தனியன்—தெரிவோம்—தெளிவோம்—19

Posted on Feb 28 2017 - 4:53am by srikainkaryasriadmin

Thiruvarangapperumal araiyar-003
———————————————————————–

மற்றொன்றும் வேண்டா மனமே ! மதிளரங்கர்
கற்றினம் மேய்த்த கழலிணைக்கீழ் —-உற்ற
திருமாலைப் பாடும் சீர் தொண்டரடிப்பொடியெம்
பெருமானை எப்பொழுதும் பேசு

இந்தத் தனியன் தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் திருமாலைப் பாசுரத் தனியன் .
திருவரங்கம் அழகிய மணவாளன் முன்பாக,
”மற்றொன்றும் வேண்டா —-”என்கிற திருமாலைப் பாசுரத்தை ,இசையுடன் பாடும்போது, பாசுர அர்த்தங்களில் ஈடுபட்டு ,திருவரங்கப் பெருமாள் அரையர் அருளியது.

இவரது சரிதச் சுருக்கம்

இவர், கலி 4119–கி.பி. 1017ம் ஆண்டு , பிங்கள வருஷம் ,வைகாசி கேட்டை நக்ஷத்ரத்தில் ஸ்ரீ ஆளவந்தாரின் திருக்குமாரராக அவதரித்தார்.
அவரையே ஆசார்யராக வரித்து, அவரிடமிருந்து, ”சரமோபாய நிஷ்டை”,மற்றும் பல ரஹஸ்ய அர்த்தங்களைக் கற்றார். தனது தகப்பனாரின்
பாட்டனாரான ஸ்ரீமந் நாதமுனிகள் ,செயலுக்குக் கொண்டுவந்த ”அரையர் ஸேவை ”யில் மிகவும் ஈடுபட்டு, அரையர் ஸேவை செய்தார்.
இந்த அரையர் ஸேவை மூலமாகவே காஞ்சி தேவப்பெருமாளை மகிழ்வித்து,இராமானுசர் திருவரங்கம் வர , வேண்டியன செய்தார்.
பெரியநம்பிகளின் கட்டளைப்படி,உடையவருக்கு, ”ச து ஸ்லோகி”,”ஸ்தோத்ர ரத்னம்”இவற்றையும், ஆழ்வார்களின் அருளிச் செயல்களின்
உட்பொருள்களையும், மற்றும் தர்ம சூக்ஷ்மங்களையும் ,உடையவருக்கு வழங்கினார்.
தனது சஹோதரர்களான , ”தெய்வத்துக்கரசு நம்பி”, ”பிள்ளையரசு நம்பி”,”சொட்டை நம்பி”, இவர்களை உடையவரின் சிஷ்யர்களாக்கினார் உடையவருக்கு, ”லக்ஷ்மண முனி”என்று பெயரியிட்டவர்.
தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் ”திருமாலை” மற்றும் ”திருப்பள்ளியெழுச்சி”பாசுரங்களுக்கு தனியன்கள் அருளிச் செய்தவர்.

தனியனின் அர்த்தச் சுருக்கம்

மற்றொன்றும் வேண்டா மனமே——
மனம், சாதாரண விஷயங்களிலே இழிந்தாலும், தனக்குத் தானே திருந்தி, ஸத் விஷயங்களிலும் லக்ஷ்ய்மாகக் கொண்டு அவற்றின் அர்த்தத்தை
க்ரஹிக்க வேண்டி, மற்ற ஒன்றும் வேண்டா மனமே –என்று சொல்லிற்று

மதிளரங்கர்
கற்றினம் மேய்த்த கழலிணைக்கீழ் —- கண்ணன் திருவவதாரத்திற்கும் அரங்கனே காரணம் —இவர் மதிள் அழகு உடையவர் — மதிளரங்கர்
தொண்டரடிப் பொடியாழ்வார், தன்னுடைய ”திருமாலை”யிலே ,9வதுபாசுரத்திலே ,”கற்றினம் மேய்த்த எந்தைக் கழலிணைப் பணிமின் நீரே ”
என்கிறார் . அதனால், தனியனில், திருவரங்கப் பெருமாள் அரையர் ,
கற்றினம் மேய்த்த கழலிணைக்கீழ்—என்று இவ்வாறு கூறுகிறார்.
உற்ற திருமாலைப்பாடும் சீர்த்தொண்டரடிப்பொடி—
நமக்கு உறுதுணையாக இருக்கிற-உறவாக இருக்கிற
யார்—?
திருமாலைப்பாடும் சீர்த்தொண்டரடிப்பொடி—-
திருமாலைப்பாடும்—-அதாவது தென்னரங்கனைபி பாசுரங்களால் பாடித் துதிக்கும்,
சீர்த்தொண்டரடிப்பொடி—- சீர்மைமிக்க தொண்டரடிப்பொடி ஆழ்வார்
எப்பொழுதும் பேசு—-அவருடைய குணானுபவங்களை எப்போதும்போற்று
எம்பெருமானை எப்பொழுதும் பேசு—–தொண்டரடிப்பொடி ஆழ்வார்
பாசுரமிட்ட எம்பெருமானான மதிள்அரங்கரை எப்போதும் போற்று !
ஸ்வாமி நம்மாழ்வார் , திருவாய்மொழியில் அருளுவதைப்போல,
”துஞ்சும் போதும் விடாது தொடர் கண்டாய்” (1–10–4 )
எப்பொழுதும் நினைப்பது மாத்திரமில்லாமல், இதனால், பகவத் கைங்கர்யஅபேக்ஷையுடன் பாகவத சேஷத்வம் வேண்டுகிறார்.அதாவது,தொண்டரடிப்பொடி ஆழ்வார் குணானுபவத்தைத் தானும் பெற்று,
உஜ்ஜீவிப்பது அல்லாமல், உஷத் காலத்திலே,”ஹரி;; சப்தத்திற்குசங்கீர்த்தனம் செய்யுமாப்போலே ,கேட்பவர்களும் உஜ்ஜீவிக்கப்
பேச வேணும் என்று கருத்து—–

About the Author

Leave A Response