ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் –10 வது அதிகாரம் —-ப்ரபத்தி யோக்ய அதிகாரம் —-

Posted on Apr 28 2018 - 4:21am by srikainkaryasriadmin
|

SRi Ramanujar and sishyas-16938608_413920995612124_1021480692125807434_n
ஸ்ரீமான் வேங்கட நாதார்ய : கவிதார்கிக கேஸரீ |
வேதாந்தாசார்ய வர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ||

அர்த்தித்வேந ஸமர்த்ததா த்ரிகதநு :ஸம்பிண்டிதா : அதிக்ரியா
ஸா சாஷ்டாங்க ஷடங்க யோக நியதாவஸ்தா வ்யவஸ்தாபிதா |
ச்ரோதீ ஸர்வ சரண்யதா பகவத : ஸ்ம்ருத்யா அபி ஸத்யாபிதா
ஸத்யாதிஷு இவ நைகமேஷு அதிக்ருதி : ஸர்வ ஆஸ்பதே ஸத்பதே ||

வ்யாக்யானம்

ஒருபலனைப் பெற மிக ஆவல் இருந்து, அதை அடைவதற்கான உபாயத்தில்
ஈடுபட தகுதி வேண்டும்.
முதலாவது, அந்தப் பலனில் ,அளவில்லா ஆவல் இருக்கவேண்டும்
அடுத்து, மூன்று விதமான தகுதிகள் வேண்டும்.
1.ஜ்ஞானம்
2.சக்தி
3. யோக்யதை
இந்தத் தகுதிகளைப் பொறுத்தே உபாயத்துக்கான வழியில் ,ஒரு முமுக்ஷு
ஈடுபடுகிறான்.
ஆனால், பக்தி யோகத்துக்கு எட்டு அங்கங்கள் ; ப்ரபத்தி அனுசரிக்க ஆறு அங்கங்கள்.
எல்லா ஜீவராசிகளுக்கும், பகவானே சரணமளிக்கிறான் என்பதை ஸ்ருதிகள்
கூறுகின்றன; ஸ்ம்ருதிகள் உறுதி செய்கின்றன.உண்மையை மட்டுமே பேசு என்று வேதங்கள்
சொல்வது,எல்லோருக்கும் பொருந்துவதைப்போல, ப்ரபத்தியும் யாவருக்கும்
பொருந்துகிறது

அடியேன்

பக்தியோகம் செய்பவர்களுக்கு,—அந்த யோகா விஷயமான ஜ்ஞானம், அதைச் செய்யும் சக்தி,
அதற்கான யோக்யதை =ஸ்வரூபம்
ப்ரபத்தி செய்பவர்களுக்கு, ப்ரபத்தி விஷயமான ஜ்ஞானம், அதைச் செய்யும் சக்தி,
அதற்கான யோக்யதை =ஸ்வரூபம்

பக்தி யோகம் செய்பவர்களுக்கு, தேஹம் முடிவிலே மோக்ஷம் அபேக்ஷை இல்லை.
மோக்ஷ ப்ரபத்திக்கு வைதீக அக்நி வேண்டாமென்றாலும், வைதீக மந்த்ரம் வேண்டும்.
த்வயம் போன்ற மந்த்ரங்கள் ப்ரமாணம் . வேத அத்யயநுத்துக்கான உபநயனம் ,
வேத அத்யயநம் இல்லாவிட்டாலும், இது கைகூடும் .

ப்ரபத்திக்கான ஆறு அங்கங்கள்
1.ஆநுகூல்ய ஸங்கல்பம் =இன்று முதல் அநுகூலனாக வர்த்திக்கக்கடவேன் என்கிற ஸங்கல்பம்
2.ப்ராதிகூல்யவர்ஜநம் =ப்ரதிகூலம் செய்யமாட்டேன் என்கிற ஸங்கல்பம்
3. கார்ப்பண்யம் =கர்ம ,ஞான,பக்தி யோகங்கள் செய்யச் சக்தியில்லை என்று ப்ரார்த்தித்தல்
4. மஹாவிச்வாஸம் =பகவானின் திருவடிகளைப் பற்றினால் , பகவான் நிச்சயம் அருளுவான்
என்கிற திடமான நம்பிக்கை
5.கோப்த்ருவ வரணம் = எதுவும் சக்தியில்லாத எனக்கு, நீயே உபாயமாக இருந்து,
பலனளிக்கவேண்டும் என்று வேண்டுவது
6. ஸாத்விகத்யாகம் = மோக்ஷத்தை உத்தேசித்துச் செய்த ப்ரபத்திக்கு –பலத்யாகம்
அதாவது, இந்த ஆத்மாவை ரக்ஷிக்கிற பரஸமர்ப்பணத்தை
பகவானே, தன்னுடைய ப்ரீதிக்காக, தானே, தன்னைச் சேர்ந்த
என்னைக்கொண்டு செய்துகொள்கிறான் /செய்துகொண்டான்
இதனால் வரும் பலன் பகவானுக்கே என அர்ப்பணித்தல்

அதிகாரத்திலிருந்து

அதிகாரம், உபாயம், பலன் –இவற்றுக்கான விவரம்

இப்படி அபிமதபலத்துக்கு உபாயாந்தர நிஸ்ப்ருஹனாய் ந்யாஸவித்யையிலே
இழியுமவனுக்கு இவ்வித்தைக்கு அதிகாரவிசேஷம் முதலானவை இருக்கும்படி
அறியவேணும் .
அதிகமாவது —அவ்வோபலோபாயங்களிலே ப்ரவ்ருத்தனாம் புருஷனுக்குப் பலத்தில்
அர்த்தித்வமும் , உபாயத்தில் ஸாமர்த்யமும் . இவற்றில் ஸாமர்த்யமாவது
சாஸ்த்ரார்த்தத்தை அறிகையும் , அறிந்தபடி அநுஷ்டிக்க வல்லவனாகையும்
சாஸ்த்ராநுமத ஜாதி குணாதி யோக்யதையும் . இவ்வதிகாரம் முன்பே
ஸித்தமாயிருக்கும் . இது உடையவனுக்குப் ப்ரயோஜனமாய்க் கொண்டு ஸாத்யமாக
அநுவதிக்கப்படுமது பலம் . ததர்த்தமாக ஸாத்யமாக விதிக்கப்படுவது உபாயம் .

