தனியன்-41—முதல் 50–முடிய–திருவாய்மொழி  மற்றும் நூற்றந்தாதித் தனியன்

Posted on Jan 26 2018 - 8:19am by srikainkaryasriadmin
|

தனியன்-41—முதல் 50–முடிய–திருவாய்மொழி  மற்றும் நூற்றந்தாதித் தனியன்

-தனியன்-41—திருவாய்மொழித்  தனியன்—
——————————————————————

பக்தாம்ருதம்  விச்வஜநா நுமோதனம்   
ஸர் வார்த்ததம்  ஸ்ரீ சடகோப  வாங்மயம் |
ஸஹஸ்ர ஸாகோபநிஷத் ஸமாகமம் 
நமாம்யஹம்  த்ராவிட வேதஸாகரம்  ||

ஸ்ரீமந் நாதமுனிகள் அருளிய தனியன் —-

இவரது சரிதச்  சுருக்கம் 7வது  தனியனில் கொடுத்துள்ளோம் 

தனியனின் அர்த்தச் சுருக்கம் 

1.அவனை அண்டிய அடியார்களுக்கு அமுதம் –பக்தர்களுக்கு அமுதம்–
பக்தர்களின் அமுதம்— பக்தர்களுக்காக அமுதம் —பக்தர்களுக்கான 
அமுதமாகிய அன்னம்  
2. எல்லா  மக்களுக்கும், ஆனந்தத்தைக் கொடுப்பது–
சில, சிலபேருக்குத்தான் மகிழ்ச்சியைக் கொடுக்கும்–ஆனால்,
 இது எல்லா ஜனங்களுக்கும் சந்தோஷத்தைக் கொடுக்கும்.
3.எல்லா  புருஷார்த்தங்களையும் நல்குவது—மோக்ஷத்தையும் சேர்த்து–
4.ஆயிரம் சாகைகளை உடைய ஸாமவேதம் மற்றும் உபநிஷத்துக்கள் —
இவற்றுடன் —ஸமாகமம்—-சேர்க்கை உடையது. 
வேதத்துக்குச் சமமாக இருப்பது—
எது   ?

4. நம்மாழ்வாரின் திருவாய்மொழியான தமிழ் வேதக்கடல் —த்ராவிட வேத ஸாகரம் 

அதை—
அஹம்  நமாமி—அடியேன் துதிக்கிறேன்–நமஸ்கரிக்கிறேன்–வணங்குகிறேன் 

தனியன் 42—திருவழுதி நாடென்றும் –என்று தொடங்கும் தனியன்—
————————————————————————————————————–

திருவழுதி  நாடென்றும் தென்குரு கூரென்றும் 
மருவினிய வண்பொருநலென்றும் —-அருமறைகள் 
அந்தாதி செய்தானடியிணையே  யெப்பொழுதும் 
சிந்தியாய் நெஞ்சே  ! தெளிந்து 

மதுரகவிகள்  தமிழில் அருளிய தனியன்— இதுவும் நாதமுனிகள் அருளியதென்றும்,
சொட்டை நம்பிகள் அருளியதென்றும் சொல்வாருளர்    

மதுரகவிகளின் சரிதச் சுருக்கம் 
—————————————————-

இவர், (வைநதேயரின் அம்சமாக என்றும் சொல்வர் ), குமுதாம்சமாக  பாண்டிநாட்டுத் திருக்கோளூரில் ,
(திருக்குருகூர் என்கிற ஆழ்வார்திருநகரிக்கு அருகில் உள்ளது–)
சோழிய அந்தணர் குலத்தில், 9ம் நூற்றா ண்டின் பிற்பகுதியில்,
ஈச்வர  வருஷம், சித்திரை மாத சித்ரா நக்ஷத்ரத்தில்  அவதரித்தவர்—
இவர் தமிழ், ஸம்ஸ்க்ருதம் ,இருமொழிகளிலும் வல்லவர்.வேத விற்பன்னர்.
த்வாபர யுகத்தின் இறுதிக்காலம்—அப்போது க்ருஷ்ணன் ,துவாரகையில் 
எழுந்தருளி இருந்தார்–அவதார காலம் முடியவில்லை—அவரைத்தரிசிக்கவும்,
வடநாட்டு புண்யநதிகளில் தீர்த்தமாடவும் , வடதேச யாத்ரை சென்று, அயோத்திக்கு 
வந்தார்.( த்வாரகைக்குச் செல்லவில்லை என்பர் )

ஸ்வாமி தேசிகன் அருள்கிறார். 

