தனியன் 10 முதல் 21

Posted on Jan 26 2018 - 7:32am by srikainkaryasriadmin
|

தனியன் 10 முதல் 21
—————————–
தனியன்—-10
நீளாதுங்கஸ்தநகிரிதடீ  ஸுப்தமுத்போத்ய  க்ருஷ்ணம்
பாரார்த்யம் ஸ்வம்ஸ்ருதி ஸத  ஸிரஸ் ஸித்த மத்யா பயந்தீ |
ஸ்வோச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகளிதம் யாபலாத் க்ருத்யபுங்க்தே
கோதாதஸ்யை நம இதமிதம்  பூய ஏவாஸ்து பூய : ||
இந்தத் தனியன் ”பட்டர் ” அருளியது. திருக்கோஷ்டியூரில் ,
பெரியாழ்வார் திருமொழியின் அர்த்தத்தை அநுஸந்தித்த பிறகு,
திருப்பாவை அநுஸந்தான சமயத்தில் ,ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளிலே
ஈடுபட்டு ,”பட்டர்”  அருளியது  என்பர்.
இவரது சரிதக்குறிப்பு—-
மிகச் சுருக்கமாக—( இவர் சரிதம் பற்பல மஹோன்னத சம்பவங்களைக் கொண்டது–குருபரம்பரா பிரபாவம் சொல்லும்போது விரித்து உரைக்கப்படும் )
 
எம்பெருமானாரை ஆச்ரயித்தவர் ஸ்ரீ கூரத்தாழ்வான் என்று முன்பே பார்த்தோம்.இவர் ஸ்ரீரங்கத்தில்,வாஸம் செய்தபோது க்ருஹஸ்தாஸ்ரம தர்மப்படி உஞ்சவ்ருத்தி செய்து (உபாதான காலம் )அதில் கிடைக்கும் அமுந்த்ரியைக் (அரிசி )   கொண்டுவந்து ஸஹதர்மிணியிடம் கொடுத்து தளிகை செய்து ஆத்து எம்பெருமானுக்கு நிவேதனம் செய்து, அதிதி வரும்வரை காத்திருந்து ,பிறகு போஜனம் செய்து வழக்கம்.
ஒருநாள், பெரிதாக மழை பொழிந்துகொண்டிருந்ததால், உஞ்சவ்ருத்திக்கு
வெளியே செல்ல இயலவில்லை. பெருமாளுக்கு, பழத்தை நிவேதனம்
செய்துவிட்டு திருவாராதனத்தை முடித்து விட்டு, க்ரந்தங்களைப்
பார்த்துக்கொண்டிருந்து இரவு, பட்டினியுடன் உறங்கச் சென்றார்.
கூரத்தாழ்வான் தேவிகளான ஆண்டாள் மிகவும் வருந்தி,  துக்கம் மேலிட்டு  இருந்த நேரத்தில்,  திருவரங்கம் பெரியகோயிலில்    பெரியபெருமாள் நம்பெருமாள் திருவாராதனம் செய்யப்பெற்று, தளிகை அமுது செய்விக்கப்பெற்று ,அதற்கான திருச்சின்னம்,  திருமணி ஓசை இவைகளைக் கேட்டாள் .    துக்கம் பீறிட,”ஹே  —ரங்கா—இங்கே உன் பக்தர் ஆகாரமின்றி உறங்குகிறார்.உமக்கு, எல்லாமும்
குறைவில்லாமல் நடைபெறுகிறது.உன் பக்தருக்கு அநுக்ரஹிக்க மாட்டாயா –”என்று, மனத்தில் எண்ணி, கண்ணீரைச் சிந்தினாள் .ஸ்ரீரங்கநாதனுக்கு , இது கேட்காமல் போகுமா ?
உத்தமநம்பி என்பவர் கனவில் தோன்றி, நமக்கு இப்போது தளிகை
கண்டருளிய ப்ரஸாதத்தை ,சகல ஸத்ர ஸாமர வாத்யங்களுடன் ,எடுத்துச் சென்று,கூரத்தாழ்வான் திருமாளிகையில் அவரிடம் கொடுத்து, ஒருபாகத்தை அவரும் இரண்டு பாகத்தை அவருடைய தேவிகளும், ஸ்வீகரிக்கச் சொல்லும் ” என்று கட்டளை இட்டார்.
உத்தமநம்பி அவ்வாறே சகல மரியாதைகளுடன் கூரத்தாழ்வான் திருமாளிகைக்கு வந்து ,நம்பெருமாள் கட்டளையைச்  சொன்னார்.
ஆழ்வான் மிகுந்த மரியாதையுடன் ப்ரஸாதத்தைப் பெற்று, உள்ளே எடுத்துச் சென்று தேவிகளிடம்  ” இன்றைக்குப் பெருமாளின் க்ருபை இவ்விதம் இருக்கக் காரணம் நீதானோ—?  ” என்று கேட்டார்.
தேவிகளும் தலையைக் குனிந்துகொண்டு ”ஆமாம்”’ என்று சொல்ல ,நம்பெருமாள் நியமனப்படி ப்ரஸாதத்தில் ஒருபாகம் எடுத்துக்கொண்டு ,மீதி இரண்டு பாகத்தைப் பத்நியிடம் கொடுத்தார்.அவருடைய  பத்நியும் ,அதை ஸ்வீகரிக்க, இந்தமாதிரியான பகவத் ப்ரஸாதத்தால் .பத்தாவது மாதத்தில், கலி  4189, கி.பி. 1057ம் ஆண்டு, ப்ரபவ , வைகாசி
அநுஷத்தில், இரண்டு ஆண் குழந்தைகளைப் ப்ரஸவித்தாள் .
ஆழ்வானும் ஆண்டாளும் மிகவும் சந்தோஷமடைந்து ,புண்யாஹவாசனம் முடிந்து நாமகரணம் செய்யாமல் ,எம்பெருமானாரே செய்ய வேண்டும் என்று இருக்க, இதை அறிந்த
ஸ்ரீ ராமாநுஜர்,எம்பாரிடம் குழந்தைகளை எடுத்துவரச் சொல்லி,
இவரும் கூரத்தாழ்வான் திருமாளிகைக்கு உள்ளே சென்று,எம்பார் ,த்வயத்தைச் சொல்லிக்கொண்டே இரு குழந்தைகளையும் எடுத்து வர, ”த்வயம் இங்கு அல்லவா மணக்கிறது—”என்று மகிழ்ந்து ,எம்பாரையே , குழந்தைகளுக்கு ஆசார்யனாக இருக்க நியமித்து, முதலில் பிறந்த குழந்தைக்கு ,பராசர பகவானிடம் நன்றி பாராட்ட ”பராசர பட்டர்”  என்றும். இன்னொரு குழந்தைக்கு, ”ஸ்ரீராம பட்டர்” என்கிற வேதவ்யாஸ பட்டர் என்றும் நாமகரணம் இட்டார்.
பராசர பட்டரை , நம்பெருமாள், புத்ர ஸ்வீகாரம் செய்துகொண்டார்.
அரங்கனின் ஸந்நிதியில் திருமணத் தூண் அருகே தூளி (துணியால் ஆன கட்டில் )இடப்பட்டது. கர்பாஷ்டமத்தில்  உபநயனம் ஆகி, யதிராஜரின் கட்டளைப்படி எம்பாரும், ஆழ்வானும் ஆசார்யர்களாக இருந்து எல்லாவற்றையும் உபதேசித்தார்கள் .விவாஹ வயது வந்த சமயத்தில், பெரியநம்பிகளின் திருமேனி சம்பந்தம் உடையவரின் இரண்டு பெண்களையும், நம்பெருமாள் நியமனப்படி , இவருக்கு
விவாஹம் செய்து வைத்தனர். எம்பாருக்குப் பிறகு பட்டர் ஸ்ரீரங்கத்தில் ஸம்ப்ரதாய ப்ரவர்த்தகராக க்ரந்தங்களைப் ப்ரவசனம்  செய்தார். மேல்நாட்டு வேதாந்தி ஒருவரைத் திருத்தி, ”நஞ்சீயர்”ஆக்கினார்.
அம்மணியாழ்வான் என்பவர் ,வெகுதூரத்திலிருந்து  பட்டர் திருமாளிகைக்கு வந்து, பட்டரைப் பலமுறை தெண்டனிட்டு ”அடியேனுக்கு ஹிதமான விசேஷ அர்த்தங்களை அநுக்ரஹிக்க வேண்டும் என்று ப்ரார்த்தித்தார்.
பட்டர்,  அவருக்கு, நம்மாழ்வாரின் ”நெடுமாற்கடிமை —-” பாசுரங்களின்
அர்த்த விசேஷங்களைச்  சொல்லி , ”எம்பெருமானை அறிவது என்பது
அரை வயிறு பட்டிருக்கை—-பாதி வயிறு சாப்பிடுவதைப்போல; அவனுடைய அடியார்களை அறிவது, அவனை முழுதும் அறிந்ததாகும் ” என்றும் சொல்லி,
ந்யக்ரோத பீஜே  வடவத் ப்ரணவே  ஸப்தஜால வத்  |
ஸித்தே  ததீய  சேஷத்வே ஸர்வார்த்தா : ஸம்பவந்தி  ஹி  ||
சிறிய ஆல விதையிலிருந்து , பெரிய ஆலமரம் உண்டாவதைப்போல,
சிறிய ப்ரணவத்தில் எல்லா சப்தார்த்தங்களும் அடங்கியிருக்கின்றன. அதைப்போல,பகவானுடைய அடியார்களின் அடியாரானால், எல்லாப் புருஷார்த்தங்களும் ஸித்திக்கும் —–என்றார்.
பின்னும் ஒருநாள், தன்னை ஆச்ரயித்த ஸ்ரீவைஷ்ணவர் ஒருவரிடம்,
”நீர் , அனந்தாழ்வான் இருப்பிடம் சென்று, ஸ்ரீவைஷ்ணவ லக்ஷணம் 
எங்ஙனே இருக்கும் ” என்று தெரிந்து வாரும் என்றார்.அவர், திருவேங்கடம் சென்று அனந்தாழ்வானிடம் ”கொக்குப் போலே இருக்கும், கோழிபோலே இருக்கும் ,உப்புப்போலே இருக்கும், உம்மைப்போலவும் இருக்கும் —” என்று தெரிந்து வந்தார்.
( அடியேனுடைய புத்தகங்களில், இவற்றின் விவரம் மற்றும் ப்ரணாமங்களின் விவரம் யாவும் எழுதி இருக்கிறேன் )
 
