ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் –வ்யாக்யானம் –அதிகாரம் 1—உபோத்காத அதிகாரம்

Posted on Feb 4 2018 - 8:43am by srikainkaryasriadmin

1394444_174474746088855_399405400_n
ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் –வ்யாக்யானம் –உருப்பட்டூர் ஸௌந்தரராஜன் 

ஸ்ரீமான் வேங்கட நாதார்ய : கவிதார்கிக  கேஸரீ  |
வேதாந்தாசார்ய வர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ||

  இப்போது  எழுதுவது — 
skype ல் காலக்ஷேபமாகச் சொல்லியது, ஆடியோவில் உள்ளதான  —
எழுத்து வடிவம் , விரிவாகவே    

அதிகாரம் 1—உபோத்காத அதிகாரம் 
———————————————————–

தொடர்ந்து சொல்லப்போகும் விஷயங்களுக்கு முன்னுரை — உபோத்காதம்  

ஆபகவத்த :ப்ரதிதாம்  அநத்யாம்   ஆசார்யஸந்ததிம்  |
மனஸி  மம யத்ப்ரஸாதாத்  வஸதி   ரஹஸ்யத்ரய ஸார : அயம்  ||

வ்யாக்யானம் :–
தோஷங்கள் —அதாவது குற்றங்கள் எதுவுமே இல்லாததும் , 
மிகவும் ப்ராபல்யமானதும், பகவானே முதல் ஆசார்யனாக இருப்பதுமான ,
இந்தக் குருபரம்பரையை நமஸ்கரிக்கிறேன் –அவர்களின் க்ருபையால், 
அடியேன் மனஸ்ஸில்  மூன்று முக்ய ரஹஸ்யங்களின் 
( திருவஷ்டாக்ஷரம், த்வயம், சரமஸ்லோகம் )  ஆழ்ந்த உட் கருத்துக்கள் 
எப்போதுமே நிலைத்து உள்ளன  

2. கர்மம் ப்ரஹ்ம  ஆத்மகே சாஸ்த்ரே கௌதஸ்குத நிவர்த்தகாந் |
    வந்தே  ஹஸ்திகிரி ஈசஸ்ய  வீதீசோதக  கிங்கராந்     ||

வ்யாக்யானம் :—கர்மா விசாரம், ப்ரஹ்ம விசாரம் என்று இரண்டு பாகங்களை உடைய 
வேத சாஸ்த்ரங்களில் , ஹைதுகர்கள் —-அதாவது, எதற்கும் காரணம் 
கேட்பவர்கள்–ப்ரமாணங்களை நம்பாதவர்கள்—இவர்களைக் கண்டித்தவர்களும், 
ஸ்ரீ தேவாதிராஜனுடைய திருவீதிக்குப்பைகளைச் சுத்தம் செய்யும் கைங்கர்யங்களைச் 
செய்பவர்களுமான  ஆசார்யர்களை  நமஸ்கரிக்கிறேன். இவர் ஸ்ரீ அப்புள்ளார் —
ஸ்ரீ தேவப்பெருமாளை அடையும் வழியை–மார்க்கத்தைத் தூய்மை ஆக்கினார்       

3. ஆளும் அடைக்கலம்  என்று எம்மை அம்புயத்தாள்  கணவன் 
    தாளிணை  சேர்ந்து  எமக்கும் அவை தந்த தகவுடையார் 
    மூளும் இருட்கள் விள்ள  முயன்று ஓதிய  மூன்றின் உள்ளம் 
    நாளும் உகக்க  இங்கே நமக்கு ஓர் விதி வாய்க்கின்றதே 