வ்யாக்யானம்

ப்ரபத்தி என்கிற ந்யாஸ வித்யையில் ஈடுபட விரும்புபவன், வேறு எதையும்
உபாயமாகப் பற்றுவதில் ஆவலில்லாமல் இருப்பவன், எவ்விதத் தகுதிகளோடு
இருக்கவேண்டும் என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.
அதிகாரம் என்பது இந்த இடத்தில்,
ஒரு பலனை அடைவதில் மிக விருப்பம், அதை அடைவதற்கான உபாயத்தில்
மிக ஆர்வம், அந்த உபாயத்தைச் செய்யக்கூடிய திறமை, அல்லதுதகுதி,ஸாமர்த்யம்
என்பதைக் குறிக்கிறது ,
திறமை, அல்லதுதகுதி,ஸாமர்த்யம் —என்றால், சாஸ்த்ரங்களில் ஆழமான அறிவு,
அந்த அறிவின்படி அநுஷ்டானம் , சாஸ்திரங்களில் கூறப்படும் ஜாதி அதன் தன்மைகளைக்
கொண்டிருப்பது—என்பன போன்றவையாகும்.
இப்படிப்பட்ட தகுதி உள்ளவன், உபாயத்தைச் செய்து, அவனுடைய இலக்கைப் பலனாக
அடைகிறான். உபாயமென்பது—பலனைப் பெறுவதற்கான வழி .
பலன் —–எவனெவன் எந்த பலத்துக்காக எந்த உபாயத்தைக் கடைப்பிடிக்கிறானோ
அவனுக்கு அந்தப் பலத்தில் ஆசை, அந்த உபாயத்தில் ஸாமர்த்யம் வேண்டும்.இவன் எதைச்
செய்கிறானோ அந்த விஷயத்தில் இச்சை இருப்பதால் செய்கிறான்.ஏன் செய்கிறான் என்றால்,
அப்படிச் செய்வதால் வரும் பலனில் ஆசை இருப்பதால் செய்கிறான்.
சாஸ்த்ராநுமதஜாதி குணாதி யோக்யதை = சாஸ்த்ரங்களில் கூறியபடி ஜாதி, தன்மைகள்
இந்தக் கார்யத்தை, இன்ன ஜாதியில் பிறந்தவன், இத்தகைய ஆசைபோன்ற குணமுள்ளவன்
இப்படி ஆசாரமுள்ளவன் செய்யவேண்டாம் என்பதைச் செய்யாமலிருப்பவன் எவனோ
அவனே இந்தக் கார்யத்தைச் செய்யலாம் சாஸ்த்ரம் யாருக்கு அநுமதி அளித்திருக்கிறதோ
அவன்தான் அந்த உபாயத்தைச் செய்யலாம்.
ப்ரபத்தி , எல்லா ஜாதியருக்கும் பொதுவாக இருக்க, இங்கு ஜாதி எதற்குச் சொல்லப்படுகிறது
என்றால், இந்த வாக்யம் —சொல் —ப்ரபத்திக்கு மட்டும் அதிகாரம் சொல்லப்படுவதற்காகச்
சொல்லப்படவில்லை. பொதுவாக, எல்லா உபாயத்தையும் சொல்கிறது.
சிலர், பலத்தில் இருக்கும் அடங்கா ஆசையாலே , தன் அறிவு என்ன, தன் சக்தி என்ன ,
என்பதை ஆராயாமல் , உபாயத்தில் இழிந்துத் தடுமாறினால் , அதைத் தடுக்க
இப்படிச் சொல்லப்பட்டது,.

பக்தி யோகம் போன்றவற்றைச் செய்பவனுக்கு அந்த விஷயத்தில், ஜ்ஞானம், சக்தி, அதன்
பலன்களில் ஆசைவேண்டுமென்றாலும் , வேறு ஒன்றை விரும்பாமலிருப்பது,
அதில் ஜ்ஞானம், சக்தி இல்லாமலிருப்பது —-என்பது இல்லை.

