Posted on Feb 23 2017 - 9:24am by srikainkaryasriadmin

தனியன்—தெரிவோம்-தெளிவோம்—16—தொடர்ச்சி
——————————————————————-

மணக்கால் நம்பிகளின் சரிதச் சுருக்கம் தொடர்கிறது—- —

உய்யக்கொண்டார், தமது கடைசிக் காலத்தில் மணக்கால் நம்பிகளிடம்
தமது ஆசார்யரான நாதமுனிகள் நியமனத்தைச் சொல்லித்
தம்மால் உபதேசிக்கப்பட்ட அர்த்தவிசேஷங்களை ,பின்னாளிலே
அவதரிக்கப்போகும் நாதமுனிகள் திருப்பேரர் யமுனைத் துறைவருக்கு
(ஆளவந்தார் )உபதேசிக்குமாறு நியமித்தார் என்று பகுதி 15ல் பார்த்தோம்.

அதன் விவரமாவது—–

ஸ்ரீமந் நாதமுனிகள் குமாரர் ஈச்வரமுனி. இவருக்கு கலி 4078, கி.பி.976ல்
தாது வருஷம் ஆடி உத்திராடா நக்ஷத்ரத்தில் காட்டுமன்னார்கோயில்
என்கிற வீரநாராயணபுரத்தில் அவதரித்தவர் யமுனைத் துறைவர்.
இவர், சிறு வயதில் ”மஹா பாஷ்ய பட்டர்” என்பவரிடம் சகல சாஸ்த்ரங்களையும்
கற்றுத் தெளிந்தார்.12 வது வயதில் ,சோழ அரச சபையில் ஆக்கியாழ்வான் என்கிற
”வித்வஜன குதூகலன் ” என்னும்அரசவைப் புலவனை வாதில் வென்று அரசியால்
”எம்மை ஆளவந்தீரோ —-”என்று சொல்லி உச்சி முகரப்பட்டார்.

அவருக்கு, சோழ ராஜ்யத்தில் ,பாதி ராஜ்யம் கிடைக்கப்பெற்று ,ராஜபோகத்தில் ,
பகவத் பாகவத கைங்கர்யங்களை மறந்தார்.இதை அறிந்த மணக்கால்நம்பிகள்,
ஆசார்யனுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற ,அரண்மனையில்
சமைப்போரிடம் ”தூதுவளைக்கீரையை”க் கொடுத்து, அதை சமைத்து
ஆளவந்தாருக்குப் பரிமாறச் சொன்னார்.இப்படியே தினந்தோறும் நடந்தது–
ஆறுமாதம் ஆகியும், மணக்கால்நம்பிகளால் , ஆளவந்தாரைச் சந்திக்க
இயலவில்லை.மணக்கால் நம்பிகள் யோசித்து, தூதுவளைக்கீரையை,
சமையல்காரரிடம் கொடுப்பதை நிறுத்தினார்.

ஆளவந்தார்,தூதுவளைக்கீரைச் சமையல் எங்கே என்று பரிசாரகர்களை வினவ,
அவர்கள், தினந்தோறும் இந்தக்கீரையை அளித்தவர் , 3 நாட்களாக
வரவில்லை என்று பதில் சொன்னதும், ஆளவந்தார், அவர் எப்போது வந்தாலும்
தன்னிடம் அழைத்துவருமாறு கட்டளையிட்டார்.
மணக்கால் நம்பிகள், மறுநாள் தூதுவளைக்கீரையுடன் அரண்மனைக்கு
வந்ததும், அவரை ஆளவந்தாரிடம் அழைத்துச் சென்றனர்.
ஆளவந்தார் ”நான் தினமும் சுவைத்து உண்ணும் கீரையைக் கொடுத்து
என்னை உகப்பித்தீர் —உமக்கு என்ன வேண்டும், கேளுங்கள் தருகிறேன்–”என்கிறார்.