வ்யாக்யானம்:–நம்மைக் காப்பாற்ற வேண்டியதாகத் தீர்மானித்து, 
நம்மைக்காக்கச் சங்கல்பித்து இருக்கிற ,தாமரைப்புஷ்பத்தில் 
வசிக்கும் ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் நாதனான எம்பெருமானின்  ஒன்றுக்கொன்று 
ஒப்பான திருவடிகளை உபாயமாகப் பற்றி, நமக்கும் அத் திருவடிகளையே
உபாயமாகக் காட்டிக்கொடுத்த க்ருபையை உடைய ஆசார்யர்கள்  ,  
மேலும் மேலும் பெருகுகின்ற அஜ்ஞான இருட்டுக்கள் அழியவேணுமென்று 
ஆசைப்பட்டு–முயற்சித்து , உபதேசித்த மூன்று ரஹஸ்யங்களின் 
உள்ளார்ந்த அர்த்தத்தை எந்நாளும் –எப்போதும் நினைத்து 
உகக்க இவ்வுலகில்   நமக்கு ஒப்புவமை இல்லாத ஒரு விதி–பாக்யம் கிடைக்கிறதே 

திருமகள் கேள்வனான எம்பெருமானின் திருவடிகள் மட்டுமே தங்களைக் காக்கும் என்றும் 
அவன்மட்டுமே தங்களுக்கு அடைக்கலம் என்றும், அறிந்த நமது ஆசார்யர்கள் 
அவனது திருவடிகளையே தங்களுக்கு உபாயமாகப் பற்றி, 
அந்தத் திருவடிகளே நமக்கும் உபாயம் என்று காட்டிக் கொடுத்தார்கள். 
இப்படிப்பட்ட ஆசார்யர்கள் நமது அறியாமை என்கிற இருளை ஒழிக்க 
மூன்று ரஹஸ்யங்களின்   உட்பொருளை நமக்கு அளித்தார்கள். 
இதைத்  தினமும் இடைவிடாது அனுபவித்து சந்தோஷப்படும் பாக்யம் 
இவ்வுலகில்  நாம் எந்தவொரு ப்ரயத்னமும் செய்யாதிருக்க 
நமக்கு, ஆசார்ய பரம்பரை மூலமாகக் கிடைத்துள்ளதே  !

4. மணிவர  இவ சௌரே :நித்யஹ்ருத்ய அபி ஜீவ :
    கலுஷமதி : அவிந்தந் கிங்கரத்வ ஆதிராஜ்யம்  |
   விதி பரிணதி பேதாத் வீக்ஷித :தேந  காலே 
   குருபரிஷத் உபஜ்ஞாம்  ப்ராப்ய கோபாயதி ஸ்வம் ||

வ்யாக்யானம் :—கௌஸ்துபமணி போன்ற  ஜீவாத்மா ,எம்பெருமானுக்குப் 
பிரியமானவன். எம்பெருமானும் கௌஸ்துபமணிக்குப் பிரியமானவன். 
ஜீவன் , தனது அறியாமையால் புத்தி தடுமாறி எம்பெருமானுக் செய்யும்
கைங்கர்யத்தை  , ஒரு காலகட்டத்தில் கைவிடும்போது, 
எம்பெருமானின் கடாக்ஷத்தால் , ஆசார்யர்களின் உபதேசங்கள்  மூலமாக,
தனது ஸ்வரூபம் பற்றிய   உண்மை அறிவு, –அதாவது–ஜீவன் எம்பெருமானின்
அடிமை,  ஜீவன் எம்பெருமானுக்காகவே இருக்கிறான்–என்கிற ஞானம் 
ஏற்படுகிறது. இதனால், ஜீவாத்மா தன்னைக் காப்பாற்றிக் கொள்கிறான். 

ஜீவாத்மாவின் ”ஸ்வரூப ” யோக்யதை 
————————————————————–

ஸ்ரீயப்பதியான  ஸர்வேச்வரனுக்கு ஸ்ரீ கௌஸ்துப  ஸ்தானீயனாய்க் கொண்டு 
ஹ்ருதயங்கமனாய்  குமாரனென்றும், புத்ரனென்றும்,  சிஷ்யனென்றும் ,
ப்ரேஷ்யனென்றும் ,சேஷபூதனென்றும் , தாஸபூதனென்றும் ,அவ்வோ 
ஸாஸ்த்ரங்களிலே ப்ரதிபன்னனாயிருக்கும்     ஜீவாத்மா , இவன் தனக்கு வகுத்த 
சேஷியாய் ,அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் ,உயர்வற உயர்நலம் 
உடையவனாய் ,நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும் இன்பனாய் 
ஞாலத்தார் தமக்கும் வானத்தவர்க்கும் பெருமானான  ஸர்வேச்வரன் 

