தனியன்—— 30 to 40

Posted on Jan 26 2018 - 8:14am by srikainkaryasriadmin
|

தனியன்—— 30 to 40

தனியன்—— 30
————————————————————————————————————

மாலைத் தனியே வழிபறிக்க வேணும் என்று
கோலிப் பதிவிருந்த கொற்றவனே—-வேலை
அணைத்தருளும் கையால் அடியேன் வினையைத்
துணித்தருள வேணும் துணிந்து.

இது திருக்குறுந்தாண்டகத்தின் தனியன் என்று உரைப்பர்.

இந்தத் தனியனும் ஸ்ரீ எம்பார் அருளியதே என்பர். இவரின் சரிதச் சுருக்கம்
இதற்கு முந்தையத் தனியனில் கொடுக்கப்பட்டுள்ளது. எனினும்
மீண்டும் இங்கே கொடுக்கப்படுகிறது—–

பெரிய திருமலை நம்பிக்கு , இரண்டு சகோதரிகள் .
மூத்தவர் பூமிப்பிராட்டி என்கிற காந்திமதி, உடையவரின் தாயார்.
இளைய சகோதரி பெரிய பிராட்டி—-மதுரமங்கலம் கமல நயன பட்டரின்
மனைவி. உடையவருக்கு, சிறிய தாயார் என்கிற உறவு.

இவருக்கு, கலி 4127, கி.பி. 1025ம் ஆண்டு குரோதன வருஷம் , தை மாத
புனர்பூசத்தில் கோவிந்தன் என்கிற திருநாமத்துடன் ,பிறந்தார்.
இளையாழ்வார் என்கிற உடையவரும் , கோவிந்தனாகிய இவரும்
திருக்கச்சியில் ,யாதவ ப்ரகாசரிடம் கல்வி பயின்றனர்.

இந்தக் கல்வியானது, அத்வைதபரமாக இருந்ததால், அவ்வப்போது
இளையாழ்வார் ,அதற்கு வைணவபரமாக வ்யாக்யானம் சொல்வார்.
யாதவ ப்ரகாசருக்கு இது பிடிக்கவில்லை. இளையாழ்வார்,கோவிந்தன்
மற்றும் பல சிஷ்யர்களுடன் காசி யாத்ரைக்குக் கிளம்பி, நடு வழியில்
அடர்ந்த காட்டில் இளையாழ்வாரை முடித்துவிடத் திட்டம் வகுத்தார்.

இதை அறிந்த கோவிந்தன் ,இளையாழ்வாருக்கு இதைச் சொல்ல ,
இளையாழ்வார் அங்கிருந்து தப்பித்து ,காஞ்சி திரும்ப காட்டிலேயே
நடக்க, அப்போது பேரருளாளனும் பெருந்தேவித் தாயாரும்
வேடுவன் , வேடுவச்சி உருவங்களில் அங்கு வந்து இளையாழ்வாரைக்
காப்பாற்றினார்கள்.

காசியில் , கங்கா ஸ்நானத்தின்போது,யாதவ பிரகாசர், தனது ”சித்து” வேலையால் ,
கோவிந்தனின் உள்ளங்கையில் சிவலிங்கத்தை வரவழைத்து,
இவருக்கு, ”உள்ளங்கை கொணர்ந்த நாயனார்” என்று பெயரிட்டு,
காளஹஸ்தியில் சிவா பூஜையில் ஈடுபடவைத்தார்.

இளையாழ்வார், யதிராஜராக ஆகி, தனது சிறிய தாயாரின் குமாரர்
கோவிந்தனைத் திருத்திப் பணிகொள்ள, ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் மூலமாக
பெரிய திருமலை நம்பிகளை வேண்ட, திருமலை நம்பிகளும்
காளஹஸ்தியில் , ”உள்ளங்கை கொணர்ந்த நாயனார்” நடந்து போகும் வழியில்
ஆளவந்தார் ஸ்ரீ ஸூக்திகளைச் சொல்லிச் சொல்லி, பகவானின் பரத்வத்தை
கோவிந்தன் உணருமாறு செய்து, திருத்தி, அவரை உடையவரிடம் அனுப்பி
சிஷ்யனாக்கினார். இவரே ”எம்பார்”.

திருவரங்கத்தில்,உடையவரிடம் வந்த கோவிந்தன், பெரிய திருமலை நம்பியைப்
பிரிந்து இருக்க இயலாமல், திரும்பவும் திருமலைக்கு வந்தார். பெரிய திருமலைநம்பித்
திருமாளிகைக்குமுன்பாகத் தெண்டனிட்டார். இதை அறிந்த நம்பிகள், கோபத்துடன்
”அந்தப் பித்தனைப் போகச் சொல்லுங்கள் —” என்று சொல்ல அவரது தர்மபத்நி
”தீர்த்தப் ப்ரஸாதமாவது கொடுக்க வேண்டாமோ —‘ என்று பரிவுடன் வேண்ட,
அதற்கு நம்பிகள், ”விற்ற பசுவுக்குப் புல் இடுவார் உண்டோ —/–என்க, இதைச்
செவியுற்ற கோவிந்தன் அதன் அர்த்த சூக்ஷ்மத்தை உணர்ந்து , எம்பெருமானாரிடம்
வந்தார்.

எம்பெருமானார், இவரை ”கோவிந்தப் பெருமாளே —” என்று நெஞ்சு தழுதழுக்க
அணைத்துக்கொண்டார். கோவிந்தனோ, எம்பெருமானாரைத் தெண்டனிட்டு,
”இந்தச் சிறியேனை பெரிய அளவில் அழைத்தல் தகாது—தம்பீ என்று அழைத்தால்
போதுமே என்க ,
அதற்கு யதிராஜர் , நான் ஸந்யாஸி — உறவு முறை சொல்லி
அழைத்தல் தகாது—-மேலும் , நமது ஆசார்யர் திருமலை நம்பிகளே
உம்மை ”கோவிந்தப் பெருமாளே —” என்று அழைக்கும்போது ,அதற்குக் குறைவாக
அழைக்க எனக்கு அதிகாரமில்லை என்றார். அப்போது யதிராஜருக்கு
69 திருநக்ஷத்ரம் என்றும் சொல்வர்.

கோவிந்தனின் பற்றில்லா வாழ்க்கை, வைணவ ஊற்றம் ஆசார்ய விச்வாஸம்
இவையெல்லாம் ,திருவரங்கத்தில் வைணவர் குழாங்களிலும் , சிஷ்யர்களிடமும்
-பரவியது–இவை தனக்குத் தகும் என்றார் கோவிந்தன்.

இதை அறிந்த உடையவர், ”பிறர் உம்மைப் புகழ்ந்தாலும் ,நீர் இப்படி அவற்றை
ஆமோதிக்கலாமா —” என்க,
அதற்கு, கோவிந்தன், ”காளஹஸ்தியில் கழுத்தில் லிங்கத்துடன் வசித்த
அடியேனை –இந்த ஆத்மாவை—உய்யுமாறு செய்த தேவரீரின் திருக்கல்யாண
குணங்கள் அன்றோ இதில் தெளிவாகிறது —தேவரீரின் க்ருபையால்
உண்டான ஏற்றம் இது– ஆதலால் , இவை தனக்குத் தகும் என்றார்.
இந்தப் பதிலைக் கேட்ட உடையவர் , கோவிந்தனை மிகவும் மெச்சினார்.

ஒரு சமயம் திருவரங்கத்தில் ஒரு வேசியின் வீட்டின் எதிரே தம்மையும், அனுஷ்டானம்
செய்வதையும் மறந்து,நெடு நேரமாகக் கோவிந்தன் அங்கேயே நிற்பதாகச் செய்தி
வந்தது. அதிர்ந்தார் எம்பெருமானார்.
கோவிந்தனை வரச் சொல்லி விசாரிக்க
அவரும் ”ஆமாம்” என்று தலை அசைத்தார்.
மேலும் சொன்னார்—
அந்த வேசி ,தன்னுடைய குழந்தைக்குத் தேவரீருடைய பெருமைகளை எல்லாம்
பாடலாகப் பாடி , அக்குழந்தையைத் தாலாட்டிக்கொண்டிருந்தாள் ;அடியேனின்
ஆசாபாசங்கள் அச்சமயம் அகன்று ,தேவரீரின் பெருமைகளில் மயங்கிச்
செவிமடுத்தேன் ;மன்னிக்கவேணும்– என்றார்.
உடையவர், இதனைப் பக்குவமாக விசாரித்து ,உண்மை என அறிந்து, கோவிந்தனின்
ஆசார்ய பக்தியைக் கண்டு ப்ரமித்துப்போனதாக ,குருபரம்பரை சொல்கிறது.

இப்படிப் பல விருத்தாந்தங்கள் ,குருபரம்பரா ப்ரபாவத்தில் உள்ளன—-
இவரது பற்றற்ற , ஆசார்ய, பகவத் பக்தி மிகுந்த வரலாறு ,பின்னோருக்குச்
சுவையமுதம்;
எம்பெருமானார் ,இவருக்குத் தன்னுடைய திருநாமமான
”எம்பெருமானார்” என்பதை இட்டு ,அழைத்தபோது, கோவிந்தன்
கூனிக் குறுகிப்போனார். ” தேவரீரை ஆச்ரயித்த தேவரீரின் அதே திருநாமம்
அடியேனுக்குத் தகாது—” என்று கண்ணீர் மல்க ப்ரார்த்திக்க , எம்பெருமானார்
சரியெனச் சொல்லி அந்தத் திருநாமத்தைச் சுருக்கி , ”எம்பார்–” என்று
அழைத்தார்.

எம்பார், எம்பெருமானாரின் திருவடிகளை விட்டு அகன்றாரில்லை.

பற்பமெனத் திகழ் பைங்கழல் உந்தன் பல்லவமே விரலும் ,

பாவனமாகிய பைந்துவராடை பதித்த மருங்கழகும் ,

முப்புரி நூலோடு முன்கையில் ஏந்திய முக்கோல் தன்னழகும் ,

முன்னவர் தந்திடு மொழிகள் நிறைந்திடு முறுவல் நிலாவழகும் ,

கற்பகமே விழி கருணை பொழிந்திடு கமலக் கண்ணழகும் ,

காரிசு தன்கழல் சூடிய முடியும் ,கனநற்சிகை முடியும் ,

எப்பொழுதும் எதிராசன் வடிவழகு என்னிதயத் துளதால் ,

இல்லையெனக்கெதிர் ! இல்லையெனக்கெதிர் இல்லையெனக்கெதிரே !

என்று, உவகையும் பெருமையும், எக்காளமும் ஒருங்கே சேர ,

வாழ்ந்து வரும்போது,
”இராமாநுசா ” என்கிற திருநாமச் சுவையைச் சுவைக்க,
ஒரு பிள்ளை இல்லையே என்று எம்பார் வருந்தினாராம் அப்போது,
எம்பெருமானார் இவரை அழைத்து, சங்கு, சக்ரத்துடன் கூடிய
திருமண்காப்பு பொறித்த , தனது நித்யகர்மாநுஷ்டான உபபாத்ரத்தைக்
கொடுத்து, இதனை எம்பெயரால் அழைக்கலாம் —என்க ,எம்பாரின்
உவகைக்கு எல்லையே இல்லை.

ஸ்ரீ கூரத்தாழ்வானோ , எம்பெருமானாரைவிட வயதில் மூத்தவராக
இருந்தாலும், உடையவர்பால் கொண்ட ஆசார்ய பக்திக்கு அளவில்லை.
சிறந்த பெருமைமிகு ஞானமும் , பகவத் பக்தியும் கொண்டவர்.
ஒருசமயம், எம்பாருக்கு , எம்பெருமானாரோடு உள்ள திருமேனி
சம்பந்தத்தை எண்ணிப்பார்த்து, ” எம்பெருமானாரோடு அடியேனுக்கு
பதக்கு ஆத்ம சம்பந்தம் இருந்தாலும், ஒரு உழக்கு கூட
திருமேனி சம்பந்தம் இல்லையே —”என்றாராம்.

(பதக்கு , ஆழாக்கு என்பவை அக்கால முகத்தல் அளவைகள் )

எம்பார் திருநாட்டுக்கு எழுந்தருளியது—கி.பி. 1140–ரௌத்ரி ஆண்டு என்பர்.
எம்பெருமானார் திருநாட்டுக்கு எழுந்தருளிய மூன்று ஆண்டுகளில்
இவரும் பரமபதித்தார்.