அன்பர்க்கே அவதரிக்கு மாயன் நிற்க,
அருமறைகள் தமிழ் செய்தான் தாளே கொண்டு 
துன்பற்ற  மதுரகவி——–
 
 ஒருநாள் இரவு—திருக்கோளூர் எம்பெருமான் இருக்கும் தென்திசை நோக்கி, 
அவரைத் தொழுவதற்குத் தென்திசைப் பக்கமாகத் திரும்பியபோது, 
தெற்குக் கோடியில் ஒரு ஜாஜ்வல்யமான  சுடர் ஒளிர்வதைக் கண்டார். 
இந்தச் சுடர், அன்று மாத்திரமல்ல அதற்கடுத்த இரண்டு மூன்று நாட்களிலும்
இரவு நேரத்தில் கண்ணுற்ற மதுரகவிகள், மிகவும் வியப்புடன் தெற்கு நோக்கிப் 
புறப்பட்டு, நெருங்கி வர நெருங்கி வர, அப்பேரொளி, திருக்குருகூர் 
பக்கமாக இவரை ஆகர்ஷிக்க, திருக்குருகூர் பொலிந்து நின்றபிரான் 
திருக்கோயிலுக்குள் தொடர்ந்து இழுக்க, அங்கு இவர் சென்றவுடன் பேரொளி மறைய,
ஆவலுடன் மதுரகவிகள் அங்குள்ளாரை ”இங்கு ஏதேனும் விசேஷமுண்டோ ”
எனக் கேட்க அங்குள்ளவர்கள், நம்மாழ்வாரின் பெருமையைச் சொன்னார்கள்.  
  
மதுரகவிகள்,ஆதிப்பிரான் ஸந்நிதியில் புளிய மரத்தடியில், யோகத்தில் ,கண்மூடி 
எழுந்தருளியிருந்த , நம்மாழ்வாரைப் பார்த்தார். 
இரண்டு கைகளையும் தட்டி ஓசை எழுப்பினார். செவி,  வாய், புலன் சரியாக 
உள்ளதா என்று அறிய ஒருகல்லைத் தூக்கித் தரையில் போட்டதாகவும் சொல்வர் 
ஆழ்வார் கண் திறந்து , மதுரகவிகளைப் பார்த்தார். 

மதுரகவிகள், கைகூப்பி, 
”செத்ததன் வயிற்றில் சிறியது பிறந்தால், எத்தைத் தின்று எங்கே கிடக்கும் ? ”
என்று கேட்டார். 
அதாவது,  ப்ரக்ருதியான அறிவு  இல்லாத உடம்பில் —அசித்—, அணுவைவிடச் 
சிறியதான ஜீவாத்மா —— சித் —உள்ளே வந்து புகுந்தால் , 
அந்த ஆத்மா—எதனை அனுபவித்துக்கொண்டு, எவ்விடத்தில் இன்பம் 
இருக்கிறது என்று எண்ணும் —-
என்கிற அர்த்தத்தில் கேட்டார்.
அதற்கு, ஆழ்வார், 
”அத்தைத் தின்று  அங்கே கிடக்கும் –”  என்று பதில் சொன்னார்.
அதாவது, இந்த உடம்பின் தொடர்பால் ஏற்படும் சுவை, ஒளி,ஓசை, நாற்றம்,
ஊறு என்னும் ஐந்தினால் வரும் இன்ப துன்பங்களை அனுபவித்துக்கொண்டு ,
அவ்விடத்திலேயே,”இன்புற்றேன் , இளைத்தேன் —” என்று உழன்று இருக்கும்” 
என்கிற அர்த்தத்தில் பதிலிறுக்க , 
மதுரகவிகள் மிகவும் சந்தோஷமடைந்து , 
நம்மாழ்வாரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார்.அவரின் சிஷ்யனானார்.

நம்மாழ்வார், ”நாம் பகவானை அநுபவித்துச் சொல்லும் பாசுரங்களை,
நீர் பட்டோலைப் படுத்தும் ”என்று சொல்ல, அப்படியே மதுரகவிகள் எழுதிவந்தார். 

