தனியன்—தெரிவோம்—தெளிவோம் —–13

Posted on Feb 21 2017 - 10:28am by srikainkaryasriadmin

தனியன்—தெரிவோம்—தெளிவோம் —–13
———————————————————————–

அல்லிநாள் தாமரை மேலாரணங்கனின் துணைவி
மல்லிநாடாண்ட மடமயில் —–மெல்லியலாள்
ஆயர்குல வேந்தனாகத்தாள் தென்புதுவை
வேயர் பயந்த விளக்கு

இந்தத் தனியன், திருக்கண்ணமங்கை ஆண்டான் அருளியது.
இவர், ஸ்ரீமந் நாதமுனிகளின் சஹோதரியின் குமாரர்.
முக்கிய சிஷ்யர்களில் ஒருவர் என்பதை முன்பே பார்த்தோம்.
இவர் ஆனி மாத திருவோண நக்ஷத்ரத்தில் அவதரித்தவர்.
திருக்கண்ணமங்கை ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் கோயிலில்,தரையைச் சுத்தம் செய்யும் கைங்கர்யத்தை அனவரதமும் செய்து வந்தார்.
இப்படி ஒருவர் செய்து வந்தாலே, அவருடைய பாபங்கள் கழிந்துவிடும்—இப்படியான கைங்கர்யம், ஒரு பக்தனுக்கு இயற்கையானதாகும்
இவர், தன்னுடைய ஆசார்யரான நாதமுனிகளிடமிருந்து, ”த்வய ”மந்த்ரத்தின் விசேஷ அர்த்தங்களை, திருவாய்மொழி மூலமாகக்கற்றறிந்தார்.
பிள்ளை லோகாசார்யர் , தன்னுடைய ”ஸ்ரீ வசன பூஷண”த்தில்கூறும்போது,
உபாயத்துக்குப் பிராட்டியையும், த்ரௌபதியையும் திருக்கண்ணமங்கைஆண்டானையும் போல இருக்கவேணும் ——என்கிறார் .
உபாயம்—–பகவானை அடைவதற்கான வழி—அவன் ஸர்வ ஸக்தன் ;ஸர்வரக்ஷகன் ;அவன் எவரை வேண்டுமானாலும் சம்ஸார ஸாகரத்திலிருந்து
விடுவிக்க முடியும்—-
ஒரு நாள், ஒரு வேலைக்காரன் வளர்த்த நாயை , இன்னொரு வேலைக்காரன் அடித்தான்.இதைப்பார்த்த ,நாயின் சொந்தக்காரன், மிகவும் கோபமடைந்து,
நாயை அடித்தவனுடன் சண்டையிட்டான்.இருவரும் தங்கள் கத்தியை எடுத்துச் சண்டையிட்டனர் .நாயை அடித்தவனைக் கொன்று, தானும் மரித்தநிலைமையை ,ஆண்டான் பார்த்தார்
ஒரு சாதாரண மனிதன், தனக்குச் சொந்தமான நாயை அடித்ததற்காககோபப்பட்டு, கேவலம் அந்த நாய் தனக்குச் சொந்தம் என்பதற்காக ,நாயைஅடித்தவரைக் கொல்ல வேண்டும் என்கிற அளவுக்குச் செல்வானேயாகில் ,
ஒருவன், ஸர்வ ரக்ஷகனான எம்பெருமானிடம் சரணாகதி செய்து ,அவனே காப்பாற்றுவான் என்று நம்பி இருந்தால், அந்த எம்பெருமான்ரக்ஷிக்காமல் இருப்பானா —என்று சிந்தித்து, உடனே எல்லாப் பற்றையும்
துறந்து ,அந்த நாயைப்போலத் தன்னை நினைத்து, உடனே,திருக்கண்ணமங்கை ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் கோபுர வாசலில்,இருக்கிற ஒட்டுத் திண்ணையில் வந்து படுத்துக்கொண்டார்
(விவரம்–அடியேன் எழுதி வெளியிட்ட ”ஸ்ரீ வசனபூஷணம்”விளக்க உரையில்
உள்ளது–)
அதாவது, ”ஸ்வரக்ஷண ஹேதுவான ஸ்வவ்யாபாரங்களை விட்டான்” என்கிறார்,
ஸ்ரீ மணவாள மாமுநிகள். எம்பெருமானுக்குச் செய்துவரும் கைங்கர்யங்களைவிடாமல் செய்தார். ஆனால், தன்னை ரக்ஷித்துக்கொள்ளும் முயற்சியைக்
கைவிட்டார்.
இந்த வரலாறு வேறு விதமாகவும் சொல்லப்படுகிறது—
திருக்கண்ணமங்கை ஆண்டான், கோயிலில் உள்ள நந்தவனத்தில்பணி செய்து,எம்பெருமானுக்கு புஷ்ப கைங்கர்யம் செய்து வந்தார்.இவரிடத்தில் பக்தவத்ஸலப் பெருமானின் பேரருள் வெள்ளமெனப்பெருக்கெடுத்தது.
ஒருநாள், ஆண்டான், கோயிலில் கண்ட காட்சி அவரது வாழ்க்கையில் பெரிய மாறுதலை உண்டாக்கியது. இரண்டு மனிதர்கள், தங்கள் கைகளில் கத்தியும்
கால்களில் மிதியடியும் கொண்டு ஆளுக்கு ஒவ்வொரு நாயுடன் கோயில் வாயிலை அடைந்தனர். இரண்டு நாய்களையும், அவரவர் செருப்புகளைக்
காக்குமாறு நிறுத்தி, உள்ளே எம்பெருமானைச் சேவிக்கச் சென்றனர்.அவர்கள், கோயிலின் உள்ளே இருந்து வெளியே திரும்புவதற்குள்,ஒரு நாய், மற்றொரு நாயின் காவலில் இருந்த செருப்பைக் கடிக்கவும்,
அந்த செருப்பைக் காத்துவரும் நாய், எதிர்த்துத் தாக்கவும்,
இரண்டு நாய்களும் சண்டையிட்டதில் ஒரு நாய் இறந்தது.அப்போது, கோயிலிலிருந்து வெளியே வந்த இருவரில் ஒருவன்,தனக்குச் சொந்தமான நாய் இறந்ததைக் கண்டு, அதனைத் தாக்கிய நாயை
வாளால் கொன்றான். இப்படி நாயால் ஏற்பட்ட பகையால்,
இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு மாண்டனர்.

