தனியன்—-தெரிவோம்—தெளிவோம்—-10.

Posted on Feb 17 2017 - 5:48am by srikainkaryasriadmin
Categorized as
1759

தனியன்—-தெரிவோம்—தெளிவோம்—-10.
——————————————————————————-

நீளாதுங்கஸ்தநகிரிதடீ ஸுப்தமுத்போத்ய க்ருஷ்ணம்
பாரார்த்யம் ஸ்வம்ஸ்ருதி ஸத ஸிரஸ் ஸித்த மத்யா பயந்தீ |
ஸ்வோச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகளிதம் யாபலாத் க்ருத்யபுங்க்தே
கோதாதஸ்யை நம இதமிதம் பூய ஏவாஸ்து பூய : ||

இந்தத் தனியன் ”பட்டர் ” அருளியது. திருக்கோஷ்டியூரில் ,
பெரியாழ்வார் திருமொழியின் அர்த்தத்தை அநுஸந்தித்த பிறகு,
திருப்பாவை அநுஸந்தான சமயத்தில் ,ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளிலே
ஈடுபட்டு ,”பட்டர்” அருளியது என்பர்.
இவரது சரிதக்குறிப்பு—-
மிகச் சுருக்கமாக—( இவர் சரிதம் பற்பல மஹோன்னத சம்பவங்களைக் கொண்டது–
குருபரம்பரா பிரபாவம் சொல்லும்போது விரித்து உரைக்கப்படும் )

