தனியன்—தெரிவோம்—-தெளிவோம்—-11
——————————————————————-
அன்னவயல் புதுவையாண்டாள் அரங்கற்குப்
பன்னு திருப்பாவைபல் பதியம்—-இன்னிசையால்
பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை பூமாலை
சூடிக்கொடுத்தாளைச் சொல்லு .
இந்தத் தனியன், ஸ்ரீ புண்டரீகாக்ஷர் என்கிற உய்யக்கொண்டார் அருளியது.
இவரின் சரிதச் சுருக்கம்—-
திருவரங்கத்தை அடுத்த திருவெள்ளறை க்ஷேத்ரத்தில், கலி 3987, கி.பி.886
ப்ரபவ சித்திரை, க்ருத்திகா நக்ஷத்திரத்தில் அவதரித்தார். ஸ்ரீமந் நாதமுனிகளின்
பிரதான சிஷ்யர்.இவரைத் தவிர, குருகைக்காவலப்பன் , உருப்பட்டூர் ஆச்சான்,
நம்பி கருணாகர தாஸர் ,ஏறுதிருவுடையார், திருக்கண்ணமங்கை ஆண்டான்,
வானமாதேவி ஆண்டான், சோகத்தூர் ஆழ்வான் மற்ற சிஷ்யர்கள்.
வங்கீபுரத்தாச்சியின் திருமகள், அரவிந்தப்பாவை .இவள் ஸ்ரீமந் நாதமுனிகளின்
தேவிகள். ஒருசமயம், வங்கீபுரத்தாச்சி ,ஒருவரை , நாதமுனிகளிடம் அனுப்பி,
தன்னுடைய குமாரத்தியை அழைத்துவரச் சொன்னாள்.அவரும்,
நாதமுனிகளிடம் வந்து, இதைச் சொல்லவும் , நாதமுனிகள் தன்னுடைய
ப்ரதான சிஷ்யரான புண்டரீகாக்ஷரை அழைத்து, தனது தேவிகளைப்
பிறந்தகத்தில் விட்டு வரும்படிச் சொன்னார். புண்டரீகாக்ஷரும் , அப்படியே
வங்கீபுரத்தாச்சியின் வீட்டில், நாதமுனிகளின் தேவிகளைப் பத்திரமாகச்
சேர்த்து, விடைபெறும்போது, ஆச்சி அளித்த முதல்நாள் தண்ணீரில் சேர்த்து
வைத்திருந்த அன்னத்தை அவரது ஆணைப்படி,அ ந்த வீட்டின்
வெளிமுற்றத்தில் அமர்ந்து சாப்பிட்டு, சந்தோஷத்துடன் காட்டுமன்னார்குடிக்குத்
திரும்பினார்.
நாதமுனிகள், புண்டரீகாக்ஷரின் சந்தோஷத்தை அவரது முகவிலாஸம் மூலமும்,
நடந்ததைத் தன்னுடைய யோகமஹிமையாலும் அறிந்தார் .
எனினும், ”புண்டரீகாக்ஷரே—சென்ற இடத்தில் நன்கு உபசரித்தார்களா ?”
என்று கேட்டார்.
”ஆஹா—-ஆச்சியின் வீட்டு முற்றத்தில், நீர்சேர்த்த அன்னத்தை மிகச்
சந்தோஷத்துடன் சாப்பிட்டேன்—இது, அடியேன் செய்த தவப்பயன்–
போனகஞ் செய்த சேடந்தருவரேல் புனிதமன்றோ !தத்துச்சிஷ்டம் ஸுபாவனமன்றோ !”
என்று முகம் மலர்ச்சி சொன்னார்.
அதாவது, அவர்கள் சாப்பிட்ட சேஷத்தை (மிகுதியை )உண்ணுவது புனிதமல்லவா !
உச்சிஷ்டமல்லவா –என்கிறார்.
நாதமுனிகள் மிகவும் சந்தோஷமடைந்தார்.