வ்யாக்யானம் :—ஸ்ரீ லக்ஷ்மி நாயகனான பகவானுக்கு , ஜீவாத்மா 
பகவானின் கௌஸ்துபமணி போன்று மிகவும் பிரியமானவன் என்றும் . 
இவன் , பகவானுக்கு இளவரசன் எனவும் , புத்ரன் எனவும் சிஷ்யன் எனவும்
வேலைக்காரன் எனவும் , அவனுக்காக மட்டுமே உள்ளவன் எனவும்,
அடிமை எனவும்  பற்பல சாஸ்த்ரங்கள் கூறுகின்றன.
இந்த ஜீவாத்மாவுக்கு , வகுத்த எஜமானனாய் ,அறியாமையே இல்லாத 
நித்ய ஸூரிகளுக்கு அதிபதியாய், தன்னையொத்தாரும் ,மிக்காரும் 
என்று ஏதுமில்லாத கல்யாண குணசாலியாய் , தனது திருமார்பில் 
தாமரையில் வீற்றிருக்கும் ஸ்ரீ மஹாலக்ஷ்மியை எந்த அளவுக்கு 
விரும்புகிறானோ அந்த அளவுக்கு விரும்புகிறவனாய் இவ்வுலகவாசிகள், 
அவ்வுலகவாசிகள் அனைவருக்கும் எம்பெருமான் ,ஸர்வேச்வரனாக உள்ளான் .

வைகுண்டேது பரே  லோகே  ஸ்ரீயா ஸார்த்தம் ஜகத்பதி : ஆஸ்தே  என்றும் 
ஒண்தொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்ப  என்றும் சொல்லுகிறபடியே 
பெரிய பிராட்டியாரோடே கூடத் தெளிவிசும்பிலே ,  யா அயோத்யா இதி 
 அபராஜிதா  இதி விதிதா  நாகம் பரேண  ஸ்திதா  என்கிறபடியே 
அயோத்யாதிசப்தவாச்யமான  கலங்காப் பெருநகரிலே ,ஸஹஸ்ரஸ்தூணாதி 
வாக்யங்களாலே ஓதப்படுகிற  திருமாமணி மண்டபத்திலே , கௌஷீதகி 
ப்ராம்மணதிகளிலே ஓதப்படுகிற பர்யங்க விசேஷத்திலே , சென்றால் 
குடையாம் இருந்தால் சிங்காசனமாம் என்றும் நிவாஸசய்யாஸந  என்றும் 
சொல்லுகிறபடியே , ஸர்வ தேச –ஸர்வ கால –ஸர்வவஸ்தோசித் –ஸர்வ வித 
கைங்கர்யங்களையும் ,ஸர்வவித சரீரங்களாலே அனுபவித்துச் சேஷத்வமே 
தனக்கு நிரூபகமாகையாலே  சேஷன் என்றே திருநாமமாகும்படியான 
திருவனந்தாழ்வானாகிற  திருப்பள்ளி மெத்தையிலே 
வானிளவரசாய்க்   கொண்டு தான் வாழ்கிற  வாழ்வை  ஸர்வாத்மாக்களும் 
அநுபவித்து க்ருதார்த்தராக வேணும்  என்று ஸஹ்ருதனாயிருக்கிற 
இருப்பு  அடியாக —
இருப்பு  அடியாக  நித்யானுபவம் பண்ணுகிற அந்தமில் பேரின்பத்தடியரான 
நித்யஸூரிகளோடு  ஒக்கத்  தானும் ஸ்வாமி கைங்கர்யத்துக்கு 
ஸ்வரூப யோக்யதையாலே இட்டுப் பிறந்து வைத்து அநாதி மாயையாலே
ஸுப்தனாய்   —அநேக ஜன்ம  ஸாஹஸ் ரீம்  ஸம்ஸார பதவீம் வ்ரஜந்  மோஹ 
ச்ரம ப்ரயாதோ  அஸௌ  வாஸனா  ரேணு குண்டித :—-
என்கிறபடியே ப்ரக்ருதியாகிற  பாழிலே விழுந்து   ஓடியோடிப் 
பல  பிறப்பும் பிறந்து தட்டித்தாவற்று  அழுக்கடைந்து, ஒளி அழிந்தபடியாலே 
தத்வஹித விஷயமாய் யதாவத் ப்ரகாசா ரஹிதனாய் நிற்க—-