மதுரகவிகளுக்கு, நம்மாழ்வாரிடம்  அதீத பக்தி.நம்மாழ்வார் திருநாட்டை அலங்கரித்தபிறகு,
அவருடைய அர்ச்சா விக்ரஹத்தை, திருக்குருகூரில் ப்ரதிஷ்டிப்பித்து,ஆராதனம், உத்ஸவங்கள்
நடத்தினார்  . அப்படி நடத்தும்போது, 
”வேதம் தமிழ் செய்த மாறன் வந்தார் ”
”திருமாலுக்கு உரிய தெய்வப் புலவர் வந்தார் ”
”அளவிலா ஞானத்து  ஆரியர் வந்தார் ”
என்றெல்லாம் விருதுகளைச் சொல்லி, திருச்சின்னம் முழங்கியாகும்.

இதற்கு, மதுரையில்  உள்ள  தமிழ் சங்கத்தார் எதிர்ப்பு தெரிவித்து,
ஆழ்வார் பக்தரே யல்லது பகவானல்ல—-சங்கம் ஏறிய புலவருமல்ல–
திருவாய்மொழி,  சங்கப்பலகை ஏறிய செய்யுளன்று —-
என்று பலவாறாகப் பேசி, விருதுகள் முழங்குவதைத் தடுத்தார்கள்.

மதுரகவிகள், மனம் வருந்தினார்.”இவர்கள் கர்வம் அடங்க அருள்புரிக —”
என்று சடகோபரைத் துதித்தார்..
சடகோபர், ஒரு கிழப் பிராமணர்  உருவில் மதுரகவிகளிடம் வந்து, ”வருந்தாதே —
திருவாய்மொழியில்,
 கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர் 
எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே 
இந்தப் பாசுரத்தை, ( பாசுரத்தின்  முதல்  அடி  என்றும் சொல்வர் )
ஒரு ஏட்டில் எழுதி, எடுத்துப்போய், சங்கப் பலகையில் வைப்பாயாக!அவர்கள் கர்வம் 
அடங்கும்—” என்று சொல்லி  மறைந்தார்.

மதுரகவிகளுக்கு மகிழ்ச்சி –உடனே,அப்படியே எழுதி ,எடுத்துப்போய் 
வைகை ஆற்றில் சங்கப் புலவர்கள், பலகையில் அமர்ந்து  இருந்தபோது ,
இந்தச் சீட்டைப் பலகையில் வைக்க, பலகை அப்படியே நீரில் மூழ்கி,
புலவர்களை நீரில் தள்ளி, இந்தச்சிறுமுறி —ஓலை நறுக்கை  மட்டில் ஏந்தி, 
நீரின் வேகத்தை  எதிர்த்து வந்தது . 

சங்கப் புலவர்கள் தட்டுத் தடுமாறி தண்ணீரில் இருந்து எழுந்து ,ஆற்றின் கரை சேர்ந்து, 
”எங்கள் இறுமாப்பு அழிந்தது;வேதங்கள்—வேதங்களின் பொருள்–
இவை யாவும் பிறரால் கற்பிக்கப்படாமல், தாமே உணர்ந்து , பாசுரங்களைச் 
சொன்ன நம்மாழ்வார்—தெய்வப்புலவர் ” என்று புகழ்ந்தனர்.

இப்படி, நம்மாழ்வாரே  நமக்கு எல்லாமே என்று இருந்த மதுரகவிகள், 
அவரால் அடைந்த பயனை  நினைந்து உருகி,, ”கண்ணிநுண் சிறுத்தாம்பு”என்று  
தொடங்கும், 11 பாசுரங்கள் அடங்கிய பிரபந்தத்தை, அருளினார். இது,
ஆசார்ய பக்தியினை  வெளிப்படுத்துகிறது. 
— 
(அடியேன்–விசிஷ்டாத்வைதம் என்கிற தலைப்பில், பகவானின் தசாவதாரங்கள்,
அபிநவ தசாவதாரமான  ஆழ்வார்களின்  அவதாரங்கள் –என்பதை உபந்யஸிக்கும்போது–
த்ரிவிக்ரம –வாமன –அவதாரங்கள்-
எப்படி -நம்மாழ்வார்,மதுரகவிகள்  அபிநவ அவதாரங்களாகப் பொருந்துகின்றன என்று 
பூர்வாசார்யர்கள் சொல்லியிருக்கிறார்கள் என்பதை விளக்கியுள்ளேன் –u -tube ல் உள்ளது-)

தனியனின் அர்த்தச் சுருக்கம் 
———————————————–

திருவழுதி நாடென்று சொல்லப்பட்ட பாண்டிய நாட்டில்,அழகான திருக்குருகூரில் ,
மதுரமான தாமிரவருணி  நதிக்கரையில், அறிய அரிதான  வேதங்களை, தமிழில் 
திருவாய்மொழிப் ப்ரபந்தமாக  அந்தாதியில் அருளிய நம்மாழ்வாரை –ஹே மனஸே —
எப்போதும் சிந்திப்பாயாக  !அதனால் தெளிந்த அறிவைப் பெற்று அவருடைய திருவடிகளையே 
வணங்குவாயாக—!
 