ஆனால் ப்ரபத்திக்கு ,வேறுபலனில் ( மோக்ஷத்தைத் தவிர ) ஆசையில்லாமை , வேறு உபாயத்தில்
ஜ்ஞானம், சக்தி இல்லாமை வேண்டும். இது, ஆகிஞ்சன்யம் , அநந்யகதிகத்வம் என்பர்

அதிகாரத்திலிருந்து

ஆகிஞ்சன்யம் , அநந்யகதிகத்வம் விளக்கம்

இங்கு முமுக்ஷுத்வமுண்டாய் ஸ்வதந்த்ரப்ரபத்திரூப மோக்ஷோபாயவிசேஷ நிஷ்டனுக்கு
சாஸ்த்ரஜந்ய ஸம்பந்தஞாநாதிகள் உபாஸகனோடு ஸாதாரணமாயிருக்க விசேஷித்த
அதிகாரம் தன்னுடைய ஆகிஞ்சந்யமும் அநந்யகதித்வமும் . ஆகிஞ்சந்யமாவது உபாயாந்தர
ஸாமர்த்யாபாவம் . அநந்யகதித்வமாவது ப்ரயோஜநாந்தர வைமுக்யம் , சரண்யாந்தர
வைமுக்யமாகவுமாம். இது ப்ரயோஜநாந்தர வைமுக்யத்தாலும் அர்த்தஸித்தம் .
இவ்வர்த்தம்
ப்ராஹ்மணம் சிதிகண்டம் ச யாந்சாந்யா தேவதா : ஸ்ம்ருதா :
ப்ரதிபுத்தா ந ஸ்வந்தே யஸ்மாத் பரிமிதம் பலம்
இத்யாதிகளிலே கண்டுகொள்வது

தீவ்ரதமமான முமுஷுத்வமின்றிக்கே தேஹாநுவ்ருத்யாதி ப்ரயோஜநாந்தர ஸக்தனானவன்
மோக்ஷார்த்தமாக ப்ரபத்தியைப் பற்றினால் அவ்வோ ப்ரயோஜநாந்தரங்களின்
அளவுக்கு ஈடாக மோக்ஷம் விளம்பிக்கும்

வ்யாக்யானம்

ஒருவனுக்கு மோக்ஷம் அடைய விருப்பம் ஏற்படலாம். இவன், சாஸ்த்ரரூபமாக, ஜீவாத்ம —
பரமாத்ம தத்வங்களை ,வேறுபாடுகளை —பக்தியோகம் செய்பவனைப்போலத் தெரிந்துகொள்கிறான்.
இவன் ப்ரபத்தியை மோக்ஷ உபாயமாக அனுஷ்டிக்கும்போது இவனுக்கு, ஆகிஞ்சந்யமும்
அநந்யகதித்வமும்–இந்த இரண்டும் தகுதிகள் ஆகின்றன.
ஆகிஞ்சந்யம் என்றால், மற்ற எந்த உபாயங்களிலும் இழியத் தகுதியோ ,திறமையோ
இல்லாததாகும்.
அநந்யகதித்வம் என்றால், மோக்ஷம் தவிர வேறு எதையும் வேண்டாமையும், வேறு எதிலும்
பற்றில்லாமையும் , எம்பெருமானே சர்வமும் என்கிற உறுதியும் ஆகும்.
வேறு எதிலும் பற்றில்லாமை என்பதும் ஆகிஞ்சந்யத்தில் அடங்கியதே .
இதை மஹாபாரதம் சாந்திபர்வம் ( 350–36 ) சொல்கிறது

ப்ராஹ்மணம் சிதிகண்டம் ச யாந்சாந்யா தேவதா : ஸ்ம்ருதா :
ப்ரதிபுத்தா ந ஸ்வந்தே யஸ்மாத் பரிமிதம் பலம்
அறிவிற் சிறந்த முமுக்ஷுக்கள் ,ப்ரம்மன் ருத்ரன் போன்றவர்களை ஆச்ரயிப்பதில்லை .
ஏனெனில் அவர்கள் அருளும் பலன்கள் மிக அற்பமானவை என்பதை அறிந்துள்ளனர்

ஒருவன், தன்னுடைய சரீரத்துடன் நீண்ட நாள் வாழவேண்டும் என்றும் மோக்ஷத்தில்
ஆசையில்லாமல் ப்ரபத்தி செய்தாலும், அதற்கேற்றபடி பலன் கிடைக்கும்.
அப்போது, மோக்ஷம் தாமதிக்கும் .

அதிகாரத்திலிருந்து
ஆகிஞ்சந்யமும் அநந்யகதித்வமும்–இவற்றுக்கான காரணம்

இவ் ஆகிஞ்சந்யத்துக்கும் அநந்யகதித்வதுக்கும் நிபந்தநம் உபயாந்தரங்களில்
இவ்வதிகாரியினுடைய அஜ்ஞான அசக்திகளும் பலவிளம்ப அஸஹத்வமும் .
இதில் சரண்யாந்தர வைமுக்யத்துக்கு நிபந்தனம் :
யதா வாயோஸ்த்ருணாக்ராணி வசம் யாந்தி பலீயஸ :
தாதுரேவ வசம் யாந்தி ஸர்வபூதாநி பாரத
என்கிறபடியே தனக்கும் பிறருக்குமொத்திருக்கிற பகவதேக பாரதந்த்ர்யாத்யவ
ஸாயமும் ப்ரயோஜநாந்தர வைமுக்யமும்

வ்யாக்யானம்

ஆகிஞ்சந்யமும் அநந்யகதித்வமும் ஏற்படக் காரணம்—
மற்ற உபாயங்களில் ஈடுபட இயலாமை, அவற்றைப்பற்றிய அறியாமை, மோக்ஷம்
பெறுவதில் தாமதத்தைப் பொறுத்துக்கொள்ள இயலாமை. மற்றும், பகவானே
அனைத்தும் என்கிற சிந்தனை
இதை, மஹாபாரதம் உத்யோக பர்வம் ( 26–29 ) சொல்கிறது —
யதா வாயோஸ்த்ருணாக்ராணி வசம் யாந்தி பலீயஸ :
தாதுரேவ வசம் யாந்தி ஸர்வபூதாநி பாரத

