Thaniyan—31

Posted on Nov 20 2017 - 10:28am by srikainkaryasriadmin

தனியன்—–31
—————————

கைதை சேர் பூம்பொழில்சூழ் கச்சிநகர் வந்துதித்த
பொய்கைப் பிரான் கவிஞர் பேரேறு —-வையத்து
அடியவர்கள்வாழ அருந்தமிழ் நூற்றந்தாதி
படி விளங்கச் செய்தான் பரிந்து.

இந்தத் தனியன், இயற்பாவில் அடங்கிய முதல் திருவந்தாதி அருளிச் செயலுக்கு, ஸ்ரீ முதலியாண்டான்
உவந்து அருளியது .

இவர், மதுரமங்கலம் அனந்த தீக்ஷிதர் மற்றும் எம்பெருமானாரின் சகோதரி
பூமி நாச்சியார் தம்பதியருக்கு கலி 4129, பிரபவ ( கி.பி. 1027 ) சித்திரை மாதத்தில், புனர்வஸு
நக்ஷத்ரத்தில் அவதரித்தவர்… ”தாசரதி”என்கிற திருநாமமும் இவருக்கே உரியது.
எம்பெருமானாரின் முதல் சீடர்.அவருக்கு, ”தண்டாகவும் (த்ரிதண்டம் ) , பாதுகையாகவும்
போற்றப்பட்டவர்.

கர்நாடகத்தில், ”மிதிளாபுரியில் ” வசித்த வீர சைவர்களும் ,சமணர்களும், எம்பெருமானாரை
விரோதியாகப் பாவித்தனர். அங்கு எழுந்தருளியிருந்த எம்பெருமானார் , முதலியாண்டானை
அழைத்து, அவ்வூரில் உள்ள நல்லநீர்க் குளத்துறையில் பாதங்களை அலம்பிவருமாறு சொன்னார்.
முதலியாண்டானும் , அப்படியே சென்று, அந்தக் குளத்தின் தீர்த்தத்தில்
இறங்கித் , தன்னுடைய பாதங்களைநன்கு அலம்பிக்கொண்டு திரும்பிவந்தார்.
பிறகு அந்தக்குளத்தில் இறங்கி நீராடி, தீர்த்தம் உட்கொண்ட வீரசைவர்கள் மற்றும் சமணர்கள்
இடையே மகத்தான மாற்றம் ஏற்பட்டது.தங்களுக்கு இருந்த எம்பெருமானாரை விரோதிக்கும்
மனப்பான்மை அடியோடு அழிந்ததை உணர்ந்தனர்.எம்பெருமானாரை ஆச்ரயித்தனர்.அன்றுமுதல், அந்த ஊர்,
”ஸ்ரீ சாளக்ராமம் ” என்று அழைக்கப்படலாயிற்று. இப்படி, முதலியாண்டானின் பிரபாவம் அளப்பற்கரியது.

ஒருசமயம், கூரத்தாழ்வானின் மிகுந்த பிரார்த்தனையின்பேரில், எம்பெருமானார்,அவருக்கு
”ரஹஸ்யார்த்ங்களை ” உபதேசித்தார்.முதலியாண்டான் தனக்கு அந்த பாக்கியம் கிட்டவில்லையே
என்று மிக வருந்தி, எம்பெருமானாரிடம் தாபப்பட்டார். அப்போது, எம்பெருமானார் ,” நீ என்னுடைய
உறவினன்; உன்னிடம் இருக்கும் குறைகள், குற்றங்கள், எனக்குப் புலப்படாது;ஆதலால், திருக்கோட்டியூர்
நம்பிகளிடம் சென்று உபதேசம் பெற்றுக்கொள்” என்றார். முதலியாண்டான், திருக்கோட்டியூர்
நம்பிகளிடம் சென்று ,பிரார்த்தித்தார். ஆனால், அவரோ, ”கூரத்தாழ்வானைப் போலவே நீரும்
வஞ்ச முக்குறும்பு அறுத்தவர்;(கல்வி, செல்வம், குலம் மூன்றாலும் கர்வப்படாமை ) உமக்கு,
எம்பெருமானாரே உபதேசிப்பார் ;” என்று சொல்லித் திருப்பி அனுப்பிவிட்டார்.
திருவரங்கம் வந்து, எம்பெருமானாரின் திருவடி பணிந்து, நடந்தவைகளை விண்ணப்பிக்கும்போது
ஒரு திருப்பம் —-அதிசய சம்பவம் நிகழ்ந்தது.