வ்யாக்யானம் :—  வைகுண்டேது பரே  லோகே  ஸ்ரீயா ஸார்த்தம் ஜகத்பதி : 
லைங்க புராணம் இப்படிக்  கூறுகிறது—-ஸமஸ்த உலகங்களுக்கும் 
எஜமானன் ஆக  இருக்கிற   பகவான் ,வைகுண்டத்தில் ஸ்ரீ மஹாலக்ஷ்மியுடன் 
விளங்குகிறான். 
ஸ்ரீ நம்மாழ்வார் ,திருவாய்மொழியில் சொல்கிறார் —-
 
கண்டு கேட்டுற்று மோந்துண்டுழலும்  ஐங்கருவி 
கண்ட இன்பம் , தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம் 
ஒண்தொடியாள்  திருமகளும் நீயுமே  நிலா நிற்ப 
—————————————————————————-
கண்டசதிர்    கண்டொழிந்தேன் அடைந்தேன் உன் திருவடியே 
                                                                      ————–திருவாய்மொழி (4-9-10)

அழகிய வளையல்களை அணிந்த பிராட்டியும் , நீயும் ,
உங்களைத் தவிர வேறு  ஈச்வரர்களில்லை  என்னும்படியாக ஸேவை சாதிக்க
நித்ய ஸூரிகளைப்போல  எல்லா ஆத்மாக்களும்  உன்னை அநுபவித்துக் 
கைங்கர்யம் செய்யும்படியான –இப்படி உன்னால் ஏற்பட்ட புருஷார்த்தத்தை 
நான் ஸாக்ஷாத்கரித்தேன் 
ஸ்ரீ உத்தமூர் ஸ்வாமி, தன்னுடைய பிரபந்த ரக்ஷையில் கூறுகிறார்—
பொருள் அழிவு, ஆயுள் முடிவு, பேராசை பரஹிம்ஸை பலநரக  பாதையான 
ஸம்ஸாரத்திலே , ஐங்கருவி( ரூபம்,சப்தம்,  ஸ்பர்சம் ,வாஸனை , ரஸம்  )   இன்பத்தை 
அநுபவித்து அதன் வாசனையால் மேன்மேல் திரிகின்ற பஞ்சேந்த்ரியங்களால் 
மறுபடியும் மறுபடியும் சிற்றின்பத்தை நுகர்ந்து, அவை அற்பமாய் துயரமாகவே 
இருப்பதையும் , ஆத்ம அனுபவமென்கிற ”கைவல்யம் ”எம்பெருமானைப் 
பற்றிய அறிவு சிறிதும் அப்போது இல்லாததால் மிகக்  கேவலமே என்றும், 
அவற்றில் இழிந்தாரோடு ஸ்நேஹம் அனர்த்தம் விளைவிக்கும் என்றும் 
 இவைகளை விட்டொழித்து,நேராக உன் திருவடிகளை ஆச்ரயித்தேன் 

ஸ்ரீ குணரத்னகோசம் ( 23 )  ( ஸ்ரீ பராசர பட்டர்  அருளியது–இவரது சரிதம்
அடியேன் எழுதியுள்ள தனியன் தொடரில் உள்ளது )
 ஆஜ்ஞாநுக்ரஹ   பீமகோமலபுரீபாலா  பலம் பேஜுஷாம்  
யாயோத்யேத்யபராஜிதேதி விதிதா  நாகம் பரேண  ஸ்த்திதா  |
————————————————————————————————–
பாவை ரத்புத   போகபூமகஹநை : ஸாந்த்ரா ஸுதாஸ்யந்திபி :
ஸ்ரீ ரங்கேஸ்வர கேஹ லக்ஷ்மி !யுவயோ :தாம் ராஜதாநீம் விது : ||        