பட்டர் , தனது 28வது வயதில் ( 54 வது வயது என்றும் சொல்வர் )
பெரிய பெருமாள் ஸந்நிதியில் ,கைசிக த்வாதசிதினத்தில், ”கைசிக புராணம்”  சொல்லி , ச்லோகங்களுக்கு விசேஷமானஅர்த்தங்களையெல்லாம் சொன்னார்.
 இதைத் திருச்செவி சாத்திய பெருமாள்,பெருமிதத்துடன் தன்னுடைய திருமாலை, திருப்பரிவட்டம், திருவாபரணம்எல்லாவற்றையும் அநுக்ரஹித்து , அதுவும் போதாது என்று கருதி ,தன்னுடையதிவ்ய ஸிம்ஹாஸனத்தையும் அளித்தார். இதுவும் போதாது என்று கருதிஇன்னும் என்ன கொடுக்கலாம் என்று யோசித்து, சந்தோஷ மிகுதியாலே ,
”பட்டரே —-உமக்கு மேலைவீடு தந்தோம்—” என்றார்.
பட்டர், ”மஹா ப்ரஸாதம் –” என்று உள்ளம் சிலிர்க்கப் பணிவுடன் விஞ்ஞாபித்தார்.
பெருமாளிடம், ”ப்ரபோ—பரமபதத்தில் இங்கு உள்ளது போல் ஆஸன பத்மத்திலே அழுத்தி,   தேவரீர் இட்ட திருவடித் தாமரைகளும் , அஞ்சேல் என்கிற திருக்கரமும் கவித்த முடியும், புன்முறுவலிக்கும் சிவந்த திருமுக மண்டலமும் , திருநுதலில் கஸ்தூரித் திலகமும், இன்ன பிறவும்  கொண்ட தேவரீரின் ஸேவை இல்லையெனில்,
அங்குள்ள ஒரு மூலையை முறித்துக்கொண்டு இங்கே இவ்விடம் குதித்து விடுவேன் ”என்று சொல்லித் திருவரங்கனின் திருமேனி அழகில் சொக்கி இருப்பதை வெளிப்படுத்தி, தனக்கு, அரங்கமும் அரங்கனுமே அழியாச் செல்வம் ;சகலமும்  என்று சொன்னார்.
 
பட்டர், தன்னுடைய திருமாளிகைக்கு வந்தார். தாயார் ஆண்டாளை ஸேவித்தார் .செய்திகேட்டு அங்கு வந்த அடியார்களுக்கு, ”திருநெடுந் தாண்டகம்” அர்த்த விசேஷங்களைச் சொன்னார். பிறகு, சிரஸ்ஸில் இருகரமும் கூப்பிப் பகவானைத் தியானிக்க
சிரஸ் கபாலம் வெடிக்கத்  திருநாட்டுக்கு , எழுந்தருளினார்.
தாயார் ,ஓடிவந்து அணைத்துக்கொண்டு,  துக்கம் தாங்காது அழுபவர்களைப் பார்த்து,”உடையவன் உடைமையைக் கைக்கொண்டால் நாம் வெறுக்கலாமோ”என்றாள் .
பட்டர் அருளியது—ஸஹஸ்ரநாம பாஷ்யம், தத்வ ரத்நாகரம் , அஷ்டச்லோகி,ப்ரணவ விவரணம் ,  ஸ்ரீ குணரத்ன கோசம் , ஸ்ரீ ரங்கராஜஸ்த்வம் ,  க்ரியாதீபம் ,தத்வ த்ரய ச்லோகம் —ஆக  எட்டு க்ரந்தங்கள்—-

தனியனின் அர்த்தம்—–
உத்தமூர் ஸ்வாமி தன்னுடைய ”ப்ரபந்த ரக்ஷை” யில் மிக விரிவாக வ்யாக்யானம் செய்துள்ளார். வேறொரு வ்யாக்யான க்ரந்தத்திலும் சுருக்கமாக உள்ளது .அவைகளிலிருந்து, மிக சுருக்கமாக அர்த்தம் கொடுக்கப்படுகிறது.
 
 
‘துளஸி வனத்திலே அவதரித்த ஆண்டாள், நாராயணனுக்குப் ப்ரீதியான
துளசிமாலையைத் தான் அணிந்து அழகு பார்த்து ,இப்படி மாலையாலே அவனைக் கட்டி, பாமாலையான பாசுரங்களாலும் இறுகக்கட்டி, நப்பின்னையுடன் உறங்குபவனை எழுப்பி, தன்னைப் பூமிப் பிராட்டி என்பதை நினைப்பூட்டி, அர்ச்சையில் உள்ள எம்பெருமானும் தானிட்ட வழக்காய் நடந்துகொள்ளும்படி செய்தாள் .அந்தப் பிராட்டியின் பொருட்டு, ”பூய ஏவ  பூய :  ”–மேலும், மேலும் ,-மறுபடியும் மறுபடியும் இதம் இதம் நம —-சாஸ்திரப்படி எல்லாப் ப்ராணாமங்களும் ,  அஸ்து–ஆகக் கடவது—–
தஸ்யைஇதம்பூயோ நம:—அப்படிப்பட்ட ஆண்டாளின் பொருட்டு இந்த அனந்த ப்ரணாமங்கள்
இதம் பூவ ஏவ அஸ்து —இப்படிப்பட்ட ப்ரணாமங்கள் ,அந்த ஆண்டாளின் பொருட்டே —
ஸ்வரூப உபாய புருஷார்த்தங்களை விவரமாகச் சொல்லி, தொண்டர் குலம் நிறைந்து வாழும்படியாக மஹா உபகாரம் பண்ணிய ஆண்டாளுக்கு, மீண்டும் மீண்டும் பற்பல நமஸ்காரங்கள்—-
 
 
 
 
தனியன்—தெரிவோம்—-தெளிவோம்—-11
——————————————————————-

அன்னவயல்  புதுவையாண்டாள் அரங்கற்குப்

பன்னு திருப்பாவைபல் பதியம்—-இன்னிசையால்

பாடிக்கொடுத்தாள்  நற்பாமாலை பூமாலை

சூடிக்கொடுத்தாளைச் சொல்லு .

இந்தத் தனியன், ஸ்ரீ புண்டரீகாக்ஷர் என்கிற உய்யக்கொண்டார் அருளியது.

இவரின் சரிதச் சுருக்கம்—-

திருவரங்கத்தை அடுத்த திருவெள்ளறை க்ஷேத்ரத்தில், கலி 3987, கி.பி.886 ப்ரபவ சித்திரை, க்ருத்திகா  நக்ஷத்திரத்தில் அவதரித்தார். ஸ்ரீமந் நாதமுனிகளின் பிரதான சிஷ்யர்.இவரைத் தவிர, குருகைக்காவலப்பன் , உருப்பட்டூர் ஆச்சான், நம்பி கருணாகர தாஸர் ,ஏறுதிருவுடையார், திருக்கண்ணமங்கை ஆண்டான்,வானமாதேவி ஆண்டான், சோகத்தூர் ஆழ்வான் மற்ற சிஷ்யர்கள்.வங்கீபுரத்தாச்சியின் திருமகள், அரவிந்தப்பாவை .இவள் ஸ்ரீமந் நாதமுனிகளின் தேவிகள். ஒருசமயம், வங்கீபுரத்தாச்சி ,ஒருவரை , நாதமுனிகளிடம் அனுப்பி,

தன்னுடைய குமாரத்தியை அழைத்துவரச் சொன்னாள்.அவரும்,
நாதமுனிகளிடம் வந்து, இதைச் சொல்லவும் , நாதமுனிகள் தன்னுடைய ப்ரதான சிஷ்யரான புண்டரீகாக்ஷரை அழைத்து, தனது தேவிகளைப் பிறந்தகத்தில் விட்டு வரும்படிச் சொன்னார். புண்டரீகாக்ஷரும் , அப்படியே வங்கீபுரத்தாச்சியின் வீட்டில், நாதமுனிகளின் தேவிகளைப் பத்திரமாகச் சேர்த்து, விடைபெறும்போது, ஆச்சி அளித்த முதல்நாள் தண்ணீரில் சேர்த்து வைத்திருந்த அன்னத்தை அவரது ஆணைப்படி,அ ந்த வீட்டின்
 வெளிமுற்றத்தில் அமர்ந்து சாப்பிட்டு, சந்தோஷத்துடன் காட்டுமன்னார்குடிக்குத் திரும்பினார்.

நாதமுனிகள், புண்டரீகாக்ஷரின் சந்தோஷத்தை அவரது முகவிலாஸம் மூலமும், நடந்ததைத் தன்னுடைய யோகமஹிமையாலும் அறிந்தார் .

எனினும், ”புண்டரீகாக்ஷரே—சென்ற இடத்தில் நன்கு உபசரித்தார்களா ?”

என்று கேட்டார்.

”ஆஹா—-ஆச்சியின் வீட்டு முற்றத்தில், நீர்சேர்த்த அன்னத்தை மிகச்

சந்தோஷத்துடன் சாப்பிட்டேன்—இது, அடியேன் செய்த தவப்பயன்–

போனகஞ்  செய்த சேடந்தருவரேல் புனிதமன்றோ !தத்துச்சிஷ்டம்  ஸுபாவனமன்றோ !”என்று முகம் மலர்ச்சி சொன்னார்.

அதாவது, அவர்கள் சாப்பிட்ட சேஷத்தை (மிகுதியை )உண்ணுவது புனிதமல்லவா !உச்சிஷ்டமல்லவா –என்கிறார்.

நாதமுனிகள் மிகவும் சந்தோஷமடைந்தார்.

”புண்டரீகாக்ஷரே—நம்மை உய்யக்கொண்டீர் —” என்று சொல்லிக் கண்களிலிருந்து நீர் பெருக ஆரத்தழுவினார்.அன்றிலிருந்து, ”உய்யக்கொண்டார்” திருநாமம் ப்ரஸித்தி ஆயிற்று.

