தனியன்—தெரிவோம்—தெளிவோம்—12

Posted on Feb 20 2017 - 10:54am by srikainkaryasriadmin

தனியன்—தெரிவோம்—தெளிவோம்—12
————————————————————————-

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியே ! தொல்பாவை
பாடி அருளவல்ல பல்வளையாய் !—-நாடிநீ
வேங்கடவற்கு என்னை விதியென்ற இம்மாற்றம்
நாம்கடவா வண்ணமே நல்கு .

இந்தத் தனியனும் ,.உய்யக்கொண்டார் அருளியது.
இவரது சரிதச் சுருக்கம்–இதற்கு முந்தைய 11 வது பகுதியில்
கொடுக்கப்பட்டுள்ளது.

தனியனின் சுருக்கமான அர்த்தம் —

துளசி மாலையைத் தானே முன்னதாகச் சூடிக்கொண்டு,பின்பு,
அதை எடுத்து ,எம்பெருமானுக்குச் சூட்ட ஸமர்ப்பித்த
மின்னல்கொடி போன்றவளே !
பழைமையான நோன்பைச் சொல்லும் திருப்பாவைப் பாசுரங்களைப்
பாடி, எல்லோருக்கும் அருள் செய்யும் வல்லமை உள்ள ,பற்பல
வளைகளை அணிந்த கோதாப்பிராட்டி ,திருவேங்கடமுடையானுக்கே
என்னை விதி என்று —சேஷன் என்று , நீ அருளிய இந்த வழியை
திருப்பாவையிலிருந்து தெளிந்து , நாங்களும் விடாமல் அனுஷ்டிக்க
நீ, எங்களையும் எம்பெருமானையும் நெருங்கியிருந்து உபகாரம் செய்ய வேணும்.

முன் தனியனிலே, உய்யக்கொண்டார், ஆண்டாளின் திருநாமத்தைச்
சொல்வதே போதும் என்றார்—
இருந்தாலும், மார்கழித் திருநாளிலே திருப்பாவை அர்த்த்தத்திலே ஈடுபட்டு
மேலும் ஒரு தனியன் அருள்கிறார்.
இந்தத் தனியனில்,
எங்களையும் எம்பெருமானையும் நெருங்கி இருந்து நல்கு—-
நல்லவற்றைக்கொடு என்கிறார்.
இவள், மனிதர்கள் அடையவே முடியாத மேன்மை உடையவள்;பகவானுடன்
சேரத்தக்க சீர்மையும் பெற்றவள். இவள் அனுஷ்டிக்கும் நோன்பு ,
காலம் காலமாக அனுஷ்டித்துவரும் நோன்பு.
”கையில் வளை போல எம் ஆசிரியர் வாக்கு” என்றார் ,ஸ்வாமி தேசிகன்.
ஆசார்யருடைய ஸ்ரீஸூக்திகள் ,கைகளில் அணியும் வளைக்குச் சமமானவை.
இவளும் ஆசார்யை —இவளுடைய ஸ்ரீ ஸூக்திகளும் அப்படியே விளங்குகின்றன.
ஆண்டாள், ”வேங்கடவற்கு என்னை விதி—” என்கிறாள்.
அதை ஒட்டியே ,இந்தத் தனியனில், ”வேங்கடவற்கு என்னை விதி என்ற இம்மாற்றம் —”
என்கிறார், உய்யக்கொண்டார்.
அரங்கனும் , மலைகுனிய நின்றானும் ஒருவன்தானே !
வைகுண்டத்திலிருந்து ,எம்பெருமான் திருவேங்கட மலைக்கு வந்து நின்றான்;
பிறகு, திருவரங்கம் வந்து சயனித்தான் —

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி—-பூமாலையைத் தான் சூடிக்கொண்டு,பிறகு
எம்பெருமானுக்குக் கொடுத்த மின்னல்கொடி—-
தொல்பாவை பாடி அருளவல்ல பல்வளையாய் —-மிகத் தொன்மையான
மார்கழி நோன்பை அனுசரித்து, அதன் அர்த்தங்களை ப்ரபந்தங்களாக அருளிச்
செய்த பல ஆபரணங்களை அணிந்துள்ள ஆண்டாள்.
நீ, வேங்கடவற்கு என்னை விதி என்ற இம்மாற்றம் —–நீர், திருப்பாவையால் அவனையே
நாடிச் சென்று ,நாச்சியார் திருமொழியில் சொல்லியபடி, ”வேங்கடவற்கு என்னை
விதிக்கிற்றியே —-” என்கிற ப்ரார்த்தனைப் ப்ரகாரம்
நாம் கடவா வண்ணமே நல்கு—–நாங்கள், உம்முடைய அநுபவத்தில்
ஒருகுறையும் இன்றி அனுபவிக்கும் ப்ரகாரத்தைத் துளியும் இழக்காமல்,
இருக்கும்படி கொடுத்தருளவேணும் —

இந்தத் தனியனில்,
ஆண்டாளின் பெருமை, அவள் பாசுரங்களின் பெருமை,
இவற்றை நன்கு அறிந்தவர் –பரமைகாந்திகளாக ஆவர் என்று சொல்லப்படுகிறது.


Sarvam Sree Hayagreeva preeyathaam

About the Author

Leave A Response