ச்ருதி–ஸ்ம்ருதி –இதிஹாஸ –புராண–ஸ்ரீ பாஞ்சராத்ராதிகளிலும் ,
ஆழ்வார்களின் அருளிச் செயல்களிலும் விவரிக்கும் பரமபதத்தை 
இந்த ச்லோகத்தில் , ஸ்ரீ பட்டர் கூறுகிறார் 
ஆணையிடுவதும் , வாழ்த்துவதும் ஆகிய செயல்களைச் செய்யும் 
த்வாரபாலகர்களை உடைய நகரம்—
எம்பெருமானை, -பக்தி-ப்ரபத்தி  வழிகளில் ஆச்ரயித்தவர்களுக்கு,
அடைய வேண்டிய பயன்  ——–
யுத்தம் செய்து வெல்ல இயலாத நகரம்—— 
என்றும் எவராலும் தோற்கடிக்கப்பட முடியாத நகரம்——– 
வேதங்களால் அறியப்பட்ட நகரம் ———
ஸ்வர்காதிகளுக்கும் மேலே உள்ள நகரம் ——–
என்றும் நிலைத்திருக்கும் நகரம் ——–
அத்புதமான பகவதனுபவம் நிறைந்த பொருட்களால் 
செழிப்பான நகரம்———– 
அத்தகைய நகரம்–வைகுண்டம் –பரமபதம் என்பது–
திவ்ய தம்பதியரான உங்கள் தலைநகர் 
என்று வேதவிற்பன்னர்கள் புகழ்கிறார்கள்
 
 
தலவகாரோபநிஷத்  கூறுகிறது— 

அயோத்யாதிசப்தவாச்யமான  கலங்காப் பெருநகரிலே ,ஸஹஸ்ரஸ்தூணாதி
வாக்யங்களாலே ஓதப்படுகிற  திருமாமணி மண்டபத்திலே
————————————————————————————–
வைகுண்டத்துக்கும் அப்பால், அயோத்யா என்றும்,  எவராலும் வெல்ல இயலாத 
அபராஜிதா என்றும்  கூறப்படும் நகரத்தில்,  ஆயிரமாயிரம் தூண்களையுடைய 
திருமாமணி மண்டபத்தில், 
  
கௌஷீதகி 
ப்ராம்மணதிகளிலே ஓதப்படுகிற பர்யங்க விசேஷத்திலே ,  
——————————————————————————————–
கௌஷீதகி ப்ராம்மணம் போன்றவைகள்  சொல்கின்றன—

பர்யங்கம்–உயர்ந்த ஸிம்ஹாஸனத்திலே  அமர்ந்துள்ளான் 
முக்தனான  ஜீவன், அளவற்ற பிரகாசத்தை உடைய ஸிம்ஹாஸனத்தை நெருங்குகிறான்.
அந்த ஸிம்ஹாஸனத்தில் , பரமாத்வாகிய பகவான் வீற்றிருக்கிறான். 

அந்தஸிம்ஹாஸனம்  .

— சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம் என்றும் 
——————————————————————————————————-
சென்றால் குடையாம்  இருந்தால் சிங்காசனமாம் 
நின்றால்  மரவடியாம்   நீள்கடலுள் —-என்றும் 
புணையாம் மணிவிளக்காம் பூம்பட்டாம் புல்கும் 
அணையாம்  திருமாற்கு அரவு 

ஆதிசேஷன், எம்பெருமான் நடந்தால் குடையாகவும், அமர்ந்தால்  ஸிம்ஹாஸனம் 
ஆகவும், இருக்கிறான் . 