சில கிரந்தங்களில், இப்படியும் சொல்லப்படுகிறது—–

ஸ்ரீமந்நாதமுனிகள் ,புண்டரீகாக்ஷரை ”யோகரஹஸ்யம்” கற்றுக்கொள்ளச் சொன்னார். அப்போது, புண்டரீகாக்ஷர்

”பிணம் கிடக்க, மணம் புரிவாருண்டோ ?அடியேன் எப்படி இருந்தாலும்
அதனால் பரவாயில்லை…..இவ்வுலகம் உய்ய வேணும்—-திவ்ய ப்ரபந்தங்களை உபதேசித்து அருளவேணும்——-” என்றார்.

மிகவும் மகிழ்ந்த நாதமுனிகள் ”நீரே உலகையும் ,உலகங்களை உடைய ஸ்ரீமந் நாராயணனையும் ,அவனைப் போற்றும் அருளிச் செயல்களையும்,அவற்றைப்பெற்ற அடியேனையும் உய்யக்கொண்டவர் —” என்றார் .அன்றுமுதல், உய்யக்கொண்டார் என்கிற திருநாமம் பெற்று, நாலாயிரத்தின் உட்பொருளை ஆழ்ந்து பெற்றார்  என்பர்.

ஸ்ரீமந்நாதமுனிகளிடம்  வேதாந்த, ரஹஸ்ய க்ரந்தங்களை க்ரஹித்தார்.
இவருக்கு இரண்டு பெண்கள்.இவருடைய பிரதான சிஷ்யர் ”மணக்கால் நம்பி என்கிற ஸ்ரீ ராம மிச்ரர் ”. இவருடைய சுருக்கமான சரிதம்

”இன்னமுத மூட்டுகேன் —”,  ”ஆரங்கெட —”,  தனியன்களில் சொல்லப்படும். அப்போதும் உய்யக்கொண்டார் வருவார்.

தனியனின் சுருக்கமான அர்த்தம்

அன்னப்பறவைகள் உலாவும் வயற்கழனிகளை உடைய ஸ்ரீ வில்லிபுத்தூரைச்

சேர்ந்த ஆண்டாள் ,அரங்கனுக்கு, பன்னு —பற்பல உட்பொருள்களை உடைய திருப்பாவை என்கிற , பல் பதிகம்—-மூன்று பிரிவான பதிகங்களை –அதாவது,பெண்களை எழுப்ப ஒரு பதிகம் (பத்துப் பாக்கள் ), மற்றவரை எழுப்ப இன்னொரு பத்துப் பாசுரங்கள், நோன்பை விவரிக்க மற்றொரு பத்து, –இப்படி முப்பதிகம்–இப்படிப் பாசுரங்களால் மாலையாக ப்ரபந்தம் செய்து, இனிய ராகத்தோடு பாடிக்

கொடுத்தவளும், துளசி மாலையைத் தான் அணிந்து பிறகு அதைக் களைந்து ,எம்பெருமானுக்குச் சூட்டுவதற்குக் கொடுத்தவளைப் , போற்றுவாயாக—

நற் பாமலை, பாடிக் கொடுத்தாள் -கொடுத்தாளைச் சொல்—
-திருப்பாவை அருளியவளை ஸ்தோத்ரம் செய்  —

பூமாலை, சூடிக்கொடுத்தாளைச் சொல்—துளசி மாலையைத் தான் அணிந்து ,பிறகு அதை எடுத்து, பகவானுக்கு அணிவிப்பதற்குக் கொடுத்தவளைச் சொல்வாயாக–

 

 

 

 

தனியன்—தெரிவோம்—தெளிவோம்– -12
—————————— —————————— ————-

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியே ! தொல்பாவை

பாடி அருளவல்ல பல்வளையாய் !—-நாடிநீ

வேங்கடவற்கு என்னை விதியென்ற இம்மாற்றம்

நாம்கடவா வண்ணமே  நல்கு .

இந்தத் தனியனும் ,.உய்யக்கொண்டார் அருளியது.

இவரது சரிதச் சுருக்கம்–இதற்கு முந்தைய 11 வது பகுதியில்
 கொடுக்கப்பட்டுள்ளது.

தனியனின் சுருக்கமான அர்த்தம் —

துளசி மாலையைத் தானே முன்னதாகச் சூடிக்கொண்டு,பின்பு,

அதை எடுத்து ,எம்பெருமானுக்குச் சூட்ட ஸமர்ப்பித்த

மின்னல்கொடி போன்றவளே !

பழைமையான நோன்பைச் சொல்லும் திருப்பாவைப் பாசுரங்களைப்

பாடி, எல்லோருக்கும் அருள் செய்யும் வல்லமை உள்ள ,பற்பல

வளைகளை அணிந்த கோதாப்பிராட்டி ,திருவேங்கடமுடையானுக்கே

என்னை விதி என்று —சேஷன் என்று , நீ அருளிய இந்த வழியை

திருப்பாவையிலிருந்து தெளிந்து , நாங்களும் விடாமல் அனுஷ்டிக்க

நீ, எங்களையும் எம்பெருமானையும் நெருங்கியிருந்து உபகாரம் செய்ய வேணும்.

முன் தனியனிலே, உய்யக்கொண்டார், ஆண்டாளின் திருநாமத்தைச்

சொல்வதே போதும் என்றார்—

இருந்தாலும், மார்கழித் திருநாளிலே திருப்பாவை அர்த்த்தத்திலே ஈடுபட்டு மேலும் ஒரு தனியன் அருள்கிறார்.

இந்தத் தனியனில்,

எங்களையும் எம்பெருமானையும் நெருங்கி இருந்து நல்கு—-

நல்லவற்றைக்கொடு  என்கிறார்.

இவள், மனிதர்கள் அடையவே முடியாத மேன்மை உடையவள்;பகவானுடன் சேரத்தக்க சீர்மையும் பெற்றவள். இவள் அனுஷ்டிக்கும் நோன்பு ,காலம் காலமாக அனுஷ்டித்துவரும் நோன்பு.

”கையில் வளை போல எம் ஆசிரியர் வாக்கு” என்றார் ,ஸ்வாமி தேசிகன்.ஆசார்யருடைய ஸ்ரீஸூக்திகள் ,கைகளில் அணியும் வளைக்குச் சமமானவை.இவளும் ஆசார்யை —இவளுடைய ஸ்ரீ ஸூக்திகளும் அப்படியே விளங்குகின்றன.

ஆண்டாள், ”வேங்கடவற்கு என்னை விதி—” என்கிறாள்.

அதை ஒட்டியே ,இந்தத் தனியனில், ”வேங்கடவற்கு என்னை விதி என்ற இம்மாற்றம் —”என்கிறார், உய்யக்கொண்டார்.

அரங்கனும் , மலைகுனிய நின்றானும் ஒருவன்தானே  !

வைகுண்டத்திலிருந்து ,எம்பெருமான் திருவேங்கட மலைக்கு வந்து நின்றான்;பிறகு, திருவரங்கம் வந்து சயனித்தான் —

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி—-பூமாலையைத் தான் சூடிக்கொண்டு,பிறகு

எம்பெருமானுக்குக் கொடுத்த மின்னல்கொடி—-

தொல்பாவை பாடி அருளவல்ல பல்வளையாய் —-மிகத்  தொன்மையான மார்கழி நோன்பை அனுசரித்து, அதன் அர்த்தங்களை ப்ரபந்தங்களாக அருளிச் செய்த பல ஆபரணங்களை அணிந்துள்ள ஆண்டாள். நீ, வேங்கடவற்கு   என்னை விதி என்ற இம்மாற்றம் —–நீர், திருப்பாவையால் அவனையே நாடிச் சென்று ,நாச்சியார் திருமொழியில் சொல்லியபடி, ”வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே —-” என்கிற ப்ரார்த்தனைப் ப்ரகாரம்

நாம் கடவா வண்ணமே நல்கு—–நாங்கள், உம்முடைய அநுபவத்தில்

ஒருகுறையும் இன்றி அனுபவிக்கும் ப்ரகாரத்தைத் துளியும் இழக்காமல், இருக்கும்படி கொடுத்தருளவேணும் —

இந்தத் தனியனில், ஆண்டாளின் பெருமை, அவள் பாசுரங்களின் பெருமை, இவற்றை நன்கு அறிந்தவர் –பரமைகாந்திகளாக ஆவர் என்று சொல்லப்படுகிறது.

 

Sarvam Sree Hayagreeva preeyathaam

 

 

தனியன்—தெரிவோம்—தெளிவோம் —–13
—————————— —————————— ———–

அல்லிநாள்  தாமரை  மேலாரணங்கனின்  துணைவி
மல்லிநாடாண்ட மடமயில் —–மெல்லியலாள்
ஆயர்குல வேந்தனாகத்தாள்  தென்புதுவை
வேயர் பயந்த  விளக்கு