தனியன்—-43—மனத்தாலும், வாயாலும்—–
———————————————————————-

மனத்தாலும், வாயாலும் வண்குருகூர் பேணும் 
இனத்தாரை யல்லா  திறைஞ்சேன் —–தனத்தாலும் 
ஏதும்  குறைவிலேன்  எந்தை சடகோபன் 
பாதங்கள்  யாமுடைய பற்று. 

இந்தத் தனியனை அருளியவர் ”சொட்டை நம்பி ” என்பர்.
மற்றும், நாதமுனிகள் அருளியது என்றும் சொல்வர். 

சொட்டைநம்பிகளின் சரிதம், சரிவரக்  கிடைக்கவில்லை.
ஆனால், இவர் எம்பெருமானார் ஸ்தாபித்த 74 ஸிம்ஹாசனாதிபதிகளில்   
ஒருவர் என்பது, தெளிவாகிறது.

தனியனின்  அர்த்தச் சுருக்கம் 
——————————————–

நம்மாழ்வாருடைய திருவடிகளையே பற்றியிருக்கிறேன்.
அவரின் அடியார்களையே மனம் , வாக்கு, உடலால் போற்றுகிறேன். 
பிறரைப் போற்றமாட்டேன்.ஆதலால், செல்வம் முதலான பேறுகளில், 
குறையும் இல்லாதவனாக ஆகிறேன். 

தனியன் 44—-ஏய்ந்த பெருங்கீர்த்தி—-

ஏய்ந்த பெருங்கீர்த்தி யிராமானுச  முனிதன் 
வாய்ந்த மலர்ப்பாதம் வணங்குகிறேன் —-ஆய்ந்த 
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும் 
 பேராதவுள்ளம்  பெற 

இது அனந்தாழ்வான் இயற்றியது —என்பர்   

இவர்  கலி 4156 கி.பி. 1054 —ஜய வருஷம் சித்திரை மாதம் சித்ரா நக்ஷத்திரத்தில், 
இப்போது கர்நாடகம் என்று அழைக்கப்படும் மைசூர் பகுதியில் 
ஸ்ரீரங்கபட்டணம்  அருகே உள்ள சிறுபுத்தூர் என்கிற கிராமத்தில் அவதரித்தார்.

நாளடைவில்  வேதங்கள், சாஸ்த்ரங்களில்  தேர்ந்து, திருவரங்கம் வந்து, 
எம்பெருமானாரின் சிஷ்யரானார்.
ஆசார்யரின் , உபதேசங்கள் மற்றும் அவரின் திருவாய்மொழி விளக்கங்கள் 
இவற்றில் மிகவும் ஈடுபட்டார்.
ஒருநாள், எம்பெருமானார், 
திருவாய்மொழி விளக்கம் சொல்லும்போது, 3ம் பத்து, 3ம் திருவாய்மொழிப் 
பாசுரங்களுக்கு அனுபவித்து அர்த்தம் சொல்லிக்கொண்டிருக்கும்போது,
”சிந்துபூ  மகிழும்  திருவேங்கடத்து —-”
என்ற வரிகள் வந்ததும், கண் கலங்கி வேதனையுடன், 
”திருவேங்கட மாமலையில் தங்கி , அவனுக்கு உகப்பாக ,மலர்மாலைகளைக் 
கட்டி சமர்ப்பிக்கும் கைங்கர்யம் செய்ய உங்களில் யாரேனும் ஒருவருக்கு 
ஆசை உள்ளதா   என்று கேட்டார். 