தனியனின் அர்த்தச் சுருக்கம்
—————————————————

இவன் கொற்றவன்—–திருமங்கைக் கொற்றத்துக்கு மன்னன்.
இவன் ,மாலிடம் , மால் கொண்டவன்———அந்த மாலை—–
மாலவனை ——-திருக்கல்யாணகோலத்தில், திருவுடன் வருபவனை—–
வழிமறித்து ,திருவாபரணங்களைப் பறிக்கவேணுமென்று —
கோலி —— ,நிச்சயித்து — பதுங்கி இருந்த திருமங்கை ஆள்வானே –!
உன் திருக்கையில் வேல் இருக்கிறதே—-திருஞானசம்பந்தர்
உனக்குச் சமர்ப்பித்த வேல்—–அந்த வேல் ஆயுதத்தை அணைத்து
அருளுகின்றாயே —அந்தத் திருக்கையால் , அடியேனின் வினைகளையெல்லாம் —
(நல்வினை ,தீவினை இரண்டும்—நல்வினை பொன்விலங்கு ,தீவினை
இரும்பு விலங்கு–இரண்டுமே தொலைந்தால்தான் இறைவனடி அடைய முடியும் )
நீ ,
துணித்து—-ஒரே வீச்சால் வெட்டி
அருளவேணும் துணிந்து—–அடியேனுக்கு அருளவேணும்—–துணிந்து அருள வேணும்
என்கிறார்.
அடியேனின் வினைகளை உன்னால்தான் துணிக்க இயலும்- ஆதலால்,
வேல் பிடித்த உன் கையால் ,அடியேனின் வினைகளைத் துணிவுடன்—–
உன் திருக்கைக்கே இந்தப் பலம் உள்ளது—வேல் ,வேண்டியதில்லை—
எனவே , உன் திருக்கையால் தள்ளினாலே , வினை துணிக்கப்படும் —-
துணிந்து, அடியேன் வினையைத் துணித்தருள வேணும் —-வினையை அடியேனிடம்
அருள்கொண்டு , துணித்தாலே, அதுவே அருளாகும் ——–என்றபடி——

Sarvam Sree Hayagreeva preeyathaam

தனியன்—–31
—————————

கைதை சேர் பூம்பொழில்சூழ் கச்சிநகர் வந்துதித்த
பொய்கைப் பிரான் கவிஞர் பேரேறு —-வையத்து
அடியவர்கள்வாழ அருந்தமிழ் நூற்றந்தாதி
படி விளங்கச் செய்தான் பரிந்து.

இந்தத் தனியன், இயற்பாவில் அடங்கிய முதல் திருவந்தாதி அருளிச் செயலுக்கு, ஸ்ரீ முதலியாண்டான் உவந்து அருளியது .

இவர், மதுரமங்கலம் அனந்த தீக்ஷிதர் மற்றும் எம்பெருமானாரின் சகோதரி
பூமி நாச்சியார் தம்பதியருக்கு கலி 4129, பிரபவ ( கி.பி. 1027 ) சித்திரை மாதத்தில், புனர்வஸு நக்ஷத்ரத்தில் அவதரித்தவர்… ”தாசரதி”என்கிற திருநாமமும் இவருக்கே உரியது.
எம்பெருமானாரின் முதல் சீடர்.அவருக்கு, ”தண்டாகவும் (த்ரிதண்டம் ) , பாதுகையாகவும் போற்றப்பட்டவர்.

கர்நாடகத்தில், ”மிதிளாபுரியில் ” வசித்த வீர சைவர்களும் ,சமணர்களும், எம்பெருமானாரை விரோதியாகப் பாவித்தனர். அங்கு எழுந்தருளியிருந்த எம்பெருமானார் , முதலியாண்டானை அழைத்து, அவ்வூரில் உள்ள நல்லநீர்க் குளத்துறையில் பாதங்களை அலம்பிவருமாறு சொன்னார்.
முதலியாண்டானும் , அப்படியே சென்று, அந்தக் குளத்தின் தீர்த்தத்தில்
இறங்கித் , தன்னுடைய பாதங்களைநன்கு அலம்பிக்கொண்டு திரும்பிவந்தார்.
பிறகு அந்தக்குளத்தில் இறங்கி நீராடி, தீர்த்தம் உட்கொண்ட வீரசைவர்கள் மற்றும் சமணர்கள் இடையே மகத்தான மாற்றம் ஏற்பட்டது.தங்களுக்கு இருந்த எம்பெருமானாரை விரோதிக்கும் மனப்பான்மை அடியோடு அழிந்ததை உணர்ந்தனர்.எம்பெருமானாரை ஆச்ரயித்தனர்.அன்றுமுதல், அந்த ஊர்,
”ஸ்ரீ சாளக்ராமம் ” என்று அழைக்கப்படலாயிற்று. இப்படி, முதலியாண்டானின் பிரபாவம் அளப்பற்கரியது.

ஒருசமயம், கூரத்தாழ்வானின் மிகுந்த பிரார்த்தனையின்பேரில், எம்பெருமானார்,அவருக்கு”ரஹஸ்யார்த்ங்களை ” உபதேசித்தார்.முதலியாண்டான் தனக்கு அந்த பாக்கியம் கிட்டவில்லையே என்று மிக வருந்தி, எம்பெருமானாரிடம் தாபப்பட்டார். அப்போது, எம்பெருமானார் ,” நீ என்னுடைய உறவினன்; உன்னிடம் இருக்கும் குறைகள், குற்றங்கள், எனக்குப் புலப்படாது;ஆதலால், திருக்கோட்டியூர்
நம்பிகளிடம் சென்று உபதேசம் பெற்றுக்கொள்” என்றார். முதலியாண்டான், திருக்கோட்டியூர் நம்பிகளிடம் சென்று ,பிரார்த்தித்தார். ஆனால், அவரோ, ”கூரத்தாழ்வானைப் போலவே நீரும் வஞ்ச முக்குறும்பு அறுத்தவர்;(கல்வி, செல்வம், குலம் மூன்றாலும் கர்வப்படாமை ) உமக்கு, எம்பெருமானாரே உபதேசிப்பார் ;” என்று சொல்லித் திருப்பி அனுப்பிவிட்டார்.
திருவரங்கம் வந்து, எம்பெருமானாரின் திருவடி பணிந்து, நடந்தவைகளை விண்ணப்பிக்கும்போது ஒரு திருப்பம் —-அதிசய சம்பவம் நிகழ்ந்தது.

பெரியநம்பிகள் ஆசார்ய புருஷர்;எம்பெருமானாருக்கு மதுராந்தகம் ஏரிகாத்த
ராமன் கோவிலில், ”பஞ்சசம்ஸ்காரம் ” செய்துவைத்தவர்; ஸ்ரீமன் நாதமுனிகள் அருளிய ”நியாய தத்வம் ”ஸ்ரீ ஆளவந்தார் அருளிய ”மஹா புருஷநிர்ணயம் ”, ”கீதார்த்த ஸங்க்ரஹம் ”, ”ஸித்தித்ரயம் ”, மற்றும் பாஞ்சராத்ர ஆகமத்தையும் உபதேசித்தவர்.தவிரவும், ஸ்ரீ வ்யாஸரின் ப்ரஹ்ம ஸூத்ரம் அதன் அர்த்த விசேஷங்கள்,
திருவாய்மொழி தவிர ஏனைய ஆழ்வார்களின் அருளிச் செயல்கள், அவற்றின் உட்கருத்துக்கள் என்று உபதேசித்தவர்.
இந்த மஹா ஆசார்யனின் புதல்வியான ” அத்துழாய் ” அந்தச் சமயத்தில் எம்பெருமானாரின் மடத்துக்கு வந்து, தன்னுடைய புகுந்த வீட்டின் பிரச்னையை ,முறையிட்டாள்.
அத்துழாய் , புக்ககத்தில் இருந்தபோது, அவரது மாமியார், எதிர்பார்த்தபடி சீதனத்தை , அத்துழாய் கொண்டுவரவில்லையென்றும் , பெரியநம்பிகளின் வறுமையை இழித்தும் பேசியபடி இருந்தார்.
ஒருசமயம் நீராட ச் செல்லத் தன மாமியாரைத் துணைக்கழைத்தபோது, ”நான் என்ன , உன் வீட்டு வேலைக்காரியா ?நீ இங்கு வந்தபோது, யாரேனும் சீதன வெள்ளாட்டியை ( வேலைக்காரி ) அழைத்து வந்திருந்தால் , அவளைத் துணைக்கு அழைத்துப் போ,,,” என்று ஏச, அத்துழாய் மிகவும் வருந்தி ,பிறந்த வீட்டுக்குவந்து,
பெரியநம்பிகளிடம் ,விவரத்தைக் கூறி அழுதார். அவர், ”உன் ஜீயர் அண்ணனிடம் போய்ச் சொல்லிக்கொள் ”என்று சொல்லிவிட,

அத்துழாய், எம்பெருமானாரின் மடத்துக்கு வந்து, எம்பெருமானார் முதலியாண்டானிடம் பேசிக்கொண்டிருக்கும்போது ,எம்பெருமானாரை சேவித்து, தனக்கு நேர்ந்தவற்றைச் சொல்லித் தேம்பி அழுதார். எம்பெருமானார், முதலியாண்டானைக்
குறிப்பால் உணர்த்த, முதலியாண்டான்—சகல சாஸ்த்ரங்களையும் கற்று உணர்ந்தவர்—அத்துழாயுடன் வெள்ளாட்டியாகப் புறப்பட்டு விட்டார். அத்துழாயின் புக்ககத்தில், எல்லா வீட்டு வேலைகளையும் –ஒரு வேலைக்காரனாக, ஆசார்யனின் மகளுக்குச் செய்கிறோம் என்கிற உகப்புடன் , செய்தார். ஆறுமாத காலம் ஆயிற்று.

ஒருநாள்—- அத்துழாயின் மாமனாருக்கு வேண்டிய சில வித்வான்கள், அங்கு வந்து,
ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்தை ”காலக்ஷேபமாகச் ” சொல்லும்போது, ராமனின் கீர்த்தி குறையுமாறு பொருள் உரைத்தார்கள் .
இதைக் கேட்டுக்கொண்டிருந்த முதலியாண்டான் மிக வருந்தி கண்ணீர் சிந்தினார்.
இதைப் பார்த்த அத்துழாயின் மாமனார், ”இங்கு வேலைப்பளு அதிகமாக இருப்பதால் கண்ணீர் சிந்துகிறார்போலும் ”என்று எண்ணி, ”வேலை செய்யச் சிரமமாக இருந்தால், உடனே ஊருக்குப் போய்விடு—-இங்கு அழுதுகொண்டிருக்காதே ….” என்று சொன்னார்.
அதற்கு, முதலியாண்டான், ”ஆசார்ய குமாரத்தியின் விருந்தினருக்கு, கைங்கர்யம் செய்ய அடியேனுக்குக் கொடுத்துவைத்திருக்கவேண்டும்.—அதற்காக அழவில்லை, வால்மீகியின்ச்லோகங்களுக்கு அர்த்தம் சொல்லும்போது,
வித்வான்கள், சக்ரவர்த்தித்திருமகனின் கல்யாணகுணங்கள் குறையும்படி சொன்ன தவறான அர்த்தத்தால்,கண் கலங்கினேன் —” என்கிறார்.
வித்வான்கள், ”மடைப்பள்ளிக்காரனுக்கு வால்மீகியின் ச்லோகங்கள் பற்றி என்ன தெரியும் ?—” என்று கேட்டவுடன் ,அனுமதி அளித்தால், விளக்கமாகச் சொல்கிறேன் என்று பணிவுடன் முதலியாண்டான் சொன்னார்.
” சரி–உன் விளக்கம்தான் என்ன ? ” அவர்கள் கேட்டவுடன், வால்மீகியின் ச்லோகங்களுக்குச் சரியான அர்த்தங்களை—பகவானின் திருக்கல்யாண குணங்களைச் சொன்னார். வித்வான்கள், தலைகுனிந்தனர்.
”இவ்வளவு ஞானமுள்ளவரை, இப்படிப்பட்ட பணிகளில் அமர்த்தியிருப்பது பெரிய பாவம்—” என்று அத்துழாயின் மாமனாரிடம் சொல்லிச் சென்றனர்.
பிரமிப்புடன் அத்துழாயின் மாமனார்,இனி எந்த வேலையும் செய்யவேண்டாமென்றும் தன்னை மன்னிக்கும்படியும் உடனே ஊருக்குத் திரும்பும்படியும்–” பிரார்த்தித்தார்.
அதற்கு, முதலியாண்டான், அனுப்பியவர் திரும்ப அழைத்தால்தான் செல்ல முடியும் என்று சொல்ல, அத்துழாயின் மாமனார் , பெரியநம்பிகளிடம் மன்னிப்புக் கேட்டு, ” மஹா வித்வான் ஒருவரை, சீதன வெள்ளாட்டியாக அனுப்பி எங்களை நசிப்பிக்க வைத்துவிட்டீர்களே —‘ என்று விண்ணப்பிக்க, அதற்கு பெரியநம்பிகள்,
” இது பற்றி எனக்கொன்றும் தெரியாது—–எம்பெருமானாரைக் கேளுங்கள்—” என்று சொல்லி விட்டார்.
எம்பருமானாரின் மடத்துக்கு வந்த அத்துழாயின் மாமனார், அவருக்குத் தெண்டனிட்டு, ”தேவரீர், அத்துழாயுடன் அனுப்பிய வித்வானைத் திரும்ப அழைத்துக்கொள்ள வேணும் –” என்று விண்ணப்பித்தார்.
அதற்கு, எம்பெருமானார், ” அவரைத் தவிர வேறு வேலைக்காரர் எம்மிடம் இல்லை—
அவரைப் பிடிக்காவிடில் நாமே வருகிறோம்—” என்கிறார்.
பதறிப்போன அத்துழாயின் மாமனார், ” எங்களுக்கு, வேலைக்காரர்களே வேண்டாம்—
எங்களை மன்னித்து அந்த வித்வானைத் திரும்ப அழைத்துக்கொள்ளுங்கள் ” என்று தெண்டனிட்டார்.
எம்பெருமானாரோ அத்துழாயைக் கேட்டுக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட,
அத்துழாயின் மாமனார், திரும்ப ஊருக்கு வந்து , அத்துழாயிடம் ”உன் மாமியார் பேசியதை மனத்தில் வைத்துக்கொள்ளாதே —” என்று கெஞ்ச, அத்துழாயின் சம்மதத்திற்குப் பிறகே, எம்பெருமானார், முதலியாண்டானைத் திரும்ப அழைத்துக்கொண்டார்.

