—
ஸ்ரீமான் வேங்கட நாதார்ய : கவிதார்கிக கேஸரீ |
வேதாந்தாசார்ய வர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ||
இந்த அதிகாரத்தில் ,ஸ்வாமி தேசிகன் ,மோக்ஷத்தை அடைவதற்கான
பிரிவுகளைச் சொல்கிறார்
அதிகாரத்திலிருந்து
உபாய : ஸ்வப்ராப்தே : உபநிஷத் அதீத : ஸ பகவான்
ப்ரஸத்த்யை தஸ்ய உக்தே ப்ரபதந நிதித்யாஸந கதீ |
ததாரோஹ : பும்ஸ : ஸுக்ருத பரிபாகேண மஹதா
நிதானம் தத்ர அபி ஸ்வயம் அகில நிர்மாண நிபுணா : ||
வ்யாக்யானம்
பகவானை அடைவதற்கான உபாயம் அவனே –இதை உபநிஷத்துக்கள்
சொல்கின்றன. பகவானின் க்ருபையைப் பெற இரண்டு மார்க்கங்கள்
ஒன்று பக்தி ,மற்றொன்று ப்ரபத்தி. இந்த வழிகளில், இழிவதற்கு,
பூர்வ ஜன்ம புண்யம் தேவைப்படுகிறது.இருந்தாலும், அனைத்துக்கும்
யஜமானனான பகவானே காரணம்.
அதிகாரத்திலிருந்து
உபாயம் மற்றும் உபேயம்
இவர்களுக்குக் கர்த்தவ்யமான உபாயமாவது ஒரு ஜ்ஞானவிகாஸ விசேஷம்.
இத்தாலே ஸத்யமாய் ப்ராப்திரூபமான உபேயமாவது ஒரு ஜ்ஞானவிகாஸ விசேஷம்.
இவற்றில் உபாயமாகிற ஜ்ஞானவிகாஸ விசேஷம் கரண ஸாபேக்ஷமுமாய்
சாஸ்த்ர விஹிதமுமாய் ஸத்யத்வாதிகளான ஸ்வரூபநிரூப தர்மங்கள்
அஞ்சோடே கூடின அவ்வோ வித்யாவிசேஷ ப்ரதிநித்ய குணாதிகளிலே
நியதப்ரஹ்ம விஷயமுமாயிருக்கும்.
உபேயமாகிற ஜ்ஞானவிகாஸ விசேஷம் கரண நிரபேக்ஷமுமாய் ஸ்வபாவ
ப்ராப்தமுமாய் குண விபூத்யாதிகள் எல்லாவற்றாலும் பரிபூர்ண விஷயமுமாயிருக்கும்.
வ்யாக்யானம்
மோக்ஷத்தை விரும்பும் முமுக்ஷுக்களுக்குத் தேவையானது, ஒருவித
ஜ்ஞான மலர்ச்சி .இது உபாயம். இந்த உபாயத்தின் மூலமாக வேண்டும் வஸ்து
உபேயம் , இது மற்றோர் வகை ஜ்ஞான மலர்ச்சி
உபாயமாக இருக்கிற ஜ்ஞான மலர்ச்சி இந்த்ரியங்களை அடிப்படையாகக் கொண்டது,
என்று சாஸ்த்ரங்கள் சொல்கின்றன. இது ஐந்து தன்மைகள் கொண்டது.
ஆனந்தவல்லி என்கிற ப்ரஹ்ம வள்ளி ( வாருணீ உபநிஷத் ) சொல்கிறது—
ப்ரஹ்மவிதா” ப்னோதி பர”ம்
ப்ரஹ்மத்தை அறிந்தவன் ப்ரஹ்மத்தை அடைகிறான்
ப்ரஹ்மம் ,ஸத்யம் ஜ்ஞானம் , அனந்தம் —இந்த ப்ரஹ்மம், ஹ்ருதயகுகையில்
பரமாகாசத்தில் இருக்கிறது. இது ப்ரஹ்மத்தையே குறியாகக் கொண்டுள்ளது.
இப்போது சொன்ன ஸத்யம் முதலான தன்மைகள் அந்த ப்ரஹ்மத்தின் ஸ்வரூபத்தைச்
சொல்கிறது.தவிரவும் பல ப்ரஹ்ம வித்யைகளில் சொல்லியுள்ள தன்மைகளும் உள்ளன.
ஆனால், உபேய ஜ்ஞான மலர்ச்சி, ஞானேந்த்ரியங்களின் உதவியின்றி இயங்குகிறது.
இது, ஜீவாத்மாக்களுக்கு இயற்கையாகவே உள்ளது.எல்லா குணங்களும், விபூதிகளும் உள்ள
ப்ரஹ்மத்தை இலக்காகக் கொண்டுள்ளது.
அதிகாரத்திலிருந்து
உபாஸிதகுணாதேர்யா ப்ராப்தாவப்ய வஹிஷ்க்ரியா
ஸா தத்க்ரதுநய க்ராஹ்யா ந ஆகாராந்தா வர்ஜநம்
வ்யாக்யானம்
தத்க்ரதுந்யாயம் என்று சொல்கிறார்கள். இது, பகவானை அனுபவிக்கும் சமயத்தில்
த்யானம் முதலியவை அப்படியே உள்ளன என்பதைச் சொல்கிறது. வேறு எதையும்
விடச் சொல்லவில்லை.
தத்க்ரதுந்யாயம்
இவ்வுலகில் முமுக்ஷு, பகவானை எவ்வித குணம் உள்ளவனாக உபாஸிக்கிறானோ
த்யானம் செய்கிறானோ, அவ்வித குணம் உள்ளவனாகவே ,சரீரத்தை விட்டு
பகவானை அடையும்போதும் அநுபவிக்கிறான் .
இது சாந்தோக்யத்தில் சொல்லப்படுகிறது
இங்கு உபாஸிக்கப்படும் / த்யானிக்கப்படும் பகவானின் குணங்கள்
மோக்ஷ தசையில் அவச்யம் அனுபவிக்கப்படுகிறது என்பதுதான் ,இந்த
”ந்யாயத்”துக்குத் தாத்பர்யம். இங்கு உபாஸிக்கப்படாத / த்யானிக்கப்படாத
குணாதிகள் அங்கு அனுபவிக்க உரியன அல்ல என்றோ அனுபவிக்க
இயலாது என்றோ தாத்பர்யமல்ல.
அதிகாரத்திலிருந்து
உபாய,உபேயங்கள் -பக்தருக்கும், ப்ரபந்நருக்கும் எப்படிப் பயனளிக்கிறது ?
ப்ராப்திரூபமான இவ்வநுபவத்தினுடைய பரீவாஹமாய்க் கொண்டு கைங்கர்யம்
உபேயம். இவ்வுபாயரூபமாயும், ப்ராப்திரூபமாயுமிருக்கிற ஜ்ஞானத்துக்கு
விஷயமாய்க் கொண்டு பலப்ரதந்த்வ போக்யத்வாதிவேஷத்தாலே ஈச்வரனுக்கு
உபாயத்வமும் உபேயாதவமும்
இவ்வீச்வரனுடைய உபாயத்வம் அத்வாரக ப்ராப்திநிஷ்டன் பக்கல்
உபாயாந்தர ஸ்தாந நிவேசத்தாலே விசிஷ்டமாய் இருக்கும். மற்ற அதிகாரிக்கும்
கர்மயோகாரம்பம் முதலாக உபாஸநபூர்த்தி பர்யந்தமாக நடுவுள்ள
கர்த்தவ்யங்களில் அத்யந்த அசக்த்யமான நேர்களிலே இப்ப்ரபத்தி வசீக்ருதனான
ஈச்வரன் புகுந்து நின்று அந்த துஷ்கர கர்த்தவ்யங்களாலே வரும் பாபநிவ்ருத்தியையும்
ஸத்த்வோந்மேஷாதிகளையும் உண்டாக்கிக் கொடுத்து அவ்வுபாஸநமாகிற
உபாயத்தை பலபர்யந்தமாக்கிக் கொடுக்கும்.
வ்யாக்யானம்
பகவானுக்குச் செய்யும் கைங்கர்யம், நாம் அடையும் பேறு –பாக்யம் .
இது அடையும் பேறாக இலக்காக (உபேயம் ) உள்ளது.ஜ்ஞானத்துக்கு விஷயமாக
உள்ள பகவானே உபாயமாகவும் உபேயமாகவும் உள்ளான்.எல்லாவித பலன்களையும்
அளிப்பதால், உபாயமாகவும், அனுபவிக்கப்படவேண்டியவனாக இருப்பதால்
உபேயமாகவும் உள்ளான் .
முமுக்ஷு ப்ரபத்தி செய்யும்போது, அதற்கு எல்லாவித உபாயமாக பகவான் இருக்கிறான் .
பக்தியோகம் செய்யும் பக்தனுக்கும் பகவானிடம் ஈடுபாடு உள்ளது.இவன் கர்மயோகம்
செய்யும்போது, இவன் செய்த பாவத்தின் காரணமாக அந்தக் கர்மயோகம் தடைபடலாம் .