எம்பெருமானாரை ஆச்ரயித்தவர் ஸ்ரீ கூரத்தாழ்வான் என்று முன்பே பார்த்தோம்.
இவர் ஸ்ரீரங்கத்தில்,வாஸம் செய்தபோது க்ருஹஸ்தாஸ்ரம தர்மப்படி
உஞ்சவ்ருத்தி செய்து (உபாதான காலம் )அதில் கிடைக்கும் அமுந்த்ரியைக்
(அரிசி ) கொண்டுவந்து ஸஹதர்மிணியிடம் கொடுத்து தளிகை செய்து
ஆத்து எம்பெருமானுக்கு நிவேதனம் செய்து, அதிதி வரும்வரை
காத்திருந்து ,பிறகு போஜனம் செய்து வழக்கம்.
ஒருநாள், பெரிதாக மழை பொழிந்துகொண்டிருந்ததால், உஞ்சவ்ருத்திக்கு
வெளியே செல்ல இயலவில்லை. பெருமாளுக்கு, பழத்தை நிவேதனம்
செய்துவிட்டு திருவாராதனத்தை முடித்து விட்டு, க்ரந்தங்களைப்
பார்த்துக்கொண்டிருந்து இரவு, பட்டினியுடன் உறங்கச் சென்றார்.
கூரத்தாழ்வான் தேவிகளான ஆண்டாள் மிகவும் வருந்தி, துக்கம் மேலிட்டு
இருந்த நேரத்தில், திருவரங்கம் பெரியகோயிலில் பெரியபெருமாள் நம்பெருமாள்
திருவாராதனம் செய்யப்பெற்று, தளிகை அமுது செய்விக்கப்பெற்று ,அதற்கான
திருச்சின்னம், திருமணி ஓசை இவைகளைக் கேட்டாள் . துக்கம் பீறிட,
”ஹே —ரங்கா—இங்கே உன் பக்தர் ஆகாரமின்றி உறங்குகிறார்.உமக்கு, எல்லாமும்
குறைவில்லாமல் நடைபெறுகிறது.உன் பக்தருக்கு அநுக்ரஹிக்க மாட்டாயா –”
என்று, மனத்தில் எண்ணி, கண்ணீரைச் சிந்தினாள் .ஸ்ரீரங்கநாதனுக்கு , இது
கேட்காமல் போகுமா ?
உத்தமநம்பி என்பவர் கனவில் தோன்றி, நமக்கு இப்போது தளிகை
கண்டருளிய ப்ரஸாதத்தை ,சகல ஸத்ர ஸாமர வாத்யங்களுடன் ,எடுத்துச் சென்று,
கூரத்தாழ்வான் திருமாளிகையில் அவரிடம் கொடுத்து, ஒருபாகத்தை அவரும்
இரண்டு பாகத்தை அவருடைய தேவிகளும், ஸ்வீகரிக்கச் சொல்லும் ” என்று
கட்டளை இட்டார்.
உத்தமநம்பி அவ்வாறே சகல மரியாதைகளுடன் கூரத்தாழ்வான் திருமாளிகைக்கு
வந்து ,நம்பெருமாள் கட்டளையைச் சொன்னார்.
ஆழ்வான் மிகுந்த மரியாதையுடன் ப்ரஸாதத்தைப் பெற்று, உள்ளே எடுத்துச் சென்று
தேவிகளிடம் ” இன்றைக்குப் பெருமாளின் க்ருபை இவ்விதம் இருக்கக் காரணம்
நீதானோ—? ” என்று கேட்டார்.
தேவிகளும் தலையைக் குனிந்துகொண்டு ”ஆமாம்”’ என்று சொல்ல ,நம்பெருமாள்
நியமனப்படி ப்ரஸாதத்தில் ஒருபாகம் எடுத்துக்கொண்டு ,மீதி இரண்டு பாகத்தைப்
பத்நியிடம் கொடுத்தார்.அவருடைய பத்நியும் ,அதை ஸ்வீகரிக்க, இந்தமாதிரியான பகவத்
ப்ரஸாதத்தால் .பத்தாவது மாதத்தில், கலி 4189, கி.பி. 1057ம் ஆண்டு, ப்ரபவ , வைகாசி
அநுஷத்தில், இரண்டு ஆண் குழந்தைகளைப் ப்ரஸவித்தாள் .
ஆழ்வானும் ஆண்டாளும் மிகவும் சந்தோஷமடைந்து ,புண்யாஹவாசனம் முடிந்து
நாமகரணம் செய்யாமல் ,எம்பெருமானாரே செய்ய வேண்டும் என்று இருக்க, இதை
அறிந்த ஸ்ரீ ராமாநுஜர்,எம்பாரிடம் குழந்தைகளை எடுத்துவரச் சொல்லி,
இவரும் கூரத்தாழ்வான் திருமாளிகைக்கு உள்ளே சென்று,எம்பார் ,த்வயத்தைச்
சொல்லிக்கொண்டே இரு குழந்தைகளையும் எடுத்து வர, ”த்வயம் இங்கு அல்லவா
மணக்கிறது—”என்று மகிழ்ந்து ,எம்பாரையே , குழந்தைகளுக்கு ஆசார்யனாக
இருக்க நியமித்து, முதலில் பிறந்த குழந்தைக்கு ,பராசர பகவானிடம் நன்றி
பாராட்ட ”பராசர பட்டர்” என்றும். இன்னொரு குழந்தைக்கு, ”ஸ்ரீராம பட்டர்”
என்கிற வேதவ்யாஸ பட்டர் என்றும் நாமகரணம் இட்டார்.

பராசர பட்டரை , நம்பெருமாள், புத்ர ஸ்வீகாரம் செய்துகொண்டார்.
அரங்கனின் ஸந்நிதியில் திருமணத் தூண் அருகே தூளி (துணியால் ஆன கட்டில் )
இடப்பட்டது. கர்பாஷ்டமத்தில் உபநயனம் ஆகி, யதிராஜரின் கட்டளைப்படி
எம்பாரும், ஆழ்வானும் ஆசார்யர்களாக இருந்து எல்லாவற்றையும் உபதேசித்தார்கள் .

விவாஹ வயது வந்த சமயத்தில், பெரியநம்பிகளின் திருமேனி சம்பந்தம்
உடையவரின் இரண்டு பெண்களையும், நம்பெருமாள் நியமனப்படி , இவருக்கு
விவாஹம் செய்து வைத்தனர்.

எம்பாருக்குப் பிறகு பட்டர் ஸ்ரீரங்கத்தில் ஸம்ப்ரதாய ப்ரவர்த்தகராக க்ரந்தங்களைப்
ப்ரவசனம் செய்தார். மேல்நாட்டு வேதாந்தி ஒருவரைத் திருத்தி, ”நஞ்சீயர்”
ஆக்கினார்.