இந்த முதலியாண்டான்தான் , பின்னாளில், பொய்கை ஆழ்வாரின் முதல் திருவந்தாதிக்குத் தனியன் அருளிச் செய்தார்.

தனியனின் அர்த்தச் சுருக்கம்

தாழை மரங்களோடே சேர்ந்து இருக்கிற, ரம்யமான உத்யான வனங்களாலே சூழப்பட்டிருக்கிற ,முக்தி தரும் நகரேழில் முக்கியமாய்த் தேனெடுத்த சோலை சூழ்ந்த திருக்கச்சி நகரில் ,திருப்பொய்கையில், ஒரு தாமரைப் பூவில் வந்து அவதரித்து அருளியவர் என்றபடி—–
பொய்கைப்பிரானை , கவிஞர் பேரேறு , என்கிறார்.
இவர் கவிசிரேஷ்டர் —ஆதிகவி—முதல் மூன்று ஆழ்வார்களில் முதன்மையானவர்.
இதனால், தமிழில் பாடும் கவிஞர்களுக்கு, இவரே –இவரின் பாசுரங்கள்—கவி லக்ஷணம்
என்கிறார்.

வையத்து அடியவர்கள் வாழ—–என்றதால்,
இப்பூமியிலே , பகவானின் அடியார்களான பாகவத ஸம்ருத்தி ஏற்பட்டு அவர்கள் வாழ —-

அருந்தமிழ் நூற்றந்தாதி என்றது—–
அரிதான வேதப்பொருளை, தமிழில் ”வையம் தகளியா —-” என்று தொடங்குகிற
நூறு பாட்டுக்களை உடைய திருவந்தாதி —-என்றபடி

பரிந்து படி விளங்கச் செய்தான்—-என்றதால் ஆழ்வார் நித்யஸூரி .
வையம் தகளியான ப்ரம்மாண்ட விளக்கை ஏற்றி உலகத்து இருளனைத்தும் போக்கினார். எம்பெருமானோ பரம க்ருபையினாலே பூமியிலுள்ள அஜ்ஞானம்
எல்லாம் தீர்ந்து, ப்ரகாசிக்கச் செய்தருளினார்—-

நாலாயிரத் தனியன்களுக்கு, வ்யாக்யானம் செய்த பெரியோர்கள்,
இந்தத் தனியன், இதற்கடுத்த தனியனான ,
”என் பிறவி தீர ————–”
இரண்டையும் சேர்த்து வ்யாக்யானம் செய்திருக்கிறார்கள்.
அதை, அடுத்த தனியனின் இறுதியில் பார்ப்போம் .

வளரும்—-

தனியன்–32
————————-

என் பிறவிதீர இறைஞ்சினேன் இன்னமுதா
அன்பே தகளியளித்தானை——-நன்புகழ்சேர்
சீதத்தார் முத்துக்கள் சேரும் கடல்மல்லைப்
பூதத்தார் பொன்னங்கழல்

இத் தனியனை அருளியது திருக்குருகைப்பிரான்பிள்ளான்.
இவர் பெரிய திருமலை நம்பியின் 2வது திருக்குமாரர்.
கலி 4136க்கு நேரான கி.பி. 1034ல் ஐப்பசி மாத பூராட நக்ஷத்திரத்தில்,
அவதரித்தார். நம்பிகள், இவருக்கு, ” பிள்ளான் ” என்று திருப்பெயரிட்டார்.
எம்பெருமானார், பெரிய திருமலைநம்பியின் மருமான்.
இவர், பிள்ளானுக்கு பஞ்சஸம்ஸ்காரம் செய்துவைத்து, எல்லா விசேஷ
அர்த்தங்களையும் உபதேசித்தார்.

ஒருசமயம், எம்பெருமானார், தன்னுடைய மடத்தில், தனியாக உலவிக்கொண்டு,
மனத்துக்குள் ,ஆழ்வாரின் அமுதப் பாசுரங்களை அனுசந்தித்து, அந்த அர்த்தங்களுக்கு
ஏற்ப அபிநயமும் செய்துகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பிள்ளான், வெளிப்பக்க ஜன்னல் வழியே எம்பெருமானாரைப் பார்த்து, ”இப்போது, திருமாலிருஞ்சோலைமலை என்றேன் என்ன —-” என்ற திருவாய்மொழி அனுசந்தானமோ ( 10–8–1 ) என்று விண்ணப்பித்தார்.

அதைக்கேட்டு பரம சந்தோஷமடைந்த எம்பெருமானார், ”நம் பிள்ளானோ ”
என்று கேட்டுக்கொண்டே ,வாயிற்கதவைத் திறக்க, பிள்ளானும் உள்ளே வந்து தெண்டனிட ,எம்பெருமானார், இவரைத் தன்னுடைய ”ஞான புத்ரனா”க ஸ்வீகரித்து,
”திருக்குருகைப் பிரான் பிள்ளான் ” என்று திருநாமமிட்டார்.

இவரைக்கொண்டே திருவாய்மொழிக்கு வ்யாக்யானம் எழுதச் செய்து, இதற்கு ”பகவத்விஷயம் ”என்று பெயரிட்டு, இதனைக் ”காலக்ஷேப”க் க்ரந்தமாக கொள்ளும்படி நியமித்தார்.
திருவாய்மொழிக்கு , இதுவே முதல் உரைநூல். திருவாய்மொழி , ஸாமவேத சாரம்.
இவரே , எம்பெருமானாரால் ஏற்படுத்தப்பட்ட 74 ஸிம்ஹாஸனாதிபதிகளில் ஸ்ரீபாஷ்யம், பகவத் விஷயம் இரண்டுக்குமான உபய ஸிம்ஹாஸனாதிபதி.
திருக்குருகைப் பிரான் பிள்ளான் சரிதம் , தனியன் 6ல் கொடுக்கப்பட்டுள்ளது.

தனியனின் அர்த்த விசேஷம்

என் பிறவி தீர இறைஞ்சினேன் என்றது,
ஞானச் சுடர் விளக்கான திருவந்தாதியை அருளிச் செய்கையாலே, அஜ்ஞானத்தால் வந்த ஜென்ம பரம்பரை தீருகைக்காக ஆராதித்தேன்.—-என்றபடி–

இன்னமுதா அன்பே தகளி அளித்தானை —-என்றது—
தொண்டர்க்கு இன்னமுது உண்ணலாம்படி , ”அன்பே தகளி …” என்கிற ஞான தீபமான
திருவந்தாதியை அருளிச் செய்தவரான —என்றபடி–

-நன்புகழ்சேர் ,சீதத்தார் முத்துக்கள் சேரும் கடல்மல்லைப்
பூதத்தார் ——என்றது —-
நல்ல கீர்த்தியைப் பெற்றதுமாய் குளிர்ந்து பரம்பரை பரம்பரையாகப் பூர்ணமாய் விளையும் நல்முத்துக்கள் அம்பாரமாகச் சேரும்,
திருக்கடல்மல்லைத் திவ்யதேசத்தில் திருவதரித்த பூதத்தாழ்வாருடைய —என்றபடி—-

பொன்னங்கழல் —என்றது,
ரசிக்கும் அடியார்கள் யாவருக்கும், நன்கு பிரகாசிக்கும் அழகிய திருவடிகள்—-என்றபடி

பொன்னங்கழல் அளித்தானை —என்றும் பொருள் கொள்வர் —-
பொன்னங்கழல் , இறைஞ்சினேன் —என்றும் பொருள் கொள்வர்
இந்தத் திருவந்தாதியால், எழில் ஞான விளக்கேற்றி, இருளனைத்தும் போக்கிய பூதத்தாழ்வாருக்கு, ஒரு கைம்மாறும் காணகில்லா அடியேன் , அவருடைய திருவடிகளைப் பற்றினேன்—– என்றபடி

” அபச்யந்தீ ப்ராஹ்மணஸ்ய ப்ரியமந்யத் நநாமஸா —” என்று ஸ்ரீமத் பாகவதத்தில்,
உள்ளது.நல்ல செய்தியைக் கொண்டு வந்த ப்ராஹ்மணோத்தமருக்கு, ருக்மிணிப்
பிராட்டி, தன்னால் அளிக்கக்கூடிய உசிதமான பொருள் ஒன்றும் காணாமையால்,
அந்த ப்ராஹ்மணோத்தமரை ஸேவித்தாளாம் –இந்த த்ருஷ்டாந்தத்தை இங்கு கண்டு கொள்வது–

—————————————————————————————————————————————-

நாலாயிரத் தனியன்களுக்கு, வ்யாக்யானம் செய்த பெரியோர்கள்,
இந்தத் தனியன், இதற்கடுத்த தனியனான ,
”என் பிறவி தீர ————–”
இரண்டையும் சேர்த்து வ்யாக்யானம் செய்திருக்கிறார்கள்.
அதை, அடுத்த தனியனின் இறுதியில் பார்ப்போம் என்று முந்தைய தனியனில் சொல்லி இருந்தேன்
இது ”பன்னீராயிரப்படி” யில் உள்ளது—-
இந்த அர்த்தானுபவத்தை இப்போது அனுபவிப்போம்—-

இதற்கு முன்பு சொல்லப்பட்ட தனியனான
”கைதைசேர் —–” என்பதும்
இப்போது சொல்லப்பட்ட ” என் பிறவி தீர—-” என்கிற தனியனும்,
” பிள்ளான் ” அருளிச் செய்ததாயிருக்கும் என்றும்,
ஒருக்கால், எம்பெருமானார் திருநாட்டுக்கு எழுந்தருளிய பிறகு, அவர் நியமனப்படி,
அனைவரும் , எம்பெருமானாரின் ஞான புத்ரரான திருக்குருகைப் பிரான்பிள்ளானிடம்
பணிந்து காலக்ஷேபாதிகளை பண்ணிக்கொண்டிருக்க, பிள்ளானும் , முதலிகளோடே ( முதலியாண்டான் )