கர்மயோகம் தொடங்குதல், தொடங்கியது முடியாமலிருத்தல் என்கிற நிலைகள்
ஏற்படுகின்றன. அச்சமயம் பகவான் க்ருபைசெய்து , தடை செய்யும் பாவங்களை ஒழித்து
ஸத்வ குணம் மேலோங்கும்படி அருள்கிறான்.இவர்களின் உபாஸனம் / த்யானம்
இவையாவும் பலனளிக்குமாறு அருள்கிறான்.
அடியேன்
பக்தியோகம் செய்பவன் அதில் இழியும்போது அதற்கான உபாயங்களைச் செய்கிறான்.
அப்போது, அவன் செய்த பாவங்கள், உபாயத்துக்குத் தடைசெயும் . அதை விலக்க ,
பெரிய பெரிய ப்ராயச்சித்தங்களைச் செய்கிறான். அந்த ப்ராயச்சித்த ஸ்தானத்தில்
பகவானை நிறுத்துகிறான். பகவானும் அந்த ஸ்தானத்தில் இருந்து தடைகளை நீக்கி
ஸத்வகுணம் மேலோங்கச் செய்கிறான். அதனால் பக்தி வளர்கிறது.
ஆகையால், ப்ரபத்தியின் கார்யம் எங்கும் ஒரே ரீதியாக இருக்கிறது.பக்தி யோகத்துக்கு
மட்டுமல்ல, பகவத் விஷயமான பக்தியோகத்துக்கு முன்பாக ஜ்ஞான யோகத்தையும்
அதற்கும் முன்னே கர்மயோகத்தையும் ஸாத்விகத் த்யாகத்தோடு —
கர்மாக்களைத் தொடங்கிச் செய்கிறான். எல்லாத் தடைகளையும் கர்மயோகம்
முதற்கொண்டு —ஏற்படும் தடைகளை—விலக்க –ப்ரபத்தி செய்கிறான்.
ஆக , பக்திநிஷ்டனுக்கும் ,ப்ரபத்தி தேவை. இப்படிப் பல ப்ரபத்திகளை,
பக்தியோகத்துக்காகச் செய்கிறான்.ஆதலால், பக்தியோகத்தை விடமாட்டான்.
அதிகாரத்திலிருந்து
கர்மயோகத்தின் ஸ்வரூபம்
அங்குக் கர்மயோகமாவது –சாஸ்த்ரத்தாலே ஜீவ பரமாத்மா யாதாத்மஜ்ஞானம்
பிறந்தால் தனக்கு சக்யங்களாய் பலஸங்காதி ரஹிதங்களான காம்யகர்மங்களோடும்
நித்ய நைமித்திகங்களோடும் கூட ஸநியமமாகப் பரிக்ருஹீதமாயிருக்கும்
கர்மவிசேஷம். அதின் அவாந்தர பேதங்கள் தைவமேவாபரே யஜ்ஞம் என்று
தொடங்கிச் சொல்லப்பட்ட தேவார்சன தபஸ்தீர்த்த தாந யஜ்ஞாதிகள் அதிகாரி
பேதத்தாலே ப்ரபத்திதானே பக்தியை இடையிட்டும் இடையிடாதேயும் மோக்ஷ
ஹேதுவானாற்போலே இக்கர்மயோகம் ஜ்ஞான யோகத்தை இடையிட்டும்
இடையிடாதேயும் ஸபரிகரமான யோகத்தைக் கொண்டு ஆத்மாவலோகந
ஸாதனமாம்
வ்யாக்யானம்
கர்மயோகம் என்பதை விளக்குகிறார் ,ஸ்வாமி தேசிகன்.
சாஸ்த்ரங்களை அறிந்ததால் ஜீவாத்ம —பரமாத்ம ஜ்ஞானமும் ,விவேகமும்
உண்டாக்கிக் செய்யப்படுவது ”கர்மயோகம் ”***
இது, நித்ய கர்மா, நைமித்திக கர்மா , காம்ய கர்மா என மூவகை.இவை
ஒவ்வொன்றும், அவற்றைச் செய்யும் அதிகாரி–முமுக்ஷு –இவனின் திறமையைப்
பொறுத்தது.
ஸ்ரீமத் பகவத் கீதை (4–2–5 )
தைவமேவாபரே யஜ்ஞம் யோகிந : பர்யுபாஸதே |
ப்ரஹ்மாக் நாவபஸே யஜ்ஞம் யஜ்ஜேநைவோ பஜுஹ்வதி ||
சில கர்மயோகிகள், தேவதாராதனமென்றுயஜ்ஞம் செய்கிறார்கள்.வேறுசிலர்
ப்ரஹ்மமாகிய அக்நியில் யஜ்ஞத்தால் யஜ்ஞத்தையே ஹோமம் செய்கிறார்கள்.
அதாவது,கர்மயோகங்கள் பல . ஜீவ —ஆத்ம தர்ஸநம் வேண்டும் என்று
ஸங்கல்பித்துக் கொண்டு ஸஹஸ்ரநாம அர்ச்சனை போன்று தேவாரச்சனை
செய்வது.ஏதேனும் ஒருவிதமான ”தபஸ் ” செய்வது.தீர்த்த யாத்ரை செய்வது.
தானம் செய்வது. யாகம் செய்வது.தினமும் யஜ்ஞம் செய்வது;இதைத்
தொடர்ந்து செய்யவேண்டும் .ஒருநாள், தேவாரச்சனை, ஒருநாள் தானம்,
ஒருநாள் யாகம் என்று மாற்றலாகாது.இப்படிச் செய்தால், வைராக்யம்
முதிரும்.ஜீவாத்ம தர்ஸநத்துக்கான மனஸ் ஸுத்தி ஏற்படும்.
மற்ற நித்ய நைமித்திக கர்மாக்கள் ,இதற்குத் துணையாகச் செய்யவேண்டும்.
இவற்றை, ஆச்ரம தர்மம் என்றும் சொல்வர்
இந்த நித்ய கர்மாநுஷ்டானத்தை
ஜ்ஞான யோகம் செய்பவனும் அதற்குத் துணையாகச்செய்வான்.
பக்தி யோகம் செய்பவனும் இதற்குத் துணையாகச் செய்வான்.இந்த
நித்யகர்மாநுஷ்டானம் அதற்குத் துணையே. இதுவே கர்மயோகம் அல்ல.
ப்ரபத்தி எப்படி அதைச் செய்யும் அதிகாரியின் தகுதியைப் பொறுத்து,
நேரடியாகவோ அல்லது பக்தியை முன்னிறுத்தியோ மோக்ஷம் அளிக்கிறதோ
அதைப்போல கர்மயோகமானது ஜ்ஞான யோகத்தை முன்னிறுத்தியோ அல்லது
தான்மட்டுமாகவோ ஆத்ம தர்ஸனத்தை உண்டாக்கும்
அடியேன்
முமுக்ஷுவுக்கு நான்கு உபாயங்கள்
கர்மயோகம், ஜ்ஞானயோகம் பக்தியோகம் ப்ரபத்தி
கர்மயோகம், ஜ்ஞானயோகம்–என்றது, இவன் செய்யவேண்டிய
நித்ய கர்மாக்களையும் ,இவன் பெறவேண்டிய ஆசார்ய முகேன –மூலமாக —
பகவத்ஜ்ஞானத்தையும் என்று பொருள். இவை இல்லாமல் பக்தியோகத்தை
அநுஷ்டிக்க முடியாது.
ஸ்வர்க்கத்தை அபேக்ஷிப்பவன் –யாகம் செய்ய வேண்டும் என்று இருக்கிறது.
இது கர்மா. இது விஷயத்தில், ஜ்ஞானம் தேவைஅல்லவா ?
கர்மயோகம் என்பது –நித்யகர்மாநுஷ்டாநம் என்று அர்த்தமல்ல .
ஜ்ஞானயோகம் என்பது பரமாத்ம விஷய ஜ்ஞானம் என்றுஅர்த்தமல்ல .
இவை, நேராக மோக்ஷ ஸாதனம் ஆகாது .இவை,பக்தியோகத்துக்குச்
ஸாதனம் .
இந்த அதிகாரத்தில், கர்ம ,ஜ்ஞான,பக்தி ,ப்ரபத்தி ,ஈச்வரன் என்கிறார்.
உபாயத்தில் இரண்டே —
ஸித்தோபாயம் , ஸாத்யோபாயம்
மோக்ஷத்துக்கு உள்ள ஸாத்ய உபாயத்தில் பக்தி, ப்ரபத்தி இரண்டுதான்.
அந்த பக்தியில் பல உட்பிரிவுகள் உள்ளன.
ப்ரபத்தியிலும் மாநஸ, வாசிக என்று உள்ளன.
கர்ம , ஜ்ஞான யோகங்கள் —உபாயங்கள்
பக்தி யோகம் செய்வதற்கு முன்பு,ஜீவாத்மஸ்வரூபம் முதலியன
தெரிந்திருக்கவேண்டும் .அதற்கு கர்ம , ஜ்ஞான யோகங்கள் தேவை
இதற்கும் முன்பு , ஜீவாத்மஸ்வரூபம் எப்படிப்பட்டது என்று ஆசார்யன் மூலமாக
அறிந்திருக்கவேண்டும் . பிறகு, முமுக்ஷுவாகி ,ஸாத்விகத்யாகத்துடன்
ஸகல கர்மாநுஷ்டானம் செய்பவனாக இருக்கவேண்டும்.