பெரியநம்பிகள் ஆசார்ய புருஷர்;எம்பெருமானாருக்கு மதுராந்தகம் ஏரிகாத்த
ராமன் கோவிலில், ”பஞ்சசம்ஸ்காரம் ” செய்துவைத்தவர்; ஸ்ரீமன் நாதமுனிகள் அருளிய ”நியாய தத்வம் ”
ஸ்ரீ ஆளவந்தார் அருளிய ”மஹா புருஷநிர்ணயம் ”, ”கீதார்த்த ஸங்க்ரஹம் ”, ”ஸித்தித்ரயம் ”, மற்றும் பாஞ்சராத்ர
ஆகமத்தையும் உபதேசித்தவர்.தவிரவும், ஸ்ரீ வ்யாஸரின் ப்ரஹ்ம ஸூத்ரம் அதன் அர்த்த விசேஷங்கள்,
திருவாய்மொழி தவிர ஏனைய ஆழ்வார்களின் அருளிச் செயல்கள், அவற்றின் உட்கருத்துக்கள்
என்று உபதேசித்தவர்.
இந்த மஹா ஆசார்யனின் புதல்வியான ” அத்துழாய் ” அந்தச் சமயத்தில் எம்பெருமானாரின்
மடத்துக்கு வந்து, தன்னுடைய புகுந்த வீட்டின் பிரச்னையை ,முறையிட்டாள்.
அத்துழாய் , புக்ககத்தில் இருந்தபோது, அவரது மாமியார், எதிர்பார்த்தபடி சீதனத்தை , அத்துழாய்
கொண்டுவரவில்லையென்றும் , பெரியநம்பிகளின் வறுமையை இழித்தும் பேசியபடி இருந்தார்.
ஒருசமயம் நீராட ச் செல்லத் தன மாமியாரைத் துணைக்கழைத்தபோது, ”நான் என்ன , உன் வீட்டு வேலைக்காரியா ?
நீ இங்கு வந்தபோது, யாரேனும் சீதன வெள்ளாட்டியை ( வேலைக்காரி ) அழைத்து வந்திருந்தால் , அவளைத்
துணைக்கு அழைத்துப் போ,,,” என்று ஏச, அத்துழாய் மிகவும் வருந்தி ,பிறந்த வீட்டுக்குவந்து,
பெரியநம்பிகளிடம் ,விவரத்தைக் கூறி அழுதார். அவர், ”உன் ஜீயர் அண்ணனிடம் போய்ச் சொல்லிக்கொள் ”
என்று சொல்லிவிட,

அத்துழாய், எம்பெருமானாரின் மடத்துக்கு வந்து, எம்பெருமானார் முதலியாண்டானிடம் பேசிக்கொண்டிருக்கும்போது ,
எம்பெருமானாரை சேவித்து, தனக்கு நேர்ந்தவற்றைச் சொல்லித் தேம்பி அழுதார். எம்பெருமானார், முதலியாண்டானைக்
குறிப்பால் உணர்த்த, முதலியாண்டான்—சகல சாஸ்த்ரங்களையும் கற்று உணர்ந்தவர்—அத்துழாயுடன்
வெள்ளாட்டியாகப் புறப்பட்டு விட்டார். அத்துழாயின் புக்ககத்தில், எல்லா வீட்டு வேலைகளையும் –ஒரு வேலைக்காரனாக,
ஆசார்யனின் மகளுக்குச் செய்கிறோம் என்கிற உகப்புடன் , செய்தார். ஆறுமாத காலம் ஆயிற்று.