”ஆராவமுதே—-” என்கிற திருவாய்மொழியைக் கொண்டு நாலாயிர திவ்ய பிரபந்தங்களையும், திருமந்திர மந்த்ரார்த்தங்களையும் , நாதமுனிகள் முகமாக அவ்யாஹதமாயிருக்கும்படி பண்ணிவைத்து, ஸ்ரீவைஷ்ணவ ஸித்தாந்த ஸ்தாபகரான ஆராவமுதாழ்வானை மங்களாசாஸனம் பண்ணுவதாய் , திருக்குடந்தையில் எழுந்தருளி, கோமளவல்லித் தாயாரையும் , ஆராவமுதாழ்வாரையும் திருவடி தொழுது, அவர்கள் அழகில் ஈடுபட்டு , ”என் அமுதினைக் கண்ட கண்கள் மறறொன்றினைக் காணாவே—-” என்று அனுசந்தித்து, பெரும் தேவியானது கொண்டு பேரருளாளரானாப் போலே , நம் பேரருளாளரானது கொண்டு பெரும்தேவியானாப்போலே ,இவள் கோமளவல்லியானது கொண்டு ஆராவமுதானார் என்றும், ஆராவமுதனானது கொண்டு
கோமளவல்லியானாள் என்றும், ”திருக்கண்டேன்–” என்றது, கோமளவல்லி என்றும்,
”பொன்மேனி கண்டேன்–” என்றது, ஆராவமுதன் என்றும், அவர்கள் விஷயத்தில், ”தொட்ட படையெட்டும் சார்வு நமக்கு—” என்கிற பாட்டுக்களில் குணானுபவம் பண்ணி, அத்திருவந்தாதி அர்த்தங்களை விசதமாக அருளிச் செய்ய ,முதலிகளும் கேட்டு மகிழ்ந்தருள , முன்பு நாதமுனிகளும் இத்தேவி பெருமான்களில் ஈடுபட்டு இத்திருவந்தாதி அர்த்தத்தை திவ்ய தம்பதிகளுடைய விபுத்வோபாயத்வாதி ஸமஸ்த கல்யாண குணங்களுக்கும், முக்ய ப்ரமாணமாக விவரித்தருள,அப்போது ,அவ்வர்த்தங்களில் ஈடுபட்டு , அவ்வாழ்வார் விஷயத்தில், க்ருதஜ்ஞதை தோற்ற,
”சீராரு மாடத் திருக்கோவலூரதனுள் —-” என்கிற பாட்டை குருகைக்காவலப்பன்
அருளிச் செய்தாரென்று எம்பெருமானார்பக்கல் கேட்டிருந்தோமே என்று பிள்ளான்
அவ்வர்த்தத்தை நெஞ்சில் கொண்டு இப்படிக்கொத்த அனுபவத்திற்கு , ”தமோரூபபாஹ்யாந்தர் விரோதிகளை நிராகரித்தருளின ” பொய்கை முனி பூதத்தார் –” திருவந்தாதிகளின் அர்த்தத்தில் ஈடுபட்டு, அவர்கள் திருவடிகளில் குடிகொண்ட நெஞ்சினராய்
”கைதைசேர் —-”, ”என் பிறவி தீர —” என்கிற இரண்டு பாட்டுக்களை அருளிச் செய்து,
”காவிரிக்கரைக் குடந்தையுள் கிடந்தவாறு எழுந்திருந்து பேசு வாழி கேசனே —”
என்று மங்களாசாஸனம் செய்தருளிய திருமழிசை ஆழ்வாரை ஒருக்கால் திருவடி தொழுது,அவர் செய்தருளின ”நான்முகன் திருவந்தாதி ” அர்த்தங்களை அருளிச்செய்ய அவ்வர்த்தத்தில் ஈடுபட்டு அவ்வாழ்வார் விஷயத்தில் க்ருதஜ்ஞதை தோற்ற, ” நாராயணன் படைத்தான் நான்முகனை –” என்கிற பாட்டை , சீராமப்பிள்ளை அருளிச் செய்ய , அத்தைப் பிள்ளான் கேட்டு உகந்தருள .மற்ற முதலிகளும் உகந்தருளினார்கள் என்று பன்னீராயிரத்தில் அருளிச் செய்தார்.

வளரும் —அடுத்த தனியன் –33

–தனியன்—33
————————–

சீராரும் மாடத் திருக்கோவலூரதனுள்
காரார்கருமுகிலைக் காணப்புக்கு—-ஓராத்
திருக்கண்டேன் என்றுரைத்த சீரான் கழலே
உரைக் கண்டாய் நெஞ்சே ! உகந்து.

இயற்பா 3ம் திருவந்தாதிக்கு, குருகைக்காவலப்பன் அருளிய தனியன்

குருகைக்காவலப்பன் , திருக்குருகூரில் ஒரு தை மாதத்தில் , விசாக நக்ஷத்ரத்தில்
அவதரித்தார். ( கலியுக ஆண்டு காணக்கிடைக்கவில்லை )
ஸ்ரீமந் நாதமுனிகளை ஆச்ரயித்து,அவரிடமிருந்து ரஹஸ்யார்த்தங்களை க்ரஹித்தார்.
இவற்றில் முக்யமானது , ”யோகரஹஸ்யம் ” என்பது.

ஸ்ரீமந் நாதமுனிகள் , தன்னுடைய சீடர் புண்டரீகாக்ஷர் என்கிற உய்யக்கொண்டாரிடம்
”யோகரஹஸ்யத்தை”க் கற்றுக்கொள்ள நியமித்தார். அப்போது அவர் ,
”பிணம் கிடைக்க, மணம் புரிவாருண்டோ —அடியேன் எப்படி ஆனாலும்
பரவாயில்லை—இவ்வுலகம் உய்ய திவ்ய ப்ரபந்தங்களை உபதேசித்து
அருளவேணும் ” என்று விண்ணப்பிக்க, நாதமுனிகள் மகிழ்ந்து
” நீரே உலகையும், உலகை உடைய ஸ்ரீமந் நாராயணனையும் ,அவரைப் புகழும்
அருளிச் செயல்களையும், அவற்றைப் பெற்ற அடியேனையும் உய்யக்கொண்டவர் –”
என்று பாராட்டினார். அதுமுதல், இவர் உய்யக்கொண்டார் என்று அழைக்கப்பட்டார்.
நாலாயிரத்தையும், அவற்றின் உட்கருத்துக்களையும் உபதேசமாகப் பெற்றார்.

ஸ்ரீமந் நாதமுனிகள், உய்யக்கொண்டாரிடம், தனக்குப் பிறகு தனது குமாரர் ஈச்வர முனிக்கு ஒரு குமாரன் ஜனிப்பான் என்றும், அவனுக்கு , ”யமுனைத் துறைவன் ” என்று திருநாமமிட்டு, அவனுக்கு, சகல சாஸ்த்ரங்களையும் , வைணவ தரிசன உட்கருத்துக்களையும் உபதேசிக்குமாறும், அவனே ”வைணவதர்சனத்தின் காவலராக” விளங்குவான் என்றும் கட்டளையிட்டார்.

இந்த உய்யக்கொண்டாரின் சீடர்கள், மணக்கால்நம்பி உள்ளிட்ட ஐவர் .
உய்யக்கொண்டார் , தனது இறுதிக் காலத்தில், தனது சிஷ்யரான மணக்கால் நம்பியிடம்
தனது ஆசார்யரான ஸ்ரீமந் நாதமுனிகளின் நியமனத்தைக் கூறி , யமுனைத் துறைவன்
என்கிற ஆளவந்தாருக்கு, எல்லா ரஹஸ்யார்த்தங்களையும் உபதேசிக்குமாறு பணித்தார்.

மணக்கால்நம்பி, ஆளவந்தாரைத் திருத்திப் பணிகொள்ள , தூதுவளைக் கீரையைத்
தினமும் கொடுத்து, பரிசிரமப்பட்டு , அவரை அழைத்துக் கொண்டுவந்து திருவரங்கன் திருமுன்பு நிறுத்தினார். ஆளவந்தார், அடியோடு மாறினார். அவருக்கு, எல்லா ரஹஸ்ய அர்த்தங்களையும் உபதேசித்தார் , அப்போது தனக்கு அந்திமக்காலம் நெருங்குவதை உணர்ந்தார்.
ஆளவந்தாரிடம், ”உமது பிதாமஹன் —ஸ்ரீமந் நாதமுனிகள்—அனுஷ்டித்து உபதேசித்துச் சென்றிருக்கும் அஷ்டாங்க யோகரஹஸ்யத்தை , குருகைக்காவலப்பனிடம் அறிந்து கொள்வீராக ”’ என்று கட்டளையிட்டார்.

ஆளவந்தார், அந்தக் கட்டளையை ஏற்று, குருகைக்காவலப்பன் எழுந்தருளியிருக்கும்
வீரநாராயணபுரம் (காட்டுமன்னார்கோயில் ) சென்றார். அப்போது, குருகைக்காவலப்பன் யோகநிலையில் இருக்க, அவரது நிஷ்டைக்குப் பங்கம் ஏற்படுத்தவேண்டாம் என்று ஆளவந்தார் ஒதுங்க, அப்போது,
”இங்கு சொட்டைக் குலத்தார் யாரேனும் உண்டோ ? ” என்று குருகைக்காவலப்பன் கேட்க, ஆளவந்தார், ”அடியேன் –” என்று பணிந்து,
”தேவரீருக்கு, அடியேன் இங்கு வந்தது தெரியாதிருக்க ஒதுங்கியிருக்க, இதை அறிந்து
அழைத்தது எவ்வாறு —” என்று கேட்க, குருகைக்காவலப்பன் பதிலிறுத்தார்.

”அடியேன், பெருமாளுடன் அவருடைய லீலா ரஸத்தை யோகநிஷ்டையில்
அனுபவித்துக்கொண்டிருக்கும்போது,பிராட்டியே வந்து தனது முலைத்தடங்களால்
நெருக்கினாலும், பொருட்படுத்தாத எம்பெருமான், அடியேனுடைய தோள்களை
அழுத்தி, அமுக்கி, நேரே எட்டி எட்டிப் பார்த்தான். அப்போது, பிராட்டியை விடவும்
அவனுக்கு மிக மிக நெருக்கமானவர்கள் வந்திருக்கக்க்கூடும் என்று உணர்ந்தேன் .
அந்த அதி ஆச்சர்யமான நெருக்கம், அடியேனின் ஆசார்யரான ஸ்ரீமந் நாதமுனிகளின்
சொட்டைக் குலத்தாரைத் தவிரக் வேறு யாராக இருக்கமுடியும்—-”’ என்று பெருமையுடன் சொன்னார் .

இதை, ஸ்ரீ ராமானுஜ வைபவம் கூறுகிறது—-( வடிவழகிய நம்பிதாஸர் )

கருமுகில் வண்ணன் என்னுள் கலந்த நாள் கமலவல்லி
திருமுலைத் தடங்களாலே சேர்ந்துற அணைத்தால் அன்னாள்
அருள்முகம் பாராதென்னோடு அனுபவித்தொழுகி வாழும்
பொருவிலா மாயன் முக்கால் புண்ணியக் கொழுந்தே அன்னாய்

பின்பு நீ நிற்றலால் என் பிடரியை மடக்கிப் பின்னே
இன்புறப் பார்ப்பான் மீண்டும் இருப்பன் அக்கொழுவன் கண்ணன்
அன்ப ! மற்றவைதான் சொட்டைக் குலத்தவர்க் கன்றிச் செய்யான்
என்பதை அறிந்தம் மேலோர் எய்தினர் உளரோ என்றேன்

மிகவும் மகிழ்ந்த ஆளவந்தார், தமது ஆசார்யரான மணக்கால் நம்பியின்
கட்டளையைக் கூறி , தனக்கு யோகரஹஸ்யத்தை உபதேசிக்குமாறு விண்ணப்பித்தார்.

தெண்டனிட்ட ஆளவந்தாரை, முடிபிடித்துத் தூக்கி எடுத்து , ஆசீர்வதித்த
குருகைக்காவலப்பன் ”அடுத்த தைப்பூச தினத்தில், நண்பகலில்,அடியேன் ஆசார்யன் திருவடியில் சேர்வதால், அதற்கு முன்பு யோகரஹஸ்யத்தை உபதேசிக்கிறேன்.”என்று சொல்லி,நாள் குறிப்பிட்டு, ஓலையில் எழுதிக் கொடுத்தார்.

ஆளவந்தார், குருகைக்காவலப்பனை ஸேவித்துத் திருவரங்கம் திரும்பினார்.