ஹே –பாரத —-பலமான காற்றின் வசத்தில் ,புல்லின் நுனிகள்
இருப்பதைப்போல எல்லாப் பிராணிகளும் , உலகைப் படைக்கிற பகவானின்
வசத்தில் இருக்கின்றன

அதிகாரத்திலிருந்து

ப்ரபத்திக்குப் ப்ரமாணங்கள்

இப்ப்ரபத்யாதிகார விசேஷம் ;
ஸ பித்ரா ச பரித்யக்தஸ்ஸுரைச்ச ஸமஹர்ஷிபி :
த்ரீந் லோகாந் ஸம்பரிக்ரம்ய தமேவ சரணம் கத :
அஹமஸ்ம்யபராதாநாமாலய : அகிஞ்சந : அகதி :
ஆகிஞ்சந : அநந்யகதி : சரண்ய ,
அநாகதாநந்தகால ஸமீக்ஷயாப்யத்ருஷ்ட ஸந்தாரோபாய : ,
தத்ப்ராப்த்யே ச தத்பாதாம்புஜத்வய ப்ரபத்தேரந்யந்ந மே கல்பகோடி
ஸஹஸ்ரேணாபி ஸாதநமஸ்தீதி மந்வாந : ,
புகலொன்றில்லா அடியேன்
என்றிவை முதலான ப்ரமாண ஸம்ப்ரதாயங்களிலே ஸித்தம்

வ்யாக்யானம்

இந்தப் ப்ரபத்திக்கு உள்ள அதிகாரத்தைப் பல ப்ரமாணங்களாலே
ஸ்வாமி தேசிகன் விளக்குகிறார்
ஸ்ரீமத் ராமாயணம் —
ஸ பித்ரா ச பரித்யக்தஸ்ஸுரைச்ச ஸமஹர்ஷிபி :
த்ரீந் லோகாந் ஸம்பரிக்ரம்ய தமேவ சரணம் கத :

இந்த்ரனின் பிள்ளையானவன் ,காக்கை ரூபத்தில் ஸீதா பிராட்டியிடம்
அபசாரப்பட்டு, ஸ்ரீ ராமபிரான் அஸ்த்ரம் ஏவ, தப்பிப்பிதற்காக
தேவர்கள்,ரிஷிகள்,தனது தந்தையான இந்த்ரன் யாவராலும்
கைவிடப்பட்டுக் கடைசியில் ராமபிரானையே சரணமடைந்தது.

அஹிர்புத்ந்ய ஸம்ஹிதை —- ( 37—30 )
அஹமஸ்ம்யபராதாநாமாலய : அகிஞ்சந : அகதி :
நாரதர் கேட்கிறார்
மஹேஸ்வரனே —-”ந்யாஸம் ” என்பதை விளக்கிச் சொல்லவேண்டும் .
அஹிர்புத்ந்யர் ——நாரதா—இது தேவர்களும் அறியாத பரம ரஹஸ்யம் .
உபநிஷத்துக்களில் சொல்லப்பட்டுள்ளது. விரும்பிய பலனை உடனே
தரவல்லது .அனைத்துப் பாபங்களையும் போக்கச் சக்தி உள்ளது.
இதை எல்லோருக்கும் சொல்லிவிடக்கூடாது.பக்தி இலாதவனுக்குச்
சொல்லவே கூடாது. நீர், ஆழ்ந்த பக்தி உள்ளவராதலால் உமது
க்ஷேமத்தை விரும்பி இதைச் சொல்கிறேன் . பலவித விருப்பங்களை
அடைய விரும்புபவன் ,யாரால், மற்ற உபாயங்களால் விரைவில்
அடைய முடியாதோ, மோக்ஷத்தை விரும்புபவன் பக்தியோகம்
செய்து அதை எப்போது அடைவோம் என்று அறிய இயலாதோ ,
எங்கு சென்றால் திரும்பவும் ஜனனம் என்பதே கிடையாதோ
அப்படிப்பட்ட ”பரமபதம் ”, ந்யாஸத்திலே கிடைக்கும்.
இதனால், புருஷோத்தமனான பரமபுருஷனை அடையலாம்.
அடியேன் குற்றங்களுக்கெல்லாம் இருப்பிடம் ;கைமுதல் ஏதும்
இல்லாதவன்; உம்மைத் தவிர அடியேனை ரக்ஷிக்க யாருமில்லை ;
தேவரீரே , அடியேனுக்கு உபாயமாக இருக்கவேண்டும்;
என்கிற ப்ரார்த்தனை வடிவான ஜ்ஞானம் —ஸரணாகதி /ந்யாஸம் .
கார்பண்யம் ( ஆகிஞ்சன்யம் —கர்ம , ஞான ,பக்தி யோகங்கள் செய்யச்
சக்தியில்லாதவன் ; அநந்யகதித்வம் —உன்னைத் தவிர ரக்ஷகன் இல்லை;)
கார்பண்யம் இவையிரண்டும் சேர்ந்தது.ஆத்மாவை ,பகவானுக்குச்
சமர்ப்பிக்கும்போது , ஒரு உபாயத்தைக் கொண்டு சமர்ப்பிக்கவேண்டும்.
அப்படி, ஏதும் ,அடியேனிடம் இல்லை.ஆதலால்,தேவரீர் ”பக்தி ”
என்கிற உபாயமாக இருந்து ரக்ஷிக்கவேண்டும் . இப்படி,நிறைய
விஷயங்களைச் சொல்கிறார்.