அம்மணியாழ்வான் என்பவர் ,வெகுதூரத்திலிருந்து பட்டர் திருமாளிகைக்கு
வந்து, பட்டரைப் பலமுறை தெண்டனிட்டு ”அடியேனுக்கு ஹிதமான விசேஷ
அர்த்தங்களை அநுக்ரஹிக்க வேண்டும் என்று ப்ரார்த்தித்தார்.
பட்டர், அவருக்கு, நம்மாழ்வாரின் ”நெடுமாற்கடிமை —-” பாசுரங்களின்
அர்த்த விசேஷங்களைச் சொல்லி , ”எம்பெருமானை அறிவது என்பது
அரை வயிறு பட்டிருக்கை—-பாதி வயிறு சாப்பிடுவதைப்போல; அவனுடைய
அடியார்களை அறிவது, அவனை முழுதும் அறிந்ததாகும் ” என்றும் சொல்லி,

ந்யக்ரோத பீஜே வடவத் ப்ரணவே ஸப்தஜால வத் |
ஸித்தே ததீய சேஷத்வே ஸர்வார்த்தா : ஸம்பவந்தி ஹி ||
சிறிய ஆல விதையிலிருந்து , பெரிய ஆலமரம் உண்டாவதைப்போல,
சிறிய ப்ரணவத்தில் எல்லா சப்தார்த்தங்களும் அடங்கியிருக்கின்றன. அதைப்போல,
பகவானுடைய அடியார்களின் அடியாரானால், எல்லாப் புருஷார்த்தங்களும்
ஸித்திக்கும் —–
என்றார்.

பின்னும் ஒருநாள், தன்னை ஆச்ரயித்த ஸ்ரீவைஷ்ணவர் ஒருவரிடம்,
”நீர் , அனந்தாழ்வான் இருப்பிடம் சென்று, ஸ்ரீவைஷ்ணவ லக்ஷணம்
எங்ஙனே இருக்கும் ” என்று தெரிந்து வாரும் என்றார்.அவர், திருவேங்கடம் சென்று
அனந்தாழ்வானிடம் ”கொக்குப் போலே இருக்கும், கோழிபோலே இருக்கும் ,
உப்புப்போலே இருக்கும், உம்மைப்போலவும் இருக்கும் —” என்று தெரிந்து வந்தார்.
( அடியேனுடைய புத்தகங்களில், இவற்றின் விவரம் மற்றும் ப்ரணாமங்களின் விவரம்
யாவும் எழுதி இருக்கிறேன் )

பட்டர் , தனது 28வது வயதில் ( 54 வது வயது என்றும் சொல்வர் )
பெரிய பெருமாள் ஸந்நிதியில் ,கைசிக த்வாதசிதினத்தில், ”கைசிக புராணம்” சொல்லி ,
ச்லோகங்களுக்கு விசேஷமானஅர்த்தங்களையெல்லாம் சொன்னார்.
இதைத் திருச்செவி சாத்திய பெருமாள்,பெருமிதத்துடன் தன்னுடைய திருமாலை,
திருப்பரிவட்டம், திருவாபரணம்எல்லாவற்றையும் அநுக்ரஹித்து ,
அதுவும் போதாது என்று கருதி ,தன்னுடையதிவ்ய ஸிம்ஹாஸனத்தையும்
அளித்தார். இதுவும் போதாது என்று கருதிஇன்னும் என்ன கொடுக்கலாம்
என்று யோசித்து, சந்தோஷ மிகுதியாலே ,
”பட்டரே —-உமக்கு மேலைவீடு தந்தோம்—” என்றார்.

பட்டர், ”மஹா ப்ரஸாதம் –” என்று உள்ளம் சிலிர்க்கப் பணிவுடன் விஞ்ஞாபித்தார்.
பெருமாளிடம், ”ப்ரபோ—பரமபதத்தில் இங்கு உள்ளது போல் ஆஸன பத்மத்திலே
அழுத்தி, தேவரீர் இட்ட திருவடித் தாமரைகளும் , அஞ்சேல் என்கிற திருக்கரமும்
கவித்த முடியும், புன்முறுவலிக்கும் சிவந்த திருமுக மண்டலமும் , திருநுதலில்
கஸ்தூரித் திலகமும், இன்ன பிறவும் கொண்ட தேவரீரின் ஸேவை இல்லையெனில்,
அங்குள்ள ஒரு மூலையை முறித்துக்கொண்டு இங்கே இவ்விடம் குதித்து விடுவேன் ”
என்று சொல்லித் திருவரங்கனின் திருமேனி அழகில் சொக்கி இருப்பதை வெளிப்படுத்தி,
தனக்கு, அரங்கமும் அரங்கனுமே அழியாச் செல்வம் ;சகலமும் என்று சொன்னார்.

