகால் திருக்கோட்டியூரில்
பெரியாழ்வாரின் திருமொழி அர்த்தம் அநுஸந்திக்கும்போது ,
”அல்வழக்கொன்றுமில்லா ” என்கிற பாட்டின் அர்த்தத்தில் ஈடுபட்டு
பட்டர் அருளிச் செய்ததாகயிருக்கும்

ஆக , பாண்டிய பட்டர் அருளியதா ?, பட்டர் அருளியதா ?
இரு பெயர்களும் ஒருவரைத்தான் குறிக்கிறதா ?
அல்லது மேற்சொன்னவாறு, பட்டர் அருளியதாக இருக்குமா ?
என்றெல்லாம் இதுவரை ஆராய்ந்தும் சரியான விடை கிடைக்கவில்லை.
மஹா வித்வான் ஒருவரிடம் ,இந்தச் சந்தேகத்தைக் கேட்டபோது,
”பாண்டிய பட்டர் ” தான் இந்தத் தனியனை (இதற்குஅடுத்த தனியனையும்
சேர்த்து ) அருளினார் ;அவரைப் பற்றிய விவரங்களைத் தேடிக்கொடுப்பதாகச்
சொல்லியிருக்கிறார். அந்த விவரங்கள் கிடைக்கும்போது,
— தனியன்—தெரிவோம்–தெளிவோம் —–8 க்கு ,இணைப்பாகத் தெரிவிக்கிறேன்.
இந்தத் தொடரைப் படிப்பவர்களுக்கு, ”பாண்டிய பட்டர் ” பற்றி விவரங்கள்
தெரிந்தாலும், அடியேனுக்கு அனுப்ப வேண்டுகிறேன்.
எதுவும் கிடைக்கவில்லையெனில், அடியேனிடம் உள்ள பழைய க்ரந்தத்தின்
அடிப்படையில், ”பட்டர்” அருளிச் செய்ததாகவே ஊகிக்கலாம்.
இந்த விவரங்கள் கிடைக்காததால்,”தனியன் ”பற்றிய தொடர் ,தாமதப்படுத்தலாகாது
என்கிற எண்ணத்தில் தொடர்கிறேன்—–

இப்போது, தனியனின் சுருக்கமான அர்த்தம்—-

மின்னார் தடமதிள் சூழ் வில்லிபுத்தூர் —-

ஜ்வலிக்கின்ற விசால ப்ராகாரங்களாலே சூழப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் .
இந்தத் திருமதிள் —நல்லாரை அணுகவிடும்;தீயாரை விலக்கி வைக்கும்.
இந்த மதிள் , ஆச்ரிதர்கள் ஆநந்திக்கும்படியும் விரோதிகள் நடுங்கும்படியும்
இருக்கிறது.

”என்று ஒரு கால் சொன்னார் கழற்கமலம் சூடினோம் —–”

மின்னார் தடமதிள் சூழ் வில்லிபுத்தூர் என்று ஒருகால் அநுஸந்தித்தவர்களான
பெரியாழ்வாருடைய அடியார்களின் திருவடித் தாமரைகளை சிரஸ்ஸில் சூடினோம் —

இவற்றால், வேறு ஒருவரைத் தொழுபவர்களும் ,ஸ்ரீவில்லிபுத்தூர் என்கிற
திவ்யதேசத்தின் பெயரைச் சொன்னவுடன் , அவரைப்போலவே ,இந்த
ஸ்ரீவில்லிபுத்தூரும் அடியார்களை ரக்ஷிக்கும்

முன் நாள் கிழியறுத்தான் என்றுரைத்தோம் —-
முன்பு ஒரு நாள், பாண்டிய அரசனால் ”சுல்க ”மாகக் கட்டிவைக்கப்பட்ட கிழியை
அறுத்தார் ஸ்ரீ பெரியாழ்வார் என்று அநுஸந்தித்தோம்

கீழ்மையினில் சேரும் வழி அறுத்தோம் ——

பகவத் சரித்ரங்களைக் காட்டிலும் , பாகவத சரித்ரங்கள் பாபத்தை ஒழிக்கக்கூடியவை.
ஆழ்வாரின் திவ்ய சரிதத்தை அநுஸந்திப்பதால் , ஜன்ம பாவங்களையெல்லாம்
வேரோடு அழித்தோம்.

( ஸதாசார்ய ஸம்பந்தம் / கடாக்ஷம் இவைகளாலே –ஸத்வ குணம் வந்தவன்
பகவத்,பாகவத, ஆசார்ய பக்தியுடன் பரம புருஷார்த்தத்தையும் பெறுவான் )

பெரியாழ்வார் திருமொழியில் (4–4–1 ) அருளியதற்கு, ஸ்ரீ மணவாள மாமுனிகள்
வ்யாக்யானம் செய்யும்போது,
(நாவ காரியம் சொல் இலாதவர் ) கொங்கிலே திருக்குருகைப் பிரான்
எழுந்தருளி ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் திருமாளிகையிலே
விட்டளவிலே பிறந்த வார்த்தையை ஸ்மரிப்பது.
என்கிறார்.
அதாவது—
திருக்கோஷ்டியூரில் வாழும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் ,”நாவ காரியம் சொல் இலாதவர் ”
என்கிறார் பெரியாழ்வார். சொல்லத்தகாதவற்றை , நாவினால் சொல்லமாட்டார்களாம்.
இது திருக்கோட்டியூரின் பெருமை. ஸ்ரீ வில்லிபுத்தூரின் பெருமை அதைவிட
மேலானது என்று இந்தத் தனியனால் தெளிவுறுகிறது.

Sarvam Sree Hayagreeva preeyathaam

About the Author

Leave A Response