அந்த நித்ய, நைமித்திக கர்மாநுஷ்டானம் ,கர்மயோகம் தொடங்குவதற்கு
முன்பும், கர்மயோகாதிகளில் இழியாத ப்ரபத்தி நிஷ்டனுக்கும்
பக்தியோகம் முடிவாக அநுஷ்டிப்போருக்கும் —–ஆக , இந்த மூன்று
பிரிவினருக்கும் பொது.பொதுவான இவர்களைவிட, கர்மயோகம் என்பது வேறு.
—————————————————————————
இவைகளுடன் ,வேதங்களில் காம்யமாக அதாவது ஐஹிக ,ஆமுஷ்மிகமான
பலன்களுக்குச் சொல்லப்பட்டிருக்கும் கர்மாக்களைக்கூட ,தனக்கு மேலும்
வைராக்யம் வளர்வதற்காக ,அந்தப் பலன்களைத் த்யாகம் செய்துவிட்டு
பகவத்ப்ரீதிக்காகச் செய்கிறேன் என்று ஸங்கல்பித்து ,முடிந்தவரை
செய்யலாம். அவையும் இவன் செய்யும் யோகத்துக்குத் துணையாகி
இவன் செய்யும் யோகம் பூர்த்தி செய்ய உதவும்.
இதையே, ” பலஸங்காதி ரஹிதங்களான காம்யகர்மங்களோடும் –”என்று
ஸ்வாமி தேசிகன் ஸாதித்துள்ளார்.
அதாவது,பலத்தில் பற்று ,நான் கர்த்தா, இது எனக்கு என்கிற புத்தி–எண்ணங்கள்
இல்லாமலிருக்கவேண்டும். கர்மாநுஷ்டானத்தில், இவற்றை விடவேண்டும். இதற்கு
முன்பாகவே ஜீவன் வேறு, தேஹம் வேறு ,பரமாத்மா வேறு என்றும் ,அதனதன்
ஸ்வரூப விவேகம் வேண்டும். மோக்ஷம் வேண்டும் என்கிற தெளிவுவேண்டும்.
இதுதான் ” -சாஸ்த்ரத்தாலே ஜீவ பரமாத்மா யாதாத்மஜ்ஞானம் பிறந்தால் ”
என்று சொல்லப்படுகிறது.
அநேக காலம் தேஹ சக்தியுடனும், பிறர் ஸஹாயத்துடனும் தேவார்ச்சனை
தீர்த்த, யஜ்ஞ கர்மாக்களைச் செய்பவன் ,மனஸ் ஸுத்தி பெற்று
இந்த உதவிகளைப் பெறாமல் ஜ்ஞான யோகத்தையே செய்வான்.
அதன்பிறகு, முக்ய யோகத்தைச் செய்வான்.ஆஸனத்தில் அமர்ந்து,
ப்ராணாயாம பூர்வகமாக எல்லா இந்த்ரியங்களையும் அடக்கி ,மனத்தை
ஒருமுகப்படுத்தி, ஜீவாத்மாவைத் தொடர்ச்சியாகத் த்யானம் செய்தால்
ஜீவாத்ம தர்ஸநம் (அவலோகநம் ) ஏற்படும்.
அதிகாரத்திலிருந்து
ஜ்ஞான யோகச் சிறப்பு
ஞானயோகமாவது —கர்மயோகத்தாலே அந்தகரணஜயம் பிறந்தவனுக்குப்
ப்ரக்ருத்யாதி விலக்ஷணமாய் ஈச்வரனைப் பற்ற ஆதேயத்வ விதேயத்வ
சேஷத்வங்களாலே சரீரதயா ப்ரகாரமான தன் ஸ்வரூபத்தை
நிரந்தர சிந்தநம் பண்ணுகை.இக்கர்மயோக ஜ்ஞானயோகங்களாலே
யோகமுகத்தாலே ஆத்மாவலோகநம் பிறந்தால் வைஷயிக ஸுக
வைத்ருஷ்ணயாவஹமான ஆத்மாநுபவஸுகமாகிற ஆகர்ஷகத்தில்
அகப்பட்டிலனாகில் பரம புருஷார்த்தமான பகவதநுபவத்துக்கு
உபாயமான பக்தியோகத்திலே இழியும்போது உள்ளிருக்கிற ரத்நம்
காண்கைக்குக் கிழிச்சீரை கண்டாற்போலே அந்தர்யாமியைப்
பார்க்கும்போதைக்கு அவனுடைய சரீரபூதனான ஜீவாத்மாவினுடைய
தர்சனம் உபயுக்தமாய்க் கொண்டு பக்தியோகத்துக்கு
அதிகார கோடியிலே ஏறிட்டுக் கிடக்கும்.
வ்யாக்யானம்
கர்மயோகம் மூலமாக, மனஸ் ,புத்தி இவைகளை வசப்படுத்தினால்,
ஞானயோகம் கிட்டும்.
தனது ஆத்மாவின் ஸ்வரூபம், பகவானின் சரீரம் என்று உணர்ந்து,தியானித்தல்,
ஞானயோகம் என்றும் சொல்வர்.இதனால் ஆத்ம தர்ஸனம் கிட்டுகிறது.இந்த அநுபவம்
அவனுக்கு ஒருவித இன்பத்தைக் கொடுக்கும்போது ,அதில் சிக்காமல்
இருக்கவேண்டும்.அப்படியிருந்தால், மிக உயர்ந்த புருஷார்த்தமான
பகவானை அடையும் மார்க்கமான, பக்தி யோகத்தில் திளைப்பான்.
அதன்மூலமாக, பகவத் அநுபவம் கிட்டும்.
கர்மயோக மாத்ரத்தாலோ கர்மயோகத்துக்குப் பிறகு வரும்
ஜ்ஞானயோகமாத்ரத்தாலோ –த்யானம் ( த்யான யோகம் ) கூடியபோது
ஜீவாத்ம சாக்ஷாத்காரம் வருகிறது.இது,ஆகர்ஷமாகிறது .அப்படி ஆகும்போது
அதிலேயே ஈடுபட்டு பக்தியோகத்தில் இழியமாட்டார்கள்.இதைவிட, பரம
புருஷார்த்தம் ,பகவதநுபவம் என்கிற ருசி தெரிந்தால் பக்தியோகத்தில்
இழிவான் .
இப்படி பக்தியோகத்தில் திளைக்கும்போது ஹ்ருதயத்தில் அந்தர்யாமியாக
வீற்றிருக்கின்ற பகவானை த்யானிக்கிறான்.இவனுக்கு, ஆத்ம தர்ஸனம்
என்பது,துணியில் கட்டி வைக்கப்பட்ட ரத்னத்தைப் போன்றது என்கிறார் பரமாசார்யன் .
கிழிச்சீரை —துணி— ரத்னத்தை மூடிக்கொண்டிருக்கும் .
ரத்னம், துணி அல்லது செப்புப் பெட்டியில் இருக்கும்.முதலில் தெரிவது, கிழிச்சீரை.
பிறகே அதனுள் இருக்கும் ரத்னம் தெரியும். அதைப்போல,முதலில்
தன் ஆத்ம தர்ஸனம் .இது கிழிச்சீரையைப்போல. பிறகு,
அந்தர்யாமியான பரமாத்ம தர்ஸனம் .இது ரத்னத்தைப்போல.
ஐச்வர்ய பல அநுபவம் .ஸூக்ஷ்ம ஆத்ம விஷயத்தில் அநுபவம் .இதில்
இவனுடைய வைராக்யத்தைப் பரீக்ஷை செய்து ,ஈச்வரன் பக்தியோகத்தில்
இழியச் செய்கிறான்.ஜீவாத்ம அந்தர்யாமியாக, பரமாத்மாவை த்யானிக்கிறான்.
இரண்டும் வேறாக இருந்தபோதிலும் ஒன்றோடு ஒன்று சேர்ந்து காணவேண்டியபோது
ஒன்றின் தர்ஸனம் மற்றொன்றின் தர்சநத்துக்குக் காரணம் ஆகிறது.
அதிகாரத்திலிருந்து
பக்தியோகச் சிறப்பு
பக்தியோகமாவது அநந்ய நிஷ்டனாய் அநந்ய கதியனாய் அநந்ய சேஷபூதனான
பகவானுடைய ஸ்வரூபாதிகளை விஷயமாகவுடைத்தாய் நிரதிசய ப்ரீதிரூபமான
த்யான விசேஷம். அதுதான் தைலதாரைப்போலே நிரந்தரமான ஸ்ம்ருதிரூபமாய்
ஸாக்ஷாத்கார துல்யமான வைசத்யத்தையுடைத்தாய்ப் பரமபதத்துக்குப் ப்ரயாணம்
பண்ணும் திவஸமறுதியாக நாள்தோறும் அநுஷ்டிக்க வளர்ந்து வருவதாய்
அந்திமப்ரத்யய அவதியான ஜ்ஞானஸந்ததி விசேஷம்
வ்யாக்யானம்
பக்தியோகம் –இது எதையும் எதிர்பார்க்காமல், பகவானிடம் செலுத்தும் ப்ரேமை.
பகவான் தன்னுடைய எந்தக் காரியங்களுக்கும் யாரையும் எதிர்பார்ப்பவனல்ல.