அவருடைய விளக்கங்களைக் கேட்டுக்கொண்டிருந்த சிஷ்யர்களில் யாவரும் 
முன்வராத நிலையில், 
”அனந்தாழ்வான் ”  எழுந்திருந்து , ”அடியேன் சித்தமாக இருக்கிறேன் 
என்றார். எம்பெருமானார் மிக சந்தோஷத்துடன் அவரை அருகே அழைத்து, 
மார்போடு தழுவி , ”நீரே  ஆண்  பிள்ளை ”  என்க, அன்றுமுதல் ,இவர் 
”அனந்தாண் பிள்ளை ” என்று சிறப்புப் பெற்றார். 

உடையவரின் ஆசியோடு கர்ப்பமாக இருக்கிற தன்னுடைய இல்லாளுடன் 
அன்றே புறப்பட்டு காட்டையும் மேட்டையும்   கடந்து, திருமலைக்கு வந்தார். 
உடையவர் உவந்து பாராட்டும்படி, வாசனைப் பூக்களால்  நிரம்பிய நந்தவனம் ,
அதற்கு எல்லாக் காலத்திலும் தண்ணீர் கிடைக்க ஒரு ஏரி இவற்றை அமைக்க ,
  ஒரு நிலத்தைத் தேர்ந்தெடுத்து, தனது இல்லாளுடன் அங்கு தோட்ட வேலை 
செய்யத் துவங்கினார்.  நிலத்திலிருந்து மண்ணை வெட்டி எடுத்து,
மூங்கிற் கூடையில் மண்ணைசேர்த்து,  அந்தக் கூடையை, கர்ப்பிணிப் பெண்ணான 
தன்னுடைய மனைவியிடம் கொடுத்து ,கொஞ்சதூரம் சென்று கொட்டிவரச் செய்ய,
இப்படிப் பலநாட்கள் கடும் வெய்யிலையும் பாராமல்,  தோட்ட வேலை தொடர்ந்தது—

ஒரு நாள்—-
ஒரு சிறுவன்,கர்ப்பிணிப் பெண் மண் கூடையைச் சுமந்து செல்வதைப் பார்த்து,
மிகப் பரிவுடன் அவரருகே வந்து, பக்குவமாகப் பேசி கூடையைப் பெற்று, 
மண்ணை வெளியே கொட்டிவிட்டு வெறும் கூடையைக் கொடுக்க–
இப்படி மிக விரைவாக அடிக்கடி வெற்று மண்கூடை திரும்பித் தன்னிடம் வருவதைக் 
கண்ட  ஆழ்வான் ,    தேவிகளைக் கேட்டார். 
தேவிகளும் ஒரு சிறுவன்   உதவுவதாகச் சொன்னார்.  

”ஆசார்யன் சொன்ன கைங்கர்யத்தை அடுத்தவர்களுக்குக் கொடுக்கலாமா  ? ” என்று 
மனைவியைக் கடிந்துகொண்டவர், சிறுவனை அழைத்து, ”இந்தக் கைங்கர்யத்தை 
நாங்களே செய்துகொள்வோம்—நீ இங்கிருந்து போய்விடு–” என்று சொல்ல, 

அந்தச் சிறுவன் அடம்பிடிக்க, 
 அனந்தாழ்வான், சிறுவனைத் துரத்த கடப்பாரையை 
ஓங்க , கடப்பாரை நுனி சிறுவனின் தாடையில் பட, அங்கிருந்து ரத்தம் பெருக, 
அந்தச் சிறுவன் ஓடிப்போய் மறைந்துவிட்டான். 

சிறிது நேரத்தில், அர்ச்சகர், ”திருவேங்கடமுடையான் உம்மை அழைக்கிறான் ”
என்று சொல்லி இவரைக் கூப்பிட, இவர் புஷ்பமாலையோடு வருகிறேன் என்று பதில் 
சொல்ல, 
அதைக்கேட்ட, ஏழுமலையான், கூப்பிட்டபோது வராதவரின் மாலை 
எனக்குத் தேவையில்லை  என்க  ,
 ”ஆசார்யனின் நியமனப்படி மாலை தொடுத்து சமர்ப்பிக்கிறேன் —
அவனது உகப்புக்குக் கட்டி சமர்ப்பிக்கிறேன்–திருவேங்கடமுடையான் 
உகப்புக்காக அல்ல” என்று பதில் சொன்னார்.
மலைகுனிய நின்றவன்,” எமது சொல்லைக் கேட்காதவர் இங்கு இருக்கவேண்டாம்–
உடனே இங்கிருந்து போகச்சொல்லும் ”என்று அர்ச்சகரிடம் சொல்ல, அதைக்கேட்ட 
அனந்தாழ்வான், ”என்னைப் போகச் சொல்ல இவர் யார் ?—அவரும் வந்தேறி–நானும் வந்தேறி ” 
என்று   பதிலிறுத்தார்.
ஸ்ரீநிவாஸன்  மனம் மகிழ்ந்ததாம்–