இந்தத் தனியன், திருக்கண்ணமங்கை ஆண்டான் அருளியது.
இவர்,  ஸ்ரீமந் நாதமுனிகளின் சஹோதரியின் குமாரர்.
முக்கிய சிஷ்யர்களில் ஒருவர் என்பதை முன்பே பார்த்தோம்.
இவர் ஆனி  மாத திருவோண நக்ஷத்ரத்தில் அவதரித்தவர்.
திருக்கண்ணமங்கை ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் கோயிலில்,
தரையைச் சுத்தம் செய்யும் கைங்கர்யத்தை அனவரதமும் செய்து வந்தார்.
இப்படி ஒருவர் செய்து வந்தாலே, அவருடைய பாபங்கள் கழிந்துவிடும்—
இப்படியான கைங்கர்யம், ஒரு பக்தனுக்கு இயற்கையானதாகும்
இவர், தன்னுடைய ஆசார்யரான நாதமுனிகளிடமிருந்து, ”த்வய ”
மந்த்ரத்தின்  விசேஷ அர்த்தங்களை, திருவாய்மொழி மூலமாகக்
கற்றறிந்தார்.
பிள்ளை லோகாசார்யர் , தன்னுடைய ”ஸ்ரீ வசன பூஷண”த்தில்
கூறும்போது,
உபாயத்துக்குப்  பிராட்டியையும், த்ரௌபதியையும் திருக்கண்ணமங்கை
ஆண்டானையும் போல இருக்கவேணும் ——என்கிறார் .
உபாயம்—–பகவானை அடைவதற்கான வழி—அவன் ஸர்வ ஸக்தன் ;ஸர்வ ரக்ஷகன் ;அவன் எவரை வேண்டுமானாலும் சம்ஸார ஸாகரத்திலிருந்து விடுவிக்க முடியும்—-
ஒரு நாள், ஒரு வேலைக்காரன் வளர்த்த  நாயை , இன்னொரு வேலைக்காரன் அடித்தான்.இதைப்பார்த்த ,நாயின் சொந்தக்காரன், மிகவும் கோபமடைந்து,நாயை அடித்தவனுடன் சண்டையிட்டான்.இருவரும் தங்கள் கத்தியை எடுத்துச் சண்டையிட்டனர் .நாயை அடித்தவனைக் கொன்று, தானும் மரித்த
நிலைமையை ,ஆண்டான்  பார்த்தார்
ஒரு சாதாரண மனிதன், தனக்குச் சொந்தமான நாயை அடித்ததற்காக
கோபப்பட்டு, கேவலம் அந்த நாய் தனக்குச் சொந்தம் என்பதற்காக ,நாயை அடித்தவரைக் கொல்ல வேண்டும் என்கிற அளவுக்குச் செல்வானேயாகில் ,ஒருவன், ஸர்வ ரக்ஷகனான எம்பெருமானிடம் சரணாகதி செய்து ,அவனே காப்பாற்றுவான் என்று நம்பி இருந்தால், அந்த எம்பெருமான் ரக்ஷிக்காமல் இருப்பானா —என்று சிந்தித்து, உடனே எல்லாப் பற்றையும் துறந்து ,அந்த நாயைப்போலத் தன்னை நினைத்து, உடனே, திருக்கண்ணமங்கை ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் கோபுர வாசலில், இருக்கிற ஒட்டுத் திண்ணையில் வந்து படுத்துக்கொண்டார்
(விவரம்–அடியேன் எழுதி வெளியிட்ட ”ஸ்ரீ வசனபூஷணம்”விளக்க உரையில் உள்ளது–)
அதாவது, ”ஸ்வரக்ஷண  ஹேதுவான ஸ்வவ்யாபாரங்களை  விட்டான்” என்கிறார், ஸ்ரீ மணவாள மாமுநிகள். எம்பெருமானுக்குச் செய்துவரும் கைங்கர்யங்களை
விடாமல் செய்தார். ஆனால், தன்னை ரக்ஷித்துக்கொள்ளும் முயற்சியைக் கைவிட்டார்.
இந்த வரலாறு வேறு விதமாகவும் சொல்லப்படுகிறது—
திருக்கண்ணமங்கை ஆண்டான், கோயிலில் உள்ள நந்தவனத்தில்
பணி  செய்து,எம்பெருமானுக்கு புஷ்ப  கைங்கர்யம் செய்து வந்தார்.
இவரிடத்தில் பக்தவத்ஸலப் பெருமானின் பேரருள் வெள்ளமெனப்
பெருக்கெடுத்தது.ஒருநாள், ஆண்டான், கோயிலில்  கண்ட காட்சி அவரது வாழ்க்கையில் பெரிய மாறுதலை உண்டாக்கியது. இரண்டு மனிதர்கள், தங்கள் கைகளில் கத்தியும் கால்களில் மிதியடியும் கொண்டு ஆளுக்கு ஒவ்வொரு நாயுடன் கோயில் வாயிலை அடைந்தனர். இரண்டு நாய்களையும், அவரவர் செருப்புகளைக் காக்குமாறு நிறுத்தி, உள்ளே எம்பெருமானைச் சேவிக்கச் சென்றனர்.அவர்கள், கோயிலின் உள்ளே இருந்து வெளியே திரும்புவதற்குள்,ஒரு நாய், மற்றொரு நாயின் காவலில் இருந்த செருப்பைக் கடிக்கவும், அந்த செருப்பைக் காத்துவரும் நாய், எதிர்த்துத் தாக்கவும், இரண்டு நாய்களும் சண்டையிட்டதில் ஒரு நாய் இறந்தது.
அப்போது, கோயிலிலிருந்து வெளியே வந்த இருவரில் ஒருவன்,
தனக்குச் சொந்தமான நாய் இறந்ததைக் கண்டு, அதனைத் தாக்கிய நாயை வாளால் கொன்றான். இப்படி நாயால் ஏற்பட்ட பகையால்,
இருவரும் ஒருவரை  ஒருவர் தாக்கிக்கொண்டு மாண்டனர்.

இதனைப் பார்த்துக்கொண்டிருந்த  திருக்கண்ணமங்கை ஆண்டான்,
தம்மை அடைந்து தம்மால் வளர்க்கப்பட்ட நாய்களுக்காக,
கல்வி, அறவொழுக்கம் இல்லாதவர்  தங்களுடைய உயிரையே
கொடுத்துக்கொண்டார்கள் என்றால், கல்யாணகுணங்கள் நிரம்பியவனும்
அனைத்து ஆற்றல்களும் உள்ளவனுமான எம்பெருமானைச் சரணடைந்தால் ,அவன் நிச்சயம் நம்மைக் காப்பாற்றுவான் என்று உறுதியுடன், எல்லா ஆசைகளையும் துறந்து, கோவிலின் உள்ளே மகிழ மரத்தடியில் வாழலானார்.பத்தராவிப் பெருமான் தினமும் தான் அமுது செய்ததை, ஆண்டானுக்குக் கொடுக்கச் சிறிது காலம் கழிந்தது.
ஆண்டானைத் திருவடியில் சேர்த்துக்கொள்ளத் திருவுள்ளம் கொண்ட
எம்பெருமான், எல்லோருக்கும் அறிவித்து, ஒரு நாள் ஆண்டான்
தூயவராய்த் திருக்கோயில் வலம் வந்து, பத்தராவிப் பெருமான் ஸந்நிதியில் த்வாரபாலகர் அருகே வர, தனது திருவடியின் பேரொளியில் ஆண்டான் புனிதத் திருமேனி கலக்கச் செய்து முக்தி அருளினார்.

கல்லார் அகலும் கருமமும் ஞானமும் காதலும் மற்று,
எல்லா நிலைகளுக்கு ஏற்ப விதித்த  கிரிசைகளும்
வல்லார் முயல்க , வலி இழந்தார் என்தனைத் தொழுக என்று
எல்லாத் தருமமும் உரைத்தவன் இன்னடி  சேர்ந்தனமே

என்று ஸ்வாமி தேசிகன் சரமச் சுலோகச் சுருக்கில் அருளிய அருமையும் பெருமையும் வாய்ந்த பெருநிலையை திருக்கண்ணமங்கை ஆண்டான் அடைந்தார்.

இனி, தனியனின் சுருக்கமான அர்த்தம் —–

வாரணமாயிரம் ” அர்த்தத்தின் விசேஷத்தை, நாதமுனிகளிடம் கேட்டு,
திருக்கண்ணமங்கை ஆண்டான் அருளியது இதுவும் இதற்கடுத்த தனியனும்

அல்லி நாள் தாமரைமேல் ஆரணங்கின் இன் துணைவி—குளிர்ச்சி பொருந்திய தாமரைப்புஷ்பத்தின் மீது அமர்ந்திருக்கும் பெரிய பிராட்டியாரின் இனிய ஸகி —

மல்லி நாடாண்ட  மடமயில்—–பரந்து விரிந்த நாட்டுக்கு ஒரு மயில் –தன்னுடைய பெண்மையாலே அன்ன  நடை உடையவள் –ஒருத்திக்கு ஸகி ; ஒருநாட்டுக்கு ரஞ்ஜனி .
”ஸ  ஏவ வாஸுதேவோஸௌ ஸாக்ஷாத் புருஷ  உச்யதே |
ஸ்த்ரீ ப்ராயம் இதரத் ஸர்வம் —
என்கிறபடி, ஸமஸ்த சேதனங்களுக்கும் ஈச்வரியான பெரியபிராட்டிக்கு
அந்தரங்கையாக இருப்பவள். ஸ்வரூப ,ரூப , உபாய ,புருஷார்த்தங்களை விகசிதமாகக் காட்டி தன்னுடைய சரிதங்களாலும், ப்ரபந்தங்களாலும் ,சேதனர்களைத் திருத்துகையால் , பரந்த நாட்டுக்குத் தஞ்சமாக இருப்பவள்.
மெல்லியலாள் —-மிருதுவான சுபாவத்தை உடையவள்–
ஆயர்குல வேந்தன் ஆகத்தாள் —எம்பெருமானை நேராகவே அனுபவிக்காமல், அவ்வளவிலே ஆயர் குலத்தினில் தோன்றிய கண்ணனை, கோபிகை அவஸ்தையில் அனுபவிக்க ஆசைப்பட்டவள்.
தென்புதுவை வேயர் பயந்த விளக்கு—ஸ்ரீவில்லிபுத்தூரில் வேயர் குலத்துதித்த விஷ்ணு சித்தரின் குலவிளக்கு
இவள், வேயர்  பயந்த விளக்காக இருந்தாலும், ஆயர் குலத்துதித்த மணி விளக்குக்கு நேராக இருப்பவள்—-

 

Sarvam Sree Hayagreeva preeyathaam

 

தனியன்—-தெரிவோம்—தெளிவோம்- –14
—————————— —————————— —-

கோலச் சுரிசங்கை  மாயன்  செவ்வாயின் குணம் வினவும்
சீலத்தனள் , தென் திருமல்லி நாடி செங்குழல் மேல்
மாலைத் தொடை தென்னரங்கருக்கு ஈயும் மதிப்புடைய
சோலைக்கிளி, அவள் தூய நற்பாதம் துணை நமக்கே.

இதுவும் திருக்கண்ணமங்கை ஆண்டான் அருளிய தனியன்.
இவருடைய சரிதச் சுருக்கம் முந்தைய (13) பகுதியில் உள்ளது.