”புண்டரீகாக்ஷரே—நம்மை உய்யக்கொண்டீர் —” என்று சொல்லிக் கண்களிலிருந்து
நீர் பெருக ஆரத்தழுவினார்.அன்றிலிருந்து, ”உய்யக்கொண்டார்” திருநாமம்
ப்ரஸித்தி ஆயிற்று.
சில கிரந்தங்களில், இப்படியும் சொல்லப்படுகிறது—–
ஸ்ரீமந்நாதமுனிகள் ,புண்டரீகாக்ஷரை ”யோகரஹஸ்யம்” கற்றுக்கொள்ளச் சொன்னார்.
அப்போது, புண்டரீகாக்ஷர்
”பிணம் கிடக்க, மணம் புரிவாருண்டோ ?அடியேன் எப்படி இருந்தாலும்
அதனால் பரவாயில்லை…..இவ்வுலகம் உய்ய வேணும்—-திவ்ய ப்ரபந்தங்களை
உபதேசித்து அருளவேணும்——-” என்றார்.
மிகவும் மகிழ்ந்த நாதமுனிகள் ”நீரே உலகையும் ,உலகங்களை உடைய
ஸ்ரீமந் நாராயணனையும் ,அவனைப் போற்றும் அருளிச் செயல்களையும்,
அவற்றைப்பெற்ற அடியேனையும் உய்யக்கொண்டவர் —” என்றார் .
அன்றுமுதல், உய்யக்கொண்டார் என்கிற திருநாமம் பெற்று, நாலாயிரத்தின்
உட்பொருளை ஆழ்ந்து பெற்றார் என்பர்.
ஸ்ரீமந்நாதமுனிகளிடம் வேதாந்த, ரஹஸ்ய க்ரந்தங்களை க்ரஹித்தார்.
இவருக்கு இரண்டு பெண்கள்.இவருடைய பிரதான சிஷ்யர் ”மணக்கால் நம்பி
என்கிற ஸ்ரீ ராம மிச்ரர் ”. இவருடைய சுருக்கமான சரிதம்
”இன்னமுத மூட்டுகேன் —”, ”ஆரங்கெட —”, தனியன்களில் சொல்லப்படும்.
அப்போதும் உய்யக்கொண்டார் வருவார்.
தனியனின் சுருக்கமான அர்த்தம்
அன்னப்பறவைகள் உலாவும் வயற்கழனிகளை உடைய ஸ்ரீ வில்லிபுத்தூரைச்
சேர்ந்த ஆண்டாள் ,அரங்கனுக்கு, பன்னு —பற்பல உட்பொருள்களை உடைய
திருப்பாவை என்கிற , பல் பதிகம்—-மூன்று பிரிவான பதிகங்களை –அதாவது,
பெண்களை எழுப்ப ஒரு பதிகம் (பத்துப் பாக்கள் ), மற்றவரை எழுப்ப இன்னொரு
பத்துப் பாசுரங்கள், நோன்பை விவரிக்க மற்றொரு பத்து, –இப்படி முப்பதிகம்–
இப்படிப் பாசுரங்களால் மாலையாக ப்ரபந்தம் செய்து, இனிய ராகத்தோடு பாடிக்
கொடுத்தவளும், துளசி மாலையைத் தான் அணிந்து பிறகு அதைக் களைந்து ,
எம்பெருமானுக்குச் சூட்டுவதற்குக் கொடுத்தவளைப் , போற்றுவாயாக—
நற் பாமலை, பாடிக் கொடுத்தாள் -கொடுத்தாளைச் சொல்—
-திருப்பாவை அருளியவளை ஸ்தோத்ரம் செய் —
பூமாலை, சூடிக்கொடுத்தாளைச் சொல்—துளசி மாலையைத் தான் அணிந்து ,
பிறகு அதை எடுத்து, பகவானுக்கு அணிவிப்பதற்குக் கொடுத்தவளைச் சொல்வாயாக–
—
Sarvam Sree Hayagreeva preeyathaam