சிறிது நேரத்தில் 

திருவேங்கடவன் முகம் வாடினால், ஆசார்யனின்முகமும் வாடிவிடும் –” என்று 
நினைத்து, அனந்தாழ்வான். புஷ்பங்களைத் தொடுத்து மாலையாக வைத்திருந்ததை 
எடுத்துக்கொண்டு, குலசேகரப்படி அருகே வந்தார்—திருவேங்கடவனின் தாடையில் 
இருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது—
அனந்தாழ்வான், அதிர்ந்துபோய், சிறுவனாக வந்தவன் இவனே என்று , உடல் நடுங்கிக் 
கதறி, 
”திருவேங்கடவா–என்னை மன்னிப்பாயாக–உன் திருமேனித் துன்பத்துக்கு 
எவ்வாறு மருந்திடுவேன்—?” என்று புலம்பினார்.
 
உடனே திருவேங்கடமுடையான் அர்ச்சகர் மூலமாக , ” உம்முடன் விளையாடவே
சிறுவனாக  வந்தோம் —பரமபாகவதரான உமது பாத தூளியும் ,பச்சைக் கற்பூரமும் 
சேர்த்து இந்த இரத்தப் பெருக்கில் வைக்க, இது நின்று போம் –” என்றார். 
அனந்தாழ்வான் அப்படியே செய்ய,  தாடையிலிருந்து வழியும் உதிரம்  நின்றது.

இன்றும் , ஸேவார்த்திகள் ,திருவேங்கடமுடையானை ஸேவிக்கும்போது ,
அவனது திருமுக மண்டலத்தில் பச்சைக்கற்பூரம் ஸேவை ஆகும்—இது –இந்த ப்ரஸாதம் —
எல்ல வியாதிகளையும் அழிக்கும் மருந்து—

 இது, இப்படியாக,   ஒருசமயம் அனந்தாழ்வான் நந்தவன கைங்கர்யம் செய்யும்போது ,ஒரு 
நாகம் அவரைக் கடிக்க, அதை அவர் பெரிதுபடுத்தாமல், 
ஸந்நிதிக்கு வந்து,ஸ்வாமி புஷ்கரணியில் கையலம்பி, மாலைகளைத் திருவேங்கடவனுக்குச் 
சமர்ப்பிக்க, அவர் கேட்டாராம்.
”பாம்பு தீண்டியதை ஏன் நீர் பொருட்படுத்தவில்லை ?  ”
அதற்கு அனந்தாழ்வான் பதில்—
”கடித்த பாம்பு வலிமையாக இருந்தால், அடியேன் விரஜையில் நீராடி,திருநாட்டுக்குச் 
சென்று அங்குக் கைங்கர்யம் செய்வேன்—-அந்தப் பாம்புக்கு வலிமை இல்லையெனில்,
ஸ்வாமி புஷ்கரணியில் நீராடி,இந்தத் திருமலையில் உமக்கு கைங்கர்யம் செய்வேன்–”

இப்படிப் பல சம்பவங்கள், அனந்தாழ்வான் கைங்கர்ய வாழ்க்கையில் நடந்ததைக் 
குருபரம்பரை சொல்லும்.  குருபரம்பரைப் பிரபாவம் எடுத்துரைக்கும்போது ,
விரிவாகப் பார்க்கலாம் .

தனியனின் அர்த்தச் சுருக்கம் 
————————————————-

நற்குணங்களைக் கொண்ட ஆழ்வாரின் திருவாய்மொழியை ஓதி அறிந்துகொள்ள, 
கீர்த்திமிகு இராமானுசரின் மலர்ப் பதங்களை  வணங்குகிறேன் 

தனியன் 45–வான்திகழும் சோலை—-
————————————————————

 
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் 
ஆன்ற தமிழ்மறைகள்  ஆயிரமும் —ஈன்ற 
முதல் தாய் சடகோபன் மொய்ம்பால்  வளர்த்த 
இதத் தாய் இராமாநுசன் 