தனியனின் சுருக்கமான அர்த்தம்

அழகு பொருந்திய பாஞ்சசன்னியம் என்கிற  சங்கம், மாயனின் —
கண்ணனின் சிவந்த அதரத்தில் அமர்ந்து சுவைத்துக் குணம்
சொல்வதால், அதை, கருப்பூரம் நாறுமோ, கமலப்பூ நாறுமோ
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ
மருப்பொசித்த மாதவன்தன் வாய்ச் சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன், சொல்லாழி வெண்சங்கே —-
என்று வினவியவள் —-கேட்டவள்—சீலமிகு ஆண்டாள்
தெற்கு ஸ்ரீவில்லிபுத்தூரின் அரசி—
திருவரங்கனுக்குத் துழாய்மாலை ,தன்னுடைய குழலில்
சூடிக்கொடுத்தவள்—
திருமல்லி நாட்டின் சோலைக்கிளி—
அரங்கனின் சோலைக்கிளி—
இப்படிப்பட்ட ஆண்டாள் நாச்சியாரின் தூய்மையான இரண்டு
திருவடிகளே நமக்கு போக்யம் –நமக்குத் துணை

Sarvam Sree Hayagreeva preeyathaam

தனியன்—தெரிவோம்—தெளிவோம்–15
——————————

இதுவரை, பொதுத் தனியன்கள் ,பெரியாழ்வார் திருமொழித்

தனியன்கள் 7,8,9ம்   பிறகு பெரியாழ்வார் பெற்றெடுத்த

பெண்பிள்ளையின் பாசுரங்களுக்குத் தனியன்கள் 10 முதல் 14 வரை

நன்கு அனுபவித்தோம்—-( அடியேனுக்குத் தொடர்ந்து வருகின்ற
 பற்பல  ஈ –மெயில்கள்  –இதை உறுதிப்படுத்துகிறது—அவர்களுக் குக் ,

கைம்மாறு செய்ய இயலாத ஏழையேன் —)

இப்போது, அடுத்ததாக  குலசேகர ஆழ்வார் அருளிய

பெருமாள் திருமொழிக்கான தனியன்களை அநுபவிப்போம் .

இன்னமுதமூட்டுகேன்  இங்கேவா பைங்கிளியே

தென்னரங்கம் பாடவல்ல சீர் பெருமாள்—பொன்னஞ்

சிலைசேர் நுதலியர் வேள் சேரலர்கோன் ,எங்கள்

குலசேகரனென்றே  கூறு.

இந்தத் தனியன் ஸ்ரீ மணக்கால்நம்பிகள்என்கிற ஸ்ரீராமமிச்ரர் அருளியது

சரிதச் சுருக்கம்

ஸ்ரீரங்கத்துக்கு அருகே ”மணக்கால்;; என்கிற க்ராமத்தில்

கலி 4052 கி.பி.929 விரோதிகிருது (விரோதி வருஷம் என்றும் சொல்வர் )

மாசிமாத மக நக்ஷத்திரத்தில் அவதரித்தார்.பகவானின் குமுதாம்சம்
 எனச் சொல்வர்.உய்யக்கொண்டாரின்  ப்ரதான சிஷ்யர்.

அவருக்குக் கைங்கர்யம் செய்வதில் அளவற்ற ஆர்வம் உள்ளவராக

இருந்தார். அவருடைய தேவிகள் திடீரென்று பரமபதித்த சமயத்தில்,

மணக்கால் நம்பிகளே , திருமாளிகைக்கு கைங்கர்யம் –தளிகை உட்பட–

ஏற்று, ஆசார்யரின் இரு குமாரத்திகளையும் வளர்த்தார்.

ஒரு சமயம், ஸ்ரீரங்கத்துப் பெண்கள் ஒன்று சேர்ந்து ,கட்டுச் சோறு
எடுத்துக்கொண்டு காவேரிக்குச் சென்றபோது, உய்யக்கொண்டாரின்

இரண்டு பெண்களும் சென்றனர். உய்யக்கொண்டார் ஆணைப்படி,

மணக்கால் நம்பி ,அந்தப் பெண்களுக்குத் துணையாகக் கூடவே சென்றார் காவிரிக்கரையில் ,பெண்கள் எல்லோரும் விளையாடி, கட்டுச் சோறு சாப்பிட்டுத் திரும்பினர்.
உய்யக்கொண்டாரின் இரண்டு பெண்களும் அவ்வாறு வீட்டுக்குத் திரும்பும்போது, வாய்க்கால் குறுக்கிட்டது. வாய்க்கால் சேறும் சகதியுமாக இருந்தது.இரு பெண்களும் ,வாய்க்காலை எப்படித் தாண்டுவது என்று திகைத்து நிற்க, கூடவே வந்த மணக்கால் நம்பிகள், வாய்க்காலின் குறுக்கே படுத்துக்கொண்டு, தமது முதுகின்மீது நடந்து வாய்க்காலைக் கடக்கச் சொல்ல, அப்படியே இரு பெண்களும் கடந்து வீடு வந்து சேர்ந்தனர். மணக்கால் நம்பி ,அவர்களை வீட்டில் விட்டு விட்டு, குளித்துவருவதற்காகச் சென்றபோது, எல்லாச் சம்பவங்களையும்

கேட்டுணர்ந்த உய்யக்கொண்டார், மணக்கால் நம்பி, திரும்பி

வந்ததும், தன்னுடைய சந்தோஷத்தைத் தெரிவிக்க, அதற்கு

மணக்கால் நம்பிகள்,

உற்றேன் உகந்து  பணி செய்யும் உன்பாதம்
பெற்றேன் ,ஈதே யின்னம் வேண்டுவதெந்தாய் —

என்று பணிவுடன் சொன்னார்.

உய்யக்கொண்டார், போர உகந்து, தமது ஆசார்யரான நாதமுனிகளிடம்

தாம்பெற்ற  அருளிச் செயல்களின் உட்பொருள்களையெல்லாம்

உவந்து உபதேசித்தார்.

உய்யக்கொண்டார், தமது கடைசி காலத்தில்,மணக்கால் நம்பியிடம்

தமது ஆசார்யரான நாதமுனிகள் நியமனத்தைச் சொல்லி,

தம்மால் உபதேசிக்கப்பட்ட அர்த்த விசேஷங்களை, பின்னாளிலே

அவதரிக்கப்போகும் , நாதமுனிகளின்  திருப்பேரர் யமுனைத்

துறைவருக்கு ( ஆளவந்தார்) உபதேசிக்குமாறு நியமித்து,

ஸ்ரீமந் நாதமுனிகள் திருவடிகளைத் த்யானித்துக்கொண்டே

திருநாடு அலங்கரித்தார் .

மிகவும் துக்கித்த மணக்கால் நம்பிகள், ஆசார்யருக்கு ”ப்ரஹ்மமேத

ஸம்ஸ்காரங்களை ” எல்லாம் செய்தார்.

மணக்கால் நம்பிகளின் சிஷ்யர்கள்—ஸ்ரீ ஆளவந்தார், தெய்வத்துக்கரசுநம்பி, கோமடத்துத் திருவிண்ணகரப்பன் , சிறுப்புள்ளூராவுடையப் பிள்ளைஆச்சி என்போர்

தனியனின் அர்த்தச் சுருக்கம்

இன்னமுது ஊட்டுகேன் —-இன் அடிசிலோடு ,பால் அமுது ஊட்டுகேன்

யாருக்கு —-

இங்கே வா பைங்கிளியே—-(  இளம்பச்சைக்கிளி )பரிசுத்தமான கிளியைக் கூப்பிட்டு கையால் அணைத்துக்கொள்ளும்படி அருகே வரச்  சொல்லி,

உன் அழைப்புக்கும் , நான் வருவதற்கும் என்ன பிரயோஜனம்

என்று கேட்கும் கிளிக்கும் ,கிளியைப் போல்வாருக்கும் ,

இன் அமுது ஊட்டுகேன் —இனிய அடிசிலோடு பால் அமுது ஊட்டுகிறேன் என்றபடி—-

கிளியும் அமுதுண்ணவுடன் ,

தென்னரங்கம் பாட வல்ல சீர் பெருமாள் —
இருளிரியச் சுடர்மணிகள் –என்றெல்லாம் தன்னுடைய திருமொழியில்

திருவரங்கத்தையும், சக்ரவர்த்தித் திருமகன் ஆராதித்தவனையும்

பாடவல்ல கல்யாண குணங்களை உடையவராகையால்

பெரியபெருமாளையும் பாடித்  தாமும் ”பெருமாள்;” என்று பெயர் பெற்றவர்

பொன்னம் சிலைசேர் நுதலியர் வேள் ——-

வில் போன்ற புருவத்தை உடைய ஸ்த்ரீகளுக்கும் மன்மத ஸ்வரூபர் என்றபடி

சேரலர்கோன்—-சேர நாட்டுக்கு அரசன்

எங்கள் குலசேகரன் என்றே கூறு—

இவர் சேர அரசனானாலும் ,அரங்கனுடைய வைபவத்தைப் பரக்கத் பேசி இவ்வுலகைத் திருத்தியவர் ;ஆகையாலே ”ப்ரபன்னர்களாகிய ”

எங்கள் குலத்துக்குப் பூஷணம் –அணிகலன் –என்கிறபடியே

எங்கும் எப்போதும் சொல்லக்கடவாய்—சொல்வது, மனத்தில் நினைத்துச்  சொல்லாக வருவது—ஆக , மனஸ்ஸாலும் ,வாயாலும் கூறு–சொல்

இதனால், பாகவத அபிமானம் மேலிட்டு, ஆசார்ய நியமனமும் சேர்ந்து

மணக்கால் நம்பிகள் இந்தத் தனியனை அருளியாயிற்று.

இப்படிக் குலசேகர ஆழ்வார் திருநாமத்தைக் கூறும்படி நமக்குச் சொல்லி, தனியன் இட்டமணக்கால் நம்பிகள், ,அடுத்த தனியனில்——

 

 

 

 

தனியன்—தெரிவோம்-தெளிவோம்—16
——————————————————————-

ஆரம்கெடப் பரனன்பர்  கொள்ளாரென்று அவர்களுக்கே

வாரங்கொடு குடப்பாம்பில் கையிட்டவன் —மாற்றலரை

வீரங்கெடுத்த செங்கோல் கொல்லி காவலன் வில்லவர்கோன்

சேரன் குலசேகரன் முடிவேந்தர் சிகாமணியே

இதுவும், மணக்கால் நம்பிகள் அருளிய தனியன்.

இவரது சரிதச் சுருக்கம் இதற்கு முந்தைய பகுதியில் (15)

கொடுக்கப்பட்டுள்ளது.