ஸ்தோத்ர ரத்னம் ( 22 )

ந தர்ம நிஷ்ட்டோஷ்மி ந சாத்ய வேதீ
ந பக்திமான் த்வச் சரணாரவிந்தே |
அகிஞ்சநோ நந்ய கதிஸ் சரண்ய
த்வத்பாத மூலம் சரணம் ப்ரபத்யே ||

முதலில், ஸாத்விக த்யாகம் . பிறகு, கீதையில் சொன்ன தேவ அர்ச்சனை போன்ற
கர்மயோகம் இதில் ஒன்று. வெகு காலம் இப்படிச் செய்து, மனஸ் சுத்தமானால்
ஜீவாத்ம தத்வ சிந்தனை என்கிற ஜ்ஞான யோகம். இப்படிப் பலகாலம் செய்து,
ஜீவனை சாக்ஷாத்காரம் செய்தபிறகு ,பகவானிடம் பக்தியோகம் .
பகவானின் திருவடியை அடைய, கீதையில் க்ருஷ்ணன் சொன்னது.
இவற்றில் ஒன்றும் செய்யவல்லேன்
த்வத்பாதமூலம் –உன் திருவடியின் உட்புறத்தைச் சரணமாகப் பற்றுகிறேன் .
வெளிப்புறம் பற்றி ,வேறு பலன் பெற்றுப் போகமாட்டேன். உன் திருவடியின்
உட்புறத்தில் மறைந்தாலல்லாது , எனது பாபங்கள் —வினைகள்—என்கிற
யமகிங்கரர்கள் விடமாட்டார்கள்.
கர்மயோகம் செய்வதற்கும் ,ஜ்ஞானம் வேண்டும் .
ந பக்திமான்—நாத்ம வேதீ —ந தர்ம நிஷ்ட்ட :
செய்யாவிட்டாலும் செய்ய முயற்சிக்கலாமே என்றால் அதற்குச் சக்தியில்லை
அகிஞ்சந :

கர்மயோகம்
தர்மம் இரண்டு வகை. ப்ரவ்ருத்தி தர்மம் மற்றும் நிவ்ருத்தி தர்மம்
வேறு பலனுக்காகச் செய்யும் கர்மா /தர்மம். ப்ரவ்ருத்தி தர்மம்.
மோக்ஷத்துக்காகச் செய்யும் தர்மம் நிவ்ருத்தி தர்மம்
ஆதலால், கர்மயோகம் தொடங்கும்போதே ,வேறு பலனில் ஆசையில்லாது
ஸாத்விகத் த்யாகத்துடன் தொடங்கவேண்டும்.
லக்ஷ்மி தந்த்ரம் சொல்கிறது —-

உபாயச் ச சதுர்த்தஸ்தே ப்ரோக்த : சீக்ரபலப்ரத |
பூர்வேத்ரய உபாயஸ்தே பவேயு ரமமநோஹரா : ||
சதுர்த்த மாச்ரயந் ஏவம் உபாயம் சரணாச்ரயம் —–

நான்குவித உபாயங்கள் இருந்தாலும் , மூன்று உபாயங்கள் ( கர்மா, ஞான, பக்தி )
பலகாலம் செய்யவேண்டும். இதற்கே பற்பல ஜன்மங்கள் எடுக்கவேண்டும்.
எல்லா ஜன்மங்களிலும் , உபாயத்துக்கான லக்ஷ்யம் எண்ணெய்ஒழுக்கு போல
இருக்கவேண்டும்.
ஆதலால், நான்காவதான சரணம் ஆச்ரயம் என்கிறது.

ஸ்ரீ நம்மாழ்வார் திருவாய்மொழி ( 5–7–1 )

அதனால்தான் நம்மாழ்வாரும்
நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவு இலேன் ஆகிலும் இனி உன்னைவிட்டு ஒன்றும்
ஆற்றகிற்கிலேன் அரவின் அணை அம்மானே
சேற்றுத் தாமரைச் செந்நெலுடு மலர் சிரீவரமங்கலநகர்
வீற்றிருந்த எந்தாய் ! உனக்கு மிகை அல்லேன் அங்கே
என்கிறார்.
அடியேன் =
எனக்குப் பலனை அளிக்க, நீ என்னிடம் எதிர்பார்ப்பது ஒன்றுமில்லை.
பலனை அளிப்பதற்கான ,பக்தியோகமும் அதற்குமுன்பாக ஜீவாத்மாவுக்கான
(ஜீவாத்ம ஸாக்ஷாத்காரம் ) ஜ்ஞான யோகமும் , அதற்கு முன்னாலான கர்மயோகமும்
தேவை.நான் கர்மயோகமே செய்யவில்லை. செய்யாவிட்டாலும் ,முன்ஜன்மங்களிலாவது
செய்திருக்கலாமே என்றால் , அப்படிச் செய்திருந்தால் இந்த ஜன்மத்தில் அதிலே
மேலும் மேலும் நோக்கம் அதிகப்பட்டுஇருக்கும். அது இல்லை.
ஜ்ஞானயோகமும் இல்லையே . அது, முன்ஜன்மத்தில் இருந்திருந்தால் இப்போது
ஜீவாத்ம ஸாக்ஷாத்காரமாவது இருக்கவேண்டும். அதுவும் இல்லை.
இதெல்லாம் இராதபோது நான் எங்கே பக்தியோகம் செய்வது ?
ஆனால், ப்ராக்ருத —உலகப் ப்ரஜைகளைப்போல நான் இல்லையே ?
உன்னை அடையவேண்டும் என்கிற தாபம் / ஆசை இருக்கிறதே !
உன்னை அடையாமல் தரிக்கமாட்டேன் . ஐச்வர்யமோ , ஸ்வர்க்கமோ ,
கைவல்யமோ கொடுத்து என்னைப் புறம்தள்ள உன்னால் முடியாது. ஆகிலும்,
ஆயுள் முடிவில் பார்க்கலாம் ,அர்ச்சிராதி மார்க்கமாக பரமபதத்தில் என்னை
வந்து சேர் என்றால் உனது செயல் தகாது.
இது, ச்ரீ உடையதாலே ” ச்ரீவரம் ”. துக்கத்துக்குச் சிறிதும் இடம் இல்லாததாலே
மங்கலம் . எழுந்தருளியிருக்க ,அங்கு உன்னை வந்து கிட்டாமல் என்னை
அபேக்ஷிக்காதே —-
ஸ்ரீ ரங்க கத்யம் —-
ஆகிஞ்சந : அநந்யகதி : சரண்ய =