இந்தத் தனியன்—பட்டர் அருளியது    என்பர்–
இவரது சரிதச் சுருக்கம் –தனியன் 10ல் உள்ளது–

தனியனின் அர்த்தச் சுருக்கம் 
———————————————-
வானுயர்ந்த சோலைகள், மதில்கள்  சூழ்ந்த திருவரங்கனின் 
புகழைப் போற்றி,  தமிழ் வேதமாக  ஆயிரம் பாசுரங்களைப் 
பெற்றெடுத்த  ( இயற்றிய ) தாய்  நம்மாழ்வார்.
அந்தத் திருவாய்மொழியை வளர்த்தவர், இராமானுசர் 

தனியன் 46—மிக்க இறை நிலையும்—-
————————————————————  

மிக்க இறை நிலையும்   மெய்யாம் உயிர்நிலையும் 
தக்க நெறியும் தடையாகித்—-தொக்கியலும் 
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன் 
யாழினிசை  வேதத்தியல் 

இந்தத் தனியனும் பட்டர் இயற்றியது  –என்பர்.இவரது சரிதச்  சுருக்கம்—
தனியன் 10ல்  உள்ளது.

தனியனின் அர்த்தச் சுருக்கம் 
————————————————-

வீணையின் நாதம்போல , இனிமையானது திருவாய்மொழி .
பரமாத்மா, ஜீவாத்மா , இவற்றின் தன்மைகள், 
ஜீவாத்மா பரமாத்மாவை அடையும் வழி, இதைத் தடுக்கும் 
ஊழ்வினை, –இந்தத் தடையை விலக்கி ,பரமாத்மாவை 
அடியும் பேரின்பத்தைச்  சொல்கிறது–நம்மாழ்வாரின் 
திருவாய்மொழி—

இராமாநுச  நூற்றந்தாதித்  தனியன்  

தனியன் 47—முன்னைவினையகல —-
———————————————————–

முன்னைவினையகல  மூங்கிற்குடியமுதன் 
பொன்னங்கழற்  கமலப்  போதிரண்டும்    —என்னுடைய 
சென்னிக் கணியாகச்  சேர்த்தினேன் ,தென்புலர்த்தார்க்கு 
என்னுடக்கட  வுடையேன்  நான் 

இது வேதப்பிரான் பட்டர் அருளியது என்றும்,  அருளாளப் பெருமாள் எம்பெருமானார் 
அருளியது என்றும் சொல்வர்…உத்தமூர்ஸ்வாமி , தனது ”ப்ரபந்த ரக்ஷை”யில் 
அருளாளப் பெருமாள் எம்பெருமானார்  என்றே குறிப்பிட்டிருக்கிறார். 
இவரது சரிதச் சுருக்கம் –தனியன் 36ல் உள்ளது. 

தனியனின் அர்த்தச் சுருக்கம் 
—————————————

பரம ஆசார்யனான  எம்பெருமானார் விஷயமாக  நூற்றந்தாதி 
செய்தருளிய திருவரங்கத் தமுதனாரின்  திருவடித் தாமரையை,சிரஸ்ஸில் 
தரிப்பதால் , எனக்கு அனைத்துப் பாபங்களும் அழிந்தன;
ஆகையால், யமனோ, அவனுடைய கிங்கரர்களோ  நெருங்கமாட்டார்கள் 

தனியன் 48—நயந்தரு  பேரின்பமெல்லாம்—- 
—————————————————————–

 நயந்தரு  பேரின்பமெல்லாம்   பழுதென்று  நண்ணினர்பால் 
சயந்தரு  கீர்த்தி  இராமாநுசமுனி தாளிணை மேல் 
உயர்ந்த குணத்துத் திருவரங்கத்தமுதோங்குமன்பால் 
இயம்பும் கலித்துறை யந்தாதி  ஓத இசை  நெஞ்சமே  

இது எம்பார் அருளியது என்பார்   உத்தமூர்ஸ்வாமி
( வேதாப்பிரான் பட்டர் அருளியது என்று சொல்லப்பட்டாலும் )
எம்பாரின் சரிதச் சுருக்கம்– தனியன்  29ல் உள்ளது 