அதற்கு மணக்கால் நம்பிகள், ”அரசே–அடியேன் அரசரிடம் எதுவும் வாங்க
வரவில்லை—கொடுக்கவே வந்திருக்கிறேன். உங்கள் பாட்டனார் நாதமுனிகள் ,
ஒரு நிதியைக் கொடுத்து,அதை உம்மிடம் சேர்ப்பிக்கச் சொல்லியிருக்கிறார்–”
என்றவுடன், ”என்னிடம் இல்லாத நிதியா?.என்ன அது ? கொடுங்கள் –”
என்கிறார்
மணக்கால் நம்பிகள், ”அரசே–அது அசையாச் சொத்து—அது இருக்குமிடத்துக்கு
நாம்தான் போகவேண்டும்– வாருங்கள்—அதைக்காட்டுகிறேன்–”என்று சொல்ல,
ஆளவந்தார், ஆவலுடன் மணக்கால் நம்பியுடன் அரசருக்கு உரிய விருதுகள்
ஆடம்பரம் ஏதுமின்றித் தனியே புறப்பட்டார்.
கொள்ளிடக்கரையில் செல்லும்போது,
மணக்கால்நம்பிகள், வேதஸாரமான புருஷ ஸூக்தம் ,ஸ்ருதிகள் ,ஸ்ம்ருதிகள்
விஷ்ணுபுராணம் , ஸ்ரீமத் பகவத் கீதையின் ஸாரம் இவற்றையெல்லாம் வழிநெடுகச்
சொல்லச்சொல்ல , ஆளவந்தார் பெரிதும் துக்கித்தார். ”இவ்வளவு காலம்
வீணாகப் போக்கினேனே –”என்று கலங்கி, மணக்கால் நம்பிகளின் திருவடிகளில்
தெண்டனிட்டு, சீடராக ஏற்றுக்கொள்ள வேண்டினார்.
உடனே மணக்கால் நம்பிகள்,
அவருக்கு சரமச் சுலோகத்தையும் அதன் உட்பொருளையும் உபதேசித்து,
அவரையும் அழைத்துக்கொண்டு திருவரங்கம் பெரியகோயில் வந்தார்.
பெரியபிராட்டியாரை, ஸேவிக்க வைத்தார். பிறகு, திருவரங்கன் ஸந்நிதிக்குச்
சென்று திருமணத் தூண் அருகே நிறுத்தி,”இதுதான் உமது குல தனம்–
உமது பாட்டனார் வைத்துச் சென்ற நிதி—” என்றார்.
ஆளவந்தார், கண்களில் நீர் பெருக, நாத்தழுதழுக்க ,அரங்கனின் திருவடிகளில்
வீழ்ந்து புலம்பி, உடனே ராஜ்யத்தைத் துறந்து, ஸந்யாஸம் மேற்கொண்டார்.
மணக்கால் நம்பிகள் ,சாஸ்த்ர ரஹஸ்யங்கள், திவ்ய ப்ரபந்த ஆழ்பொருள்கள்,
எல்லாவற்றையும் உபதேசித்து,’ மிக முக்கியமான ”யோக ரஹஸ்யத்”தை
குருகைக்காவலப்பரிடம் தெரிந்துகொள்வீராக –இது உமது பாட்டனார்
அனுஷ்டித்து உபதேசித்துச் சென்றிருப்பது—குருகைக்காவலப்பருக்கு மட்டும்தான்
தெரியும்—” என்றார்.
மணக்கால் நம்பி பரமபதித்தபோது, ஆளவந்தார் மிகவும் துக்கத்துடன்
அவருக்கு ”ப்ரஹ்மமேத ஸம்ஸ்காரம் ” முதலியவற்றைத் தன்னுடைய
சீடர்களின் மூலமாகச் செய்தார்.
இவ்வாறு, மணக்கால் நம்பிகள் நமது ஸம்ப்ரதாயத்துக்குச் செய்த
கைங்கர்யங்கள் அளப்பரியவை—-

—-அடுத்தது————-திருமழிசை ஆழ்வார் அருளிய திருச்சந்த விருத்தம் —–
இதற்கான தனியன் தொடருகிறது——-

About the Author

Leave A Response