ஒருநாள்—- அத்துழாயின் மாமனாருக்கு வேண்டிய சில வித்வான்கள், அங்கு வந்து,
ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்தை ”காலக்ஷேபமாகச் ” சொல்லும்போது, ராமனின் கீர்த்தி குறையுமாறு பொருள் உரைத்தார்கள் .
இதைக் கேட்டுக்கொண்டிருந்த முதலியாண்டான் மிக வருந்தி கண்ணீர் சிந்தினார்.
இதைப் பார்த்த அத்துழாயின் மாமனார், ”இங்கு வேலைப்பளு அதிகமாக இருப்பதால் கண்ணீர் சிந்துகிறார்போலும் ”
என்று எண்ணி, ”வேலை செய்யச் சிரமமாக இருந்தால், உடனே ஊருக்குப் போய்விடு—-இங்கு
அழுதுகொண்டிருக்காதே ….” என்று சொன்னார்.
அதற்கு, முதலியாண்டான், ”ஆசார்ய குமாரத்தியின் விருந்தினருக்கு, கைங்கர்யம் செய்ய அடியேனுக்குக்
கொடுத்துவைத்திருக்கவேண்டும்.—அதற்காக அழவில்லை, வால்மீகியின்ச்லோகங்களுக்கு அர்த்தம் சொல்லும்போது,
வித்வான்கள், சக்ரவர்த்தித்திருமகனின் கல்யாணகுணங்கள் குறையும்படி சொன்ன தவறான அர்த்தத்தால்,
கண் கலங்கினேன் —” என்கிறார்.
வித்வான்கள், ”மடைப்பள்ளிக்காரனுக்கு வால்மீகியின் ச்லோகங்கள் பற்றி என்ன தெரியும் ?—” என்று கேட்டவுடன் ,
அனுமதி அளித்தால், விளக்கமாகச் சொல்கிறேன் என்று பணிவுடன் முதலியாண்டான் சொன்னார்.
” சரி–உன் விளக்கம்தான் என்ன ? ” அவர்கள் கேட்டவுடன், வால்மீகியின் ச்லோகங்களுக்குச் சரியான அர்த்தங்களை—
பகவானின் திருக்கல்யாண குணங்களைச் சொன்னார். வித்வான்கள், தலைகுனிந்தனர்.
”இவ்வளவு ஞானமுள்ளவரை, இப்படிப்பட்ட பணிகளில் அமர்த்தியிருப்பது பெரிய பாவம்—” என்று அத்துழாயின்
மாமனாரிடம் சொல்லிச் சென்றனர்.
பிரமிப்புடன் அத்துழாயின் மாமனார்,இனி எந்த வேலையும் செய்யவேண்டாமென்றும் தன்னை மன்னிக்கும்படியும்
உடனே ஊருக்குத் திரும்பும்படியும்–” பிரார்த்தித்தார்.
அதற்கு, முதலியாண்டான், அனுப்பியவர் திரும்ப அழைத்தால்தான் செல்ல முடியும் என்று சொல்ல,
அத்துழாயின் மாமனார் , பெரியநம்பிகளிடம் மன்னிப்புக் கேட்டு, ” மஹா வித்வான் ஒருவரை, சீதன வெள்ளாட்டியாக
அனுப்பி எங்களை நசிப்பிக்க வைத்துவிட்டீர்களே —‘ என்று விண்ணப்பிக்க, அதற்கு பெரியநம்பிகள்,
” இது பற்றி எனக்கொன்றும் தெரியாது—–எம்பெருமானாரைக் கேளுங்கள்—” என்று சொல்லி விட்டார்.
எம்பருமானாரின் மடத்துக்கு வந்த அத்துழாயின் மாமனார், அவருக்குத் தெண்டனிட்டு, ”தேவரீர்,
அத்துழாயுடன் அனுப்பிய வித்வானைத் திரும்ப அழைத்துக்கொள்ள வேணும் –” என்று விண்ணப்பித்தார்.
அதற்கு, எம்பெருமானார், ” அவரைத் தவிர வேறு வேலைக்காரர் எம்மிடம் இல்லை—
அவரைப் பிடிக்காவிடில் நாமே வருகிறோம்—” என்கிறார்.
பதறிப்போன அத்துழாயின் மாமனார், ” எங்களுக்கு, வேலைக்காரர்களே வேண்டாம்—
எங்களை மன்னித்து அந்த வித்வானைத் திரும்ப அழைத்துக்கொள்ளுங்கள் ” என்று தெண்டனிட்டார்.
எம்பெருமானாரோ அத்துழாயைக் கேட்டுக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட,
அத்துழாயின் மாமனார், திரும்ப ஊருக்கு வந்து , அத்துழாயிடம் ”உன் மாமியார் பேசியதை
மனத்தில் வைத்துக்கொள்ளாதே —” என்று கெஞ்ச, அத்துழாயின் சம்மதத்திற்குப் பிறகே,
எம்பெருமானார், முதலியாண்டானைத் திரும்ப அழைத்துக்கொண்டார்.