கொஞ்ச காலம் சென்றது—-
திருவரங்கச் சுற்றத்தில், திருவரங்கப் பெருமாளரையர் , ”கெடுமிடர் ”
என்கிற திருவாய்மொழிப் பாசுரத்துக்கு அபிநயம் செய்யும்போது, அரங்கநகரப்பனை
சேவித்துக் கொண்டிருந்த ஆளவந்தாருக்கு, திருவனந்தபுரத்து ,அனந்தபத்மநாபன்
நினைவுக்கு வர, உடனே அரங்கனின் நியமனம் பெற்று, திருவனந்தபுரம் சென்று
அந்த எம்பெருமானை சேவித்தார். அச்சமயம், குருகைக்காவலப்பன் நியமனம்
நினைவுக்கு வர, அவர் கொடுத்த பட்டோலையைப் பார்த்தார். அந்த வேளையும் ,
யோகரஹஸ்யம் பெறுவதற்கு நியமித்த வேளையும் ஒன்றாய் இருந்தது.
ஆளவந்தார் மிக வருந்தினார்.

குருகைக்காவலப்பன் , ஆளவந்தாருக்கு யோகரஹஸ்யத்தை உபதேஸிக்கமாலேயே
ஆசார்யன் திருவடி அடைந்தார்.

தனியனின் அர்த்தச் சுருக்கம்

சீராரும் மாடத் திருக்கோவிலூரதனுள் —என்றது—
சீர்பொருந்தின மாடங்களை உடைய திருக்கோவிலூர் என்கிற திவ்ய தேசம் என்றபடி–

காரார் கருமுகிலைப் காணப்புக்கு —-என்றது—
”வையம் தகளி –”, ” அன்பே தகளி –” என்கிற விளக்குகளாலே ,பாஹ்யாந்தரங்களான
அந்தகாரங்கள் எல்லாம் தீர்ந்தபின்பு, ” தழைகளும் தொங்கலும் ” என்கிற பாட்டின்படியே குளிர்த்தியாலும் , நிறத்தாலும் கண்டவர் , தம் மனம் வழங்கும்படி திருமேனி சோபை உடைய கோபபுராதி நாதனை, ப்ரத்யக்ஷீகரிக்கைக்காக என்றபடி—

”ஓரா ” —என்றது—
எம்பெருமானைப் ப்ரத்யக்ஷீகரித்து அவ்வனுபவத்தை எல்லாரும் அறிந்து உஜ்ஜீவிக்கும்படி உபகரிக்கைக்காக மனனம் பண்ணினார் என்றபடி—

”திருக்கண்டேன் என்றுரைத்த சீரான் கழலே —” என்றது—
திருக்கண்டேன் என்று ஆரம்பிக்கும் திருவந்தாதியை அருளிச் செய்ய,
காருண்யாதி குணபூர்ணரான மாமலராள் தன்னொடு மாயனை
கண்டமைகாட்டும் , தமிழ்த் தலைவன்—பேயாழ்வாருடைய திருவடிகளை என்றபடி—

” நெஞ்சே உகந்து உரைக்கண்டாய் ”—என்றது–
இப்படி வச்யமான நெஞ்சே ! அநந்ய ப்ரயோஜனமாய் உகந்து ,வாசிகமாகவும்
அவர் திருவடிகளைச் சரணம் அடை —–என்றபடி—

இத்தால், மூவரிலும் ( பொய்கை, பூதம், பேயாழ்வார் )—இவரே–பேயாழ்வாரே —
ஸ்ரீமானான எம்பெருமானை உள்ளபடியே கண்டு, அத்தை உலகறியும்படி
பண்ணிவைத்தவராகையாலே , இம்மூவரால் வெளியிடப்பட்ட ஸ்ரீமத் கடாக்ஷமும்
ஸித்திக்கும் —-என்றபடி—-

தனியன்—-34

——————————-

நாராயணன் படைத்தான், நான்முகனுக்கு
ஏரார் சிவன் பிறந்தான் என்னும் சொல் —-சீரார்
மொழி செப்பி வாழலாம் நெஞ்சமே ! மொய்பூ
மழிசைப் பரனடியே வாழ்த்து

திருமழிசைப் பிரானின் , நான்முகன் திருவந்தாதிக்குத் தனியனை
அருளியவர், ஸ்ரீ ராமப்பிள்ளை

இவரது சரித்ரம் ,”பட்டரோ”டு சேர்ந்த சரித்ரம்.

கூரத்தாழ்வான் ( இவரது சரிதம் தனியன் 3 மற்றும் 4ல் உள்ளது )
திருவரங்கவாசியாகி, எம்பெருமானாரைச் சரண் அடைந்து, தினமும்
உஞ்சவ்ருத்தி எடுத்து, தேவிகள்மூலமாக அதைத் தளிகை செய்து,
திருவாராதனப் பெருமாளுக்கு நிவேதனம் செய்து, ப்ரஸாதத்தைத்
தேடிவரும் பாகவதர்களுக்கு அளித்து, தாமும் உண்டு, தேவியான
ஆண்டாளும் எஞ்சியதை உண்டு, காலம் கழித்த சமயம்.

ஒரு நாள் —

-அன்று , திருவரங்கத்தில் சொல்லொணா மழை—கொட்டத்துவங்கிய மழை,
-தொடர்ந்தது-. கூரத்தாழ்வானால், அன்று உஞ்சவ்ருத்திக்கு வெளியே செல்ல
இயலவில்லை. திருவாராதன மூர்த்திக்கு , துளசியும், தீர்த்தமும் சமர்ப்பித்து,
க்ரந்தங்களில் தன்னை மறந்து ஈடுபட்டார்.இரவு வந்தது.பட்டினியோடு
படுத்தார்.
தேவிகள் ஆண்டாளும் பட்டினிதான்.ஆனால், ஆண்டாளுக்கோ, தனது நாதன் ,
பட்டினியோடு படுத்திருப்பது பொறுக்கவில்லை. பெரிய செல்வந்தராக,
கூரம் என்கிற திவ்ய தேசத்தில், அடுக்கு மாளிகையில், தங்கத் தட்டிலேயே
உணவை உண்ட கூரத்தாழ்வான், வந்த விருந்தினர்களுக்கு எல்லாம்
நல்லடிசில் நல்கிய கூரத்தாழ்வான், இப்போது பட்டினியுடன் இருப்பதை
ஆண்டாளால் சகித்துக்கொள்ள முடியவில்லை.
இரவு நேரம்—திருவரங்கனுக்கு அரவணைப் பிரசாதம் அமுது செய்யப்படும் நேரம்.
அதற்கான ”கண்டாமணியின் ” சப்தம் கேட்க ஆரம்பித்தது.
ஆண்டாள், அந்த ஒலியைக் கேட்டாள் . அவளையும் மீறிப் புலம்பினாள்

”ஹே—ரங்கநாதா—குழந்தைகள் பசியோடு இருக்கும்போது, பெற்றவர்கள்
உணவை ஏற்பார்களா ? இங்கே, உம்மையே நம்பி உமக்கே ஆட்செய்யும்
உமது பக்தர் பட்டினியால் துவள, நீர் குதூகலத்துடன் உணவு உண்ணுகிறீரோ ?”
என்று மனத்துக்குள் நினைத்தாள் .

இது, திருவரங்கன் அறியாததா ! இது அவனது லீலைதானே ! ஒரு காரியத்தை
உத்தேசித்த லீலை !
உடனே, அர்ச்சகரிடம் ஆவேசித்தான்—-கட்டளை பிறந்தது—அர்ச்சகர் சொல்படி,
குடை, சாமரம், தீபம், வாத்யம் இவற்றுடன் உத்தமநம்பி என்கிற கோவில் மேற்பார்வையாளர் அரவணைப் பிரசாதத்தை எடுத்துக்கொண்டு, கூரத்தாழ்வான் திருமாளிகைக்கு வந்து, ஆண்டாளின் திருவணைப் பிரசாத கூடையைக் கொடுத்து வணங்கினார்.சப்தம் கேட்டு, வெளியே வந்து பார்த்த கூரத்தாழ்வான், ”மகா ப்ரஸாதம் ” என்று மகிழ்ந்து , தனக்கும், தன்னுடைய பத்னிக்கும் இரண்டு உருண்டைப் ப்ரஸாதம் போதும் என்று சொல்லி, அவற்றைமட்டும், ஸ்வீகரித்துக்கொண்டார்.

உத்தமநம்பி அங்கிருந்து அகன்றதும், தேவிகளிடம்,
”இன்று அரங்கனின் அநுக்ரஹம் இவ்விதம் இருக்கக் காரணம் என்ன ? ” என்று கேட்டார்.தேவிகள், தன்னுடைய மனத்தில் தோன்றிய ப்ரலாபத்தைச் சொல்ல, ஆழ்வான்,
”குழந்தைகள், பெற்றோரிடம் எங்களைக் காப்பாற்றுங்கள் என்று கேட்பார்களா ? அவன் க்ருபாநிதி –அவனிடம் பூர்ண விசுவாசத்துடன் அல்லவோ இருக்க வேண்டும் ?” என்று புத்தி சொல்லி, அரவணைப் ப்ரசாதத்தில் சிறிதளவு மட்டில் எடுத்துக்கொண்டு, மீதியை ,
பத்னியிடம் கொடுத்துவிட்டார்.

அந்தப் ப்ரஸாதத்தை உட்கொண்டதன் பயனாக, அவர்களுக்கு இரு குழந்தைகள் தோன்றினார்.
அவர்களே ”பராசர பட்டர் மற்றும் ”வேத வ்யாஸ பட்டர் ”. கலி 4189 ( கி.பி. 1087 ) வைகாசி அனுஷம்–இரட்டைக் குழந்தைகள். பராசர பட்டரை , நம்பெருமாள் ஸ்வீகார புத்திரனாக ஏற்றுக்கொண்டார்.(தனியன் சரிதம்–7ம் 8ம் )
வேதவியாஸ பட்டரே ,ஸ்ரீராமப் பிள்ளை என்று அழைக்கப்பட்டார்.

இருவருக்கும் விவாஹ சமயம் நேர்ந்தபோது, ஆண்டாள், ஆழ்வானிடம் சொல்ல,
ஆழ்வான், எம்பெருமானாரிடம் விண்ணப்பிக்க, எம்பெருமானார் தமது ஆசார்யரான
பெரியநம்பிகளின் உறவினரானஉத்தமநம்பியின் குமாரத்தியைக் கேட்கலாம் என்று சொல்ல,ஆனால் உத்தமநம்பி மறுத்துவிட, அதன்பிறகு, ஆழ்வான் நம்பெருமாளிடம் ப்ரார்த்திக்க , நம்பெருமாள் ,”அந்தக் கவலை, உமக்கெதற்கு ?
நாமன்றோ கடமைப் பட்டுள்ளோம்—” என்று பதிலிறுத்து அன்று இரவு உத்தமநம்பியின்
கனவில் தோன்றி,எமது புத்ரனான பட்டருக்கு, உமது பெண்ணை விவாஹம் செய்து கொடும்—-நீரல்லவோ அன்று என்னுடைய அரவணைப் ப்ரஸாதத்தை ஆழ்வான் தம்பதியருக்குக் கொடுத்தீர் ?இப்போது , இதுவும் என் நியமனம் —” என்று சொல்ல, உத்தமநம்பி ,தன்னுடைய”அக்கச்சி ” ”மன்னி ” என்கிற பெயர்கள் உள்ள இரண்டு பெண்களையும் முறையே,பட்டருக்கும் , ஸ்ரீ ராமப்பிள்ளைக்கும் விவாஹம் செய்து கொடுத்தார்.

இந்த ஸ்ரீ ராமப்பிள்ளைதான், திருமழிசைப் பிரானின் நான்முகன் திருவந்தாதியில்
ஆழங்கால்பட்டு, இத்தனியனை அருளினார் என்பர்.

