சிற்றின்பக் கவிராயரும், பேரின்பக் கவிராயரும் –இரண்டு கவியேறுகள்

Posted on Sep 21 2017 - 10:07am by srikainkaryasriadmin

imagesimages (5)
————————————————————————————————————-

சிற்றின்பக் கவிராயர் சிறிதும் அஞ்சாமல்
பற்றியதைப் பெரிதாக்கி பலபாடல் புனைந்திடுவார்

வள்ளுவரின் காமப்பால் வலியவந்து தோற்றுவிடும்
உள்ளுவார் உள்ளுவதை உணர்ந்து பாடல் புனைந்திடுவார்

சிற்றின்பம் வெட்கிவிடும்; சீச்சீ என விதிர்க்கும்
வெற்றிக்களிப்பிலிவர் வீறுநடை போட்டிடுவார்

ஆனால்———
உள்ளமோ ஏங்கிவிடும் ;உன்னதமாம் பேரின்பம்
கள்ளமாய்ப் புகுந்துவிடும் ,கடுகளவும் ஐயமிலை

கோவிந்தன் துணையிருக்க ,கோவிந்தா என விளித்து
சாவுதனை அழைத்து சடக்கென்று போய்விடவே ,

சிற்றின்பக் கவிராயர் சிந்தனையைச் செலுத்திவர
சிற்றின்பம் அலைகுலைய சடுதியில் மறைந்துவர ——-

அங்கே —————

பேரின்பக் கவிராயர் ,பேராளன் , தாடாளன்
பேர்சொல்லிக் கூப்பிட்டுப் பூசைகள் செய்திடுவார் .

சோர்ந்து இருக்காமல், சொற்பொழிவு செய்திடுவார்
ஏரார்ந்த சிங்கத்தை ஏற்றிப் பணிந்திடுவார்

சிட்டர்கள் ,மக்களெல்லாம் சிரக்கம்பம் செய்திடுவர்
இட்டிடும் கட்டளைக்கு, இதோ, இதோ என்றிடுவர்

ஆனால்—–

சிற்றின்ப எண்ணங்கள் சிந்தையில் செழித்து வர
சற்றேனும் பொறுக்காமல் சராசரியாய் ஆகிடுவார்

இளமைக்கே சிற்றின்பம், இனி எங்கு அந்த இன்பம் ?
வளமைக்கும் சிற்றின்பம், வலிய வரின் ஒதுக்குவதோ ?

என்றெல்லாம் ஏங்கிடுவார் எதற்கு இந்தப் பேரின்பம்
என்றெல்லாம் முடிவெடுத்து, ஏக்கமுடன் வீற்றிருக்க

அங்கொரு நங்கை ஆவலுடன் அருகே வர
எங்கே ஒளிவதென பேரின்பக் கவிராயர் ஒளிய

சிற்றின்பக் கவிராயர் சினத்துடன் அங்குவர
சீரிளமை நங்கையவள் சீச்சீ என ஓடிவிட

இரண்டு கவிராயர்களும் இணக்கமுடன் பேசி,
திரண்டு எழுந்த எண்ணத்தால் தீர்க்கமாய் முடிவெடுத்து,

சிற்றின்பம் சிலகாலம் சேதனனைப் பிடித்தாலும்
பேரின்பம் கண்டுவிடில் போதை தெளிந்துவிடும்

பேரின்பம் நிலைத்துவிடும், பரமபதம் கிடைத்துவிடும்
இருவருமாய்ச் சொன்னார்கள், சொன்னார்கள் இருவருமாய் !

இருந்து இருந்து சொன்ன இன்னமுதச் சொல்மருந்து
மருந்து இதுவே ! மக்காள் ! மறுக்காமல் ஏற்றிடுவீர் !

About the Author

Leave A Response