தனியனின் சுருக்கமான அர்த்தம்

ஆரம் கெட—ஸ்ரீவைஷ்ணவர்களில் ,மிகவும் ப்ரபலமான

குலசேகரரை ,வைணவர்களோடு கலந்து இருக்க இசையாது

வைணவக் க்ரோதம்கொண்ட அமைச்சர்கள்,

எம்பெருமானின் திருவாபரணமான ”ஹாரத்தை” (தங்க மாலை)

ஒளித்து வைத்து, அரசனின் மதிப்புக்கு உரிய வைணவர்கள்தான்

திருடினர் என்று பழி சொல்ல,

பரன்  அன்பர்  கொள்ளார் ——பரன்  என்பது, எம்பெருமான் —-
அவனிடத்தில் ஆழ்ந்தபக்தியுள்ள வைணவர் அந்தப் பரஸ்வத்தை
(எம்பெருமான் சொத்தை)தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்ளமாட்டார்கள் என்று, அவர்கட்கே வாரம் கொடு—-வைணவர்கள் தான் எடுத்திருக்க வேண்டும் என்று மந்த்ரிகள் கோபத்துடன் சொல்ல , அப்படி நிச்சயமாக நடந்திருக்காது என்று , வைணவர்கள் மீது அபிமானித்து, குடப்பாம்பில் கையிட்டவன்——அரச சபையிலே , மந்திரிகள் ஒரு குடத்தில் விஷப்பாம்பை இட்டு, வைணவர்கள் திருடவில்லையாகில் இக்குடத்தில் அவர்கள் கை இடட்டும் என்க ,
குலசேகரர், ”பரன்  அடியார் ,அது செய்யார் ”

என்று சொல்லித் தானே, அந்தக் குடத்தினுள், தன்னுடைய கையைப்
பாம்பின் தலையிலே இட்டவர்  ——

மாற்றலரை வீரம் கெடுத்த செங்கோல்——

இது மட்டுமல்ல—-விரோதிகளின் –சத்ருக்களின் வீரத்தை அழித்து,

நீதியை நேர்மையாகச் செலுத்தியவர்

கொல்லி காவலன்—-கொல்லி நகருக்கான அரசன்

வில்லவர்கோன் குலசேகரன்— வில் ஏந்தும்
 அரசனான, சேரகுல ரத்னமான,

சேரகுலத்திற்கே –சேகரரான

முடிவேந்தர் சிகாமணியே—–

முடிசூடிய எல்லா அரசர்களுக்கும் அவர்களது சிரஸ்ஸில் அணியும் அணி —ரத்னம் —-போன்றவனே குலசேகரர் –பாகவத தாஸ்யர்—அவருடைய திருநாமம் சொல்லக்

நாம் கற்பதே ,நமக்குத் பெரும் பேறு

—————————————————————————————————

பகவத் பாகவத ஆசார்ய க்ருபையால்,

11–3–2017–ஸ்ரீ மணக்கால் நம்பிகள் திருநக்ஷத்ரம்( மாசி மகம் )

8–3– 2017 —ஸ்ரீ குலசேகர ஆழ்வார் திருநக்ஷத்ரம்

இரண்டும் ஏற்படுவதற்கு முன்பாக, இவ்விரு ஆழ்வார் ,ஆசார்யர்

திருநக்ஷத்ரங்களுக்கு முன்பாகவே
இந்தப் பகுதி ( 16 வது  பகுதி ) இன்று(22–2–2017) ஏகாதசி அன்று
எழுதி நிறைவடைந்து இருப்பது
 ஸ்ரீ குலசேகர ஆழ்வார்மற்றும் ஸ்ரீ மணக்கால் நம்பிகள் இருவரின்
பரம கிருபையினால் என்று உள்ளம் உவக்கிறேன்
( மார்ச் 8க்கும் ,11க்கும் நடுவேஇரண்டு நாட்கள்தான்—
அவ்வளவு அருமையாக இவ்வருடம்இவ்விரு ஆழ்வார், ஆசார்ய
 திருநக்ஷத்ரம் வருகிறது—

ஸ்ரீகுலசேகர ஆழ்வாரின் ”முகுந்த மாலை” ஸ்தோத்ரத்தை

ஏகாதசியான அன்று பாராயணம் செய்யின் , இது ஆசார்யன் மணக்கால்

நம்பிகள் திருவுள்ளத்துக்கும் மிக உகந்ததாக இருக்கும் .

ஸ்ரீ முகுந்த மாலா ஸ்தோத்ர பாராயணத்தைப் பற்றிப் பல வருடங்களாகச்

சொல்லிவந்திருக்கிறேன்—இவ்வருடமும் ப்ரார்த்திக்கிறேன்

 ,நமது முன்னோர்கள் , கோவில்களில் ஸந்நிதி ப்ரதக்ஷணத்தின்போது

வயசு வித்தியாசமில்லாமல், ஆண் , பெண் வித்தியாசமில்லாமல்

சொல்லிக்கொண்டு வந்த ஸ்தோத்ரம் —சொல்லச்சொல்ல,

இதயத்தை இளகச்  செய்யும்.பகவானின் பாக்களில் இருப்பதாகவே உணர்வீர்கள்—(Mukuntha Mala removed from this part—)

அடுத்தது————-திருமழிசை ஆழ்வார் அருளிய திருச்சந்த விருத்தம் —–
இதற்கான தனியன் தொடருகிறது——-

 

 –தனியன்—-தெரிவோம்—-தெளிவோம்—17
————————————————————————-

தருச்சந்தப் பொழில்தழுவு  தாரணியின்  துயர் தீர
திருச்சந்த விருத்தம்செய் திருமழிசைப் பரன் வருமூர்
கருச்சந்தும்  காரகிலும் கமழ்கோங்கும்  மணநாறும்
திருச்சந்தத்துடன் மருவு திருமழிசை வளம் பதியே

திருமழிசைப் பிரானின் ,திருச்சந்தவிருத்தம் பாசுரங்களைச்
சொல்வதற்கு முன்பு இந்தத் தனியனும், இதற்கடுத்த
தனியனும், சொல்வர்.
திருக்கச்சி நம்பிகள் அருளிய தனியன் .இதை, திருச்சந்த
விருத்தத்தை ,கச்சிவெஹ்காவில் அநுஸந்தானம் செய்யும்போது
இந்த இரு தனியன்களையும் ஸேவிக்குமாறு”பிள்ளான்” நியமித்ததாகச்
சொல்லப்படுகிறது.

இவரது சரிதச் சுருக்கம்

கலி 4105, கி.பி.1003ல் சோபக்ருது வருஷம், மாசி மாத
ம்ருகசீர்ஷ நக்ஷத்ரத்தில் ,பூவிருந்தவல்லியில் அவதரித்தார்.
இராமாநுசரின் தகப்பனாருக்கு மிகவும் நெருக்கமானவர்.
பூவிருந்தவல்லியில், நந்தவனம் அமைத்து,தினமும் பூக்களைக்
கொய்து, மாலைகளாகக் கட்டி, தினந்தோறும் நடந்தே
கச்சியம்பதிக்குச் சென்று, பேரருளாளனுக்குச் சமர்ப்பிப்பார் .
”ஸ்ரீ காஞ்சி பூர்ணர்” என்றும் ,”ஸ்ரீ கஜேந்திர தாஸர் ” என்றும்
அழைக்கப்பட்டார். மஹா பூர்ணர் என்கிற பெரியநம்பிகளின்
சிஷ்யர்.
பேருளாளனின் அந்தரங்கர் .அவருக்கு ஏகாந்தமாக ”ஆலவட்டம்”
கைங்கர்யம் செய்தவர்;அப்போதெல்லாம், பேரருளாளன்
இவருடன் பேசுவதுண்டு.
இராமாநுசர் வேண்டுகோளை ஏற்று, அவருடைய கிருஹத்துக்குச்
சென்றபோது, அவர், இவருக்கு ஆசனமிட்டுத் தெண்டனிட முயற்சிக்க,
அதைத் தடுத்து,
ஸ்ரீ ஆளவந்தார் பாதத்தில் ஆச்ரயித்தவர் வர்ணாஸ்ரம தர்மங்களை
மீறக்கூடாது
என்று தடுத்தவர்.ஆச்சார்யனாக இருக்க மறுத்தவர்.

திருக்கச்சிநம்பிகள் ,தனது இல்லத்துக்கு விருந்துண்ண வரவேண்டும் என்று
இராமாநுசர் பலமுறை கேட்டுக்கொண்டதற்கு இணங்க,
ஒருநாள் ”அப்படியே” என்று சம்மதித்தார்.
உடையவரும் ,இச்செய்தியை மனைவியிடம்  சொல்லி
விருந்து தயாரிக்கச் செய்து , அன்றைய தினம், அவரை அழைத்துவர
தெற்குத் திருவீதியாலே அவருடைய மடத்துக்குச் சென்றார்.
இந்தச் சமயத்தில், நம்பிகள், வேறொரு வழியாக இராமாநுசர் இல்லம்
வந்தடைந்து, உடனே உணவு பரிமாற வேண்ட, உடையவரின் மனைவியும்
அவரைத் திண்ணையில் அமர்த்தி உணவு பரிமாற , நம்பிகள் உண்டு
எழுந்து, இலையை அவரே எடுத்துப்போட்டவுடன், உடையவரின் தேவிகள் ,
அவர் உண்ட இடத்தை நீர், பசுஞ்சாணி இட்டு மெழுகி, மீதி உணவைப்
பிச்சைக்காரர்களுக்கு  அளித்து, தானும் தலைக்கு நீராடி, ”ஆசாரம் குறைவற
முடிந்தது”என்று மகிழ்ந்த வேளையில், இராமானுசர் திரும்பி வந்து,
நடந்ததை அறிந்து, ”சேஷ உணவுகூடக் கிட்டவில்லையே” என்று துக்கித்து,
மனைவியைக் கடிந்தார்.
திருக்கச்சிநம்பிகளின் பெருமை, இன்னும் உளது—-

ஒரு சமயம், உடையவர் திருக்கச்சிநம்பிகளிடம் பல சந்தேகங்களைக் கேட்டு
அதற்குப் பேரருளாளனிடம்  நிவர்த்திக்க இயலுமா என்று சொல்ல,
நம்பிகளும் ,ஆலவட்ட கைங்கர்யம் செய்யும்போது இதை தேவப்பெருமாளிடம்
விண்ணப்பிக்க, அவர்,
நம்பி—-இராமானுசர் சிறந்த சாஸ்த்ரக்ஞர், அவர் அறியாதது இல்லை,   அவர்
உம்மிடம் கேள்விகளை சொல்லவில்லை, நாம் பதில்களைச் சொல்கிறோம் —
அவற்றைத் தெரிவியும்—என்றார் .அவை—–
1.  பரத்வம் நாமே——
2. பேதமே தர்சனம் —-
3.உபாயமும் ப்ரபத்தியே —
4. அந்திம ஸ்ம்ருதி வேண்டாம்—-
5. சரீர அவஸானத்திலே மோக்ஷம்–
6. பெரியநம்பி திருவடிகளிலே ஆச்ரயிப்பது—