அடியேன் =

ஸ்வாத்ம நித்ய நியாம்ய நித்ய தாஸ்யை கரஸாத்ம ஸ்வபாவாநு ஸந்தாந
பூர்வக பகவத் அநவதிகாதிசய ஸ்வாம்யாத்யகில குணகணானுபவ ஜநித
அநவதிகாதிசய ப்ரீதிகாரித அசேஷாவஸ்தோதித அசேஷ சேஷதைகரதிரூப
நித்ய கைங்கர்ய ப்ராப்த்யுபாயபூத பக்திததுபாய ஸம்யக்ஜ்ஞாந ததுபாய
ஸமீசீநக்ரியா ததநுகுண ஸாத்விக தாஸ்திக்யாதி ஸமஸ்தாத்ம குண விஹீந : |
துரத்தராநந்த தத்விபர்ய யஜ்ஞான க்ரியாநுகுண அநாதி பாபவாஸனா
மஹார்ண வாந்தர்நிமக்ந :, திலதைலவத் தாருவஹ்நிவத் துர்விவேச த்ரிகுண
க்ஷணக்ஷரண ஸ்வபாவ சேதந ப்ரக்ருதி வ்யாபதி ரூபதுரத்யய பகவந்மாயா திரோஹித
ஸ்வப்ரகாச : அநாத்யவித்யா ஸஞ்சித அநந்த அஸக்ய விஸ்ரம்ஸந கர்மபாச ப்ரக்ரதித :
அநாகத அநந்தகால ஸமீக்ஷயாபி அத்ருஷ்ட ஸந்தாரோபாய : நிகில ஜந்துஜாதசரண்ய :
ஸ்ரீமந் நாராயண : தவ சரணாரவிந்தயுகளம் சரணமஹம் ப்ரபத்யே |
என்றும் , எனக்குக் கட்டளையிட்டுக் கைங்காயத்தைச் செய்யும் கைங்கர்யபரனாக
இதை சிந்தித்து ,எல்லாவற்றையும் அடக்கி ஆளும் பகவானின் கல்யாணகுணங்களை
அநுபவித்து ,இதனால் மிக அதிகமாக ப்ரேமம் பொங்க ,செய்யப்படும் ஸர்வாவஸ்சோசித
ஸர்வவித கைங்கர்யங்களையும் செய்வதையே இயல்பாகக் கொண்ட அடியவன்
என்கிற பதத்தை அடைவதற்கு அவச்ய சாதனமான பக்தியும்,இதற்கு உகந்த
ஜ்ஞான யோகமும் இதை ஸாதிக்கும் கர்மயோகமும் இதற்கு ஏற்றபடி ஸத்வகுணம்
நிறைந்து இருப்பதும் ,இதனால் வரும் ஆஸ்திகத் தன்மையும் மற்ற ஆத்மகுணங்களும்
இல்லாதவனும் கடக்க முடியாதவை எண்ணற்றவை முன்சொன்ன ஆத்ம குணங்கள்
கர்ம , ஜ்ஞான , பக்தி யோகங்களை அழிக்கவல்ல ,விபரீத ஜ்ஞானம் , தீய செயல் இவற்றை
உண்டாக்கவல்லதும், அநாதிகாலமாக துர்ப்பழக்கத்தைத் திருப்பித் திருப்பிச் செய்யும்
வாஸனையாகிற பெரியகடலில் விழுந்து உழல்பவனும் , எள்ளில் எண்ணெய் போலவும்
விறகில் நெருப்பு போலவும் பிரித்து உணரமுடியாததும் ,முக்குணங்கள் உள்ளதும்,
க்ஷணந்தோறும் தேயும் இயல்பு உடையதும் ,அறிவற்றதுமான ப்ரக்ருதியினால்
சுற்றிலும் சூழ்ந்து கட்டுண்ணப் பண்ணுகிற நீக்கமுடியாத பகவானது மாயையால்
மறைக்கப்பட்ட ஆத்மஜ்ஞானத்தை உடையவனும் அநாதிகாலமாக என்னைத் தொடர்ந்து
வந்துகொண்டே இருக்கிற அஜ்ஞானத்தால் நானே நிறைய சம்பாதித்துக் கொண்டதும்,
அளவில்லாததும் அவிழ்க்க முடியாததுமான புண்ய பாப கர்மம் என்றும், பாசத்தால்
நன்கு பிணைக்கப்பட்டவனும் முடிவு இல்லாத எதிர்காலம் முழுவதுமே இதிலிருந்து
விடுவித்துக்கொள்ள வழி தெரியாதவனும் ஆன , நான் , எல்லாப் பிராணிகளையும்
ரக்ஷிக்கும் பொறுப்பை ஏற்க வல்லவரே, அகலகில்லேன் என்று உறையும் அலர்மேல்
மங்கை உறை மார்பா , எளிதில் அணுகும்படியாக இருக்கிற எந்தையே, உமது
திருவடித்தாமரைகளில் பரிபூர்ண நம்பிக்கையுடன் ,என்னைக் காக்கும் பொறுப்பை
ஸமர்ப்பிக்கிறேன் .
ஒருவரியில் சொல்லப்போனால்,
எல்லையற்ற ஸம்ஸாரம் எதிர் காலங்களிலும் உள்ளது;இந்த ஸம்ஸாரத்தைக்
கடக்க, உன்னைத் தவிர வேறு உபாயம் இல்லை