இதனைப் பார்த்துக்கொண்டிருந்த திருக்கண்ணமங்கை ஆண்டான்,தம்மை அடைந்து தம்மால் வளர்க்கப்பட்ட நாய்களுக்காக,கல்வி, அறவொழுக்கம் இல்லாதவர் தங்களுடைய உயிரையேகொடுத்துக்கொண்டார்கள் என்றால், கல்யாணகுணங்கள் நிரம்பியவனும்
அனைத்து ஆற்றல்களும் உள்ளவனுமான எம்பெருமானைச் சரணடைந்தால் ,
அவன் நிச்சயம் நம்மைக் காப்பாற்றுவான் என்று உறுதியுடன், எல்லா ஆசைகளையும்
துறந்து, கோவிலின் உள்ளே மகிழ மரத்தடியில் வாழலானார்.
பத்தராவிப் பெருமான் தினமும் தான் அமுது செய்ததை, ஆண்டானுக்குக் கொடுக்கச் சிறிது காலம் கழிந்தது.
ஆண்டானைத் திருவடியில் சேர்த்துக்கொள்ளத் திருவுள்ளம் கொண்டஎம்பெருமான், எல்லோருக்கும் அறிவித்து, ஒரு நாள் ஆண்டான்தூயவராய்த் திருக்கோயில் வலம் வந்து, பத்தராவிப் பெருமான் ஸந்நிதியில்த்வாரபாலகர் அருகே வர, தனது திருவடியின் பேரொளியில் ஆண்டான் புனிதத் திருமேனி கலக்கச் செய்து முக்தி அருளினார்.

கல்லார் அகலும் கருமமும் ஞானமும் காதலும் மற்று,
எல்லா நிலைகளுக்கு ஏற்ப விதித்த கிரிசைகளும்
வல்லார் முயல்க , வலி இழந்தார் என்தனைத் தொழுக என்று
எல்லாத் தருமமும் உரைத்தவன் இன்னடி சேர்ந்தனமே

என்று ஸ்வாமி தேசிகன் சரமச் சுலோகச் சுருக்கில் அருளிய அருமையும்பெருமையும் வாய்ந்த பெருநிலையை திருக்கண்ணமங்கை ஆண்டான் அடைந்தார்.

இனி, தனியனின் சுருக்கமான அர்த்தம் —–

வாரணமாயிரம் ” அர்த்தத்தின் விசேஷத்தை, நாதமுனிகளிடம் கேட்டு,
திருக்கண்ணமங்கை ஆண்டான் அருளியது இதுவும் இதற்கடுத்த தனியனும்

அல்லி நாள் தாமரைமேல் ஆரணங்கின் இன் துணைவி—குளிர்ச்சி பொருந்தியதாமரைப்புஷ்பத்தின் மீது அமர்ந்திருக்கும் பெரிய பிராட்டியாரின் இனிய ஸகி —

மல்லி நாடாண்ட மடமயில்—–பரந்து விரிந்த நாட்டுக்கு ஒரு மயில் –தன்னுடையபெண்மையாலே அன்ன நடை உடையவள் –ஒருத்திக்கு ஸகி ; ஒருநாட்டுக்கு
ரஞ்ஜனி .
”ஸ ஏவ வாஸுதேவோஸௌ ஸாக்ஷாத் புருஷ உச்யதே |
ஸ்த்ரீ ப்ராயம் இதரத் ஸர்வம் —
என்கிறபடி, ஸமஸ்த சேதனங்களுக்கும் ஈச்வரியான பெரியபிராட்டிக்குஅந்தரங்கையாக இருப்பவள். ஸ்வரூப ,ரூப , உபாய ,புருஷார்த்தங்களைவிகசிதமாகக் காட்டி தன்னுடைய சரிதங்களாலும், ப்ரபந்தங்களாலும் ,
சேதனர்களைத் திருத்துகையால் , பரந்த நாட்டுக்குத் தஞ்சமாக இருப்பவள்.
மெல்லியலாள் —-மிருதுவான சுபாவத்தை உடையவள்–
ஆயர்குல வேந்தன் ஆகத்தாள் —எம்பெருமானை நேராகவே அனுபவிக்காமல்,அவ்வளவிலே ஆயர் குலத்தினில் தோன்றிய கண்ணனை, கோபிகை அவஸ்தையில்அனுபவிக்க ஆசைப்பட்டவள்.
தென்புதுவை வேயர் பயந்த விளக்கு—ஸ்ரீவில்லிபுத்தூரில் வேயர் குலத்துதித்தவிஷ்ணு சித்தரின் குலவிளக்கு
இவள், வேயர் பயந்த விளக்காக இருந்தாலும், ஆயர் குலத்துதித்த மணி விளக்குக்கு
நேராக இருப்பவள்—-


Sarvam Sree Hayagreeva preeyathaam

About the Author

Leave A Response