தனியனின் அர்த்தச் சுருக்கம் 
—————————————

நெஞ்சமே—-ஸந்தோஷம் ,மேன்மை இவற்றைத் தருகின்ற போகங்கள் 
பழுதுள்ளது  என்று  அறிந்து,  தம்மை அண்டியவர்கள் இடத்திலே 
அவர்களுக்குத் தேவையான ,லோக விஷயங்களை வெல்கிற புகழை உடைய 
எம்பெருமானாரின் இரு திருவடிகள்   பற்றிய உயர்ந்த குண பரிபூர்ணரான 
திருவரங்கத்து அமுதனார் பெருகிவரும் பக்தியால் சொன்ன 
அந்தாதித் தொடரான ப்ரபந்தத்தை –ஓத–படிக்க–சொல்ல –விரும்புவாயாக 

தனியன் 49—-சொல்லின்  தொகை கொண்டு  

சொல்லின்  தொகை கொண்டு  உனதடிப் போதுக்குத்  தொண்டு செய்யும் 
நல்லன்பரேத்தும் உன்  நாமமெல்லாம் என்றன் நாவினுள்ளே 
அல்லும்  பகலும்  அமரும்படி  நல்கு அறுசமயம் 
வெல்லும் பரம  இராமாநுச  இது என்  விண்ணப்பமே 

இது பிள்ளான் அருளியது  என்பர்  –அதாவது–திருக்குருகைப் பிரான் பிள்ளான் 
இவரது சரிதச் சுருக்கம் , தனியன் 6ல் உள்ளது 

தனியனின் அர்த்தச் சுருக்கம் 
————————————————

பரமாசார்யரான  இராமாநுசா  !பிற மதங்களை எல்லாம் ஜெயித்து கீர்த்தி பெற்ற 
தேவரீரின் திருநாமத்துக்குப்  பற்பல விளக்கங்களைப்  பலவகையான அமுதச் 
சொற்களைச் சேர்த்து, பாசுரங்களாக அருளிய , அமுதனாராகிய  பெரும் பக்தரின் 
திருநாமத்தை இரவு பகல் எப்போதும் கூறி, தேவரீரின் பெருமைகளை அனுபவிக்கும்படியாக 
அருளவேணும் 

தனியன் 50—இனியென்குறை —-    

இனியென்குறை   நமக்கு  எம்பெருமானார் திருநாமத்தால், 
முனி தந்த நூற்றெட்டுச்  சாவித்த்ரியென்னு  நுண்  பொருளைக் 
கனிதந்த  செஞ்சொற் கலித்துறை யந்தாதி பாடித் தந்தான் 
புனிதன் திருவரங்கத்தமுதாகிய  புண்ணியனே 

 திருவரங்கத்தமுதனார் அருளிச்  செய்த இராமானுச நூற்றந்தாதிக்கு 
உரை எழுதியுள்ள 
உத்தமூர் ஸ்வாமியின் ”ப்ரபந்தரக்ஷை”யில் இந்தத் தனியன் உள்ளது .
இது மேல்நாட்டில் ( மைசூர் பாக்களில் ) அநுஸந்திக்கப்படுகிறதாகச் சொல்வர் .

அருளியது  யாரென்று தெரியவில்லை    

தனியனின் அர்த்தச் சுருக்கம்
———————————————–

 பகவான்,  ச்ருஷ்டியைத்  தொடங்கியபோது, பகவானால் உபதேசிக்கப்பட்ட, ,
விச்வாமித்ரரால்  ப்ரசாரம் செய்யப்பட –நூற்றெட்டு  ஆவ்ருத்தி 
ஜபிக்கப்பப்படுகிற ”ஸாவித்ரி ”  மந்த்ரத்தின்  ( காயத்ரி ) ஸூக்ஷ்ம அர்த்தத்தை ,
தர்ம ஸாஸ்த்ர  விஷயமான புத்தியைத் தருகிற , பகவானின் அவதாரமான 
ஆசார்ய  மூர்த்தியை  த்யானிப்பது என்பதை, எம்பெருமானார் விஷயமாக,
கலித்துறை அந்தாதி மூலமாக, திருவரங்கத்தமுதனார் தந்தார் .

நாலாயிரத் தானியங்கள்—-

இத்துடன் ,  தனியனைப் பற்றி– விளக்கம், —
அருளியவர் யார், அவரது சரிதச் சுருக்கம்,  தனியனின் அர்த்தம் –இவை 
1  முதல் 50 முடிய  முற்றுப்பெற்றது 
                                              ஸுபம் 
  

Sarvam Sree Hayagreeva preeyathaam

Dasan
Uruppattur Soundhararaajan

About the Author

Leave A Response