இந்த முதலியாண்டான்தான் , பின்னாளில், பொய்கை ஆழ்வாரின் முதல் திருவந்தாதிக்குத்
தனியன் அருளிச் செய்தார்.

தனியனின் அர்த்தச் சுருக்கம்

தாழை மரங்களோடே சேர்ந்து இருக்கிற, ரம்யமான உத்யான வனங்களாலே சூழப்பட்டிருக்கிற ,
முக்தி தரும் நகரேழில் முக்கியமாய்த் தேனெடுத்த சோலை சூழ்ந்த திருக்கச்சி நகரில் ,
திருப்பொய்கையில், ஒரு தாமரைப் பூவில் வந்து அவதரித்து அருளியவர் என்றபடி—–
பொய்கைப்பிரானை , கவிஞர் பேரேறு , என்கிறார்.
இவர் கவிசிரேஷ்டர் —ஆதிகவி—முதல் மூன்று ஆழ்வார்களில் முதன்மையானவர்.
இதனால், தமிழில் பாடும் கவிஞர்களுக்கு, இவரே –இவரின் பாசுரங்கள்—கவி லக்ஷணம்
என்கிறார்.

வையத்து அடியவர்கள் வாழ—–என்றதால்,
இப்பூமியிலே , பகவானின் அடியார்களான பாகவத ஸம்ருத்தி ஏற்பட்டு அவர்கள் வாழ —-

அருந்தமிழ் நூற்றந்தாதி என்றது—–
அரிதான வேதப்பொருளை, தமிழில் ”வையம் தகளியா —-” என்று தொடங்குகிற
நூறு பாட்டுக்களை உடைய திருவந்தாதி —-என்றபடி

பரிந்து படி விளங்கச் செய்தான்—-என்றதால்
ஆழ்வார் நித்யஸூரி .
வையம் தகளியான ப்ரம்மாண்ட விளக்கை ஏற்றி உலகத்து இருளனைத்தும் போக்கினார்.
எம்பெருமானோ பரம க்ருபையினாலே பூமியிலுள்ள அஜ்ஞானம்
எல்லாம் தீர்ந்து, ப்ரகாசிக்கச் செய்தருளினார்—-

நாலாயிரத் தனியன்களுக்கு, வ்யாக்யானம் செய்த பெரியோர்கள்,
இந்தத் தனியன், இதற்கடுத்த தனியனான ,
”என் பிறவி தீர ————–”
இரண்டையும் சேர்த்து வ்யாக்யானம் செய்திருக்கிறார்கள்.
அதை, அடுத்த தனியனின் இறுதியில் பார்ப்போம் .

வளரும்—-

Daasharathi

About the Author

Leave A Response