யாருடைய கட்டளைக்கும் அடிபணிய வேண்டிய அவச்யமற்றவன். யாராலும் எதற்கும்
அவனை நிர்ப்பந்திக்க இயலாது.இப்படிப்பட்ட பகவானின் ஸ்வரூபம் அவனது கல்யாண
குணங்கள் ஆழங்கால்பட்டு அவனை த்யானிப்பது பக்தியோகம்
இது மிகத் தெளிந்த ஞானம். எண்ணெய் ஒழுக்குப் போன்று தடையற்று உள்ளதாகும்.
பரமபதம் அடையும்வரை, ஒவ்வொரு நொடியும் வளர்ந்தபடி இருப்பதாகும்.
உயிர் பிரியும் க்ஷணத்தில் ,மற்ற நினைவுகள் இல்லாததாகும்.
அதிகாரத்திலிருந்து
வர்ணாச்ரமம் –அவச்யம்
இதுக்கு வர்ணாச்ரம தர்மங்கள் ஜ்ஞாந விகாஸ ஹேதுவான ஸத்த்வாதி வ்ருத்திக்குக்
களையான ரஜஸ்தமஸ்களுக்கு மூலமான பாபங்களைக் கழித்துக் கொண்டு
இதிகர்த்தவ்யதையாயிருக்கும்.
வ்யாக்யானம்
ஸத்வம் என்பது பயிராக உருவகித்தால், இது வளர்வதற்குக் களையாக
இருப்பது,ரஜஸ் மற்றும் தமஸ் குணங்கள். இந்தக் களை ஏற்படக் காரணம்
முன்வினைப்பயன்–பாபம் .இது ஒழிந்து ஸத்வம் வளர்ந்தால், ஞானம் செழிக்கும் .
இந்தப் பாவங்கள் கழிய அவரவர் வர்ணாச்ரம தர்மங்கள் வழியாக வாழ்வதே.
வர்ணாச்ரம தர்மப்படி கர்மாக்களைச் செய்யும்போது பாவங்கள் தொலைகின்றன
இவ்விதமாக வர்ணாச்ரம தர்மங்கள், பக்திக்கு அனுசரணையாக உள்ளன.
அதிகாரத்திலிருந்து
பக்தியோகம் –ஐச்வர்யத்தை அளிக்கும்
இப்பக்தியோகந்தானே ப்ரத்யயார்த்தம் ச மோக்ஷஸ்ய ஸித்தய : ஸம்ப்ரகீர்த்திநா :
என்கிறபடியே இளநெஞ்சரைத் தேற்றுகைக்கு இட்ட விரகான வழியில் காமநா
பேதத்தாலே ஐச்வர்யாதிகளுக்கும் ஸாதனமென்னும் இவ்வர்த்தம் சதுர்விதா
பஜந்தே மாம் என்று சொல்லப்பட்டது
வ்யாக்யானம்
பக்தியோகம் –உலகவிஷயங்கள், கைவல்யம் –இவற்றை அடையச் ஸாதனம் –இதை
ஸத்வத ஸம்ஹிதை கூறுகிறது
ப்ரத்யயார்த்தம் ச மோக்ஷஸ்ய ஸித்தய : ஸம்ப்ரகீர்த்திநா : =மோக்ஷம் என்கிற பலன்
விஷயத்தில், நம்பிக்கை வருவதற்காக ஐச்வர்யாதி பலன்களும் கூறப்பட்டன.
ஸாரப்ரகாஸிகா —-ஸாராஸ்வாதிநி இவற்றில் பகவான் தானாக அளிக்கும்
அஷ்டஸித்திகளைக் கொள்ளாமல் ,ஐச்வர்யாதி பலன்களுக்காக இதை விதித்தது
நம்பிக்கைக்காக என்று விளக்கமுள்ளது.
வேதத்தில் நம்பிக்கை ஏற்பட , சத்ருவைக் கொல்ல அபிசார ஹோமம் உள்ளது.
ஸுக்ரீவனுக்கு நம்பிக்கை வருவதற்காக, ஏழு மராமரங்களை ராமபிரான் ஒரே
பணத்தால் வீழ்த்தினான் .
ஸ்ரீமத் பகவத் கீதை (7–16 )
சதுர்விதா பஜந்தேமாம் ஜநா : ஸுக்ருதிநோர்ஜூந |
ஆர்த்தோ ஜிஜ்ஞாஸுரர்தார்த்தீ ஜ்ஞாநீ ச பரதர்ஷப ||
அர்ஜுனா —துயரம் உள்ளவன் ,பகவத் தத்வத்தை அறிய விழைபவன்
பொருளை விரும்புபவன் பகவத் தத்வ ஜ்ஞானம் உள்ளவன் –என்று
நான்கு வகையான மநுஷ்யர்கள் என்னையே துதிக்கிறார்கள்
அதிகாரத்திலிருந்து
ஞாநியின் மேன்மை
அவ்விடத்தில் தேஷாம் ஜ்ஞாநீ நித்ய யுக்த ஏகபக்திர்விசிஷ்யதே என்று தொடங்கிச்
சொன்ன ஞானியினுடைய ஏற்றத்தை
சதுர்விதா மம ஜநா பக்தா ஏவ ஹி தே ஸ்ம்ருதா :
ஏஷாமேகாந்திந : ச்ரேஷ்டா : தே சைவாநந்யதேவதா :
அஹமேவ கதிஸ்தோஷாம் நிராசீ : கர்மகாரிணாம்
யே து சிஷ்டாத்ரயோ பக்தா :பலகாம ஹி தே மதா :
ஸர்வே ச்யவநதர்மாண : ப்ரதிபுத்தஸ்து மோக்ஷபாத்
என்று தானே வெளியிட்டான்
வ்யாக்யானம்
முன்பு சொன்ன நான்கு விதமானவர்களில், ஞானியின் ஏற்றத்தை
ஸ்ரீமத் பகவத் கீதையில் ( 7–17 )பகவான் சொல்கிறான்.
தேஷாம் ஜ்ஞாநீ நித்ய யுக்த ஏகபக்திர் விசிஷ்யதே |
ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோத்யர்த்த மஹம்ஸ ச மம ப்ரிய : ||
இந்த நால்வருள், எப்போதும் என்னிடம் பக்தி செய்பவன் ,என்னையே
த்யானம் செய்பவன் —இவன் –ஞாநி —-இவன் உயர்ந்தவன், அவனுக்கு
நான் ப்ரியமானவன். அதைப்போல எனக்கும் அவன் மிக ப்ரியமானவன்
உடையவர் வ்யாக்யானம் —-ஞாநிக்கு , நான் ப்ரியமானவன் என்று
பகவான் சொல்கிறார்; எவ்வளவு ப்ரியம் என்பதை, அவனாலேயே
அளவிட்டுச் சொல்லமுடியாது;இத்தனைக்கும் பகவான் , ஸர்வஜ்ஞன் ;
ஸர்வ ஸக்தன் —-
மஹாபாரதம்
சதுர்விதா மம ஜநா பக்தா ஏவ ஹி தே ஸ்ம்ருதா :
ஏஷாமேகாந்திந : ச்ரேஷ்டா : தே சைவாநந்யதேவதா :
அஹமேவ கதிஸ்தோஷாம் நிராசீ : கர்மகாரிணாம்
யே து சிஷ்டாத்ரயோ பக்தா :பலகாம ஹி தே மதா :
ஸர்வே ச்யவநதர்மாண : ப்ரதிபுத்தஸ்து மோக்ஷபாத்
என்னுடைய பக்தர்கள் நான்குவகைப்படுவர்.அவர்களில் மற்ற தேவதைகளை
நாடாமல், என்னிடமே பக்தி செலுத்துபவர்கள் சிறந்தவர்.இவர்கள் தங்கள் கர்மாக்களை
எவ்வித ப்ரதிபலனையும் எதிர்பாராமல் செய்கின்றனர்.என்னை அடைவதே
இவர்களின் லக்ஷ்யம் .மற்ற மூன்று வகைப்படுபவரும் உலகஇன்பங்களைப்
பலனாகக் கோருகிறார்கள் .அதனால், முக்கிய லக்ஷ்யத்தை நழுவ விடுகிறார்கள்.
என்னை மட்டுமே ஆச்ரயிப்பவன் புத்திமானாக ,என்னையே அடைகிறான்
அதிகாரத்திலிருந்து
பக்தி—-பரபக்தி —பரஜ்ஞாநம் —பரமபக்தி —-விளக்கம்
இப்படி மோக்ஷோபாயமாக விதித்த பக்தியோகம், பரமபக்தி என்று பேசப்பட்டது.
இதினுடைய ஹேதுவாய் ஸாத்விக பரிசீலநாதிகளாலே வந்த பகவத் விஷயத்தில்
ப்ரீதிவிசேஷம் ஸர்வேச்வரனைத் தெளியவறிய வேணுமென்னும் அபிநிவேசத்துக்குக்
காரணமாய் பக்தியென்று பேர் பெற்றிருக்கும்
வ்யாக்யானம்
மோக்ஷத்துக்கு உள்ள பக்தியோகம் ”பரபக்தி ” எனப்படுகிறது.ஸாத்விகர்களுடன்
சகவாஸம், பகவானிடம் அளவு கடந்த ப்ரேமை , இவற்றால் ஏற்படும் பரபக்தியே
பக்தியாகும். இதனால்,பகவானை மேலும் மேலும் அனுபவிக்க ஆவல் பெருகும்
அடியேன்
பரபக்தி =மோக்ஷம் அடைய ,தைலதாரை போன்று பகவத் த்யானம் செய்வது
பக்தி விசேஷம் = பகவானிடம் ப்ரீதியுடன் , ச்ரவணம் ,மனனம் செய்வது—இது,
இந்த பக்தி, பரபக்தியுடன் ஸம்பந்தப்படுகிறது
பரஜ்ஞானம் = மோக்ஷத்தை அடைய நிறைய நிலைகள் உள்ளன. இந்த பரஜ்ஞானம்
பரபக்திக்குப் பின்னால் வருகிறது.தைலதாரை போன்று பகவத் த்யானம் செய்யச்
செய்ய, பரப்ரஹ்மத்தைப் பற்றிய ஜ்ஞானம் வளருகிறது.