பட்டர், தன்னுடைய திருமாளிகைக்கு வந்தார். தாயார் ஆண்டாளை ஸேவித்தார் .
செய்திகேட்டு அங்கு வந்த அடியார்களுக்கு, ”திருநெடுந் தாண்டகம்” அர்த்த விசேஷங்களைச்
சொன்னார். பிறகு, சிரஸ்ஸில் இருகரமும் கூப்பிப் பகவானைத் தியானிக்க
சிரஸ் கபாலம் வெடிக்கத் திருநாட்டுக்கு , எழுந்தருளினார்.
தாயார் ,ஓடிவந்து அணைத்துக்கொண்டு, துக்கம் தாங்காது அழுபவர்களைப் பார்த்து,
”உடையவன் உடைமையைக் கைக்கொண்டால் நாம் வெறுக்கலாமோ”என்றாள் .
பட்டர் அருளியது—ஸஹஸ்ரநாம பாஷ்யம், தத்வ ரத்நாகரம் , அஷ்டச்லோகி,
ப்ரணவ விவரணம் , ஸ்ரீ குணரத்ன கோசம் , ஸ்ரீ ரங்கராஜஸ்த்வம் , க்ரியாதீபம் ,
தத்வ த்ரய ச்லோகம் —ஆக எட்டு க்ரந்தங்கள்—-

தனியனின் அர்த்தம்—–
உத்தமூர் ஸ்வாமி தன்னுடைய ”ப்ரபந்த ரக்ஷை” யில் மிக விரிவாக வ்யாக்யானம்
செய்துள்ளார். வேறொரு வ்யாக்யான க்ரந்தத்திலும் சுருக்கமாக உள்ளது .
அவைகளிலிருந்து, மிக சுருக்கமாக அர்த்தம் கொடுக்கப்படுகிறது.

‘துளஸி வனத்திலே அவதரித்த ஆண்டாள், நாராயணனுக்குப் ப்ரீதியான
துளசிமாலையைத் தான் அணிந்து அழகு பார்த்து ,இப்படி மாலையாலே
அவனைக் கட்டி, பாமாலையான பாசுரங்களாலும் இறுகக்கட்டி, நப்பின்னையுடன்
உறங்குபவனை எழுப்பி, தன்னைப் பூமிப் பிராட்டி என்பதை நினைப்பூட்டி,
அர்ச்சையில் உள்ள எம்பெருமானும் தானிட்ட வழக்காய் நடந்துகொள்ளும்படி
செய்தாள் .அந்தப் பிராட்டியின் பொருட்டு, ”பூய ஏவ பூய : ”–
மேலும், மேலும் ,-மறுபடியும் மறுபடியும் இதம் இதம் நம —-சாஸ்திரப்படி
எல்லாப் ப்ராணாமங்களும் , அஸ்து–ஆகக் கடவது—–

தஸ்யைஇதம்பூயோ நம:—அப்படிப்பட்ட ஆண்டாளின் பொருட்டு இந்த அனந்த ப்ரணாமங்கள்
இதம் பூவ ஏவ அஸ்து —இப்படிப்பட்ட ப்ரணாமங்கள் ,அந்த ஆண்டாளின் பொருட்டே —

ஸ்வரூப உபாய புருஷார்த்தங்களை விவரமாகச் சொல்லி, தொண்டர் குலம்
நிறைந்து வாழும்படியாக மஹா உபகாரம் பண்ணிய ஆண்டாளுக்கு,
மீண்டும் மீண்டும் பற்பல நமஸ்காரங்கள்—-


Sarvam Sree Hayagreeva preeyathaam

About the Author

Leave A Response