நிவாஸஸய்யாஸந  என்றும் சொல்லுகிறபடியே 
———————————————————————————-

 ஸ்ரீ ஆளவந்தார் ஸ்தோத்ரம் —-ஸ்தோத்ர ரத்னம் ( ச்லோகம் 40 )

நிவாஸசய்யாஸந பாதுகாம்சுக  உபதாந வர்ஷாதப வாரணாதிபி  : |
———————————
சரீர பேதைஸ்தவ சேஷதாம்  கதை :யதோசிதம்    சேஷஇதீரிதே  ஜநை  : ||   

 ஆளவந்தார் ஸ்தோத்தரிக்கிறார் —
திருக்கோயில், திருப்பள்ளி ,சிங்காசனம் ,திருவடிநிலை, பீதாம்பராதி,தலையணை 
முதலானவை,மழையையும் வெய்யிலையும் விலக்கவான   குடை,பாதபீடம் முதலாக 
மாற்றுமான  தகுமாறு உனக்கு பணிவிடைக்கான நிலையைப் பெற்றவனான 
தனது உருவங்களாலே அந்தந்தக் கார்யங்களுக்குத் தகுந்தாற்போல  
எல்லா ஜனங்களாலும் சேஷனென்றே அழைக்கப்படுகிற –ஆதிசேஷன் .
இவ்வாறு, எண்ணற்ற உருவங்களெடுத்து , தனக்கென்று எந்த எண்ணமுமின்றி,
பகவானுக்கு மட்டுமே அடிமையாகி, எல்லாக் கைங்கர்யங்களையும் 
செய்துவருவதால், சேஷனாயிருப்பவனின் செயல்கள் எல்லாம் இருப்பதாலே,
சேஷன் என்றே பேர் பெற்று, அறிந்தவர், அறியாதார் எல்லோராலும் 
சேஷன் என்றே பேசப்படுகிறான்  

இவ்விதம் ,  தான் பெறுகின்ற  நிலையான கைங்கர்யத்தைப் போன்று, 
அனைத்து ஆத்மாக்களும் செய்து தன்னை அனுபவிக்க வேண்டும் என்கிற 
திருவுள்ளம் கொண்டவனாக   எம்பெருமான் உள்ளான்
 —இப்படியாக, ஜீவாத்மா , தன்னுடைய ஸ்வரூபத்துக்கு
ஏற்றவாறு , எம்பெருமானுக்கு எப்போதும் கைங்கர்யம் செய்வதில்
எல்லையற்ற பரமானந்தம் உள்ள நித்ய ஸூரிகளைப்போலவே ,
கைங்கர்யம் செய்யும் தகுதி உள்ளவனே—
ஆனால், இந்த ஜீவாத்மா, அநாதியான  ப்ரக்ருதி ஸம்பந்தத்தால்
எண்ணிலாப் பிறப்புகள்அடைந்து,  தட்டித் தடுமாறி, 
ஸம்ஸார அழுக்கடைந்து,சுருங்கிய ஞானத்தை உடையவனாய் ,
ஒன்றும் விளையா நிலம் போலே ,கிடைக்கவேண்டியது கிடைக்காமல்,
இளைப்பாறும் இடமில்லாதவனாகி,விபரீத வாஸனாருசிகளை அடைந்து,
ஸ்வரூபப்  பிரகாசத்தையும்  இழந்து,உண்மையான ஞானமில்லாமல்
இருக்கிறான்
இதை ஸ்ரீ விஷ்ணு புராணம் இவ்வாறு சொல்கிறது—
 அநேக ஜன்ம  ஸாஹஸ் ரீம்  ஸம்ஸார பதவீம் வ்ரஜந்  மோஹ 
ச்ரம ப்ரயாதோ  அஸௌ  வாஸனா  ரேணு குண்டித : 

அநேகமாயிரமாயிரம்  ஜன்மமெடுத்து, ஸம்ஸார மார்க்கத்தில் சென்று, 
மோஹத்தில் மூழ்கி, ச்ரமத்தை  அடைந்து, தான் யாரென்றே அறியாதபடி, 
மயக்கத்தில், கர்மாக்களின் வாஸனையாகிற  புழுதியில் அகப்பட்டு, 
ஞானத்தை இழந்து ஜீவாத்மா உள்ளான் .  

இனி, ஸ்வாமி தேசிகன்,”  ராஜகுமார  த்ருஷ்டாந்தம்”  சொல்கிறார்—
 அதை  , அடுத்ததாகத் தொடர்ந்து  எழுதுவோம் 

முதல் அதிகாரம் —தொடருகிறது——-

Sarvam Sree Hayagreeva preeyathaam

About the Author

Leave A Response