இவை–இந்த ஆறு வார்த்தைகள், குருபரம்பரையில் முக்கியமானவை
இவற்றின் பொருள் வருமாறு—–

 1.நாமே –நாராயணனே சகலத்துக்கும் உயர்ந்த சத்யமான மூலப்பொருள் )

2.ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் அவசியமான பேதம் உண்டு,
                                                                        என்பதே உண்மையான தத்துவம்
3.என்னை அடைய  ஒரே நேரான வழி, நம்மிடம் சரணாகதி
                                                                                                   அடைவதே

`4. இப்படி வாழ்பவன் உயிர் ,உடலைவிட்டுப் பிரியும் நேரத்தில்
 நம்மை நினைக்க வேண்டியதில்லை

-5.உயிர்,  உடலைவிட்டுப் பிரிந்ததும் இந்த ஜீவாத்மாவாகிய
ப்ரபன்னன் ,நம்மிடம் சேர்ந்து, நிரந்தர ஆனந்தத்தை அடைவான்

6.இவன் –இராமாநுசன் –ஆளவந்தாரின்
சீடரான பெரியநம்பி திருவடிகளைப் புகலிடமாக அடையட்டும்

இவற்றை, திருக்கச்சிநம்பிகள், இராமாநுசரிடம் சொன்னதும் ,
உடையவர் மிகவும் மனத்  தெளிவு அடைந்தார்.
உடையவரின் ஆசார்யர்களில் . பெரியநம்பிகளும் ஒருவர்
பேரருளாளன் இராமாநுசருக்கு ஸன்யாஸ ஆஸ்ரமம் அளித்து,
திருக்கச்சிநம்பிகளை அழைத்து, உடையவரைத் தக்க மடத்தில்
இருத்தும் என்று அருளினார்.நம்பிகளும் அப்படியே செய்தார்.
நம்பிகள்”ஸ்ரீ வரதராஜ அஷ்டகம்” அருளியுள்ளார். 

தனியனின் சுருக்கமான அர்த்தம்

கருச்சந்தும்  காரகிலும் கமழ்கோங்கும்  மணநாறும்
அகிலும் சந்தனமும் எங்கும் சூழ்ந்து ஓங்கி வளர்ந்து,
 மணம் பரப்பும் ,
தருச்சந்தப்பொழில்  தழுவு தாரணியின் துயர்தீர —-
இது பொழில்-உத்யானவனம்—சந்தன வ்ருக்ஷ உத்யானம்–
அதனால் பூர்ணமாகத் தழுவப்பட்ட தாரணி–உலகம்-
சந்தனம் ,முழுதும் குளிர்ச்சி இது சூழ உள்ள உலகத்தோர்க்கு
துக்கம் தீர —குளிர்ச்சி இருக்குமிடத்தில் வெப்பத்தூக்கம்
இராதல்லவா—-
திருச்சந்த விருத்தம் செய் திருமழிசைப் பரன் வருமூர்—-
ஸ்வரூப, ரூப , உபாய புருஷார்த்தங்களைச் சொல்கிற
திருச்சந்த விருத்தத்தை செய்து அருளிய ஆழ்வாரான
திருமழிசைப்பிரான் –தவிரவும், சந்தனமரங்களின் வாஸனை ,
வ்ருக்ஷங்களின் புஷ்ப வாஸனை –நிரம்பியிருக்கும்
விருத்தம்—
திருச்சந்தத்துடன் மருவு திருமழிசை வளம்பதியே—
திருச்சந்த—-பெரியபிராட்டியாருக்கு நித்யவாஸமாக இருக்கும்
திருமழிசை என்கிற —வர்ணாஸ்ரம தர்மத்தை எப்போதும் வளர்க்கும்—-
பதியே—நகரமே–தேசமே—
இந்தத் தனியனில், திருமழிசை என்கிற தேசத்தின் ப்ரபாவத்தைச் சொல்கிறார்.

தனியன்—-தெரிவோம்—-தெளிவோம் —18
—————————— —————————— ———-

உலகும் மழிசையும் உள்ளுணர்ந்து தம்மில்
புலவர் புகழ்க் கோலால் தூக்க—-உலகுதன்னை
வைத்தெடுத்த பக்கத்தும்  மாநீர் மழிசையே
வைத்தெடுத்த பக்கம் வலிது

இந்தத் தனியனும் , திருக்கச்சி நம்பிகள் அருளியதே—
இவருடைய சரிதச் சுருக்கம், இதற்கு முந்தைய பகுதியில் (17)
கொடுக்கப்பட்டுள்ளது

இந்தத் தனியனின் அர்த்தச் சுருக்கம்
—————————— ————

உலகும் மழிசையும் உள்ளுணர்ந்து தம்மில்—–
மேற்சொன்னவாறு,உலகும்,  புகழ் பெற்றதிருமழிசையும் 
 , இவற்றையெல்லாம் மனத்தால் உணர்ந்து,
புலவர் புகழ்க் கோலால் தூக்க —-
பார்க்கவ மஹாகவிகள் தங்களுக்குள்ளே கீர்த்தியென்கிற
”துலா”–துலாக்கோல்–தராசு— நிலைநிறுத்த –தூக்கி நிறுத்த
உலகுதன்னை வைத்தெடுத்த பக்கத்தும்—-
இவ்வுலகத்தை ,தராசின் ஒரு  தட்டில் வைத்து எடுத்த
பக்கத்தைக் காட்டிலும்,
மாநீர் மழிசையே வைத்தெடுத்த பக்கம் வலிது–
மஹாதீர்த்த ஸம்ருத்தியுள்ள திருமழிசையை வைத்து எடுத்த
பக்கமே  நன்கு கனமானது—வலிது—
தக்ஷிண தேசத்தில் ,ஆழ்வார் அவதரித்த திருமழிசை எனும்
க்ஷேத்ரம் மிக வலிமை மிக்கது—பக்திஸாரர்  அவதாரத்துக்கு, இது
”மஹீஸார” க்ஷேத்ரமாயிற்று—-
இவ்வளவான ப்ரபாவத்தை வெளியிட்டு அருளின  திருக்கச்சி நம்பிகள்,
மணக்கால்நம்பிகளிடம் மந்த்ர ஸம்பந்தம் பெற்றவர் ;
ஆளவந்தாரிடம், மந்த்ர அர்த்த, ஸம்பந்தமான எல்லா விசேஷ
அர்த்தங்களையும் பெற்றவர்;இவர் ”பிள்ளை திருமாலிருஞ்சோலை
தாஸரை”ப்போல ,  திருமந்த்ர ஸம்பந்தத்தால் ”பெரியநம்பி திருவடிகள்”
என்று ஸ்வாமி தேசிகன் அருளினார்.
ஸ்வரூப சிக்ஷை திருமந்த்ரார்த்தம் முதலான ஸம்பந்தத்தால்,
ஆளவந்தார் திருவடிகள் என்று ”தீர்த்தப்பிள்ளை”அருளினார்.
தனியன்—தெரிவோம்—தெளிவோம்– -19
—————————— —————————— ———–
 
 
மற்றொன்றும்  வேண்டா மனமே !  மதிளரங்கர் 
கற்றினம் மேய்த்த கழலிணைக்கீழ் —-உற்ற 
திருமாலைப் பாடும் சீர் தொண்டரடிப்பொடியெம் 
பெருமானை எப்பொழுதும் பேசு 
 
இந்தத் தனியன் தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் திருமாலைப் 
பாசுரத் தனியன் .  
திருவரங்கம் அழகிய மணவாளன் முன்பாக,
 ”மற்றொன்றும் வேண்டா —-”என்கிற திருமாலைப் பாசுரத்தை ,
இசையுடன் பாடும்போது, பாசுர அர்த்தங்களில் ஈடுபட்டு 
.திருவரங்கப் பெருமாள் அரையர் அருளியது. 
 
இவரது சரிதச் சுருக்கம் 
 
இவர், கலி 4119–கி.பி. 1017ம் ஆண்டு , பிங்கள வருஷம் ,வைகாசி 
கேட்டை நக்ஷத்ரத்தில் ஸ்ரீ ஆளவந்தாரின் திருக்குமாரராக அவதரித்தார். 
அவரையே ஆசார்யராக வரித்து, அவரிடமிருந்து, ”சரமோபாய நிஷ்டை”,
மற்றும் பல ரஹஸ்ய அர்த்தங்களைக் கற்றார். தனது தகப்பனாரின்
 பாட்டனாரான ஸ்ரீமந் நாதமுனிகள் ,செயலுக்குக்  கொண்டுவந்த 
”அரையர் ஸேவை ”யில் மிகவும் ஈடுபட்டு, அரையர் ஸேவை செய்தார்.
இந்த அரையர் ஸேவை மூலமாகவே காஞ்சி தேவப்பெருமாளை 
மகிழ்வித்து,இராமானுசர் திருவரங்கம் வர , வேண்டியன செய்தார்.
பெரியநம்பிகளின் கட்டளைப்படி,உடையவருக்கு, ”ச து ஸ்லோகி”,
”ஸ்தோத்ர ரத்னம்”இவற்றையும், ஆழ்வார்களின் அருளிச் செயல்களின் 
உட்பொருள்களையும், மற்றும் தர்ம சூக்ஷ்மங்களையும் ,உடையவருக்கு 
வழங்கினார். 
தனது சஹோதரர்களான , ”தெய்வத்துக்கரசு நம்பி”,  ”பிள்ளையரசு நம்பி”,
”சொட்டை நம்பி”, இவர்களை உடையவரின் சிஷ்யர்களாக்கினார் 
உடையவருக்கு, ”லக்ஷ்மண முனி”என்று பெயரியிட்டவர்.
தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் ”திருமாலை” மற்றும் ”திருப்பள்ளியெழுச்சி”
பாசுரங்களுக்கு தனியன்கள் அருளிச் செய்தவர்.
 