தனியனின் சுருக்கமான அர்த்தம் ——-

நாராயணன் படைத்தான், நான்முகனுக்கு ஏரார் சிவன் பிறந்தான் என்னும் சொல் —-சீரார் மொழி செப்பி வாழலாம் நெஞ்சமே ! ” —– என்றது

ஏ –நெஞ்சமே—-மனஸே 1 நாராயணன், தன்னுடைய நாபியில் ப்ரும்மாவைப் படைத்தான்;அந்த சதுர்முகனுக்கு , ” ஆவாம்தவாங்கே ஸம்பூதொள ” என்றபடிக்கும்,
”வைஷ்ணவா நாமாஹம் ” என்று சொல்லுகைக்கும், ஏர்த்தபடி, ” சிவனும் ” பிள்ளையானான்.
நான்முகனை நாராயணன் படைத்தான்; நான்முகனும்,
தான்முகமாய்க்குச் சங்கரனைத்தான் படைத்தான் —–யான்முகமாய்
அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ்பொருளை
சிந்தாமல் கொண்மின் நீர் தேர்ந்து
என்று துவங்கி,
” இனி அறிந்தேன் ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம்
இனி அறிந்தேன் எம்பெருமான் 1 உன்னை —இனியறிந்தேன்
காரணன் நீ கற்றவை நீ கற்பவை நீ நற்கிரிசை
நாரணன் நீ ,நன்கறிந்தேன் நான்
என்று முடியும் குணபூர்ண திவ்ய ஸூக்தியாகிய திருவந்தாதியை
அநுஸந்தித்து , அவாவற்று வீட்டிலும் வாழலாம் —என்றபடி.

இதற்குச் செய்வது யாது ?

மொய்பூ மழிசைப் பரனடியே வாழ்த்து—என்றது—–
விரும்பி ஆசைப்படத்தக்க, திருமழிசைப் பிரானுடைய திருவடிகளையே ஸ்தோத்ரம் செய் —-
என்றபடி

வளரும்—–அடுத்து 35—

தனியன்—35
——————————

கருவிருத்தக் குழி நீத்தபின் காமக்கடுங்குழி வீழ்ந்து
ஒரு விருத்தம் புக்குழலுறுவீர் ! உயிரின் பொருள்கட்கு
ஒரு விருத்தம் புகுதாமல் குருகையர் கோன் உரைத்த
திருவிருத்தத்து ஓரடி கற்றிரீர் திருநாட்டகத்தே

ஸ்ரீ நம்மாழ்வார் அருளிய திருவிருத்தத்துக்கான தனியன்.
அருளியவர், கிடாம்பியாச்சான் —இவர், பெரிய திருமலைநம்பிகளின்
மருமானாவார். அதாவது, இவரது சகோதரியை மணந்தவர்,
பெரிய திருமலைநம்பி. —
இவர், ஒரு சித்திரை மாத ஹஸ்தத்தில் அவதரித்தார்.
இவருக்கு, ”ப்ரணதார்த்திஹரன் ” என்கிற திருநாமமும் உண்டு.

( இந்தத் தனியனும் , இதற்கடுத்துவரும் திருவாசிரியம்,
பெரிய திருவந்தாதி–ஆக மூன்றுக்கும், தனியன்களை
ஆளவந்தார் அருளிச் செய்ததாயிருக்கும் என்று ஒரு க்ரந்தத்தில்
காணக் கிடைக்கிறது. )

எது எப்படியிருப்பினும், நாம், இத்தனியன் , ஆச்சான் அருளியதாகவே
கருதி , மேற்கொண்டு சொல்வோம்—-

பெரிய திருமலைநம்பியின் இரண்டாவது குமாரரான ”பிள்ளானும் ”
( கலி 4163, பிலவ , ஐப்பசி புனர்வஸு ) இவரும் , பெரிய திருமலைநம்பிகளிடம் ,
ரஹஸ்யார்த்தங்களை ,”காலக்ஷேபமா”க அறிந்தனர்.

ஒருசமயம், பெரியகோயில் ஸ்ரீ வைஷ்ணவர்கள், திருமலைக்கு வந்து,
திருமலையப்பனைத் திருவடி தொழுது, பெரிய திருமலைநம்பிகளின்
மடத்துக்கு வந்து ,தெண்டனிடும்போது, கோயில் வ்ருத்தாந்தத்தைப்
பெரிய திருமலை நம்பிகள் கேட்க, அந்த ஸ்ரீ வைஷ்ணவர்கள்,
எம்பெருமானாரின் வைபவத்தை எடுத்துச் சொன்னார்கள்.

பெரிய திருமலை நம்பிகள் மிகவும் மகிழ்ந்து, தன்னுடைய குமாரன்
”பிள்ளானை”யும் , எம்பெருமானாரின் திருவடிகளிலே
”த்வரை ” பட்டுக்கொண்டிருக்கிற கிடாம்பி ஆச்சானையும்
திருவரங்கத்துக்கு எம்பெருமானாரிடம் அந்த ஸ்ரீ வைஷ்ணவர்களுடன் அனுப்பினார்.

ஆச்சான் மிகவும் குதூகலத்துடன், பிள்ளானுடனே பெருமாள் கோவிலுக்கு
வந்து, அங்கு பேரருளாளனைச் சேவித்து, அங்கு இருக்கும் தன்னுடைய தாயாரிடம்
இவ்விவரங்களையெல்லாம் சொல்லி, அதன்பிறகு,பிள்ளானும் , ஆச்சானும் —
திருவரங்கம் வந்து பெரிய பெருமாளை ஸேவித்து, பிறகு மடத்துக்கு வந்து
எம்பெருமானார் திருவடிகளிலே விழுந்து கிடக்க,
எம்பெருமானார், பெரிய திருமலைநம்பிகளின் ஸந்நிதியில் நடந்த வ்ருத்தாந்தங்களைக்
கேட்டு , பிள்ளானைக் குளிரக் கடாக்ஷித்து, ஆச்சானை முடிபிடித்து எடுத்து,
அவரைப் பார்த்து, ”நம்மிடத்தில் ஆளவந்தாரும் நம்பிகளும் செய்தருளிய
கடாக்ஷ விசேஷம் உண்டு—அவை, உமக்கு, ஸ்வசித்தமாக இருக்கும் ” என்று அருளி
ஆச்சானுக்கு ஸமஸ்த விசேஷ அர்த்தங்களைப் ப்ரசாதித்து அருளினார்.

எம்பெருமானார், திருவரங்கச் செல்வனுக்குக் கைங்கர்யங்களில் எந்தத் தவறும்
ஏற்படாதபடி கண்டிப்புடன் இருந்த சமயம் ——
இந்தக் கண்டிப்புகளை வெறுத்த சில கோவில் கைங்கர்யபரர்கள்,
உடையவரை , அவரது உணவில் விஷம் வைத்துக் கொல்லச் சதி செய்தனர்.
தினந்தோறும் , உடையவர் ”பிக்ஷை ” எடுக்கும்போது, ஒரு வீட்டு பிக்ஷையில்
நஞ்சைக் கலக்குமாறு செய்தனர். அப்படி, பிக்ஷையிட்ட அந்த மாது,
பிக்ஷையிட்ட மறுகணம் அவரது திருவடியில் விழுந்து நமஸ்கரித்து, கலங்கிய
கண்களுடன் சடக்கென்று திரும்பி வீட்டுக்குள் செல்ல, உடையவருக்கு ,
இந்த சம்பவம் விநோதமாகப் பட , ”பிக்ஷையிட்டவர் விழுந்து ஸேவித்தால்
பிக்ஷை பெற்றவர் அன்று முழுதும் உபவாஸம் இருக்கவேணு”மென்ற விதிப்படி,
பிக்ஷை பெற்ற உணவை உண்ணாமல் வடதிருக்காவேரிக்குச் சென்று
அங்கு ஜலத்தில் அந்த உணவை உதறினார் . அப்போது கரையில் சிந்திய
அன்னத் துகளை , ஒரு காக்கை உண்டு , சடக்கென இறந்தது.

உடையவர் தன்னுடைய மடத்துக்குத் திரும்பி வந்தார்.இந்த நிகழ்ச்சியை
ஒருவரிடமும் சொல்லாமல், அதைப்பற்றிச் சிறிதும் கவலையோ, தன்னைக்
கொல்ல முயன்றவர்களிடம் துளியும் வெறுப்போ கொள்ளாமல் ,பூரண
உபவாஸம் மேற்கொண்டார்.
சீடர்கள் கலங்கினர்; திருவரங்கச் சுற்றம் கலங்கியது; பெரியோர்கள்
உபவாஸத்தைக் கைவிடக் கோரியும் , உடையவர் இணங்கினாரில்லை.
அவரது திருமேனி வாடி, நடக்கவும் சக்தி அற்றவரானார். இச்செய்தி ,
திருக்கோட்டியூர் வாழும் நம்பிகளுக்குத் தெரிந்ததும் ,
திருக்கோட்டியூர் நம்பி பதறினார். தனது வயோதிகத்தையும் பொருட்படுத்தாமல்,
திருக்கோட்டியூரிலிருந்து திருவரங்கத்துக்கு ஓட்டமும் நடையுமாக வந்தார்.

இந்தச் செய்தியைச் செவியுற்ற உடையவர், அவரை எதிர்கொள்ள,
திருவடிக்கு ரக்ஷை அணியாமல், அவசரம் அவசரமாக, தனது சிஷ்யர்கள்
பின்தொடர்ந்து வர, கடுமையான கோடையில் ,உச்சிப் பொழுதில்,
காவிரி மணல் ,செந்தணலாய்க் கொதிக்க, காவிரி ஆற்றின் நடுவே ,எதிரே வரும்
ஆசார்யனின் திருவடிகளில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தார்.
ஒரு மாதத்துக்கு மேலாக உபவாஸத்திலிருக்கும் ப்ரிய சிஷ்யன் ,
அதனால் திருமேனி வாடி நலிந்துள்ள ப்ரிய சிஷ்யன் —-அப்படியே விழுந்து கிடந்தார்.
நீண்ட நேரமாகியும் , திருக்கோட்டியூர் நம்பி, உடையவரை , ” போதும்—
எழுந்திரும் ” என்றும் சொல்லவில்லை; அவரைக் கையால் தூக்கவும் இல்லை.
உடையவரின் செக்கச் சிவந்த திருமேனி— உபவாஸத்தால் மெலிந்து வாடிய திருமேனி—
காவிரி மணலால் சுட்டெரிக்கப்படுவதைக் காணச் சகியாத , கிடாம்பி ஆச்சான்,
கண்களிலிருந்து நீர் கொப்பளிக்க, மிகவும் கோபத்துடன் ,ஓடிவந்து,
உடையவரின் திருமேனியைத் தன்மீது வாரிப் போட்டுக்கொண்டார்.

திருக்கோட்டியூர் நம்பியைப் பார்த்தார்—-” இது என்ன , சிஷ்ய , ஆசார்ய பாவங்காணும்?

உபவாஸத்தால் ஏற்கெனெவே மெலிந்து வாடியிருக்கும் அடியோங்களின்
எம்பெருமானாரின் திருமேனியை, அழகிய மல்லிகைப்பூ மாலையைத்
தணலில் இட்டு வாட்டுவதுபோல் இருக்கிறதே உமது நடவடிக்கை ?
பிக்ஷையில் விஷத்தைக் கலந்ததைவிட , மிகக் கொடியதாக
உள்ளதே உமது நெஞ்சம் ? –” என்று பொருமித் தள்ளினார்.

திருக்கோட்டியூர் நம்பிகள் மிகவும் சந்தோஷப்பட்டாராம்.
பதில் சொன்னார்—
”ஆச்சான்—-உம்மைத்தான் இதுவரை தேடினோம்—எம்பெருமானாரின்
திருமேனிமீது யாருக்குப் பரிவு என்றே சோதித்தோம்—அவரிடம் உமக்குள்ள
,அன்பும் பாசமும் அளவற்றது என்று உணர்ந்தோம்—-இனி எம்பெருமானார்,
பிக்ஷை எடுக்க வேண்டாம்– நீரே , தளிகை செய்து அவருக்குப் ”பிக்ஷை ”
சாதியும் —” என்று நியமித்துக்கொண்டே ,ஆச்சானையும் , அவர் அணைத்துள்ள
எம்பெருமானாரையும் பரிவுடன் ஒருசேர வாரி அணைத்து, கலகலவெனக்
கண்ணீர் சொரிந்தார் . இந்த நியமனத்தால், மிகவும் சந்தோஷமுற்ற
ஆச்சான் , இது அடியேனின் பாக்கியம் என்று சிரஸா வகித்து, இந்தக் கைங்கர்யத்தை
விடாமல் , பங்கம் வராமல் செய்து வந்தார்–”இதுவே மடப்பள்ளி மணம் ”
என்று பெருமை பெற்றது.