ஸ்ரீ வைகுண்ட கத்யம்
அநாகதாநந்தகால ஸமீக்ஷயாப்யத்ருஷ்ட ஸந்தாரோபாய : ,
தத்ப்ராப்த்யே ச தத்பாதாம்புஜத்வய ப்ரபத்தேரந்யந்ந மே கல்பகோடி
ஸஹஸ்ரேணாபி ஸாதநமஸ்தீதி மந்வாந : =

பகவானை அடைவதற்கு, அவனுடைய திருவடித்தாமரைகளில் ப்ரபத்தி
செய்வதைத் தவிர வேறு உபாயம் , ஆயிரம் கல்பகோடிக் காலம் சென்றாலும்
அடியேனுக்கு இல்லை என்கிற எண்ணமுடைய நான்——-

திருவாய்மொழி ( 6–10–10 )

அகலகில்லேன் என்று உறையும் அலர்மேல் மங்கையுறை மார்பா !
நிகரில் புகழாய் ! உலகம் மூன்றுடையாய் ! என்னை ஆள்வானே !
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே !
புகல் ஒன்று இல்லா அடியேன் உன்னடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே !

தாமரையில் வாஸம் செய்பவள் பெரிய பிராட்டியார், நொடிப்பொழுதும்
விலகியே இருக்கமாட்டேன் என்று நித்யவாஸம் செய்யும் திருமார்பை
உடையவனே ! ஒப்புவமை இல்லாத கல்யாணகுணங்களால் ,ப்ரஸித்தி
ஆனவனே ! சேதன , அசேதன , ப்ரபஞ்ச ( ப்ரக்ருதி ) இவைகளை உடையவனே !
நீசனான என்னையும் உனக்கு என்று ஆக்கி ஆட்படுத்தி ஆள்பவனே !
கைங்கர்யபரர்கள் –கைங்கர்ய அநுபவத்தில் திளைத்து இருப்பவர்கள்–
விரும்பி வந்து வழிபடுகிற திருமலையாண்டவனே !வேறு புகலிடம் இல்லாத
சரணம் என்று வேறு எங்கும் போக இயலாத உமது அடிமையாகிய நான்
உனது திருவடித் தாமரைகளில் வேறு பலன்களில் விருப்பமில்லாது
பிரபத்தி செய்தேன்

இது த்வயத்தைச் சொல்லும் பாசுரம் என்பர்.திருவாய்மொழிக்கு வ்யாக்யானமான
”ஈட்”டில் ஒரு ஐதிஹ்யம் உள்ளது—பட்டர் சொன்னது. 4வது அதிகாரமான
அர்த்தபஞ்சக அதிகாரத்திலே இதைப் பார்த்தோம்.
பிராட்டி =பத்மாவதி
திருவேங்கடத்தான் = பத்மாபதி
திவ்யதம்பதியரிடம் செய்யும் ப்ரபத்தியை இப்பாசுரம் சொல்கிறது என்பர்.

அதிகாரத்திலிருந்து
ப்ரபத்திக்கு எல்லோருக்கும் அதிகாரம்

இவ்வளவு அதிகாரம் பெற்றால் ப்ரபத்திக்கு ஜாத்யாதி நியமமில்லாமையாலே
ஸர்வாதிகாரத்வம் ஸித்தம் .

அந்தணர் அந்தியர் எல்லையில் நின்ற அனைத்து உலகும்
நொந்தவரே முதலாக நுடங்கி அனன்னியராய்
வந்து அடையும் வகை வன் தகவு ஏந்தி வருந்திய நம்
அந்தம் இல் ஆதியை அன்பர் அறிந்து அறிவித்தனரே

பக்த்யாதெள சக்தி அபாவ :ப்ரமிதி ரஹிததா சாஸ்த்ரத : பர்யுதாஸ :
காலக்ஷேப அக்ஷபத்வம் த்விதி நியதிவசாத் ஆபதப்தி :சதுர்பி :
ஏக த்வி த்ரி ஆதியோக வ்யதிபிதுர நிஜ அதிக்ரியா : ஸம்ச்ரயந்தே
ஸந்த : ஸ்ரீசம் ஸ்வதந்த்ர ப்ரபதந விதிநா முக்த்யே நிர்விசங்கா :

வ்யாக்யானம்

ப்ராம்மணர் முதல் சண்டாளர் வரை உள்ள— அந்த எல்லையில் அடங்கிய
எல்லா லோகங்களிலும் சம்ஸார தாபத்தால் வாடுபவர்கள், வேறு உபாயம்
செய்ய இயலாதவர்களாய்த் துவண்டு வேறு பலன் வேறு ரக்ஷகன் தேடாதவராய் ,
சரணம் அடையும் வழியை , பெரிய குற்றம் புரிந்து இருந்தாலும் , மிக்கக்
க்ருபையுடன் ரக்ஷிக்க முயற்சிக்கிற அழிவில்லாத, ஜகத் காரணனான
நம் பகவானை பகவத் பக்தி ஆசார்ய பக்தி உடைய ஆசார்யர்கள் , தங்கள்
ஆசார்யர்களிடமிருந்து நன்கு தெரிந்துகொண்டு நமக்கு உபதேசித்தார்கள் .