பரமபக்தி = பிறகு, முமுக்ஷுவானவன் ,கர்ம ,ஞான யோகங்களை செய்து பரஜ்ஞானத்துடன்
செய்யும் பக்தியோகம்
அதிகாரத்திலிருந்து
இத்தாலே சுத்தபாவம் கதோ பக்த்யா சாஸ்த்ராத் வேதிந ஜநார்த்தனம் என்கிறபடியே
சாஸ்த்ரஜந்ய தத்த்வஜ்ஞான கர்மயோகாதி பரம்பரையிலே பிறந்த பரபக்தியானது
ஸாக்ஷாத்கரிக்கவேணுமென்னும் அபிநிவேசத்தை உண்டாக்கி ”யோகேச்வர ததோ மே
த்வம் தர்சயாத்மாநமவ்யயம் ” காணுமாறு அருளாய் , ஒருநாள் காணவாராய் என்று
விலபிக்கும்படி பண்ணி இவ்வபேக்ஷாமாத்ரமடியாக வந்த பகவத்ப்ரஸாத விசேஷத்தாலே
தத்காலநியதமான பரிபூர்ண ஸாக்ஷாத்காரத்தை உண்டாக்கும். இஸ்ஸாக்ஷாத்காரம்
பரஜ்ஞானமென்று பேசப்பட்டது.
இப்படி நிரதிசய போக்யமான பகவத்ஸ்வரூபத்தை ஸாக்ஷாத்கரித்தவாறே
பெருவிடாய்ப்பட்டவன் தடாகத்தைக் கண்டாற்போலே பிறந்த ப்ரீத்யதிசயம் பரமபக்தி
வ்யாக்யானம்
மஹாபாரதம் –சொல்கிறது-
சுத்தபாவம் கதோ பக்த்யா சாஸ்த்ராத் வேதிந ஜநார்த்தனம் = பகவான் மற்றும்
ஆசார்யன் மீது உள்ள பக்தி காரணமாக என்னுடைய ஸ்வரூபத்தை உணர்ந்தேன்.
சாஸ்த்ரம் மூலமாக, ஜனார்த்தனனை அறிகிறேன்.இப்படியான , பரபக்தி
என்பது கர்ம ,ஞானயோகத்தால் உண்டாகிறது.இது பகவானைத் தர்ஸிக்கவேண்டும்
என்கிற ப்ரேமையை அதிகப்படுத்துகிறது .இந்தப் பிரேமை பகவானைக் குறித்து
புலம்பவைக்கிறது
ஸ்ரீமத் பகவத் கீதை ( 11–4 )
மந்யஸே யதி தச்சக்யம் மயா த்ரஷ்டுமிதி ப்ரபோ |
யோகேச்வர ததோ மே த்வம் தர்சயாத்மாநமவ்யயம் ||
ஜ்ஞானம் முதலிய குணங்களுக்கு இருப்பிடமான க்ருஷ்ணா ——
நான் பார்க்கலாம் என்று எண்ணினால் அழிவில்லாத உன் திருவடியை
எனக்குக் காட்டி அருள்வாயாக
நாரத பக்தி ஸூத்ரம் அரும்பதவுரையில் காண்க —–
திருவாய்மொழி ( 8–1–1 )
தேவிமாராவார் திருமகள் பூமி ஏவ மற்று அமரர் ஆட்செய்வார்
மேவிய உலகம் மூன்று அவை ஆட்சி வேண்டு வேண்டுருவம் நின்னுருவம்
பாவியேன் தன்னை அடுகின்ற கமலக்கண் அது ஓர் பவளவாய் மணியே !
ஆவியே !அமுதே! அலைகடல் கடந்த அப்பனே ! காணுமாறு அருளாய் !
அப்பனே! உன்னிடம் அநுகூலங்கள் நிறைந்து இருக்கின்றன .ப்ரதிகூலம்
எதுவும் இல்லை.ஆகையால் அருள்க ! அநுகூலங்களைக் கேட்கிறாயா ?
சொல்கிறேன்
திருமகள்,மணமகள் உனக்குத் தேவிமார். திருமகள் உனக்குச் செல்வம்.
அவருக்கு வளம் சேர்ப்பவள் மணமகள். குற்றம் இருந்தாலும் காக்கவேண்டும்
என்று சொல்பவள், திருமகள் . பரமவிரோதியான ராவணனுக்கே ”மித்ரமௌ
பயிகம் கர்த்தும் ராம ” (குற்றத்தைப் பொறுக்கச் சொல்லி ) ராமனை ,நண்பனாக
அடைவாயாக என்று சொன்னவள், சீதாப்பிராட்டியான திருமகள்.
மண்மகளோ , ஏது குற்றம் என்று சொல்பவள் .இவர்கள் எனக்கு அநுகூலர்கள் .
நித்யஸூரிகள் புருஷகாரர்கள் . இவர்களும் அநுகூலர்களே .ஏனெனில்
இவர்கள் ஆசார்ய ஸ்தானம் வகிப்பவர்கள்.எல்லாம் இருந்தும், நீ, ஐச்வர்யம்
இல்லை, இடையூறு என்று சொல்லமுடியாது .உலகெல்லாம் உனது ஆட்சி .
உனக்கு அடங்காதார் எவருமில்லை.”பரமபதத்தில் இருக்கும் என்னை
எப்படிக் காணமுடியும் ”என்று கேட்கிறாயா ?தேவர்களுக்காக ,மநுஷ்ய
அவதாரம் எடுத்தாய்.அலைக்கடலைக் கடைய ,எத்தனை அவதாரம் எடுத்தாய் !
உன் கண்ணழகும் பவளச் செவ்வாயும் என்னை வாட்டுகிறது.அப்படிப்பட்ட
திருமேனியோடு என்னைக் காண வருக என்று சொல்லக் காரணம்
நீ, எனக்குப் ப்ராணனும் ஆவியல்ல !ஆத்மாவும் ஆவியல்ல ! பரமாத்ம
ஸ்வரூபமும் ஆவியல்ல ! சுபாஸ்ரயமான உன் திருமேனியை ,என் ஆவி !
அந்தத் திருமேனி எனக்குப் பரம போக்யம் !அமுதம் ! நீ எனக்கு அப்பன் !
என் வேண்டுகோளைக் கருத்தில் கொண்டு நான் உன்னைக் காணுமாறு
அருள்க !
திருவாய்மொழி ( 6–9–4 மற்றும் 8–5–1 )
தளர்ந்தும் முறிந்தும் சகடவசுரர் உடல் வேறா
பிளந்தும் வீயத் திருக்காலால் ஆண்ட பெருமானே !
கிளர்ந்து பிரமன் சிவன் இந்திரன் விண்ணவர் சூழ
விளங்கவொருநாள் காணவாராய் விண்மீதே
சகடாசுரன் உன்னைக் கொல்லப் பார்த்தபோது நீ , உறக்கத்தின் நடுவே
உன் திருவடியைத் தூக்கி அந்த ஸம்பந்தத்தாலே சகடாசுரன் பொடிப்பொடியாக
ஆனான். சகடத்தில் புகுந்த அசுரன், ஒருவரா பலரா யார் கண்டார்கள் !
சகடம் ஒன்றானபடியால் சகடாசுரன் பொடிப்பொடியாக ஆனதில் ஒருவன் பலராகவும்
இருக்கலாம். அவர்கள்,யார் கண்ணுக்கும் தெரியாதபடி தளர்ந்து ,முறிந்து
வேறு வேறாக ஆக்கிப் பிளக்கப்பட்டு ஒழிந்தார்கள். அப்படிப்பட்ட
திருவடியே எங்களைக் காக்கிறது.அந்தத் திருவடி ஸம்பந்தத்தால்
என் பாவம் எல்லாம் அழிந்தது. என்னுடைய கஷ்டங்களை அழிக்க
பூமிக்கு வர இஷ்டமில்லையாகில் ,ஆகாயத்தில் வந்து நிற்கலாமே !
நீ, எனக்காகப் பரமபதத்திலிருந்து கிளர்ந்து விரைவில் வந்தால்
கஜேந்த்ர ஆழ்வானுக்காக நீ அரை குலைய தலை குலைய வந்து
அருளியபோது, ”நாஹம் நாஹம் ந சாஹம் ந ச பவதிபுன :தாத்ருஸோ
மாத்ரேஷு ” என்று தாங்கள் ஆதிமூலம் இல்லை என்று ப்ரம்மா சிவன்
இந்த்ரன் விண்ணவர் எல்லோரும் உன்னை ஆகாயத்தில் சூழ்ந்து
இருந்தனர். பூமிக்கு வர இஷ்டமில்லையாகில் இவர்கள் சூழ , நீ,
விண்ணில் நின்றால் உன் ப்ரகாசத்தால் உலகம் எல்லாம் விளங்கும்.நானும்
உன்னைத் தர்ஸிப்பேன்—வந்து அருள்க !