தனியனின் அர்த்தச் சுருக்கம் 
 
மற்றொன்றும்  வேண்டா மனமே——
மனம், சாதாரண விஷயங்களிலே  இழிந்தாலும், தனக்குத் தானே 
திருந்தி, ஸத் விஷயங்களிலும் லக்ஷ்ய்மாகக் கொண்டு அவற்றின் அர்த்தத்தை
 க்ரஹிக்க வேண்டி, மற்ற ஒன்றும் வேண்டா மனமே –என்று சொல்லிற்று 
 
மதிளரங்கர் 
கற்றினம் மேய்த்த கழலிணைக்கீழ் —- கண்ணன் திருவவதாரத்திற்கும் 
அரங்கனே  காரணம் —இவர் மதிள் அழகு உடையவர் — மதிளரங்கர்
தொண்டரடிப் பொடியாழ்வார், தன்னுடைய ”திருமாலை”யிலே ,9வது
பாசுரத்திலே ,”கற்றினம் மேய்த்த எந்தைக் கழலிணைப் பணிமின் நீரே ”
என்கிறார் . அதனால், தனியனில், திருவரங்கப் பெருமாள் அரையர் ,
கற்றினம் மேய்த்த கழலிணைக்கீழ்—என்று இவ்வாறு  கூறுகிறார்.
உற்ற திருமாலைப்பாடும் சீர்த்தொண்டரடிப்பொடி—
நமக்கு உறுதுணையாக இருக்கிற-உறவாக இருக்கிற
யார்—?
திருமாலைப்பாடும் சீர்த்தொண்டரடிப்பொடி—-
திருமாலைப்பாடும்—-அதாவது தென்னரங்கனைபி பாசுரங்களால் பாடித்  துதிக்கும்,
 சீர்த்தொண்டரடிப்பொடி—- சீர்மைமிக்க தொண்டரடிப்பொடி ஆழ்வார்
எப்பொழுதும் பேசு—-அவருடைய குணானுபவங்களை எப்போதும்
போற்று
எம்பெருமானை எப்பொழுதும் பேசு—–தொண்டரடிப்பொடி ஆழ்வார்
பாசுரமிட்ட எம்பெருமானான மதிள்அரங்கரை  எப்போதும் போற்று !
ஸ்வாமி நம்மாழ்வார் , திருவாய்மொழியில் அருளுவதைப்போல,
”துஞ்சும் போதும் விடாது தொடர் கண்டாய்” (1–10–4 )
எப்பொழுதும் நினைப்பது மாத்திரமில்லாமல், இதனால், பகவத் கைங்கர்ய
அபேக்ஷையுடன் பாகவத சேஷத்வம் வேண்டுகிறார்.அதாவது,
தொண்டரடிப்பொடி ஆழ்வார் குணானுபவத்தைத் தானும் பெற்று,
உஜ்ஜீவிப்பது அல்லாமல், உஷத் காலத்திலே,”ஹரி;; சப்தத்திற்கு
சங்கீர்த்தனம் செய்யுமாப்போலே ,கேட்பவர்களும் உஜ்ஜீவிக்கப் 
பேச வேணும் என்று கருத்து—–
 
 
 
–தனியன்—-தெரிவோம்—-தெளிவோம் —-20
—————————— —————————— ————–

தமே வ மத்வா  பரவாஸுதேவம்
              ரங்கேஸயம்  ராஜவ தர்ஹணீயம்  |
ப்ராபோதகீம் யோக்ருத  ஸூக்திமாலாம்
              பக்தாங்க்ரி ரேணும்  பகவந்த மீடே  ||

தொண்டரடிப்பொடி  ஆழ்வாரின் திருப்பள்ளியெழுச்சி பாசுரங்களுக்கு
திருமாலையாண்டான் அருளிய தனியன்.

உடையவருக்கு, திருப்பள்ளியெழுச்சிப் பாசுரங்களின் அர்த்தவிசேஷங்களை
அருளும்போது, ”உன் அடியார்க்கு ஆட்படுத்தாய் பள்ளியெழுந்தருளாயே –”
என்கிற இடத்தில் மிகவும் ஈடுபட்ட திருமாலையாண்டான் ,இந்தத்
தனியனை அருளியதாகச் சொல்வர்.

இவர், கலி 4090, கி.பி.988, ஸர்வதாரி வருஷம், மாசிமாத மக நக்ஷத்ரத்தில்
திருமாலிருஞ்சோலையில் அவதரித்தார்.
மாலிருஞ்சோலை அழகனுக்கு, மாலைகள் தொடுத்து கைங்கர்யம்
செய்ததால் ”ஸ்ரீ மாலாகாரர் ” என்று அழைக்கப்பட்டார்.
திருமாலிருஞ்சோலை அழகருக்கு அந்தரங்கர் .
திருமாலிருஞ்சோலை அழகனே , இவருக்குச் சிஷ்யனாக வந்து கைங்கர்யம்
செய்யும் பேறு  பெற்றவர்.ஆளவந்தாரிடம் திருவாய்மொழியின்
ஆழ்பொருளை நன்கு கற்றவர்.திருக்கோட்டியூர் நம்பிகளின்
ஆணைப்படி,உடையவருக்கு திருவாய்மொழியின் உட்பொருளை உபதேசித்தவர்.
உடைவரிடமும், திருவாய்மொழியின் அர்த்தநுணுக்கங்களைக் கற்றவர்.
தன்னுடைய குமாரன் ”சுந்தரத் தோளுடையானை ” உடையவரிடம்
சிஷ்யனாகச் சேர்த்தவர்.   இராமாநுசரை , ”சடகோபன் பொன்னடி” என்று
பெயரிட்டு உயர்ந்தவர்.
இவர், 1078ம் ஆண்டு பிங்கள வருஷம் ஐப்பசி  ,சுக்ல பக்ஷ ஏகாதசியில்
திருநாடு அலங்கரித்தார்.

தனியனின் அர்த்தச் சுருக்கம்
—————————— ——————

ராஜவ தர்ஹணீயம்  ரங்கேஸயம் தம் பரவாஸுதேவம்——
இந்த எம்பெருமான்—பெரியபெருமாளாகிய ரங்கநாதன்,சக்ரவர்த்தித்
திருமகனாலே ஆராதிக்கப்பட்டவன்—-அர்ச்சையி லும் ,”பீஷாஸ்மாத் —-”
என்பதாக பீதி உள்ளவர்களாலேயே ஆராதிக்கத் தக்கவன்
ரங்கேஸயம்——திருவரங்கத்து அரவணையில் பள்ளி கொள்பவன்
இது, அம்புயத்தோன் அயோத்திமன்னர்க்கு அளித்த கோயில் —-
தம்—-செழுமறையின் முதலெழுத்துச் சேர்ந்த கோயில் –ப்ரதமம்
மற்றும் ப்ரதானம் ஆகிய கோயில்—-
பரவாஸுதேவம்  ஏவ மத்வா —-இவன் வாஸுதேவ ரங்கேசன் —
இவனே ரங்கராஜன்—இவனே பரவாசுதேவன் –இருவரும் ஒன்றே–
ய :ப்ராபோதகீம் யோக்ருத ஸூக்திமாலாம்—எந்த தொண்டரடிப்பொடி
ஆழ்வார், இந்த ஸூக்தி மாலாவான திருப்பள்ளியெழுச்சியைப்
பாடினாரோ —பண்ணினாரோ—-
பக்தாங்க்ரி ரேணும்  பகவந்த மீடே ————
எம்பெருமான் போலவே ஷாட்குண்ய பரிபூர்ணராய் விளங்குகிற
தொண்டரடிப்பொடி ஆழ்வாரை ஸ்தோத்ரம் செய்கிறேன்—-
லோக உஜ்ஜீவனம் செய்ய  நீ ,திருப்பள்ளி உணர்ந்தால் ,
உலகு யாவும் உணர்ந்து, உனக்கும் உன் அடியார்க்கும் ஆட்பட்டு
உஜ்ஜீவிக்கும் என்கிற திருவுள்ளத்தாலே, திருப்பள்ளியெழுச்சிப் 
பாசுரங்களை அருளிச் செய்தவரை மனத்தால் நினைத்து
உலகும் உஜ்ஜீவிக்கும் —என்று கருத்து—
 
This carries excellent wordings such as ”bhaktanghri renu—” the dust of
Holy Ranganatha’s devotees —He is ”Thondaradippodi Azhvar ” who composed
this garland of songs –thiruppalliyezhuchchi—( only 10 verses )
awakening Sri Ranganatha who has reclined on the serpent couch in
Sriranga Divya Desam. He is ”Paravasudeva”—Supreme Lord—
richly deserving all adorations of an emperor
 
 
தனியன்—தெரிவோம்—தெளிவோம்– –21
—————————— —————————— ————-

மண்டங்குடியென்பர்  மாமறையோர்  மன்னியசீர்
தொண்டரடிப்பொடி  தொன்னகரம் —-வண்டு
திணர்த்த வயல்  தென்னரங்கத்தம்மானைப் பள்ளி
யுணர்த்தும் பிரான் உதித்த ஊர்

இந்தத் தனியனும், திருவரங்கப் பெருமாள் அரையர் அருளியது.
இவரது சரிதம், பகுதி 19ல் சொல்லப்பட்டுள்ளது.

தனியனின் அர்த்தச் சுருக்கம்

வேதாந்த சாரமறிந்த பெரியோர்கள், சொல்வர்—

வண்டுகள் ரீங்காரமிடும் வயல்சூழ்ந்த தென்னரங்கத்திருப்பதி —
யெம்மானான பெரியபெருமாள் —ரங்கநாதன் —திருப்பள்ளி
கொண்டதை உணர்த்திய —-அவனுக்குப்  பள்ளி எழுச்சி பாடிய—
மஹா உபகாரரான, ஸ்திரமான கல்யாண குணங்களை
உடையவரான, தொண்டரடிப்பொடி ஆழ்வார் அவதரித்த
திருமண்டங்குடி என்பர் .
இதனால், ஆழ்வாரையும் அவர் அவதரித்த அவ்வூர்த் திருநாமத்தையும் ,
கேட்பது, சகல புருஷார்த்தத்தையும் கொடுக்கும்——என்று பொருள்படும்

Mandangudi—–place of Sri Thondaradippodi Azhvar–(near Pullamboothangudi)
This Azhvar composed ”Thiruppalliyezhuchchi” —–Subrapatham—
to awaken Sri Ranganatha from His serpent bed at Srirangam—which is
surrounded by rich paddy fields consist of hosts of honey–bees

About the Author

Leave A Response