தனியன்—தெரிவோம்—தெளிவோம்—15

Posted on Feb 22 2017 - 8:37am by srikainkaryasriadmin

தனியன்—தெரிவோம்—தெளிவோம்—15
—————————————————————–

இதுவரை, பொதுத் தனியன்கள் ,பெரியாழ்வார் திருமொழித்தனியன்கள் 7,8,9ம் பிறகு பெரியாழ்வார் பெற்றெடுத்தபெண்பிள்ளையின் பாசுரங்களுக்குத் தனியன்கள் 10 முதல் 14 வரைநன்கு அனுபவித்தோம்—-( அடியேனுக்குத் தொடர்ந்து வருகின்ற
பற்பல ஈ –மெயில்கள் –இதை உறுதிப்படுத்துகிறது—அவர்களுக்குக் ,கைம்மாறு செய்ய இயலாத ஏழையேன் —)

இப்போது, அடுத்ததாக குலசேகர ஆழ்வார் அருளிய
பெருமாள் திருமொழிக்கான தனியன்களை அநுபவிப்போம் .

இன்னமுதமூட்டுகேன் இங்கேவா பைங்கிளியே
தென்னரங்கம் பாடவல்ல சீர் பெருமாள்—பொன்னஞ்
சிலைசேர் நுதலியர் வேள் சேரலர்கோன் ,எங்கள்
குலசேகரனென்றே கூறு.

இந்தத் தனியன் ஸ்ரீ மணக்கால்நம்பிகள்என்கிற ஸ்ரீராமமிச்ரர் அருளியது

சரிதச் சுருக்கம்

ஸ்ரீரங்கத்துக்கு அருகே ”மணக்கால்;; என்கிற க்ராமத்தில்
கலி 4052 கி.பி.929 விரோதிகிருது (விரோதி வருஷம் என்றும் சொல்வர் )
மாசிமாத மக நக்ஷத்திரத்தில் அவதரித்தார்.பகவானின் குமுதாம்சம் எனச் சொல்வர்.உய்யக்கொண்டாரின் ப்ரதான சிஷ்யர்.அவருக்குக் கைங்கர்யம் செய்வதில் அளவற்ற ஆர்வம் உள்ளவராகஇருந்தார். அவருடைய தேவிகள் திடீரென்று பரமபதித்த சமயத்தில்,
மணக்கால் நம்பிகளே , திருமாளிகைக்கு கைங்கர்யம் –தளிகை உட்பட–ஏற்று, ஆசார்யரின் இரு குமாரத்திகளையும் வளர்த்தார்.ஒரு சமயம், ஸ்ரீரங்கத்துப் பெண்கள் ஒன்று சேர்ந்து ,கட்டுச் சோறுஎடுத்துக்கொண்டு காவேரிக்குச் சென்றபோது, உய்யக்கொண்டாரின்
இரண்டு பெண்களும் சென்றனர். உய்யக்கொண்டார் ஆணைப்படி,மணக்கால் நம்பி ,அந்தப் பெண்களுக்குத் துணையாகக் கூடவே சென்றார் .காவிரிக்கரையில் ,பெண்கள் எல்லோரும் விளையாடி, கட்டுச் சோறு
சாப்பிட்டுத் திரும்பினர்.உய்யக்கொண்டாரின் இரண்டு பெண்களும் அவ்வாறு வீட்டுக்குத் திரும்பும்போது, வாய்க்கால் குறுக்கிட்டது.வாய்க்கால் சேறு ம் சகதியுமாக இருந்தது.இரு பெண்களும் ,வாய்க்காலை எப்படித் தாண்டுவது என்று திகைத்து நிற்க,கூடவே வந்த மணக்கால் நம்பிகள், வாய்க்காலின் குறுக்கே
படுத்துக்கொண்டு, தமது முதுகின்மீது நடந்து வாய்க்காலைக் கடக்கச் சொல்ல, அப்படியே இரு பெண்களும் கடந்து வீடு வந்துசேர்ந்தனர். மணக்கால் நம்பி ,அவர்களை வீட்டில் விட்டு விட்டு,
குளித்துவருவதற்காகச் சென்றபோது, எல்லாச் சம்பவங்களையும் கேட்டுணர்ந்த உய்யக்கொண்டார், மணக்கால் நம்பி, திரும்பிவந்ததும், தன்னுடைய சந்தோஷத்தைத் தெரிவிக்க, அதற்கு
மணக்கால் நம்பிகள்,
உற்றேன் உகந்து பணி செய்யும் உன்பாதம்
பெற்றேன் ,ஈதே யின்னம் வேண்டுவதெந்தாய் —

என்று பணிவுடன் சொன்னார்.

உய்யக்கொண்டார், போர உகந்து, தமது ஆசார்யரான நாதமுனிகளிடம் தாம்பெற்ற அருளிச் செயல்களின் உட்பொருள்களையெல்லாம் உவந்து உபதேசித்தார்.