திருவாய்மொழி ( 8–5–1 _)
மாயக்கூத்தா ! வாமநா ! வினையேன் கண்ணா !கண்கைகால் ,
தூய செய்ய மலர்களாச் சோதிச் செவ்வாயமுகில் அது ஆ
சாயல் சாமத் திருமேனி தண் பா சடையா தாமரைநீள்
வாசத்தடம்போல் வருவானே ! ஒருநாள் காணவாராயே !
மாயக்கூத்தா ! வாமநா ! அழகான ஆச்சர்யமான செயல்களைச் செய்பவனே !
நீ, குளிர்ச்சியான தடாகம்.உன் திருமேனியில் தடாகத்துக்கு வேண்டியது
எல்லாம் இருக்கின்றன. தாமரைப் புஷ்பங்கள்;மொட்டு ;இலை —-திருமேனி காந்தி
எங்கும் ப்ரகாசிக்கிறது .உன் சுயரூபத்தை மறைத்து,வேறு வேஷமணிந்து
ஆடுகிறாய் !தேவலோக வேஷத்துக்கு வாமனாவதாரம் !மனிதப் பிறப்புக்குக்
கண்ணன் அவதாரம். வாமநனாய், மஹாபலி அருகே சென்று மாய சேஷ்டைகள்
செய்தாய். கண்ணனாய்,வெண்ணெய்க்கு ஆடின கூத்து !உன் அவதாரம்
எல்லாம் மாயக்கூத்து !இப்படியெல்லாம் என் கண்ணில் படும்படி , நான் காணும்படி,
ஒருநாளாவது வந்து அருள்க !
இப்படிப்பட்ட எல்லையில்லா ஆவலினால், பகவானின் க்ருபை கிடைக்கிறது.
க்ருபையினால் , தனது பரிபூர்ண திருவடிவைக் காண்பிக்கிறான். இதுவே,
பரஜ்ஞானமாகும்
பரபக்தி என்பது மோக்ஷத்துக்கு உபாயம் . கர்ம யோகம்,ஜ்ஞான யோகம் —
இதற்கு அங்கங்கள் .
மிகவும் தாகமெடுத்தவன் நீர்நிலையைக் கண்டவுடன் மிகவும் மகிழ்வதைப்போல
பகவானைத் தர்ஸித்தவன் அவனிடம் அளவில்லாப் ப்ரியம் அடைகிறான்.
இதுவே, பரமபக்தி .
அதிகாரத்திலிருந்து
பரமபக்தி மோக்ஷம் அடையவைக்கிறது
இது, முனியே நான்முகனிற்படியே ஸங்கோசமற அனுபவித்தல்லது
தரிக்கவொண்ணாத அபிநிவேசத்தை உண்டாக்கி மறுக்கவொண்ணாத
திருவாணையிட்டு வளைத்துக் கூப்பிடுகையாலே இவனுக்குக் கடுகப்
ப்ராப்தியைக் கொடுக்கும்படி ஸர்வேச்வரனுக்குத் த்வராதிசயத்தை
உண்டாக்கி இவனை அவாவற்று வீடு பெறப்பண்ணும்
வ்யாக்யானம்
பரமபக்தி ,எவ்வித இடைஞ்சலுமில்லாமல் பகவானை அநுபவிக்கவேண்டும்
என்கிற ஆவலையும் உறுதியான எண்ணத்தையும் ஏற்படுத்தும்.
அதைத் தொடர்ந்து, பகவானின் அநுபவ மகிழ்ச்சி இன்றி, உயிர்வாழவே
இயலாது என்கிற நிலை ஏற்படும்.
திருவாய்மொழி (10–10–1 ) இதைச் சொல்கிறது —
முனியே ! நான்முகனே ! முக்கண்ணப்பா !என்பொல்லாக்
கனிவாய்த் தாமரைக்கண் கருமாணிக்கமே ! என்கள்வா !
தனியேனாருயிரே ! என்தலைமிசையாய் வந்திட்டு
இனிநான் போகலொட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே
நீ, ஸங்கல்பமாத்ரத்தில் உலகங்களைச் ஸ்ருஷ்டிக்கிறாய் ! சேதநர்களை
நித்ய விபூதியில் சேர்க்கப் படாதபாடு படுகிறாய் !நீ, என்னை விடலாகாது !
ப்ரஹ்மாவைப் படைத்து அவனுக்குள் புகுந்து செயல்புரிகிறாய் !
ருத்ரனைப் படைத்து, அவனுக்கும் அந்தர்யாமியாய் ஸம்ஹரிக்கிறாய் !
உனது, ஒவ்வொரு செயலும் எனக்கு ”போக்யம் “. பக்தர்களோடு
பேசும் கனிவாயும் , குளிரக் கடாக்ஷிக்கும் திருக்கண்களும் ,அணைக்கவான
திருமேனியும், எனக்கு போக்யம் !
நான்முகன் , நான்கு வாய் உள்ளவன் ; முக்கண்ணன் ஒருகண் ,நெருப்பு !
குளிர்ந்த கடாக்ஷத்துக்கு உன் திருக்கண்களே சான்று !இவைமட்டுமல்ல—
நீ, கருமாணிக்கம் !தாபங்களையெல்லாம் தீர்க்கும், மாணிக்கம் !
முந்தானையில் முடிந்துகொள்ளும்படியான ”ஸௌலப்யம் ” உள்ளவன் ,நீ !
வானேற வழி தந்தவன் ! உன் திருவடிகள், என் தலையில் படிந்தன !
முக்தர் செல்லும் வழியில் என்னைச் செலுத்தினாய் !இப்படிப்
பேரவாவை உண்டுபண்ணிவிட்டு ஏதேனும் மோகனமான குணத்தைக்
காண்பித்து,நான் கேட்பதை, நான் மறக்குமாறு செய்துவிடாதே !
அடுத்த திருவாய்மொழியில் சொல்கிறார் —–
மாயம் செய்யேல் என்னை உன் திருமார்வத்துமாலைநங்கை
வாசஞ்செய் பூங்குழலாள் திருவாணை நின் ஆணைகண்டாய்
நேசஞ்செய்து உன்னோடு என்னை உயிர் வேறு இன்றி ஒன்றாகவே
கூசஞ்செய்யாது கண்டாய் ! என்னைக் கூவிக்கொள்வாய் வந்து அந்தோ !
பரமபத ருசியில் எவ்வளவு ஆசைப்பட்டபோதும்,பகவத் பாகவத ஸம்ருத்தி
என்பதைக் காண்பித்து பரமபத ருசியை இனியும் குறைக்காதே !எல்லோரும்
விரும்புவது லக்ஷ்மீ கடாக்ஷம் !லக்ஷ்மி விரும்புவது, உன் கடாக்ஷத்தை !அவளாலே
உனக்கும் பெருமை !அவள் மாதா —-அந்த மஹாலக்ஷ்மியின் மேல்
ஆணையிடுகிறேன் —உன்மீதும் ஆணை !நீயல்லவோ, என்னைக்
கூவிக்கொள்ள வேண்டும் ? ஒருதரம் ப்ரார்த்தித்தாலே காக்கின்ற ,நீ,
முடிவில் வளைத்துக் கூப்பிடவேண்டுமென்று நிர்ப்பந்தம் செய்கிறாயோ ? அந்தோ !
அதிகாரத்திலிருந்து
பக்தியோகம் ,ப்ரபத்தியின் பலனைக்கொடுக்கிறது
இப்பக்தியோகம் த்ரைவர்ணிகரையொழிந்தார்க்கும் த்ரைவர்ணிகர் தங்களில்
ஞானத்திலேயாதல் சக்தியிலேயாதல் இரண்டிலுமாதல் குறையுடையார்க்கும்
பலவிளம்பம் பொறுக்க இசையாத தீவ்ர ஸம்வேகமுடையார்க்கும்
யோக்யமில்லாமையாலே தங்கள் அளவுகளைத் தெளிந்து அத்வாரகமாக ப்ரபத்தியை
மோக்ஷோபாயமாகப் பற்றுமவர்களுக்கு ஸர்வபலஸாதனமான ப்ரபத்திதானே
பரபக்தி ஸ்தாநத்திலே சோதிதையாகையாலே உபாஸகனுக்குப் பரபக்திக்குமேல்
வரும் அவஸ்தைகள் போலே இஸ்ஸ்வதந்த்ர ப்ரபத்தி நிஷ்டனுடைய கோலுதலுக்கு
ஈடாக இப்ப்ரபத்திக்கு மேல்வரும் அநுகூலாவஸ்தைகள் இதின் பலமாயிருக்கும் .
வ்யாக்யானம்
இந்தப் பக்தியோகத்தை ,மூன்று வர்ணத்தார்தான் (அந்தணன்,க்ஷத்ரியன் ,வைச்யன் )
செய்யலாம். இவர்களிலும், ஞானம் சக்தி இவைகளில் குறையிருப்பின்
பக்தியோகம் செய்ய இயலாது.தவிரவும், பக்தியோகம் செய்வதன் பலனாகிய
மோக்ஷத்தைப் பெறத் தாமதத்தைப் பொறுக்க இயலாதவர்களாலும் செய்ய இயலாது.