அடல்புள் அரசினும் அந்தணர் மாட்டினும் இன்னமுதக்
கடற்பள்ளி தன்னினும் காவிரி உள்ளம் உகந்த பிரான்
இடைப் பிள்ளையாகி உரைத்தது உரைக்கும் எதிவரனார்
மடைப்பள்ளி வந்த மணம் எங்கள் வார்த்தையுள் மன்னியதே —-

என்பார் ஸ்வாமி தேசிகன் தன்னுடைய ”பரமபத சோபாந ”த்தில் .

எம்பெருமானார் திருநாட்டுக்கு எழுந்தருளிய போது,
ஞான புத்ரனான ”பிள்ளான் ” இருக்க, உங்களுக்கு குறையுண்டோ
என்று கோயில் அனந்த கொத்துப் பரிஜனங்களுக்கும் அருளி, பிள்ளானையும்
ஆச்சானையும் அருகில் அழைத்து, சில விசேஷ அர்த்தங்களைப் ப்ரஸாதித்து
கோயிலுக்கு நேரே , பிள்ளான் மடியில் திருமுடியும் , ஆச்சான் மடியில் திருவடியுமாய்க்
கண்வளர்ந்தருளினார் என்று ”கோயில் வ்ருத்தாந்தம் ” கூறும் .

எம்பெருமானார் நியமனப்படி , கிடாம்பி ஆச்சான் , நல்லான் முதலிய முதலிகளோடே
திருநாராயணபுரத்தில் ஆழ்வார் , ஆசார்யர்களையும் ஆண்டாளையும்
ப்ரதிஷ்டிப்பித்து, தமக்குப் ப்ரஸாதித்த உடையவரின் திவ்ய மங்கள விக்ரஹத்தையும்
அங்கிருந்த மூல பேரத்தோடே ப்ரதிஷ்டிப்பித்து, திருவத்யயனோத்ஸவம்
முதலானவைகளை நடப்பித்து அருளினார்.

இவரை, ”பரமாஸ்திகாக்ரேஸர் ”, என்றும், ”எதிராஜ மஹாரஸிகர் ” என்றும்,
குருபரம்பரை கூறும்.
இவருடைய குமாரர் ”ராமாநுஜப் பிள்ளான் ” ( ஐப்பசி பூராடம் )
இவருக்கு, எம்பெருமானார் ப்ரஸாதித்த அர்த்தங்களையெல்லாம்,
விவரித்துச் சொல்லி, ”தர்ஸநப் ப்ரவர்த்தகர் ” ஆக்கினார்.
இவர் திருநாட்டுக்கு எழுந்தருளியபொது, இவரது குமாரர் ராமாநுஜப் பிள்ளானைக்
கொண்டு சரம கைங்கர்யங்களையெல்லாம் எங்களாழ்வான் முதலானவர்
நடப்பித்தார்கள்.

தனியனின் அர்த்தச் சுருக்கம்

கருவிருத்தக் குழி நீத்தபின் —– என்றது——-

கர்ப்ப வ்ருத்தியைப் பண்ணுகிற படுகுழியைக் கடந்தபின்பு –என்றவாறு–
கர்ப்பவாஸ , ஜென்ம, பால்ய, யௌவன , ஜரா மரண நரகங்கள் என்கிற ஸப்தாவஸ்தைகளில்
”அவஸ்தா த்ரயத்தை ” க் கழித்தபின்பு என்றபடி

காமக்கடுங்குழி வீழ்ந்து—-என்றது—-

யௌவனப் பருவத்தில் தொடங்கி, காமம், துயரம் கொடுப்பதாலே , அதிக் க்ரூரமான
படுகுழியாய் அதில் வீழ்ந்து —-என்றபடி—

ஒரு விருத்தம் புக்குழலுறுவீர் ! ——–என்றது—-

பரிகாச வார்த்தைகளில் –வாக்யார்த்தங்களில்—சிக்கி–
மரணம், நரகம் இவைகளில் —கர்ப்பாதி ஸப்தாவஸ்தைகளில் ,மாறி மாறி
சுழல்கிற சேதனர்கள் —- என்றபடி

உயிரின் பொருள்கட்கு , ஒரு விருத்தம் புகுதாமல்—என்றது—-

ஆத்மாவின் ப்ரயோஜனத்திற்கு ,மேற்சொன்ன கர்ப்பாதி ஸப்தாவஸ்தைகளில் ,மாறி மாறி சுழல்கிற விருத்தமான இவ்வவஸ்தைகளுக்கு ஒரு விருத்தமும்
வாராமைக்காக —–என்றபடி—

குருகையர் கோன் உரைத்த திருவிருத்தத்து ஓரடி கற்று ——என்றது–

திருக்குருகைக்கு அதிபதியான–நம்மாழ்வார் அருளிச் செய்த
திருவிருத்தம் என்கிற ப்ரபந்தத்தில் ஒரு அடியையாவதுபடித்துணர்ந்து —என்றபடி—

இரீர் திருநாட்டகத்தே —-என்றது—

சாதுக்கள் கோஷ்டியில் கொள்ளப்படுவார் என்கிறபடி, வைகுந்தமாம் திருநாட்டில்
நித்யஸூரிகளுக்கும் நாயகராய் இருக்கக்கடவீர் —-என்றபடி—-

அடுத்து—தனியன் –36–திருவாசிரியத் தனியன்

தனியன்—36–திருவாசிரியம்
—————————————————

காசினியோர் தாம்வாழக் கலியுகத்தே வந்துதித்து
ஆசிரியப் பாவதனால் அருமறை நூல் விரித்தானை
தேசிகனைப் பராங்குசனைத் திகழ் வகுளத்தாரானை
மாசடையா மனத்து வைத்து மறவாமல் வாழ்த்துதுமே .

தனியன் 35ல் சொன்னவாறு, இந்தத் தனியனும் ஆளவந்தார்
அருளிச் செய்ததாயிருக்கும் என்று சொல்லப்பட்டாலும்,
இதனை அருளியவர்—அருளாளப் பெருமாள் எம்பெருமானார்
என்பதையே கருதி , அவரது சரிதையைச் சுருக்கமாகச் சொல்கிறேன்

கலி 4127—குரோதன வருடம், கார்த்திகைப் பரணியில்
” யஜ்ஞ மூர்த்தி என்கிற அத்வைதியாகப் பிறந்தவர். மஹா பண்டிதர்.
ஆயிரக்கணக்கான சிஷ்யர்கள் எப்போதும் புடைசூழ ,மிடுக்குடன் வலம்
வருபவர். வாதத்தில் ,எதிரிகளை நிலைகலங்க வைத்து, விரட்டுபவர்.
வாதத்தில் வெல்வதற்கு , இவர் , எம்பெருமானாரைத் தேர்ந்தெடுத்து,
திருவரங்கம் வந்தார்.
எம்பெருமானாரைச் சந்தித்து , அர்த்த விசேஷங்களில் வாதத்துக்கு
அழைத்தார்.”7 நாட்கள் வாதம் செய்வோம்; நாம் தோற்றால், உமது பாதுகைகளைச் சுமந்து, உமது சித்தாந்தத்தை ஏற்போம் ” என்று சூளுரைத்தார் .
எம்பெருமானார் வாதப்போருக்கு சம்மதித்தார்.
” நாம் தோற்றால், இனி க்ரந்தங்கள் எதுவும் எழுதுவதில்லை –” என்றார்.

பெரிய பிராட்டி தாயார் ஸந்நிதிக்கு எதிரே வாதப்போர் தொடங்கியது.
16 நாட்கள் நடந்த வாதத்தில், ” யஜ்ஞ மூர்த்தி ” வலுப்பெற்று இருந்தார்.
16 வது முடிவிலே, அத்வைதி மிக மிடுக்காக, போய்வாரும் , நாளை
வாதப்போரில் ஜெயித்துக் காட்டுகிறேன் என்று அட்டகாசமாக எள்ளி நகையாடினர்.

அன்று இரவு, பேரருளாளனின் திருவடி தொழுது, மிக்கத் துக்கத்துடன் எம்பெருமானார் சயனிக்க ,விடியற்போதில் பேரருளாளன், எம்பெருமானாரின் கனவில் தோன்றி,
”ஆளவந்தாரின் மாயாவாத கண்டனம் ” என்பதை எம்பெருமானார்க்கு
நினைவுபடுத்தி, சில அர்த்த விசேஷங்களையும் ப்ரஸாதிக்க , எம்பெருமானார் மிக்க மகிழ்ச்சியுடன் சயனத்திலிருந்து எழுந்தார்.

17வது நாள், கடைசி நாள் —
எம்பெருமானார், விடியற்காலையில் வழக்கமாக திருவாராதனப் பெருமாளான
பேரருளாளனுக்குத் திருவாராதனம் செய்து, பேரருளாளன் நியமனம் பெற்று
வாதப்போருக்கு கம்பீரத்துடன் வந்தார்.
இவரைத் தரிசித்த யஜ்ஞ மூர்த்தி, இவருடை தேஜஸ் ,கம்பீரம், மிடுக்கு நடை
இவைகளைக் கண்டு , தன் வயமிழந்து, ”இவரை இன்று வெல்ல இயலாது ”
என்கிற முடிவுக்கு வந்து,
”எம்பெருமானாரே —தேவரீருக்கும் , பெரிய பெருமாளுக்கும் பேதமில்லை
என்பதை உணர்ந்தேன்—இனியும் தேவரீரிடம், ஒரு வார்த்தையும் சொல்ல வல்லேன்–”
என்று கூறி, தெண்டன் ஸமர்ப்பிக்க , எம்பெருமானார், ”இதுவும் பேரருளாளன்
பெரிய பெருமாள் பேரருளே –” என்று எண்ணி, யஜ்ஞ மூர்த்தியைத் தூக்கி
நிறுத்தி,
இதுவரை அத்வைதி கேட்ட கேள்விகளுக்கு, விசிஷ்டாத்வைதபரமாக , வ்யாக்யானம்
செய்தார். யஜ்ஞ மூர்த்தியின் பிரார்த்தனையை ஏற்று, அப்போதே அவருக்கு
த்ரிதண்ட காஷாயாதிகளைக் கொடுத்து தரிக்கச் செய்து, அவருக்கு,
”அருளாளப் பெருமாள் எம்பெருமானார் ” என்கிற தாஸ்ய நாமமிட்டுத்
தன்னுடைய சிஷ்யனாகச் சேர்த்துக்கொண்டார்.அவருக்கு ஒரு மடமும் கட்டிக்
கொடுத்தார்.

ஒரு சமயம், கர்நாடகத்திலிருந்து ( மேல்நாடு ) சில பாகவதோத்தமர்கள், திருவரங்கம் வந்து, எம்பெருமானார் மடம் எங்குள்ளது என்று அங்குள்ளவர்களைக் கேட்க, அவர்கள்
இங்கு இரண்டு மடம் உள்ளன–எந்த எம்பெருமானார் மடத்தைக் கேட்கிறீர்கள் ? ”
என்று வினவ, இச் செய்தி, அருளாளப் பெருமாள் எம்பெருமானார் காதில் விழ ,
மிகவும்துடிதுடித்து, துக்கித்து, எம்பெருமானார் என்றால் உடையவரே– மடம் என்றால்
அவருடைய இருப்பிடமே என்று சொல்லி அந்த க்ஷணமே , தன்னுடைய மடத்தை இடித்துத் தரைமட்டமாக்கினார்.
எம்பெருமானாரின் மடத்துக்கு வந்து, அவருடைய திருவடிகளை பற்றிக்கொண்டுக்
கதறினார்.
இவர், நம்மாழ்வாரின் திருவாசிரியத்துக்கு ” தனியன் ” அருளினார்

தனியனின் அர்த்தச் சுருக்கம்

. காசினியோர் தாம்வாழ—என்றது—-

இவ்வுலகில் மெய் இல்லா–உண்மையில்லா வாழ்க்கையை –மெய்வாழ்க்கை
என்று வாழும் –இவ்வையத்து உள்ளவர்களும்—-என்றபடி—

கலியுகத்தே வந்துதித்து—–என்றது—–

கலியும் கெடும் கண்டுகொண்மின் –என்று சொல்கிறபடியே தர்ம ப்ரவர்த்தகராக
வந்தவதரித்தரான —–என்றபடி—-
ஆசிரியப் பாவதனால் அருமறை நூல் விரித்தானை—-என்றது—