உய்யக்கொண்டார், தமது கடைசி காலத்தில்,மணக்கால் நம்பியிடம் தமது ஆசார்யரான நாதமுனிகள் நியமனத்தைச் சொல்லி,தம்மால் உபதேசிக்கப்பட்ட அர்த்த விசேஷங்களை, பின்னாளிலே
அவதரிக்கப்போகும் , நாதமுனிகளின் திருப்பேரர் யமுனைத் துறைவருக்கு ( ஆளவந்தார்) உபதேசிக்குமாறு நியமித்து,ஸ்ரீமந் நாதமுனிகள் திருவடிகளைத் த்யானித்துக்கொண்டே திருநாடு அலங்கரித்தார் .
மிகவும் துக்கித்த மணக்கால் நம்பிகள், ஆசார்யருக்கு ”ப்ரஹ்மமேத ஸம்ஸ்காரங்களை ” எல்லாம் செய்தார்.
மணக்கால் நம்பிகளின் சிஷ்யர்கள்—ஸ்ரீ ஆளவந்தார், தெய்வத்துக்கரசுநம்பி,கோமடத்துத் திருவிண்ணகரப்பன் , சிறுப்புள்ளூராவுடையப் பிள்ளைஆச்சி என்போர்

தனியனின் அர்த்தச் சுருக்கம்

இன்னமுது ஊட்டுகேன் —-இன் அடிசிலோடு ,பால் அமுது ஊட்டுகேன்
யாருக்கு —-
இங்கே வா பைங்கிளியே—-( இளம்பச்சைக்கிளி )பரிசுத்தமான கிளியைக் கூப்பிட்டு
கையால் அணைத்துக்கொள்ளும்படி அருகே வரச் சொல்லி,உன் அழைப்புக்கும் , நான் வருவதற்கும் என்ன பிரயோஜனம்என்று கேட்கும் கிளிக்கும் ,கிளியைப் போல்வாருக்கும் ,
இன் அமுது ஊட்டுகேன் —இனிய அடிசிலோடு பால் அமுது ஊட்டுகிறேன்என்றபடி—-

கிளியும் அமுதுண்ணவுடன் ,

தென்னரங்கம் பாட வல்ல சீர் பெருமாள் —
இருளிரியச் சுடர்மணிகள் –என்றெல்லாம் தன்னுடைய திருமொழியில் திருவரங்கத்தையும், சக்ரவர்த்தித் திருமகன் ஆராதித்தவனையும் பாடவல்ல கல்யாண குணங்களை உடையவராகையால் பெரியபெருமாளையும் பாடித் தாமும் ”பெருமாள்;” என்று பெயர் பெற்றவர்

பொன்னம் சிலைசேர் நுதலியர் வேள் ——-
வில் போன்ற புருவத்தை உடைய ஸ்த்ரீகளுக்கும் மன்மத ஸ்வரூபர் என்றபடி

சேரலர்கோன்—-சேர நாட்டுக்கு அரசன்

எங்கள் குலசேகரன் என்றே கூறு—
இவர் சேர அரசனானாலும் ,அரங்கனுடைய வைபவத்தைப் பரக்கத் பேசி
இவ்வுலகைத் திருத்தியவர் ;ஆகையாலே ”ப்ரபன்னர்களாகிய ”
எங்கள் குலத்துக்குப் பூஷணம் –அணிகலன் –என்கிறபடியே

எங்கும் எப்போதும் சொல்லக்கடவாய்—சொல்வது, மனத்தில் நினைத்துச் சொல்லாக வருவது—ஆக , மனஸ்ஸாலும் ,வாயாலும் கூறு–சொல்

இதனால், பாகவத அபிமானம் மேலிட்டு, ஆசார்ய நியமனமும் சேர்ந்து மணக்கால் நம்பிகள் இந்தத் தனியனை அருளியாயிற்று.இப்படிக் குலசேகர ஆழ்வார் திருநாமத்தைக் கூறும்படி நமக்குச் சொல்லி,
தனியன் இட்ட மணக்கால் நம்பிகள், ,அடுத்த தனியனில்——

About the Author

2 Comments so far. Feel free to join this conversation.

 1. ராஜகோபாலன்,வெ. May 7, 2017 at 1:50 pm - Reply

  ஸ்வாமிந்,

  1. ப்ரணாமங்கள்.

  2. க்ஷமிக்கவும். இந்தப் பதிவில் தேவரீர் விளக்கமளிக்கும் தனியன் உடையவர் அருளிச் செய்தது அன்றோ !?
  “ஆரம் கெடப்பரன் அன்பர் கொள்ளார் என்று …..” என்ற தனிய ன் தான் மணக்கால் நம்பி செய்தது என்று பல பதிப்புகளில் காணக் கிடைக்கிறதே . ( உ.ம் திருவேங்கடத்தான் திருமன்றம் )

  • srikainkaryasriadmin July 14, 2017 at 4:33 am - Reply

   In the book published by Sri Krishna Sabha Mumbai and also in another very old book ”Thaniyan vyakyanam” thaniyan ”Innamathu oottuken ” and ”aaram kedapparan” are both gifted by Sri Manakkal nambigal

Leave A Response