இப்படிப்பட்டவர்களுக்கு, ப்ரபத்தி ஏற்புடைத்து. ஆகவே,ப்ரபத்தியே ,பரபக்திக்குப்
பதிலாக ஏற்கப்படுகிறது.பரபக்தி உள்ளவன், பரஜ்ஞானம் பெறவேண்டும்.
ஆனால்,ப்ரபத்தியை ஏற்பவன் அதன் பலனை விரைவில் அடைகிறான்.
பக்தியோகம் செய்ய இயலாதவர்கட்கு , ப்ரபத்திதான் ஸாதனம் . ஏன் பக்திசெய்ய
முடிவதில்லையெனில் , பக்தி விஷயமான ஜ்ஞானம் இல்லை. அப்படி இருந்தாலும்,
இந்த ஜன்மம் முடியும்போது மோக்ஷத்தை அபேக்ஷித்தால் ,கிடைக்காது என்பதுமாம் .
அதிகாரத்திலிருந்து
ப்ரபத்தி —ப்ரஹ்ம வித்யைகளில் ஒன்று
இப்படி,ப்ரபத்திக்கும் ,பக்திக்கும் அதிகாரி விசேஷத்தைப் பற்றித் துல்யபலத்வம்
உண்டாகையாலே விகல்பமாகக் கடவது. இவற்றுக்கு நாநாஸப்தாதி பேதாத்
என்கிற அதிகரணத்திலே பேதம் ஸித்தம் . விகல்போ அவிசிஷ்டபலத்வாத்
என்கிற அதிகரணத்திலே விகல்பமும் ஸித்தம் .
வ்யாக்யானம்
இப்படி, பக்தியும் ப்ரபத்தியும் அவற்றை அநுஷ்டிப்பவர் தகுதியைப் பொறுத்தது .
இவை இரண்டுமே வெவ்வேறு என்பதை ப்ரஹ்மஸூத்ரம் —அதிகரணங்களிலே
பார்க்கலாம்.
ப்ரஹ்மஸூத்ரம் ( 3–3–56 )
நாநாஸப்தாதி பேதாத்—ப்ரஹ்ம வித்யைகள் வெவ்வேறாக இருப்பதைப்போல,
அவற்றின் பெயர் முதலியனவும் வெவ்வேறானவை.
ப்ரஹ்மஸூத்ரம் ( 3–3–57 )
விகல்போ அவிசிஷ்டபலத்வாத் =ப்ரஹ்ம வித்யைகள் அனைத்துக்கும்
மோக்ஷம் ஒன்றே பலன் . ஆதலால்,அந்த வித்யைகளில், எதில் ஈடுபாடு உள்ளதோ
அதைச் செய்யலாம்.
விகல்பமாகக் கடவது = விகல்பம் —ஸாஸ்த்ரத்தில் விதிக்கப்பட்ட சம வலிமை உடைய
இரண்டில், ஏதாவது ஒன்றை விட்டுவிட்டு மற்றொன்றை அநுஷ்டித்தல்—இது விகல்பம்
எனப்படுகிறது.
உதாரணம் =32 வித்யைகளும்,ப்ரபத்தியும் மோக்ஷத்துக்கு என்று உள்ளன.
அவற்றுள், மோக்ஷத்துக்கு என்பதாக ஏதாவதொன்றை அநுஷ்டிப்பது
சாஸ்த்ர ஸம்மதம் .
இப்படி, இங்குள்ள பலன்களில் வித்யாஸம் இருந்தாலும் மோக்ஷரூப முக்ய பலனில்
வித்யாஸமில்லை . ஒரு யோகத்தில் இழிந்தவன் ,வேறொரு பக்தி யோகத்தைச்
செய்யாமல் இருப்பதைப்போல ,ப்ரபத்தியில் இழிந்தவனும் வேறு உபாயம்
தேடவேண்டியதில்லை.
அடியேன்
ப்ரஹ்ம வித்யைகள் 32—இவை, 1.சாந்தோக்யம் 2.முண்டகோபநிஷத் 3.ப்ரஹதாரண்ய
உபநிஷத் 4.தைத்திரீயம் 5.சுபாலோபநிஷத் 6.ஸ்வேதாஸ்வர உபநிஷத் 7.ஈசாவாச்யம்
8.கேநோபநிஷத் என்கிற எட்டு உபநிஷத்துக்களில் விளக்கப்பட்டுள்ளன ( விவரங்களுக்கு,
அடியேனின் வேதோபாஸனா –website ல் உள்ளதைப் படிக்க )
இந்த உபநிஷத்துக்களில் விவரிக்கப்பட்டுள்ள (பக்தி யோகத்துக்கான )மிகக்
கடினமானப்ரஹ்ம வித்யைகள் 32 . இவை உபாஸனா மார்க்கங்கள்
1.அக்நி வித்யை
2.அக்ஷர வித்யை
3.ஆனந்த வித்யை
4.அபிம்ருத்யுபாஸன வித்யை
5.பாலாகி வித்யை
6.பூமி வித்யை
7.ப்ரஹ்ம வித்யை
8.சாண்டில்ய வித்யை
9.தஹர வித்யை
10.ஜ்யோதிர் வித்யை
11.கோஸவிஜ்ஞான வித்யை
12.மது வித்யை
13.மைத்ரேயி வித்யை
14.கௌரக்ஷஜ்யோதிர் வித்யை
15. ந்யாஸ வித்யை
16.பஞ்சாக்னி வித்யை
17.பரவித்யை
18.பர்யங்க வித்யை
19.ப்ரஜாபதி வித்யை
20.ப்ராண வித்யை
21.ப்ரதர்ன வித்யை
22.புருஷ வித்யை
23.புருஷாத்ம வித்யை
24.ரைக்வ வித்யை
25.புருஷோத்தம வித்யை
26. ஸத் வித்யை
27.ஸர்வ பரவித்யை
28.ஷோடஸகல ப்ரஹ்ம வித்யை
29. உத்கீத வித்யை
30. உபகோஸல வித்யை
31.வைஷ்ணவ வித்யை
32.வைச்வாநர வித்யை
————————————————————–
அதிகாரத்திலிருந்து
பக்தியோகத்தைப்போலவே ,ப்ரபத்தியிலும் உட்பிரிவுகள்
உபாஸனத்தில் விசேஷங்கள் போலே சாகாபேதங்களிலும் பகவச்சாஸ்த்ர
ஸஹிதா பேதங்களிலும் சொல்லும் ந்யாஸ வித்யையில் மந்த்ராதி விசேஷங்களைக்
கண்டுகொள்வது. நமஸ்காரம் வாசிகம் மாநஸம் காயிகமென்று பிரிந்தாற்போல
ப்ரபத்தியிலும் ஓர் ஒன்றை முன்னிட்டு இவ்விபாகங்கள் சொல்லப்பட்டன.
இவை மூன்றும் பொருந்தினபோது பூர்ண நமஸ்காரமானாற்போலே
பூர்ணப்ரபத்தியாகக் கடவதென்றவர்கள் பாசுரங்களுக்கும் வாசிக காயிகங்களான
வ்யாபார விசேஷங்கள் பரீவாஹமாம்படியான மாநஸப்ரபத்தியினுடைய
பூர்த்தியிலே தாத்பர்யமாகக் கடவது. யதாதிகாரம் இவையெல்லாம்
பலப்ரதங்களென்னுமிடம் முன்பே சொன்னோம்
வ்யாக்யானம்
உபாஸனங்கள் செய்வதில் வேறுபாடுகள் உள்ளதைப்போல ந்யாஸ வித்யையிலும்
( ப்ரபத்தி ) சாஸ்த்ர ஸம்மதமான பலவித மந்த்ர பேதங்கள் சொல்லப்படுகின்றன.
நமஸ்காரம் செய்வதில், வாக்கு,மனஸ் ,சரீரம் ஆகிய வேறுபாடுகள் உள்ளதைப்போல
ப்ரபத்தியிலும் ஈடுபாட்டைப் பொறுத்து வேறுபாடு அமைகிறது.
நமஸ்காரம் என்பதில் வாக்கு, மனஸ் , சரீரம் மூன்றும் இணைந்து பொருந்தினாலே
முழுமையான நமஸ்காரமாகிறது.
ப்ரபத்தியிலும் இப்படி மூன்றும் பொருந்தவேண்டும். அதாவது,மனஸ்ஸளவில்
செய்யும் ப்ரபத்தி வாக்கு சரீரம் இரண்டிலும் ப்ரதிபலித்து வெளிப்படுவதாக
உணர்தல் வேண்டும்.
இவை ஒவ்வொன்றும் அவரவர் தகுதியைப் பொறுத்தே அமைகிறது.
அடியேன்
நமஸ்காரம் மூன்று விதம்
1.மாநஸம்= நமஸ்கரிக்கப்படுபவனை ,தனக்கு மேம்பட்டவனாக நினைப்பது
2. வாசிகம் = இவ் வர்த்தத்தைச்சொல்லும், நம : என்பன போன்ற ஸப்த ப்ரயோகம்
3.காயிகம் = அஞ்ஜலி
இதில் மானஸ புத்தி முக்யம் .அந்தந்த வ்யவஹாரங்கள் (வ்யாபாரங்கள் )
மானஸ புத்தியில்லாமல் வராது.