தமிழில் ,பாவகைகள் பலவுண்டு—வெண்பா, கட்டளைக்கலித்துறை என்று பல—
இவற்றில் ”ஆசிரியப்பா ” என்கிற பாவகையில், அரிதும், அருமையானதுமான
வேத சாஸ்த்ர மார்க்கத்தை ப்ரகாசிப்பித்தவரான —-என்றபடி—-

தேசிகனைப் பராங்குசனைத் திகழ் வகுளத்தாரானை —என்றது—

அடியார்களுக்கு பரமாசார்யரான —-விரோதிகளுக்கு அங்குசம் போல,
பரமாசார்யன் என்பதைப் பிரகாசிக்கிற வகுளமாலையைத்
தன்னுடைய திருமார்பில் தரித்தவரான —–என்றபடி—-

மாசடையா மனத்து வைத்து மறவாமல் வாழ்த்துதுமே—-என்றது—

” அஹம்தே நாஹம்தே விஹரணபதம்—–” என்கிற ச்லோகத்தின் படி,
ஆழ்வாரின் திவ்ய ஸூக்தியை மனனம் பண்ணியதால்,
”பாபிஷ்டாவாதவர்ஷேண மோஹயந்த்ய விசக்ஷணாத் –” என்கிற தோஷங்கள்
அடையாமல் இருக்கிற மனஸ்ஸில் ,த்ருடமாக வைத்து,
” தூயதென்மறைவல்லவர் வாழவே —” என்று ஆசார்யர் ,வாழத்தக்கடவன் —என்றபடி—

உபகாரகரை வாழ்த்தவேணும் —-என்பதைச் சொல்லி இங்கு உபகரிக்கிறார்

( இக்காலத்தில் , இது அரிதாகிக் கொண்டு வருகிறது—உபகாரகரை
வையாமல் இருந்தாலே பெரிது—- வாழ்த்துவது வழக்கத்தில் இல்லை—).

அடுத்து—தனியன்—-37—பெரிய திருவந்தாதித் தனியன்—-

தனியன் 37—-பெரிய திருவந்தாதித் தனியன் –
————————————————————————

முந்துற்ற நெஞ்சே ! முயற்றி தரித்துரைத்து
வந்தித்து வாயார வாழ்த்தியே —-சந்த
முருகூரும் சோலைசூழ் மொய்பூம் பொருநல்
குருகூரன் மாறன் பேர் கூறு.

ஸ்ரீ நம்மாழ்வார் அருளிய ”பெரிய திருவந்தாதி ” ப்ரபந்தத்துக்கு
எம்பெருமானார் அருளிய தனியன்.

இவரது மிகச் சுருக்கமான சரிதம்—தனியன் 27ல் சொல்லப்பட்டுள்ளது.

தனியனின் அர்த்தச் சுருக்கம்

முந்துற்ற நெஞ்சே ! —–என்றது—–

அடியேனுக்கு முன்பாகவே, பகவானின் திருநாமத்தைச் சொல்லத்தொடங்கிய
”மனஸ்ஸே ” —என்றபடி——

முயற்றி தரித்துரைத்து —-என்றது—

தானாகவே முயற்சித்து, பெரிய திருவந்தாதியை ,மனத்தில் தரித்து,
தரித்ததோடு மட்டுமல்லாமல், அதை உரைத்து—அனுபவித்துச் சொல்லி —என்றவாறு—

வந்தித்து வாயார வாழ்த்தியே———என்றது—–

இதை அருளிய ஆழ்வாரை, வந்தனம் செய்து, வாய்க்குளிர —–வாய்நிரம்ப—
அவரை வாழ்த்தி—ஸ்தோத்தரித்து—-என்றபடி—–

—-சந்த முருகூரும் சோலைசூழ் மொய்பூம் பொருநல் குருகூரன் —–என்றது—–

நளினமான ஓசை மிகு ——சந்தம்–இலக்கணவரம்பு பொருந்திய—
வேதமான இதை—-வேதப்ரதிபாத்யமான பகவந்நாம சப்தத்தை—
தங்களுடைய மொழிகளால் சப்திக்கின்ற பக்ஷிகளை உடைய சோலைகளாலே
சூழப்பட்ட , அழகிய தாமிரவருணியை உடைய
திருக்குருகூரில் அவதரித்தவரான——–என்றபடி—

மாறன் பேர் கூறு————-என்றது—–

ஆழ்வார் அருளிய பெரியாதிருவந்தாதியைச் செப்புகின்றவைகளைக்
கேட்டுக் கேட்டு, குருகூர்ப் பக்ஷிகளும், பகவந்நாம சங்கீர்த்தனம் செய்கின்றன;
ஆழ்வாரின் அடியவரான நீ அப்படிப்பட்ட ஆழ்வார் திருநாமத்தை எல்லாம்
கீர்த்தனம் பண்ணுவாயாக ——————————என்றபடி

அடுத்து—-தனியன் 38—-திருவெழுகூற்றிருக்கை .

தனியன்—38— திருவெழுகூற்றிருக்கைத் தனியன்
————————————————————————–

சீரார் திருவெழுகூற்றிருக்கை என்னும் செந்தமிழால்
ஆராவமுதன், குடந்தைப் பிரான் தன்னடி——இணைக்கீழ்
ஏரார் மறைபொருள் எல்லாம் எடுத்து இவ்வுலகு உய்யவே
சோராமல் சொன்ன அருள்மாரிபாதம் துணை நமக்கே .

திருமங்கை ஆழ்வார் அருளிய திருவெழுகூற்றிருக்கை
ப்ரபந்தத்துக்கு ,எம்பெருமானார் அருளிய தனியன்

எம்பெருமானார் சரிதச் சுருக்கம் —தனியன் 27ல் உள்ளது.

27 வது தனியனான

வாழி பரகாலன் ,வாழி கலிகன்றி
வாழி குறையலூர் வாழ்வேந்தன் —-வாழியரோ
மாயோனை வாள் வலியால் மந்திரங்கொள்
மங்கையர்கோன் தூயோன் சுடர்மானவேல்

இது திருமங்கை ஆழ்வாரின் பொதுத் தனியன்
இந்தப் பொதுத் ஸேவித்து,
அதன்பிறகு இந்தத் தனியனை , ஸேவிப்பர்

தனியனின் அர்த்தச் சுருக்கம் —–

சீரார் திருவெழுகூற்றிருக்கை என்னும் செந்தமிழால்—–என்றது—-

சீர்மை பொருந்திய திருவெழுகூற்றிருக்கை என்கிற என்கிற
செம்மையான தமிழ் பிரபந்தத்தில் மூலமாக —-என்றபடி—

ஆராவமுதன், குடந்தைப் பிரான் தன்னடி——இணைக்கீழ் —என்றது—-

ஆராவமுதனென்கிற திருக்குடந்தை எம்பெருமானின் திருவடி இரண்டின்
கீழேயிருந்து —–என்றபடி —-

ஏரார் மறைபொருள் எல்லாம் எடுத்து—–என்றது—-

அழகு நிறைந்த வேதங்களின் பொருள்களையெல்லாம் எடுத்து —என்றபடி

இவ்வுலகு உய்யவே —–என்றது—

இவ்வுலக மாந்தர் எல்லோரும் உஜ்ஜீவிக்குமாறு —என்றபடி—

சோராமல் சொன்ன அருள்மாரிபாதம் துணை நமக்கே—-என்றது—-

சோர்வு இல்லாமல், விடாமல் அருளிய ”அருள்மாரி ” என்கிற விருது பெற்ற
திருமங்கை ஆழ்வாரின் திருவடியே நமக்குச் சரண்—புகழ்–துணை—- என்றபடி .

— தனியன்—39—சிறிய திருமடல் தனியன்
——————————————————————

முள்ளிச் செழுமலரோ தாரான்முளை மதியம்
கொள்ளிக்கு என் உள்ளம் கொதியாமே —-வள்ளல்
திருவாளன் , சீர்க்கலியன் ,கார்க்கலியைவெட்டி
மருவாளன் தந்தான் மடல்

இந்தத் தனியன் ”பிள்ளான் ;” அருளியதாக இருக்கும் என்று ஒரு க்ரந்தத்தில்
சொல்லப்பட்டுள்ளது…..
இதற்கடுத்த தனியனை அருளியவரும் ”பிள்ளான் ” என்றே சொல்லப்பட்டுள்ளது.

இது, திருமங்கை ஆழ்வாரின் ,”சிறிய திருமடலு”க்கான தனியன்.
பிள்ளைத் திருநறையூர் அரையர் அருளியது -என்பர் —-

இவரது சரிதம் ,எங்கு தேடியும் கிடைக்கப்பெறவில்லை–
அன்பர்களுக்குத் தெரிந்தால், அடியேனுக்கு உதவ வேண்டுகிறேன்—
இவரது சரிதத்தை இங்கு சேர்க்க ஏதுவாக இருக்கும்

தனியனின் அர்த்தச் சுருக்கம்

நாயகனை விட்டுப் பிரிந்த நாயகியைப் போல பெருமாளை விட்டுத் தவிக்கும் என்
மனமானது, உதய சந்த்ரனாகிற –கொல்லி—நெருப்புக்கு , கொதிக்காதபடி—
தவிக்காதபடி—
செழுமை பொருந்திய ”முள்ளிப்பூ ” மாலையை அணிந்தவரும் , ஆறு பிரபந்தங்களை அருளிய வள்ளலும்,பிரிவைப் பொறாத நற்காதல் உடையவரும், மருவாளன்—பொருந்திய கத்தியை –வாளை ஏந்தியவரும் கல்யாண குணங்கள் நிரம்பியருமான
திருமங்கை ஆழ்வார் , அஜ்ஞானமாம் கலியை அழித்து, மடல் என்னும் ப்ரபந்தம்
அருளினார்

அடுத்து—தனியன் 40–பெரிய திருமடல் தனியன்

தனியன் 40–பெரிய திருமடல் தனியன்
————————————————————

பொன்னுலகில் வானவரும் பூமகளும்( னும் ) போற்றி செய்யும்
நன்னுதலீர் நம்பி நறையூரர் —மன்னுலகில் –
என்னிலைமை கண்டு இரங்காரே யாமாகில்
மன்னு மடலூர்வன் வந்து.

இந்தத் தனியன் ”பிள்ளான் ;” அருளியதாக இருக்கும் என்று ஒரு க்ரந்தத்தில்
சொல்லப்பட்டுள்ளது…..

இது, திருமங்கை ஆழ்வாரின் ,”பெரிய திருமடலு”க்கான தனியன்.
பிள்ளைத் திருநறையூர் அரையர் அருளியது -என்பர் —-

இவரது சரிதம் ,எங்கு தேடியும் கிடைக்கப்பெறவில்லை–
அன்பர்களுக்குத் தெரிந்தால், அடியேனுக்கு உதவ வேண்டுகிறேன்—
இவரது சரிதத்தை இங்கு சேர்க்க ஏதுவாக இருக்கும்

தனியனுக்கான அர்த்தச் சுருக்கம்

நன்னுதலீர்——
நேர்த்தியான நெற்றியை உடைய தோழியர்களே —என்று அழைக்கிறார்—

பொன்னுலகில் வானவரும் பூமகளும் போற்றி செய்யும் — பரமபதத்திலே
நித்ய ஸூரிகளும் , பெரிய பிராட்டியாரும், பிரமனும்,எப்போதும் ஸ்தோத்ரம்
செய்வதை அங்கீகரித்து,

நம்பி நறையூரர் — கல்யாண குண பூர்ணராய் திருநறையூருக்கும் வந்துள்ளவர்,

மன்னுலகில் என்னிலைமை கண்டு இரங்காரே யாமாகில்—–
அவனும் நானும் மன்னிய இந்த பூமியில்–
மண் உலகில்—-பழமையான பூமியில்— நான் படும் கஷ்டத்தைக் கண்டு இருந்தும்
இரக்கம் கொள்ளமாட்டார்.
இது நிச்சயம்—
மன்னு மடலூர்வன் வந்து.—–நான் வெளியே வந்து அவன் இருக்குமிடமெல்லாம் சென்று
நிலையாக–உறுதியாக –மடல் ஊர்தலைச் செய்வேன்

இனி, திருவாய்மொழித் தனியன்களும், நூற்றந்தாதித் தனியன்களும் —

41 முதல் 49 முடிய —பார்க்கலாம்

About the Author

Leave A Response