தனியன்—தெரிவோம்—தெளிவோம்—–23
—————————————————————————–
காட்டவே கண்டபாத கமலம் நல்லாடை உந்தி
தேட்டருமுதரபந்தம் திருமார்பு கண்டம் செவ்வாய்
வாட்டமில் கண்கள் மேனி முனியேறித் தனிபுகுந்து
பாட்டினால் கண்டுவாழும் பாணர்தாள் பரவினோமே
இதுவும், திருப்பாணாழ்வார் அருளிய ”அமலனாதிபிரான்”
பாசுரங்களுக்கான தனியன்.
திருமலைநம்பிகள் என்கிற ஸ்ரீசைல பூர்ணர் என்கிற
திருமலை பூர்ணர் அருளியது. பெரிய திருமலை நம்பி என்றும் அழைப்பர்—
இவர் ,ஸ்ரீமந் நாதமுனிகளின் திருப்பேரரான ஸ்ரீ ஆளவந்தாரின் திருப்பேரன் ஆவார்.
கலி 4076 கி.பி.974 பவ வருஷம் சித்திரைமாத ஸ்வாதி
நக்ஷத்ரத்தில் அவதரித்தவர்.
திருமலை—திருப்பதி தேவஸ்தானரிகார்டுகளில்,
கலி 4075, கி.பி. 973, ஸ்ரீமுக வருஷம் புரட்டாசி
மாதம், அனுஷ நக்ஷத்ரம் என்று உள்ளது.
திருவேங்கடமுுடையானுக்கு,”பாபவிநாசம்”அருவியிலிருந்து,தினமும் தீர்த்தம் எடுத்து வந்து ஸமர்ப்பிக்கும் கைங்கர்யம் செய்தவர்.
திருமலையப்பனாலேயே ”தாதா” என்று அழைக்கப்பட்டவர்.இவருடைய சந்ததியினர் ,”அதனால், ”தாதாசார்யர் ”என்று பெருமையுடன் போற்றப்படுகிறார்கள்.
ஸ்ரீ உடையவரின் தாய்வழி மாமன். ஸ்ரீ உடையவர் ,ஸ்ரீபெரும்பூதூரில் அவதரித்தபோது, திருமலையிலிருந்து ,ஸ்ரீபெரும்பூதூர் வந்து ,
குழந்தையைக் குளிரக் கடாக்ஷித்து, குழந்தையின் முகப்பொலிவைக் கண்டு, ”இளையாழ்வான்”இவரே என்று திருநாமமிட்டவர்.உடையவரின் சிற்றன்னையின் குமாரரும் தனக்குச் ஸஹோதரியின்குமாரருமான ”கோவிந்த”னை திருத்திப் பணி கொண்டவர்.தனது
குமாரர்களான ,”பிள்ளைத் திருமலை நம்பி”, ”பிள்ளான்”, மற்றும் தனக்குமருமகன் உறவான ”கிடாம்பி ஆச்சா”னையும் உடையவருக்கு,சிஷ்யர்களாக ஆக்கியவர்—-உடையவரை ஆச்ரயிக்கச் செய்தவர்.
முதன் முதலில், உடையவர் , படிகளேறி, திருமலைக்கு வந்தபோது ,இவர் திருமலையிலிருந்து கீழே படிகளில் , திருவேங்கடமுடையான் ப்ரசாதங்களுடன் ,இறங்கி உடையவரை எதிர்கொண்டழைத்தவர்.