பக்தியோகம் போன்ற உபாயங்களை அநுஷ்டிக்க சக்தியில்லாமை ,
இவற்றைப்பற்றிய ஞானமில்லாமை , இவற்றையெல்லாம் அநுஷ்டிக்கத்
தகுதியில்லை என்று சாஸ்த்ரங்களால் விலக்கி வைப்பது,மோக்ஷமடைய
நேரும் காலதாமதத்தைப் பொறுத்துக்கொள்ள இயலாமை—
இவற்றில் ,ஒன்றோ , இரண்டோ, மூன்றோ அல்லது நான்கோ அல்லது யாவுமோ
அமைவது , பூர்வ கர்மபலனால் நேரும். இவை, லக்ஷ்மிநாயகனான எம்பெருமானை
ப்ரபத்தி மூலமாக அடைவதற்கான தகுதிகள் . இவற்றை அறிந்தவர்,இவ்வுபாயங்களைக்
கொண்டு மோக்ஷம் அடைவதில் எவ்வித சந்தேகமுமின்றி எம்பெருமானை
அண்டியுள்ளனர்.

அதிகாரச் சுருக்கம்

ப்ரபத்தி செய்துகொள்ளத் தகுதி உடையவர்கள்சொல்லப்படுகிறது
,பக்தி,ப்ரபத்தி இரண்டுக்கும் பொதுவாக
1.பலனில் விருப்பம்
2.சாஸ்த்ர அர்த்தங்களை அறிந்து தெளிதல்
3.அவற்றை அநுஷ்டிப்பதில் வல்லமை
4.சாஸ்த்ரங்களில் சொல்லப்பட்ட நான்கு வர்ணங்கள், தகுதி
இவையெல்லாம் தேவையாக இருக்கிறது.
ப்ரபத்தி செய்துகொள்பவனுக்கு மட்டும்,வேறு உபாயத்தைச் செய்ய இயலாத
தன்மை,மோக்ஷத்தைத் தவிர வேறு பலனை நாடாமலிருப்பது , வேறு —-இதர
தெய்வங்களை நாடாமலிருப்பது தேவையாகிறது. ப்ரபத்திக்கு ஜாதி வரையறை
இல்லை.பக்தியோகத்தைச் செய்யும் ஜ்ஞானம் ,சக்தி, ஜாதி இவை இருந்தாலும்
மோக்ஷம் அடையும் காலதாமதத்தைப் பொறுக்காமல்,ப்ரபத்தி அநுஷ்டிக்கிறான் .

அரும்பதவுரை

1.த்ரிகதநு = மூன்று ஸ்வரூபம்—ஜ்ஞானம், சக்தி , யோக்யதை
2.உபாயாந்தர நிஸ்ப்ருஹனாய் =வேறு உபாயங்களில் விருப்பமில்லாதவனாய்
3. சாஸ்த்ராநுமத ஜாதி குணாதி யோக்யதை =சாஸ்த்ரங்கள் சொல்லும் ஜாதி,ஆசை
போன்ற தகுதி
4.அநுவதிக்கப்படுமது = முன்பு சொன்னதை மறுபடியும் சொல்வது
5.உபாயாந்தர ஸாமர்த்யாபாவம் =வேறு உபாயங்களைச் செய்யத் திறமையின்மை
6.ப்ரயோஜநாந்தர வைமுக்யம் =வேறு பலன்களில் ஆசையில்லாமை
7.சரண்யாந்தர வைமுக்யம் =மற்றொரு புகலில் ஆசையில்லாமல், பகவான்தான்
ரக்ஷிக்கிறவன் என்றும், வேறு ரக்ஷகனிடம் நோக்கமில்லை
என்றுமிருத்தல்
8.பாரதந்த்ர்யாத்யவ ஸாயம் = பகவான் ஒருவனுக்கே அடிமை என்கிற திடமான எண்ணம்

ஸ்வாமி தேசிகன் மேற்கோள் காட்டிய நூல்கள் ——-

1.மஹாபாரதம்
2.ஸ்ரீமத் ராமாயணம்
3. அஹிர்புத்ந்ய ஸம்ஹிதை
4.ஸ்தோத்ர ரத்னம்
5.ஸ்ரீ ரங்க கத்யம்
6.ஸ்ரீ வைகுண்ட கத்யம்
7.திருவாய்மொழி

ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் –10 வது அதிகாரம் —-ப்ரபத்தி யோக்ய அதிகாரம் —-நிறைவு

Sarvam Sree Hayagreeva preeyathaam

About the Author

2 Comments so far. Feel free to join this conversation.

 1. Devanathan N.R February 12, 2019 at 11:48 am - Reply

  Swami,

  Just came across this site. Hit upon Ramanuja Daya Pattam chapter 6. How beautiful and rasanubhavam.

  It will be great if I could get access to all chapters of this, and Swami Desikan’s Rahasya traya saran and other sukthis.

  Dhanyosmi

  Daasan

  • srikainkaryasriadmin March 24, 2020 at 1:41 pm - Reply

   Adiyen feels that all parts of ”Ramanuja Daya Patram” are there in the website..Kindly check up and reply.
   As regards ”Rahasyathraya Saaram”, adiyen typed upto adhikaram 13 . Have you gone throughall adhikarams ?

Leave A Response