இந்த மூன்றிலும் பொதுவாக இருப்பது =ஜ்ஞானம் . மோக்ஷ ஸாதனம் .
மானஸ ப்ரபத்தி =த்யான ப்ரதானம்
வாசிக ப்ரபத்தி =பரஸமர்ப்பணமான ”த்வய ” உச்சாரணமாய் ஸப்த ப்ரதானம்
காயிக ப்ரபத்தி =பரஸமர்ப்பண ,ப்ரணிபாத ரூபம்
மாநஸ ப்ரபத்தி செய்பவர்களுக்கும் அவசர பரீவாஹமாக ,
ஆநுகூல்ய ஸங்கல்பம் ,
ப்ராதிகூல்ய வர்ஜநம்
கார்ப்பண்யம்
மஹா விச்வாஸம்
கோப்த்ருவ வரணம்
ஸாத்விக த்யாகம்
-இவைகளை-இந்த அங்க , அங்கிகளை மனஸ்ஸால் அநுஷ்டிக்கும்படியாகும்
அதேபோல , காயிக ப்ரபத்தியும் ,மானஸ ப்ரபத்தி அநுஷ்டிக்கும்போது ,
தண்ட ,ப்ரணாமாதிகள் ஸாத்யமாகாவிட்டாலும் அஞ்ஜலி ரூபமாகச் செய்வது.
மாநஸம் ——த்யானம் என்றால், இது உபாயம். சிலருக்கு இது முடிகின்ற
சமயத்தில் மனப்பக்குவம் இராமல், த்யானமே நிற்கும்.
ஆக , ஸர்வசாதாரணமாக ஜ்ஞானமே —த்யானம் –உபாயம் .
இது, 1.மாநஸம் 2.வாக்வ்யாபார விசிஷ்ட மாநஸம் 3.காயிக வ்யாபார
விசிஷ்ட மாநஸம் 4.வாக் , காய , உபய வ்யாபார விசிஷ்ட மாநஸம்
என்கிற நான்கில் —
மாநஸ அம்சமே ப்ரதானம் .
பரத்வாஜ ஸம்ஹிதை சொல்கிறது —–
சிஷ்யனுக்கு,வாசிக மந்த்ர உச்சாரணத்தையும் ,காயிக ப்ரணாமத்தையும்
ஆசார்யன் செய்விக்கிறான் . அதனால், ஆசார்யன் செய்யும் ஆசார்ய நிஷ்டையை
வாசிகம் என்றும், காயிகம் என்றும் சொல்வதுண்டு.
இந்த வாசிக , காயிக வ்யாபாரங்கள் ப்ரபத்தி அநுஷ்டானத்துக்கு முன்பே
நடந்தால், இவை மாநஸம்
————————————————————————————————————-
அதிகாரத்திலிருந்து
நின்ற நிலைக்கு உறநிற்கும் கருமமும் நேர்மதியால்
நன்று என நாடிய ஞானமும் நல்கும் உள்கண் உடையார்
ஒன்றிய பத்தியும் ஒன்றும் இலா விரைவார்க்கு அருளால்
அன்று பயன் தரும் ஆறும் அறிந்தவர் அந்தணரே
கர்ம ஞானம் உபாஸநம் சரணவ்ரஜ்யா இதி ச அவஸ்திநாத்
ஸந்மார்க்காந் அபவர்க்க ஸாதந வித்யெள ஸத்வாரக அத்வாரகாந்
ஏகத்வி ஆக்ருதி யோக ஸம்ப்ருத ப்ருதக்பாவ அநுபாவாந் இமாந்
ஸம்யக் ப்ரேக்ஷ்ய சரண்ய ஸரதி கிராமந்தி ரமந்தி புதா :
வ்யாக்யானம்
வேதம் முற்றும் கற்ற அந்தணர் யாரெனில் என்று ஸ்வாமி தேசிகன் கூறுகிறார்
க்ஷத்ரிய ,ப்ராம்மண , வைச்ய வர்ணாச்ரமத்தில் இருப்பவர்கள், அந்தந்த
தர்மத்துக்கு ஏற்றபடி கர்மயோகம் செய்தல்,ஞானயோகத்தை அதன் பலனை
முழுவதுமாகத் தெரிந்த ஞானத்துடன் செய்தல், பக்தியோகத்தை
ஆத்மஸாக்ஷாத்காரத்துடன் செய்தல், இவற்றுக்கெல்லாம் தகுதி இல்லாதவர்கள்,
மோக்ஷம் பெறுவதில் தாமதத்தைப் பொறுக்காதவர்கள், ஆகியோருக்கு,
பகவானின் க்ருபையால் , விரைவாகப் பலனளிக்கும் ப்ரபத்தி –இவற்றை
அறிந்தவர்கள் வேதம் முற்றும் கற்ற அந்தணர் —என்கிறார்
கர்ம , ஞான ,பக்தி யோகங்கள், மற்றும் சரணாகதி –இவை நான்கும்
மோக்ஷத்துக்கான உபாயங்கள் —இவற்றில் சில நேராகவே மோக்ஷம் அளிக்கும்.
சில மறைமுகமாக மோக்ஷமளிக்கும் . கர்ம ,ஞான யோகங்கள் மறைமுகமாகவும்
பக்தியோகம் நேரிடையாகவும் மோக்ஷபலன் அளிப்பவையாகும்.
ப்ரபத்தி தானாகவே நேராக மோக்ஷபலனை அளிக்கும். பக்தியோகத்தைத்
தூண்டி மறைமுகமாகவும் பலனளிக்கும் .
இப்படி, இரண்டு வழிகளிலும் மோக்ஷமளிக்க வல்ல உபாயமாக இருப்பது
ப்ரபத்தி . இந்த மேன்மையையும் உண்மையையும் அறிந்தவர்கள் ப்ரபத்தி
அநுஷ்டிக்கிறார்கள்
அதிகாரச் சுருக்கம்
இந்த அதிகாரத்தில் உபாயம் மற்றும் உபேயம் –பகவான் எப்படி இரண்டுமாக
இருந்து அருள்கிறான்——இவை பக்தர் , ப்ரபத்தி செய்பவர்களுக்கு எப்படி
அநுகூலம் செய்கிறது—–கர்மயோக,ஞானயோக ,பக்தியோகங்களின்
விளக்கம் —நான்குவகைப் பக்தர்கள் விவரம்——- பக்தி, பரபக்தி , பரஜ்ஞானம் ,
பரமபக்தி ,இவற்றின் விவரங்கள், பக்தியைவிட ,ப்ரபத்தி சிறந்தது—–அதற்கான
விவரம்
அரும்பதவுரை
1.கர்த்தவ்யமான = செய்யவேண்டிய
2.ஜ்ஞானவிகாஸ விசேஷம் =ஜ்ஞானத்தின் ஒருவகை மலர்ச்சி
3.கரண ஸாபேக்ஷம் =இந்த்ரியங்களை எதிர்ப்பது
4.சாஸ்த்ர விஹிதம் =சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டதற்கு ஏற்ப
5.பரீவாஹம் = போக்குவீடு
6.அசக்த்யமான =செய்ய இயலாத
7.ஸத்த்வோந்மேஷாதிகள் = ஸத்வகுண வ்ருத்தி இவற்றை
8.அவாந்தரபேதங்கள் = உட்பிரிவுகள்
9.இளநெஞ்சர் = நெஞ்சுக்கு இளமை , விச்வாஸக்குறைவு,மந்தவிச்வாசமுள்ளவர்
10.ஏகாந்தி = எல்லாவற்றையும் பகவானிடமிருந்தே பெறவேண்டுமென்றிருப்பவர்
நாரத பக்தி ஸூத்ரம் இப்படிச் சொல்கிறது –பகவானிடம் மீதூறும் பக்தி புலம்பவைக்குமாம்
11. அநிர்வசநீயம் பக்திஸ்வரூபம் =பக்தியின் ஸ்வரூபத்தை வார்த்தைகளால்
சொல்ல இயலாது ;அநுபவிக்கவேண்டும்
12. உன்மத்தவத் =பைத்யமாக்கும்
13.ஜடவத் =ஜடம் போன்று பேசவொட்டாமல் ”உம் ” என்று உட்காரவைக்கும்
14.பாலிசவத் =குழந்தை சேஷ்டைகளைச் செய்யவைக்கும்
15.பிசாசவத் = பிசாசு பிடித்தவர்களைப்போல ஆக்கும்
————————————————————————————————————
16.த்ரைவர்ணிகர் ==ப்ராம்மண ,க்ஷத்ரிய ,வைச்ய –மூன்று வர்ணத்தவர்
.
ஸ்வாமி தேசிகன் மேற்கோள் காட்டிய நூல்கள்
1.ஸ்ரீமத் பகவத் கீதை
2.ஸத்வத ஸம்ஹிதை
3.மஹாபாரதம்
4.திருவாய்மொழி
5.ப்ரஹ்ம ஸூத்ரம்
9 வது அதிகாரம் —-உபாயவிபாகாதிகாரம் —நிறைவு
Sarvam Sree Hayagreeva preeyathaam