”பெரியவரான தேவரீர் இப்படி சிரமப்படலாமா–? தேவரீர் விரும்பினால்யாரேனும் சிறியவரை அனுப்பி இருக்கலாமே –” என்று உடையவர்விண்ணப்பிக்க ,திருமலைநம்பிகள் ,”தேடித் தேடிப் பார்த்தும்,
அடியேனை விடச் சிறியவர் எவரும் இல்லை—-” என்று தன்னைத்தாழ்த்திப் பணிவுடன் சொன்னவர் .உடையவருக்கு, திருப்பதி மலையில்முதல் குன்று என்னுமிடத்தில் உள்ள ”பாதாள மண்டபத்தில்”
தினமும் காலை ,திருமலையிலிருந்து இறங்கி வந்து ,ஸ்ரீமத்ராமாயண ச்லோகங்களுக்கு விசேஷ அர்த்தங்களை ஒருவருட காலம்சொன்னவர்.அப்போதெல்லாம், உடையவர் திருப்பதிலிருந்து மலையேறி இந்த முதல் குன்றுக்கு வருவாராம். அங்கு இப்போதும்ஸ்ரீநிவாசப் பெருமானின் ”திருவடிச் சுவடுகள்” பாதாள மணடபத்தின் அருகே
கல்லில் பதிந்து இருக்கக் காணலாம். (இவை பற்றிய விவரங்கள்,குருபரம்பரா பிரபாவம் சொல்லும் வாய்ப்புக்கிடைத்தால் விரிவாகச்
சொல்கிறேன்—)
திருமலைநம்பி ,வாழ்ந்த திருமாளிகை திருமலையில் தெற்கு மாடவீதியில் உள்ள முதல் கட்டிடம். ஏழுமலையான் –உத்ஸவர் –புறப்பாட்டின்போது எல்லாம், இங்கு உள்ள திருமாளிகையில்
திருமலைநம்பிக்கு அருளப்பாடு ஆகி , இங்கிருந்துதான் , வேத ,திவ்யப்ரபந்த பாராயணம் தொடங்கப்படுமாம்.இப்போதும் உத்ஸவமூர்த்தி
மாடவீதி புறப்பாட்டின்போது, இந்த சந்நிதியில் திருமலைநம்பிஅர்ச்சா மூர்த்திக்கு ,மரியாதைகள் ஆகின்றன —
(கடந்த இரண்டு வருடங்களாகத் திருமலையில், புரட்டாசி மாத அநுஷ நக்ஷத்ர
உத்ஸவத்தில் அந்வயிக்கும் பேறு கிடைத்துள்ளது—-அவதார உத்ஸவத்தை
”திருமலை நம்பிகள் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கைங்கர்ய ஸபா சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்–முக்கியமாக கீழத்திருப்பதி–ஸ்ரீ கோவிந்தராஜன்
ஸந்நிதி வடக்கு மாடவீதி வாசியான ஸ்ரீ உ.வே. கிருஷ்ணஸ்வாமி தாதாசார்ய ஸ்வாமி
மற்றும் திருமலையில் திருமலை நம்பி மடத்தை நிர்வகிக்கும் ஸ்ரீமான் ராகவன் —
இருவரையும் சொல்லியாகவேண்டும்–சமீப காலமாக, தி.தி. தேவஸ்தானமும் இதில் இணைந்து நடத்துகின்றனர் )
தனியனின் அர்த்தச் சுருக்கம்
லோகசாரங்க முனி தோள் தன்னிலே அமர்ந்து, தென்னரங்கனைத் திருக்கமலபாதம், அரையில் சிவந்த ஆடை, அயனைப் படைத்த எழில் உந்தி
தேடற்கரிய திருவயிற்று உதரபந்தம் திருவாரமார்பு, உலகங்களையெல்லாம் முற்றும் உண்ட கண்டம்,சிவந்த வாய், ஸதா விகஸிக்கும் அப்பெரியவாய
கண்கள், நீலமேனி —என்றெல்லாம் அனுபவித்து மெய்மறந்தார் ,திருப்பாணாழ்வார்.
பெரிய பெருமாளின் நியமனத்துக்கு முன்பாக, காவிரிக் கரையிலிருந்தே வீணையும் கையுமாக பெரியபெருமாள் விஷயங்களான பாசுரங்களாலே அவனுடைய திவ்ய குணாதிசயங்களை அனுபவித்தவர்.பெரியபெருமாள்
நியமனத்துக்குப் பின்பு, ”முனி வாஹனராகி ” நேரிலேயே அனுபவித்தவர்
அதுமட்டுமின்றி, உலகறிய பெரிய பெருமாள் திருவடிகளில் அந்தர்ப்பவித்தார்–
அப்படிப்பட்ட திருப்பாணாழ்வார் திருவடிகளில் –பரவினோம்—சிரோபூஷணமாகக் கொண்டோம்—ஸ்தோத்ரம் செய்தோம்—-